எப்போது வருமென்று தெரியாது
சட்டென்று வரும், பொட்டென்று உயிர்பிரியும்
‘’நேற்றுவரை நல்லாயிருந்தாரே…’’
‘’ஒரு மணி நேரம் முன்புகூட சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாரே…’’
என்றெல்லாம் நாம் பேசிப்பேசி அயர்வோம்!
ஆம் நம் உடலின் மிக முக்கிய உறுப்பான இதயம்
நின்றுவிட்டால் உடனே மரணம் தான்!
இன்றைய தினம் நமது சீர்கெட்ட உணவு கலாச்சாரத்தால்
உணர்வுகளை சீராக கையாளததாலும் இதய பாதிப்பு இல்லாதவர்களை காண்பதே அரிது தான்!
கோடிக்கணக்கானவர்களை இந்த நோய் பாதித்துள்ளபோதிலும்
சில லட்சக் கணக்கானவர்களுக்கே மருந்துவம் பெறும் வாய்ப்புள்ளது. ஏழை, எளிய மக்களில் பெரும்பாலோருக்கு இதயநோய்க்கான
மருத்துவ செலவுகளை சமாளிப்பது இயலாததாகும்.
தற்போது நவீன மருத்துவத்தில் இதய அடைப்பு
ஏற்பட்டுள்ளவர்களை காப்பாற்ற பல நுட்பமான அணுகுமுறைகளும், கருவிகளும் வந்துவிட்டன!
எனினும் இந்தியாவில் ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேர் இதயபாதிப்பால் மரணிக்கிறார்கள் என்பது
அரசு தரும் புள்ளிவிபரம். ஆனால் இந்த எண்ணிக்கை இதைக் காட்டிலும் கூடுதலாக இருக்கவே
வாய்ப்புள்ளது.
பொதுபுத்தியில் உள்ளது போல் இதயபாதிப்பு
என்பது சடாரென வருவதில்லை. அது பாதிக்கப்பட்டுவருவதை நமக்கு பல வழிகளிலும் உணர்த்திய
பின்பே வருகிறது. எனினும் இருப்பது போல் இருந்து இறந்தவர்களே அநேகம் இதை 1500 ஆண்டுகளுக்கு
முன்பே திருமூலர் பாடிவைத்துள்ளார்!
அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடியாளோடு மந்தணங் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப்படுத்தார் கிடந்தொழிந்தாரே!
இப்படி உடனே மரணம் சம்பவிக்கும் என்றாலும்
கூட நமக்கு பல முன்எச்சரிக்கைகளை அது தரத்தான் செய்கிறது.
அவ்வப்போது ஏற்படும் சோர்வு, மயக்கம், படபடப்பு,
மூச்சிரைப்பு, தூக்கமின்மை, இதன் தொடர்சியாக வந்துபோகும் இதயவலியை அலட்சியப்படுத்தும்போது
தான் பெரிய தாக்குதலை சந்திக்க வேண்டியாகிறது.
இயற்கை தத்துவப்படி நம் இதயம் என்பது பஞ்சபூதங்களில்
நெருப்போடு தொடர்புடையது. இதயபாதிப்பு பலருக்கு நாக்கில் அடிக்கடி வரும் புண் மூலமாகவும்
வெளிப்படும். இதயபாதிப்பு சிலருக்கு முழங்கால் வலியை தரும். இதய பாதிப்பு கல்லீரலிலும்
பிரதிபலிக்கும், நுரையீரலையும் பாதிக்கும். இதயபாதிப்பால் ரத்த அழுத்தங்களும், சித்த
தடுமாற்றங்களும் இணைந்தே ஏற்படும்! எனவே அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் சுதாரித்துக்
கொண்டு உணவு ஒழுக்கம் மூலமாகவும், உணர்வுகளை ஒழுங்கு படுத்துவதன் மூலமாகவும் நாம் நலம்
பெறலாம்.
இதயத்திற்கு பாதிப்பு தரும் உணவுகள்:
டால்டா இது ரத்தத்தில் கரையாமல் ரத்த நாளங்களில்
நிரந்தரமாக படிந்து அடைப்பு ஏற்படுத்தும். மைதா – இதில் நார்சத்தே இல்லாததால் உடலில்
கழிவாகத் தேங்கும். இதிலுள்ள ஹாலோஜன் காம்பவுண்டு நம் கணையத்திலுள்ள பீட்டா செல்களை
அழித்துவிடும். செயற்கையாக அயோடின் சேர்க்கப்பட்ட நைஸ் உப்பு நமக்கு ரத்த அழுத்தத்தை
ஏற்படுத்தும். உணவில் அதீதமாக சேர்க்கப்படும் புளி நெஞ்செரிச்சல் தரும். ரத்தத்தை அமிலத்தன்மையாக்கும்.
இதய பாதிப்புள்ளவர்கள் கல் உப்பு, இந்துப்பு, கொடம்புளி ஆகியவற்றை உணவில் சேர்க்கலாம்.
இதயபாதிப்புள்ளவர்களுக்கு கொழுப்புச் சத்து
ஆகாது என காரணம் கூறி ரீபைண்டு ஆயில்களை பயன்படுத்துகிறார்கள். உண்மையில் ரீபைண்டு
ஆயில் தான் ஆபத்தானது. ஏனெனில், ரீபைண்டு செய்வதற்காக சோடியம் ஹைடிராக்சைடு, அடர்கந்தக
அமிலம், பிளீச்சிங் பவுடர்… போன்ற ஏழு வேதிப்பொருள்களை சேர்த்து கொதிக்க வைக்கிறார்கள்.
