அவநம்பிக்கை விதை
-சாவித்திரிகண்ணன்
தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்து தனிப்பெரும் அறிஞராக, ஆறறலாளராக விளங்கிய அம்பேத்கர் பற்றிய படம் காலம் கடந்து இப்போதாவது வெளிவந்துள்ளதை பாராட்ட வேண்டும்.
சாதி ஏற்றத்தாழ்வுகளால்-உயர்சாதி இந்துக்களால் அம்பேத்கார் பெற்ற அவமானங்கள், பரோடா மன்னர் உதவியில் அவர் அமெரிக்கா, லண்டன் சென்று படித்து பாரிஸ்டராவது போன்றவை இயல்பாக சித்தரிக்கப் பட்டுள்ளன, டாக்டர் அம்பேத்கரை நிஜமாகவே நாம் பார்ப்பது போன்ற உணர்வை தன் நடிப்பாற்றலால் ஏற்படுத்துகிறார் நடிகர் மம்முட்டி. இடைவேளை வரை சரியாக எடுக்கப்பட்ட படம் அதன்பிறகு தவறான வரலாற்று புரிதலோடு நகர்கிறது.
அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையிலான வரலாற்று நிகழ்வுகள் தவறான அரசியல் உள்நோக்கத்தோடு திரித்து சொல்லப்பட்டுள்ளது. பூனா ஒப்பந்தம் என்பது என்ன?
அம்பேத்கார் பிரிட்டிஷாரிடம் தலித்களுக்கென தனித்தொகுதிகள், இரட்டைவாக்குரிமை கேட்டார். அப்படிப் பெறுவதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சனை முடிவுக்கு வரும் என நினைத்தார். இதற்கு சீக்கியர்களும், மூஸ்லீம்களும் இரட்டை வாக்குரிமை சலுகை பெற்றிருப்பதை முன்மாதரிியாக காட்டி வாதம் வைத்தார்.
காந்தி இந்த வாதத்தை ஏற்கவில்லை. ஆயினும் தனித்தொகுதிகள் தலித்து களுக்கு தரப்படுவதை ஏற்றுக்கொண்டார். அம்பேத்கார் 197 தொகுதிகள் கேட்டார். பிரிட்டிஷ் அரசு 71 தொகுதிகள் மட்டுமே தர ஒப்புக்கொண்டது. ஆனால் காந்தியின் தலையிட்டால் தான் தலித் மக்களுக்கு 147 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த வரலாறு இந்த திரைப்படத்தில் திட்ட மிட்டு மறைக்கப்பட்டுள்ளது. மேலும் இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் இரட்டை வாக்குரிமை பெற்று இருந்ததால் தீண்டாதாருக்கு அவ்வுரிமை வேண்டும் என்ற போது, "இஸ்லாமியர்களும், சீக்கியர்களும் எப்போதும் இஸ்லாமியர்களாகவும் சீக்கியர்களாகவுமே இருக்கப் போகிறவர்கள் ஆனால் இன்று தீண்டப்படாதவர்களாக இருப்பவர்கள் எப்போதும் தீண்டப் படாதவர்களாகவே இருந்துவிட வேண்டுமா? தீண்டப்படாதவர்களை பெரும்பான்மை இந்து சமூகத்தின் பிரிக்க முடியாத, சமமதிப்புள்ள ஒர் அங்கமாக மாற்றுவதே என் நோக்கம், ஆனால் இந்தச்சலுகைகள் அவர்களை என்றென்றும் பெரும்பான்மை சமூகத்திடமிருந்து பிரித்து விடும். அது நிரந்தர பகை உணர்வை விதைத்து விடும்" என்றார் காந்தி இந்த செய்தியும் இதில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும் காந்தி தாழ்த்தப்பட்டவர்களை எதிர்க்க மூஸ்லீம்களை தூண்டி பயன்படுத்தி கீழ்த்தர அரசியலில் இறங்கியதாகவும் ஆதாரமில்லாத அப்பட்டமான பொய் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
அரசின் சலுகைகள் மூலம் சமூக மாற்றம் நிகழ்ந்துவிடும் என அம்பேத்கர் நம்பினார். ஆனால் அந்த சமூக மாற்றத்தை இந்து சமூகத்திலிருந்து கொண்டு போராடுவதன் மூலமும், உயர்சாதி இந்துக்களின் மனசாட்சியை உலுக்கி மாற்றம் கொள்ள வைப்பதன் மூலமும் சாத்தியமாக்கலாம் என்றார் காந்தி.
எரவாடா சிறையில் காந்தி உண்ணாவிரதத்தை அறிவித்த போது சொன்ன வாசகம் இது தான். "ஹரிஜன மக்களின் இன்றைய நிலைபாடுகளுக்கு காரணம் உயர்சாதி இந்துக்கள். அவர்கள் தங்கள் இதயத்தை தூய்மை படுத்திக் கொண்டு மனமாற்றம் கொள்ளாவிடில் என்னைத்தியாகம் செய்து விட வேண்டியது தான்" என்றார். ஆக, காந்தியின் உண்ணாவிரதம் என்பது உயர்சாதி இந்துக்களிடம் மன மாற்றம் வேண்டி மேற்கொள்ளப்பட்டதேயின்றி தலித்துகளுக்கு எதிரானதல்ல' என்பதே உண்மை!
