Wednesday, July 3, 2013

என்.எல்.சி போராட்டம்



நெய்வேலி பழுப்பு நிறுவனத்தின் ஐந்து சதவிகித பங்குகளை விற்பது என்ற மத்திய அமைச்சரவையின் முடிவு தமிழகத்தில் பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கம்யூனிஸ்டுகள் கர்ஜிக்கிறார்கள்....
தி.மு.கவினர் தீப்பிழம்பாகிறார்கள்...
பா.ம.கவினர் பாய்கிறார்கள்....
விடுதலைச் சிறுத்தைகள் வீறுகொண்டெழுகிறார்கள் ...
பா.ஜ.கவினர் கூட எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்! (பா.ஜ.க ஆட்சியில் தான் முதன்முதல் இத்திட்டம் அருண்ஷோரியால் முன்வைக்கப்பட்டது)
காங்கிரஸாரோ மென்று விழங்குகிறார்கள்....
முதலமைச்சரோ பிரதமருக்கு எச்சரிக்கை கடிதம் எழுதுகிறார்!
அனைத்துகட்சித் தொழிற்சங்கங்களும் போராட்டத்திற்கு அணிதிரட்டுகின்றனர்.

ஆக, ராஜ்யசபா தேர்தலுக்கான முஸ்தீபுகளையும், பேரங்களையும் கடந்து, இன்றைய தமிழக அரசியலை என்.எல்.சியின் ஐந்து சதவிகித பங்கு விற்பனை ரௌத்திரம் கொள்ள வைத்துவிட்டது.

மத்திய அமைச்சரவையின் முடிவு ஏற்கத்தக்கதா?

அனைத்துகட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் எதிர்ப்புகள் நியாயமானதா?

என்பதை ஆய்வு செய்வதற்கு முன்பு என்.எல்.சி குறித்த சில அடிப்படைத் தகவல்களைப் பார்ப்போம்.

1956ல் காமராஜ் ஆட்சியில் நிறுவப்பட்ட இந்நிறுவனம் இந்தியாவில் லாபகரமாகச் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களில் குறிப்பிடத்தக்கது.
2490 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டது. இதில் 60%த்தை தமிழகத்திற்கு மத்திய அரசு தருகிறது.

மிக ஆழமாக சுரங்கங்கள் தோண்டப்பட்டு, அவற்றிலிருந்து நாளொன்றுக்கு 45,000டன் நிலக்கரியை இந்நிறுவனம் எடுக்கிறது.
இதில் சுமார் 18,000 நிரந்தரமாக்கப்பட்ட தொழிலாளர்களும் சுமார் 15,000 தொழிலாளர்கள் தினக்கூலி அடிப்படையில் நிரந்திரமில்லாமலும் வேலைபார்க்கிறார்கள்.

அடிக்கடி சர்ச்சைகளிலும், போராட்டங்களிலும் அடிபடும் இந்நிறுவனத்தின் பங்குகளை 2002ஆம் ஆண்டும், 2006ஆம் ஆண்டும் (பத்துசதவிகிதம்) விற்பனை செய்ய முயன்றது மத்திய அரசு. ஆனால் அப்போது மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க உறுதியான எதிர்ப்பை வெளிப்படுத்தியது. அனைத்து தொழிற்சங்கங்களும் ஆவேச போர்கோலம் பூண்டன. எனவே மத்திய அரசு பின்வாங்கியது.

ஆயினும் 1991 முதல் உலகமய, தாரளமய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா தன்னை இணைத்து கொண்டது தொடங்கி, பொதுத்துறை நிறுவனங்களை படிப்படியாக தனியார் மயமாக்கியும், பொதுத்துறை நிறுவன பங்குகளை கிட்டதட்ட 50சதவிகிதம் வரையில் விற்பனை செய்தும் வருகிறது. தற்போது செபி அமைப்பு தந்த பரிந்துரை காரணமாக 5 சதவிகித பங்கை விற்க முன்வந்துள்ளது. தற்போது இந்நிறுவனத்தின் 93.5 சதவிகித பங்கு அரசின் வசம் உள்ளது. ஐந்து சதவிகித விற்பனைக்குப் பிறகு 88.5% அரசின் வசம் இருக்கும்.

ஃ இந்த விற்பனையால் பொதுத்துறை பலஹீனப்படுத்தப்படுகிறது
ஃ பொதுத்துறை தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது
ஃ இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்
என்பதே எதிர்பவர்கள் வைக்கும் வாதமாகும்!

இதன்மூலம் தொழிலாளர்களையும், பொதுமக்களையும் உணர்ச்சிகொந்தளிப்பில் ஆழ்த்தி ஒன்று சேர்க்கிறார்கள்.

இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று பார்ப்பதற்கு முன்பு சில யதாரத்தங்களைப் பார்ப்போம்.

ஃ பொதுத்துறையான என்.எல்.சியின் தலைமை பொறுப்பில் இருந்தவர்கள் மீது கடந்த காலங்களில் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன.

ஃ சுரங்கப்பணிகளை பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு 'காண்டிராக்ட்' விடும் வகையில் பலநூறுகோடி ரூபாயை அதிகாரிகள் கமிஷனாக பெறுவதாக அடிக்கடி புகார்கள் எழுந்துள்ளன,

ஃ இந்த நிறுவனத்தில் 10 முதல் 25வருடங்கள் வரையிலும் மிகக்குறைந்த சம்பளத்திற்கு - நிரந்தரபடுத்தப்படாமல் - திரைக்கூலிகளாக தொழிலாளர்கள் சுரண்டப்படும் சூழலால் கடந்த காலங்களில் பல போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த சட்டவிரோத மனிதாபிமானமற்ற செயலுக்கு ஒரு பொதுத்துறை நிறுவனமே துணைபோனது எப்படி?

ஃ தொழிலாளர்களைக்காட்டிலும் அதிக எண்ணிக்கையில் (30,000பேர்) எக்சியூட்டிவ்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு ஒன்று, ஒன்றரைலட்சம் என சம்பளம் வழங்கப்படுகிறது.

ஃ இந்த வகையில் தேவையற்ற வகையில் கூடுதல் அதிகாரிகள், ஊதாரித்தனமான செலவினங்கள், அதீத அலட்சியபோக்குகள், தங்குதடையற்ற ஊழல், பணியில் அக்கரையின்மை, பொறுப்பின்மை போன்ற காரணங்களால் நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஃ நிர்வாகத்தோடு ஒத்துபோவதால் ஒரு சில தொழிற்சங்களும், தலைவர்களும் இதில் ஆதாயமடைகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் தொழிலாளர்கள் தரப்பிலிருந்தே எழுந்துள்ளது.

இந்த யதார்த்தங்களை நாம் கணக்கிலெடுத்துப் பார்த்தால் இந்திய சுதந்திரம் பெற்ற பிறகு ஜவஹர்லால் நேருவால் தோற்றுவிக்கப்பட்ட சோசலிஷகொள்கைகளும், அர்பணிப்பு உணர்வுகளும் தற்போது அடியோடு மாறியுள்ளதைக் காணலாம்.

அன்று பொதுத்துறை நிறுவனங்களை கோவில்களாக பாவிக்கும் தன்மை ஆள்வோரிடமும், பெதுமக்களிடமும் இருந்தது.

அதனால் தான் இந்த என்.எல்.சி உருவாக அன்றைய தினம் தன் 600ஏக்கர் நிலத்தை ஜம்புலிங்க முதலியார் தானமாகக் கொடுத்தார்!

அவர் மட்டுமல்ல, சாதாரண ஏழை, எளிய மக்களும் கூட தங்களது அரை ஏக்கர், ஒரு ஏக்கர் முதல் ஐந்து ஏக்கர் வரையிலான நிலங்களை தானாமாகவோ அல்லது மிகக்குறைந்த விலைக்கோ மனநிறைவுடன் அரசிற்கு நிலங்களை ஒப்புவித்தனர்.

ஆனால், இன்றைய நிலை என்ன?
இயற்கை எரிவாயுவை கொண்டு செல்ல கெயில் நிறுவனம் விவசாய நிலங்களின் அடிப்பகுதியை பயன்படுத்திக் கொள்ள - விவசாயத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத நிலையிலும் - பணம் தந்து பெற்றாலுமே கூட அது போதாது என மக்கள் போர்கோலம் பூணுகிறார்கள். பொதுத்துறை நிறுவனங்களின் குணாம்சங்களே தலைகீழாக மாறியுள்ளன.

ஒரே ஒரு பேருந்து வைத்துள்ள தனியார் கூட லாபத்துடன் செயல்படும்போது பல்லாயிரக்கணக்கில் பேருந்து ஓட்டும் அரசு பலநூறு கோடி நஷ்டப்படுகிறது. ஏர் இந்தியா நிறுவனமோ 42,570கோடிக்கடனிலும், 22000கோடி இழப்பிலும் செயல்பட்டுக் கொண்டிருக்க, தனியார் ஏர்வேஸ்களோ அபரிமிதமான லாபத்தை அள்ளுகின்றன.