இதனால் தாவர எண்ணையில் உள்ள உடலுக்கு நன்மை செய்யும் தாதுக்கள், விட்டமின்கள் அழிந்துவிடுவதோடு
அதீத வெப்பத்தால் எண்ணெய் நச்சுத்தன்மை கொண்டதாகிவிடுகிறது. எனவே, செக்கில் ஆட்டிய
நல்லெண்ணெய்தான் இதயத்திற்கு பாதிப்பில்லாதது அன்றி பிராண்டட் எண்ணெய்கள் அனைத்துமே
தவிர்க்கவேண்டியதே!
இதயநோயாளிகள் நிலக்கடலை, முந்திரி, கடலைஎண்ணெய்,
தேங்காய் எண்ணெய், தேங்காயில் செய்யப்பட்ட சமையல், எண்ணெயில் பொறித்த உணவுகள், மாமிசம்
முட்டை, ஐஸ்கிரீம், பாட்டிலில் அடைத்த குளிர்பானங்கள்.. போன்றவற்றை கண்டிப்பாகத் தவிர்க்க
வேண்டும். மது, புகையிலை, பாக்கு அறவே கூடாது. அத்துடன் எப்போதுமே அதீத உணவை தவிர்த்து
மிக அளவுடன் மட்டுமே உண்ண வேண்டும்.
வெள்ளைப்பூண்டு, இஞ்சி, கருஞ்சீரகம், துளசி,
தேன், சின்னவெங்காயம் ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்ப்பது இதய பாதுகாப்புக்கு உகந்ததாகும்.
ஆவாரம்பூ தேனீர், அருகம்புல்சாறு தினசரி
பருக வேண்டும். பால்கலந்த தேநீரைத் தவிர்த்து பச்சை தேயிலை தேனீர் அருந்தலாம். மண்பானையில்
துளசி இலையைப் போட்டுவைத்து அந்தத் தண்ணீரை எடுத்துப் பருகலாம். இளநீர் இதயத்திற்கு
இதமானது. தினசரி இரவில் ஐந்து சின்ன வெங்காயத்தை மோரில் ஊறப்போட்டு காலையில் வெறும்
வயிற்றில் சாப்பிட்டு வரும் யாருக்குமே ஆயுள்முழுக்க இதயபாதிப்பு ஏற்படாது.
தினசரி இரவு படுக்கும் முன்பு பாலோடு வெள்ளைபூண்டு
இரண்டு பத்தைகளை சேர்த்து காய்ச்சி சாப்பிடலாம். பூண்டு குழம்பு, பூண்டு ரசம் இப்படியாக
பூண்டை பல விதங்களில் சாப்பிட்டால் இதய அடைப்பு எப்போதும் வராது. தக்காளியை சமைக்காமல்
துண்டாக நறுக்கியோ, ஜூஸாகவோ உட்கொள்ளலாம்.
முட்டைகோஸ், வெள்ளை பூசணி, அகத்திக்கீரை, வெண்டைக்காய், சுரக்காய் புதினா, எலுமிச்சை,
நெல்லிக்காய், முள்ளங்கி, மணத்தக்காளி, காளான் போன்ற காய்கறிகள், கீரைகள் தினசரி உணவில்
மாறி மாறி இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
பழங்களில் அத்திப்பழம், மாதுளை, திராட்சை,
கொய்யா பழம், விளாம்பழம் பேரிக்காய், ஆப்பிள் ஆகியவை இதயத்திற்கு பலம் தரும். பேரிச்சம்
பழத்தை முதல் நாள் இரவில் தண்ணீரில் ஊறப்போட்டு அடுத்தநாள் காலை கொட்டையை எடுத்துவிட்டு
மிக்சியில் அடித்து கூழாக்கி சாப்பிடலாம்! இவை அனைத்தையும் கடைபிடித்தாலும், உணர்ச்சிகளை
சரியாக கையாளத் தெரியாவிட்டால் பயன் இல்லை.
யோகா, பிராணாயாமம், ஆழ்நிலை தியானம், போன்றவை
உணர்ச்சிகளை கையாள பேருதவியாக இருப்பதோடு இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும். இதயநோயாளிகள்
உடல்பருமனாகாமல் ஏதேனும் சிறு, சிறு வேலைகளை செய்வது, நடைபயிற்சி போவது ஆகியவற்றோடு
மனதில் கவலைக்கோ, கோபத்திற்கோ சிறிதும் இடம் தராமல் மகிழ்ச்சியாக இருந்தே தீரவேண்டும்.
சில துரோகங்களும், ஏமாற்றங்களும் சிலரை இதயநோயாளிகளாக்கி
விடுவதுண்டு. அதனால் ஏப்படிப்பட்ட துரோகத்தையும் மன்னிக்கவும், எப்பேர்பட்ட இழப்பென்றாலும்
மறக்கவும் வேண்டுவது ஆரோக்கியமாக வாழ கடைபிடித்தே தீரவேண்டிய நிர்பந்தமாகும்.
நெஞ்சம் நிறைய அன்பை நிறைத்து
முகம் மலர அன்பைப் பொழிந்து
வாய் மணக்க அன்பைச் சொரிந்து
வாழ்வாரோருக் கென்றும் நோயில்லை
துன்பமில்லை, துயரில்லை, துவழுதலில்லை
ஏனெனில் பாரதி வாக்கின்படி
அன்புடையார் இன்புற்று இருத்தல் இயல்பு
No comments:
Post a Comment