Tuesday, April 22, 2008

Savithri Kannan Article: ராஜீவ் கொலைவழக்கு; மறைக்கப்பட்ட உண்மைகளும், மறுதலிக்கப்படும் உரிமைகளும்

Savithri Kannan Article: ராஜீவ் கொலைவழக்கு; மறைக்கப்பட்ட உண்மைகளும், மறுதலிக்கப்படும் உரிமைகளும்

ராஜீவ் கொலைவழக்கு; மறைக்கப்பட்ட உண்மைகளும், மறுதலிக்கப்படும் உரிமைகளும்

-சாவித்திரிகண்ணன்

''ரித்திரமுக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இது''

''ஈழப்பிரச்சினைக்கு ஒரு விடிவு நெருங்கிவிட்டது.''

''ஈழம் தொடர்பான இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் வரப்போகிறது,''

''உலக வரலாற்றிலேயே இல்லாத அதிசய நிகழ்வு''

இப்படி ஊடகங்களால் ஊதி பூதாகரப்படுத்தப்பட்டது பிரியங்கா-நளினி சந்தித்த நிகழ்வு. பிரியங்கா இந்தியாவின் பிரதமருமல்ல, நளினி இலங்கையின் அதிபருமல்ல. ஒரு அமைச்சராகவோ, குறைந்தபட்சம் நாடாளுமன்ற உறுப்பினராகவோ கூட இல்லாத ஒரு பெண்மணி, தன் தந்தையின் கொலை தொடர்பாக கைதாகி சிறையிலிருக்கும் மற்றொரு பெண்ணை சந்தித்ததை சரித்திரத்தையே மாற்றப்போகும் சாகஸச் செய்தியாக்கின ஊடகங்கள்!!

விற்பனை போட்டிகளால் விவஸ்தையை பறிகொடுத்தன ஊடகங்கள்!

நேரு குடும்பத்தின் வாரிசு என்பதைத் தவிர எந்த அரசு பதவியிலும், இயக்கப் பொறுப்பிலும் இல்லாத பிரியங்காவுக்கு ஊடகங்கள் தந்த முக்கியத்துவம் இன்னும் மன்னர்கால அடிமை மனோபாவங்களிலேயே மக்களை ஆழ்த்திவைக்க ஊடகங்கள் காட்டும் ஆர்வத்தை விளக்குவதாகவே இருந்தது.

நளினியின் ஆயுள் தண்டனை என்பது பத்து ஆண்டுகளைக் கடந்து 17ஆண்டுகளாக சட்டத்திற்கு புறம்பாக அரசியல் காரணங்களுக்காக நீடிக்கப்பட்டு வருவது பற்றியோ, அவருடன் கைதாகி விடுதலையான அவருடைய தாயும், சகோதரரும் கடந்த பத்து ஆண்டுகளாக வாடகை வீடுகளில் கூட வாழ உரிமையின்றி அலைகழிக்கப்டுகிறது பற்றியோ இதுநாள் வரை சிறிதும் அக்கரை காட்டாத ஊடகங்கள் இப்போது நளினி-பிரியங்கா சந்திப்பையடுத்து நளினியை உலகத்தலைவிகளில் ஒருவராக சித்தரிக்கும் அளவுக்கு சென்றுவிட்டன. அவரது குடும்பத்தாரை வலைவீசித் தேடத்தொடங்கினர்.

கிடைத்த ஓரிரு செய்திகளில் நூல்பிடித்து கற்பனைகளை விரியவிட்டு விருப்பப்படி கதை அளந்தனர். ஊடகங்களை பொறுத்தவரை ஊகங்களை செய்தியாக்கி ஒரு வார கால பரபரப்பு செய்துவிட்டு ஓய்ந்து விடுகின்றன.

ஆனால் இந்த நேரத்தில் நாம் சில உண்மைகளை உரக்கப்பேசுவது உகந்ததாயிருக்கும் என நினைக்கிறேன்.

பொதுவாக மக்கள் பலரிடமும் நிலவும் சந்தேகங்கள் சில;

''அவ்வளவு பெரிய தலைவர் கொல்லப்பட்ட வழக்கின் கொலையாளிகளான இவர்களுக்கு இன்னும் ஏன் தூக்குதண்டனையை நிறைவேற்றவில்லை?''

''உடனே தூக்கில் போடாமல் தாமதப்படுத்துவதன் காரணம் என்ன?''

