Saturday, February 4, 2017

உணவில் உறையும் வாழ்வியல் அறம் விதவிதமான உணவுகள்; விதவிதமான வியாதிகள்!

                                                                                                            -    சாவித்திரி கண்ணன்





எண்ணிலடங்கா உணவு வகைகள்…!
பெயர் உச்சரிக்கச் சிரம்ப்படுமளவுக்கான உணவு மெனுக்கள்….!
கண்ணைக் கவர்கின்றன…, காட்சியில் அசத்துகின்றன…!
பார்வையின் வழியிலான பசி பார்ப்பவரைத் தொற்றுகிறது…!
ஆசை பிறக்கிறது… ஆசைக்கு அறிவேது? நாணமேது? என்ன ருசியோ…? சுவையோ தெரியாத நிலையில் கேட்டும் பணத்தைத் தந்து புசிக்கின்றனர் பலர்! தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஏகப்பட்ட புதுப்புதுவகை சமையல்கள் நாள்தோறும் அறிமுகப்படுத்தப்படுகிறது….
எதனோடு எதை சேர்க்கக் கூடாதோ அதை சேர்த்துச் செய்வது புதுமை என்ற பெயரில் பிரபலமாகிறது. யார் வேண்டுமானாலும் சமையல் நிபுணர்களாகிவிடுகிறார்கள் தொலைக்காட்சி புகழுக்குப் பிறகு!

ஆம்! முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சமூகம் தற்போது உணவுப் பண்பாட்டில் உருக்குலைந்து வருகிறது….!

கல்யாண வீடுகளில் தங்கள் அந்தஸ்த்தை வெளிப்படுத்த பகட்டான, விதவிதமான உணவுகளை இலையில் நிரப்புகிறார்கள்! ஒரு இனிப்பு பலகாரம், ஒரு பாயாசம் என்ற நிலையெல்லாம் ஏதோ கதியற்றவர்களின் வீட்டு கல்யாணமாக கருதும் நிலை ஏற்பட்டுவருகிறது. நாலைந்து இனிப்புவகைகள் போடு பன் நடுத்தர குடும்பமென்றால் பத்து, பன்னிரெண்டு இனுப்புவகைகளை இலைபரப்பி பணக்காரர்கள் தங்கள் பகட்டை வெளிப்படுத்துகிறார்கள்.
இத்துடன் நான்கைந்து பலகார வகைகள், நாலைந்து சாப்பாடுவகைகள், மூன்று நான்கு அப்பளம், சிப்ஸ் வகைகள், வடை, கட்லெட்டு வகையறாக்கள் இதற்கு மேலும் வெள்ளைச்சோறு, ரசம், கூட்டு, பொறியல்… இத்யாதிகள் இத்துடன் முடிந்தால், கல்யாண வீட்டாரின் கௌரவம் முழுமை பெறாது என நினைத்தோ என்னவோ மீண்டும் ஒரு பக்கம் பழக்கலவை கிண்ணங்கள், ஐஸ்கிரீம் கிண்ணங்கள், பீடா, வெத்தலை வகையறாக்கள்… என அமர்களம் தான்!

இத்தனை வகைகளை உண்டால் ஆரோக்கியம் அதோகதி தான்! ஒரு வகையில் ஆடம்பர திருமணவிருந்துகளை நான் வயிற்றின் மீது செலுத்தப்படும் வன்முறையாகத்தான் நான் பாவிக்கிறேன்.

மகாபாரதத்தில் கௌரவர்களின் மத்தியில் மாட்டிக்கொண்டு சுற்றிலும் அம்புகளின் தாக்குதலை எதிர்கொண்ட அபிமன்யூவைப் போல நம் ஜீரண உறுப்புகளை இந்த கல்யாண விருந்துகளின் அயிட்டங்கள் தாக்கி நிலைகுலைய வைக்கின்றன!.

இது மிகைப்படுத்தப்பட்ட உவமையல்ல…!
இத்தகைய விருந்துகளால் நமது உணவுப்பாதையே ஸ்தம்பிக்கிறது. சிறுகுடல் சின்னாபின்னப்பட…
பெருங்குடல் பிதுங்கி திணற…,
கல்லீரல் கதிகலங்க….,
மண்ணீரல் மன்றாட…,
எதுக்களிப்பால் நெஞ்சு நிலைதடுமாற…,
கழிவுகளின் தேக்கத்தால் உடல் சூடேற…,
மொத்தத்தில் ஆரோக்கியத்தின் மீதான பலமான அடியாக பல திருமண விருஃந்துகள் சாப்பிடுபவர்களை திக்குமுக்காட வைக்கிறது. பொதுவாக உண்ணும் உணவு உடலுக்கு புத்துணர்ச்சி தர வேண்டும் ஆனால் அதீத உணவோ நம்மிடம் இருந்து கொண்டிருக்கும் ஆற்றலை, இழக்கும்படி செய்து விடுகிறது.

