Thursday, April 18, 2013

சிவகுமாரின் சிலிர்க்கவைக்கும் பேச்சு


                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

கலையுலக மார்கண்டேயர் நண்பர் சிவகுமார் அவர்கள் இந்த எளியோனுக்கு அவர் பேசிய சிடிக்கள் சிலவற்றை அனுப்பினார்.

அதில் 'நேருக்குநேர்' பாகம் -2 என்ற சி.டி கும்பகோணத்தில் மக்கள் மத்தியில் அவர் உரையாற்றியது. வீடியோ பதிவு மிகவும் நேர்த்தியாகவும், நுட்பமானதாகவும் ஆரம்பத்திலேயே கும்பகோணக் கோயில்களின் எழிலை கண் முன் கொண்டு வருகிறது.

பார்வையாளர்கள் தரப்பிலிருந்து எழும் கேள்விகளுக்கு அவர் பதில் உரைப்பது போன்றதாக முழுநிகழ்வும் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

அவர் சிறந்த பேச்சாளரல்ல,
ஆற்றல் மிக்க எழுத்தாளரல்ல,
கரைகண்ட நிபுணருமல்ல,
ஆனால், அவரால் தொடர்ந்து முன்று மணிநேரம் பெருந்திரளான மக்களை இருத்தி தன் பேச்சை கேட்க வைக்க முடிகிறது என்றால் அதற்கு முதல் காரணம் ஜீவத்துடிப்புள்ள பேச்சு! 

அனுபவங்கில் இருந்து உருவம் பெற்ற உரையாடல்!

ரத்தமும், சதையுமாக வெளிப்படும் உணர்ச்சிகள்...!
இவை போதாதென்று அபாரமான தகவல்கள்!

கும்பகோணம் நகரத்தை பற்றி கேட்கும் போது அங்கே பிறந்து சாதனை படைத்த அனைவரையும் நினைவிற்கு கொண்டு வருகிறார். இதன் மூலம் அங்குவந்த பார்வையாளர்களுக்கும் தனக்குமான பலமான பிணைப்பை உறுதிபடுத்திவிடுகிறார்.

சிவாஜியைப்பற்றி அவர் பேசும் போது உணர்ச்சியின் உச்சநிலையில் உரையாடல்களை நிகழ்த்துகிறார். சிவாஜியின் தீவிர ரசிகனாய் அவர் கூறும் விவரணைகள், ரசணைகள், பிரமிப்புகள், சிவாஜியை ஒப்புயர்வற்ற நடிகர் என்பதை நிலை நிறுத்துவதற்காக கூறும் உதாரணங்கள் அனைத்துமே கோடானுகோடி சினிமா ரசிகர்கள் உள்ளத்தின் பிரதிபலிப்புகளே! சிவாஜிக்கும் அவருக்குமான நெருக்கமான சம்பவங்கள் அதில் சிவாஜி வெளிப்படுத்திய உணர்வுகள் போன்றவை கேட்பவர்களின் இதயத்தை இளகவைத்ததை கண்கூடாகக் காண முடிந்தது. ஈரமுள்ள இதயங்களை கசியவைத்து கண்ணீர்துளிகளை சிந்தவைத்தது. 

எம்.ஜி.ஆரின் ஈகை குணத்தைக் கூறும் போது அவர் கும்பகோணத்தில் சிறுவயதில் இருந்தவர் என்பதை கூறத் தவறவில்லை.

பத்மினியைச் சொன்னதாகட்டும், ஜெமினிகணேசன் ஒரே ஒரு நாள் அவருக்கு சாப்பாடு ஊட்டியதை நா தழ,தழக்க நினைவுகூர்ந்து தந்தைக்கு இணையாக பாவித்ததைக் கூறியதாகட்டும், நாகேஷின் பன்முகத்திறமைகளை வியந்தோதியதிலாகட்டும், தமிழ்சினிமா ஸ்டுடியோ அதிபர்களை நினைவுகூர்ந்ததிலாகட்டும், அதிலும் குறிப்பாக ஏ.வி.எம் நிறுவன அதிபர் மெய்யப்பச் செட்டியாரை நினைவுகூர்ந்ததிலாகட்டும், அவரது நாடக உலக ஆசான் மேஜர் சுந்தரராஜனின் மேன்மைகளை விளக்கியதிலகாட்டும் மனித உறவுகளை பேணி வருவதில் அவர் காட்டிவரும் அக்கறை, மற்றும் நன்றியுணர்வில் தான் அவரது வெற்றி புதைந்துள்ளது என்பதை உணரமுடிகிறது.
தமிழ்நாட்டின் நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை ஏறத்தாழ அவர் முழுமையாகக்கூறி அனைவரையும் ஒரே தட்டில் நிறுத்திவிட்டார். இதில் யார் மனதும் புண்பட்டுவிடக்கூடாது என்ற அக்கறை மேலோங்கியிருந்தது. ஆனால் இவர்களில் கலைவாணர் என்.எஸ்கிருஷ்ணரின் சமகாலத்தவரான காளிஎன்.ரத்தினம் விடுபட்டது ஆச்சரியமே!