''ஒரு வேளை காங்கிரஸ் கட்சியிலேயே வேறு சிலரும் இக்கொலையில் சம்பந்தப்பட்டுள்ளார்களா?'' ராஜீவ்காந்தி கொல்லப்பட்டு சுமார் 17 ஆண்டுகளாகியும் இதுபோன்ற சில கேள்விகளுக்கு மக்களிடம் பதிலில்லை.

இதற்கு பதில் வேண்டுமெனில் நாம் வழக்கு பற்றிய சில உண்மைகளை பார்க்க வேண்டும்

ராஜீவ்காந்தியை மனிதவெடிகுண்டாகச் சென்று கொன்றது தனு. அவரை இயக்கியவர் சிவராசன், அவர்களோடு இருந்த இன்னொரு பெண் சுபா. இந்த மூவரையும் பிடித்து விசாரிக்க முடியவில்லை.

அவர்கள் சயனைடு அருந்தி இறந்துவிட்டனர். தனுவும், சிவராசனும், சுபாவும் உயிர்போனாலும் பரவாயில்லையென்று சில உண்மைகளை தங்களோடு எடுத்துச் சென்றுவிட்டனர். இவர்களைத் தவிர ராஜீவ் கொலைக்கு சூத்திரதாரியாக இருந்திருக்கலாம் என்று சி.பி.ஐ அறிவித்த பிராபாகரன் , பொட்டு அம்மான் உளிளிட்ட பனிரெண்டு பேர் பிடிபடவில்லை.

ஆக, ராஜீவ் கொலையின் மிக முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்டவர்களை சி.பி.ஐ யால் நெருங்கக் கூட முடியவில்லை. இந்நிலையில் பிடிப்பட்ட 26 பேரை விசாரித்த வகையில் இவர்கள் மேற்படி இறந்தவர்கள் மற்றும் பிடிபடாதவர்களோடு சம்பந்தப்பட்டவர்கள் என்பதை உறுதியாகச் சொல்லமுடிந்ததேயன்றி கொலையில் சம்பந்தப்பட்டார்கள் என்று சொல்ல முடியவில்லை என்பதே யதார்த்தம்.

கொல்லப்பட்டவரோ நாட்டின் முன்னாள் பிரதமர் . அதுவும் நேரு குடும்பததிலிருந்து வந்த தலைவர். அவரை கொன்ற வர்களையும் உயிரோடு பிடிக்கமுடியவில்லை. அதற்கு சூத்திரதாரியானவர்களாக கருதப்படுபவர்களையும் நெருங்க முடியவில்லை என்ற சூழலில் இந்த வழக்கு விசாரணை 1991 தொடங்கி 98வரை நடந்தது.

''என்னப்பா இது? இன்னும் விசாரணை, விசாரணை என்று தனிக்கோர்டில் ரகசியமாக நடந்து கொண்டிருக்கிறது? ஆனால் தீர்ப்பு வந்த பாடில்லை?'' என இந்தியா முழுமையிலும் மக்கள் முணுமுணுக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து 1998-ஜனவரி 28-ல் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

அதில் ஒரே போடாக' 'கைது செய்யப்பட்டிருந்த அனைவருக்குமே தூக்கு தண்டனை' என்று தீர்ப்பாகியது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு தவறானது என சுட்டிக்காட்டப்பட்டு 19பேர் விடுதலையானார்கள்.

மற்ற ஏழுபேரில் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ஆகியோருக்கு தூக்கு என்றும் , ரவிச்சந்திரன், இராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை என்றும் அறிவிக்கபட்டது. (பிறகு நளினியின் தூக்குதண்டனை, சோனியாவின் சிபாரிசினால், தமிழக அரசு பரிந்துரை செய்து ஆளுநரால் ஆயுள் தண்டணையாக்கப்பட்டது) இதிலும் கூட அரசு தரப்பில் முன் வைக்கப்பட்ட சான்றுகளின் படியும், சாட்சிகளின் படியும் இவர்களில் யாருக்குமே ''ராஜீவ்காந்தியை கொல்ல ஒரு சதி தீட்டப்பட்டிருக்கிறது ''என்பது இறுதி வரை தெரியவில்லை... என்பது தான் உறுதிப்படுகிறது!