பலமான விருந்தின் இறுதியில் ஐஸ்கிரீம் சாப்பிடும்போது இந்த ஐஸ்கிரிமானது முன் உண்ட அனைத்து உணவுகளையும் செரிமானமாகாமல் தடுக்கும் பணியை செய்கிறது. ஏற்கெனவே அதீத உணவு உள்ளே போயுள்ளதால் சிரமப்படும் ஜீரண உறுப்புகளை மேலும் செயலிழக்க செய்யும் இந்த ஐஸ்கிரீமை ஏன் விருந்தின் இறுதியில் சேர்க்கிறார்கள்? இது எவ்வளவு விவஸ்தைகெட்ட அணுகுமுறை…! இந்த உச்சகட்ட முட்டாள்தனத்தை கறுப்புபணத்தை அழிப்பதற்கென்றே கல்யாணவிருந்தை நடத்தும் கொழுத்த பணக்காரர்கள் சிலர்தான் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும்.

புளிச்ச ஏப்பக்காரர்கள் சிலரின் புரையோடிய உணவு கலாச்சாரம் சமூக கலாச்சாரமாக மாறிவருவது சாபக்கேடு! இப்படிப்பட்ட ஆடம்பரமான திருமணவிருந்து உணவு கலாச்சாரம் இன்று நடுத்தரவர்க்கத்தினரையும், எளிய மக்களையும் கூட தொற்றிக்கொண்டு வருகிறது. தங்கள் வாழ்நாள் சேமிப்பு அனைத்தையும் போட்டாலும் போதாது என்று பெரும் கடன்பட்டும் திருமணவிருந்து நடத்துகிறார்கள். திருமணவிருந்து, மஞ்சள் நீராட்டுவிழா, பிறந்தநாள் விழா… என்று நாள்தோறும் ஏகதடபுடலாக நடந்தேறும் உணவு விருந்துகள் அதை நடத்துபவர்களுக்கும் நஷ்டத்தையும், கஷ்டத்தையும் தருவதோடு, வந்து சாப்பிட்டுச் செல்பவர்களின் ஆரோக்கியத்திற்கும் உலைவைக்கிறது. தானும் இது போல் தன் வீட்டு விசேஷங்களை நடத்த வேண்டும் என்ற விஷத்தையும் விதைக்கிறது.

இத்துடன் ஒவ்வொரு விஷேஷத்திலும் விரயமாகும் உணவுப் பலகாரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஒவ்வொரு இலையிலும் 20 முதல் 40% உணவுகள் விரயமென்றால், எண்ணிக்கை தெரியாமல் சமைப்பதன் மூலம் சுமார் 30 முதல் 50% உணவுகள் விரயமாகிறது. உணவின் மீது இந்த சமூகத்திற்கு இருக்கும் அலட்சியத்திற்கு இந்த விருந்துகளே அத்தாட்சி.

‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’
அளவுக்கு மீறி உட்கொண்ட உணவு மாத்திரம் நஞ்சாவதில்லை, உட்கொண்ட அத்துனை உணவுமே நஞ்சாகிவிடும். உடலும் நலிவடையும். இயற்கை உணவை மட்டுமே உட்கொண்டபோதிலுமே கூட ஒரே நேரத்தில் பற்பல காய்கறிகளையோ, பழங்களையோ உட்கொள்ளக் கூடாது.

ஏனெனில் ஒவ்வொன்றுக்கும் ஒரு தன்மை இருக்கும். செரிமானத்திறன் வேறுபடும். இதுமட்டுமின்றி ஒன்றுடன் ஒன்று சேர முடியாத காய்கறிகளும் உள்ளன.
உதாரணத்திற்கு முள்ளங்கி, முட்டைகோஸ், காளிளெவர், வாழைத்தண்டு போன்று காய்கறிகளை உட்கொள்ளும் போது மற்ற காய்கறிகளை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில் மற்ற காய்கறிகளிலுள்ள அயோடின் சத்தை உடலில் சேராத வண்ணம் தடுத்துவிடும் இயல்பு இக்காய்கறிகளுக்குள்ளது.

இது மட்டுமின்றி காய்கறிகலவையாக சமைக்கும் போது உடனே வெந்துவிடக் கூடிய காய்களையும், தாமதமாக வேகும் காய்கறிகளையும் ஒன்றாக சேர்த்து சமைக்கக் கூடாது. அப்படி சமைத்தால் சீக்கிரமாக வெந்த காய்கறிகளில் உள்ள தாது உப்புகள் எனப்படும் மினரல்ஸ் அதீத சூட்டில் அழிந்துபோவதோடு, அமிலத்தன்மை கொண்டதாக மாறிவிடும். குறிப்பாக பூரணிக்காய், வெள்ளரி, வெண்டை, முள்ளங்கி, காளிபிளவர், வாழைப்பூ போன்றவற்றை அடுப்பில் அதிக நேரம் சூடேற்றக் கூடாது.