நடிப்பில், பாடுவதில், அங்கசேஷ்டைகளை துல்லியமாக வெளிப்படுத்துவதில், நவசரமுக பாவங்களை கொண்டுவருவதில் நிகரற்றவராக நிகழ்ந்த காளி என்.ரத்தினம் தொடர்ந்து கண்டுகொள்ளப்படாதவராக இருப்பதால் இந்த கவனக்குறைவு நிகழ்ந்திருக்கலாம்.

சபாபதி படம் ஒன்று போதும் காளி என்.ரத்தினத்தின் புகழை என்றென்றும் நிலைநாட்டுவதற்கு! அதில் கதாயாகனையும் விஞ்சி முக்கியத்துவம் பெற்றார் என்பதற்கு படத்தில் அவருக்கு ஐந்து பாடல்கள் தரப்பட்டிருந்தன என்பதே சாட்சி!

இது போன்ற சிற்சில கவனக்குறைவுகள் அவரது பேச்சில் தவிர்க்கமுடியாதவை! ஏனெனில் அவர் ஒரு குறிப்பிட்ட சப்ஜெக்டை மட்டும் எடுத்துக் கொள்ளவில்லை. ஏறத்தாழ சூரியனுக்கு கிழுள்ள அனைத்து விசயங்களையும் சகட்டுமேனிக்கு பேசுகிறார்.
எந்த ஒரு குறிப்பிட்ட கேள்விக்கும் குறிப்பிட்ட பதில் மட்டும் தருவதோடு அவர் நிறுத்திக் கொள்வதில்லை. அந்த பதில்களில் சம்பந்தப்பட்ட மனிதர்கள், சம்பவங்கள் என்னென்னவோ அவை அனைத்தையும் வலிந்து தன் பேச்சுக்குள் கொண்டு வருகிறார்.
இதன் வழியாக மன எழுச்சியோடு, எடுத்துக் கொண்ட பொருளுக்கு மாறாகவும் பற்பல திசைகளில் சஞ்சரிக்கிறார். ஆனால் இவை பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்படுத்துவதில்லை. எனினும் ஒரளவாவது அவர் இவற்றை தவிர்க்கலாம்!

இறுதியாக நிகழ்ச்சி முடிந்து ஒரு ஜவுளிக்கடையைத் திறந்துவைக்கையில் ஒரு பெண்மணி தமிழகத்தில் மதுபெருக்கம் சிறுவர்களை சீரழிப்பது குறித்து கேள்வி கேட்கையில் அவர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை மணியாகவும், வேண்டுகோளாகவும் வைக்கும் கோரிக்கை அட்சரலட்சம் பெறும். உண்மையிலேயே இந்த மனிதர் சமூகபிரக்ஞையுடன் சிந்திப்பவர் என்பதில் சந்தேகமே இல்லை!

ஓட்டுமொத்த சி.டி.யும் பார்த்து முடிந்த போது சிவகுமார் எப்போது மகாபாரதத்தைப் பற்றி பேசப்போகிறார் என்ற ஆவலை உண்டாக்கிவிடுகிறார். ஏனெனில் மாகபாரதக் காவியத்தை நன்கு உள்வாங்கியவர்களால் சக மனிதர்களை புரிந்துகொள்வதில், சமூகத்தை தெரிந்து தெளிவதில், அரசியல் போக்குகளை, ஆன்மீகநுட்பங்களை நன்கு உணர்வதில் தேர்ச்சி பெறமுடியும். இது நடைமுறை வாழ்க்கைக்கு மிகவும் துணைபுரியும்.
எனவே அந்த மகாகாவியம் - எத்தனை ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் அழிவில்லாத சிரஞ்ஜிவித்துவம் பெற்ற இலக்கியம் - சிவகுமார் வழியாக இன்றைய இளையதலைமுறைக்கு அறிமுகமாகவேண்டும். 

Thursday, April 11, 2013

புறக்கணிக்கப்படும் சிசுக்கள்


                                                                                                                    -சாவித்திரிகண்ணன்

ஒவ்வொரு உயிரும் இறைவனின் படைப்பு...
ஒவ்வொரு உயிரும் இறைவனின் அம்சம்...!
ஆனபோதிலும் பிறந்து சில மணிநேரங்களிலோ, சிலநாட்களிலோ, ஒரு சில வருடங்களிலோ கைவிடப்படும் குழந்தைகளின் கணக்கு பிரமிக்க வைக்கிறது. இந்த குழந்தைகள் படும் துயரங்களோ நெஞ்சில் ரத்தம் கசிய வைக்கிறது!

