Tuesday, December 14, 2010

சமச்சீர் கல்வியா? தரமான கல்வியா?

_ சாவித்திரி கணணன்

மச்சீர் கல்வி குறித்து கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது.

''அடடா இந்தக் கல்வி திட்டம் வந்தால் பிள்ளைகளின் கல்விப் பிரச்சனைகள் தீர்ந்தது. இனி பிள்ளைகளை சேர்க்க அப்ளிகேஷன் வாங்குவதற்காக நீண்ட க்யூ வரிசைகளில் நிற்க வேண்டியதில்லை. சிபாரிசுக்கு அலைய வேண்டியதில்லை. டொனேசனுக்கும், பீஸுக்கும் நகைகளை அடமானம் வைப்பது, கடன் வாங்குவதெல்லாம் இனி இல்லவே இல்லை'' என இலட்சக்கணக்கான பெற்றோர்கள் பரவசமாக காத்திருந்தனர். எளிய நடுத்தர வகுப்பினரின் எதிர்பார்ப்புகள் இப்படியென்றால் அரசு பள்ளிக் கூடங்களில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களோ இனி நம்ம குழுந்தைகள் படிக்கும் அரசு பள்ளிக் கூடங்களெல்லாம் தனியார் பள்ளிகளின் தரத்துக்கு உயரப் போகிறது. ஆசிரியர்கள் பற்றாக்குறை என்று பெற்றோர்கள் - ஆசிரியர்கள் சங்கத்தினர் தனியாக வாத்தியார்களை வேலைக் கமர்த்தி சம்பளம் அழ வேண்டியதில்லை பள்ளிக்கூடங்களுக்கு கழிவறை வசதிகள், குடிநீர் வசதிகள் வந்துவிடும். டேபிள், சேர், போர்ட் எல்லாம் பிரமாதமாக இருக்கும். இஸ்டத்துக்கு பள்ளிக்கூடத்துக்கு வரலாம், போகலாம், விருப்பம் இருந்தால் வகுப்பறைகளுக்கு போய் பாடம் எடுக்கலாம் இல்லாவிட்டால் சும்மாவது உட்காரலாம் என்ற ரக ஆசிரியர்கள் இனி இருக்கமாட்டார்கள் என கனவில் மிதக்க ஆரம்பித்தார்கள்.

பல ஆண்டுகளாக சமச்சீர் கல்விக்கு குரல் கொடுத்த கல்வி ஆர்வலர்களோ ''அட, சுமார் நாற்பது வருஷ கனவு இப்போதாவது நிறைவேறினால் மகிழ்ச்சி தான். நடக்கபபோவது வரலாற்று சாதனை தான்..'' என அக மகிழ்ந்தனர்.

ஆமாம் சமச்சீர் கல்வி என்றால் இந்த நாட்டில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் தரமான சமமான கல்வி உறுதிபடுத்தப்படும். பணமோ, அந்தஸ்தோ கல்வி தரத்தை தீர்மானிக்காது. வீட்டுகருகிலுள்ள பள்ளிக் கூடத்திற்கு சென்று படிப்பது என்பது ஒவ்வொரு குழந்தைகளுக்குமான அடிப்படை உரிமை என்பது தான் எளிமையான அர்த்தமாகும். இவை இன்றைக்கு தமிழக அரசால் அறிமுகப்படுத்தி அமல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறும் 'சமச்சீர் கல்வி' யில் சாத்தியப்பட்டுள்ளதா? இனி சாத்தியப் படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளாவது தென்படுகிறதா? என்பது தான் இன்று அனைவரும் உரக்க எழுப்பத் தொடங்கியுள்ள கேள்வியாகும்.

2006 - தேர்தலில் சமச்சீர்கல்வியை அறிமுகப்படுத்துவோ என்று வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்தது தி.மு.க ! முத்துக்குமரன் கமிட்டி இதற்காக அமைக்கப்பட்டது. இந்தக் கமிட்டியும் பல நிர்பந்தங்களுக்கு உட்பட்டே, அரசை அனுசரித்து ஒரு அறிக்கை தந்தது. அந்த அறிக்கையானது தற்போதைய கல்வித் திட்ட அமல் முறையில் உள்ள குறைபாடுகள் எனனென்ன? அவற்றை சமச்சீர்கல்வி அமலாக்கத்தின் மூலம் எவ்வாறு சீர்படுத்தலாம் என்பது பற்றி மூச்சு கூட விடவில்லை. குறிப்பாக கல்வி கட்டணங்கள் தொடர்பாக பெற்றோர்கள் மத்தியிலுள்ள குமுறல்கள், அரசு பள்ளிகளின் அவலநிலை குறித்த பெற்றோர்களின் கடும் அதிருப்தி... இவை பற்றியெல்லாம் கவனமாக தவிர்த்து விட்டது. பாவம் முத்துக்குமரன்! தன் அறிக்கை குப்பை கூடைக்கு போய்விடக்கூடாது என்று அவர் கவலைப்படக் கூடாதா என்ன?

ஆனாலும் கூட முத்துக்குமரன் கமிட்டி சில பயனுள்ள ஆய்வுகளைச் செய்து நல்ல சில ஆலோசனைகளைத் தந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால் அதையும் கூட ஏற்றுக் கொள்ள மனம் வேண்டுமே தமிழக அரசுக்கு?

தமிழக அரசு சமச்சீர் கல்வியை அமலாக்கப் போகிறேன் என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து குழந்தைகளுக்கும் அடிப்படை கல்வி கற்பது உரிமை என்பதை சட்டமாக்கியுள்ளது. இந்தச் சாதகமான சூழலைப் பயன்படுத்தி சமச்சீர் கல்வி அமலாக்கத்தை தமிழக அரசு விரைவுபடுத்தலாம். ஆனால் அப்படி ஒரு அக்கரை இருந்தால் தானே....!

மற்றொரு பக்கம் தனியார் பள்ளிகள் சமச்சீர் கல்வி என்பதை தங்களுக்கு தோண்டப்படும் சவக்குழிகளாகப் பார்க்கிறார்கள்.ஆனால் உண்மையில் தமிழக அரசு தனியார் பள்ளிகளை பகைத்துத் தான் சமச்சீர் கல்வியை அமலாக்கம் செய்ய வேண்டும் என்பதில்லை. அவர்கள் ஒத்துழைப்பையும், இணக்கத்தையும் பெற்றே அமல் செய்யலாம்.

முதலாவதாக மக்கள் நம்பிக்கையைப் பெற்று செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு உரிய மரியாதை தந்து அவர்களை சமச்சீர்கல்வி அமலாக்கத்தின் பங்காளிகாக மாற்ற வேண்டும். இது நடக்க முடியாதது அல்ல. இதற்கு பொறுமையுஃம், ராஜதந்திரமும் தேவை. கூடவே அரசின் நம்பகத் தன்மையும், நோக்கமும் சந்தேகத்கிடமின்றி இருக்குமானால் தனியார் பள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைத்தே தீரும்!

ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக உள்ளது. கோவிந்தராஜன் கமிட்டியை அமைத்து தனியார் பள்ளிகளின் கட்டணத்தை தமிழக அரசு வரையறை செய்தது. நடைமுறையில் இது படுதோல்வியில் முடிந்துவிட்டதோடு பள்ளிக் கல்விச் சூழலையே சீர்கெடுத்துவிட்டது. இவை தனியார் பள்ளிகளை அரசுக்கு எதிராக ஒற்றுமை கொள்ளச் செய்ததுடன் பொதுநலன்களுக்கு எதிரான நிலையில் நிறுத்தி விட்டது. அக்கரையுடனும், பொறுப்புடனும் கையாளப் படவேண்டிய கல்விக் கட்டண அணுகுமுறையை சட்டம், அதிகாரம் சாத்தியப் படுத்த முடியாது.

தற்போதைய கல்வி ஆண்டிற்கு தமிழக அரசு ஒன்றாம் மற்றும் ஆறாம் வகுப்பிற்கான சமச்சீர் கல்வி பாடத்திட்டதை மட்டுமே அமல் படுத்தியுள்ளது. இதன் மூலம் தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகள் இரண்டிலுள்ள இந்த வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரை விதமான பாடத்திட்டத்தை கற்கிறார்கள் என்பதற்கு மேல் திருப்தி பட்டுக்கொள்ள இதில் ஒன்றுமில்லை அதிலும் கூட பல தனியார் பள்ளிகள் அரசு தந்த பாடத்திட்டத்தை அமலாக்கவில்லை என்று கூறப்படுகிறது. அப்படியிருக்க இனி அடுத்த ஆண்டில் மேலும் சில பாடத்திட்டங்களை வடிவமைப்பதன் மூலம் கல்வித் துறையில் என்ன பெரிய மாற்றத்தை உருவாக்க இயலும்?

இதையெல்லாம் கவனத்தில் கொண்டு மதிப்பீடு செய்தால் சமச்சீர் கல்வி என்பது நமக்கு வெகுதூரம் இருப்பதாகத் தான் உணரமுடிகிறது. அது பூமிக்கும் நிலவுக்குமான தூர இடைவெளியா? அல்லது பூமிக்கும் நட்சத்திரத்திற்குமான தூர இடைவெளியா? என்பதை நாம் பட்டிமன்ற பேச்சாளர்களிடம் விட்டுவிட்டு அடுத்த விஷயத்திற்கு வருவோம்.

மத்திய அரசு அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு பல நூறுகோடிகள் ஒதுக்கிறது. மாநில அரசும் வரிவருவாய் மூலம் கல்விக்கான பெறும் நிதியைப் பெறுகிறது. உள்ளாட்சி அமைப்புகளும் கல்விக்காக பெரும் நிதியை வரி மூலமாக வசூலிக்கிறது. இவை முறையாக கல்விக்காக அக்கரையுடன் செலவழிக்கப்பட்டால் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்காது. அடிப்படை தேவைகள் பூர்த்தியாகும்! அடுத்ததாக தரமான கல்விக்கும், பொறுப்பான ஆசிரியர்களுக்குமான உத்திரவாதமே தேவைப்படுகிறது. அரசு பள்ளிக் கூடங்களில் தரம் உத்திரவாதப்படுத்தினால் தனியார் பள்ளிகள் பற்றிய கவலையை அதை நடத்துபவர்களுக்கு மட்டுமே உரித்தாக்கி விட்டு விடலாம்!

தனியார் பள்ளிக் கூடங்களை விட தரமான சிறந்த கல்விச்சூழலை அரசாங்கத்தால் தரக்கூடும் என்ற நிலைமை தான் வேண்டும். பள்ளிக் கல்வித்துறையில் இப்படியானதொரு நிலையைத்தான் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்கள் ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள், ஐ,ஐ,டி போன்றவை அரசாங்கத்தால் தானே நடத்தப்படுகின்றன. அப்படியிருக்க பள்ளிக் கல்வித்துறையை மட்டும் சிறப்பாக்க முடியாதா என்ன?

டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கார் திரைப்படம்

அவநம்பிக்கை விதை

-சாவித்திரிகண்ணன்

தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்து தனிப்பெரும் அறிஞராக, ஆறறலாளராக விளங்கிய அம்பேத்கர் பற்றிய படம் காலம் கடந்து இப்போதாவது வெளிவந்துள்ளதை பாராட்ட வேண்டும்.

