Tuesday, November 25, 2014

சி.பி.ஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா திருடனிடம் கொடுக்கப்பட்ட சாவி!

 -சாவித்திரிகண்ணன் 

இந்தியாவையே உலுக்கிய இமாலய ஊழல்கள் 2ஜி எனப்படும் இரண்டாம் அலைக்கற்றை ஊழலும், நிலக்கரிச் சுரங்க ஊழலும்! 

இந்த ஊழல்களை விசாரித்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருகின்ற பொறுப்புள்ள ஒரே விசாரணை அமைப்பு சி.பி.ஐ எனப்படும் சென்ட்ரல் இண்டலிஜன்ஸ் பீரோ. 

ஆனால், இந்த அமைப்போ ஆட்சியாளர்களின் கை அசைவுக்கும், கண் அசைவிற்கும் காத்திருக்கும் ஏவல் நாய்! 

ஆக, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா? தப்புவிக்கப்படுவார்களா? என்பதற்கு சாலமன் பாப்பையாவை அழைத்து பட்டிமன்றம் நடத்தித் தான் விடைகாணவேண்டும் என்பதில்லை. 

தற்போது இந்த இரண்டு இமாலய ஊழல்களில் சம்பந்தப்பட்டவர்களை தப்புவிக்க சி.பி.ஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா தன் வீட்டிற்கே அழைத்துப் பேரம் பேசிய விவகாரத்தைத் தான் உச்சநீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் அம்பலப்படுத்தியுள்ளார். 

சி.பி.ஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவின் வீடு என்பது புது தில்லியின் அதி முக்கிய பிரமுகர்களும், அமைச்சர்களும் குடியிருக்கும் ஜன்பத் சாலையில் தான் உள்ளது. குறிப்பாக காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி வசிப்பது இந்த சாலையில் தான்! 

சி.பி.ஐக்கு புதுதில்லியில் மிக விஸ்தாரமான 11 அடுக்குகளைக் கொண்ட தனி அலுவலகம் சுமார் 200கோடி செலவில் கட்டப்பட்டிருக்கிறது. அதன் பிரதான அலுவலகத்திலும் 52கிளைகளிலுமாக சுமார் 5,600அதிகாரிகள், ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். 

சம்பந்தப்பட்ட யாரையும் அழைத்து விசாரிக்க நவீன வசதிகள் கொண்ட, ஏராளமான கண்காணிப்பு கேமாராக்கள் பொருத்தப்பட்ட குளிர்பதன வசதிகள் கொண்ட தனி அறைகள் அந்த அலுவலகத்தில் நிறையவே உள்ளன. இந்த அமைப்புக்கென்று நமது மத்திய அரசு ஆண்டுக்கு சுமார் 400கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்திலிருந்து வாரி வழங்குகிறது. இவ்வளவு இருக்க, சி.பி.ஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா இந்த இமாலய ஊழல்களில் சம்பந்தப்பட்ட முக்கிய தொழில் அதிபர்களையும், இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களையும், அவர்களின் உதவியாளர்களையும் தன் இல்லத்திற்கு அழைத்து பேச வேண்டிய அவசியம் என்ன? 

ரஞ்சித் சின்ஹாவை அவரது வீடு தேடிச் சென்று சந்தித்துள்ளார் 2ஜி ஊழலில் சம்பந்தப்பட்ட அனில் அம்பானி தன் மனைவியுடன் சிலமுறை! அம்பானியின் வலது கரமான ஏ.என்.சேதுராமன் சுமார் 50முறைக்கும் மேல் ரஞ்சித் சின்ஹாவின் இல்லம் சென்றுள்ளார், ஸ்வான் டெலிகாம் நிறுவன உரிமையாளர்களும், நிர்வாகிகளும் சந்தித்துள்ளனர். 

நீராராடியா போன்ற இந்தியாவின் பிரபல அரசியல் தரகர்கள், ஹவாலா பேர்வழிகள் என சுமார் 52பேர் 329முறை அவரது இல்லம் சென்றுள்ளனர். 

மேற்படி தகவல்கள் சி.பி.ஐ அலுவலகத்திற்கு போட்டி அலுவலகமாக தன் இல்லத்தை ரஞ்சித் சின்ஹா மாற்றியுள்ளதைத் தான் உறுதிபடுத்துகின்றன. 