தற்போது உணவகங்களில் காளிபிளவரை சிக்கன் 65 போல மசாலா தடவி பொறித்து தருகிறார்கள். இது காளிபிளவரிலுள்ள சத்துகளை காலியாக்கிவிடும். பொதுவாக நமது தமிழ் உணவு கலாச்சாரத்தில் பொறிப்பது, வறுப்பது என்பது கிடையாது. ஆவியில் வேகவைப்பது தான் நம் மரபார்ந்த உணவு கலாச்சாரமாகும்.

நம் உணவு கலாச்சாரத்தின் ஒவ்வொரு அணுகுமுறையும் ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டதாகும்!  ஆவியில் வெந்த உணவு செரிமாணத்திற்கு துணைபுரியும்! வறுத்த உணவும், பொறித்த உணவும் செரிமாணத்தை சிரமத்திற்குள்ளாக்கும். அருமையாக ஆவியில் வெந்தெடுத்த உணவை சட்டியில் போட்டு வதைத்து, வறுத்து ‘பிரைடுரைஸ்’ எனப்பெயரிட்டு தக்காளி சாஸை ஊற்றிக்கொடுப்பது நவீனமல்ல, அறிவீனம். இதற்கு பிரைடுரைஸ் எனப்பெயரிடுவதற்கு மாறாக ‘பிராடுரைஸ்’ எனப் பெயரிடுவது பொருத்தமாகும். அதுவும் ரசாயனக் கலப்பிலான ரீபைண்ட் ஆயில், பாமாயில், டால்டா போன்றவை கொண்டு உருவாக்கப்படும் உணவுகள் நம் உடலுக்குள் சென்ற பின்பு முழுவதுமாக செரித்து பயன்தருவதுமில்லை, கழிவுகளாக முற்றிலும் வெளியேறிவிடுவதுமில்லை, இவை கழிவுகளாகி ரத்த நானங்களில் படிகிறது. இதனால் ரத்தநாளங்கள் நெகிழ்வு தன்மை மறைந்து விரைப்பு பெற்றுவிடுகின்றன. ரத்தம் அடர்த்தியாகிவிடுகிறது. ரத்த ஓட்டம் தடைபடுகிறது. உடலினுள் ரத்த ஓட்டத்திற்கு துணைபுரியும் வியான வாயு வீரியம் இழக்கிறது. ஜீரணத்திற்கு ஆதாரமான சமான வாயு சஞ்சாரம் செய்ய வழியின்றி சங்கடத்திற்குள்ளாகிறது. இதன் விளைவாக கைகால் வலி, கழுத்துவலி, மூட்டுவலி என உடல் பிரச்சினைக்குள்ளாகிறது.

எனவே அடிப்படையில் அறம் சார்ந்த உணவு கலாச்சாரமாக திகழ்ந்த தமிழ் சமூகம் அறம் கொன்ற உணவு கலாச்சாரத்திற்கு  வேகமாக நகர்ந்து கொண்டிருப்பது வேதனையாகவும், வியப்பாகவும் உள்ளது.

‘’பசிகொல்லா விரதமே அறத்தின் முதல் படி நிலை’’ எனக் கருதி வாழ்ந்த தமிழ் சமூகம் பசிகொன்று புசிப்பதில் பேராசைக் கொண்டே சமூகமாக மாறுவது தடுக்கப்பட்டாக வேண்டும்.

நன்றி: ரௌத்திரம், ஏப்ரல் 2016



இதய நோயை தீர்க்கும் இன்றியமையாத உணவுகள்!


                                                                   -    ‘தேவாமிர்தம்’ சாவித்திரி கண்ணன்

எப்போது வருமென்று தெரியாது
சட்டென்று வரும், பொட்டென்று உயிர்பிரியும்
‘’நேற்றுவரை நல்லாயிருந்தாரே…’’
‘’ஒரு மணி நேரம் முன்புகூட சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாரே…’’
என்றெல்லாம் நாம் பேசிப்பேசி அயர்வோம்!

ஆம் நம் உடலின் மிக முக்கிய உறுப்பான இதயம் நின்றுவிட்டால் உடனே மரணம் தான்!

இன்றைய தினம் நமது சீர்கெட்ட உணவு கலாச்சாரத்தால் உணர்வுகளை சீராக கையாளததாலும் இதய பாதிப்பு இல்லாதவர்களை காண்பதே அரிது தான்!

