Thursday, March 6, 2014

கிரிக்கெட்டில் சூதாட்டம் அனுமதிக்கப்படுமானால்...


                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

இந்தியாவில் வேறெந்த விளையாட்டுக்கும் இல்லாத செல்வாக்கு கிரிக்கெட்டிற்கு உள்ளது. 
இந்தியர்களில் பெரும்பாலானவர்களுக்கு இதில் ஒரு மயக்கம், போதை அல்லது வெறியே உண்டு.

சோறு, தண்ணி, தூக்கம், வேலை, கடமை, படிப்பு, குடும்பம்.. என எல்லாவற்றையும் புறந்தள்ளி கிரிக்கெட்டில் பைத்தியமாக இருக்கும் பலரைக் கொண்டது இந்த தேசம்..!

இந்த விளையாட்டு இங்கு வெள்ளையர்கள் விதைத்த விதை!
இங்கு மட்டுமல்ல, தங்கள் காலனியாதிக்க நாட்டிலெல்லாம் பிரிட்டிஷரால் கால்கோளப்பட்ட விளையாட்டு!

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற காலனியாதிக்க நாடுகளில் தான் கிரிக்கெட் களேபரங்கள் உள்ளன. மாறாக வளர்ச்சியை மையமாகக் கொண்ட அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஜெர்மனி, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் கிரிக்கெட் விளையாட்டுகள் கிடையாது.

ஆனால், இன்று வெள்ளைகாரர்களே வியக்கும் வண்ணம் இந்திய கிரிக்கெட் வாரியம் உலகின் மிகப்பெரிய பணக்கார விளையாட்டு வாரியமாகத் திகழ்கிறது.

இந்தியாவில் கிரிக்கெட் என்பது விளையாட்டு மாத்திரமல்ல, அதையும் தாண்டிய மிகப்பெரும் பொருளாதார சக்தி. அரசாங்கங்களையும், ஆட்சியாளர்களையும், நீதிபரிபாலான அமைப்புகளையும் கூட கட்டுப்படுத்தும் சக்தி!

எனவே தான் சமீபத்தில் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக விசாரித்து அறிக்கை சமர்பித்துள்ள நீதிபதி முக்தல் கமிட்டியின் பரிந்துரைகள் கண்டு நாம் பதட்டப்படவேண்டியுள்ளது.
"இந்தியாவில் கிரிக்கெட் சூதாட்டத்தில் பிரம்மாண்டமாக கறுப்புபணம் புழங்குகிறது! இதில் நிழல் உலக தாதாக்களின் ஆதிக்கமும் உள்ளது! எனவே, இதை முடிவுக்கு கொண்டுவர அல்லது கட்டுப்படுத்த அரசாங்கமே கிரிக்கெட் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்கிவிடுவது தான் தீர்வு. அரசாங்கத்திற்கு பெரும் வருமானமும் கிடைக்கும்..." என்கிறது. நீதிபதி முக்தல் கமிட்டி.

நீதிபதி முக்தல் பஞ்சாப், ஹரியானா மாநிலத்தின் முன்னாள் தலைமை நிதிபதி. இந்த குழுவின் மற்றொரு உறுப்பினர் கூடுதல் சொலிசிடர் ஜெனரலான நாகேஸ்வரராவ், மற்றொரு உறுப்பினர் அசாம் கிரிக்கெட் சங்க உறுப்பினரான நிலாய்தத்தா!

சென்ற ஆண்டு மேமாதத்தில் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக கிரிக்கெட் ஆட்டக்காரர்களான ஸ்ரீசாந்த், அங்கீத், அஜித் சாண்டிலா ஆகியோரும் அவர்களைத் தொடர்ந்து மேலும் சுனில்பாட்டிலா, கிரண்டோலோ, மணீஸ்குட்வேர் ஆகிய ஆட்டகாரர்களும் கைதானார்கள்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனும் கைதானார்கள்.