சென்னையில் கடந்த இரண்டரை மாதத்திற்குள் அடுத்தடுத்து பிறந்து சில மணிநேரங்களேயான சிசுக்கள் குப்பை தொட்டியில், ரோட்டில் கண்டெடுக்கப்படும் சம்பவங்கள் பத்து நடந்துள்ளன. இதில் இரண்டு சிசுக்களே உயிரோடு இருந்துள்ளன.

சென்னையில் மட்டுமின்றி தமிழகம் முழுக்க இது போன்ற சம்பவங்கள் ஆயிரக்கணக்கில் நிகழ்கின்றன... எப்பாவமும் அறியாத சிசுக்கள் தூக்கி எறியப்படும் துர்சம்பவங்களை அறிய நேர்கையில் ஈரமுள்ளவர்கள் நெஞ்சம் பதைக்கிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் இவ்வாறு கைவிடப்படும் குழந்தைகள் எண்ணிக்கை 60,000என ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
இவற்றில் 2500முதல் 5000குழந்தைகளே முறைப்படி தத்தெடுக்கப்படுகின்றன.

தற்போது இந்தியாவில் குழந்தையில்லா தம்பதிகள் பல லட்சம்உள்ளனர்.
இவர்களில் பெரும்பாலோர் குழ்ந்தைவரம் வேண்டி கோயில் கோயிலாக சென்றும் பலனின்றி விரக்தியிலுள்ளனர்.
தத்தெடுக்க விரும்புவர்களின் எண்ணிக்கைக்கும் குறைவில்லை! ஆனால், இவர்களில் பெரும்பாலோருக்கு தத்தெடுக்கும் வாய்ப்பும் அமைவதில்லை.
தத்து கொடுக்கும் மையங்களோ பல்வேறு வகைப்பட்டவை! ஒரு சிலர் இதை லாபகரமான வியாபாரமாகச் செய்கின்றனர்.

வேறுசிலர் இதை சர்வாதிகார மையமாக நடத்துகின்றனர் வெகுசிலர் இதை புனிதமான, தூய்மையான தொண்டாக செய்பின்றனர்.
பத்துமாதம் கருவை சுமந்து ஈன்றெடுக்கும் தாய்மையின் பணி இறைவனின் படைப்பாற்றலுக்கு நிகரானது. ஆனால் அங்கிகாரமில்லாத குழந்தை பிறப்பு எனும் அவலத்தை சந்திக்க துணிவின்றி அந்த தாய் தன் குழந்தையை துறக்கிறாள். இப்படி கைவிடப்படும் சிசுக்களில் இரு பாலினமும் உண்டெனினும் பெண் சிசுக்களே 70% என்பது கவலையளிக்கிறது.

இப்படியாக கைவிடப்பட்ட குழந்தைகள் சேற்றிலும், புழுதியிலும் புரண்டு யார், யாரோ உதவியால் எப்படியெப்படியோ வளர்கின்றனர்.
இன்றைய இந்தியாவில் இவர்களின் எண்ணிக்கை 1கோடி 10லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. வாழ இயலாமல் மடிந்தவர்களின் எண்ணிக்கையோ கணக்கு வழக்கில்லை. பல கோடியைத்தாண்டும்!

இவர்களில் பலர் கடத்தப்படுவது, விற்கப்படுவது துன்புறுத்தப்படுவது, குழந்தை தொழிலாளர்களாக கடினமான வேலைகளைச் செய்து சமூக விரோத சக்திகளால் வழிநடத்தப்படுவது, பிச்சையெடுப்பது..... என பற்பல கொடிய துன்பங்களுக்கு ஆளாகிறார்கள்.
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவால் முன்பு தொட்டில் குழந்தை திட்டம் அமல் படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் சிறப்பாகச் செயல்படத் தொடங்கி பிறகு படிப்படியாக அவை முக்கியத்துவமிழந்துவிட்டன.

கைவிடப்படும் சிசுக்களுக்கான முதல் காரணம் காதலன் அல்லது கணவனால் கைவிடப்படும் பெண்களின் நிலை தான்!
ஆகவே, அப்படிபட்ட பெண்கள் கர்பவதியாகும் போது கைவிடப்படும் நிலையில் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து சுகப்பிரசவம் செய்யும் சரணாலயங்கள் உருவாக்கப்படவேண்டும்.