கோடிக்கணக்கானவர்களை இந்த நோய் பாதித்துள்ளபோதிலும் சில லட்சக் கணக்கானவர்களுக்கே மருந்துவம் பெறும் வாய்ப்புள்ளது.  ஏழை, எளிய மக்களில் பெரும்பாலோருக்கு இதயநோய்க்கான மருத்துவ செலவுகளை சமாளிப்பது இயலாததாகும்.

தற்போது நவீன மருத்துவத்தில் இதய அடைப்பு ஏற்பட்டுள்ளவர்களை காப்பாற்ற பல நுட்பமான அணுகுமுறைகளும், கருவிகளும் வந்துவிட்டன! எனினும் இந்தியாவில் ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேர் இதயபாதிப்பால் மரணிக்கிறார்கள் என்பது அரசு தரும் புள்ளிவிபரம். ஆனால் இந்த எண்ணிக்கை இதைக் காட்டிலும் கூடுதலாக இருக்கவே வாய்ப்புள்ளது.

பொதுபுத்தியில் உள்ளது போல் இதயபாதிப்பு என்பது சடாரென வருவதில்லை. அது பாதிக்கப்பட்டுவருவதை நமக்கு பல வழிகளிலும் உணர்த்திய பின்பே வருகிறது. எனினும் இருப்பது போல் இருந்து இறந்தவர்களே அநேகம் இதை 1500 ஆண்டுகளுக்கு முன்பே திருமூலர் பாடிவைத்துள்ளார்!
அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடியாளோடு மந்தணங் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப்படுத்தார் கிடந்தொழிந்தாரே!

இப்படி உடனே மரணம் சம்பவிக்கும் என்றாலும் கூட நமக்கு பல முன்எச்சரிக்கைகளை அது தரத்தான் செய்கிறது.

அவ்வப்போது ஏற்படும் சோர்வு, மயக்கம், படபடப்பு, மூச்சிரைப்பு, தூக்கமின்மை, இதன் தொடர்சியாக வந்துபோகும் இதயவலியை அலட்சியப்படுத்தும்போது தான் பெரிய தாக்குதலை சந்திக்க வேண்டியாகிறது.

இயற்கை தத்துவப்படி நம் இதயம் என்பது பஞ்சபூதங்களில் நெருப்போடு தொடர்புடையது. இதயபாதிப்பு பலருக்கு நாக்கில் அடிக்கடி வரும் புண் மூலமாகவும் வெளிப்படும். இதயபாதிப்பு சிலருக்கு முழங்கால் வலியை தரும். இதய பாதிப்பு கல்லீரலிலும் பிரதிபலிக்கும், நுரையீரலையும் பாதிக்கும். இதயபாதிப்பால் ரத்த அழுத்தங்களும், சித்த தடுமாற்றங்களும் இணைந்தே ஏற்படும்! எனவே அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் சுதாரித்துக் கொண்டு உணவு ஒழுக்கம் மூலமாகவும், உணர்வுகளை ஒழுங்கு படுத்துவதன் மூலமாகவும் நாம் நலம் பெறலாம்.

இதயத்திற்கு பாதிப்பு தரும் உணவுகள்:

டால்டா இது ரத்தத்தில் கரையாமல் ரத்த நாளங்களில் நிரந்தரமாக படிந்து அடைப்பு ஏற்படுத்தும். மைதா – இதில் நார்சத்தே இல்லாததால் உடலில் கழிவாகத் தேங்கும். இதிலுள்ள ஹாலோஜன் காம்பவுண்டு நம் கணையத்திலுள்ள பீட்டா செல்களை அழித்துவிடும். செயற்கையாக அயோடின் சேர்க்கப்பட்ட நைஸ் உப்பு நமக்கு ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். உணவில் அதீதமாக சேர்க்கப்படும் புளி நெஞ்செரிச்சல் தரும். ரத்தத்தை அமிலத்தன்மையாக்கும். இதய பாதிப்புள்ளவர்கள் கல் உப்பு, இந்துப்பு, கொடம்புளி ஆகியவற்றை உணவில் சேர்க்கலாம்.

இதயபாதிப்புள்ளவர்களுக்கு கொழுப்புச் சத்து ஆகாது என காரணம் கூறி ரீபைண்டு ஆயில்களை பயன்படுத்துகிறார்கள். உண்மையில் ரீபைண்டு ஆயில் தான் ஆபத்தானது. ஏனெனில், ரீபைண்டு செய்வதற்காக சோடியம் ஹைடிராக்சைடு, அடர்கந்தக அமிலம், பிளீச்சிங் பவுடர்… போன்ற ஏழு வேதிப்பொருள்களை சேர்த்து கொதிக்க வைக்கிறார்கள். இதனால் தாவர எண்ணையில் உள்ள உடலுக்கு நன்மை செய்யும் தாதுக்கள், விட்டமின்கள் அழிந்துவிடுவதோடு அதீத வெப்பத்தால் எண்ணெய் நச்சுத்தன்மை கொண்டதாகிவிடுகிறது. எனவே, செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய்தான் இதயத்திற்கு பாதிப்பில்லாதது அன்றி பிராண்டட் எண்ணெய்கள் அனைத்துமே தவிர்க்கவேண்டியதே!