உண்மையான, அதிகாரபூர்வமான சி.பி.ஐ அலுவலகத்தின் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அரும்பாடுபட்டு ஊழல்புகார்களுக்கு ஆளானவர்கள் செய்த குற்றங்களுக்கான ஆதாரங்களை தேடி உழைத்துக் கொண்டிருப்பது ஒரு புறம் என்றால், அந்த ஆதாரங்களை கொண்டு தன் இல்லத்தில் ஊழல் பெருச்சாளிகளிடம் பேரம் நடத்தியுள்ளார் ரஞ்சித் சின்ஹா! 

இது எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம். 

இத்தனை பெரிய துரோகச் செயல்பாடுகளை தன் இல்லத்தில் உட்கார்ந்து ஆற அமரச் செய்யும் துணிச்சல் இவருக்கு எப்படி வந்தது? யார் தந்தது? தனி ஒரு மனிதராக இதனை அவர் செய்யமுடியுமா? 

அதுவும் உச்சநீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் இமாலய ஊழல்களுக்கு ஜன்பத் சாலை இல்லத்தில் உட்கார்ந்து கொண்டு சாமதி கட்டி வந்துள்ளார் என்றால், அவர் எப்படி சி.பி.ஐ இயக்குநராக முடிந்தது? அவரை சி.பி.ஐ இயக்குநராக்கியவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்றும் நாம் ஆராய வேண்டியுள்ளது. 

2ஜி ஊழலிலும், நிலக்கரி சுரங்க ஊழலிலும் ஐ.மு.கூ அரசு மக்களிடம் அம்பலப்பட்டு நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அதன் ஊழல் செய்திகள் சரம்சரமாக வெளியாகிக் கொண்டிருந்த ஒரு சூழலில் தான் - நவம்பர் 2012ல் - சி.பி.ஐ இயக்குநராக ரஞ்சித் சின்ஹா நியமிக்கப்பட்டார். 

இவரது நியமனத்தை அன்றே ஊழலுக்கு எதிரான அமைப்புகள் எதிர்த்தன. சென்னையைச் சேர்ந்த முன்னாள் சி.பி.ஐ இன்ஸ்பெக்டரும், தியாகி ஜெபமணியின் மகனுமான மோகன்ராஜ் ரஞ்சித் சின்ஹாவின் நியமனத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தன் பிரமாண பத்திரத்தில் ரஞ்சித் சின்ஹா மாட்டுதீவன ஊழலில் இருந்து லாலுபிரசாத் யாதவை காப்பாற்ற உதவிய வகையிலும், அந்த வழக்கையே நீர்த்து போக செய்த வகையிலும், பெரும் பங்காற்றியதாக பீகார் உயர்நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டவர் என்பதோடு, அவர் ரயில்வே துறையில் ஆர்.பி.எப்.பின் பொது இயக்குநராக இருந்தபோது ஏராளமான ஊழல்குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர் என்றும் சுட்டிக் காட்டியிருந்தார். மோகன்ராஜின் இந்த வாதங்கள் நீதிமன்றத்தில் செல்லுபடியாகவில்லை. 'ஏழையின் சொல் அம்பலத்தில் ஏறாது' என்பது இதில் உறுதிபட்டது. 

ரஞ்சித் சின்ஹாவின் நியமனத்தை அன்றைய எதிர்கட்சியான பா.ஜ.க பெயரளவுக்குத் தான் எதிர்த்தது. பெரிய முனைப்பு காட்டவில்லை. ஆனால் ரஞ்சித் சின்ஹா ஒரு 'அக்மார்க்க பிராடு' என்பது அனைத்து வகையிலும் சந்தேகக்கிடமற்ற உண்மை. ரயில்வே பாதுகாப்புப் படையை பலஹீனப்படுத்தி, அதன் திறமைகளை, செயல்பாடுகளை சிதைக்குமளவுக்கு ரஞ்சித் சின்ஹாவின் ஊழல் கொடிகட்டிப் பறந்தது ஊரறிந்த உண்மை. அப்படிப்பட்ட அநீதி திலகத்தை அதி முக்கிய விசாரணை அமைப்பின் தலைமை பொறுப்பில் அமர்த்தி அழகு பார்த்தது என்றால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நோக்கம் வேறொன்றுமில்லை. 