அப்போது இந்தியாவில் நடந்த நிகழ்வுகளை பிரபல அமெரிக்க பத்திரிக்கையாளர் லூயி பிஷர் பதிவு செய்துள்ளார். அதை அப்படியே இங்கே பார்ப்போம்.
"ஹிந்துக்களின் மனசாட்சியை உறுத்தி செயலுக்கு தூண்டுவதே இந்த உபவாசம்' என காந்தி பகிரங்கமாக அறிவித்த ஷணத்திலிருந்து பல அதிசயத்தக்க நிகழ்வுகள் நடந்தேறின. 'நம்மை சீர்த்திருத்துவதற்காக தன்னைத் தானே வருத்திக்கொள்ளும் இந்தப் புனிதரை நாம் கொன்று விடப்போகிறோமா?' என இந்துக்களிடம் பரவலான கேள்வி எழுந்தது. பெருநகரங்கள், சிற்றூர்கள், கிராமங்கள், பட்டிதொட்டியெங்கும் இதே விவாதமானது. உண்ணாவிரதத்திற்கு முந்தினநாளே அகமதாபாத்தில் உள்ள 12 பெரிய கோயில்கள் திறந்துவிடப்பட்டன, அடுத்தடுத்து பல்வேறு ஊர்களில் நூற்றுக்கணக்கான கோயில்கள் திறந்து விடப்பட்டன. அவற்றின் வாயில்களில் பிராமணர்கள், பண்டிதர்கள் ஹரிசனமக்களை கைகூப்பி வரவேற்றார்கள்.
அப்போது கோயில்களின் வாயில்களில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 98% வாக்குகள் தாழ்த்தப்பட்டமக்களின் ஆலயபிரவேசத்திற்கு ஆதரவாக இருந்தது. 2% மட்டுமே எதிராக இருந்தது. இது மட்டுமல்ல, கிராமங்களில் கிணறுகளில் தண்ணீர் எடுக்க அனுமதி, பொதுவீதிகளில் நடமாட அனுமதி என ஆங்காங்கே மக்கள் அமைப்புகள், சங்கங்கள் தீர்மானம் இயற்றி நடைமுறைக்கு வந்தன. தினசரி இது போன்ற நூற்றுக்கணக்கான நிகழ்வுகளை பத்திரிக்கைகள் பட்டியலிட்டு பிரசுரித்தன." ஆக, இதன் மூலம் உயர்சாதி இந்துக்களின் மனதில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவான நியாயமான சிந்தனைகளை உருவாக்குவதில் காந்தியின் உண்ணாவிரதம் காத்திரமான பங்களிப்பை ஆற்றியது என்பதே வரலாற்று உண்மை.
மேலும் முதலில் காந்தியை சந்தேகித்த அம்பேத்கார் - காந்தியை எதிரியாக கருதிய அம்பேத்கர் - பிறகு மனம் மாறினார் என்பதற்கு செப்டம்பர் 25ந்தேதி புனா ஒப்பந்தத்திற்கு பிறகு மும்பையில் நடந்த மாநாட்டில் அவர் ஆற்றிய உரையே சான்று.
"நான் ஒன்றை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் நான் வியப்புற்றேன். மிக, மிக வியப்புற்றேன். அவரை நான் சந்தித்த போது எங்கள் இருவருக்கும் எவ்வளவு ஒற்றுமை இருக்கிறது என்பதைக் கண்டு வியப்புற்றேன். அவரிடம் நாங்கள் போய்ச் சொன்ன எல்லாபிரச்சினை களிலும் அவர் எனக்கு சாதகமாகவே இருந்தார். மிகவும் சங்கடமான ஒரு நிலையிலிருந்து என்னை விடுவித்ததற்காக, மகாத்மாஜீக்கு நான் பெரிதும் நன்றி செலுத்துகிறேன்" என்றார்.
மேலும் புனா ஒப்பந்தத்தில் அம்பேத்கரின் இரட்டை வாக்குரிமை என்ற கோரிக்கை தவிர மற்ற எல்லா கோரிக்கையையும் தான் ஏற்றுக் கொண்டதோடு காங்கிரஸையும், இந்திய மக்களையும் ஏற்க வைத்தார் காந்தி. அன்று இரட்டை வாக்குரிமை வழங்கப்பட்டிருந்தாலும் தாழ்த்தப் பட்டவர்களில் படித்தவர்கள், சொத்துரிமை உள்ள மிக மிகச்சிலரே ஓட்டுபோடும் உரிமை பெற்றிருப்பார்கள். அது 2% கூட இருந்திருக்காது, இதை அம்பேத்கரும் உணர்ந்திருந்தால் தான் அந்த கோரிக்கையை விட்டுவிட்டார்.