இதயநோயாளிகள் நிலக்கடலை, முந்திரி, கடலைஎண்ணெய், தேங்காய் எண்ணெய், தேங்காயில் செய்யப்பட்ட சமையல், எண்ணெயில் பொறித்த உணவுகள், மாமிசம் முட்டை, ஐஸ்கிரீம், பாட்டிலில் அடைத்த குளிர்பானங்கள்.. போன்றவற்றை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். மது, புகையிலை, பாக்கு அறவே கூடாது. அத்துடன் எப்போதுமே அதீத உணவை தவிர்த்து மிக அளவுடன் மட்டுமே உண்ண வேண்டும்.

வெள்ளைப்பூண்டு, இஞ்சி, கருஞ்சீரகம், துளசி, தேன், சின்னவெங்காயம் ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்ப்பது இதய பாதுகாப்புக்கு உகந்ததாகும்.

ஆவாரம்பூ தேனீர், அருகம்புல்சாறு தினசரி பருக வேண்டும். பால்கலந்த தேநீரைத் தவிர்த்து பச்சை தேயிலை தேனீர் அருந்தலாம். மண்பானையில் துளசி இலையைப் போட்டுவைத்து அந்தத் தண்ணீரை எடுத்துப் பருகலாம். இளநீர் இதயத்திற்கு இதமானது. தினசரி இரவில் ஐந்து சின்ன வெங்காயத்தை மோரில் ஊறப்போட்டு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரும் யாருக்குமே ஆயுள்முழுக்க இதயபாதிப்பு ஏற்படாது.

தினசரி இரவு படுக்கும் முன்பு பாலோடு வெள்ளைபூண்டு இரண்டு பத்தைகளை சேர்த்து காய்ச்சி சாப்பிடலாம். பூண்டு குழம்பு, பூண்டு ரசம் இப்படியாக பூண்டை பல விதங்களில் சாப்பிட்டால் இதய அடைப்பு எப்போதும் வராது. தக்காளியை சமைக்காமல் துண்டாக நறுக்கியோ, ஜூஸாகவோ உட்கொள்ளலாம்.  முட்டைகோஸ், வெள்ளை பூசணி, அகத்திக்கீரை, வெண்டைக்காய், சுரக்காய் புதினா, எலுமிச்சை, நெல்லிக்காய், முள்ளங்கி, மணத்தக்காளி, காளான் போன்ற காய்கறிகள், கீரைகள் தினசரி உணவில் மாறி மாறி இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

பழங்களில் அத்திப்பழம், மாதுளை, திராட்சை, கொய்யா பழம், விளாம்பழம் பேரிக்காய், ஆப்பிள் ஆகியவை இதயத்திற்கு பலம் தரும். பேரிச்சம் பழத்தை முதல் நாள் இரவில் தண்ணீரில் ஊறப்போட்டு அடுத்தநாள் காலை கொட்டையை எடுத்துவிட்டு மிக்சியில் அடித்து கூழாக்கி சாப்பிடலாம்! இவை அனைத்தையும் கடைபிடித்தாலும், உணர்ச்சிகளை சரியாக கையாளத் தெரியாவிட்டால் பயன் இல்லை.

யோகா, பிராணாயாமம், ஆழ்நிலை தியானம், போன்றவை உணர்ச்சிகளை கையாள பேருதவியாக இருப்பதோடு இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும். இதயநோயாளிகள் உடல்பருமனாகாமல் ஏதேனும் சிறு, சிறு வேலைகளை செய்வது, நடைபயிற்சி போவது ஆகியவற்றோடு மனதில் கவலைக்கோ, கோபத்திற்கோ சிறிதும் இடம் தராமல் மகிழ்ச்சியாக இருந்தே தீரவேண்டும்.

சில துரோகங்களும், ஏமாற்றங்களும் சிலரை இதயநோயாளிகளாக்கி விடுவதுண்டு. அதனால் ஏப்படிப்பட்ட துரோகத்தையும் மன்னிக்கவும், எப்பேர்பட்ட இழப்பென்றாலும் மறக்கவும் வேண்டுவது ஆரோக்கியமாக வாழ கடைபிடித்தே தீரவேண்டிய நிர்பந்தமாகும்.