அதெல்லாம் சரி, 'என்.எல்.சி லாபமாக அல்லவா செயல்படுகிறது?' எனக்கேட்கலாம்.
என்.எல்.சியின் லாபம் வெறும் 1400கோடிதான்!
இதுவே முறையாக நிர்வாகம் செய்யப்பட்டிருந்தால் சுமார் 50,000கோடி லாபமீட்ட முடியும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இன்றைய பொதுத்துறை நிறுவனங்களால் அதிகார வர்க்கமும் குறிப்பாக அதீத எண்ணிக்கையில் பணி அமர்த்தப்பட்ட அதிகாரிகளும், சில காண்டிராக்டர்களும், சில தொழிற்சங்க தலைவர்களும் பயனடையலாம்.
ஆனால், அதன் பொதுநலன்சார்ந்த அறநோக்கம் வீழ்த்தப்பட்டுள்ளது எனவே முதலில் அதைத்தான் மீட்டெடுக்க வேண்டும்.

அதற்கு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையும், பொறுப்புணர்வும் வேண்டும். தற்போது 5சதவிகித பங்குகள் பொதுமக்களுக்குத் தான் தரப்படுகிறது..
இந்த பங்கை பெறுகிற ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்த நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து கேள்விகேட்கும் உரிமை வந்துவிடுகிறது.
இதன்மூலம் திரட்டப்படும் 466கோடி மூலமாக சில விரிவாக்கப் பணிகள் நடைபெறும். கூடுதல் தொழிலாளர்கள் வேலை பெறுவர் உற்பத்தி திறன் அதிகரிக்கும்.
தனியார் நிறுவனங்கள் பலவுமே தங்களின் 25சதவிகித பங்குகளை பொதுமக்களுக்கு விநியோகித்து பணம் திரட்டும் போது பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் பங்குகளை மக்களுக்கு தர முன்வருவதன் மூலம் இன்னும் வெளிப்படைத் தன்மையுடனும், ஜனநாயகத்துடனும் செயல்பட வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.  

சீரழியும் நிலையில் சிறு, குறுந்தொழில்கள்!



"தமிழகத்தில் புதிதாக 7 தொழிற்பேட்டைகள் திறக்கப்படும்" என தமிழக தொழிற்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சிறு, குறுந்தொழில்களை வளர்க்க, ஊக்குவிக்க திருநெல்வேலியில் இரண்டு இடங்களிலும், விழுப்புரத்தில் மூன்று இடங்களிலும், வேலூர் மற்றும் திருவள்ளூரில் தலா ஒரு இடத்திலும் புதிய தொழிற்பேட்டைகள் தொடங்க உள்ளதாக அமைச்சர் அறிவித்தார்.
இவை நிச்சயம் வரவேற்க்கப்பட வேண்டிய அறிவிப்பு என்பதில் சந்தேகமில்லை. தமிழகத்தில் தற்போது சுமார் 50 இலட்சம் பேர் சிறுகுறுந்தொழில்களை நம்பி வாழ்கிறார்கள். சுமார் ஏழு லட்சம் சிறு,குறுந்தொழிலகங்கள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் எவ்வளவு தொழிற்பேட்டைகள் ஆரம்பித்தாலும் வரவேற்க்கலாம். நன்று. ஆனால் இதற்காக மிகக் குறைந்த நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறு குறுந்தொழில்களுக்கு தமிழக அரசின் வரவு செலவு திட்டத்தில் 50 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை இந்த நேரத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டும். தற்போது நாளும் நலிந்துவரும் சிறுகுறுந்தொழில்களை தூக்கி நிறுத்த செலவில்லாத சில மேம்பாட்டு திட்டங்களை சிறு குறுந்தொழில் முகவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தமிழ்நாட்டில் நிலவிவரும் கடும் மின்வெட்டு காரணமாக சிறுகுறுந்தொழிற்சாலைகள் இயங்க இயலாமல் ஸ்தம்பித்துள்ளன. பெரிய தொழிற்சாலைகளுக்கு மட்டுமே தங்குதடையற்ற மின்சார விநியோகம் உத்திரவாதப்படுத்தப்பட்டுள்ளது.
சிறுகுறுந்தொழில் முதலீட்டாளர்கள் வேண்டுவதெல்லாம் பெரிய தொழிற்சாலைகளைக் காட்டிலும் மிக அதிகமான வேலைவாய்ப்பை வழங்கி நாட்டின் பொருளாதாரத்தையும், எளிய மக்களின் வாழ்க்கையையும் உயிர்ப்போடு வைத்துக் கொண்டிருக்கும் சிறு, குறுந்தொழிலகங்களுக்கு தங்கு தடையற்ற மின் விநியோகம் வழங்கப்படவேண்டும் என்பதே! அதோடு சிறு குறுந்தொழில் தொடங்க தடையாகவுள்ள பல அரசு விதிமுறைகள், நடைமுறைவிதிகள் எளிமைபடுத்தப்பட்டு சிறு குறுந்தொழில்களுக்கு உடனடியாக லைசென்ஸ் மற்றும் கிளியரன்ஸ் வழங்க வேண்டும். மேலும் அந்தந்த தொழிலகங்களோ அல்லது கூட்டாக இணைந்தோ மின் உற்பத்தியில் ஈடுபட்டு தாங்களே அரசை எதிர்பாக்காமல் பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்க வேண்டும்.
ஏற்கெனவே உள்ள தொழிற்பேட்டைகளில் சாலைவசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட அனைத்தையும் செய்து கொடுக்க வேண்டும்.
மிக அத்தியாவசியமாக  சிறு குறுந்தொழில்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்கு உகந்த சந்தையை அரசு உருவாக்கித் தர வேண்டும். இதில் உள்ள அதிக வரிகள் குறைக்கப்பட்டால் இன்னும் அதிகமாக சந்தைப்படுத்த ஏதுவாகும்! இதனால் வேலைவாய்ப்புகள் கூடுதலாகும்!
உண்மையில் தற்போதுள்ள தொழிற்பேட்டைகள் நலிவுற்று மின்பற்றாக்குறையால் ஸ்தம்பித்து, அடிப்படை வசதிகளற்று உள்ளன. இந்த குறைகள் அனைத்தும் களையப்பட்டு ஒவ்வொரு தொழிற்பேட்டையும்  மிஷிளி 9000 சான்றிதழ் பெறும் வகையில் தரம் உயர்த்தப்பட வேண்டும். இதை தமிழக அரசு செய்ய முன்வரும் பட்சத்தில் பல இலட்சம் குடும்பத்தில் விளக்கேற்றிய புண்ணியம் இந்த அரசுக்கு கிடைக்கும்!

11.5.2012

IPL - சூதாட்டம்



மீண்டும் ஒரு முறையாக தற்போது .பி.எல் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்று வரும் சூதாட்டம் அம்பலமாகியுள்ளது. இந்த முறை ஐந்து விளையாட்டு வீரர்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளனர். ஸ்ரீ வஸத்தவா, சுசிந்திரா, மோனிஷ் மிஸ்ரா, அமீத்யாதவ், அபினவ் பாலி என்ற இந்த ஐவருமே அவ்வளவு பிரபலமான வீரர்களுமல்ல... இவர்களுக்கே இவ்வளவு ரேட் என்றால் மற்றவர்களுக்கு... எவ்வளவோ...! என்ற சந்தேகமே தற்போது அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பேச்சாக உள்ளது. இந்த பேரத்தில் கிரிக்கெட் அணியின் உரிமையாளர்கள் சிலர், அமைப்பாளர்கள் சிலர் அம்பலப்பட்டுள்ளதும் அம்பலமானால் ஆச்சரியமில்லை.
விளையாட்டு என்பது உடல், மனம் என்ற இரண்டையுமே ஒருமுகப்படுத்தி ஆற்றலும், ஆரோக்கியமும் தரக்கூடியது என்பதே பொதுவான புரிதல். ஆனால் கிரிக்கெட் விளையாட்டில் மட்டும் அது விபரீத புரிதலாகி வெகுகாலமாகிறது... கற்பனைக் கெட்டா அளவிலான கரன்ஸிகளின் புழக்கம், கறுப்பு பணத்தை வெள்ளையாக்குதல், ஆடம்பரங்கள், ஆர்பாட்டங்கள், ஆபாசநடனங்கள், மனிதனையே ஏலம் எடுக்கும் மனப்போக்குகள், சட்டங்களை மீறிய வியாபார அணுகுமுறைகள், சதிகளை அரங்கேற்றும் சூதாட்ட பேரங்கள்... என்பதாக கிரிக்கெட் தற்போது அதன் உண்மையான ரசிகர்களையே உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது.
கிரிக்கெட் விளையாட்டு என்பது இவ்வளவு  விஸ்வரூபமெடுத்ததற்கும் விகாரமானதற்கும் காரணங்கள் என்ன? எத்தனையோ பல அற்புதமான, ஆரோக்கியமான, நம் மண்ணின் விளையாட்டுகள் இருக்க..., ஆங்கிலேயர்களால் 18ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்று வரை அவர்கள் அடிமையாய் வைத்திருந்த நாடுகளில் மட்டுமே ஆடப்பட்டு வருகிற-கிரிக்கெட் மட்டும் உச்சாணிக் கொம்பாக உயர்த்தப்பட்டும், ஆராதிக்கப்பட்டும் வருவது ஏன்?
உண்மையில் 1970களுக்குப் பிறகு கிரிக்கெட் ரசனை என்பது நமது மத்திய மாநில அரசுகளால் தூண்டப்பட்டு, வெறியாக வளர்த்தெடுக்கப்பட்டு வந்தது!
கிரிக்கெட் விளையாட்டின் போது விடுமுறை, கிரிக்கெட் வீரர்களுக்கு போட்டிபோட்டுக் கொண்டு மத்திய, மாநில அரசுகள் வழங்கிய பரிசுகள், சலுகைகள், அன்றைய அரசு தொலைகாட்சிகளில் தரப்பட்ட முக்கியத்துவங்கள், விளம்பரங்கள் போன்றவை மற்ற பல விளையாட்டுகளை பின்னுக்குத் தள்ளியதோடு, அவை சம்மந்தப்பட்ட விளையாட்டு வீரர்களையும் விரக்தி கொள்ளவைத்தது. இன்றும் அவை தொடர்வதை யாரும் மறுக்க முடியாது.