இந்த விவகாரத்தை தானே ஒரு விசாரணை கமிட்டி அமைத்து பூசிமெழுகி, புதைக்கப்பார்த்தார் சீனிவாசன். ஆனால், அது ஈடேறவில்லை. ஆகவே, உச்சநீதிமன்றம் ஒரு மூவர்கமிட்டி அமைத்து விசாரணை அறிக்கை கேட்டது.

அப்படி அமைக்கப்பட்ட கமிட்டியான முக்தல்கமிட்டி இந்த விசாரணை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை கழுவுகிற மீனில் நழுகிற மீனைப்போல அமைந்துள்ளது.

தொலைபேசி உரையாடல்கள், போலீஸ்விசாரணை அறிக்கைகள், நேரடி சாட்சியங்கள் அனைத்துக்குப் பிறகும் நீதிபதிகள் ஒரு மித்த கருத்துக்கு வரவில்லை.
'இந்த ஆறு ஆட்டக்காரர்களுக்கும் சூதாட்டத்தில் பங்கு இருந்தது. குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டார். இவர்கள் பல நூறுகோடி பணப்புழக்கத்தில் சம்பந்தப்பட்டனர்' என்பதை உறுதிபடுத்துவதில் இவர்களுக்குள் பலத்த கருத்து வேறுபாடு. "இருக்கும் ஆனா இருக்காது" என்பதாக சொதப்பியுள்ள ஒரு அறிக்கை தந்துள்ளனர்.

இந்த மாகானுபாவர்கள் தான் இந்த லட்சணத்தில் 'கிரிக்கெட் சூதாட்டத்தை இந்திய அரசு சட்டபூர்வமாக்கலாமே...' என திருவாய் மலர்ந்தருளி உள்ளனர்.

மேற்படி ஆறுகிரிக்கெட் ஆட்டக்காரர்களும், சென்னை கிங்ஸ் ஆட்ட உரிமையாளருமான குருநாத் மெய்யப்பனும் சூதாட்டத்தில் பங்கெடுத்த சூதாடிகள் என்பது இந்த நாட்டின் பாமர மனிதனுக்கு கூட பட்டவர்த்தனமாக தெரியத்தக்க அளவில் உண்மைகள் அம்பலப்பட்ட பிறகும் கூட குற்றவாளிகளை சுட்டிக்காட்டுவதில் தடுமாற்றம் கொண்ட ஒரு கமிட்டி அரசுக்கு சூதாட்டத்தை சட்டபூர்வமாக்கலாம் என்று பரிந்துரைத்திருப்பதில் வியப்பில்லை தான்!

"கிரிக்கெட்டில் தரகர்களையோ, சூதாட்டத்தையோ கட்டுபடுத்துவது நடைமுறையில் சாத்தியமல்ல, கிரிக்கெட் ஆட்டக்காரர்களையே கூட ஓரளவு தான் எங்களால் கட்டுப்படுத்தமுடியும்..."

இப்படி அடிக்கடி பேசிவருபவர் வேறுயாருமல்ல, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தலைவர் சீனிவாசன் தான்!

இதே கருத்தை தான் சென்ற ஆண்டு நவம்பரில் இந்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐயின் இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவும் கூறினார்; கிரிக்கெட் போன்ற விளையாட்டு போட்டிகளில் பெட்டிங் என்ற பெயரிலான முறைகேடுகளை தவிர்க்க சூதாட்டத்தை சட்டபூர்வமாக்கிவிடலாம்.."

இந்தியாவில் ஊழல்களை விசாரிக்கும் ஒரு அமைப்பின் தலைவர் மனநிலையையும், சிந்தனைபோக்கையும் வெளிச்சம் காட்ட அவரது இந்த ஒரு கருத்து போதுமானது. எந்த தார்மீக பார்வை கொண்ட ஒருவரும் இது போன்ற கருத்தை வெளிப்படுத்த வாய்ப்பில்லை என்பதை நாம் உணர்வோம்.