நெஞ்சம் நிறைய அன்பை நிறைத்து
முகம் மலர அன்பைப் பொழிந்து
வாய் மணக்க அன்பைச் சொரிந்து
வாழ்வாரோருக் கென்றும் நோயில்லை
துன்பமில்லை, துயரில்லை, துவழுதலில்லை
ஏனெனில் பாரதி வாக்கின்படி
அன்புடையார் இன்புற்று இருத்தல் இயல்பு


காசநோயை கருவறுப்போம்



மூட்டுவலியிலிருந்து முற்றிலும் விடுபட




புற்றுநோயை புறந்தள்வோம்




உணவில் உறையும் வாழ்வியல் அறம்

காற்றும் ஓர் உணவே



எந்தெந்த உணவுகள் நன்மை தரும்
எந்தெந்த உணவுகள் தீமை தரும்
என்ற அடிப்படைப் புரிதல்கள் அவசியம்!
அத்துடன் அவரவர் உடல்வாகுக்கு ஏற்ப நன்மை எனச் சொல்லப்படுபவை தீமையாகிப் போகும்! தீமை என கருதத்தக்கவை நன்மையாகிவிடும் என்ற யதார்த்தத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

வேர்கடலை மிக நல்லுணவு. புரதம் அதிகமுள்ளது சந்தேகமேயில்லை ஆனால் பித்த உடம்புக்காரர்கள் அறவே தவிர்க்க வேண்டியுள்ளதே! தினையும், கேழ்வரகும் ஆகச்சிறப்பான ஆகாரங்கள்; ஆனால், சூடு உடம்பு கொண்டவர்களுக்கு நல்லதல்ல! இதெல்லாம் அவரவர் அனுபவம் சார்ந்து, உடல் உணர்த்தும் உண்மைகளின் வழியே தெளிந்து பின்பற்ற வேண்டும். சிலபேர் புத்தகங்கள், அல்லது இணையதளத்தில் வழியே அளப்பரிய தகவல்களைப் படித்து நல்லநல்ல சத்தான உணவுகளை சாப்பிடுகிறேன் என அதீத உணவெடுத்துக் கொண்டு அவஸ்த்தைக்கு ஆளாகிறார்கள். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தானே!

இவர்கள் எந்நாளும் நோய்களிலிருந்து மீளவே முடியாமல் நிரந்தர நோயாளிகளாயிருப்பார்கள். வெளியிலிருந்து எவ்வளவு அரிய தகவல்கள் கிடைத்தாலும் நம் உடலும், உள் உணர்வும் கூறவரும் உண்மைகளுக்கு மட்டுமே செவி சாய்க்க வேண்டும்.  தற்போது ‘பேலியோ டயட்’ என்ற பெயரிலான ஒரு உணவு முறையை கடைப்பிடிப்போரின் கூட்டம் உலகம் முழுவதும் பரவிவருகிறது. இதைத் தமிழில் ‘ஆதிமனிதன் உணவு முறை’ என்றழைக்கிறார்கள் ‘’மாமிசம் மற்றும் புரதம் நிறைந்த கொட்டைபருப்புகள் தான் மனிதனின் பிரதான உணவு’’ என்பது இந்த தரப்பினரின் நம்பிக்கை! அந்த நம்பிக்கை பலருக்கு கைகொடுத்துள்ளது. நோய்களை வெல்ல உதவியுள்ளது. விஞ்ஞான பூர்வமாக நிருபித்துள்ளனர். ஆனால், இந்த விதியை அனைவருக்கும் பொதுவாக்கிவிடவே முடியாது. உணவுத்துறையில் நாளுக்குநாள் புதியபுதிய உணவு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.  ஒவ்வொன்றுக்கும் ஒரு வியாக்யானம் தரப்படுகிறது… இதை உண்டால் இந்தப் பலன், அதை உண்டால் அந்தப் பலன்…! பார்ப்பதையெல்லாம், கேட்பதையெல்லாம் சாப்பிட்டு பார்க்கும் ஆர்வமும், தேடலும் அதிகமாகவே காணப்படுகிறது. உடல்கெட்டு, நோய் முற்றி, நாக்குமரத்து… எந்த உணவுமே உட்கொள்ளமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட பிறகுதான் சிலருக்கு ஞானம் பிறக்கிறது!

மாறுபாடு இல்லா உண்டி மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு
என்றார் வள்ளுவர்.

அறிமுகமில்லாத உணவை, குறிப்பாக நம் மரபில் இல்லாத உணவை தயக்கமில்லாமல் மறுத்துவிட வேண்டும். பார்வைபசிக்கு ஆட்பட்டோ, பகட்டுக்காகவோ வேறுபட்ட உணவுகலாச்சாரத்தில் காலடிவைப்பது வேரறுமட்ட நிலைக்கு நம் உடலையும், உள்ளத்தையும் வைத்துவிடும்.