மேலும் காந்தி உண்ணவிரதம் இருக்காமல் இப்படி ஒரு சட்டம் அமலுக்கு வந்திருந்தால் அது மற்ற இந்துக்களின் எதிர்ப்பை பெற்று நடைமுறைப்படுத்துவதே சிக்கலாகியிருக்கும் என்பதை அம்பேத்கர் அறிந்திருந்தார்.
இதனால் தான் அவர் காந்தியிடம், "நீங்கள் மற்ற போராட்டங்களை எல்லாம் விட்டு விட்டு தாழ்த்தப்பட்டவர்களுக்காக மட்டுமே போராட வந்தால் நாங்கள் உங்களைத் தலைவராக ஏற்போம்" என்றார்.
தாழ்த்தப்பட்ட மக்களிடம் நேரடியாக இறங்கி களவேலை பாரத்தவர் காந்தி. அவரது பாதிப்பால் அன்று லட்சக்கணக்கான அந்தஸ்துள்ள உயர்சாதி இந்துக்கள் கிராமங்களுக்கும், சேரிகளுக்கும் சென்று ஹரிஜன சேவையில் தங்களை அர்பணித்தார்கள். ஆகவே காந்தி தான் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்திய மக்களின் தனிப்பெரும் தலைவராக இருந்தார். ஆனால் அம்பேத்கரோ ஒரு மாபெரும் அறிஞர். அறிவு ஜீவி, பெரும் சிந்தனையாளர். ஆனால் அவர் தாழ்த்தப்பட்ட மக்கள் திரளின் தலைவராக ஒரு போதும் திகழ்நதவரல்ல, அவர் தான் போட்டியிட்ட தொகுதியிலேயே மக்களால் தோற்கடிக்கப்பட்டார்.
காந்தியையும், காங்கிரஸையும் எதிர்த்த நிலையிலும், அவரை அரசியல் சட்ட வரைவு குழுவின் தலைவராகவும், இந்தியாவின் சட்ட அமைச்சராகவும் ஆக்கி கௌரவப்படுத்தியது காந்தியும் நேருவும் தானே! அது மட்டுமின்றி வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என சட்டம் கொண்டு வந்து அனைத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் வாக்குரிமை வாய்ப்பு ஏற்படுத்தியது காங்கிரஸ் தானே!
ஆனால் இந்த படத்தில் காங்கிரஸையும், காந்தி, நேருவையும் தாழ்த்தபட்டவர்களின் வில்லனாக சித்தரித்துள்ளனர். பிரிட்டிஷ் இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கும், சீக்கியர்களுக்கும் வழங்கப்பட்டு வந்த இரட்டை வாக்குரிமை உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் காங்கிரஸ் அரசு இந்திய சுதந்திற்குப் பிறகு வாபஸ் பெற்றது. ஆனால் காந்தியால் அங்கீகரிக்கப் பட்ட தாழ்த்தப் பட்டோருக்கு தனித்தொகுதிகள் என்ற சலுகையை ரத்து செய்யவில்லை. அது இன்று வரை தொடர்கிறது.
இந்த உண்மைகள் இப்படத்தில் இருட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மாறாக திட்டமிட்டு காந்தி, நேரு போன்ற தலைவர்கள் வரும் காட்சிகளில் அவர்களின் இமேஜை தகர்க்கும் படி காட்சி அமைப்புகள், வசனங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. காந்தி, நேரு பாத்திரத்திற்கு தேர்வான நடிகர்களின் தேர்வே இதற்கு அத்தாட்சி.
அரசியல் சட்டவரைவு குழு தலைவராவதற்கும், சட்ட அமைச்சராவதற்கும் அம்பேத்கரை நேரு கெஞ்சி பேசி சம்மதிக்க வைப்பதாகவும், இந்து திருமணச் சட்டத்தை அமல்படுத்த மறுத்தவர் போலவும் காட்டியிருப்பது ஏற்புடையதல்ல, உண்மைக்கு மாறானதாகும், இந்து திருமணசட்டத்தை ஜனநாயக ரீதியில் எதிர்ப்புகளை எதிர்கொண்டு நேருதானே அமல்படுத்தினார்! காலம் கனிவதற்கா சிறிது நேரம் எடுத்துக்கொண்டார். அதற்குள் பொறுமையிழந்து, அதிருப்தியுற்று அம்பேத்கர் பதவி விலகினார்.
அம்பேத்கர் காந்தியை தேடிவரும் போது காந்தி வேண்டுமென்றே அம்பேத்கரை கண்டும் காணாமல் அவமதிப்பதாகவும், பேசுவதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது, அதோடு அம்பேத்கர் பேசும் போது அவரை காந்தி முறைத்து பார்ப்பது போலவும் காட்சி படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல காந்தி அம்பேத்கரை புனாவில் வசிக்கும் முற்போக்கு பிராமணர் என கருதியதாகவும் வசனம் இடம்பெற்றுள்ளது. இது அப்பட்டமான பொய். தன்னை சந்திப்பதற்கு முன்பே அம்பேத்கரை பற்றியும் அவருடைய மேதமை, போராட்டங்கள் பற்றியும் காந்தி நன்கு அறிந்திருந்தார். ஹரிஜன் பத்திரிகையில் எழுதியிருந்தார்.
மொத்தத்தில் இந்த திரைபடத்தில் காந்தியை அழிச்சாட்டியம் செய்யும் அழுகுனிபேர்வளிபோலவும், நேருவை உதவாக்கரையான உம்மாணமூஞ்சி போலவும் சித்தரித்துள்ளனர். என்றென்றும் உலக அரங்கில் ஒரு ஆதர்ஷ புருஷராக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு போராடும் தலைவர்களுக்கு வழிகாட்டியாக, தலாய்லாமா, மார்டின் லூதர்கிங், தென்கொரியாவின் ஹாம்ஸோக்ஸோன், ஜாம்பியாவின் கென்னக்காவுண்டா, ஆப்பிரிக்காவின் குவாமேருக்மா, நெல்சன் மண்டேலா, அமெரிக்க அதிபர் ஓபாமா உள்ளிட்ட உலகின் முக்கியஸ்தர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்துகொண்டிருக்கும் உத்தமர் காந்தியை இவ்வளவு உள்நோக்கங் களோடு இழிவுபடுத்தவேண்டிய அவசியமென்ன? ஆசியாவின் ஜோதி என்றும், வசிகரமிக்க தலைவரென்றும் வரலாற்றில் இடம்பெற்ற பண்டித ஜவஹர்லால் நேருவை இவ்விதம் கேவலப்படுத்தவேண்டிய அவசியமென்ன?
காந்திக்கு எதிரான வசனங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளது அக்காட்சிகளில் காந்தியை அறிந்திராத இன்றைய இளம் தலைமுறை தலித் இளைஞர்கள், தலித் ஆதரவாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். காந்தி சுட்டுக் கொள்ளப்பட்ட செய்தி அம்பேருக்கு அறிவிக்கப்பட்ட தருணத்திலும் தியேட்டரில் கைத்தட்டலும், விசிலும் தூள் பறந்தன. 'தாழ்த்தப்பட்ட மக்களின் பெரும் வரலாற்று துரோகி ஒழிந்தான்' என்ற மனநிலைக்கு வரலாறு அறியாத பார்வையாளர்களை கொண்டு நிறுத்தியதில் இயக்குநர் ஜாபர் படேல் சாதித்திருக்கலாம். காங்கிரஸிக்கும், காந்திக்கும் எதிரான அரசியலை முன்னெடுக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட சித்திரமாக அம்பேத்கர் திரைப்படம் அமைந்துள்ளது மிகவும் துரதிஷ்டம். தாழ்த்தப்பட்ட மக்களிடம் வரலாற்றை திரித்து கூறுதலும், உண்மைகளை மறைப்பதும் அம்மக்களுக்கே செய்யும் துரோக மில்லாமல் வேறில்லை.
டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கார் திரைப்படம் இந்திய அரசு, மகாராஷ்டிர அரசு நிதி உதவியுடன் தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ளது, இதை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட தமிழக அரசு ரூ 10 லட்சம் தந்துள்ளது. நல்ல நோக்கத்தோடு வழங்கப்பட்ட நிதியை கொண்டு நஞ்சை விதைத்தற்கு மாறாக வரலாற்று உண்மைகளை உள்ளது உள்ளபடியே சொல்லப்பட்டிருந்தால் அம்பேத்கர் படம் அனைத்து மக்களிடமும் நல்ல வரவேற்பு பெற்றிருக்கும்!
16 comments:
மிக நேர்மையோடு , முழுமையான தரவுகளோடு எழுதப்பட்ட கட்டுரை . மனம் நிறைந்த நன்றிகள்
தமிழக அரசு இந்தப் படம் தமிழில் தயாரான பிறகுதான் அதற்காக அறிவிக்கப்பட்ட 10 லட்சம் ரூபாயை வழங்கியது. அதன் பிறகு அதைக் கொண்டு படத்தில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது.
-அ. குமரேசன்
காந்தியையும் நேருவையும் விமர்சித்ததால்தான் இந்தப் படம் “நல்ல வரவேற்பு” பெறவில்லை என்பது போல் சித்தரிப்பது அரசியல் குழபபமே. அடிப்படையில் அம்பேத்கரை தலித் தலைவராக மட்டுமே சித்தரித்து, காந்தியை அனைத்து மக்களின் தலைவராக உயர்த்திக் கூறிக்கொண்டிருப்பதிலேயே ஒரு சமூக நீதி மறுப்புக் குணம் வந்துவிடுகிறது.
மக்கள் மனங்களில் இந்த எண்ணங்கள் உருவேற்றப்பட்டதும், எந்திரன் போன்ற வர்த்த ஆக்கிரமிப்பு வலைவிரிப்புகளும், இன்றைக்கும் வலுவாக இருக்கிற சாதியப்புத்தியுமாகத்தான் இந்தப் படத்திற்கு இதர பகுதி மக்கள் திரண்டுவருவதைத் தடுத்திருக்கிறது. உங்கள் கட்டுரையும் அந்தக் கைங்கர்யத்தையே செய்கிறது.
-அ.குமரேசன்
இந்துக்களுக்கு வேண்டுகோள் விடுப்பதற்காகத்தான் உண்ணாவிரதம் இருந்தார் என்றே ஏற்றுக்கொள்வோம். அதே வேளையில் தனி இட ஒதுக்கீடு, இரட்டை வாக்குரிமை போன்றவற்றின் நியாயங்களை அவர் பிடிவாதமாக ஏற்க மறுத்தார் என்பதும் உண்மை. அதை இன்று திரைப்படமாக்குகிறபோது படைப்பாளி இந்தக் கருத்தைப் பதிவு செய்ய அதற்கேற்ப காட்சியை உருவாக்கியிருக்கிறார். அம்பேத்கரை இத்தனை காலம் இருட்டிப்பு செய்துவந்ததை விட படத்தின் இயக்குநர் செய்திருபபது எவ்வகையிலும் குற்றமல்ல.
இந்தப் படம் சும்மா அம்பேத்கரின் கதையைச் சொல்லவில்லை. அம்பேத்கர் வாழ்க்கையின் செய்தியைச் சொல்கிறது. அது காந்தி வாழ்க்கையின் ஒரு செய்தியையும் சொல்கிறது. அடிப்படையான நடவடிக்கைகள் இல்லாமல் மேலோட்டமான உபதேசங்கள், சமரசங்கள் மூலமாக மட்டுமே சமத்துவத்தைக் கொண்டுவந்துவிட முடியும் என்பது காந்தியின் எண்ணம். அது சாத்தியமல்ல என்பதைத்தான் வரலாறு உணர்த்துகிறது.
இப்படி எழுதுவதால் காந்தியின் வரலாற்றுப் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடுவதாகவோ இழிவுபடுத்துவதாகவோ ஆகாது. யாரும் ஆய்வு சார்ந்த விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.
இணையதளம் கிடைத்தால் கண்டதை எழுதலாம் என்கிற தைரியம் யார் கொடுத்தார்..வீதியில் நீ நடக்கும் போது சாதியை உன்னை அழைக்கப்பட்டிருக்கிறாயா..உங்க வீட்டுல எந்த நாயாவது வேலைக்கு போனப்போ காமவெறியர்களால் இச்சைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறீர்களா.. சமத்துவத்தை...உங்க முதுகு தோலை உறிக்க பாபாசாகிப் பாடுபட்ட பாடுகளை வெளியிட்ட போது மத்திய் அரசின் சிறந்த திரைப்படத்துக்கான விருது வழங்கப்பட்டது..பொய்யை மறைத்தால் தரமாட்டாங்க..உங்க தமிழக அரசு கொடுத்த 10 லட்சம் பாபா சாகிப் அவர்களில் சூ துடைக்க கூட பத்தாது..பெரியார் திரைப்படத்துக்கு 95 தந்தபோது நீ இத புடுங்க போனியா... பாபாசாகிப்ன்னா உங்க இதுலாம் ஆடுதா... சமூகத்தின் அவலங்களை பின்னியெடுத்த யாருருக்கும் அடங்கா சவுக்கு..பாபாசாகிப்
சேரிப்பெண்
படத்தில் ஒரு வரலாற்று பிழை இருக்கிறது, அதை வேண்டுமானால் சொல்லலாம், காந்தி அரசியல் அமைப்பு சட்டத்தை ஒரு தாழ்த்தபட்டவன் எழுதினாதான் நல்லா இருக்கும் என்று சொல்வது தான் வரலாற்று பிழை,(அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை)
இந்தியா சுத்திரத்திற்க்கு (1947)முன்பே ஆங்கிலேயர்கள் உங்களை நீங்களே ஆல முடியும் என்றால் அதற்க்காண சட்ட வடிவத்தை கேட்டபோது
நேரு அப்பா (அப்போது அவர் இந்தியாவின் மிகப்பெரிய வழக்கறிஞர்) மற்றும் பலர் சேர்ந்து இந்தியவிற்க்கான அரசியலமைப்பு சட்டம் எழுதி கொடுத்தார்கள் அதை பார்த்துவிட்டு இந்த சட்டத்தை வைத்துகொண்டு 3 நாட்கள் கூட உங்களாக இந்தியாவ ஆள முடியாது என்று தூக்கி எறிந்தான் ஆங்கிலேயன்.( அப்போது அனைவருமே வழக்கறிஞர்கள் தான் காந்தி, வல்லபாய் பட்டேல்,,நேரு......)ஒரு பெரும் கூட்டமே இருந்தது ஆனால் ஒருவருக்கு அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க எந்த திறமையும் இல்லை என்பது தான் உண்மை.
பிறகு அம்பேத்கர் தலைமையில் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க அரசியல் அமைப்பு வரைவு குழுவில் 7 பேர் கொண்ட ஒரு குழுவை நிர்ணயித்த போதும் அனைவரும் ஜகா வாங்கி கொண்டு ஓடிவிட்டார்கள்.
அம்பேத்கர் என்ற அனைத்தும் கற்று தெரிந்த அறிவு ஆசானால் மட்டுமே அரசியல் சட்டத்தை உருவாக்க முடிந்தது.
டாக்டர் அம்பேத்கர் அவர்களை தவிர வேறு எவராலும் இதை சாதித்திருக்க முடியாது என்று இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் ராஜேந்திரப் பிரசாத் கூறினார்.
படத்தில் கடைசியில்
காந்தியை கொஞ்சம் நல்லவனாக காட்ட அரசு எடுத்துகொண்டதா என்று தெரியவில்லை
"தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்து தனிப்பெரும் அறிஞராக, ஆறறலாளராக விளங்கிய அம்பேத்கர் பற்றிய படம் காலம் கடந்து இப்போதாவது வெளிவந்துள்ளதை பாராட்ட வேண்டும்." எனும் ஆரம்ப வரிகள் குரூரமானவை,
மிகவும் பக்குவமற்றவை,
தன்னுடைய ஒவ்வொரு நகர்விலும் இந்திய சாதிய சமூகத்தால் முகத்தில் குத்தப்பட்டுக்கொண்டே இருந்த ஒரு மனிதன் பெரும் தலைவனாக உயர்ந்த முழு பரிணாமத்தையும் அவை உள்வாங்கிக்கொள்ளவில்லை,
"அம்பேத்கார் பிரிட்டிஷாரிடம் தலித்களுக்கென தனித்தொகுதிகள், இரட்டைவாக்குரிமை கேட்டார். அப்படிப் பெறுவதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சனை முடிவுக்கு வரும் என நினைத்தார். இதற்கு சீக்கியர்களும், மூஸ்லீம்களும் இரட்டை வாக்குரிமை சலுகை பெற்றிருப்பதை முன்மாதரிியாக காட்டி வாதம் வைத்தார்.
காந்தி இந்த வாதத்தை ஏற்கவில்லை. ஆயினும் தனித்தொகுதிகள் தலித்து களுக்கு தரப்படுவதை ஏற்றுக்கொண்டார். அம்பேத்கார் 197 தொகுதிகள் கேட்டார். பிரிட்டிஷ் அரசு 71 தொகுதிகள் மட்டுமே தர ஒப்புக்கொண்டது. ஆனால் காந்தியின் தலையிட்டால் தான் தலித் மக்களுக்கு 147 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த வரலாறு இந்த திரைப்படத்தில் திட்ட மிட்டு மறைக்கப்பட்டுள்ளது".என்கிறீர்கள்,
அம்பேத்கரின் வடிவத்திலே தலித் மக்களின் எதிர்ப்புணர்வு காங்கிரசோடு மோதிக்கொண்டு இல்லையென்றால் தலித் மக்களின் பிரச்சனை விவாதிப்பதற்கு தகுதியில்லாத தீண்டப்படாத விஷயமாகி இருக்குமே?
"அரசின் சலுகைகள் மூலம் சமூக மாற்றம் நிகழ்ந்துவிடும் என அம்பேத்கர் நம்பினார்." இந்த வரிகள் அம்பேத்கரின் ஆளுமையை குறைக்க முயன்றுள்ளன,
"காந்தியின் உண்ணாவிரதம் என்பது உயர்சாதி இந்துக்களிடம் மன மாற்றம் வேண்டி மேற்கொள்ளப்பட்டதேயின்றி தலித்துகளுக்கு எதிரானதல்ல' என்பதே உண்மை!" என்கிறீர்கள்,
அம்பேத்கர் கோரியது போல "இந்துக்கள் அல்லாத சிறுபான்மையோர்" எனும் அடிப்படையில் தலித்துகளை அப்போதே பிரித்து இருந்தால் ஆயிரமாண்டு அடிமை சங்கிலி அறுந்து போயிருக்குமே? அதை தடுத்த காந்தியின் உண்ணாவிரதம் எப்படி "தலித் ஆதரவு ஆக இருக்கமுடியும்?
"காந்தியையும், காங்கிரஸையும் எதிர்த்த நிலையிலும், அவரை அரசியல் சட்ட வரைவு குழுவின் தலைவராகவும், இந்தியாவின் சட்ட அமைச்சராகவும் ஆக்கி கௌரவப்படுத்தியது காந்தியும் நேருவும் தானே! அது மட்டுமின்றி வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என சட்டம் கொண்டு வந்து அனைத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் வாக்குரிமை வாய்ப்பு ஏற்படுத்தியது காங்கிரஸ் தானே!"
என்ற பார்வை சரியல்ல,
மக்களுக்கு தரப்படும் உரிமைகள் என்பது அவர்களின் விழிப்புணர்வு மற்றும் போராட்டத்தின் அளவுகோல்தான், ஆளுவோரின் சலுகைகளாக அவற்றை பார்ப்பது சரியல்ல,
"இஸ்லாமியர்களுக்கும், சீக்கியர்களுக்கும் வழங்கப்பட்டு வந்த இரட்டை வாக்குரிமை உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் காங்கிரஸ் அரசு இந்திய சுதந்திற்குப் பிறகு வாபஸ் பெற்றது. ஆனால் காந்தியால் அங்கீகரிக்கப் பட்ட தாழ்த்தப் பட்டோருக்கு தனித்தொகுதிகள் என்ற சலுகையை ரத்து செய்யவில்லை. அது இன்று வரை தொடர்கிறது." என்கிறீர்கள்,
"சலுகைகள்" என்ற வரியை பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேளுங்கள், லண்டன் கேண்டீனில் சிக்கனுக்காக சண்டை போடும் வெள்ளைக்காரனை போல உங்கள் பேனா பேசுகிறது,
"காங்கிரஸிக்கும், காந்திக்கும் எதிரான அரசியலை முன்னெடுக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட சித்திரமாக அம்பேத்கர் திரைப்படம் அமைந்துள்ளது மிகவும் துரதிஷ்டம்." என்கிறீர்கள்,
அதுதானே அம்பேத்கரின் வாழ்க்கை என் அவரது எழுத்துகள் சொல்கின்றன?,
ஜெயமோகன் தளத்தில் உங்கள் பதிவு
http://www.jeyamohan.in/?p=10718
"காங்கிரஸிக்கும், காந்திக்கும் எதிரான அரசியலை முன்னெடுக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட சித்திரமாக அம்பேத்கர் திரைப்படம் அமைந்துள்ளது மிகவும் துரதிஷ்டம்." என்கிறீர்கள்,
அதுதானே அம்பேத்கரின் வாழ்க்கை என் அவரது எழுத்துகள் சொல்கின்றன?, நியாயன் கேட்டது சரியே. அம்பேத்கார் காந்தியை பற்றி மிகுந்த அதிருப்தி கொண்டிருந்தார். இந்நிலையில் அம்பேத்கார் பார்வையில் எடுக்கப்படும் ஒரு திரைப்படத்தில் காந்தியை பற்றி எப்படி ஒரு நேர்மையான சித்திரத்தை கொண்டு வரமுடியும்? அம்பேத்கர் பார்வையில் காந்தியம் என்ற இந்த கட்டுரையை படித்து பாருங்கள். http://www.kalachuvadu.com/issue-97/page54.asp
காந்தி தொடர்ந்து தலித் மக்களுக்கு எதிரான மனநிலையையே கொண்டிருந்தார். இதுதான் உண்மை.
Ambedkar movie is good. They have shown only the truth I hope.
One should be able to appreciate the Director's effort's to establish the 'Mutual Respect' that both the leaders had, apart from their Ideological differences.
very good article...many valid and good points are crisply told...keep up the good work...thanks a lot.
நீங்கள் சில தரவுகளைத் தந்துள்ளீர்கள். சில இடங்களில் காங்கிரஸின் பிரச்சாரகர் போன்ற தொனியும் உள்ளது. காந்தி தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக அல்லது அவர்கள் விரும்பித்தகாதபடி நடந்தார் என்பது ஒன்றும் இயக்குநரின் புதுக்கருத்து அல்ல. “தாழ்த்தப்பட்டவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?” என்ற தலைப்பில் அம்பேத்காரே புத்தகம் எழுதியுள்ளார்.
மாற்றுக்கருத்துகளை தெரிந்துகொள்ள அம்பேத்கரின் வாதங்களைத் தெரிந்துகொள்ள அப்புத்தகத்தை படியுங்கள்.பிறகு அதற்கான பதில்கள் உங்களிடம் இருந்தால் சொல்லுங்கள்..
தமிழாக்கம்: வெ.கோவிந்தசாமி
இரண்டாம் பதிப்பு : மார்ச்,2002
வெளியீடு : பல்கலைப் பதிப்பகம்,
25, தெற்கு சிவன் கோயில் தெரு,
கோடம்பாக்கம், சென்னை-600024
அச்சிட்டோர்: அலைகள் அச்சகம்,சென்னை-24
பக்கங்கள்: 64
விலை:ரூ.12
http://nanjilnadan.wordpress.com/
http://www.jeyamohan.in/
சாவித்திரி கண்ணன் என்ற பெயரில் எழுதும் ’கள்ளர்’ சாதி வெறியர்களுக்கு அம்பேத்கர் அவநம்பிக்கையாகத்தான் தெரிவார்.
நேர்மையான கட்டுரையாக இது இல்லை. ஒரு காந்தியவாதியாக காந்தியின் மீதான விமர்சங்களை பார்க்காமல் காந்தியை அப்பழுக்கற்ற ’மகாத்மா’ என்னும் மனநிலையிலே பார்க்ககூடிய சனாதன இந்துத்துவவாதியின் கட்டுரையாகவே உள்ளது. நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் வரலாற்றுக்கு எதிராணவை. காந்தியின் சுயசரிதை மட்டும் படித்தால் அது வரலாறு ஆகாது. இந்திய மக்களின் வரலாற்றை படிப்பதே உண்மையான வரலாறு.அந்த வரலாற்று உண்மையை படியுங்கல்> எழுதுங்கள். ஆனால் அப்படி படிப்பதற்கும் எழுதுவதற்கும் சாதி என்னும் பிணி பிடியாமலிருக்க வேண்டும். உங்களுக்கு அந்த பிணி இருக்கிறதா இல்லையா என்பதை உங்கள் எழுத்தே உரைகல்.
from this article you doesn`t know
1.what is the பூனா ஒப்பந்தம்.
2.where he said தீண்டப்படாதவர்களை பெரும்பான்மை இந்து சமூகத்தின் பிரிக்க முடியாத," சமமதிப்புள்ள" ஒர் அங்கமாக மாற்றுவதே என் நோக்கம்.
3. அரசின் சலுகைகள் மூலம் சமூக மாற்றம் நிகழ்ந்துவிடும் where ambedkar blieved this?.
4."ஹிந்துக்களின் மனசாட்சியை உறுத்தி செயலுக்கு தூண்டுவதே இந்த உபவாசம்' என காந்தி பகிரங்கமாக அறிவித்த ஷணத்திலிருந்து பல அதிசயத்தக்க நிகழ்வுகள் நடந்தேறின. 'நம்மை சீர்த்திருத்துவதற்காக தன்னைத் தானே வருத்திக்கொள்ளும் இந்தப் புனிதரை நாம் கொன்று விடப்போகிறோமா?' என இந்துக்களிடம் பரவலான கேள்வி எழுந்தது. பெருநகரங்கள், சிற்றூர்கள், கிராமங்கள், பட்டிதொட்டியெங்கும் இதே விவாதமானது. உண்ணாவிரதத்திற்கு முந்தினநாளே அகமதாபாத்தில் உள்ள 12 பெரிய கோயில்கள் திறந்துவிடப்பட்டன, அடுத்தடுத்து பல்வேறு ஊர்களில் நூற்றுக்கணக்கான கோயில்கள் திறந்து விடப்பட்டன. அவற்றின் வாயில்களில் பிராமணர்கள், பண்டிதர்கள் ஹரிசனமக்களை கைகூப்பி வரவேற்றார்கள்.
அப்போது கோயில்களின் வாயில்களில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 98% வாக்குகள் தாழ்த்தப்பட்டமக்களின் ஆலயபிரவேசத்திற்கு ஆதரவாக இருந்தது. 2% மட்டுமே எதிராக இருந்தது. இது மட்டுமல்ல, கிராமங்களில் கிணறுகளில் தண்ணீர் எடுக்க அனுமதி, பொதுவீதிகளில் நடமாட அனுமதி என ஆங்காங்கே மக்கள் அமைப்புகள், சங்கங்கள் தீர்மானம் இயற்றி நடைமுறைக்கு வந்தன. தினசரி இது போன்ற நூற்றுக்கணக்கான நிகழ்வுகளை பத்திரிக்கைகள் பட்டியலிட்டு பிரசுரித்தன." ஆக, இதன் மூலம் உயர்சாதி இந்துக்களின் மனதில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவான நியாயமான சிந்தனைகளை உருவாக்குவதில் காந்தியின் உண்ணாவிரதம் காத்திரமான பங்களிப்பை ஆற்றியது என்பதே வரலாற்று உண்மை.-good joke.
5.மேலும் காந்தி உண்ணவிரதம் இருக்காமல் இப்படி ஒரு சட்டம் அமலுக்கு வந்திருந்தால் அது மற்ற இந்துக்களின் எதிர்ப்பை பெற்று நடைமுறைப்படுத்துவதே சிக்கலாகியிருக்கும் என்பதை அம்பேத்கர் அறிந்திருந்தார்-another joke.
6.திட்டமிட்டு காந்தி, நேரு போன்ற தலைவர்கள் வரும் காட்சிகளில் அவர்களின் இமேஜை தகர்க்கும் படி காட்சி அமைப்புகள், வசனங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. காந்தி, நேரு பாத்திரத்திற்கு தேர்வான நடிகர்களின் தேர்வே இதற்கு அத்தாட்சி-it is true. if gandhi & nehru were acted in this film it would made a real sense to you who are they?.
7.finally one thing I have to say Mr.savithri kannan that journalists should always write without false information and with fact.
Post a Comment