சாதி ஏற்றத்தாழ்வுகளால்-உயர்சாதி இந்துக்களால் அம்பேத்கார் பெற்ற அவமானங்கள், பரோடா மன்னர் உதவியில் அவர் அமெரிக்கா, லண்டன் சென்று படித்து பாரிஸ்டராவது போன்றவை இயல்பாக சித்தரிக்கப் பட்டுள்ளன, டாக்டர் அம்பேத்கரை நிஜமாகவே நாம் பார்ப்பது போன்ற உணர்வை தன் நடிப்பாற்றலால் ஏற்படுத்துகிறார் நடிகர் மம்முட்டி. இடைவேளை வரை சரியாக எடுக்கப்பட்ட படம் அதன்பிறகு தவறான வரலாற்று புரிதலோடு நகர்கிறது.

அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையிலான வரலாற்று நிகழ்வுகள் தவறான அரசியல் உள்நோக்கத்தோடு திரித்து சொல்லப்பட்டுள்ளது. பூனா ஒப்பந்தம் என்பது என்ன?

அம்பேத்கார் பிரிட்டிஷாரிடம் தலித்களுக்கென தனித்தொகுதிகள், இரட்டைவாக்குரிமை கேட்டார். அப்படிப் பெறுவதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சனை முடிவுக்கு வரும் என நினைத்தார். இதற்கு சீக்கியர்களும், மூஸ்லீம்களும் இரட்டை வாக்குரிமை சலுகை பெற்றிருப்பதை முன்மாதரிியாக காட்டி வாதம் வைத்தார்.

காந்தி இந்த வாதத்தை ஏற்கவில்லை. ஆயினும் தனித்தொகுதிகள் தலித்து களுக்கு தரப்படுவதை ஏற்றுக்கொண்டார். அம்பேத்கார் 197 தொகுதிகள் கேட்டார். பிரிட்டிஷ் அரசு 71 தொகுதிகள் மட்டுமே தர ஒப்புக்கொண்டது. ஆனால் காந்தியின் தலையிட்டால் தான் தலித் மக்களுக்கு 147 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த வரலாறு இந்த திரைப்படத்தில் திட்ட மிட்டு மறைக்கப்பட்டுள்ளது. மேலும் இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் இரட்டை வாக்குரிமை பெற்று இருந்ததால் தீண்டாதாருக்கு அவ்வுரிமை வேண்டும் என்ற போது, "இஸ்லாமியர்களும், சீக்கியர்களும் எப்போதும் இஸ்லாமியர்களாகவும் சீக்கியர்களாகவுமே இருக்கப் போகிறவர்கள் ஆனால் இன்று தீண்டப்படாதவர்களாக இருப்பவர்கள் எப்போதும் தீண்டப் படாதவர்களாகவே இருந்துவிட வேண்டுமா? தீண்டப்படாதவர்களை பெரும்பான்மை இந்து சமூகத்தின் பிரிக்க முடியாத, சமமதிப்புள்ள ஒர் அங்கமாக மாற்றுவதே என் நோக்கம், ஆனால் இந்தச்சலுகைகள் அவர்களை என்றென்றும் பெரும்பான்மை சமூகத்திடமிருந்து பிரித்து விடும். அது நிரந்தர பகை உணர்வை விதைத்து விடும்" என்றார் காந்தி இந்த செய்தியும் இதில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் காந்தி தாழ்த்தப்பட்டவர்களை எதிர்க்க மூஸ்லீம்களை தூண்டி பயன்படுத்தி கீழ்த்தர அரசியலில் இறங்கியதாகவும் ஆதாரமில்லாத அப்பட்டமான பொய் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

அரசின் சலுகைகள் மூலம் சமூக மாற்றம் நிகழ்ந்துவிடும் என அம்பேத்கர் நம்பினார். ஆனால் அந்த சமூக மாற்றத்தை இந்து சமூகத்திலிருந்து கொண்டு போராடுவதன் மூலமும், உயர்சாதி இந்துக்களின் மனசாட்சியை உலுக்கி மாற்றம் கொள்ள வைப்பதன் மூலமும் சாத்தியமாக்கலாம் என்றார் காந்தி.

எரவாடா சிறையில் காந்தி உண்ணாவிரதத்தை அறிவித்த போது சொன்ன வாசகம் இது தான். "ஹரிஜன மக்களின் இன்றைய நிலைபாடுகளுக்கு காரணம் உயர்சாதி இந்துக்கள். அவர்கள் தங்கள் இதயத்தை தூய்மை படுத்திக் கொண்டு மனமாற்றம் கொள்ளாவிடில் என்னைத்தியாகம் செய்து விட வேண்டியது தான்" என்றார். ஆக, காந்தியின் உண்ணாவிரதம் என்பது உயர்சாதி இந்துக்களிடம் மன மாற்றம் வேண்டி மேற்கொள்ளப்பட்டதேயின்றி தலித்துகளுக்கு எதிரானதல்ல' என்பதே உண்மை!

அப்போது இந்தியாவில் நடந்த நிகழ்வுகளை பிரபல அமெரிக்க பத்திரிக்கையாளர் லூயி பிஷர் பதிவு செய்துள்ளார். அதை அப்படியே இங்கே பார்ப்போம்.

"ஹிந்துக்களின் மனசாட்சியை உறுத்தி செயலுக்கு தூண்டுவதே இந்த உபவாசம்' என காந்தி பகிரங்கமாக அறிவித்த ஷணத்திலிருந்து பல அதிசயத்தக்க நிகழ்வுகள் நடந்தேறின. 'நம்மை சீர்த்திருத்துவதற்காக தன்னைத் தானே வருத்திக்கொள்ளும் இந்தப் புனிதரை நாம் கொன்று விடப்போகிறோமா?' என இந்துக்களிடம் பரவலான கேள்வி எழுந்தது. பெருநகரங்கள், சிற்றூர்கள், கிராமங்கள், பட்டிதொட்டியெங்கும் இதே விவாதமானது. உண்ணாவிரதத்திற்கு முந்தினநாளே அகமதாபாத்தில் உள்ள 12 பெரிய கோயில்கள் திறந்துவிடப்பட்டன, அடுத்தடுத்து பல்வேறு ஊர்களில் நூற்றுக்கணக்கான கோயில்கள் திறந்து விடப்பட்டன. அவற்றின் வாயில்களில் பிராமணர்கள், பண்டிதர்கள் ஹரிசனமக்களை கைகூப்பி வரவேற்றார்கள்.

அப்போது கோயில்களின் வாயில்களில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 98% வாக்குகள் தாழ்த்தப்பட்டமக்களின் ஆலயபிரவேசத்திற்கு ஆதரவாக இருந்தது. 2% மட்டுமே எதிராக இருந்தது. இது மட்டுமல்ல, கிராமங்களில் கிணறுகளில் தண்ணீர் எடுக்க அனுமதி, பொதுவீதிகளில் நடமாட அனுமதி என ஆங்காங்கே மக்கள் அமைப்புகள், சங்கங்கள் தீர்மானம் இயற்றி நடைமுறைக்கு வந்தன. தினசரி இது போன்ற நூற்றுக்கணக்கான நிகழ்வுகளை பத்திரிக்கைகள் பட்டியலிட்டு பிரசுரித்தன." ஆக, இதன் மூலம் உயர்சாதி இந்துக்களின் மனதில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவான நியாயமான சிந்தனைகளை உருவாக்குவதில் காந்தியின் உண்ணாவிரதம் காத்திரமான பங்களிப்பை ஆற்றியது என்பதே வரலாற்று உண்மை.

மேலும் முதலில் காந்தியை சந்தேகித்த அம்பேத்கார் - காந்தியை எதிரியாக கருதிய அம்பேத்கர் - பிறகு மனம் மாறினார் என்பதற்கு செப்டம்பர் 25ந்தேதி புனா ஒப்பந்தத்திற்கு பிறகு மும்பையில் நடந்த மாநாட்டில் அவர் ஆற்றிய உரையே சான்று.

"நான் ஒன்றை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் நான் வியப்புற்றேன். மிக, மிக வியப்புற்றேன். அவரை நான் சந்தித்த போது எங்கள் இருவருக்கும் எவ்வளவு ஒற்றுமை இருக்கிறது என்பதைக் கண்டு வியப்புற்றேன். அவரிடம் நாங்கள் போய்ச் சொன்ன எல்லாபிரச்சினை களிலும் அவர் எனக்கு சாதகமாகவே இருந்தார். மிகவும் சங்கடமான ஒரு நிலையிலிருந்து என்னை விடுவித்ததற்காக, மகாத்மாஜீக்கு நான் பெரிதும் நன்றி செலுத்துகிறேன்" என்றார்.

மேலும் புனா ஒப்பந்தத்தில் அம்பேத்கரின் இரட்டை வாக்குரிமை என்ற கோரிக்கை தவிர மற்ற எல்லா கோரிக்கையையும் தான் ஏற்றுக் கொண்டதோடு காங்கிரஸையும், இந்திய மக்களையும் ஏற்க வைத்தார் காந்தி. அன்று இரட்டை வாக்குரிமை வழங்கப்பட்டிருந்தாலும் தாழ்த்தப் பட்டவர்களில் படித்தவர்கள், சொத்துரிமை உள்ள மிக மிகச்சிலரே ஓட்டுபோடும் உரிமை பெற்றிருப்பார்கள். அது 2% கூட இருந்திருக்காது, இதை அம்பேத்கரும் உணர்ந்திருந்தால் தான் அந்த கோரிக்கையை விட்டுவிட்டார்.

மேலும் காந்தி உண்ணவிரதம் இருக்காமல் இப்படி ஒரு சட்டம் அமலுக்கு வந்திருந்தால் அது மற்ற இந்துக்களின் எதிர்ப்பை பெற்று நடைமுறைப்படுத்துவதே சிக்கலாகியிருக்கும் என்பதை அம்பேத்கர் அறிந்திருந்தார்.

இதனால் தான் அவர் காந்தியிடம், "நீங்கள் மற்ற போராட்டங்களை எல்லாம் விட்டு விட்டு தாழ்த்தப்பட்டவர்களுக்காக மட்டுமே போராட வந்தால் நாங்கள் உங்களைத் தலைவராக ஏற்போம்" என்றார்.

தாழ்த்தப்பட்ட மக்களிடம் நேரடியாக இறங்கி களவேலை பாரத்தவர் காந்தி. அவரது பாதிப்பால் அன்று லட்சக்கணக்கான அந்தஸ்துள்ள உயர்சாதி இந்துக்கள் கிராமங்களுக்கும், சேரிகளுக்கும் சென்று ஹரிஜன சேவையில் தங்களை அர்பணித்தார்கள். ஆகவே காந்தி தான் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்திய மக்களின் தனிப்பெரும் தலைவராக இருந்தார். ஆனால் அம்பேத்கரோ ஒரு மாபெரும் அறிஞர். அறிவு ஜீவி, பெரும் சிந்தனையாளர். ஆனால் அவர் தாழ்த்தப்பட்ட மக்கள் திரளின் தலைவராக ஒரு போதும் திகழ்நதவரல்ல, அவர் தான் போட்டியிட்ட தொகுதியிலேயே மக்களால் தோற்கடிக்கப்பட்டார்.