சமையல் கலையில் நவீனபகட்டுத்தனம், நுகர்வு கலாச்சாரத்தை அதிகரித்து, நோய்களை பெருக்கியவண்ணமுள்ளது.
‘’உணவு ஒழுக்கத்தால் உணர்ச்சிகள் கட்டுக்குள் வரும்
உணவின் தூய்மை அறிவை மெருகேற்றும்
இதனால் நினைவு தூய்மையாகும்
தூய நினைவுகள் துன்பங்களிலிருந்து விடுதலை தரும்
வீடுபேறும், மோட்ச நிலையும் கைகூடும்’’
என்பது சாந்தியோக உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது.

‘’மாறுபட்ட உணவை தவிர்ப்பதும்
பசியில்லா நிலையில் உணவை மறுப்பதும்
நூறு வைத்தியர்களால் பெறமுடியாத நன்மையைத் தரும்’’
என்பது நம் ஆன்றோர்களின் வாக்காகும்.

உணவு ஒழுக்கம் மட்டும் போதுமானதல்ல, உள்ளதுதூய்மை இல்லாத நிலையில் உட்கொள்ளப்டும் அமிர்தம் கூட விஷமாகிவிடும்!
இதற்கு நல்லதொரு உதாரணத்தை முத்தமிழ் அறிஞரும், உணவியல் நிபுணருமான கி.ஆ.பெ. விசுவநாதம் கூறுகிறார்.
‘’தாய்பாலை விடவும் உன்னதமான, உயர்வான உணவு, குழந்தைகளுக்கு கிடையாது! ஆனால் ஒரு பெண் தன் கணவனிடம் சல்லாபித்திருக்கும் நிலையில் இடையே வெளியேறியோ, அல்லது சல்லாபித்து முடித்த சிறிது நேரத்திலோ குழந்தைக்கு பாலூட்ட நேர்ந்தால் அப்போது அந்த தாய்பால் குழந்தைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். குழந்தைக்கு இதனால் மந்தபேதி ஏற்படும். இதிலிருந்து குழந்தையை மீட்க படாதபாடு படவேண்டியதாகிவிடும்’’. என எச்சரித்துள்ளார். ஆக, ஏற்கனவே நாம் வலியுறுத்திய படி உணவை பரிமாறுபவர்க்கும், உணவை ஏற்பவருக்கும் உடல்தூய்மை, உள்ளத்தூய்மை இன்றியமையாததாகும்.

அடுத்ததாக நம் உடலுக்கு வாயால் நுகரப்படும் திட உணவு, திரவ உணவை விடவும் முக்கியமான வேறொரு உணவு உள்ளது. அது நம் நாசியால் நுகர்ந்து நுரையீரலுக்கு உணவாகும் காற்றாகும்.

நம்மில் எத்தனைபேருக்கு நுரையீரலுக்கு தூய ஆரோக்கியமான காற்றுணவை தரும் வாய்ப்புள்ளது…?
நுரையீரலால் பெறப்படும் காற்றுணவே நம் உடலுக்கு மிகப் பெரும் பலத்தைத் தருகிறது! மூளையை சுறுசுறுப்பாக்குகிறது! சித்தத்தை தெளிவாக வைக்கிறது! மலைபோன்ற உறுதியை மனத்திற்குத் தருகிறது ! தன்னைத்தான்றியும் நுண் உணர்வை மேம்படுத்துகிறது. நம் உடலுக்கும், உள்ளத்திற்கும் ஓய்வில்லாமல் உழைக்கும் அளப்பரிய ஆற்றலை அள்ளி வழங்குகிறது. ஆனால் இவ்வளவு பெருமைவாய்ந்த, செலவில்லாத காற்றுணவை நம்மில் எத்தனைபேர் முறையாகவும், முழுமையாகவும் உட்கொள்கிறோம்?