இனி திருடனிடம் சாவி கொடுத்தாயிற்று. எனவே இது வரை திருடப்பட்டது குறித்து அவன் கேள்வி எழுப்ப போவதில்லை. திருடியதில் பங்கு வேண்டி பிச்சை கேட்பதற்கே அவனது நேரம் விரயமாகும். பிச்சை போட்டுவிட்டால் எடுத்தவனுக்கும் விடுதலை, பெற்றவனுக்கும் சந்தோஷம். எனவே நமக்கு விசுவாசமிக்க ஏவல் நாய் வேண்டுமென்றால் அது இரைதேடுவதற்கு நாம் ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? நாம் அமைத்த வேலி பயிரை பாதுகாக்க அல்ல, பயிரை நம்மோடு சேர்ந்து மேய்ந்து கொள்ளத்தான்! இந்த பரஸ்பர புரிதல் தான் ரஞ்சித் சின்ஹா சி.பி.ஐ இயக்குநராக சிம்மாசனம் ஏறக்காரணமாயிற்று. 

நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது வாலைக் குலைத்துக் கொண்டு தெருவில் ஓடி குப்பையைக் கிளறித் தின்பதை விடாது என்ற பழமொழி உண்டு. அடிப்படையிலேயே கோளாறுள்ள ஒருவருக்கு ஆகப்பெரிய பதவியைக் கொடுத்தாலும் தன் இயல்பிலிருந்தும் குணத்திலிருந்தும் ஒரு போதும் அவர் விடுபடமாட்டார் என்பது ரஞ்சித் சின்ஹா பதவி ஏற்ற பிறகான அவரது ஒவ்வொரு அசைவிலும், பேச்சிலும் வெளிப்பட்டே வந்தது. 

சி.பி.ஐயின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு ரஞ்சித் சின்ஹா பேசும் போது, "விளையாட்டுகளில் சூதாட்டத்தை தடுக்க முடியாவிட்டால் அரசே அதற்கு சட்டபூர்வ அங்கீகாரம் தந்துவிடலாம். இதன்மூலம் அரசுக்கும் பலநூறு கோடி வருமானமாவது கிடைக்கும். பெண்கள் பாலியல் பலாத்காரம் குறித்து பெரிய அளவில் பேசப்படுகிறது. பெண்கள் பாலியல் பலாத்காரத்தை எதிர்க்க முடியாமல் போகும் தருணங்களில் அதை சந்தோஷமாக அனுபவித்து விடலாம்" என்றார். 

இந்த பேச்சு நாடெங்கும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. பெண்கள் அமைப்புகளும், ஊழல் எதிர்ப்பு அமைப்புகளும் போர்கோலம் பூண்டன. அதன் பிறகு ரஞ்சித் சின்ஹா, "நான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. இதனால் யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று சமாளித்தார். 

நிலக்கரித் துறை ஊழல்குறித்து வரைவு அறிக்கை தயார் செய்த ரஞ்சித் சின்ஹா, அதை அன்றைய சட்ட அமைச்சர் அஸ்வாணிகுமாரிடமும், அத்துறையின் இரு அதிகாரிகளிடமும் காட்டியுள்ளார். பிரதமர் அலுவலகத்திற்கும் வரைவு அறிக்கை தந்துள்ளார். பிறகு ஆட்சியாளர்கள் செய்த திருத்தங்களை ஏற்று வரைவு அறிக்கையையே மாற்றிவிட்டார். 

இது குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுவழக்கு தொடரப்பட்டபோது சி.பி.ஐ சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிடர் ஜெனரல் ஹரேல் ராவல் பிண்டே 'இப்படி எதுவும் நடக்கவேயில்லை' என அடித்துப் பேசினார். 

ஆனால், ரஞ்சித் சின்ஹா வரைவு அறிக்கையை திருத்தம் செய்தது உச்சநீதிமன்றத்தில் நிருபணமானபோது, அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு, "இதனால் இந்த வழக்கிற்கு பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்கிறேன். இனி இதுபோல் யாருக்கும் காட்டமாட்டேன் என உறுதியளிக்கிறேன்...." என்று சமாளித்தார். நீதிபதிகள் அன்றே ரஞ்சித் சின்ஹாவை தண்டித்திருக்க வேண்டும். ஆனால் ரஞ்சித் சின்ஹாவின் சமாதானத்தை நீதிபதிகள் ஏற்று விட்டுவிட்டனர். 