கிரிக்கெட்டில் சூதாட்டம் என்பது 1999 தொடங்கி தொடர்ந்து அம்பலப்பட்டுவருகிறது. முதலில் தென்ஆப்ரிக்கா கேப்டன் ஹன்சிகுரேனா அம்பலமானார். அதைத்தொடர்ந்து இந்தியாவில்  அசாருதின், அஜய் சடோஜா ஆகியோர் அகப்பட்டு தண்டிக்கப்பட்டனர். சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கேப்டன் சல்மான்பட், முகமதுஅமீர், முகமது சலீம் அம்பலமாகி சிறையில் தள்ளப்பட்டனர்.
முன்பெல்லாம் அரசல்புரசலாக நடந்து கொண்டிருந்த கிரிக்கெட் சூதாட்டம் 2008-ல் .பி.எல் வருகைக்கு பின்பு அங்கிகரிக்கப்பட்ட ஒன்றாக அபரிமித வளர்ச்சி பெற்றுவிட்டது..
அங்கீகரிக்கப்பட்ட கிரிக்கெட் விளையாட்டில் புழங்கும் பணம் சில நூறுகோடி என்றால் அங்கீகரிக்கப்படாத கிரிக்கெட் சூதாட்டத்தில் புழங்கும் பணமோ சில ஆயிரம் கோடி என்றார்கள்.
இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது மட்டுமே சுமார் 100 கோடியை தொடுகிறது இந்த சூதாட்ட பேரங்கள்! ஆனால் தற்போது .பி.எல் வந்த பிறகு நடக்கும் ஒரு நாள் போட்டிகளோ அதையும் தாண்டிவிட்டது என்கிறார்கள்.
உலகிலேயே மிகப்பெரிய பணக்கார விளையாட்டு அமைப்பாக நமது ஙிசிசிமி தான் திகழ்கிறது. கிரிக்கெட் சூதாட்டத்திற்கே தற்போது இந்தியா தாயகமாகிவிட்டது. இதனால் தான் சமீபத்தில் ஒரு பேட்டியில் .சி.சியின் தலைமை நிர்வாகி, பேசாமல் இந்தியாவில் கிரிக்கெட் சூதாட்டத்தை சட்ட பூர்வ மாக்கிவிட்டுப் போகலாமே... என்று கமெண்ட் அடித்தார். நமது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரும் இதே கமெண்ட்டை கசப்புடன் கூறியுள்ளார். இது எதனால் என்றால் இந்த சூதாட்டங்கள் அனைத்தையும் தெரிந்தும்தெரியாதது போல் நமது அரசாங்கம் காட்டிகொள்வதால் தான்! கிரிக்கெட் சூதாட்டம் சட்டபூர்வமானால் அரசுக்கு வருமானம் பெருகலாம்! ஆனால் அது விரும்பத்தகாத பல விபரீதங்களை விளையாட்டுத்துறையில் ஏற்படுத்திவிடும்.
ஆகவே, குறைந்தபட்ச நடவடிக்கையாக .பி.எல் போட்டிகளுக்கு தடைபோடலாம்! மற்ற பல மண் சார்ந்த விளையாட்டுகளுக்கு அதிக நிதி தந்து ஊக்கப்படுத்தி முக்கியத்துவம் அளிக்கலாம்.

16.5.2012