நம்மில் பலர் நம் நுரையீரலின் மொத்த கொள்ளவுக்கு மூன்றில் ஒரு பங்கு காற்றையே சுவாசிக்கிறோம். அதாவது மேலெழுந்தவாரியாகத் தான் சுவாசிக்கிறோம். ஆனால் நாம் எந்த அளவுக்கு அதிகமாக காற்றை நுகர்ந்து நுரையீரலுக்கு பரிமாறுகிறோமோ அந்த அளவுக்கு பலம் பெறுவோம் ஆழ்ந்தும், நிதானமாகவும் சுவாசிப்பவனின் ஆயுள் அதிகரிக்கிறது. இது மனிதனுக்கு மட்டுமல்ல, உயிரினங்களுக்கும் பொருந்தும் கோட்பாடாகும். நிமிடத்திற்கு 38 முறை மூச்சிழுத்து விடும் முயலின் ஆயுள்காலம் 8 ஆண்டுகளே! ஆனால், நிமிடத்திற்கு 5 முறை மட்டுமே சுவாசிக்கும் ஆமையின் ஆயுட்காலம் 150 ஆண்டுகளுக்கும் மேலாகும்! நீர்வாழ் விலங்கினமான ஆமையை தெய்வாம்சம் பொருந்தியதாக கடல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆமையின் நீர் வழித்தடத்தை பின்பற்றியே பல நாடுகளை கண்டறிவார்கள் ஆராய்ச்சியாளர்கள். சராசரி மனிதன் நிமிடத்திற்கு 18 முறை சுவாசிக்கிறான். மனிதன் நடக்கும்போது வேகத்திற்கேற்ப சுவாசம் 50% அதிகரிக்கும். படுத்தாலோ சுவாம் பாதியளவாகிவிடும். ஆகவே ஒருவர் படுக்கும் நேரத்தை எவ்வளவுக்கெவ்வளவு குறைக்கிறாரோ அந்த அளவுக்கு ஆயுளும் ஆரோக்கியமும் பெறுவார். நிமிடத்திற்கு 9 முறை சுவாசிப்பவர் ஓங்கிய ஆயுள் பெறுவார் அதனால்தான் இன்றும் கூட வள்ளலார் வழியில் மரணமில்லா பெருவாழ்வுக்கு முயற்சிப்பவர்கள் தூக்கத்தை கணிசமாகவோ அல்லது முற்றாகவோ துறந்துவிடுகிறார்கள். (படுத்த படுக்கையாய் இருக்கும் நோயாளியும் கூட ஓரளவு உடல்தேறியவுடன் முதலில் உட்கார்ந்து ஓய்வெடுக்கவும், பிறகு உலாத்தியபடியே உடலைத் தேற்றவும் வேண்டும்.)  ஆன்மிகத்தில் இருப்பவர்களின் முதல்படியே வாயால் உட்கொள்ளும் உணவுகளைக் குறைத்து நாசியால் நுகரும் காற்றின் அளவை அதிகப்படுத்துவதுதான். சராசரியாக நாம் ஒருமுறை சுவாசத்தில் 500 மில்லி காற்றை உள் இழுக்கிறோம் என்றால் ஆன்மீகத்தில் இருப்பவர்கள் இதைக்காட்டிலும் ஒரு மடங்கு கூடுதலாக மூச்சிழுப்பார்கள்!

நம் நுரையிரலில் காற்றையடைத்து வெளியேற்றும் கலை ஒன்று தெரிந்தால் போதும் கடையி காலம் வரை காலனை காலால் மிதிக்கும் பேராற்றலோடு திகழலாம்!
சித்தர்களும், யோகிகளும், தவஞானிகளும் இந்தக் கலையை கைவசப்படுத்தியவர்களே!

உடம்பை பேண முடியாதவர்களால் அறிவில் உயர்ந்தோங்க முடியாது. இதனால்தான் திருமூலர்,
உடம்பால் அழியில், உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
என்றெழுதினார்.
நம்மிள் பெரும்பாலோர் உடம்பினை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை உடம்பு விஷயத்தில் அவ்வளவு அலட்சியமாக உள்ளனர். அப்படி அலட்சியப்படுத்தியவர்கள் எவ்வளவு பெரிய பதவி, அந்தஸ்த்து, செல்வம், பெருமை பெற்றிருந்தாலும் அது எதனாலும் அவர்கள் இழந்த உடல் நலனை மீட்டெடுக்கவே முடியாது.

நம் உடல் என்பது மிக உன்னதமானது. அண்ட சராசரங்களின் அம்சமும் இந்த எண்ஜான் உடம்பிற்குள் உள்ளது. இயற்கையின் பேராற்றல் நிறைந்த பொக்கிஷமே இவ்வுடல். இவ்வுடலை பேண உள்ளத்தையும் தூய்மையாக வைத்திருத்தல் அவசியம். உடல் நலத்திற்கான நிபந்தனையாகவே உள்ளத்தூய்மையை அறிந்துகொள்வோம்.
கனிகளை தின்று பிணிகளைக் கொன்று
காய்களை செறித்து நோய்களைத் தவிர்த்து
இயற்கையை ஏற்று இசைபட வாழ்ந்து
மூச்சினை உண்டு முதுமையை வென்று
தொண்டெனப்படுவதே தொழிலாய்க் கொண்டு
வண்டெனப் பறப்பதே வாழ்விய்யல் அறமாம்.

இயற்கையின் பேராற்றலும், மனித உடலும் வேறுவேற்றல்ல, இயற்கையின் பேராற்றலே இணையற்ற மருத்துவராய் நம் உடலில் வீற்றிருந்து நம்மை இயக்கிக் கொண்டுள்ளது….

உணவுக்கு மிஞ்சிய மாத்திரை மருந்துகள் இல்லை