காந்தியையும், காங்கிரஸையும் எதிர்த்த நிலையிலும், அவரை அரசியல் சட்ட வரைவு குழுவின் தலைவராகவும், இந்தியாவின் சட்ட அமைச்சராகவும் ஆக்கி கௌரவப்படுத்தியது காந்தியும் நேருவும் தானே! அது மட்டுமின்றி வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என சட்டம் கொண்டு வந்து அனைத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் வாக்குரிமை வாய்ப்பு ஏற்படுத்தியது காங்கிரஸ் தானே!

ஆனால் இந்த படத்தில் காங்கிரஸையும், காந்தி, நேருவையும் தாழ்த்தபட்டவர்களின் வில்லனாக சித்தரித்துள்ளனர். பிரிட்டிஷ் இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கும், சீக்கியர்களுக்கும் வழங்கப்பட்டு வந்த இரட்டை வாக்குரிமை உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் காங்கிரஸ் அரசு இந்திய சுதந்திற்குப் பிறகு வாபஸ் பெற்றது. ஆனால் காந்தியால் அங்கீகரிக்கப் பட்ட தாழ்த்தப் பட்டோருக்கு தனித்தொகுதிகள் என்ற சலுகையை ரத்து செய்யவில்லை. அது இன்று வரை தொடர்கிறது.

இந்த உண்மைகள் இப்படத்தில் இருட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மாறாக திட்டமிட்டு காந்தி, நேரு போன்ற தலைவர்கள் வரும் காட்சிகளில் அவர்களின் இமேஜை தகர்க்கும் படி காட்சி அமைப்புகள், வசனங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. காந்தி, நேரு பாத்திரத்திற்கு தேர்வான நடிகர்களின் தேர்வே இதற்கு அத்தாட்சி.

அரசியல் சட்டவரைவு குழு தலைவராவதற்கும், சட்ட அமைச்சராவதற்கும் அம்பேத்கரை நேரு கெஞ்சி பேசி சம்மதிக்க வைப்பதாகவும், இந்து திருமணச் சட்டத்தை அமல்படுத்த மறுத்தவர் போலவும் காட்டியிருப்பது ஏற்புடையதல்ல, உண்மைக்கு மாறானதாகும், இந்து திருமணசட்டத்தை ஜனநாயக ரீதியில் எதிர்ப்புகளை எதிர்கொண்டு நேருதானே அமல்படுத்தினார்! காலம் கனிவதற்கா சிறிது நேரம் எடுத்துக்கொண்டார். அதற்குள் பொறுமையிழந்து, அதிருப்தியுற்று அம்பேத்கர் பதவி விலகினார்.

அம்பேத்கர் காந்தியை தேடிவரும் போது காந்தி வேண்டுமென்றே அம்பேத்கரை கண்டும் காணாமல் அவமதிப்பதாகவும், பேசுவதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது, அதோடு அம்பேத்கர் பேசும் போது அவரை காந்தி முறைத்து பார்ப்பது போலவும் காட்சி படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல காந்தி அம்பேத்கரை புனாவில் வசிக்கும் முற்போக்கு பிராமணர் என கருதியதாகவும் வசனம் இடம்பெற்றுள்ளது. இது அப்பட்டமான பொய். தன்னை சந்திப்பதற்கு முன்பே அம்பேத்கரை பற்றியும் அவருடைய மேதமை, போராட்டங்கள் பற்றியும் காந்தி நன்கு அறிந்திருந்தார். ஹரிஜன் பத்திரிகையில் எழுதியிருந்தார்.

மொத்தத்தில் இந்த திரைபடத்தில் காந்தியை அழிச்சாட்டியம் செய்யும் அழுகுனிபேர்வளிபோலவும், நேருவை உதவாக்கரையான உம்மாணமூஞ்சி போலவும் சித்தரித்துள்ளனர். என்றென்றும் உலக அரங்கில் ஒரு ஆதர்ஷ புருஷராக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு போராடும் தலைவர்களுக்கு வழிகாட்டியாக, தலாய்லாமா, மார்டின் லூதர்கிங், தென்கொரியாவின் ஹாம்ஸோக்ஸோன், ஜாம்பியாவின் கென்னக்காவுண்டா, ஆப்பிரிக்காவின் குவாமேருக்மா, நெல்சன் மண்டேலா, அமெரிக்க அதிபர் ஓபாமா உள்ளிட்ட உலகின் முக்கியஸ்தர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்துகொண்டிருக்கும் உத்தமர் காந்தியை இவ்வளவு உள்நோக்கங் களோடு இழிவுபடுத்தவேண்டிய அவசியமென்ன? ஆசியாவின் ஜோதி என்றும், வசிகரமிக்க தலைவரென்றும் வரலாற்றில் இடம்பெற்ற பண்டித ஜவஹர்லால் நேருவை இவ்விதம் கேவலப்படுத்தவேண்டிய அவசியமென்ன?

காந்திக்கு எதிரான வசனங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளது அக்காட்சிகளில் காந்தியை அறிந்திராத இன்றைய இளம் தலைமுறை தலித் இளைஞர்கள், தலித் ஆதரவாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். காந்தி சுட்டுக் கொள்ளப்பட்ட செய்தி அம்பேருக்கு அறிவிக்கப்பட்ட தருணத்திலும் தியேட்டரில் கைத்தட்டலும், விசிலும் தூள் பறந்தன. 'தாழ்த்தப்பட்ட மக்களின் பெரும் வரலாற்று துரோகி ஒழிந்தான்' என்ற மனநிலைக்கு வரலாறு அறியாத பார்வையாளர்களை கொண்டு நிறுத்தியதில் இயக்குநர் ஜாபர் படேல் சாதித்திருக்கலாம். காங்கிரஸிக்கும், காந்திக்கும் எதிரான அரசியலை முன்னெடுக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட சித்திரமாக அம்பேத்கர் திரைப்படம் அமைந்துள்ளது மிகவும் துரதிஷ்டம். தாழ்த்தப்பட்ட மக்களிடம் வரலாற்றை திரித்து கூறுதலும், உண்மைகளை மறைப்பதும் அம்மக்களுக்கே செய்யும் துரோக மில்லாமல் வேறில்லை.

டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கார் திரைப்படம் இந்திய அரசு, மகாராஷ்டிர அரசு நிதி உதவியுடன் தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ளது, இதை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட தமிழக அரசு ரூ 10 லட்சம் தந்துள்ளது. நல்ல நோக்கத்தோடு வழங்கப்பட்ட நிதியை கொண்டு நஞ்சை விதைத்தற்கு மாறாக வரலாற்று உண்மைகளை உள்ளது உள்ளபடியே சொல்லப்பட்டிருந்தால் அம்பேத்கர் படம் அனைத்து மக்களிடமும் நல்ல வரவேற்பு பெற்றிருக்கும்!

Saturday, September 4, 2010

உமாசங்கரின் உறுதிமிக்க போராட்டமும், ஊழல் அரசாங்கத்தின் பின்வாங்களும்

-சாவித்திரிகண்ணன்

ண்மைக்கும், நேர்மைக்கும் முன் அரசாங்கம் தோற்றுப்போய்விட்டது. அரசாங்காம் என்ற அசுர பலததால் ஏவப்பட்ட ஆள், படை, அம்புகள் அனைத்தும் முனைமுழுங்கி இலக்கை எட்டு முன் இயற்கை மரணமெய்தின. உமாசங்கர் ஐ.ஏ.எஸ்ஸின் மீதான அரசாங்கத்தின் பழிவாங்கும் போக்கு பரிதாபகரமான தோல்வியை அடைந்து விட்டது.

எல்காட் நிறுவனத்தின் (தமிழ்நாடு அரசு எலட்ரானிக்ஸ் கார்பரேஷன்) நிர்வாக இயக்குநராக இருந்த போதும், அரசு தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநராக இருந்தபோதும் அரசு சொத்துகளின் பாதுகாவலராக நின்று முதலமைச்சர் குடும்பத்தின் அதிகார மையங்களுக்கு அடிபணிய மறுத்தார் உமாசங்கர்.

இதன் பின்னணியில் இருந்தது மாறன் சகோதரர்கள் என்று அரசாங்க வட்டராத்தில் அதிகாரிகள் மட்டத்தில் ஒரு பேச்சு அடிபடுகிறது. அரசு கேபிள் டி.வி கார்பரேஷனில் நிர்வாக இயக்குநராக உமாசங்கர் இருந்தபோது அரசு கேபிள் டி.வியை வலுவுள்ளதாக்க அரும்பாடுபட்டார். சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட சந்தாதரர்கள் அதில் சேர்ந்தனர் கோவை, தஞ்சை, நெல்லை, வேலூர் என நான்கு இடங்களில் முதற்கட்டமாக அரசு கேபிள் நெட்வொர்க் இயங்க ஆரம்பித்தது.

அரசு கேபிள் டி.வி நெட்வொர்க்கை அதிரடியாக களத்தில் இறங்கி செயல்படுத்த துணிந்த உமாசங்கரை கண்டு அதிர்ந்து போன மாறன் சகோதரர்கள், அரசு கேபிள் ஆப்ரேட்டர்களை மிரட்டினர். அது பலிக்கவில்லை. எனவே ரவுடிகளின் பட்டாளத்தை கொண்டு அரசு கேபிள் வயர்களை ஏராளமான இடங்களில் வெட்டி எறிந்தனர். இந்த சமூக விரோத சக்திகளின் மீது நடவடிக்கை கோரி உமாசங்கர் எழுதிய எண்ணற்ற கடிதங்கள், வேண்டுகோள்களை அரசு பொருட்படுத்தவேயில்லை. மாறாக அப்பாவி அரசு கேபிள் ஆபரேட்டர்களை மீது போலீஸ் பொய்வழக்குள் போட்டனர்.

அதாவது, ஒரு தனியார் நிறுவனமான சுமங்கலி கேபிள் விஷனுக்கு (scv) ஆதரவாக அரசு இயந்திரங்களும், அதிகார பலமும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது.

இந்தச்சூழலில் தான், பிரிந்திருந்த மாறன் குடும்பமும், முதலமைச்சர் குடும்பமும் இணைந்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த அசாதாரண சூழலை அவதானித்த உமாசங்கர் முதலமைச்சரிடம் நேரடியாகச் சென்று, தன்னை அரசு கேபிள் கார்ப்பரேஷன் பொறுப்பில் இருந்து விடுவிக்க கோரியுள்ளார். ஆனால் முதலமைச்சரோ, ''நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். நான் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறேன். முன்னிலும் இரண்டு மடங்கு வேகத்துடன் நீங்கள் செயல்பட வேண்டும்'' என்கிறார். உமாசங்கரும் இதை நம்பிவிடுகிறார்.

அனால் யதார்ததமோ வேறுவகை அனுபவத்தை அவருக்குத் தந்தது. அரசு கேபிளை மீண்டும் வெட்டி எறியத் தொடங்கிய ரவுடிகளை தி.மு.க அமைச்சரான பொங்கலூர் பழனிச்சாமி பாதுகாத்தார்.

எனவே கொதித்துப்போன உமாசங்கர், இதை மீண்டும் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டுவந்து, 'ஒரு தனியார் நிறுவனமானது அரசு நிறுவனத்தையே அழித்துவிட்டு தனிக்காட்டு ராஜாவாக இயங்குமென்றால் அந்த தனியார் நிறுவனத்தை (எஸ்.சி.வியை) ஏன் தேசியமயமாக்கி அரசு எடுத்துக்கொள்ளக்கூடாது? அரசு சொத்துகளை அழித்தவர்கள் மீதும்,அவர்களை ஏவிய சக்திகள் மீதும் ஏன் குண்டர் சட்டம் பாயக்கூடாது; என கேள்வி கேட்டார்.

விளைவு, இந்தச்செய்தி வெளியான மூன்றே மணிநேரத்தில் அவர் அரசு கேபிள் கார்பரேஷன் நிர்வாக இயக்குநர் பொறுப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டார். இதனால் அவரை பணிமாற்றம் செய்து கடைசியில் சிறுசேமிப்புத்துறை இயக்குநராக நியமித்தனர்.

கிங்மேக்கர்களாக செயல்படும் கே.டி.பிரதர்ஸ்:

தங்களுக்கு எதிராக சுண்டுவிரலை அசைத்தாலும் அவர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரியே ஆனாலும் அவர்கள் ஒரு நாளும் அந்தப் பதவியில் தொடர முடியாது. உடனே பணிமாற்றம் செய்யப்படுவார்கள் என்பதை அப்பட்டமாக கே.டி.பிரதர்ஸ் (கலாநிதி, தயாநிதி) நிறுபித்த நிகழ்ச்சியாக அதிகாரிகள் இதை பார்த்து அதிர்ந்தனர்.

அதோடு விடாமல் அடுத்தகட்டமாக கே.டி பிரதர்ஸ் எய்த அம்பு தான் உமாசங்கரின் மனைவி தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததை பிரச்சினையாக்கிய விவகாரம்.

அச்சமயம் அவரது மனைவி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். உயர்ந்த கல்வித் தகுதியும், திறமையும் மிக்க ஒருவர் அதற்கேற்ற பணியைப் பெறுவதில் யாரும் குறைகூறமுடியாது என்பதே யதார்த்தம். ஆனால் இது குறித்து அரசாங்கம் அதிருப்தி தெரிவித்தது. அந்த தனியார் நிறுவனம் சிறுசேமிப்புத்துறையோடு ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், தன் அதிகாரத்தை பயன்படுத்தி அந்த வேலையை அவர் தன் மனைவிக்கு பெற்றுத் தந்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. சுயமரியதைக்காரரான உமாசங்கர் தன் மனைவியை ராஜீனாமா செய்ய வைத்துவிட்டார்.

இந்த அம்பும் வீணாகிப்போனது. ஏனெனில் துறப்பதற்கு தயாரனவனிடம் துன்பப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றாகிவிட்டது.

எனவே அடுத்த கட்டமாக கே.டி.பிரதர்ஸ் உமாசங்கரின் மீது ஏதாவது ஒரு கடுமையான நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என கருணாநிதியை வற்புறுத்தத் தொடங்கினர். கருணாநிதி முதலில் இதற்கு இசையை மறுத்தார். ஆனால் கே.டி.பிரதர்ஸ் தங்களின் அசுரத்தமான மீடியா பலத்தால் கருணாநிதியை கொஞ்சம் கொஞ்சமாக அசைக்கத் தொடங்கினர். இறுதியில் கருணாநிதி கே.டி. பிரதர்ஸின் கட்டளைக்கு பணிந்து விட்டார்.

கருணாநிதி பணிந்தது எப்படி?

மீடியாவிற்குள் முதன்முதலாக நுழைந்த காலகட்டத்தில் மாறன் சகோதரர்கள் கருணாநிதியின் அரசியல் பின்புலத்திலேயே அதன் அடித்தளத்தைப் போட்டனர். தி.மு.கழகத்தின் கட்சி நிதியையும், கட்சித் தலைமையகத்தையும் தந்து உதவினார் கருணாநிதி. அதோடு போட்டியாளர்களை அழிக்க, நசுக்க, மிரட்டிபணிய வைக்க முழுக்க, முழுக்க மாறன் சகோதரர்கள் கருணாநிதியை சார்ந்திருந்தனர்.ஆனால் இப்போதோ இவர்கள் ஆசியா கண்டத்தின் மிகப்பெரும் பணமுதலைகள்.

சக்தி வாய்ந்த சன்.டி.வி உட்பட 20க்கு மேற்பட்ட டி.வி, சேனல்களையும், 45 எப்.எம் வானொலி ஒலிபரப்புகளையும், 13 லட்சம் பிரதிகள் விற்பனையாகும் தினகரன் மற்றும் தமிழ் செய்தி நாளிதழ்களையும் குஙுகுமம் உள்ளிட்ட நான்கு பருவ இதழ்களையும் கொண்டு மக்களிடம் கருத்துருவாக்கம் ஏற்படுததுவதில் தன்நிகரற்று விளங்குகின்றனர். இந்த ஊடகங்கள் மூலமாக நடத்தும் செய்தி சித்து விளையாட்டுகளைக் கொண்டே அவர்கள் கருணாநிதியை தங்கள் நிர்பந்தத்திற்கு பணியவைப்பது வழக்கம். தங்கள் மீடியாக்களில் அ.தி.மு.க விற்கோ, விஜயகாந்திற்கோ அவர்கள் அவ்வப்போது அதிக முக்கியத்துவம் தந்து கருணாநிதியின் ரத்த அழுததத்தை ஏகத்துக்கும் எகிறச் செய்து பணிய வைப்பது இவர்களுக்கு கைவந்த கலையாகிவிட்டது. அதுவும் தேர்தல் நெருங்கும் நேரம்... அதனால் கருணாநிதிக்கு மாறன் சகோதரர்களின் ஊடக பலத்தோடு பணபலமும் தேவைப் படுகிற இக்கட்டான சூழல் நிர்பந்தத்தினாலேயே அவர் மாறன் சகோதரர்களின் நிர்பந்த்திற்கு கடைசியில்பணியவேண்டியதாகிவிட்டது.

உமாசங்கர் மீது பாய்ந்த ஏவுகணைகள்:

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துவிட்டதாக உமாசங்கருக்கு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறை (dvac) மூலம் நோடடீஸ் அனுப்பட்டது. இந்தச் செய்தி பத்திரிக்கைகளுக்கும் அரசு மூலம் அனுப்பபட்டது.

உமாசங்கர் ஏற்கனவே தன் சொத்துவிவரங்களை அரசிடம் முழுமையாகவும், முறையாகவும் தெரியப்படுத்தியுள்ள அதிகாரி. ஆதலால் இப்படி ஒரு நோட்டீஸ் அனுப்பியதன் காரணத்தையும், விளக்கத்தையும் சம்பந்தப்பட்ட துறையிடம் கேட்டார். அதோடு dvac யை தமிழக முதல்வர் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் தந்திரோபாயத்தையும் அவர் சட்டத்தின் வாயிலாக கேள்விக்குள்ளாக்கினார்.

இதனால் ஆத்திரமடைந்த முதல்வரும், அவர் தம் குடும்ப அதிகாரமையமும் உமாசங்கர் தாழ்த்தப்பட்டவர் என்று போலிச்சான்றிதழ் தந்து பணியில் சேர்த்ததாக புதிய குற்றச்சாட்டை நிதானமின்றி சுமத்தியதோடு இதை விசாரணை செய்து முடிவு தெரியும் காலம் வரையில் உமாசங்கரை இந்திய அரசுப் பணியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்தவதாக பகிரங்கமாக அறிவித்தனர்.

இப்போது வாபஸ் பெற்றது ஏன்?உமாசங்கர் சஸ்பென்ஸ் செய்யப்பட்டு சுமார் 45 நாட்களான நிலையில் அவர் மீதான விசாரணைகள் முடிவைட்யாத நிலையில் , குற்றச்சாட்டுகள் குறித்த இறுதி முடிவுக்கு வராத நிலையில் இப்போது அவர் மீதான சஸ்பென்ஸை தன்னிச்சையாக அரசு விலக்கிக் கொண்டதோடு, அவரை டான்சி இயக்குநராகவும் நியமித்துள்ளது.

இதைத்தான் இந்தத் கட்டுரையின் ஆரம்பத்தில் நான் உண்மைக்கும், நேர்மைக்கும் முன் அரசாங்கம் தோற்றுப் போய்விட்டது என்றேன். இந்த தோல்வியின் பின்னணியை அம்பலப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

  • upscஎனப்படும் மத்திய அரசு தேர்வாணையத்தின் மூலம் முறையாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு ஐ.ஏ.எஸ் பணியில் சேர்ந்து 20 வருடங்களாக சிறப்பாக பணியாற்றிய ஒரு இந்திய அரசு அதிகாரியின் மீதான ஒரு மாநில அரசின் தன்னிச்சையான, ஆதாரமில்லாத அவசர நடவடிக்கைகான காரணத்தை மத்திய அரசிடம் தமிழக அரசால் நியாயப்படுத்த முடியவில்லை.

  • sc/st கமிஷனுக்கு உமாசங்கரால் அனுப்பப்பட்டுள்ள அதிர்ச்சியான தகவல்களும், அதன் மூலம் அம்பலப்பட்டு நிற்கும் தமிழக அரசின் பழிவாங்கும் அணுகுமுறைகளுக்குமான விளக்கத்தை தமிழக அரசாங்காத்தால் தரமுடியவில்லை.

  • கடந்த 45 நாட்களுக்கும் மேலாக எவ்வளவோ பகீரத முயற்சிகளை மேற்கொண்டும், அரசு அதிகாரபலத்தை முழுமையாக பிரயோகித்தும் அரசாங்கத்தால் உமாசங்கரின் மீதான குற்றச்சாட்டை நிறுவ முடியவில்லை. இதற்காக உமாசங்கர் பிறந்த ஊர், படித்த பள்ளிகூடம் மற்றும் கல்லூரிகளில் விசாரணை, நண்பர்களிடம் விசாரணை, உறவினர்கள் மற்றும் உடன்பிறப்புகளிடம் விசாரணை... என அலையோ அலைவென அதிகார வர்க்கம் அலைந்து திரிந்தது. தாங்கள் விரும்பும் ஸ்டெட்மெண்ட்டை பெற மிரட்டியும் பார்த்தனர். அதிலும் பலன்கிடைக்கவில்லை.

  • உமாசங்கர் கடந்த 20 ஆண்டுகளாக மக்களை மிகவும் நேசித்து நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் செயல்பட்டு அளப்பரிய நல்ல பணிகளை ஆற்றியவர் என்ற வகையில் மக்களும், மக்கள் இயக்கங்களும், ஊடஙகங்களும் , அரசியல் கட்சிகளும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். போராட்டங்களை நடத்தினர். உமாசங்கர் அம்பலப்படுத்திய எல்காட் மற்றும் அரசு கேபிள் கார்பரேசன் விவகாரங்கள் மக்கள் மன்றத்தில் பகிரங்க விவாதப் பொருளாகி அரசாங்கத்தை தர்மசங்கடத்திற்குள்ளாக்கியது. ஆகவே இந்த சங்கடங்களிலிருந்து விடுபட்டு இதற்கொரு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்ற அரசின் தவிப்பும் இதற்கு காரணமாகும்.

  • உமாசங்கர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் தான் என்று அச்சமூகத்தினரே ஆங்காங்கே திரண்டு எழுந்து பற்பலபோராட்டங்கள் நடத்தி வந்தனர். இது செல்வம் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்து ஐ.ஏ.எஸ் அதிகாரி சீனியரிட்டிபடி தலைமைச் செயலாளர் ஆவதிலிருந்து தடுக்கபட்ட விவகாரத்தில் தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மத்தியில் மேலும் அதிருப்தி வெளிப்படக் காரணமாயிற்று.ஆகவே இது, 'தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான அரசல்ல' என நிரூபிக்க வேண்டிய நிர்பந்த சூழலுக்கு அரசு தள்ளப்பபட்டது.

  • எந்த சன்குழுமச் சகோதரர்களுக்காக கருணாநிதி இவ்வளவு சட்டவிரோத, மக்கள்விரோத செயல்பாடுகளுக்கு துணைபோனாரோ அந்த சன்குழும சகோதரர்களின் நெருங்கிய நட்பு தந்த பலத்தால் சன்குழும நிர்வாகி சக்சேனா ரவுடிகள் புடைசூழ நட்சத்திர ஓட்டலை சூறையாடியும், இளம்பெண்ணையும், அவரது வீட்டையும் தாக்கிய அராஜகச் செயல்பாடுகளால் கருணாநிதிக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழல். அதோடு அரசுகேபிள் கார்பரேசனை சன்குழும சகோதரர்களுக்கான அடக்கம் செய்ததால் ஏற்ப்ட்ட விமர்சனங்கள். அரசுக்கு ஏற்பட்ட கெட்டபெயர்...

ஆக upsc யின் கேள்விக்கணைகள், sc/st கமிஷனின் தார்மீக கோபம், அரசின் முழுபலத்தை பிரயோகித்தும் உமாசங்கர் மீதான நிருபிககமுடியாத பலவீனம், மக்கள் திரண்டெழுந்து நடத்திய போராட்டங்கள், ஊடகங்கள், அரசியல் கட்சிகளின் தாக்குதல்கள், தாழ்த்தப்பட்ட மக்களிடையே எழுந்த எழுச்சி, தாழ்த்தப்பட்ட மக்களின் கோபத்திற்கு ஆளாகிவிடக்கூடாதே என்ற பயம், சன்குழுமச் சகோதரர்கள் மீதான அதிருப்தி.... போன்றவையே உமாசங்கர் ஐ.ஏ.எஸின் பணி இடைநீக்கம் வாபஸ் பெறப்பட்டு அவர் மீண்டும் பணி அமந்த்ப்பட்டதற்கான காரணங்களாகும்.

இதன் மூலம் ம்க்களை நேசித்து , மக்களுக்காகப் பணியாற்றும் யாருமே தனிமனிதரல்ல. எப்படிப்பட்ட அரசாங்கத்தின் அசுரபலத்தாலும் அவர்களை அழிக்கமுடியாது என்பது தான் நிருபணமாகியுள்ளது.

நேர்மையாக. உண்மையாக செயலாற்றினால் இது தான் கதியோ... என்றில்லாமல், 'நிச்சயம் நீதி கிடைக்கும்' என ஐ.ஏ.எஸ்ஸாகவிருக்கும் இளைஞர்கருக்கும், பணியில் இருக்கும் அனைத்து நேர்மையாளர்களுக்கும் உணர்த்திய சம்பவமாகவும் இதை நாம் பார்க்க வேண்டும்.

ஆனால் அதே சமயம் ஏதோ மீண்டும் உமாசங்கரை பணியில் அமர்த்தி விட்டதன் மூலம் எல்லாவற்றிற்கும் முற்றுமுள்ளி வைத்ததாக அரசு கருதியிருந்தால் அது அறியாமை என்று தான் சொல்ல வேண்டும்.

  • தனது தவறான முடிவுகளுக்கு அரசாங்கம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

  • நேர்மையான அதிகாரியை 'கேரக்டர் அசாசினேஷன்' செய்து பொய்களை பரப்புரை செய்ததற்கான எதிர்வினைகளை சந்தித்தே ஆக வேண்டும்.

  • உமாசங்கரால் அம்பலப்பட்டுபோன சுமார் 1000கோடி ஊழல்கள், ம்றறும் குடும்ப அதிகார மையங்களின் அத்துமீீறல்கள் குறித்த அதிர்வுகள் அடங்கிப் போவதில்லை.

தீவினைகளை விதைத்தவர்கள் அதற்கான விளைவுகளை சந்தித்தேயாக வேண்டும். வினைப் பயன்களிலிருந்து ஒருவரை விலக்கி காப்பாற்றும் அதிகாரம் அந்த ஆண்டவனுக்கே இல்லை!

Monday, July 12, 2010

ராவணன்

மணிரத்தினத்தின் முழுமையற்றபடைப்பு

-சாவித்திரிகண்ணன்

ராமாயணத்தில் வரும் இலங்கை அரசன் ராவணன் சிவபக்தன் பல உயரிய நற்குணங்கள் கொண்டவள் என நாம் அறிவோம். அந்த கோணத்தில் மணிரத்தினத்தின் சினிமாவில் வரும் 'வீரா' என்ற ஆதிவாசியின் கதாபாத்திரம் உருவாக்கபபட்டுள்ளது. என்பதால் ராவணன் என்று படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் புராணத்தில் வரும் ராவணனைப்போல் வீரா, போலீஸ் அதிகாரி தேவ் பிரகாசின் மனைவி ராகிணியை ஆசைப்பட்டு தூககி வரவில்லை. ஒப்படைகக மறுத்து அதன் விளைவாக சாவைத் தேடிக் கொள்ளவுமில்லை ராவணன் எனற இந்த திரைப்படத்தில் மணிரத்தினம், புராண காலத்திய கதாபாத்திரங்களின் சாயலோடு நவீன மனிதர்களைப் பொருத்தி கதை சொல்லியிருக்கும் உத்தி சுவாரஷ்யமானது தான்!

கதை நாயகன் வீராவின் பாத்திர உருவாக்கத்தில் வீரப்பனின் சாயல் இருக்கிறது.

ஆதிவாசிகளுக்கும், போலீஸ் அதிகாரவர்க்கத்துமான மோதல்களில் மாவோயிஸ்ட் போராடடத்தின் சாயல் தெரிகிறது.

இந்த இரண்டு பிரச்சினைகள் பற்றிய ஆழமான சமூக பின்புலத்தை உணராத அறியாமை திரைக்கதை போக்கில் வெளிப்படுகிறது.

அசத்துகின்ற தொழில் நுட்பங்கள், மிரட்டுகின்ற காட்சி போக்குகள், நுட்பமான எடிட்டிங், மணிரத்தினத்தின் முத்திரை பதிக்கும் இயக்கம் அனைத்துமே கதை, திரைக்கதை வலுவாக அமைக்கப்படாததால் பயனற்று விடுகிறது.

அதென்ன மணிரத்தினத்தின் படங்களில் வரும் கேரக்டர்கள் எல்லாமே ஒரே ரீதியான ஸ்டீரியோ டைப் வசனங்களை பேசுகிறார்கள். குறிப்பிட்ட சில உணர்ச்சி வெளிப்பாடுகளை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். தன் பட கதாபாத்திரங்களுக்குள் தானே நுழைந்து கொண்டு ஆக்கிரமித்து வருவதை மணிரத்தினம் எப்போது தான் தவிர்ப்பாரோ புரியவில்லை.

எதற்காக போலீஸ் கூட்டம் வீராவின் தங்கை கல்யாண வைபவத்தில் நுழைந்து வீராவைச் சுடவேண்டும்? அவன் தங்கையை கடத்தி கற்பழிக்க வேண்டும்? காரணமே புரியாமல் பார்வையாளர்கள் தத்தளிக்கிறார்கள். சமாதானம் பேச வரும் வீராவின் தம்பியை எடுத்த எடுப்பில் எந்த பேச்சோ, பேரமோ இன்றி போலீஸ் அதிகாரி சுட்டுத்தள்ளுவது என்பது நம்புபடியாக இல்லை. போலீஸ் அதிகார வர்க்கம் மிகவும் கொடூரமானது என்று வலிந்து சொல்லப்படும் முயற்சியாகத் தான் தெரிகிறது.

இவற்றையெல்லாம் தவிர்த்து படத்தில் ரசிக்கத் தக்க அம்சங்கள் நிறையவே உள்ளன.முதலில் கொடூரமானவனாகத் தான் நினைத்த வீராவின் உன்னத நற்குணங்களால் படிப்படியாக ராகிணி கவரப்படுவதும், கடத்தி வரப்பட்ட பெண்ணின் அழகு, வசீகரம், பேச்சு நடத்தைகள் போன்றவை வீராவின் மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தையும், தடுமாற்றத்தையும் கடந்து அவன் கம்பீரமான ஆண்மகனாக கடைசிவரை நிலை தடுமாறாமல் இருப்பதும் கவிதையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.இந்த கதாபாத்திரங்களில் விக்ரமும், ஐஸ்வர்யாராயும் மிக நுட்பமான தங்கள் நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளனர்.

போலீஸ் அதிகாரியோடு மோதி அவனை வீழ்த்தும் நிலையில், வீரா பேசும் ஒரு வசனம் அதி அற்புதம். "உன் அழகான மனைவிக்காக உன்னை கொன்றுவிடலாம் அல்லது உனக்கு உயிர்பிச்சை தரலாம்." எனக்கூறி போலீஸ் அதிகாரியை காப்பாற்றுவான் வீரா. ஆனால் அவ்வளவு உயர்ந்த குணம்படைத்த வீரா, "நாங்க எச்சிக்கை தான் ஆனா உன்மனைவி சொக்க தங்கம்" என வசனம் பேசுவது கொஞ்சமும் பொருத்தமில்லை. வசனம் எழுதிய சுகாசினியின் 'மேட்டுக்குடி பார்வை' தான் இதில் வெளிப்படுகிறது. மேலும் 'நாங்கள் ஒடுக்கப்பட்டவர்கள்' என வீரா பேசும் வசனத்தைத் தவிர ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் எதுவும் படத்தில் சொல்லப்படவில்லை.

ஐஸ்வர்யாராயின் வசீகரிக்கும் அழகும், விக்ரமின் சிறப்பான நடிப்பும், சந்தோஷ்சிவன், மணிகண்டன் என்ற இருவரின் அபார கேமிரா திறமையும், கடைசி 20 நிமிஷ விறுவிறுப்பான காட்சி அமைப்புகளும் இந்தப்படத்தை தூக்கி நிறுத்த போதுமானதாக நம்பிவிட்டார் மணிரத்தினம்!

Monday, February 22, 2010

சூனியத்திற்குள் உழலும் சுதந்திரமில்லா கலையுலகம்

-சாவித்திரிகண்ணன்

அஜித் பேசியதில் தவறில்லை

கலைஞனின் சமூக அக்கறை அவனது படைப்புகளில் தான் வெளிப்பட வேண்டும். அப்படி சமூக அக்கறையை படைப்புகளில் தர முடிந்தால் அநத படைப்பாளி தெருவிற்கு வநது மக்கள் பிரச்சினைக்காக போராட வேண்டியதில்லை.

மக்களை போராடத் தூண்டுமளவுக்கு தன் படைப்புகளில் பரிமளிக்க முடியாதவர்கள் பேசாமல் எங்கள் நோக்கம் கல்லாபெட்டியை நிரப்புவது தானென்று காசுக்கு மாரடிப்பதோடு நின்று கொள்வது உத்தமம்.

அதையும் மீறி அவர்களுக்கு சமூக அக்கரை இருக்குமானால் குறைநத பட்சம் தங்கள் படங்களில் அரை குறை ஆடைகளோடு பெண்களை போகப் பொருளாக்காமல் இருந்தால் போதுமே...!

சகமனிதர்களை வெட்டிச் சாய்க்கும் - எப்போது பார்த்தாலும் அரிவாளோடும் துப்பாக்கிகளோடும் அலையும் - வன்முறை அபத்தங்களை தவிர்தால் போதுமே .....

நகைச்சுவையின் பெயரால் மனிதனை மனிதன் இழிவுபடுத்தும் அல்லது இம்சிக்கும் கீழ்த்தரமான ரசனையை தகர்க்கலாமே...

சமூகத்தை சீரழிக்கிற படைப்புகளை தந்து கொண்டிருக்கும், இந்த மனிதநேய பகைவர்கள் தங்கள் பிழைப்பு சார்ந்த அரசியல் உள்நோக்கங்களோடு போராட்டம் நடத்தினால் அதற்குப் பெயர் சமூக அக்கறையா? ஜால்ரா அக்கரையா?

கலைஞர்கள், படைப்பாளிகள் முதலில் தங்கள் சுயநலத்தை துறந்து பொதுநோக்கத்திற்காக எப்போது தங்கள் படைப்பாற்றலை, கலைத்திறமைகளை அர்பணிகிறார்களோ அப்போது சமூக மரியாதையை பெற முடியும். மக்கள் மனதில் இடம்பெற முடியும்.

ஆட்சியாளர்கள், அதிகாரமையத்தில் உள்ளவர்கள் மனதில் இடம் பெறுவதற்கான தேவை அவர்களுக்கு இருக்குமானால் அவர்கள் அதற்காக எத்தனை பாராட்டு விழாக்களை வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளட்டும், அதிகார மையத்தின் கால்களைத் தொட்டு தங்கள் கண்களில் ஒத்திக் கொள்ளட்டும்.

'பாவம், அது அவர்கள் பிழைப்பு..." என்று மக்கள் நினைத்துக் கொள்வார்கள்....

ஆனால், இந்த பிழைப்புவாதிகள் அதிகார மையத்தை குளிர்விக்க அறிவிக்கும் போராட்டம் என்ற பெயரிலான கேலிக்கூத்திற்கு, பாராட்டுவிழா என்ற பெயரிலான ஜால்ரா கோஷத்திற்கு எல்லோரையும் எப்படி நிர்பந்திக்கலாம்? யாரோ தலைவனாவதற்கோ அல்லது சுயவிளம்பரமடைவதற்கோ மற்றவர்களின் நிம்மதியை கெடுப்பது தனிமனிதசுதந்திரத்தில் தலையிடுவதாகாதா?

பணத்திற்காக வேஷம் போட்டாலும், எநத ஒரு கலைஞனுக்கும் சுயமரியாதை இல்லாமல் போய்விடாது. அல்லது தமிழ் படங்களில் பணிபுரிவர்கள் சுயமரியாதையை தொலைத்து விட வேண்டும் என்ற முன்நிபந்தனை வைத்துவிடூவீர்களா?

மகத்தான கலைஞன் என்று உலகப்புகழ்பெற்ற எந்த கலைஞனும், மக்கள் மனதில் நீங்காத நிலைத்த இடத்தை பெற்று வரலாற்றில் நிலைத்த எந்த கலைஞனும் - அதிகார மையங்களுக்கு ஆலவட்டம் வீசியவனில்லை. மாறாக அதிகார மையங்களின் மக்கள் விரோத செயல்பாடுகளை தங்கள் கலைப்படைப்புகளில் ஆன்ம பலத்தோடு சுட்டிக்காட்டியவர்களே!

அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன் சினிமா பேசத் துவங்காத போதே தன் மௌனப்படங்களால் அதிகார மையங்களை அதிர்ச்சி கொள்ள வைத்தவர் சார்லி சாப்ளின்.

கொள்ளை லாபமீட்டும் தொழிற்சாலைகள் மனிதர்களைக் கூட இயந்திரங்களாக பாவிப்பதை கலை நுட்பத்தோடு 'மாடர்ன் டைம்ஸ்' என்ற படத்தில் சார்லி சாப்ளின் விவரிப்பதை பொறுக்காமல் ஜெர்மன், இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகள் அவர் படத்திற்கு தடை விதித்தன.... ஆனால் அதற்காக சாப்ளின் எநத நாட்டு அதிபரையும் சந்தித்து சமாதானப்படுத்தியதோ, தூது அனுப்பியதோ இல்லை. சார்லி சாப்ளின் மீது குத்தப்பட்ட 'கம்யூனிஸ்டு ஆதரவாளர்' முத்திரையால் அவரது எல்லைகள் சுருங்கிவிடவில்லை. காலவெள்ளத்தில் அந்த முத்திரை கலைந்து அவர், 'மக்கள் கலைஞன்' என்று ஒரு மனதாக ஏற்கப்பட்டார்.

கலைஞன் சுதந்திரமானவன். ஆனால் எந்தப் பெயரிலான அதிகார மையங்களும் சுதந்திரத்தைக் கண்டு அஞ்சவே செய்கின்றன. கம்யூனிஸ்டுகளின் தலைமையிலான சோவியத் அரசும் இதற்கு விதிவிலக்கல்ல. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற பெயரில் கலைஞர்கள் மற்றும் தனிமனிதர்களின் சுதந்திரம் கேள்விக் குள்ளாவதை தன் படைப்புகளில் கேள்விக்குள்ளாக்கினார் அந்தரே தர்க்கராவஸ்கி. அதனால் அவர் அடைந்த இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல.

இந்தியாவில் நடக்கும் கும்பமேளாவை படம்பிடிதத இத்தாலியின் மைக்கல் ஏஞ்சலோ அன்டானியோனியை அதிகாரிகள் ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டுக் குடைந்தனர். தாங்கள் அனுமதிக்கும் காட்சிகளை மட்டுமே வைத்துக் கொள்ளவேண்டும் என்றனர். எடுத்த படச்சுருளை அப்படியே எரித்துப் போட்டுவிட்டுச் சென்றான் அந்தக் கலைஞன்.

மதத்தின் அதிகார வரம்புகள் குறித்தும், அதன் அத்துமீறிய அணுகுமுறைகள் குறித்தும் தன் கலைப்படைப்புகளில் எள்ளி நகையாடினார் ஸ்பானிஸ் நாட்டின் லூயிஸ் பீயூனல். கிறிஸ்த்துவ பாதிரிகள் அரசு பின்புலத்துடன் அவர் மீது பாய்ந்தனர். இது தான் இத்தாலியின் பெட்ரிக்கோ பெலினிக்கும் விஷயத்திலும் நேர்ந்தது.

சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், மானுட வாழ்க்கையின் மீதான கரிசனமும் கொண்ட படைப்புகளை தந்த இந்தியாவின் உன்னத திரைக் கலைஞர்கள் சத்தியஜித்ரே, மிருணாள்சென், ரித்விக் கட்டாக், அரவிந்தன், அடூர்கோபாலகிருஷ்ணன், தமிழகத்தின் மகேந்திரன். ருத்ரயயா.... போன்றவர்கள் தங்கள் வங்கிகணக்கை வளமாக்கி கொள்வதற்காக மட்டுமே படமெடுத்தவர்களில்லை.

அவர்கள் மக்கள் பிரச்சினை ஒவ்வொன்றிலும் அபிப்ராயம் சொல்லிக் கொண்டோ, தெருவில் இறங்கி போராடுவதன் மூலம் தங்கள் சமூக அக்கரையை நிருபிக்க வேண்டிய கட்டாயத்திலோ இருந்ததில்லை,

கலைஞர்களை சாதி, மதம், இனம் மொழி... என்ற எதன் பேராலும் அடையாளப்படுத்தி அடக்க நினைப்பது காட்டுமிராண்டித்தனம். கோழைத்தனம். கோழைகள் கையாளும் அணுகுமுறை தான் பாஸிசம்!

சினிமா தயாரிப்பாள்களின் சுரண்டலிருந்து தொழிலாளர்களை விடுவிக்கவே அன்றைய தினம் இசைமேதை எம்.பி.சீனிவாசன், ஒளிப்பதிவு மேதை நிமாய்கோஸ் முதலானவர்கள் சினிமா தொழிலாளர்களுக்கென்று சங்கங்களை உருவாக்கினார்கள். இதனால் தொழிலாளர்கள் பெரும் தொழில் பாதுகாப்பு பெற்றனர். ஆனால் இன்று நிலைமைகள் தலைகீழாக்கி விட்டன. சினிமா தொழிலாளர்களை அதன் தொழிற்சங்கங்களிடமிருந்து பாதுகாக்க ஒரு போராட்டம் தேவைப்படுகிறது. இது மிகைப்படுத்த பட்ட கூற்றல்ல. சாதாரணமாக எந்த ஏழைத் தொழிலாளியும் இந்த திரைப்படத் தொழிலாளர் சங்கங்களில் உறுப்பினராகிவிடமுடியாது. ஐம்பதாயிரம் ஒருலட்சம் என்று உறுப்பினர் கட்டணமே மலைக்க வைக்கிறது.

அப்படி உறுப்பினராக சேர்ந்துவிட்ட அனைவருக்கும் முழுபாதுகாப்பு கிடைத்துவிடுவதில்லை. சம்பளபாக்கிக்காக சங்கத் தலைமையிடம் முறையிட்டால், 'கமிஷன் பணம் எவ்வளவு? என்பது தான் முதல் பிரச்சினையே.தொழிலாளியை காட்டிலும் முதலாளியிடம் அதிக கமிஷன் கிடைக்குமென்றால் தொழிலாளியின் கதி 'அம்போ' என்பது தான் யதார்த்தமாக உள்ளது.

தமிழ்நாட்டின் கலாச்சாரம், தமிழ்மண்ணின் மாண்புகள் அனைத்தையும் சின்னாபின்னப்படுத்தி சீரழிக்கும் விதமாக படமெடுத்து கீழ்த்தரமான பாலியல் வக்கிரங்களை விதைத்து மக்களிடமிருந்து பணம் பறிக்கும் கலை வியாபார சூதாடிகள் சமூக அக்கரை குறித்து பேசாமல் தங்களை சுயவிமர்சனத்திற்கு உள்ளாக்கி கொள்ள வேண்டும்.

"தமிழ் மக்கள் தரும் காசில் பிழைக்கறவன் அவர்களுக்காக போராட வேண்டாமா?" என்று தங்களின் பிழைப்புவாத பித்தலாட்டதிற்கு 'போராட்டம்' என்ற அடைமொழியிட்டு இவர்கள் பேசினால் சிரிப்புதான் வருகிறது.

இவர்களை பார்த்து, "தமிழ்மக்கள் தரும் காசில் பிழைத்துக்கொண்டு கலையின் பெயரால் சொந்த மக்களையே சூதாடலாமா?" என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

இவர்களில் எத்தனைபேரின் சினிமாக்கள் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கின்றன. வாழ்க்கை மீதான நம்பிக்கையை உருவாக்குகின்றன. அறியாமை அல்லது மாயையிலிருந்து மக்களை மீட்டெடுக்கின்றன. வெகு சில படைப்பாளிகளே தேறுவார்கள். அவர்களும் பற்பல சமரசங்களுடன் தான் இயங்க முடிகிறது. கோலிவுட்டின் பொய்மை, பித்தலாடட மாயைகளுக்கு மத்தியில் நுட்பமாக தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் சமார்த்தியம் எல்லா படைப்பாளிகள், கலைஞர் களுக்கும் கைவரபெறுவதில்லை. இங்கு வாய்ப்பு பெற்ற படைப்பாளிகள், கலைஞர்களை விடவும் காணாமலடிக்கப்பட்ட கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளின் எண்ணிக்கை பெரிது.

தமிழ் இன உணர்வை பேசுகின்றவர்களை விட பெரிய பித்தலாட்ட பொய்யர்களை பார்க்கமுடியாது. மேடைக்கும், அறிக்கைக்கும் மட்டுமே இவர்களுக்கு தமிழ் உணர்வு கைக்கொடுக்கும். இவர்கள் எடுக்கும் திரை படங்களுக்கு கதாநாயகன், கதாநாயகி போன்றவர்கள் ஏன் தமிழ்நாட்டிற்குள் கிடைக்கவில்லை என்பது தான் எனக்கு விடைத்தெரியாத புதிராக உள்ளது.

இந்த தமிழ் உணர்வாளர்கள் ஒருவர் கூட சுத்த தமிழர்களை மட்டுமே வைத்து ஒரே ஒரு படம் கூட தந்ததில்லை. அட கலைஞர்களை தவிர்த்து தொழில்நுட்ப ரீதியாக எடுத்துக்கொண்டால் தமிழர்களை மட்டுமே பயன்படுத்தி இவர்கள் இது வரை எந்த ஒரு படைப்பையும் உருவாக்கியதில்லை. ஆக யதார்த்தமும், நடைமுறைகளும் ஏற்படுத்தி உள்ள சூழலை தகர்ந்தெறிந்து விடக்கூடிய தைரியம் இவர்களுக்கு கிடையாது.அப்படி மீறுவதற்கான முயற்சிகளைக் கூட இவர்கள் எடுத்தவர்களில்லை. பிறகெதற்கு இநத இன துவேஷ பேச்சுகள்...? யார் விட்டெரியக் கூடிய ரொட்டித் துண்டுகளுக்காக இப்படி குரைக்கிறார்கள்? சேர்த்தசொத்துகள் போதாது வென்றோ அதிகார மையத்திடம் குழைகிறார்கள்?

மகாகவி பாரதியாரின் பாடல்கள் தான் நினைவுக்கு வருகிறது.

சுதந்திரதேவி

நின்னருள் பெற்றிலாதார்

நிகரிலாச் செல்வரேனும்

பன்னருங் கல்வி கேள்வி,

படைத் துயர்ந்திட்டா ரேனும்,

பின்னரும் எண்ணி லாத

பெருமையிற் சிறந்தாரேனும்

அன்னவர் வாழ்க்கை பாழாம்,

அணிகள் வேய் பிணத்தோ டொப்பார்.

Monday, January 4, 2010

சிவசேனாவை தனிமைப்படுத்துவோம்

-சாவித்திரிகண்ணன்

ஜனநாயக நாடடிலே அதன் பரந்து விரிந்த நெகிழ்வு தன்மையிலே எவ்வளவுக்கெவ்வளவு சிறப்புகள் உள்ளனவோ அவ்வளவுக்கு ஆபத்தும் மறைந்தே உள்ளன.

சிவசேனையும், அதுபோட்ட குட்டியுமான மகாராஷ்டிரா நிர்மாண்சேனாவும் நாகரீக உலகத்திலே வாழத்தகுதியற்ற படு பிற்போக்குத்தனமான, காலாவதியாகிப் போன காட்டுமிராண்டித்தன கலாச்சராத்தை தூக்கிபிடித்து திரிந்தாலும் கூட இந்த நாட்டிலே அவற்றிற்கு எந்த தடையுமில்லை. கூட்டம் சேர்க்க முடிந்தால் மாநில சட்ட மன்றத்திலும் , மத்தியில் பாராளுமன்றத்திலும் இடம்பெறும் வலிமை இருந்துவிட்டால் பிறகு ஒரு போதும் அவ்ர்களை கட்டுபடுத்த முடியாது என்ற அவலமான நிலைமை தொடர்ந்து விடுகிறது.

யோசித்து பார்த்தால் இந்தியாவை மொழிவழிமாநிலமாக கூறுபோட்டு நமது முன்னோர்கள் பெரும் முட்டாள்தனம் செய்துவிட்டார்களோ என்று தான் அங்கலாய்க்க வேண்டியுள்ளது.

550 சமஸ்தானங்களாகப் பிரிந்து கிடந்த இப்பெரும் நிலப்பகுதியை பிரிட்டிஷார் தான்- அல்லது அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் தான் - ஐக்கிய இந்தியாவாக அடையாளப்படுத்திக் கொள்ள உதவினார்கள். அப்படி உருவாகிவிட்ட இந்தியாவை மொழி, இன, பிரதேச உணர்வுகள் உருத்தெரியாமல் கலைத்துவிடுமோ என்ற கவலைதான் ஏற்படுகிறது. அதனால் தான் சுதந்திரம் பெற்ற பின்பு பண்டித ஜவஹர்லால் நேரு இந்தியாவை ஐந்து பெரும் மாநிலங்களாகப் பிரித்து, ஏற்கெனவேயிருந்த அதன் இயல்பு மாறாமல் தொடரச் செய்யலாம் என திட்டமிட்டார். அதன் படி சென்னை ராஜதானிக்குள் தென்னிந்தியாவின் கணிசமான பகுதி பல்லின கலாச்சார பரிமாணத்துடன் பரிமளித்திருக்கும். இன்றைய மொழிவாரி மாநில பிரிவினையால் காவேரி, பாலாறு, முல்லையாறு... என தீராப் பிரச்சனைகளால் திணறிக் கொண்டிருக்கிறோம்.

அதேபோல பம்பாய் ராஜதானி அப்படியே தொடர்ந்திருக்குமானால் மகாரஷ்டிராவும், குஜராத்தும், கர்நாடகம், மத்திய பிரதேத்தின் சில பகுதிகளும் பிரிட்டிஷ் ஆட்சிலிருந்ததைப் போலவே தொடர்ந்திருக்கும். பல மொழி பேசுகின்ற பல்லின, பன்முக கலாச்சார கூட்டிணைவு அரசியல் நிர்பந்தங்களோடு ஐக்கியமாயிருக்கும்.

1960-ல் பம்பாய் ராஜதானியிலிருந்து மகாராஷ்டிர, குஜராத் என பிரிந்தது. மராத்திய பேசும் மக்களின் போராட்டங்களால் மகாராஷ்டிரா கட்டமைக்பட்டது. அதனால் தான் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், 'மும்பை, இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தமானது' என்றதற்கு பதிலடி தந்த பால்தாக்கரே, 'மராத்தி மக்கள் போராடியது உனக்குத் தெரியுமா? அதில் 105பேர் உயிர் தியாகம் த்நதது தெரியுமா? அப்போது நீ பிறக்கவே இல்லையே...'' என்றார்.

ஆனால் இந்தியா உருவாதற்கு இதைக்காடிலும் அதிக மராத்தியர்கள் உயிர்தியாகம் செய்துள்ளனரே... அப்படி இந்தியா உருவானதால் தானே மராத்தியர்கள் தங்களுக்கென்று ஒரு மாநிலத்தைப் பெறமுடிந்தது.

ஒவ்வொரு இனத்திற்கும் தங்கள் பழம்பெருமைகளைச் சொல்ல நிிறைய இருக்கலாம். ஆனால் அந்தப் பழமையிலேயே தங்கிவிடுவது தான் பேராபத்து. இலங்கை மண்ணில் தமிழர்கள் அந்த பெரும் தவறைச் செய்ததால் தான்- தங்களை நவீன உலகிற்கேற்ப புதுப்பித்துக் கொண்டு ஒன்று கலக்க முடியாததால் தான்- தங்கள் பெருமைகளை இழந்து பெரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மராத்தியர்களின் காவலர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருகின்ற தாக்கரேக்கள் தான் மராத்திய மக்களின் மாபெரும் பின்னடைவிற்கு காரணமாகிக் கொண்டிருக்கறார்கள் என்பதை அந்த மக்கள் உணர்வதற்கு நாளாகாது.

ஹிந்துக்களை காப்பாற்றுகிறோம் எனறு புறப்பட்ட இந்துத்துவ அமைப்புகளாலும், பாரதீய ஜனதா கட்சியாலும் தான் இந்துக்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டு, கோயில்களுக்கும், புனித தலங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது. எந்த ஒரு தீவிரவாததன்மை கொண்ட அமைப்புகளாலும் அந்தந்த இன, மத, மொழி மக்களுக்கு தீமைகளே தவிர நன்மைகளில்லை.

1966-ல் சிவசேனை பால்தாக்கரேவால் தொடங்கப்பட்ட போதே தேசிய சக்திகள் அதன் அபாயத்தை உணரத்தவறிவிட்டன. அதன் முதல் தாக்குதல் மும்பையில் பெரும்பாலான தொழிற்சாலைகளையும், வியாபார ஸ்தலங்களையும் வைத்திருந்த குஜராத்திகள், மார்வாடிகள் மீது பாய்ந்தது. அந்த தொழிற்சாலைகளாலும், வியாபார நிறுவனங்களாலும் மும்பையின் வளர்ச்சியை, மக்களுக்கு ஏற்பட்ட, வாய்ப்பு வசதிகளை எண்ணிப் பார்க்காமல் வன்மத்தை விதைத்தார் பால்தாக்கரே.

இதே பாணியைத் தான் ஆரம்ப காலத்தில் தமிழ்நாட்டில் தி.மு.க முயன்று தோல்வி கண்டது.