இதனால் தாயும், சேயும் ஒரு சேரக் காப்பாற்றப்படும்.
சேயை அரசு பொறுப்பெடுத்துக் கொள்ளலாம். மேலும் குழந்தை தேவைப்படும் பெண் இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழந்தைக்காக ஏங்கும் - தம்பதிகளுக்கு சட்டப்படி தத்து கொடுக்கலாம்.
அந்த தாய்மார்களுக்கு சத்துணவுமையங்கள், அங்கன்வாடிமைய பணிகளில் வாய்ப்பளிக்கலாம்.
அதே சமயம் பெண்களை கர்பவதியாக்கி கைவிடும் ஆண்களை கடுமையான தண்டனைக்கு உட்படுத்தவேண்டும்
நம் முதல்வரம்மா அவர்கள் திட்டம் தீட்டி மேலும் செழுமைபடுத்தி இதனை செயல்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பம்! 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
14-3-2013

காலதாமதமாகும் காவல்துறை சீர்திருத்தம்



                                                                                                                     -சாவித்திரிகண்ணன்

காவல்துறையின் மீதான கண்டனங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.
பஞ்சாபில் பாலியல் புகார் கொடுக்கச் சென்ற பெண், காவல்களால் தாக்கப்பட்டார்.
வன்முறையை அடக்க முயற்சிக்கும் போது வரம்புமீறி அப்பாவிகள் தாக்கப்படுகின்றனர்.
அடிக்கடி நடக்கும் என்கௌண்டர்கள்... காவல்துறையின் திட்டமிட்ட கொலைகளாக அறியப்படுகிறது. காவல்நிலையத்திலேயே சம்பவிக்கும் மரணங்கள்...., சித்திரவதைகள்
போன்ற பல்லாயிரம் புகார்களை முடிவுக்கு கொண்டுவரவும், மக்களின் குரலுக்கு செவிசாய்க்கும் காவல்துறையை கட்டமைக்கவும் 2006ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் காவல்துறை சீர்திருத்தத்தை அமல்படுத்தும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்திரவிட்டது.

ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவு மத்திய, மாநில அரசுகளால் தொடர்ந்து உதாசீனப்படுத்தப்படுவதால் உஷ்ணமான உச்சநீதிமன்றம் தற்போது மத்திய மாநில அரசுகளுக்கு ஏன் காவல்துறை சீர்திருத்தம் அமல்படுத்தப்படவில்லை?" என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நமது காவல்துறைசட்டம் பிரிட்டிஷ் அரசால் 1861ல் உருவாக்கப்பட்டது அது பிரிட்டிஷ் பேரரசுக்கு விசுவாசமிக்க காவல்துறையை கட்டமைக்க உருவாக்கப்பட்டது. அது ஆட்சியாளர்கள் என்ற எஜமானர்களுக்கான ஏவலாளாக காவல்துறையை கட்டமைத்தது. அதே சட்டம், அதே அமைப்பு அப்படியே சிதையாமல் சுதந்திரத்திற்கு பிறகான இந்திய ஆட்சியாளர்களாலும் பயன்படுத்தப்படுகிறது என்றால் நமது ஆட்சியாளர்கள் இன்னும் மன்னராட்சி மனோபாவத்திலே திளைக்கின்றனர். மக்களாட்சி தத்துவத்தை, ஜனநாயக மாண்புகளை மதிக்க தயாரில்லை என்பதே அர்த்தமாகும்.

காவல்துறையை கண்ணியாமாக, சுதந்திரமாகச் செயல்படவைக்க வேண்டும் என்ற விவாதம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அனல்பறக்க நடந்து கொண்டு தானிருக்கிறது. இதன் முதல் கட்டமாக 1977ல் தேசிய காவல்துறை ஆணையம் அமைக்கப்பட்டு அது எட்டு அம்சதிட்டத்தை வடிவமைத்தது. ஆயினும் அது இன்றுவரை எழுத்துவடிவிலேயே அமைந்து எட்டாக்கனியாகிவிட்டது.

அதன்பிறகு மீண்டும் இக்குரல்கள் வலுப்பெறவே ரிபேரியாகமிட்டி, பத்மநாபன்கமிட்டி, மாலிமாத் கமிட்டி என அடுத்தடுத்து கமிட்டிகள் அமைக்கப்பட்டு கண்துடைப்பு நாடகங்களே அரங்கேறின.

மொத்தத்தில் நமது அரசியல் கட்சிகள் அனைத்துமே காவல்துறையை கட்டாயப்படுத்தி காரியம் சாதிக்கின்றன. அதற்காக காவல்துறையை அடிமையாய் வைத்திருப்பதையே ஆதரிக்கின்றன. 

தமிழ்நாட்டில் தாமிரபரணி ஆற்றில் நடந்த துப்பாக்கி சூடு, பரமக்குடிகலவரம் குஜராத்தில் 2002ல் நடந்த மதக்கலவர அடக்குமுறை அத்துமீறல்கள், மேற்குவங்கத்தில் நடந்த நந்திகிராம துப்பாக்கி சூடுகள்.... இவை யாவுமே ஆட்சியாளர்களின் ஆணையை நிறைவேற்ற காவல்துறை ஏற்றுக்கொண்ட பழிகளாகும்! 
இவை இந்தியாவில் மட்டுமல்ல, காமன்வெல்த் நாடுகள் அனைத்திலும் காணக்கூடியதாக இருப்பதை கருதியே 2005ல் காமன்வெல்த் நாடுகள் அனைத்திலுமே இந்த காவல்துறை சீர்திருத்தம் அமலாக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, காவல்துறை சீர்திருத்தம் என்பது

  • ஜனநாயக மாண்புகளுக்கும், சமூகநலத்திற்கும் மதிப்பளிப்பது 

  • வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிபடுத்துவது

  • தனிமனித சுதந்திரத்திற்கு பாதகம் வராமல் பாதுகாப்பது

  • அனைத்துவிதமான மனித உரிமைகளையும் பாதுகாப்பது.

  • சட்டத்திற்கு பொறுப்பேற்று, தனது சேவையில் சமூக நலனை பிரதிபலிப்பது... போன்றவையாகும்.
இதை அமல்படுத்துவதில் ஜனநாயகத்தை மதிக்கும் அரசுகளுக்கு என்ன தயக்கம் இருக்க முடியும்?

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
12-3-2013

வழக்குகளின் தேக்கம்


                                                                                                                      -சாவித்திரிகண்ணன்

"நமது நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் தற்போது 3கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன...." என மத்திய சட்டத்துறை அமைச்சர் அஸ்வானி குமார் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த 3கோடி வழக்குகளில் எத்தனைகோடி மக்கள் சம்பந்தப்பட்டிருப்பார்களோ..! ஆனால் அவர்கள் நீதிமன்ற படிகட்டுகளில் ஏறி இறங்கி அலைகழிந்தே தங்கள் நிம்மதியை இழந்திருப்பார்கள்...

வழக்கு, வாய்தா, வக்காலத்து, இழுத்தடிப்பு... என அலைந்தலைந்தே சொந்த வேலையை சிலர் தொலைத்திருக்கலாம். வழக்கறிஞர் கட்டணத்திற்காக பலர் சொத்துகளை தொலைத்திருக்கலாம்.வழக்கு அலைச்சல்களால் பலர் குடும்ப உறவுகளை தொலைத்திருக்கலாம்.
வழக்குகள் இழுத்தடிக்கப்படுவதற்கு நீதிமன்ற அலுவலர்களின் அலட்சியம், வழக்கறிஞர்களின் பொறுப்பின்மை, காவல்துறையின் ஒத்துழைப்பின்மை... என பல காரணங்கள் இருக்கின்றன.
அதே சமயம் நீதித்துறையில் உள்ள நீதிபதிபணியிடங்கள் நிரப்பபடாது இருப்பது மிக முக்கிய காரணமாகும்.

இந்தியாவில் உள்ள 21 உயர்நீதிமன்றங்களில் உள்ள சுமார் 900நீதிபதி பணியிடங்களில் மூன்றில் ஒரு பங்கு நிரப்படாமல் உள்ளன. உயர்நீதிமன்றங்களுக்கே இந்த நிலை என்றால் மாவட்ட நீதிமன்றங்கள் போன்ற 1100 கீழ்நிலை நீதிமன்றங்களில் நிரப்பப்படாத நீதிபதி பணியிடங்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டியதில்லை...!

சமீபத்தில் பார்கவுன்சில் பொன்விழாவில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங் "நீதித்துறைபணியிடங்கள் விரைந்து நிரப்பப்படும். அதே சமயம் வழக்குகள் விரைந்து முடிய காவல்துறையும், வழக்கறிஞர்களும் ஒருங்கிணைந்து செய்லபடவேண்டும்" என்றார்.
நீதிமன்றங்களை நாடி நீதியை நிலைநாட்டுவதென்றால் தலைமுறைகளைத் தாண்டி தவம் கிடந்தால் தான் உண்டு என்ற நிலைமை தொடருமானால், நீதிமன்றத்திற்கு வெளியே பாதிக்கப்படவர்களே தங்கள் போக்கில் தீர்ப்பு வழங்க தொடங்கிவிடக்கூடும். பிறகு இதனால் சட்டம், ஒழுங்கை காப்பாற்றுவது சவாலாகிவிடும்.

2001ஆம் ஆண்டு விரைவு நீதிமன்றங்கள் என 1562 அமைக்கப்பட்டு பத்தாண்டுகளில் சுமார் 60லட்சம் வழக்குகள் முடித்துவைக்கப்பட்டன.
அதன்பிறகு நிதிபற்றாக்குறையால் அந்த நீதிமன்றப் பணிகளில் தொய்வு ஏற்பட மத்திய அரசு காரணமாயிற்று.

நாட்டில் பாலியல் வழக்குகள் மட்டுமே சுமார் 25,000நிலுவையில் உள்ளன. பருவ மங்கையாய் இருக்கும் போது பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பாட்டியான காலத்தில் நீதி கிடைத்தாலென்ன? கிடைக்காவிட்டால் தான் என்ன?

டெல்லி மாணவி கற்பழிப்பு விவகாரத்திற்க்குபிறகு தான் மத்திய அரசு விழித்தெழுந்து பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க மாநில அரசுகளுக்கு உத்திரவிட்டது.

சமீபத்தில் வழக்குகளை விரைந்து முடிக்க கிராமபஞ்சாயத்து அளவிலும், சிற்றூர்கள் அளவிலும் நீதிமன்றங்களை அமைக்க, குறிப்பாக நடமாடும் நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டபோது வழக்கறிஞர்கள் இதனை கடுமையாக எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள்.

"தங்களிடம் வரும் வழக்குகள் குறைந்துவிடக்கூடாது, விரைவில் முடிந்து விடக்கூடாது..." என்று நினைக்காத வழக்கறிஞர்கள் அபூர்வம்.
எனவே, சட்டத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் தன் வாழ்க்கை தானே வாதாடும் உரிமை வழங்கப்பட்டுள்ளதை உணர்ந்து விபரமானவர்கள் தங்கள் வழக்கை தாங்களே வாதாட முன்வரவேண்டும்.

இதற்கான இலவச சட்ட உதவி மையங்கள் நிறைய ஏற்படுத்தப்படவேண்டும். இந்த சட்ட விழிப்புணர்வால் பல ஏமாற்றங்கள், விரக்திகள் தவிர்க்கப்படும்.

தற்போது தமிழிலேயே ஏராளமான சட்ட புத்தகங்கள் வந்துள்ளன. இது மட்டும் போதுமானதல்ல. அரசாங்கம் தன் கடமைக்கு நீதிமன்றங்களை கம்யூட்டர்மயமாக்கி நவீனபடுத்தி, அனைத்து நீதிபதி பணியிடங்களையும் நிரப்பவேண்டும்.

குறைந்தபட்ச காலக்கெடுவை நிர்ணயித்து விடுவதும், காலம் தாழ்த்தப்படுவதன் பின்லுள்ள அநீதிகளைக் களைவதும் வழக்குகள் விரைந்து முடிவுக்கு வர துணைபுரியும்.

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
08-3-2013

கையூட்டுகளை கருவறுக்கும் மசோதா



-சாவித்திரிகண்ணன்

65ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் அவலங்களுக்கு முடிவுரை எழுதத்தொடங்கும் ஒரு மசோதாவிற்கு இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

The rights of citizens for time bound delivery of goods & servive and redressel of their grivences Bill 2011 என்ற பெயரிலான இந்த மசோதா தமிழில் குடியுரிமை அடிப்படையில் தாமதமாகும் விநியோகம், சேவை மற்றும் குறை தீர்ப்பு மசோதா என்றழைக்கப்படுகிறது.

ரேஷன்கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் ஜாதி சான்றிதழ்கள், பென்ஷனுக்கான கோரிக்கை... என எதுவாக இருந்தாலும் அவற்றை பெறுவது சுலபமல்ல என்பதே நமது அரசு அலுவலகங்களில் மக்கள் பெற்று வரும் அனுபவம்.

மிகவும் அலைகழிக்கப்பட்டே எந்த ஒரு சேவையையும் பொது மக்கள் பெறுவதாயிருந்தால் அதற்கு பெயர் சேவையல்ல. இம்சை!

இப்படி பொதுமக்களை அலைகழிக்கும் இந்த இம்சை அரசர்களுக்கு கடிவாளம் போடும் வகையில் முதன் முறையாக இந்திய வரலாற்றில் ஒரு மைல் கல்லாக இந்த மசோதா அறிமுகமாகியுள்ளது.

இதுவும் சாதாரணமாக வந்ததல்ல! அண்ணா ஹசாரே குழுவினரின் அயராத போராட்டம் இந்த மசோதா கொண்டு வருவதற்கான நிர்பந்தத்தை மத்திய அரசுக்கு ஏற்படுத்தியது என்பது உண்மை. லோக்பாலின் உள்ளே இருக்கும் ஒரு அம்சமாக இதை விட்டுவிடாமல் தனிமசோதாவாக அறிமுகப்படுத்தவேண்டும் என்றார் அண்ணாஹசாரே முதலில் இதற்கு உடன்பட மறுத்த அரசாங்கம் பிறகு ஒத்துக்கொண்டது.
ஆனபோதிலும் வலு குறைந்தாக அறிமுகப்படுத்தியது. இதனால் அண்ணாஹசாரே ஆவேசப்பட்டு போராட்டத்ததை அறிவித்தார்.

இதன் பிறகு உச்சநீதிமன்றமே இதில் தலையீட்டு மக்களுக்கு மிகவும் அவசியமான இந்த மசோதா நீர்த்து போகாத வகையில் அமல்படுத்த ஆணையிட்டது.

இந்த வகையில் 15 மாத கால தாமதத்திற்கு பிறகு இந்த மசோதா தற்போது அமைச்சரவை ஒப்புதல் பெற்றுள்ளது.

அரசு அலுவலகங்களில் காலதாமதப்படுத்தும் தந்திரத்தின் மூலம் கையூட்டு பெற்றுக் கொண்டிருக்கும் அதிகாரிகள், அலுவலர்கள் இனி மக்களுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.
இந்த மசோதாவின் சிறப்பம்சங்கள் என்பது,

  • அரசாங்கத்தின் சேவையை நம்பகத்தன்மை மிக்கதாகவும், மக்களுக்கு நண்பனாகத் திகழும் வகையிலும் மாற்றி அமைப்பது.

  • நிர்வாகம் வெளிப்படைத் தன்மையாகவும், தகவல் அறியும் பொதுமக்களின் உரிமையை நிலைநிறுத்தவுமாக செயல்படுவது.

  • பொது நிறுவன சேவைகளில் தூய்மையான செயல்பாடுகளை நிறுவுவது,

  • அரசாங்கத்தின் பங்குதாராக பொதுமக்களை கருதுவது

  • நிர்வாகத்திற்கும், சேவை பெறுபவருக்குமான காலவிரயத்தை தவிர்ப்பது.

'இந்த சேவைகளை பெறுவது பொது மக்களின் அடிப்படை உரிமை, வழங்குவது அரசின் கடமை' என்பதே இம் மசோதாவின் சாராம்சமாகும்.
இனி இதற்காக ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் தங்கள் தேவை காலதாமதமாவதற்கான பதிலை மக்கள் பெறுவதற்காகவே அதிகாரியும் அலுவலர்களும் நியமிக்கப்படவேண்டும்.

இவர்கள் பதில் சொல்லத் தவறினால் அடுத்தடுத்த கட்டங்களில் இதை தட்டி கேட்க மேலமைப்புகளும் ஏற்படுத்தப்படவுள்ளன.
எனவே மக்கள் தரும் புகார்களை உடனே பதிவு செய்து, இரண்டு நாட்களுக்குள் ரசீது தரவேண்டும், புகார் எண் SMS அல்லது மெயிலில் அனுப்பபடவேண்டும் புகாரின் பேரிலான நடவடிக்கைகளை அவ்வப்போது தெரிவிக்க வேண்டும் 30 நாட்களுக்குள் பிரச்சினை முழுமையான தீர்வை எட்ட வேண்டும். என்று மசோதா தெரிவிக்கிறது.

காரணமில்லாத காலதாமங்களுக்கு ரூ 250முதல் ரூ 50,000வரை அரசு ஊழியரின் சம்பளத்திலிருந்தே அபராதம் வசூலிக்கப்படும்.
இந்த அருமையான மசோதா விரைவாக மத்திய, மாநில அரசு நிர்வாகங்களில் அமல்படுத்தப்படவேண்டும்.
நடைமுறைரீதியில் இதில் கிடைக்கும் அனுபவங்களைக் கொண்டு மேன்மேலும் இம்மசோதாவை மக்கள் பயன்படும் விதத்தில் வலுப்படுத்தலாம்.

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
07-3-2013

கூட்டுறவு சங்கத்தேர்தல்கள்..



                                                                                                                     -சாவித்திரிகண்ணன்

தமிழ் நாட்டில் கடந்த ஒராண்டாக எதிர்பார்க்கப்பட்டு கொண்டிருந்த கூட்டுறவு சங்க தேர்தல்கள் ஏப்ரல் 5தொடங்கி நான்கு கட்டங்களாக நடக்கவுள்ளன. அதன் பிறகு ஐந்து நிலைகளில் நிர்வாகிகள் தேர்தலும் நடக்கும்.


உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி பிப்ரவரி 15க்குள் இத்தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால் பற்பல பிரச்சினைகள், வழக்குகள், அரசியல் உள்நோக்கங்கள் காரணமாக காலம் தாழ்த்தப்பட்டு விட்டது.

ஏழை, எளிய, நடுத்தர பிரிவு மக்களின் உயர்வுக்கு கூட்டுறவு அமைப்புகளே அடித்தளமிடுகின்றன. அந்த வகையில் அண்ணல் காந்தியடிகள், ஜவஹர்லால்நேரு, வல்லபாய்பட்டேல், வ.உ.சி போன்றவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட கூட்டுறவு அமைப்புகள் காமராஜர் ஆட்சி காலத்தில் வளர்ச்சியின் உச்சகட்டத்தில் இருந்தன.

இந்தியாவிலேயே தமிழகத்தின் திருவள்ளுவர் மாவட்டத்தின் திருர் கிராமத்தில் தான் முதல் கூட்டுறவு சங்கம் 1904ல் அமைக்கப்பட்டது, இன்று 22,532 சங்கங்களாக பல்கி பெருகியுள்ளது.

வேளாண்மை, பால் உற்பத்தி, வீட்டுவசதி, நெசவு, சர்க்கரை ஆலைகள், சிறுதொழில்கள்.... என பற்பல வகைகளில் உருவான கூட்டுறவுகளே கோடிக்கணக்கான மக்களை வயிறு காயாமல் காப்பாற்றி வருகின்றன.

இவை முழுக்க, முழுக்க மக்கள் அமைப்பு. இதில் அரசியல் தலையீடுகள் இல்லாதிருந்த வரை இவை லாபகரமாக இயங்கின. எப்போது அரசியல் தலையீடுகள் ஆரம்பித்தனவோ அன்று முதல் கூட்டுறவு என்பது கூட்டுக்கொள்ளை என்பதான தவறான புரிதலுக்களானது. இதனால் நஷ்டப்பட்ட கூட்டுறவு அமைப்புகளுக்கு ஆண்டுக்காண்டு அரசு மானியம் வழங்கப்பட்டுவருகிறது.

இந்தச் சூழலில் தான் சமூக ஆர்வலர்கள் பலரின் தளராத போராட்டத்திற்குப் பிறகு தற்சார்பு கூட்டுறவு சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி கூட்டுறவு அமைப்புகள் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுவதற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. இது மிக அவசியமான, நல்ல சட்டம் என்றாலும் இதனை சம்பந்தப்பட்ட கூட்டுறவுசங்க தலைமைகள் தன்நலமின்றி பொதுநோக்கோடு செயல்படுத்தும் போது தான் பலன்கள் இருக்கும்.
இதற்கு சங்க உறுப்பினர்கள் மத்தியில் விழிப்புணர்வும், தவறுகளைச் சுட்டிக்காட்டும் தைரியமும் தேவை. இல்லையெனில் வெறும் சட்டத்தால் பெரிதாக எதையும் சாதித்திட முடியாது.

முதலாவதாக இந்த தேர்தல்களில் அரசியல் அடையாளம் அறவே தவிர்க்கப்படவேண்டும்.

தேர்தல்கள் முறைகேட்டில்லாமல் நடத்தப்படவேண்டும்.

பொதுசொத்தை சூறையாட நினைப்பவர்களை மக்கள் முற்றாக புறக்கணிக்கவேண்டும்.

நம்பகமான நல்ல தலைமையை அடையாளம் கண்டு ஆதரிக்கவேண்டும்.

கூட்டுறவு தேர்தலில் தில்லுமுல்லு செய்யத் துணிபவர்களை கடும் தண்டனைக்கு உட்படுத்தவேண்டும்.

இவை நடந்தேறினால் கூட்டுறவு அமைப்புகள் செழித்தோங்கும். மக்கள் வாழ்க்கை வளம் பெறும். கூட்டுறவு அமைப்புகள் அரசிடமிருந்து எதிர்பார்ப்பது நிதியை அல்ல நீதியைத் தான்!

அந்த நீதி கூட்டுறவு அமைப்புகளில் நான்கு நிலை நாட்டப்ப படுமானால் அதுவே நிதி ஆதாரத்தை பெருக்கி கொள்ளும்.

ஆகவே, கூட்டுறவு அமைப்புகளை அரசியல் ஆதிக்கத்ததிலிருந்து விடுவித்தால், அதன்மூலம் மக்கள் அடையும் ஆதாயங்கள் காரணமாக இந்த ஆட்சிக்கு நல்ல பெயர் கிடைக்கும். அந்த நல்லபெயர் ஆண்டு கொண்டிருக்கும் கட்சிக்கும் கைகொடுக்கும்! 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
04-3-2013