இப்படி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு விசுவாசம் காட்டி வந்த ரஞ்சித் சின்ஹா, 2014 தொடங்கி பா.ஜ.க பக்கம் நகரத் தொடங்கினார். அடுத்து பா.ஜ.க ஆட்சி தான் வரவுள்ளது. எனவே தனது கோக்கு மாக்குகளை தொடரவும், பதவியை பாதுகாக்கவும் பா.ஜ.கவின் பரிவு அவசியம் எனப்புரிந்து செயல்பட்டதோடு அவ்விதமே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவும் தயங்கவில்லை. 

இஸ்ரத்ஜகான் என்ற கல்லூரி மாணவியும் அவளது நண்பர்கள் மூவரும் போலி என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல வழக்கில் அமித்ஷாவின் பெயரை குற்றப்பத்திரிகையில் சேர்க்காமல் வேண்டுமென்றே விடுவித்தார் ரஞ்சித் சின்ஹா. இது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "அமித்ஷாவின் பெயர் இந்த குற்றப்பத்திரிக்கையில் இருந்திருந்தால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மகிழ்ந்திருக்கும்" என்றார். 

அப்படியானால் அமித்ஷாவின் பெயர் குற்றப்பத்திரிக்கையில் இல்லாததால் யார் மகிழ்ந்திருக்ககூடும் என்ற கணிப்பிலேயே ரஞ்சித் சின்ஹா காய் நகர்த்தியிருக்கிறார் என்பதை புரிந்து கொள்வது கஷ்டமல்ல. 

எதைச் செய்தால் யார் மகிழ்வார்கள்? யார் வருத்தமடைவார்கள் என்று யோசித்துக் கொண்டிருப்பது ஒரு சி.பி.ஐ இயக்குநரின் வேலையல்ல. அது அதிகார வர்க்க அடிவருடிகளுக்கு மட்டுமே தோன்றும் யோசனையாகும். 

இது மட்டுமின்றி, மற்றொரு விவகாரத்திலும் ரஞ்சித் சின்ஹாவின் உண்மை சொருபம் வெளிப்பட்டது. சி.பி.ஐக்கான கூடுதல் இயக்குநரை தேர்ந்தெடுக்க ஒரு தேர்வு குழு உள்ளது. அந்தக்குழு கூடுதல் இயக்குநருக்கு பரிந்துரைத்த பெயர் பச்சனந்தா. ஆனால் ரஞ்சித் சின்ஹா அதை புறக்கணித்து தமிழகத்தின் ஐ.பி.எஸ்ஸான 

அர்ச்சனா ராமசுந்தரத்தை நியமிக்க வலியுறுத்தி அதில் வெற்றியும் கண்டார். மத்திய காங்கிரஸ் அரசு தமிழக அரசிடம் தகவல்கூட தராமல், மாநிலப் பணியிலிருந்து அவரை விடுவிக்கக் கூட கால அவகாசம் தராமல் சி,பி,ஐயின் கூடுதல் இயக்குநராக அரச்சனா ராமசுந்தரத்தை நியமித்தது. ஆனால், தமிழக அரசு நீதிமன்றம் சென்று போராடி அந்த நியமனத்தை முறியடித்தது. அர்ச்சனா ராமசுந்தரத்தை நியமித்ததின் பின்னுள்ள அரசியல் உள்நோக்கங்களே தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த விஷயத்தில் அர்ச்சனா ராமசுந்தரத்தை விடுவிக்க மறுத்து பிடிவாதம் காட்டியதற்கு காரணமாகும். முதலாவதாக சி.பி.ஐயின் கூடுதல் இயக்குநராகும் அளவுக்கான தகுதி படைத்தவரல்ல அர்ச்சனா ராமசுந்தரம். அடுத்தது, அவரது கணவர் ராமசுந்தரம் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு மிகவும் வேண்டபட்டவர். 

பொதுபணித்துறை செயலாளராக ராமசுந்தரம் ஐ.ஏ.எஸ் இருந்தபோது, அதில் புதையல் தோண்டி பொன்னெடுத்து விருந்து படைத்தவர் என்ற வகையில் கருணாநிதிக்கு நெருக்கமானவர். அண்ணா நூலக கட்டிட உருவாக்கத்திலும் அளப்பரிய ஊழல்களை அரங்கேற்றியவர். இதனால் முன் எச்சரிக்கை உணர்வுடன் அ.தி.மு.க ஆட்சி வருவதற்கு முன் விருப்ப ஓய்வு எடுத்துக்கொண்டவர். எனவே 2ஜி ஊழலில் கருணாநிதி குடும்பத்திற்கு ஆதரவாக காய்நகர்த்தவே அரச்சனா ராமசுந்தரம் சி.பி.ஐயின் கூடுதல் இயக்கநராக்கப்படுகிறார் என ஜெயலிலிதா சந்தேகித்தார். அதனாலேயே அதை மூர்க்கமாக தடுத்துவிட்டார் என்ற கருத்து காவல்துறை வட்டாரத்தில் முனபே பலவாறு விவாதிக்கப்பட்ட விவகாரம் தான்! 

ரஞ்சித் சின்ஹா போன்றவர்கள் தன் சகாவாக ஒருவரை விரும்புகிறார் என்றால் நிச்சயம் அது கிரண்பேடி ஐ.பி.எஸ் போன்ற ஒரு நேர்மையானவராக இருக்கமுடியாது என்பதை சொல்ல வேண்டியதே இல்லை. தன் பதவிக்காலம் முடிக்கு வந்த பிறகும் தன் தில்லுமுல்லுகளை தொடரவும், தன் செல்வாக்கை சி.பி.ஐக்குள் நிலை நிறுத்தவும் தக்க ஒருவரைத் தான் விரும்ப முடியும். ஆனால் அது தடுக்கப்பட்டுவிட்டது. 

இப்படியாக பயிரை மேய்வதற்காகவே வேலியை நட்டகதையாகத்தான் ரஞ்சித் சின்ஹா நியமனமும், அதைத்தொடர்ந்த நடவடிக்கைகளும் உள்ளன. தற்போது ரஞ்சித் சின்ஹாவின் உண்மைசொரூபத்தை பிரசாந்த்பூஷன் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இதில் ரஞ்சித் சின்ஹாவை தண்டிக்கவோ, குறைந்தபட்சம் பதவிநீக்கம் செய்யவோ முன்வரவில்லை உச்சநீதிமன்றம். மாறாக, ரஞ்சித் சின்ஹா கேட்டுக் கொண்டதின் பேரில் அவரது வீட்டில் அவரைச் சந்திக்கச் சென்றவர்களின் வருகை பதிவேட்டை பிரசாந்த் பூஷனுக்கு தந்தது யார்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

உச்சநீதிமன்றத்தின் இந்த அணுகுமுறை நாட்டு மக்களுக்கு பெரும் அதிரச்சியை, ஆழ்ந்த வருத்தத்தையே ஏற்படுத்தி உள்ளது.

 ரஞ்சித் சின்ஹா மாதிரியானவர்கள் நீதிமன்றத்தால் மன்னிக்கப்பட்டாலோ, மரியாதைக்குரியவர்களாக நடத்தப்பட்டாலோ அது மக்கள் மனங்களை ரணப்படுத்திவிடும். பிறகு சீரழிந்து கொண்டிருக்கும் இந்த நாட்டை சீர்படுத்தமுடியும் என்ற நம்பிக்கையே அடியோடு ஆட்டம் கண்டுவிடும். 

ரஞ்சித் சின்ஹாவின் வார்த்தைகளிலேயே அவரது செயல்பாடுகளை விளக்குவதென்றால், 'ஊழலை தடுக்க முடியாது என்பதால் சட்டபூர்வமாக அதை சரிகட்ட முயன்றேன். ஊழல்வாதிகள் வீடுதேடி வந்து விருந்து வைத்ததால் அதை விருப்பதோடு அனுபவித்து மகிழ்ந்தேன்'. 

ஆம், இது தான் ரஞ்சித் சின்ஹாவின் இயல்பு. 

உடல் சுகம் வேண்டும் காமுகர்கள் யாருமே பத்தினியின் வீடுதேடி பணம் கொண்டு தருவதில்லை தானே!

No comments: