-சாவித்திரிகண்ணன்
காவேரி பாசனப்பகுதி
விவசாயிகள் கதிகலங்கிக் கிடக்கிறார்கள். பன்நெடுங்காலமாக பசித்தோருக்கெல்லாம்
அன்னமிட்ட பூமித்தாயை சில சக்திகள் சூறையாட திட்டமிட்டுவிட்டதான செய்தி விவசாயிகளை
திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
இது உண்மையா? இல்லை மிகைப்படுத்தப்படகூடிய
அனுமானமா? எதற்கெடுத்தாலும் மக்களைத் தூண்டி உணர்ச்சி கொந்தளிப்பில் வைத்து
போராடத்தூண்டும் அமைப்புகளின் கைவரிசையா?
காவேரி பாயும் பாசனப்பகுதிகளான
மன்னார்குடி, திருவிடைமருதூர், கும்பகோணம், ஒரத்தநாடு, வலங்கைமான், குடவாசல்,
நீடாமங்கலம் ஆகிய தாலுக்காக்கனைச் சேர்ந்த 50 ஊர்களின் நிலங்களுக்கு அடியில்
ஆழப்புதைந்துள்ள மீத்தேன்வாயுவை எடுக்கும் முயற்சியில் சுமார் 2000இடங்களில் சுமார்
500அடி முதல் 1650 அடிவரை ஆழத்தோண்டி கிணறுகள் வெட்டவுள்ளனர்.
ஏன்?
எதற்கு?
தற்போது பயன்பட்டுவரும் பெட்ரோல், டீசல், கேஸ் போன்ற
எரிபொருள்கள் வெகுவிரைவில் தீர்ந்து போகவுள்ளன. இந்நிலையில் மாற்று எரிபொருளை
கண்டடையும் முயற்சியாக மீத்தேன் வாயு உலகெங்கிலும் வரவேற்பு பெற்று
வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் மீத்தேன் வாயு இருக்கும் இடங்களை
கண்டறியும் நீண்ட நெடிய தேடலின் விளைவாக காவேரி பாசனப்பகுதிகள் தற்போது மீத்தேன்
வாயு புதைந்திருக்கும் பொக்கிஷங்களாக அறியப்பட்டுள்ளன. பன்னாட்டு பகாசுர மற்றும்
உள்நாட்டு பெரும் தொழில் நிறுவனங்களான ONGC, RIC, ESSAROIL, GEECC போன்றவை
தற்போது காவேரி பாசன நிலங்களை சூது கவ்வுவது போல் சூறையாடப்
புறப்பட்டுள்ளன.
இது வரை பல்லாயிரம் ஆண்டுகளாய் கோடானுகோடி பசித்த
மனிதகுலத்திற்கு சோறு படைத்த பூமித்தாயின் அடிமடியை அபகரிக்கும் திட்டமே மீத்தேன்
எரிவாயுத்திட்டம்!
"ஐயோ எங்கள் அன்னையின் அடி வயிற்றில் ஆங்காங்கே துளை
போடுவீர்களா? பாவிகளா.." என்று பரிதவிக்கும் குரல்கள் ஒரு புறம் ஒலிக்க, ஏன்
ஒலடுமிடுகிறீர்கள்? அரிசிக்கு எவ்வளவு பணம் கிடைத்தது? அதைக்காட்டிலும் இது விலை
மதிப்பில்லா அரிய பொக்கிஷம்..!
இந்த நவீன உலகமே எரிபொருள் பசியால்
ஏங்கித் துடிக்கிறது..!
அரபுநாடுகளில் அள்ளிக்கொடுத்த பெட்ரோல் கிணறுகளைப்போல
காவேரி பாசனப்பகுதிகள் இனி மீத்தேனை தரவுள்ளன.. இதை எப்படி நாங்கள்
விட்டுவைப்போம். ஓட்டு உங்கள் கையில், ஆனால் உங்கள் அரசுகளோ எங்கள்பையில்..."
என்கின்றன பெரு நிறுவனங்க்சகள்!
2001 ஆம் ஆண்டு தொடங்கி இந்தியாவில்
மீத்தேன் வாயுக்கான தேடல் ஆரம்பித்துவிட்டது. 2003லேயே மேற்கு வங்கத்தின் ராணிகஞ்ச்
சோகாபூர் பகுதிகளில் மீத்தேன் கிணறுகளைத் தோண்ட ஆரம்பித்துவிட்டனர். அஸ்ஸாம்,
மகாராஷ்டிரா என மேலும் சில பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அங்கும் மீத்தேன் வாயு
என்ற எரிபொருளின் உற்பத்தி நிருபிக்கப்பட்டுவருகிறது.
அதன் ஒரு கட்டமாகவே
தமிழகத்தில் 2010ஆம் ஆண்டிலேயே great Eastern Energy Corporation Ltd என்ற நிறுவனம்
காவேரி பாசனபகுதிகளை களவாட முடிவெடுத்துவிட்டது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
தஞ்சை மண்ணில் தோன்றிய திருவாரூர் முத்துவேல் கருணாநிதியின் புதல்வர் திருவாளர்
மு.க ஸ்டாலின் முன்னிலையில் ஜனவரி 4,2011ல் கையெழுத்தானது.
இதைத்தொடர்ந்து
விவசாய அமைப்புகள் விழித்தெழுந்தன.
"கண்ணை விற்று சித்திரம் வாங்குவதா?
மண்ணை அடகு வைத்து பொன்னை பெறுவதாயினும் அது வேண்டாம். எங்களுக்கு சோறுபோட்ட
பூமித்தாயை சோரம் போக விடமாட்டோம்..." என போர்க்கோலம் பூண்டன! தமிழ்நாடு
அறிவியல் இயக்கம் உள்ளிட்ட அறிவியலாளர்கள் அணியும் இதில்
கைகோர்த்துள்ளன.
மரித்துக் கொண்டிருந்த இந்திய வேளாண்மையை ரசாயண உரங்கள்,
பூச்சிக்கொல்லிகளின் கோரப்பிடியிலிருந்து படிப்படியாக அகற்றி இயற்கை வேளாண்மை
பக்கம் மடை மாற்றம் செய்து கொண்டிருந்த மாபெரும் மக்கள் தொண்டர் நம்மாழ்வார்
இந்தக் கொடுமையைத் தடுக்க போர்க்கோலம் பூண்டிருந்தார். அகால மரணம் அவரை
அரவணைத்து தற்போது இயற்கை அன்னையின் மடியிலேயே இளைப்பாறச் சென்றுவிட்டார். அவர்
விட்டுச் சென்ற பணியை தொடரும் கடமை இந்த மண்ணின் மைந்தர்கள் ஒவ்வொருவருக்குமே
உள்ளது.
என்ன செய்யப்போகிறது ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன்...?
தற்போது
முதல் கட்டமாக ரூபாய் 100கோடி முதலீட்டில் 50 ஆழ்துளை கிணறுகளைத் தோண்டி ஆய்வு
செய்ய உள்ளது. இதில் அது எதிர்பார்க்கும் பலன்கள் கிடைக்கும் என்பது உறுதிப்படும்
பட்சத்தில் ரூபாய் 3,500கோடி முதலீடு செய்து காவேரி பாசனப்பகுதிகளில் கால்பரப்பிக்
கொள்ளும். 1,66,210 ஏக்கர் பரப்பில் தற்போது மீத்தேன் வாயு உறைந்து கிடக்கின்றன.
இதிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு லட்சம் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர் மீத்தேன்
வாயுவை அள்ளமுடியும் என்பது அதன் அனுமானமாயுள்ளது. சுமார் 35 வருடம் காவேரி
பாசனப்பகுதிகள் அதன் கட்டுபாட்டுக்குள் சென்றுவிடும். மீத்தேன் வாயு சில லட்சம்
கோடி வருமானத்தை பெரு நிறுவனங்களுக்கு தரவுள்ளன.
இதில் மத்திய அரசுக்கு வரி
வருமானமாக ஆண்டுக்கு 10,000கோடி கிடைக்க கூடும் என
மதிப்பிடப்பட்டுள்ளது.
யோசித்துப்பார்த்தால் இந்திய அரசுக்கு 10,000கோடி
என்பது ஒரு பெரிய விஷயமல்ல! இலவச திட்டங்கள், மானியங்கள் என்பதாக மத்திய அரசு
மக்களை கையேந்தும் பிச்சைகாரர்களாக்குவதற்காக 2012-13ஆம் நிதியாண்டில் செலவழிக்க
தொகை மட்டுமே 2,57,700கோடியாகும்! பொதுத்துறை வங்கிகள் மூலமாக பெரு
நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு திரும்ப வராது என விட்டுவிட்ட கடன் தொகை 47,000த்து
சொச்சம் கோடி!
"பணம் பெரிய விஷயமில்லை. மாற்று எரிபொருள் என்பது
தற்போதைய மற்றும் எதிர்காலத்தின் தவிர்க்க முடியாத அத்தியாவசிய தேவை. எரிபொருள்
இல்லாமல் வீட்டின் சமையலறை முதல் சாலைகள் வரை ஸ்தம்பித்துவிடும். எனவே மீத்தேன்
வாயு என்பது நிச்சயமாக பூமிக்கடியிலிருந்து மீட்டெடுக்கவேண்டிய வைரம் தான். ஆகவே
எடுத்தற்கெல்லாம் போராட்டம் என்பது தேவையற்றது. காலச்சுழற்சி எதையும்
விட்டுவைக்காது. அது அனைத்தையுமே புரட்டிப் போட்டே தீரும்" என்று சிலர்
வியாக்யானம் பேசுகிறார்கள்.
உண்மைதான். மாற்று எரிபொருள் மாபெரும்
முக்கியத்துவம் வாய்ந்தது தான். இந்தியாவில் பூமிக்கடியில் இருக்கும் மீத்தேனின்
அளவு 92டிரில்லியன் கியூபிக் அடிகள் என்பது அறிவியலாளர்களின் மதிப்பீடு. இது வரை
கண்டறியப்பட்டுள்ளது 8.9டிரில்லியன் கியூபிக் அடிகள் தாம்!
அதாவது 10ல் ஒரு
பங்கு கூட இல்லை. மேற்கு வங்கத்தின் ராணிகஞ்ச் சோகாபூரி போன்ற வறண்ட, விளைச்சலற்ற
நிலபரப்புகள் இந்தியாவில் ஏராளம், தாராளம்! அப்படியான இடங்களை கண்டறிவதை விட்டு
நல்ல விளை நிலங்களான காவேரி பாசனப்பகுதிகளை சீரழிப்பது முறையா?
இந்த திட்டம்
செயல்படும் போது குறிப்பிட்ட இடங்கள் என்றில்லாமல் ஓட்டு மொத்த பிராந்தியங்களுமே
விவசாயத்திற்கு பயன்பாடில்லாத வறண்ட பூமியாகிவிடும் என தமிழகத்தின் முக்கிய
சூழலியல் ஆய்வாளர்கள் உறுதிபடத் தெரிவிக்கிறார்கள்.
இது மட்டுமின்றி
மீத்தேன் வாயுவை பெரும் கழிவுக்குவியல்களிலிருந்து பெறமுடியும். பெருநகரங்களின்
கழிவுகள், விலங்குகளின் கழிவுகள், தாவரக்கழிவுகள்.. என ஏராளமான வழிமுறைகளில்
மீத்தேன் வாயுஉற்பத்தி செய்யலாம். சிறிய மாட்டுப்பண்ணை, கால்நடைப்பண்ணை
வைத்திருப்பவர்கள் சாணங்களை குழியில் இறக்கி பயோகேஸ் உற்பத்தி செய்து ஆங்காங்கே
சமையலறை தேவைகளை பூர்த்தி செய்வது நடைமுறையில் உள்ளது.
ஆனால் மிகக்குறைவான
முயற்சிகளே இதில் நடந்துள்ளன. ஆனால், அனைவரையும் இதில் ஊக்குவித்து, அரசும்
துணைசெய்யும் பட்சத்தில் லட்சக்கணக்கான மீத்தேன் உற்பத்தி செயல்பாடுகள் ஆங்காங்கே
எந்த சூழலியல் பாதிப்புமின்றி நடந்தேறும் மையப்படுத்தப்பட்ட அசூர உற்பத்தி என்பது
எப்போதும் மனித குலத்தை அழிவுக்கே இட்டுச்செல்லும். அந்தந்த ஊர்கள், நகரங்கள்,
மாநகரங்கள் அவரவர்களுக்கு தேவையான மாற்று எரிபொருளை தங்களுக்குத் தாங்களே உற்பத்தி
செய்யலாம் - ஏனெனில், கழிவுகள் என்பது மலை போல குவிந்து அச்சுறுத்தும்
கலியுகத்தில் அதை மடைமாற்றி மாற்று எரிபொருளாக்கும் உற்பத்தியே தவிர்க்க இயலாத
கடமையாகும்.
எனவே ஒரு சில பெரு நிறுவனங்கள் சுரண்டிக் கொழுக்க,
விளைநிலங்கள் வேட்டை காடாகிவிடக்கூடாது. காவேரி பாசனப்பகுதி மக்களை கவலைக்கு
ஆளாக்கியிருக்கும் இத்திட்டம் குறித்த தமிழக அரசின் நிலைபாடு
என்ன?
2011ஜனவரியில் இத்திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம்
புத்துயிர் கொடுத்தது தி.மு.க அரசு என்றால், அதே ஆண்டு மே. 24ல் திட்ட செயலாக்க
விதிமுறைகளுக்கு ஒப்புதல் கொடுத்தது புதிதாக பதவியேற்ற அ.தி.மு.க அரசு. இது
மட்டுமின்றி, இந்நிறுவனத்திற்கு ஆதரவாக ஆங்காங்கே மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள்
பங்கெடுக்கும் கருத்து கேட்பு கூட்டங்கள் ஒப்புக்கு நடத்தப்பட்டு தப்புக்கு துணை
போயுள்ளது தமிழக அரசு. மத்திய அரசோ இந்த கொடூர திட்டத்திற்கு ஆகஸ்ட்12, 2012ல்
தடையில்லா சான்றிதழ் தந்து சுற்றுச்சூழல் அமைச்சகம் வழி ஆதரித்துள்ளது.
அதே
சமயம் விவசாய அமைப்புகள், மக்கள் இயக்கங்கள், சமூக ஆர்வலர்களின் மீத்தேன் வாயு
திட்டத்திற்கு எதிரான இடையறாத போராட்டங்களையடுத்து தமிழக அரசு இத்திட்டம் குறித்து
ஆய்வு செய்து அறிக்கை தர ஜீலை 2013ல் ஒரு குழுலை நியமித்தது. அண்ணா பல்கலைக்கழகம்,
சென்னை இந்திய தொழில்நுட்ப கழகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,
எம்.எஸ்.சுவாமிநாதன் அறிவியல் ஆய்வு நிறுவனம் ஆகியவற்றைச் சேர்ந்த நிபுணர்கள்
3மாதத்திற்குள் அறிக்கை தருவதைக் கொண்டு தமிழக அரசு இறுதி முடிவெடுக்கும்
எனக்கூறப்பட்டது. தற்போது ஆறுமாதங்களை கடந்த நிலையிலும் தமிழக அரசு தன் நிலைபாட்டை
தெரிவிக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை அரசு எதையும் அறிவிக்காது என
நாம் நம்பலாம்.
தமிழக அரசு இப்படி ஒரு குழுவை நியமித்துள்ளது பற்றி மீத்தேன்
வாயு திட்டத்தில் ஈடுபட்டுள்ள கிரேட் ஈஸ்டர் எனர்ஜி கார்ப்பரேஷனின் தலைமை
செயல்பாட்டு அதிகாரி பிரசாந்த் மோடியிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி
எழுப்பியபோது பதட்டமில்லாமல், பரவசத்தோடு அவர் சொன்னார்.
"மிகவும்
நல்லது, எங்கள் நிறுவனத்திற்கு சாதகமான அறிக்கை தான் வரும் என்பதில் எந்தச்
சந்தேகமும் இல்லை"
பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவர் சந்தேகமின்றி
சந்தோஷப்படுகிறார் என்றால், நாம் சந்தேகப்படவேண்டிய - விழித்தெழுந்து
போராடவேண்டிய - கட்டாயத்தில் இருக்கிறோம் என்பது சந்தேகமின்றி உறுதியாகிறது.
இந்தக்கட்டுரையின் முதல் பாராவில் வந்த ஒரு வாக்கியத்தை நினைவு படுத்திக்
கொள்ளுங்கள் ஓட்டு மக்கள் கையில்! தேர்ந்தெடுக்கப்பட்ட நம் அரசுகளோ பெரு
நிறுவனங்களின் பையில்!
ரௌத்திரம் பேசுகிறது
பிப்ரவரி 2014