ஆக, இப்படியான கருதாக்கங்களை வலுப்படுத்தும் விதமாக - இதன் தொடர்ச்சியாக நீதிபதி முக்தல் கமிட்டி கிரிக்கெட் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்க பரிந்துரைத்துள்ளது. புக்கிகள், சூதாடிகள், இவர்களை இயக்குபவர்கள், அனுமதிப்பவர்கள், ஆதாயமடைவர்கள்... போன்ற தரப்புகளின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத்தக்க வகையில் இப்படியான பரிந்துரை அமைந்துள்ளது. இது நம் இந்திய சமூகத்தையே இருளில் ஆழ்த்திவிடும்.

இந்தியாவில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை படித்தவர்கள் தொடங்கி பாமரர்கள் வரை உள்ள பல கோடி கிரிக்கெட் பைத்தியக்கரார்களில் இது வரை சில, பல ஆயிரம் பேர்கள் தான் கிரிக்கெட் சூதாட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ளனர். ஆனால், கிரிக்கெட் சூதாட்டம் சட்டபூர்வமாக்கப்பட்டால் இந்த எண்ணிக்கை பல மடங்கு கூடிவிடும். ரூ100பெட் கட்டினால் ஆயிரம், இரண்டாயிரம் கிடைக்க வாய்ப்புண்டு. ரூ 1000கட்டினால் லட்சரூபாயைக் கூட அள்ள முடியும் என ஆசைக்காட்டினால் இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட பலியாகிவிடுவார்கள். இந்த அங்கீகரிக்கப்பட்ட சூதாட்டத்தால் பல கோடி இந்தியக் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிடும். ஏற்கெனவே லாட்டிரி மற்றும் குதிரைபந்தய சூதாட்டங்களில் வாழ்விழந்தோர்களின் கண்ணீர் கதைகள் சொல்லி மாளாது. இந்நிலையில் அதிக மக்களை ஈர்க்கும் கிரிக்கெட்டில் சூதாட்டத்தை அங்கீகரித்தால் வேறு வினையே வேண்டாம்.

சமீபத்திய ஒரு சர்வதேச நிறுவன ஆய்வறிக்கை சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் எடுத்த கருத்து கணிப்பிலிருந்து, சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் தற்கொலை உணர்வு மிகுந்திருப்பதையும், அவர்கள் அடிக்கடி வன்செயல்களில் ஈடுபடுவதையும், பெரும்பாலோர் மது உள்ளிட்ட போதைக்கு பழக்கப்பட்டிருப்பதையும் சுட்டிகாட்டியுள்ளது. மேலும் அந்த ஆய்வு, "சூதாடிகள் காலப்போக்கில் உழைப்பில் ஈடுபாடற்றவர்களாய், பொறுபற்ற பேர்வழிகளாய் சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் சுமைகளாகி விடுகின்றனர்" என்கிறது.

அதுவும், கிரிக்கெட் விளையாட்டில் முதலில் எந்த அணி விளையாடுவது என பூவா? தலையா? போட்டு பார்ப்பது தொடங்கி, ஒவ்வொரு பால் வீசப்படும் போதும் எத்தனை ரன்கள்? எத்தனை ஓவர்கள்? எப்போது ஆட்டமிழப்பார், எந்த அணி எவ்வளவு எடுக்கும், எந்த அணி ஜெயிக்கும் என ஒவ்வொரு நிமிடத்துக்கும் பெட்டிங் கட்டிக் கொண்டே இருப்பார்கள் எனும் போது ஒவ்வொரு விளையாட்டு போட்டியிலும் அதன் எதிர்வினையாக பல லட்சம் குடும்பங்கள் பணம், சொத்து, அந்தஸ்த்து இழந்து நடுத்தெருவிற்கு வந்துவிடுவது சர்வ சாதாரணமாகிவிடும்.

ஆக, மிகப்பெரிய சமூக அழிவிற்கு வித்திடும் ஒரு பரிந்துரையை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். இல்லாவிட்டால் இன்றில்லாவிட்டாலும் வருங்காலத்தில் மெல்ல மெல்ல இக்கருத்து செல்வாக்கானவர்களைக் கொண்டு 'லாபி' செய்யப்பட்டு கிரிக்கெட் சூதாட்டத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை பெற்றுத் தந்துவிடும்.

அப்படியானால் பெரும் கறுப்புபணப்புழக்கத்தை கட்டுபடுத்த என்னவழி? 
நிழல் உலக தாதாக்களின் ஆதிக்கத்தை தடுக்க என்னவழி?
என்ற கேள்விகளை ஆழமாக அலசவேண்டும். இதில் ஆட்டக்காரர்கள் தொடங்கி அவர்களை ஆட்டுவிப்பவர்கள், ஆதரிக்கும் பார்வையாளர்கள் அனைவருமே தங்களை ஆத்ம பரிசோதனைக்கு ஆட்படுத்திக் கொள்ளவேண்டும்.

உடலுக்கும், உள்ளத்திற்கும்புத்துணர்ச்சி தரும் விளையாட்டுகளான கபடி, ஹாக்கி, தடகளம், கால்பந்து, கூடைப்பந்து... என பல விளையாட்டுகள் இருக்கும் போது ஏன் கிரிக்கெட் மட்டும் அதி முக்கியத்துவம் பெற்றது?

இதை சாத்தியப்படுத்தியவர்கள் யார்? அவர்களின் நோக்கங்கள் என்ன? கையாளப்பட்ட தந்திரங்கள் என்ன? பெற்றுவரும் ஆதாயங்கள் என்ன...? என அனைத்திற்கும் விடைதேடினால் கறுப்பு பண புழக்கத்திற்கும், நிழல் உலகதாதாக்களின் ஆதிக்கத்திற்கும் விடை கிடைக்கும்!

பிரிட்டிஷ்காரர்களால் இந்தியாவில் பிரசவிக்கப்பெற்ற கிரிக்கெட் சுதந்திர இந்தியாவில் பிரட்டிஷாரை அண்டி வாழ்ந்து அதிகாரத்தை அனுபவித்து வந்த மேல்தட்டு வர்க்கத்தால் மட்டுமே ஆரம்பகாலங்களில் விளையாடப்பட்டு வந்தது. அன்றைய தினம் மயிலாப்பூர், மந்தைவெளி, மாம்பழம் போன்ற பகுதிகளில் கிரிக்கெட் கிளப் வைத்து தங்களுக்குள் மும்மரமாக விளையாடிவந்தார்கள்.

1970 களில் இந்தியாவில் தொலைகாட்சி பிரபலமாகத் தொடங்கியபோது கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பியதன் மூலம் கிரிக்கெட்டிற்கு செல்வாக்கு பெருகத் தொடங்கியது.

1975லே ஐந்து தினப்போட்டி ஒரு நாள் போட்டியாக மாற்றம் பெற்றது. கிரிக்கெட் நடக்கும் நாட்களில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு சிறப்பு பேருந்துகள் விடப்பட்டு கிரிக்கெட் வெறி வளர்த்தெடுக்கப்பட்டது! பாகிஸ்தானோடு விளையாட்டு என்றால் தேசபக்தி என்ற மாயை கட்டமைக்கப்பட்டது. 1983ல் இந்திய கிரிக்கெட் அணி உலககோப்பையை வென்றது இந்தியாவில் வரலாறு காணாத களேபரக் கொண்டாட்டமாக சித்தரிக்கப்பட்டது..!

இந்திய கிரிக்கெட் ஆட்டகாரர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு பரிசுத் தொகைகளையும் வீட்டுமனை போன்ற சலுகைகளையும் அள்ளி வழங்கினர்.

இதற்கான அவசியம் என்ன? மக்கள் கவனத்தை சமூக பிரச்சினைகளிலிருந்து திசை திருப்ப இந்த யுக்தி கையாளப்பட்டதாகவே சமூக விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

1990களில் உலகமய, தாராளமய கொள்கை இந்தியாவில் ஏற்கப்பட்டபோது கிரிக்கெட்டும் மிகப்பெரிய ஏற்றம் கண்டது. கிரிக்கெட்டில் பணபுழக்கம் அதிகரித்தது. போட்டிகளுக்கான கட்டணங்கள் உயர்ந்தன. ஸ்பான்சர்கள் குவிந்தன. விளம்பர வருமானங்கள் பெருகின.