பிறகு ஏன் இவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்? என்ற கேள்விகளுக்கு எப்படி எந்த வழிமுறையில் இவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டார்கள் என்பதை விளக்கினாலே போதுமானது என கருதுகிறேன். மேற்படி தண்டனை அறிவிக்கப்பட்டவர்கள் அனைவரும் தடாசட்டத்தின்படி கைதாகி, தடா சட்டத்தின் படி ரகசியமாக விசாரணைக்கு ஆட்படுத்தப்பட்டனர்.

தடா சட்டத்தின்படி குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலம் ஒன்றை மட்டுமே வைத்து தீர்ப்பு கூறிவிடலாம்! சாட்சிகள் தேவையில்லை! குற்றத்தை நிருபிக்க வேண்டிய அவசியம் காவல்துறைக்கு இல்லை. மாறாக தங்களை நிரபராதி என நிரூபிக்க வேண்டியது குற்றம் சாட்டப்பட்டவர்களின் பொறுப்பு.

எனவே இந்த சட்ட வழிமுறைகளின் படி என்ன நடந்திருக்கிறது என்பதை நாம் யூகித்துவிடமுடியும்! குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் காவல்துறை நிர்ப்ந்தம் செய்து பெறப்பட்ட வாக்குமூலத்தை அடிப்டையாக வைத்து தான் உச்சநீதிம்னறம் மேற்படி ஏழு பேருக்கு தூக்கு தண்டனை மற்றும் ஆழுள் தண்டனைகளை அறிவித்தது.

இதே நீதிமன்றம், 'ராஜீவ்காந்தி கொலை என்பது பயங்கரவாதச் செயலாக கருதமுடியாது' என்ற கருத்தையும் கூறியுள்ளது. இந்த வகையில் இந்திய அமைதிப்படையால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தனிப்பட்ட ஒரு பெண் ஒரு சிலரோடு சேர்ந்து செய்த பழிவாங்கும் முயற்சியாகவும் இதனை கருதலாம் என நாம் பொருள் கொள்ள முடியும்.

ஆனால் இந்த கொலைக்குப் பின்னணியில் விடுதலைபுலிகள் தான் இருந்திருக்கிறார்கள் என்பதை இந்திய அரசு, புலானாய்வுத்துறை, நீதிமன்றம் போன்றவை உறுதியாக நம்பின. எனவே இப்படிப்பட்ட விடுதலைப்புலிகளை ஆதரித்தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவதின் மூலம் விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் சக்திகளுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்துவதாக தீர்ப்பு அமைய வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கலாம்.

இந்திய அரசைப் பொறுத்தவரை தமிழகத்தில் விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் சக்திகள் மீது ஒரு அழுத்தமான சந்தேகம் கொண்டுள்ளது.'விடுதலைப்புலிகள் இலங்கையைப் பிரித்து தனி ஈழம் உருவாக்கினால், அதன் எதிர்வினையாக தழிழகத்தில் விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் சக்திகள் தனித்தமிழ்நாடு கோரக்கூடும். அதற்கு விடுதலைப்புலிகளும் உதவக்கூடும்' என்பதே அது! இந்திய அரசை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள இலங்கை அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆயுதமாகிவிட்டது இந்தி சந்தேகம்.

இந்திய அரசின் பார்வையில் விடுதலைப்புலிகள் இயக்கம் வில்லனாகிப்போனது. இந்தச்சூழலில் ராஜீவ் கொலைக்கான உண்மையான குற்றவாளிகள் இறந்து விட்ட நிலையில், ''யாருக்குமே தண்டனையில்லை?'' என்ன தான் விசாரணை செய்தீர்கள் ?'' என்ற கேள்வியைத் தவிர்க்கவே இந்த ஏழு பேருக்கும் தூக்கு தண்டனையும், ஆயுள் தணடனையும் வலிந்து தரப்பட்டுள்ளது.

மேலும் ராஜீவ் கொலை சம்பந்தப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசின் வெவ்வேறு புலனாய்வு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணைகளில் அவர்களால் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை என்பதும், உண்மையை கண்டறிவதற்கான ஒத்திசைவை உருவாக்க முடியவில்லை என்பதும் மற்றொரு மறுக்க முடியாத உண்மை!

இந்த சூழலில் தான் ஏழுபேர் ராஜீவ் கொலையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் சட்டத்திற்கு அப்பபாற்பட்டு, மனித தார்மீக நெறிமுறைகளுக்கு முரணாக பதினேழு ஆண்டுகள் சிறைக்கொட்டடியில் வாடி வதங்குவது கொடுமையிலும் கொடுமையாகும். தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டு பத்தாண்டுகள் கடந்த நிலையில் இன்றா?நாளையா? என்று தெரியாமல் மரணபயத்திலேயே ஆழ்த்தி வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் நிலையோ கொடுங்கோன்மையின் உச்ச பட்சமாகும். இவர்களுக்காக இந்தியா முழுமையிலும் உள்ள மனித உரிமை அமைப்புகள் கொடுக்கும் குரல்கள், முயற்சிகள் யாராலும் பொருட்படுத்தப்படவில்லை. ஏனெனில், இந்த உண்மைகளை வெளிப்படுத்தவோ, ஒத்துகொள்ளவோ இந்திய அரசியலில் ஒரு இணக்கமான சூழல் இல்லை.

விடுதலைப் புலிகள் என்ற பூச்சாண்டி அரசியலைக் காட்டி தி.மு.க வை மிரட்டுவதற்கு தனக்கு கிடைத்துள்ள சிறந்த ஆயுதமாக ராஜீவ் கொலை வழக்கை அ.தி.மு.க கையாள்கிறது. "சில யதார்த்தமான உண்மைகளைப் பேசினால் விடுதலைப் புலிகள் ஆதரவு சாயம் பூசப்பட்டுவிடுவோமோ..." என்ற பயம் தி.மு.கவிற்கு!

"ராஜீவ்காந்தி குடும்பத்தின் மீதுள்ள விசுவாசத்தை பறைசாற்றுவதற்கு அவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்படட்டவர்களை விடுதலைப் புலிகளை தீவிரமாக எதிர்கக வேண்டும்" என்ற ஒற்றை கொள்கை தவிர ஒன்று மறியாத தமிழக காங்கிரஸ்..

"இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிரான விஷயங்களில் பொங்கிஎழுவது, அதன் வழி அரசியல் ஆதாயம் தேடுவது..." என்பதைத் தவிர வேறு விவரங்களில் அக்கரையில்லாத பாஜ.க!

ஆக, கட்சிகளும், பரப்பரப்பை மட்டுமே செய்தியாகும் ஊடகமனோபாவமும் ராஜீவ்காந்தி கொலை வழக்கின் உண்மைகளை மக்கள் உணர்வதற்கு பெரும் தடையாகிவிட்டன. இநதச் சூழலில் தடுக்கப்பட்ட உண்மைகளை தானே முன்முயற்சி எடுத்து கண்டறியும் நோக்கத்துடன் பிரியங்கா, நளினியைச் சந்தித்திருக்க கூடும் என்று யூகிக்கலாம் அவ்வளவே!

ஒரு வேளை பிரியங்கா பல யதார்த்தங்களை, உண்மைகளை தரிசிக்க நேர்ந்தாலும் கூட ஏற்கெனவே கட்டமைக்கப்பட்ட அரசியல் மாயையை கலைக்கும் விதத்தில் அதை வெளிப்படையாக பகிர்ந்து கொள்வாரா என்பது சந்தேகம் தான்!

Saturday, April 5, 2008

பிழைப்பு அரசியலும்,பேதலிக்கும் தேசியமும்

-சாவித்திரி கண்ணன்

இவ்வளவு கீழ்தரமாக நமது அரசியல்வாதிகள் செயல்படக்கூடும் என்று மொழிமொழியாக மாநிலப்பிரிவினை நடந்தபோது யாரேனும் நினைத்திருப்பார்களா?

ஆனால் பிரதமர் நேரு நினைத்திருக்க கூடும் என்று தான் தோன்றுகிறது. அதனால் தான் இந்தியா சுதந்திரமடைந்தபோது மொழிவழி மாநிலப்பிரிவினையை அவர் தீவிரமாக எதிர்த்தார். அதற்கு மாற்றாக மொத்த இந்தியாவையும் நிலம் மற்றும் நிர்வாக வசதிற்கேற்ப ஐந்தாக பிரிக்கலாம் என்ற திட்டத்தை ஆதரித்தார்.

அதன்படி இந்தியாவை வடக்கு, கிழக்கு, மேற்கு, மத்தியபகுதி, தட்சிணப்பிரதேசம் என ஐந்தாக பிரிப்பது பலவகைகளிலும் அனுகூலமாயிருக்கும் என்றார்.

ஆனால் இந்தியா முழுக்க அதிகாரத்திற்காக தவம் கிடந்த அரசியல்வாதிகளும், மொழிஉணர்வாளர்களும் மொழிவழிமாநிலம் தேவையென்று பெரும்போரட்டத்தில் இறங்கினர்.

வங்கம்,வங்க மக்களுக்கே,

பஞ்சாப் பஞ்சாபியருக்கே,

ஆந்திரா தெலுங்கர்களுக்கே,

என்ற குரல்கள் தீவிரமடைந்தபோது நேரு, ''மொழி வழி மாநில கோரிக்கையாளர்களுடன் தெருச்சண்டைக்கும் தயார்'' என்றார். தமிழகத்திலும் ம.பொ.சி போன்றவர்கள் காங்கிரஸிற்குள்ளேயே தீவிரமாக மொழிவழி மகாணத்திற்காக அணிதிரட்டியபோது காமராஜரும், ராஜாஜியும் அதனை எதிர்த்தனர்.

அன்றைய சென்னை ராஜதானியிலே ஆந்திராவின் பெரும்பகுதிகளும், மலையாள பிரதேசங்களும், கர்நாடகாவின் கணிசமான பகுதிகளும் இருந்தன.''அந்த நிலை அப்படியே தொடர்ந்திருக்க கூடாதா?'' என்று வரலாற்றை திரும்பி பார்த்து வருந்தாமல் இருக்கமுடியவில்லை.

மொழிவழி மாநில பிரிவினைக்கு உடன்பட்டதால் சுதந்திரமடைந்த பின்பு சுமார் பத்தாண்டுகள் எல்லை பிரச்சினைகளுக்கே எல்லா ஆற்றலும், கவனமும் வீணடிக்கப்பட்டது.

அடுத்ததாக 60களில் தொடங்கி ஆற்று நீர் பிரச்சினை அல்லோலகலப்படுகிறது. இது இன்றும் தீர்ந்த பாடில்லை.

முல்லை பெரியாறு பிரச்சினை வட தமிழகத்தை பாலைவணமாக்கி கொண்டுள்ளது. காவேரி பிரச்சினையோ தீர்வுக்கே உட்படாமல் திசைமாறிப் பயணப்பட்டுவிட்டது.

ஒகேனக்கல் தண்ணீரில் கூட்டுக்கூடிநீர்திட்டம் என்பது கர்நாடகம் நமக்களிக்கும் கவேரி தண்ணீரை கடலில் வீணடிப்பதற்கு மாற்றாக குடிதண்ணீருக்குப் பயன்படுத்தும் திட்டம் தான்!

பெரும்மழை, வெள்ளம் ஏற்படும் காலங்களிலெல்லாம் தமிழகத்திற்கு கிடைக்கும் காவேரி நீரில் கணிசமான அளவு கடலில் வீணாகிறது. ஏற்கெனவே திருச்சி, தஞ்சை போன்ற மாவட்ட மக்களுக்கெல்லாம் காவேரி நீரே குடிநீராகி தாகம் தீர்த்து கொண்டுள்ளது.

வறட்சியில் வாடும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு இப்போது 1334 கோடியில் திட்டமிட்டிருக்கும் கூட்டுக் குடிநீர் திட்டம் என்பது முப்பதாண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தியிருக்கவேண்டிய ஒன்றாகும்!

இப்போது தமிழகத்தின் தலையாய பிரச்சினையே பக்கத்து மாநிலங்கள் காட்டும் பகை உணர்வை சமாளிப்பதாகிவிடட்டது.

தேசிய இனங்குளுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று கேட்க முடிந்தவர்கள் அதற்கேற்ப தங்களை தகுதிபடுத்திக்கொள்ளவில்லை.

''சுதந்திரம் பெறுவதற்கே இந்தியர்களுக்கு இன்னும் தகுதிபிறக்கவில்லை...'' என்று 1947-ல் அறுதியிட்டு சொன்னாரே பெரியார் ஒருவகையில் அது சரிதானோ என்றும் நினைக்கத்தோன்றுகிறது.

''என்னிடம் அனுமதி கேட்டு ஏன் செயல்படவில்லை'' என்கிறது கர்நாடக தரப்பு.

''1998-ஆம் ஆண்டு பெங்களுரு குடிநீர் திட்டம் தயாரானபோதே தமிழகமும் தன்பங்குக்கு காவேரி நீரில் குடிநீர்திட்டங்களை செயல் படுத்திக்கொள்ளலாம் என இரு மாநிலமும், மத்திய அரசும் இணைந்து நடத்திய முத்தரப்பு பேச்சு வார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்டதுதானே!'' என்பது தமிழகத்தின் வாதம்!

மேலும் ஒகேனக்கல் என்பது தமிழகத்திற்கானது என்று சந்தேகமில்லாமல் ஒத்துக்கொள்ளப்பட்டு இதுநாள் வரை உரிமை அனுபவித்து வரும்சூழலில் ஓட்டு அரசியல் இந்தியதேசிய இறையாண்மைக்கே வேட்டு வைக்கும் வகையில் விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கிறது.

முதலில் தேர்தல்கள் முக்கியமா? தேசியம் முக்கியமா? என்று தேசிய கட்சிகள் திட்டவட்டமான ஒரு முடிவுக்கு வந்துவிட்டால் நாட்டுக்கு நல்லது.

கர்நாடத்தில் ஒருவேஷம், தமிழகத்தில் ஒருவேஷம் என்று போட்டுக் கொண்டு இனியும் காலந்தள்ள முடியாது.

2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் கர்நாடக முதல்வர் தரம்சிங் ஒகேனக்கல் பிரச்சினையை கையில் எடுத்தார். தேர்தல் முடிந்ததும் கைவிட்டார். இப்போது பா.ஜ.கவின் எடியூரப்பாவால் இது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

'தமிழர்மீது துவேஷம்' என்பது கர்நாடக அரசியலில் கதாநாயக அந்தஸ்து கோரும் அரசியல்வாதிகளால் கனல் மூட்டிவளர்க்கப்பட்டு வருகிறது. இதன் விளைவு தமிழகத்திலிருந்து வரும் பேருந்துகளை அடித்துநொறுக்குவது, தமிழ்திரைப்படங்கள் ஓடும் திரையரங்குகளை தாக்குவது, தமிழ் தினசரி அலுவலகங்களை தாக்குவது, தமிழ்சங்கத்தை தாக்குவது, தமிழ்சேனல்களை முடக்குவது என தறுதலையாய் தாண்டவமாடுகிறது.

இதன் எதிர்வினை தமிழகத்திலும் ஆரம்பித்துவிட்டது. கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் நடத்தும் சில ஹோட்டல்கள் தாக்கப்பட்டுள்ளன.

கன்னடபள்ளிகள் மீதான தாக்குதல்,கன்னட சேனங்களின் தடை, தமிழ்திரைப்பட கலைஞர்கள் ஒருநாள் உண்ணாவிரதம் போன்றவற்றால் பரஸ்பர பகை உணச்சிகளே மேலோங்குகின்றன.

ஆனால் இப்போது நாம் திட்டவட்டமாக ஒரு தீர்வை எடுத்தாக வேண்டும். தேசியத்தை கட்டிக்காக்க முடியாவிட்டால் அந்த தேசிய கட்சிகளில் தமிழர்கள் அங்கத்தினர்களாக தொடர்வதில் அர்த்தம் தான் என்ன?

மார்ச் 20ந் தேதி எடியூரப்பா ஒகேனக்கல் வந்து பிரச்சினை ஏற்படுத்திய போது, ''அவரை சந்தித்து உண்மை நிலையை விளக்குவோம் ''என்ற தமிழக பா.ஜ.க வினரால் இன்றுவரை அதை செயல்படுத்தமுடியவில்லை

அகில இந்திய தலைமையும் இந்த அநியாயத்தை வேடிக்கைபார்க்கிறது. அதேபோல் திமிழககாங்கிரசார் தமிழக சட்டமன்றத்திலும் பத்திரிக்கைகளிலும் மட்டுமே தங்களை வெளிப்படுத்த முடிகின்றதேயன்றி கர்நாக காங்கிரஸாரிடமோ , டெல்லி தலைமையிடமோ உண்மைகளை உரத்துச்சொல்ல முடியல்லை.

இது தான் கம்யூனிஸ்டுகளின் நிலைமையும்!

அரசியல் பிழைப்பாகி போய்விட்டது என்றால், அரசியல்வாதிகளிடமிருந்து பிழைத்துக் கொள்வது பற்றி மக்கள் யோசிக்கவேண்டியதாகிவிடும்