பிறகு தென்இந்திய மக்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டினார் பால்தாக்கரே. மும்பையில் உயர் நிர்வாகம் தொடங்கி அடிதட்டு வேலைகளைச் செய்வது வரை பல தளங்களிலும் தென்னிந்திய மக்கள் குறிப்பாகத் தமிழர்கள் சிறப்பாக பணியாற்றி வந்தனர். இவர்களால் மும்பை அடைந்த நன்மைகள் ஏராளம். ஆனால் குறுகிய கண்ணோட்டத்தில் மராத்தியர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோவநதாக பால்தாக்கரே பிரச்சாரம் செய்தார். உண்மையில் மும்பை மக்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றி அதனை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றவர்கள் அங்கு குடியேறிய மற்ற மாநில மக்கள் தான்! ஆனால் எதிர்மறை பிரச்சாரம் தான் எளிதில் மக்களை வென்றெடுத்து விடுகிறது.

அதன்பிறகு கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களுக்கு எதிராக களத்தில் இறங்கினார். சாதி, மத, இன பேதத்திற்கு அப்பால் தொழிலாளர்கள் என்ற உண்ர்வில் ஒன்றுபட்டிருந்த தொழிற்சங்க அமைப்புக்ள் சிவசேனாவின் வளர்ச்சிக்கு சரிபட்டு வருமா? 1970-ல் கம்யூனிஸ்ட் கட்சியின் தாதர் தொகுதி எம்.எல்.ஏ சிவசேனாவால் கொலை செய்ய்ப்பட்டார். அன்றைய தினம் காங்கிரஸ் நினைத்திருந்தால் சிவசேனாவை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்திருக்கலாம். நியாயமாக அப்படி தடைசெய்திருக்க வேண்டும். ஆனால் தங்கள் அரசியல் எதிரியான கம்யூனிஸ்டுகள் தாக்கப்படுவதில் காங்கிரஸ் உள்ளுற மகிழ்ச்சி அடைந்ததோ, என்னவோ? சிவசேனாவை

முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தால் இன்று அதன்வழித்தோன்றலான மகாராஷ்டிர நவநிர்மாண் கட்சி பிறந்திருக்குமா? அதன் உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்குள்ளேயே தனது தாய் மொழியும் தேசிய மொழியுமான இந்தியிலே அபுஆஸ்மி பதவி பிரமாணம் எடுத்ததை எதிர்த்து கொலைவெறி தாககுதலை சட்டமன்றத்திகுள்ளேயே நிகழ்த்தி இருப்பார்களா...?

தாக்கரேக்களின் வளர்ச்சிக்கு, கட்டுப்பாடற்ற வன்முறை வெறியாட்டங்களுக்கு காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்பட அனைத்து தேசிய இயக்கங்களும் பொறுப்பாக வேண்டும். இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களை சிவசேனா முன்னெடுத்தது என்பது அது பா.ஜ.கவுடன் அரசியல் கூட்டணி அமைக்க தொடங்கியதிலிருந்து தான் விஸ்வரூபம் எடுத்தது.அதன் பிறகு தான் மும்பை மட்டுமல்ல, இந்தியாவே ஒரு நிம்மதியிழந்த நாடாகிவிட்டது. மராத்திய கலாச்சாரத்தை, பழம்பெருமைகளை தூக்கிபிடிப்பதினால் சிவசேனாவை மற்ற கட்சியிலுள்ள தேசியவாதிகளான மராத்தியர்கள் ஏதோ ஒரு வகையில் அங்கீகரித்து விடுகின்றனரோ...?

சட்ட மன்றத்திற்குள்ளேயே கொலைமுயற்சியில் ஈடுப்ட்ட நான்கு எம்.எல்.ஏக்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்க வேண்டாமா? அந்த கட்சி தடை செய்யப் பட்டிருக்க வேண்டாமா? இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானவர்களை இருமபுக்கரம் கொண்டு ஒடுக்கியிருக்க வேண்டாமா? இப்படிச் செய்வதற்கு காங்கிரசுக்கும், தேசியவாத காங்கிரசுிக்கும் என்ன தயக்கம் வேண்டிகிடக்கிறது?

இந்துத்துவ கொள்கையின் கூட்டாளி என்பதாலேயே உத்திரபிரதேசம், பீகார் மாநில தொழிலாளர்களை மும்பையில் சேனாக்கள் தாக்குவதில் பா.ஜ.க உடன்படுகிறதா? ஏன் சட்ட மன்றத்திலே இந்தியிலேயே பேசி உறுதி மொழி எடுக்க மற்ற தேசிய கட்சிகளின் உறுப்பினர்கள் துணியவில்லை...? அபுஆஸ்மிக்கு ஏற்பட்ட அவமானம் ஒவ்வொரு இந்தியனுக்கும் ஏற்பட்ட அவமானம் தானே? அவர் மீது விழுந்த அடி இந்திய ஜனநாயகத்தின் பன்முகத் தன்மையின் மீது விழுந்த பலமான தாக்குதலல்லவா?

1992-லே பாபர் மசூதி இடிப்பை தொட்ர்ந்து நடந்த மும்பை கலவரத்திற்கு, அதில் இஸ்லாமியர்கள் கொடூரமாக கொல்லப்பட்தற்கு பால்தாக்கரே தான் பின்ணணியில் இருந்தார் என்று நீதிபதி கிருஷ்ணா தெளிவாக 2000 ஆம் ஆண்டு தீர்பளித்தார். பால்தாக்கரே கைது செய்யப்பட்டு, தண்டிக்கப் பட்டிருக்க வேண்டாமா?

'வாலாண்டியர்ஸ் டே' கொண்டாடினால் இளம் காதலர்களை தாக்குவார்கள், ஆபாசமாக நடிக்கிறார் என்று நடிகை கரினாகபூர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துகிறார்கள். தீபாமேத்தாவின் 'fire' படம் திரையிட்ட போது தியேட்டர்களை தாக்கினார்கள்! அடடா இந்த காட்டுமிராண்டிகளுக்கு யார் கலாச்சார காவலர் பணியைத் தந்தது? ஏன் இந்த தாக்குதல்களை கட்சி சின்னமான வில் அம்பை ஏந்திக் கொண்டு செய்திருக்கலாமே!

2006ஆம் ஆண்டு ஜீ தொலைகாட்சி அலுவலகத்தை தாக்கிய சிவசேனாவினர் தொடர்ந்து பல மீடியாக்களை தாக்கிவந்ததில் தற்போது ஐ.பி.என் தொலைக்காட்சி அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது. அதன் ஊழியர்கள், நிருபர்கள், ஆசிரியர் தாக்கப்பட்டுள்ளனர். அனைத்து இந்தியர்களும் இந்த இரு சேனாக்களையும் தடைசெய்ய வேண்டும் என்பதில் ஒன்று பட வேண்டும் குறிப்பாக மராத்தியர்க்ள தங்கள் மானம், மரியாதைகளை மீட்டெடுக்க சேனாக்களை தனிமைபடுத்த வேண்டும்.

மராத்திய மக்கள் வேறு மாநிலங்கள் சென்று பணிசெய்வதை மற்ற மாநிலத்தவர்கள் எதிர்க்க ஆரம்பித்தால் நிலைமை என்னாவது? அப்படி கோவா, ஹரியானா, பஞ்சாப், டெல்லி, தமிழகம், ஹிமாச்சலபிரதேசம் போன்ற இடங்களில் மராத்தியர்கள் கணிசமாக புலம்பெயர்ந்து வேலைபார்ப்பதன் அடிப்படையில் தானே சிவசேனா இந்த மாநிலங்களின் சட்ட மன்ற தேர்தலில் கூட போட்டியிடுகிறது.

இன்னும் எத்தனை அநீதி, அட்டுழியங்கள், அராஜகங்கள் நடக்க போகின்றனவோ? அதையெல்லாம் தடுத்து நிறுத்த இயலாமல் வெறுமனே கண்டனம் தெரிவிப்பது கண்துடைப்பல்லவா?

சேனாக்கள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும். அந்த கட்சிகளின் எலலாவித அங்கீகாரமும் ரத்து செய்யபட்டு பால்தாக்கரேயும், ராஜ்தாக்கரேயும் மனிதகுல விரோதிகளாக அறிவிக்கப்பட்டு கைது செய்ய வேண்டும்.

பால்தாக்கரேயின் சச்சின் குறித்த விமர்சனத்திற்கு சரமாரியாக எழுந்த எதிர்வினைகளைத் தொடர்ந்து மராத்தியர்களே கூட அவரது அறிக்கைக்கு மெளனம் சாதித்தையடுத்து தற்போது அவரது எடுபிடிகள் சில சச்சினை சீண்டி பிராபல்யம் தேடுகின்றனர்.

சிவசேனா எம்.பி.யான சஞ்சய் ராவ், 'சச்சினுக்கு இனி மராத்திய கிரிக்கெட் வீரர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள் என்றும் சுனில் கவாஸ்கரே உண்மையான மராத்தியன் என்றும் அறிவித்துள்ளார்.

சுனில் கவாஸ்கள் கேப்டனாக இருந்த போது சுமார் சரிபாதியளவுக்கு தன் டீமில் மராத்திய விளையாட்டு வீரர்களை வைத்துக் கொண்டாராம். கவாஸ்கர் ஒரு நேர்மையான மஹாராஸ்டிரியனராக இருந்ததால் தான் ஒட்டுமொத்த இந்தியாவும் அவரை நேசித்ததாம். ஆனால் டெண்டுல்கர் அப்படியிலலை என்று சிவசேனை எம்.பி. விளக்கம் தருகிறார்.

இந்த அறிவிப்பினால் இப்போது கவாஸ்கரை காலி செய்துவிட்டார் சஞ்சய் ராவ் என்று தான் கூற வேண்டும்.

இவ்வளவு நாளும் இந்திய மக்களுக்கே பொதுவான விளையாட்டு வீரராக அறியப்பட்டிருந்த கவாஸ்கர் இப்போது தான் கடந்த காலங்களில் ஒரு மராத்திய வெறியராக இருந்திருக்கிறாரோ... என்று நாட்டு மக்களை எண்ண வைத்து விட்டார் சிவசேனை எம்.பி. எந்தெந்த ம்ராத்தியரெல்லாம் இனி இந்தியாவுக்கு எதிராக மராத்திய நலன்களை மட்டுமே கவனத்தில் கொள்வார்களோ அவர்கள் மட்டும் சிவசேனாவின் நற்சான்றிதழ் பெறமுடியும் என்பதே சிவசேனாவின் நிலைபாடு. இது ஒட்டுமொத்த இந்திய மக்களையும் மராத்தியர்களுக்கு எதிராக மாற்றிவிடத் துடிக்கும் மனோபாவம். யானை தன் தலையில் தானே மண்ணள்ளி போட்டுக் கொண்ட கதையாகத் தான் இது முடியும். ஆகவே மராத்திய மக்கள் இந்த கோணல் புத்தி கோமாளிகளை, மனித குல எதிரிகளை தங்களிடமிருந்து தனிமைப்படுத்திட ஒட்டு மொத்த இந்திய மக்களும் துணை நிற்போமாக.