1980களின் மத்தியில் மெல்ல நுழையத் தொடங்கிய 'பெட்டிங்' கலாச்சாரம் 90களில் வேகம் பெறத் தொடங்கியது. மக்களின் கிரிக்கெட் மோகத்தை, பிரேமையை காசாக்கி கொள்ள கிரிக்கெட் தரகர்கள், புக்கீகள் களம் கண்டனர். பெரும் வெற்றியடைந்து மிகப்பெரிய கோடீஸ்வர்களாயினர். தங்களுக்கு உகந்தவர்களை அவர்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குள் அடையாளம் கண்டனர். கைகோர்த்தனர். கைமேல் பலனும் கண்டனர்!
சூழ்ச்சிக்கு பேர் போன தொழில் அதிபர்கள், தந்திரமான அரசியல்வாதிகள், பேராசை கொண்ட பிரபலங்கள் இதில் அணிசேர்ந்தனர்.

விளையாட்டை மையப்படுத்தி திரைமறைவு வில்லங்கங்கள் நடந்தேறின.

1994ல் நடந்த பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தீவிரம் காட்டாமலிருக்க இரண்டரைகோடி ரூபாய் கொடுத்ததாக கிரிக்கெட் தரகர் முகேஸ்குமார் குப்தா 2000ல் சி.பி.ஐ விசாரணையின் போது தெரிவித்தார்.

2000ஆம் ஆண்டில் அசாருதீன், அஜய் ஜடேஜா, மனோஜ் பிரபாகர்... உள்ளிட்ட சிலர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைதாயினர். இந்த கைதினால் பல உண்மைகள் அம்பலத்திற்கு வந்தன. இதன்மூலம் இந்திய கிரிக்கெட் வாரியம் தன்னை புனருத்தானம் செய்து கொள்ளவேண்டும் எனப்பலர் எழுதினர். ஆனால் பி.சி.சி.ஐ யோ களவாணித் தனத்தை எப்படி கமுக்கமாகச் செய்வது என்ற பாடத்தைத் தான் இதிலிருந்து பெற்றதோ என்று நினைக்க தோன்றும் வண்ணம் நடந்து கொண்டது.

ஒரு வகையில் கிரிக்கெட்டிற்கு கிடைத்த அபார விளம்பரமும், மிதமிஞ்சிய பணமும், அதற்காக கட்டமைக்கப்பட்ட மாயையும் தான் கிரிக்கெட் விளையாட்டையே சீரழித்தது.

கவாஸ்கர் காலத்தில் 5நாள் போட்டிக்கு ஆட்டக்காரர்களுக்கு கொடுக்கப்பட்ட மொத்த சம்பளமே ரூ2000தான்!

இன்றோ, ஒரு போட்டிக்கு வழங்கப்படுவது ரூ20லட்சத்திலிருந்து 50லட்சம் வரை! இதோடு ஒரு நாள் போட்டிக்கான ஊதியம் ரூ 2லட்சம். இவை தவிர விளம்பரங்கள் வாயிலாக ஆண்டுக்கு பல கோடி வருமானம் ஈட்டுகிறார்கள். சச்சின் டென்டுல்கரின் ஒராண்டு விளம்பரவருமானம் மட்டுமே ரூ 200கோடி!

கிரிக்கெட் வியாபாரத்தை விஸ்வரூபமாக்கவும், சூதாட்டத்தை மேன்மேலும் வேகப்படுத்தவும் ஆமர்பிக்கப்பட்டது தான் ஐ.பி.எல் எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக்.

இது தான் சந்தையில் மாடுவாங்குவது போல, கிரிக்கெட் ஆட்டகாரர்களை சந்தைபடுத்தி ஏலம் எடுத்தது. கிரிக்கெட் ஆட்டகாரர்களை நமது ஊடகங்கள் கிரிக்கெட் வீரர்கள் என எழுதிவருவது மிகப்பெரிய அபத்தம். சோரம் போவதற்கு தானே உடன்பட்டவர்களை எப்படி வீரர்கள் என்று அழைப்பது...?

இதே போல் பி.சி.சி.ஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை 'இந்திய கிரிக்கெட் களவாணிகள் வாரியம்' என்றழைப்பதே சாலப்பொருந்தும்!

2007ல் தொடங்கிய இந்த விபரீதம் விஸ்வருபம் பெற்றுவளர்கிறது. கடைசியாக நடந்த ஏலத்தில் தங்களை விற்க அணிவகுத்து நின்ற ஆட்டக்காரர்களின் எண்ணிக்கை 514. இதில் புதிதாக சோரம் போகத் துணிந்தவர்கள் 259. டெல்லி அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கேதர்ஜாதவ் என்ற ஆட்டக்காரர், "இன்னும் அதிகவிலைக்கு ஏலம் போவேன் என எண்ணினேன்... என்ன செய்ய? கிடைத்ததைக் கொண்டு திருப்திபட்டுக் கொள்ள வேண்டியது தான்.." என்று ஊடகங்களிடம் வெளிப்படையாகப் புலம்பினார்... என்றால் பாருங்கள்! இவர்களுக்கு சோரம் போகிறோமே என்ற சொரணை கூட இல்லாத அளவுக்கு அவர்கள் மட்டுமல்ல, இந்த சமுகமே மரத்துப் போய்விட்டது...!

2007ல் தோனி தான் 6கோடி என அதிகமாக விலைபேசப்பட்டவர். 2014ல் யுவராஜ்சிங் ஏலம் போன தொகை 14கோடி. ஐ.பி.எல் ஆரம்பிக்கப்பட்டபோது அதில் அணிகளுக்கும், வீரர்களுக்கும் இன்ன பிறவற்றுக்குமான முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ 3000கோடி. அள்ளிய பணம் 5000கோடி!

இந்த விளையாட்டுகளை பிரபலபடுத்த ஆபாசநடனங்கள், கேளிக்கைகள் என கலாச்சரா சீரழிவுகள் அரங்கேற்றப்பட்டன ஆபாசநடனங்கள், கேளிக்கைகள் என கலாச்சரா சீரழிவுகள் அரங்கேற்றப்பட்டன. ஊடகங்களின் பெரும் வெளிச்சமும் இவற்றிற்கு கிட்டியது. இதன் விளைவாக இந்த போட்டியின் பெருமதிப்பு தற்போது 20,000கோடியை கடந்துவிட்டது.

'வல்லான்வகுத்ததே சட்டம்' என்பது தானே யதார்த்தமாக இருக்கிறது. அதன்படி அவர்கள் இன்னும் தங்களை வலிமைபடைத்தவர்களாக்கி கொள்ள கிரிக்கெட் சூதாட்டத்தில் இப்போது சுமார் 2லட்சம் கோடி பணப்புழக்கம். இருக்கும் என நம்பப்படுகிறது. இதில் புக்கீஸ்கள் அடையும் ஆதாயம் இரண்டரை சதவிகிதம்! நடத்துபவர்கள் அடையும் ஆதாயங்களுக்கு கண்க்கு வழக்கே இல்லை.

கிரிக்கெட் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்கினால் நம் சமூகம் மீளமுடியாத வீழ்ச்சிக்கு செல்லும் என்பது திண்ணம், எனவே இதனை நம் முழுபலத்தையும் திரட்டி எதிர்பதோடு கிரிக்கெட் விளையாட்டை தனியார்களிடமிருந்து விடுவித்து இந்திய அரசு விளையாட்டைத் துறையின் கீழ் ஒரு விளையாட்டாக கொண்டு வர வேண்டும். கிரிக்கெட்டிற்கான தனி முக்கியத்துவம் தகர்த்தெறியப்படவேண்டும். இப்படி செய்தாலே கறுப்பு பணப்புழக்கம் காணாமலாகிவிடும். நிழல் உலக தாதாக்கள் வெளிச்சத்தில் நமக்கென்ன வேலை? என விலகி விடுவார்கள். வில்லங்களிலிருந்து விடுபடவேண்டும் என்றால் கிரிக்கெட் விளையாட்டையும், போட்டிகளை அரசுடைமையாக்குவது ஒன்றே தீர்வாகும்.

No comments: