Thursday, November 14, 2013

வக்புவாரியங்கள் வளம் பெறும்                                                                                                                -சாவித்திரிகண்ணன்

இந்திய அரசின் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ரஹமான்கான் இஸ்லாமிய சமூகத்தின் சிந்தனைக்கு ஒரு அரிய கருத்தைக் கூறி உள்ளார்.

"இந்தியாவில் இஸ்லாமியர்கள் மிகவும் பின்தங்கி உள்ளனர் என அடிக்கடி நாம் சச்சார்கமிட்டியின் அறிக்கையை மேற்கொள் காட்டி பேசி வருகிறோம். ஆனால் நம்முடைய பின்தங்கிய நிலைக்கு நாமும் கூட காரணமாயிருக்கிறோம் என்பதை உணரமறுக்கிறோம்.

இந்தியாவில் வக்புவாரியத்திற்கு சொந்தமாக 4லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. ஆனால் இதில்70%மானவை ஆக்கிரமிக்கப்பட்டும் விற்கப்பட்டும், அபகரிக்கப்பட்டும் உள்ளன. மிச்சமுள்ள 30%முமே கூட முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை.

அப்படி முறையாகப் பயன்படுத்தினாலே கூட போதும் இஸ்லாமிய சமூகம் இந்தியாவில் நன்கு வளமாக வாழும். இதில் 500 கேந்திரியவித்யாலயாபோன்ற சிறந்த பள்ளிக்கூடங்ளை நடத்தமுடியும்"

திரு.ரஹமான்கான் அவர்கள் இப்போது மட்டுமல்ல, தொடர்ந்து இக்கருத்தை இஸ்லாமிய சமூகத்திடம் வலியுறுத்தி வருகிறார்.

'யானைக்கு தன் பலம் தெரியாது' என்பது போல இஸ்லாமிய சமூகம் இருப்பதால் அது அரசியல் அமைப்புகளின் ஓட்டுவங்கியாக மட்டும் மாறிப்போனது.

இந்தியாவில் வக்புவாரியத்திற்கான சொத்துமதிப்பு என்பது இந்திய பாதுகாப்புதுறை மற்றும் இந்திய ரயில்வேதுறைவசம் இருக்கும் நிலங்களுக்கு அடுத்த நிலை மதிப்பு கொண்டதாகும்.

இது தவிர வக்புவாரியத்திற்கு சுமார் 3லட்சம் கட்டிடங்கள் உள்ளன. 

இவை அனைத்தின் மதிப்பு 12,000லட்சம் கோடி!
ஆனால், வக்புவாரியங்களோ இன்னும் மத்திய, மாநில அரசுகளிடம் கையேந்தும் அமைப்புகளாக உள்ளன.

காரணம் வக்புவாரிய சொத்துகளை இஸ்லாமிய சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்கள், அரசியல் செல்வாக்குள்ளவர்கள் ஆக்கிரமித்து உள்ளதும், பொறுப்பில் உள்ளவர்கள் அதை மிகக்குறைந்த விலைக்கு விற்பதும், குத்தகைக்கு விடுவதும் தான்!

1954லும், 1995லும் வக்புவாரிய சட்டங்கள் உருவாக்கப்பட்டாலும், திருத்தப்பட்டாலும் அதில் எப்படியேனும் ஓட்டைகள் ஏற்படுத்திவிடுகிறார்கள். 

தமிழகத்தில் வக்புவாரியத்திற்கு சொந்தமாக 6,694 சொத்துகள் உள்ளன. இவற்றில் 4,500க்கு மேற்பட்டவற்றிலிருந்து எந்த வருமானமும் வக்புவாரியத்திற்கு கிடைப்பதில்லை. சுமார் 2,200 வக்பு சொத்துகளிலிருந்து மட்டுமே சொற்பமான வருமானங்கள் வருகின்றன.

இத்தனைக்கும் வக்பு சொத்தை அனுபவிப்பவர்கள் வருமானத்தில் 7% மட்டுமே வக்புவாரியத்திற்குத் தரவேண்டும்.

தமிழகத்திலுள்ள வக்புவாரிய சொத்துகளை முறையாக மீட்டெடுத்து நிர்வாகம் செய்தால் பலநூறுகோடி ஆண்டு வருமானம் கிடைக்கும் என்பது இஸ்லாமிய சமூக ஆர்வலர்களின் மதிப்பீடு. ஆனால் கிடைப்பதோ நூற்றில் ஒரு பங்கு அளவுக்கு கூட இல்லை! சுமார் 3கோடி தான்!
எனவே தான் வக்புவாரிய சொத்துகளை பழுதுபார்க்க, பராமரிக்கக்கூட மத்திய, மாநில அரசுகளிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

வக்புவாரிய நிலங்களில் கல்விகூடங்கள், சமூககூடங்கள், மருத்துவமனைகள் கட்ட 2004 மார்ச் முடிய மத்திய அரசு 2540கோடி வழங்கியுள்ளது! மாநில அரசுகளும் ஒரு சில கோடி ஒவ்வொரு ஆண்டும் தருகின்றன.

அத்துடன் 12வது ஐந்தாண்டுதிட்டத்தில் சிறுபான்மையினர் மேம்பாட்டிற்கு மத்திய அரசு 17,000கோடி ஒதுக்கி உள்ளது.

இவ்வளவு உதவிகள் கிடைத்தும் கூட இஸ்லாமிய சமூகம் இன்னும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணாமலே தான் உள்ளன!

ஏனெனில் அதிகார மையங்கள் வக்பு வாரியங்களுக்குள் நிதி உதவிகள் தருவதன் மூலம் வக்புவாரிய பொறுப்புகளுக்கு நேர்மையற்ற பேர்வழிகளை திணித்துவிடுகின்றன. பெறக்கூடிய சிறிய நிதி உதவிகள் வக்புவாரியங்கள் சுதந்திரமாக செயல்படுவதையும், ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துகளை மீட்டெடுப்பதையும் தடுத்துவிடுகின்றன.

இஸ்லாமிய சமூகத்தின் சொத்துகளை ஆக்கரிமித்துள்ளவர்களும், அதில் அதிகாரம் செய்பவர்களும் இறைவனுக்கு அச்சப்பட்டு தங்களை சுயபரிசோதனைக்கு ஆட்படுத்திக் கொண்டால் தான் இதற்கு தீர்வு.

சுதந்திரத்திற்கு முந்திய காலகட்டத்தில் இஸ்லாமிய சமூகத்தில் அப்பழுக்கில்லாத அர்ப்பணிப்புள்ள பல தலைவர்கள் இருந்தனர்.
அப்போது இருந்த மிகக்குறைந்த நிதியைக் கொண்டு சர்.சையதுஅகமதுகான் 100ஆண்டுகளுக்கு முன்பு அலிகார் பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தார். 
காந்தியவாதிகளான ஜாகிர் உசேன், அப்துல்கலாம் ஆசாத் போன்றவர்கள் ஏராளமான இஸ்லாமிய கல்வி நிலையங்களை தோற்றுவித்தனர். இன்றைக்கு அவர்களைப் போன்ற ஆளுமைகளை நாம் காணும் பட்சத்தில் இஸ்லாமிய சமூகத்தோடு ஓட்டுமொத்த இந்தியாவும் சேர்ந்தே வளம்பெறும்.

தந்திடிவிக்காக
செய்தியும், பின்ணணியும்,
14.11 .2013  

மறுக்கப்படவேணடியவையா மாதிரி பள்ளிகள்?


                                                                                                                    -சாவித்திரிகண்ணன்

இந்தியா முழுமையிலும் சுமார் 6000தேசிய மாதிரிபள்ளிகள் தொடங்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு தமிழகத்தில் தி.மு.க, பா.ம.க, கம்யூனிஸ்ட் கட்சிகளின் கடும் எதிர்ப்பை பெற்றுள்ளது!

தேசிய மாதிரி பள்ளிகளின் உருவாக்கப்படுவது ஏன்?
கட்டாயக் கல்வி உரிமைசட்டத்தின் படி அனைத்து குழந்தைகளுக்குமான கல்வி என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டவையே மாதிரி பள்ளிகள்.
அரசு பள்ளிகள் மூலமாக தரமான கல்வி என்பது எதிர்பார்த்த வெற்றிகளை தராததால் தனியார் நிர்வாக அனுபவப் பங்களிப்போடு அரசு செயல் படுத்தவிருக்கும் திட்டமே மாதிரி பள்ளிகள்!

மத்திய அரசு, மாநில அரசு, தனியார் ஆகியோரின் பங்களிப்புகள்:

ஃ மத்திய அரசின் நிதி உதவி 75%, மாநில அரசு25%

ஃ இதில் மாநில அரசு நிலமாகத் தன்பங்களிப்பைத் தரும்.

ஃ தனியார் கட்டிடங்கள் கட்டி பள்ளியை நிர்வகிக்கவேண்டும்.

ஃ இதில் ஒவ்வொரு பள்ளிக்கும் 1000மாணவர்களின் படிப்புக்கான முழு கல்விக்கட்டணத்தையும் அரசே தந்துவிடும். இந்த வகையில் ஒவ்வொரு மாணவனுக்கும் ரூ 21,000முதல் 22,000ரூபாய் அரசு தருகிறது.

ஃ தனியார் 1500மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம். அதில் கட்டணங்கள் வசூலித்துகொள்ளலாம்.

ஃ இந்தப் பள்ளிகளுக்கான நிதி, மாநில அரசு இதற்காக உருவாக்கும் - மாநில சொசைட்டி மூலம் மத்திய அரசால் வழங்கப்படும். இதில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் நியமனத்தில் மாநில அரசின் ஆலோசனை பெறவேண்டும்.

ஃ பள்ளிகளின் செயல்பாட்டை மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி சம்பந்தபட்ட இடத்தின் உள்ளாட்சி அமைப்பு தலைவரும் இணைந்தே கண்காணிக்கவேண்டும்.

ஃ இதில் அமைய உள்ள 6,000பள்ளிகளில் 3,500மத்திய அரசின் நிதியில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் மிகவும் பின் தங்கிய பகுதிகளில் ஆரம்பிக்கப்படும்! 2500பள்ளிகள் தனியார்களோடு இணைந்து செயல்படுத்தப்படும். 

தேசிய மாதிரி பள்ளிகளின் கல்விதிட்டம்:

கேந்தரிய வித்யாலயாவின் கல்வித்திட்டத்தோடு, தரத்தோடு இவை அமையும். அதே சமயம் சமூக, பொருளாதார தளத்தில் பின்தங்கிய மாணவர்கள் உயர்தரமான கல்வியை பெற வழிவகுக்கும்.

எந்த மொழியில் கல்வி என்பது மாநில அரசின் விருப்பம். ஆனால் ஆங்கிலம் சிறப்பாக கற்றுத்தரவேண்டும். 

அந்தந்த மண்ணுக்கேற்ற கல்வி,கலாச்சார மரபுக்களுக்கேற்ற கல்விக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.

விளையாட்டு மைதானம், தோட்டம், கருத்தரங்கம், நூலகம், சிறப்பான கம்யூட்டர்கல்வி, செயல்பாட்டுடன் கூடிய கல்வி, இசை, நடனம், மரபுக் கலைகளை பயிற்றுவிக்கும் கல்வி என ஒருங்கிணைந்த முழுமையான கல்வியே இலக்கு!

தலைமைப்பண்பு, கூட்டுமுயற்சி, பங்களிக்கும் ஆற்றல், மனித உறவுகளைபேணுவதில் மேன்மையான அணுகுமுறை... ஆகியவற்றோடு நடைமுறை வாழ்வில் சவால்களை எதிர்கொள்ளவும் பயிற்றுவிக்கப்படுவார்கள்.

இந்தவகையில் 25லட்சம் மாணவர்கள் - அதுவும் ஏழை, எளிய மாணவர்கள் தரமான சிறந்த கல்வியை பெறுவார்கள் - கட்டணமின்றி அதே சமயம் இத்திட்டத்தில் 30லட்சம் வசதியுள்ள மாணவர்கள் கட்டணத்தோடு இதே கல்வியை பெறுகிறார்கள்!

ஏன் எதிர்க்கப்படுகிறது?

ஃ அரசு தரும் நிலம் காலப்போக்கில் தனியார் கைகளுக்கு போகலாம் 

ஃ தனியார் கல்வியை லாபநோக்கத்துடன் அணுகவாய்ப்புண்டு.

ஃ பள்ளிக்கூட நேரம் தவிர மற்ற நேரங்களில் அக்கட்டித்தை மற்ற செயல்பாடுகளுக்கு - லாபநோக்கத்துடன்- தனியார் பயன்படுத்தலாம்

யார் நடத்தப்போகிறார்கள்?
பிரபல தொழிலதிபர்கள் ரத்தன் டாட்டா, முகேஷ் அம்பானி, ராகேஷ்பாரதிமிட்டல், ஷாஜன் ஜின்தல், ITC சேர்மன் தேவேஸ்வார் போன்ற 100க்கு மேற்பட்ட இந்தியாவின் மிக்ப்பெரிய தொழில்அதிபர்கள் முன்வந்துள்ளனர். 'கார்பரேட் நிறுவனங்களுக்கான சமூக கடமைகளை செய்யும் வாய்ப்பாக' இதை கருதுவதாக தொழில் அதிபர்கள் தெரிவித்துள்ளனர். நமது தமிழக அரசை பொறுத்தவதை இது வரை எதிர்ப்பு எதையும் தெரிவிக்கவில்லை.


தந்திடிவிக்காக
செய்தியும், பின்ணணியும்,
04.11 .2013 

Wednesday, November 13, 2013

வியக்கவைக்கும் தமிழ்திரையுலக வியாபாரச் சாதனைகள்!


                                                                                                                -சாவித்திரிகண்ணன்

இந்திய சினிமா 100ஆண்டுகால வரலாறு கொண்டது. 

இந்திய சினிமாவில் இந்திய மொழிக்கு அடுத்தபடியான பெரிய பங்களிப்பு தரும் மொழிப்படம் என்றால் அது தமிழ்படங்களே! தமிழ்மொழியில் இதுவரை 5,300படங்களுக்கு மேல் வெளிவந்துள்ளன.

இந்திமொழிப்படங்களுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் படங்கள் வெளிவருவது தமிழ்மொழிபடங்களே!

அதோடு இந்திப்படங்களுக்கு அடுத்தபடியாக வசூல் சாதனைகளில் மிஞ்சி நிற்பது தமிழ்மொழிபடங்களே.

அது மட்டுமின்றி தமிழ்மொழிபடங்களின் விளம்பரம் என்பது உலகசினிமா வட்டாரத்தையே அதிசயப்படவைக்கிறது!

தியாகராஜபாகவதர், பி.யூ.சின்னப்பா காலங்களில் படங்களின் வசூல் ஆயரங்களில் இருந்தது. அன்று லட்சத்தை தாண்டினாலே சாதனையாக பேசப்பட்டது.

எம்.ஜி.ஆர், சிவாஜி காலகட்டத்தில் படங்களின் செலவு லட்சங்களைக் கண்டது அப்போது இவர்கள் இருவரைத் தவிர மற்றவர்களின் சம்பளம் ஆயிரங்களில் தான் இருந்தது.

கமலஹாசன், ரஜினிகாந்த் நடித்த திரைபடங்களின் வசூல் கூட 1980களுக்குப் பிறகு தான் கோடிகளைத் தொட்டுக் கடந்தது.

ஆனால், 1990களுக்குப் பிறகு தமிழ்த்திரைப்படங்களின் வசூல் கூட 1980 வியக்கத்தக்க வகையில் ஏறுமுகமாயின.

1996ல் வெளியான 'இந்தியன்' திரைப்படவசூல் -32கோடி என்ற உச்சத்தை தொட்டது. அதற்குப்பிறகு 1999ல் வந்த 'படையப்பா' அதை விஞ்சி 37கோடி என்ற உச்சத்தை தொட்டது.

இதன்பிறகு 2000ஆம் ஆண்டுகளில் பிலிம் இண்டஸ்ட்டி பிரமிக்கத்தக்க எல்லைகளைத் தொட்டது. 2005ல் சந்திரமுகி 25கோடி செலவு, 65கோடி வசூல்.

2007ல் வெளியான ஏ.வி.எமெமின் சிவாஜி 60கோடி செலவில் உருவானது அதன் வசூல் 128கோடி என்பது இந்திய திைருலகத்தையே திகைக்க வைத்தது.

ஆனால் 2008ல் கமலஹாசனின் தசாவதாரம் அதைக்காட்டிலும் அதிக செலவில் 61கோடியில் தயாராகி 94கோடி வசூலைகண்டது.

2009ல் வெளியான 'அயன்' 15கோடி செலவில் 60கோடி வசூலானது. 

2010ல் வெளியான 'எந்திரன்' படம் தான் இந்திய திரை உலகே காணாத இமாலய வசூலாக 375கோடியைத் தொட்டது. படத்தின் செலவு 160கோடி!
இந்த வசூல் சாதனையை இரண்டாண்டுகளுக்குப் பிறகு வெளியான அமீர்கானின் '3இடியட்ஸ' தான் முறியடித்து, 385 கோடி என்ற உச்சத்தை தொட்டது. 
சமீபத்தில் வெளியான ஷாருக்கனின் சென்னை எக்ஸ்பிரஸ் 315கோடி வசூலானது.

ரஜினிகாந்த், கமலஹாசனுக்கு அடுத்தபடியாக விஜயின் படங்களான நண்பன் (110கோடி) துப்பாக்கி,தலைவா போன்றவை 100கோடி வசூலைக் கடந்தபடங்களாகும். 'வேலாயுதம்' 60கோடி வசூலை தந்தது.அஜீத்தின் மங்காத்தா 68கோடியை கண்டது. தற்போது வெளியாகியுள்ள அஜீத்தின் ஆரம்பம் 100கோடியை கடக்கும் என நம்பப்படுகிறது. இது போன்ற 'திமிங்கல' படங்களுக்கு இடையே சிறிய மீன்களென சிறு படங்களும் கணிசமாக வெளியாகி சினிமா இண்டஸ்டிரியை வாழவைக்கிறது.

'மெரினா' படம் 1கோடியில் தாயாராகி 3கோடி வசூலானது. இது போல குறைந்தபட்ஜெட்டிலும், பெரிய ஸ்டார் பலம் இல்லாமலும் வெளிவந்த எதிர்நீச்சல், பீட்சா, வழக்குஎண் 18/9, சூதுகவ்வும், இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நீர்பறவை, வெண்ணிலாகபடிக்குழு... போன்ற பல படங்கள் தயாரிப்பாளர்களுக்கு சில லட்சங்கள் அல்லது ஒரிரு கோடி லாபங்களை தந்துள்ளன. உண்மையில் சிறிய பட்ஜெட் படங்கள் தான் திரையுலகை உயிர்ப்போடு வைத்துள்ளன.

இவை ஒரு புறமிருக்க, தமிழ்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகியும் வசூலை குவிக்கின்றன. கஜினி, போக்கிரி, சிங்கம், பந்தாபரமசிவம் போன்றவை இந்தியில் ரீமேக்காகி ஒவ்வொன்றுமே 100கோடிவசூலைத் தாண்டியது.

இவை தவிர, மொழிமாற்றப் படங்கள் சிலவும் தமிழகத்தில் ஓரளவு வசூலை பெற்றுத் தருகின்றன. ஹாலிவுட் படங்களான அவதார், தி அமேசிங் ஸ்பைடர்மேன், ஸ்கைபால் போன்ற படங்களுக்கும் தமிழ் ரசிகர்கள் ஒரு சில கோடி லாபங்களை அள்ளித்தந்துள்ளனர்.

தமிழ்மொழிபடங்களின் வெளிநாட்டு வியாபாரமும், வசூலும் சமீபகாலங்களில் மிகவும் விரிவடைந்துள்ளது குறிப்பிடதக்கது.

இந்திபேசும் மக்கள் இந்தியாவில் 54% உள்ளனர். ஆனால் தமிழ்பேசும் மக்களோ 7.5 % தான்! சமீபத்தில் பிக்கி (FICCI) அமைப்பின் தகவல்படி தமிழ்திரையுலகின் ஆண்டுவருமானம் சுமார் ஆயிரம் கோடியை நெருங்கி உள்ளது.

தமிழர்கள் கலை படைப்புகளை உருவாக்குவதிலும், ரசிப்பதிலும் காட்டும் ஈடுபாடு ஈடிணையற்றது. அவர்கள் புலம்பெயர்ந்து எந்த நாட்டில் வாழ்ந்தாலும் எந்தக் கலாச்சாரத்தில் திளைத்தாலும் இந்த ஈடுபாடு குறைவதில்லை.

ஆண்டிப்பட்டியில் வாழ்ந்தாலும், அமெரிக்காவில் வாழ்ந்தாலும் தமிழனின் திரைப்பட ரசனை தேக்கமின்றி வளர்வதாகவே உள்ளது.

தியேட்டர்களின் கட்டண உயர்வு, சிறப்பு திரைப்படக் காட்சிகள் என்பதாக முதல் மூன்று நாட்கள் கூடுதல் கட்டணம்... என என்ன நிகழ்ந்தாலும் ரசிகர்கள் திரைப்படங்களை கைவிடுவதில்லை.

இதனால் தான் தமிழ்சினிமா இண்டஸ்டிரியை நம்பி வாழும் தொழிலாளர்கள் பலமும், எண்ணிக்கையும் இந்தியாவிலேயே வேறெங்கும் காண முடியாத விசித்திரமாகும்! 

தந்திடிவிக்காக
செய்தியும், பின்ணணியும்,
13.11 .2013 

Tuesday, November 12, 2013

கொத்துக் கொத்தாக மடியும் கால்நடைச் செல்வங்கள்...!                                                                                                                       சாவித்திரிகண்ணன்

நடமாடும் தெய்வங்களாக விவசாயிகளால் போற்றப்படும் கால்நடைகள் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடும் ஆபத்தை சந்தித்து வருகின்றன.

காற்றிலும், தண்ணீர் வழியாகவும் பரவும் ஒரு வகை 'O' வைரஸ் கிருமிகள் கர்நாடகத்திற்கு அடுத்து தற்போது தமிழக கால்நடைகளை பதம் பார்த்து வருகின்றன.

கர்நாடாகாவில் இறந்த கால்நடைகள் சிலவற்றை அங்கே காவிரியில் வீசி எறிய, காவேரி வழியே கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருச்சி, தஞ்சை மாவட்டங்களை தாக்கிய ஒரு வகை கால்நடை கோமாரி நோய் தற்போது ஈரோடு, கடலூர் போன்ற மேற்கு வடக்கு தமிழகத்திற்குள்ளும் தன் தாக்குதலை தொடங்கிவிட்டது.

கிருஷ்ணகிரியில்           -2,500 கறவை மாடுகள்
தர்மபுரியில்                       -3,000 கறவை மாடுகள்
நாகைமாவட்டத்தில்       -2,500 கறவை மாடுகள்

என நீண்ட பட்டியல்படி, இது வரை தமிழகத்தில் 10,000க்கு மேற்பட்ட கால்நடைகள் களப்பலியாகியுள்ளன..! 

மூக்கு சுவாச துவாரங்களில் புண்கள், கால்களின் நகங்களுக்கிடையே புண்கள் என அறிகுறிகள் தென்படுகிறது. மாடுகளின் தாடைவீங்குகிறது, வாயில் நுரை கொட்டுகிறது. இதற்கு பின் 2முதல் 6நாட்களுக்குள் மாடுகள் இறந்துவிடுகின்றன.

தங்கள் வாழ்வாதாரமாக கருதிய மாடுகளை பறிகொடுத்துவரும் விவசாயிகள் மிகவும் அதிர்ந்து போயுள்ளனர். அவர்கள் பறிகொடுத்தது கால்நடைகளை மட்டுமல்ல, தங்கள் வாழ்க்கையையும் தான்!

இந்தத் துயரத்திலிருந்து அவர்களை மீட்க அரசுதான் நிவாரண உதவி தரவேண்டும். ஆனால் இது வரை அரசு அறிவிக்கவில்லை.
அது மட்டுமல்ல, இந்த நோயைத் தடுக்கும் சரியான மருந்தும், சிகிச்சை முறையும் அரசிடமில்லை. அரசு தரும் சிகிச்சைகள் ஓரளவு மட்டுமே பலனளித்துள்ளன என்றும் விவசாயிகள் கூறுகிறார்கள்.

புதுதில்லியில் செயல்படும் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் உயிர்தொழில்நுட்ப பிரிவு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்திற்கு ரூ 23லட்சம் மதிப்புள்ள கால்நடைநோய்களை கண்டறியும் நவீன கருவிகளை தந்துள்ளது. ஆனால், இது வரை எந்தப் பலனும் இதனால் தமிழக கால்நடைகள் காணவில்லை. தமிழகத்தில் 20கால்நடைநோய் புலனாய்வு பிரிவுகள் உள்ளன. ஆயினும் இந்த நோயை வருமுன் தடுக்கவோ, வந்தபின் குணப்படுத்தவோ இயலாத அவலம் தொடர்கிறது.

தமிழகத்தில் உள்ள பசுக்களின் எண்ணிக்கை           -1கோடியே 11லட்சத்து 89,000
தமிழகத்தில் உள்ள எருமைமாடுகளின் எண்ணிக்கை       -20லட்சத்து 9,000
தமிழகத்தில் உள்ள செம்மறி ஆடுகள் எண்ணிக்கை           -79லட்சத்து 91,000
தமிழகத்தில் உள்ள வெள்ளாடுகள் எண்ணிக்கை                -92லட்சத்து 75,000

இவற்றை பராமரிக்க, மருத்துவ சிகிச்சை தருவதற்கு தேசிய வேளாண் ஆணையப் பரிந்துரையின் படி 3,255கால்நடை நிலையங்கள் தேவை. ஆனால் இருப்பதோ - 2,500தான்! அதிலும் கால்நடை ஆய்வாளர்கள், உதவி மருத்துவர்கள், பணியாளர்களின் பணி இடங்கள் ஆயிரக்கணக்கில் நிரப்பப்படாமல் உள்ளன.

கால்நடைகளை பேராபத்து சூழ்ந்துள்ள இந்தச்சூழலில் போர்கால நடவடிக்கையோடு அரசு இயந்திரம் செயல்படுவதற்கு இது பெரும் பின்னடைவைத் தந்துள்ளது. எனினும் தமிழக அரசு பல இடங்களில் கால்நடை சிறப்பு முகாம்களை அமைத்து செயல்பட்டுவருவதை மறுக்க முடியாது.

இந்நிலையில் இந்த நவீனநோயை நமது பாரம்பரிய மருத்துவத்தால் மட்டுமே குணப்படுத்த இயலும் என்றும், இது போன்ற நோய் தாக்குதலுக்கு நமது பாரம்பரிய மாடுகள் பலியாவதில்லை கலப்பின முறையில் செயற்கையாக கருத்தறித்து உருவாக்கப்பட்ட மாடுகளே எளிதில் பலியாகின்றன என்றும் கால்நடை மருத்துவ நிபுணர்கள் கூறி உள்ளது கவனத்திற்கு உரியது.

தமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தை அணுகியபோது அவர்கள் தெரிவித்த நமது பாரம்பரிய மருத்துவ அணுகுமுறைகள் நல்ல பலன்களை தந்துள்ளது என சில விவசாயிகள்தெரிவித்தனர்.

அதன்சாராம்சம் இது தான்; வெந்தயம், சீரகம், மிளகு ஆகியவற்றை தலா 2டீஸ்பியுன் எடுத்து ஊறவைத்து மஞ்சள்பொடி, நாட்டுச்சக்கரை, தேங்காய், பூண்டு சேர்த்து அரைத்து மாடுகளுக்கு தருவது நல்ல பலனளிக்கின்றது. அத்துடன் 1லிட்டர் நல்லெண்ணெயில் துளசி, வேப்பிலை, மஞ்சள், குப்பைமேனி, மருதாணி கலந்து கொதிக்கவைத்து ஆறிய பின் மாடுகளின் கால்களிலும், முகத்திலும் தேய்த்தால் நோய் கிருமிகள் விலகிவிடும்.

இதனை தமிழக அரசு விளம்பரம் செய்யலாம். கால்நடை மருந்தகங்களிலும் வழங்கலாம். 


தந்திடிவிக்காக
செய்தியும், பின்ணணியும்,
12.11 .2013 

அரபுநாடுகளில் அல்லல்படும் இந்தியர்கள்                                                                                                                     -சாவித்திரிகண்ணன்

'அரபுநாடுகள் சென்றால் அதிகமாக சம்பாதிக்கலாம்' என்று அங்கு தங்கள் உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு சென்ற இந்தியர்கள் இப்போது கடும் பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்! 

அரபு நாடுகளான சவூதி அரேபியா, ஒமன், குவைத், சிரியா, லெபனான், ஐக்கிய குடியரசு, கத்தார் பக்ரைன், அபுதாபி ஆகியவற்றில் சுமார் 24லட்சம் இந்தியர்கள் தங்கள் உழைப்பை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது அந்நாடுகளில், 'அயலவர்களால் சொந்த நாட்டு மக்களுக்கே வேலையில்லாமல் போகிறது' என்ற குற்றச்சாட்டுகள் வலுத்ததால் ஒவ்வொரு நிறுவனத்திலும் மண்ணின் மைந்தர்களுக்கு குறிப்பிட்ட சதவிகிதப் பணியிடங்கள் தரவேண்டும் என அந்நாட்டு அரசுகள் சட்டம் கொண்டு வந்துள்ளன.

இந்நாடுகளில் இந்தியர்கள் மட்டுமின்றி பாகிஸ்தானியர், இலங்கையினர், பிலிப்பைன்ஸ் நாட்டினர், வங்கதேசத்தினர்... என ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் வேலைசெய்துவருகின்றனர்.

அரபுநாடுகளில் வேலைபார்பதில் வளரும் நாடுகளிலுள்ள ஏழை, எளிய உழைப்பாளிகள் இடையே போட்டாபோட்டிகள் உருவானதைத் தொடர்ந்து அங்கு சம்பளக் குறைப்புகள், அலைகழிப்புகள், அவமானங்கள்... என பல நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன.

"வேலைசெய்யும் பணிப்பெண்களை சித்தரவதைசெய்தல், உழைப்பாளர்களிடம் 15மணிநேரத்திற்கும் மேலாக வேலைவாங்குவது, பொய்குற்றச்சாட்டுகள் சுமத்தி சம்பளம் தராமல் ஏமாற்றுவது, செய்யாத குற்றத்திற்கு கடும் தண்டனை அளிப்பது.. என பலவித மனித உரிமை மீறல்கள் அரபுநாடுகளில் நடக்கின்றன" என்பதை 2004லேயே உலகமனித உரிமை அமைப்பும், அம்னெஷ்டிக் இண்டர்நேஷனலும் உலகத்திற்கு வெளிபடுத்தின.

இந்தியப் பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் வயலார் ரவி இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மை தான் என்றார். அரபு நாடுகளிலுள்ள இந்திய தூதரங்களில் இது போன்ற புகார்கள் குவிக்கின்றன என்பதையும் அமைச்சர் புள்ளி விபரங்களோடு வெளியிட்டார்.

குவைத் இந்திய தூரதரகத்தில் -3087 புகார்கள்
சவூதி அரேபிய தூரதரகத்தில் -2547 புகார்கள்
ஒமனிலுள்ள தூரதரகத்தில் - 2183 புகார்கள்
பக்ரைனிலுள்ள தூரதரகத்தில் -812புகார்கள் என பட்டியலிட்டார்

அரபு நாடுகளில் மனித உரிமை மீறல்கள், கெடுபிடிகள் தொடர்பாக 10லட்சம் வெளிநாட்டினர் தத்தம் நாடு திரும்பி உள்ளனர். வேலை இழந்த வகையில் சவூதி அரேபியாவில் இருந்து 1,35,000இந்தியர்களும், குவைத்திலிருந்து 5,000பேரும் இந்தியாவிற்கு திரும்பியுள்ளனர். இன்னும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் திரும்பவரக்கூடும் எனவும் தெரிகிறது.

வெளிநாடுகள் சென்று தங்கள் கடும் உழைப்பால் இந்தியாவிற்கு பலநூறுகோடி அந்நியச் செலவாணி ஈட்டித்தரும் இந்தியர்கள் விஷயத்தில் நமது இந்தியத் தூரதரகங்கள் சரியாக அக்கரை காட்டுவதில்லை என்று புகார்கள் அங்குள்ளவர்களால் அடிக்கடி வைக்கப்பட்டுள்ளன.

பிலிப்பைன்ஸ் நாடு தன் குடிமக்கள் அரபுநாடுகளில் வேலைசெய்வதற்கு அங்குள்ள நிறுவனங்களுக்கு திட்டவட்டமான விதிமுறை வகுத்து அளித்துள்ளது. அதில் குறைந்தபட்சம் இவ்வளவு சம்பளம் இருக்கவேண்டும், வேலைநேரங்கள், விடுமுறைநாட்கள் போன்றவற்றை உறுதிபடுத்துகிறது. அது போன்ற அணுகுமுறைகளை இந்தியாவும் மேற்கொள்ளும் பட்சத்தில் இந்திய உழைப்பாளிகளின் துயரம் முடிவுக்கு வந்து கண்ணியம் காப்பாற்றப்படும்.

இது தவிர முறையான விசா இல்லாதவர்கள், விசாமுடிந்தவர்கள், கொடுமைகளுக்கு ஆட்படுத்தப்பட்டு உழல்பவர்கள் ஆகியோரை இந்தியாவிற்கு விரைவில் திரும்ப அழைக்க இந்திய அரசு முயற்சிக்க வேண்டும்.

நம் இந்திய மக்களின் கடும் உழைப்பால், அர்ப்பணிப்பால் அரபுநாடுகள் செழித்தது போதும்! இந்திய மண்ணும் வளம் பெறட்டுமே. உழைக்கும் மக்கள் சொந்த நாட்டிற்கே பாரமாக முடியுமா என்ன? அவர்களை முறையாக பயன்படுத்திக் கொள்ள மத்திய, மாநில அரசுகள் திட்டமிடவேண்டும்!

அரபுநாடுகளில் வேலைக்குச் சென்ற இந்தியர்கள் 24லட்சத்தில், கேரளத்தவர்கள் மட்டுமே 13லட்சம், தமிழர்கள் 6லட்சம் என்பதால் இரு மாநில அரசுகளும் இதில் அக்கறை காட்டவேண்டும்.

தந்திடிவிக்காக
செய்தியும், பின்ணணியும்,
11.11 .2013 

புகையிலை, குட்காவிற்கு எதிராக ராஜஸ்தான் அரசின் உறுதியான நடவடிக்கை                                                                                                                    -சாவித்திரிகண்ணன்

"அரசு பணிக்கு வர விரும்பும் இளைஞர்கள் புகையிலை குட்காவை பயன்படுத்தமாட்டோம்' என உறுதிமொழி தந்தால் தான் வேலை" என ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

அதிர்ச்சி தரத்தக்க வகையில் புகையிலை குட்கா பயன்பாட்டின் அதிகரிப்பும், எப்படியாவது இந்தப் பேரழிவிலிருந்து இளைஞர்களை காப்பாற்றியாக வேண்டும் என்ற நோக்கத்திலும் இப்படி ஒரு நிலையை ராஜஸ்தான் மாநில அரசு எடுத்துள்ளது.

குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் புகையிலை மற்றும் அது சார்ந்த பொருட்களின் பயன்பாடு முன்எப்போதைவிடவும் அதிகரித்துள்ளது!

ஆண்கள் -60% பெண்கள் -32% பயன்படுத்துகிறார்கள் என சமீபத்திய புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

"இந்தியாவில் புகையிலைப் பயன்பாட்டால் ஒவ்வொரு ஆண்டும் இறப்போர் எண்ணிக்கை - 9லட்சம் முதல் 10லட்சம் வரை!

அதாவது தினசரி சுமார் 2,500பேர் இறக்கிறார்கள்" - என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாய்தொடங்கி வயிறுவரை ஏற்படும் புற்றுநோய், காசநோய், மாரடைப்பு, ரத்தக்கொதிப்பு, நுரையீரல்நோய்கள், ஜீரணக்கோளாறு, தூக்கமின்மை, மூளைபாதிப்பு, ஆண்மை இழப்பு, போன்ற பல நோய்களுக்கு புகையிலை மூலகாரணமாகின்றன.

எனவே தான் உலக சுகாதார நிறுவனத்தின் முன் முயற்சியால், புகையிலை கட்டுப்பாட்டிற்கான சட்டபூர்வ ஒப்பந்தம் - 2003ல் கொண்டுவரப்பட்டது. இதில், இந்தியா உள்ளிட்ட 174நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்தே தமிழகம் போன்ற மாநிலங்கள் புகையிலை பொருட்களாக பான்பராக், குட்கா விற்பனைக்கு தடைவிதித்துள்ளது.

புகைபிடிப்பது பொது இடங்களில் குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கணிசமான இளந்தலைமுறையினர் காப்பாற்றப்பட்டுள்ளனர்...! 

உலக அளவில் மனித இறப்பிற்கு புகையிலை இரண்டாவது பிரதான காரணமாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

எனவே தான் உலகில் 174நாடுகளில் சில விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஊடகங்களிலோ, பொது இடங்களிலோ புகையிலை பொருட்களின் விளம்பரத்தை அனுமதிக்கக்கூடாது.

கல்வி நிறுவனங்களின் உள்ளும், புறமும் கண்டிப்பாக புகையிலை சார்ந்த பொருட்களை விற்கக்கூடாது.

18வயதுகுட்பட்டவர்களுக்கு விற்பது சட்டப்படி குற்றம்.

திரைப்படங்களில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் வந்தால் 'புகைபிடித்தல் உடல் நலனுக்கு தீங்கானது' என்ற எச்சரிக்கை வாசகம் தவறாமல் காட்டவேண்டும்.

இவை போன்ற விதிகளால் கூட புகையிலை பயன்பாட்டை குறைக்க முடியவில்லை என்பதே நடைமுறை யதார்த்தமாக உள்ளது.

அப்படியானால் புகையிலை உற்பத்திக்கே தடைவிதித்தால் என்ன?

என்ற கேள்விகள் அரசை நோக்கி சமூக ஆர்வலர்களால் எழுப்பபட்டன உலகில் புகையிலை ஏற்றுமதியில் இந்தியா பிரதான இடம் வகிப்பதோடு கணிசமான லாபத்தையும் ஈட்டும் நாடாக உள்ளது.

2012-2013ல் இந்தியாவின் புகையிலை ஏற்றுமதி -2,63,575டன்கள் இதன் மொத்த மதிப்பு - 4,979கோடிகள்!


இந்தியா புகையிலை ஏற்றுமதி செய்யும் நாடுகள்:

இந்தோனேஷியா, அமெரிக்கா, ரஷ்யா, கொரியா, தென்ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள், பிரான்ஸ் ஆகியவை!

ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் பல்லாயிரம் விவசாயிகள் இதனைப் பயிரிடுகின்றனர். பலனடைகின்றனர்!

"புகைபிடிப்பதால் எனக்கு எந்த நோயும் கிடையாது. அளவோடு தான் புகைக்கிறேன்" என பலர் கூறிவருகின்றனர். ஆனால், 'ஒவ்வொரு சிகரெட்டும் மனித ஆயுளில் 7முதல் 14நிமிடங்களை காவு கொள்கிறது' என்பது சர்வதேச ஆய்வில் வெளிப்பட்டுள்ள உண்மை!

எனினும், ஆபத்தோடு விளையாடுவதில் மனிதர்களுக்கு அளவில்லா ஆனந்தம் போலும்! 

தந்திடிவிக்காக
செய்தியும், பின்ணணியும்,
08.11 .2013 


காமன்வெல்த் சர்ச்சைகள்

                                                                                                              -சாவித்திரிகண்ணன்

இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் 53நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங் கலந்துகொள்வது குறித்து எதிர்ப்பான கருத்துகளும் ஆதரவான கருத்துகளும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

தமிழக கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.திக விடுதலைசிறுத்தை தமிழ்தேசிய அமைப்புகள் பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஃ இலங்கை அரசாங்கம் 2009ல் விடுதலைப்புலிகளுடனான போரில் அப்பாவி மக்களை ஈவிரக்கமின்றி கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்க காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது.

ஃ இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதன் மூலம் இலங்கைக்கு தர்மசங்கடத்தை உருவாக்கவேண்டும். என்று எதிர்ப்பவர்கள் தரப்பில் கூறிவருகிறார்கள்.

ஆனால் இந்திய வெளிஉறவுத்துறை அமைச்சகமும், தேசியபாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் போன்றோரும் பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தி வருகின்றனர். அதன் சாராம்சம்:

பிரதமர் கலந்து கொள்வதற்கான அவசியங்கள்;

 இம்மாநாட்டில் 53நாடுகளுனுடனான இந்தியாவின் உறவுகளை பலப்படுத்தும் வாய்ப்பை இந்தியா இழக்க கூடாது! இந்நாடுகளுடனான பொருளாதார, வர்த்தக பரிவர்த்தனை, கலை, கலாச்சார பரிமாற்றங்கள்.... போன்றவை முக்கியத்துவம் வாய்ந்தவை.

நமது அண்டைநாடுகளான பாகிஸ்தானின் தீவிரவாதபோக்குகள், சீனாவின் ஊடுருவல்கள் போன்றவற்றிக்கு எதிரான இந்தியாவிற்கு ஆதரவான கருத்தாக்கத்திற்கு இம்மாநாடு மிகவும் உதவும்.

 இலங்கை அரசுடன் நட்பு பாராட்டுவதன் மூலம் தான் அங்குள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா செய்துவரும் அளப்பரிய, அத்தியாவசிய உதவிகளை தொடரமுடியும்.

பா.ஜ.கவின் தேசியத்தலைமையும், "இந்தியாவின் நலம் சார்ந்து நாம் முடிவெடுக்கவேண்டும். இதில் பிரதமருக்கும், அரசுக்கும் தர்மசங்கடத்தை உருவாக்கவிரும்பவில்லை" என தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வதை இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான கண்ணோட்டத்துடன் தான் பார்க்கிறது. அத்துடன் தமிழகம் தவிர்த்த இந்தியாவின் மற்ற மாநிலகட்சி எதுவும் பிரதமரின் காமன்வெல்த் பயணத்தை எதிர்க்கவில்லை.

இலங்கையின் வட மகாணத்து முதல்வர் விக்னேஷ்வரன் இலங்கைக்கு பிரதமர் மன்மோகன்சிங் வருவதை வரவேற்றுள்ளார்.

தமிழகத்தில் சில கட்சிகளும், இயக்கங்களும் இலங்கைக்கு பிரதமர் செல்வதை எதிர்த்து ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் செய்கின்றனர். இதில் மாணவர்கள், இளைஞர்கள் தூண்டிவிடப்படுகின்றனர். தபால்நிலையங்கள் சிலவற்றில் பெட்ரோல் குண்டுகள் எறியப்பட்டுள்ளன. இப்படியாக இலங்கைத் தமிழர்களை ஆதரிக்கும் போட்டா போட்டியில் மாநிலகட்சிகள் தமிழகத்தை உணர்ச்சி கொந்தளிப்பில் ஆழ்த்துகின்றன.

ஆனால், இலங்கையில் உள்ள எந்த அமைப்பும், மக்களும் இந்தியா கலந்துகொள்வதை எதிர்த்து போராடவில்லை.

"இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பதை எதிர்க்கும் தமிழக கட்சிகள் இலங்கை வந்து உண்மை நிலையை அறியவேண்டும்" என்று இலங்கை அரசு தரப்பில் வேண்டுகோள் விடுவிக்கப்பட்டுள்ளது.

இவை ஒரு புறம் இருக்க, தமிழகத்தில் இளைஞர்கள், மாணவர்கள் போன்றோர் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீவிரமாக போராடும் சூழல் உருவாக்கப்பட்டு வருவதன் பின்னணியில் சில பிரிவினைவாத தீயசக்திகளின் கரங்கள் மறைந்துள்ளன.

ஜனநாயகத்தில் கருத்து தெரிவிக்கவும், போராடவும் அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் இந்திய தேசியத்திற்கு எதிராகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவுமான தமிழ்தேசிய கண்ணோட்டங்கள் தமிழகத்தில் இலங்கை பிரச்சினையை மையப்படுத்தி வலுப்பட்டு வருவது ஆபத்தானது...!


இந்தியாவின் தேசிய கட்சிகளும், மற்ற மாநிலகட்சிகளும், பெருந்திரளான இந்திய மக்களும் இந்திய நலன்களுக்கு எதிரான போக்கிற்கு ஆதரவு தரமாட்டார்கள்.

நமது தமிழக முதல்வர் அவர்களும் இந்திய இறையாண்மைக்கு எதிரான துவேஷ பிரச்சாரங்களை ஒரு போதும் அனுமதிக்கமாட்டார்.

தந்திடிவிக்காக
செய்தியும், பின்ணணியும்,
05.11 .2013

தீபாவளி விபத்துகள் - ஒரு பார்வை

                                                                                                                      -சாவித்திரிகண்ணன்

தீபாவளித் திருநாள் பல விதங்களில் மகிழ்ச்சியை தருகிறது. அதே சமயம் மிதமிஞ்சிய மகிழ்ச்சியில் விழிப்புணர்வில்லாமல் செயல்படும்போது விபத்துகள் ஏற்பட்டு விபரிதங்கள் சம்பவிக்கின்றன.

ஆண்டுதோறும் ஒவ்வொரு தீபாவளி கொண்டாட்ட முடிவிலும் விபத்து குறித்த செய்திகள் இடம்பெறத் தவறுவதில்லை.

பெருநகரங்களில் தான் அதிக தீ விபத்துகள் தீபாவளி பட்டாசுகளால் சம்பவிக்கின்றன. பட்டாசுகளின் விற்பனை என்பது 20,000கோடி சந்தைக்குரியது!

ஃ டெல்லியில் ஒவ்வொரு தீபாவளியின் போதும் 210 முதல் 270 தீ விபத்துகள் சம்பவிக்கின்றன!

ஃ மும்பையில் 300முதல் 350தீவிபத்துகள்

ஃ கல்கத்தாவில் சராசரியாக 200 விபத்துகள்

ஃ ஹைதராபாத்தில் சராசரியாக 150 விபத்துகள்

ஃ சென்னையில் 50 முதல் 80விபத்துகள்

இந்த வகையில் இந்தியாவில் உள்ள 173 பெருநகரங்களைக் கொண்ட 28 மாநிலங்கள் 7யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய பிரதேசங்களில் பிரகாசமான ஒளிவெள்ள தீபாவளித் திருநாளை முன்னிட்டு சம்பவிக்கும் தீ விபத்துகள் 10,000லிருந்து 11,000வரை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தியாகும். பெரிதும், சிறிதுமாகத் தக்ீகாயம் படுபவர்களின் எண்ணிக்கை 10லட்சத்திற்கும் அதிகமாகும்!

ஃ தீ விபத்து சம்பவங்களில் மிகப்பெரும் பாலானவை அதாவது 80% மானவை ராக்கெட் வெடியால் நிகழ்கின்றன.

ஃ அக்கம்பக்கத்திலுள்ள வீட்டு ஜன்னல்களில் பாய்வது, ஒலைவேய்ந்த மேற்கூரைகளில் விழுவது, மின்வயர்களை தாக்குவது, மின்விளக்குகளில் பாய்வது.... என பல விதங்களில் ராக்கெட்வெடிகளால் விபத்துகள் சம்பவித்துள்ளன.

ஃ மிக நெருக்கமாக குனிந்து வெடிவைத்த வகையில் பலரது முகம் மற்றும் கண்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

ஃ ஆபத்துவிளைவிக்கும் பட்டாசுகளை குழந்தைகள் தன்னிசையாக கையாளும் போது விபத்துகள் சம்பவித்துள்ளன.

ஃ ரோட்டோரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்கள், சாலைகளை கடக்கும் வாகனங்கள் வெடிகளால் பதம் பார்க்கப்பட்டு பற்றி எரிந்துள்ளன.

எனவே தான் ஒவ்வொரு தீபாவளியன்றும் அரசு மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும் தீக்காயம் பட்டவர்களால் நிரம்பிவழிகினறன...

ஒரு சில மணித்துளிகளின் மகிழ்ச்சிக்காக நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கையோ அல்லது மற்றவர்களின் வாழ்க்கையையோ பெரும் பாதிப்புக்குள்ளாக்கி விடுகிறோம்.

தீபாவளியை ஒட்டிய மற்றொரு மருத்துவ ஆய்வு ஒவ்வொரு தீபாவளி பண்டிகையும் 50% சர்க்கரை நோயாளிகளை புதிதாக உருவாக்குகின்றன. ஏற்கெனவே சர்க்கரை பாதிப்பில் உள்ளோரில் 25% மனோரை அதி தீவிர நோயாளியாக்கி விடுகின்றன.

மிகப்பெரும்பாலான மக்களை அஜிரணகோளாறுகளுக்கு ஆட்படுத்துகின்றன. மண்ணீரலின் உயிர்ப்புத்திறனை மழுங்கடிக்கின்றன. கல்லீரலை பித்தப்படுத்துகின்றன.

இவையாவும் கடந்த கால சம்பவங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினைகளை நிர்பந்திக்கின்றன.


அதீதமான பட்டாசு புகையை சுவாசிப்பதால் சுவாசமும், நுரையீரலும் பாதிக்கப்படுகின்றன.

மித மிஞ்சிய வெடிச்சத்தங்கள் செவித்திறனை பாதிக்கின்றன.

எனவே, குறைந்த பட்டாசுகளோடும், அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை தவிர்க்கும் விதத்திலும் தீபாவளியை கொண்டாடுமாறு மருத்துவ நிபுணர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

நமது மாநில அரசும் பள்ளி மாணவர்களிடையே ஆங்காங்கே உள்ளாட்சி அமைப்புகளும் தீ விபத்து தவிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன.


செருப்புபோட்டுக் கொண்டு வெடிவைப்பது, தரமான பட்டாசுகளை வாங்குவது, வெட்ட வெளியில் வெடி வெடிப்பது, ஆபத்தான இடங்களை தவிர்ப்பது, கம்பிமத்தாப்பு, புஸ்வாணம், சங்குசக்கரம் போன்றவை எரிந்து முடிந்தவுடன் தண்ணீர் ஊற்றி அணைப்பது, அதிக நீளம் கொண்ட ஊதுபத்திகளை பயன்படுத்துவது... போன்ற முன்எச்சரிக்கைகள் விபத்துகளை தவிர்க்கும். ஒவ்வொருவர் வீட்டிலும் தீ விபத்து காயங்களுக்கான முதலுதவி பொருட்களை வைத்திருப்பது நலம் பயக்கும்.

தந்திடிவிக்காக
செய்தியும், பின்ணணியும்,
31.10 .2013

வன்முறைகளினூடான அரசியல் நாகரீகம்

                                                                                                                   -சாவித்திரிகண்ணன்


சோலர் மின்சக்தி திட்டத்தில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு ஊழல் செய்ததாக கேரளாவில் கடந்த 6மாதங்களுக்கும் மேலாக தீவிரமான போராட்டங்களை நடத்தி வருகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

சட்டசபை முற்றுகை போராட்டம் என்பதாக சட்டசபைக்குள் மார்க்கசிஸ்ட் தொண்டர்கள் நுழைந்து தலைமைச் செயலகத்தையே ஸ்தம்பிக்க வைத்தனர்.
முதலமைச்சர் உம்மண்சாண்டி செல்லும் இடங்களிலெல்லாம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் வடகேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் நடந்த போலீஸ் தடகள போட்டியில் கலந்து கொள்ளச் சென்ற முதல்வர் உம்மண்சாண்டி மீது கற்கள், தடிகள்... போன்றவற்றை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் நெற்றியில் ரத்தக்காயம் ஏற்பட்டு முதல்வர் உம்மண்சாண்டி திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரு நாள் சிகிச்சை எடுக்க வேண்டியதாயிற்று.

மாற்றுக் கட்சியினரை கருத்தியல் ரீதியாக சந்திப்பதற்கும் மேலாக வன்முறையை கையில் எடுப்பதையும், பகை அரசியலை முன்னெடுத்து கட்சித்தொண்டர்களை களத்தில் இறக்குவதையும் மேற்குவங்கத்தை அடுத்து கேரளாவிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரங்கேற்றி வருகிறது என்ற குற்றசாட்டு சமீபகாலமாக வலுப்பெற்று வருகிறது.

கேரளாவில் 1970கள் தொடங்கி வன்முறைக்கு சுமார் 150 பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கைச் சேர்ந்த சுமார் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்!

அதேபோல, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி தரப்பிலும் மோதல்களில் சுமார் 300தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலேயே படிப்பறிவில் 95% வளர்ச்சியை எட்டியுள்ள மாநிலத்தில் கட்டுபடுத்தவியாலாத கட்சி வன்முறைகள் மேலோங்கி இருப்பது ஒரு பெரிய முரண்பாடாகும்!

ஒவ்வொரு அரசியல் கட்சியுமே இவ்விதமான கொலைகளுக்கு தொழில்ரீதியான கொலைகாரர்களை பயன்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் முன்வைக்கின்றன.

இந்தச்சூழலிலும், " என் மீதான தாக்குதல்களுக்கு கட்சிக்காரர்கள் உணர்ச்சிவசப்படக் கூடாது என்றும், பந்த், கடையடைப்பு, பொதுசொத்துகளுக்கு இழப்பு எதையும் ஏற்படுத்தக்கூடாது" என முதல்வர் உம்மண்சாண்டி கறராக கூறியுள்ளதையடுத்து அவரது கட்சிக்காரர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியாகப் போராடியுள்ளனர்.

மார்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன் மருத்துவமனைக்கு நேரில் சென்று உம்மண்சாண்டியை பார்த்து நலம் விசாரித்துள்ளார். அரசியல் நாகரீகத்தின் அடையாளமாக இரு தலைவர்களும் பேசியுள்ளனர்.

முதல்வரை தாக்குவது எங்கள் நோக்கமல்ல... கட்சிக்கு அப்பாற்பட்ட சில விஷமிகள் இத்தாக்குதல் நடத்தியுள்ளனர் என கேரளா மார்க்சிஸ்ட் தலைவர் பினாராய்விஷயன் கூறியுள்ளார்.

ஆனால், எடுக்கப்பட்ட வீடியோவில் மார்க்சிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பை சார்ந்தவர் கல் எறிவது பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து 17பேர் கைதாகி உள்ளனர்.

ஆனால், உம்மண்சாண்டியோ, "பினாராய்விஜயன் சொல்வது போல் வன்முறையில் இருந்து விலகி இருப்பதில் மார்க்சிஸ்ட்கட்சி உறுதிகாட்டினால் வரவேற்கிறேன்" எனப்பேசியுள்ளார்.

தனக்கு 'இசட்பிளஸ்' பாதுகாப்பு கொடுக்க உள்துறை அமைச்சகம் முன்வந்ததையும் மறுத்துள்ளார். " நான் மக்களைவிட்டு விலகி இருக்க விரும்பவில்லை. மக்கள் கையில் தான் என் பாதுகாப்பே உள்ளது" எனக்கூறியுள்ளார்.

கேரளாவின் முன்னாள் முதல்வர்கள் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு, ஈ.கே நாயனார், அச்சுதானந்தன், இன்றைய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி என அனைவருமே மிகவும் எளிமையானவர்கள். அரசியல் நாகரீகமும், எளிமையும் கேரள அரசியல் தலைவர்களின் பொதுப்பண்புகாக உள்ளன. அதேசமயம் வன்முறை சார்ந்த அரசியல் கேரளத்தின் இயல்பாய் இருப்பது ஒரு விநோதம் தான்!

தந்திடிவிக்காக
செய்தியும், பின்ணணியும்,
30.10 .2013

தாய்மொழி தெரியாதவர்களுக்கு தரப்படாது அரசு பணிகள்

                                                                                                                -சாவித்திரிகண்ணன்

கேரளா அரசு ஒரு சிறந்த அரசாணை வெளியிட்டுள்ளது. 'கேரள அரசு பணியில் சேர்வதற்கு மலையாள மொழி அறிவு கட்டாயம்' என அந்த அரசாணையில் முதல்வர் உம்மண்சாண்டி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ஒராண்டிற்கு முன்பு இதே உத்தரவை அவர் பிறப்பித்தபோது கேரளாவில் வாழும் மொழி சிறுபான்மையினரான தமிழர்கள், கன்னடர்கள் போன்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனவே, அவர்கள் எதிர்ப்பை கவனத்தில் இருத்திக்கொண்டு, அதேசமயம் அந்த மொழிச் சிறுபான்மையினரே கூட எதிர்க்க இயலாத வகையில் தற்போது மீண்டும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அரசாணையில், "10ஆம்வகுப்பு, 12ஆம்வகுப்பு அல்லது பட்டப்படிப்பு எதிலுமே மலையாள மொழிபாடத்தேர்வு எழுதாதவர்கள் தனிப்பட்ட முறையில் 'மலையாளமிஷின்' நடத்தும் தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றாலே போதுமானது" எனக்கூறப்பட்டுள்ளது.

இதற்காக அம்மொழியைக் கற்கும் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு அவசியமான - மற்ற மாநிலங்களும் பின்பற்றத்தகுந்த அணுகுமுறை என்பதில் சந்தேகமில்லை. இந்த அரசாணையின் பின்ணணியில், 'அரசு அலுவலகங்கள் ஆங்கில மொழிதெரியாத பெருவாரியான மக்கள் வந்து பயன்பெறும் இடம் என்பதால் அங்கே அவர்களின் தாய்மொழி தெரிந்த அலுவலர்கள் பணியில் இருந்தால் தான் மக்களுக்கு சேவை செய்யமுடியும் என்ற காரணத்தோடு, தாய்மொழி புழக்கம் என்பது அரசு அலுவலகங்களில் உயிர்ப்போடு திகழவேண்டும்' என்ற நோக்கமும் உள்ளது.

ஆனால், தமிழ்நாட்டிலோ தமிழ்மொழி எல்லா நிலைகளிலும் காணாமல் போய்க் கொண்டுள்ளது.

மற்ற தென்னிந்திய மாநிலங்களில் பள்ளிக்கல்வியில் அந்தந்த மாநிலத்தின் தாய்மொழியும் ஒரு பாடமாக இயல்பாக இருக்கிறது. அது மட்டுமின்றி உயர்நிலை அரசு அலுவலகங்களில் 70முதல் 80% அவரவர்களின் தாய்மொழியிலேயே நிர்வாகச் செயல்பாடுகள் நடக்கின்றன. நம் தமிழ்நாட்டிலோ பள்ளிகளில் தமிழ் பயிற்றுவிக்கப்படுவதிலும் சிக்கல், பேசுவதற்கும் தடங்கல்கள்!

இது மட்டுமின்றி அரசு அலுவலகங்களையும் தமிழ் ஆளவில்லை. வங்கிப் பணிகளிலும் வாழவில்லை. இதனால் ஆங்கில அறிவு இல்லாதவர்கள் தாய்மண்ணான தமிழகத்திலேயே அந்நியப்பட்டு போக நேர்கிறது.

இந்தியை ஒழித்துகட்டுவதற்காக மூன்று காலகட்டங்களில் முப்பெரும் போராட்டங்களைக் கண்டு அதில் பல அப்பாவிகளின் உயிர்களை பலி கொடுத்த தமிழகத்தில் தான் இன்று தமிழுக்கு இடமில்லை.

இந்தியாவில் 60% மக்கள் பேசுகின்ற இந்திக்கு இடமில்லை என்று 10% படித்த மக்களிடம் மட்டுமே புழக்கத்திலுள்ள ஆங்கிலத்தை ஆராதித்தனர்! - தமிழகத்தின் 45ஆண்டுகால ஆட்சியாளர்கள்! மொழிவெறியின் பெயரால் ஆட்சிக்கு வந்தவர்களால் தமிழ்மொழி பெற வேண்டிய பலன்களை பெறவில்லை.

1936ல் தமிழ்சொல் பேராகராதி 1,24,405 சொற்கள் கொண்டு உருவானது. அதற்குபின் வரவில்லை.

1960 ல் சென்னை பல்கலைக்கழகம் ஆங்கிலம் தமிழ் அகராதி கொண்டு வந்தது. அதற்கு பின் தொடரவில்லை.

1958ல் அன்றைய கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியத்தின் பெருமுயற்சியில் அறிவியல் கலைச்சொற்கள் தமிழ் அகராதி உருவானது. அதற்கு பின் முயற்சியில்லை.

1965ல் தமிழ் ஆட்சிமொழி கையேடு வெளியிடப்பட்டது. பிறகு முயற்சியில்லை.

அரசு அலுவலகங்களில் மக்களின் விண்ணப்பங்கள், சான்றிதழ்கள், புகார்கள், நில ஆவணங்கள், வரிபற்றிய விபரங்களை படித்தறிய, எடுத்துச் சொல்ல, விளக்க ஒவ்வொரு அதிகாரிக்கும், அலுவலருக்கும் தமிழ்மொழி இன்றி அமையாதது.

எனவே இப்படி ஒரு அரசாணை அல்லது சட்டம் தமிழ்நாட்டிற்கு மிக,மிக அவசியம்.

இது இரண்டு வகையில் மேலும் பலன்கள் தரும்.

1. தமிழ்வழிக்கல்வி படித்துவரும் எளிய மக்களுக்கு வேலை உத்திரவாதமாகும்.

2. தமிழ்கற்காமல் ஆங்கில வழி கற்றவர்களுக்கு தமிழ் படித்தறிவதற்கான ஆவலையும், தேவையையும் ஏற்படுத்தும்.


தந்திடிவிக்காக
செய்தியும், பின்ணணியும்,
21.10 .2013

உலகதமிழர்கள் ஒன்றுபடவேண்டும்.

                                                                                                                   -சாவித்திரிகண்ணன்

உலகின் முக்கிய நாடுகளிலெல்லாம் புலம்பெயர்ந்து தங்கள் உழைப்பாலும், அறிவாற்றாலாலும் தங்களுக்கென முக்கிய இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளனர் நம் தமிழர்கள்.

சென்னை வந்துள்ள யுனேஸ்கோவின் முன்னாள் இயக்குநர் ஆறுமுகம் பராசுராமன் ஒரு இனிய செய்தியை, அரிய முயற்சியை தெரிவித்துள்ளார். உலகில் 52நாடுகளில் பரந்து விரிந்துள்ள தமிழர்களை ஒரே குடையின் கீழ் திரட்டி மாநாடு ஒன்றை ஜீலை யில் மொரிசியசில் நடத்த இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

உலகில் எங்கு சென்று வாழ்ந்தாலும், பல தலைமுறைகளைக் கடந்தாலும் தாய்மண்ணோடும், தமிழ் பண்பாடு, கலாச்சாரத்தோடும், மரபுவழியாகப் பின்பற்றி வரும் மகத்தோடும் தமிழர்களுக்குள்ள தொடர்புகள் இன்னும் இற்றுப்போகாமல் இருக்கத்தான் ணெய்கின்றது. அந்த இணைப்பை இன்னும் வலுப்படுத்தவும், வளப்படுத்தவும் இப்படி ஒரு மாநாடு காலத்தின் கட்டாயமாகிறது.

இந்த மாநாடு தொடர்பாக தமிழக அரசு தரப்பில் இணக்கமான, இசைவான வரவேற்பும், ஒத்துழைப்பும் கிடைக்கும் என நம்பப்டுகிறது.

ஏற்கெனனவே புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் கல்விகற்க பாடப்புத்தகங்களை இலவசமாக கேட்குமளவு தமிழக அரசு தந்து கொண்டு உள்ளது. ஆனால் இது மட்டுமே போதுமானதல்ல.

புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு தருவதற்கும், பெறுவதற்குமான பரஸ்பர தேவைகள், அவசியங்கள் தாய்தமிழகத்திற்கு நிறையவே உள்ளன.

நமது தமிழர்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் தங்கள் கலாணியாதிக்க நாடுகளான ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை, தெற்காப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு 100, 150 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு செல்லப்பட்டன்ர். இந்த நாடுகளில் மலைகளைக் குடைந்து சாலைகள், இருப்புபாதைகள் அமைக்கவும், தேயிலை தோட்டங்களில் வேலைபார்க்கவும் சென்ற தமிழர்கள் தங்கள் உழைப்பால் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி உள்ளனர்.

இதற்கு அடுத்த கட்டத்தில் படித்து பட்டம் பெற்ற தமிழர்கள் பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மன், பிரான்ஸ்... போன்ற நாடுகளுக்குச் சென்றனர். இலங்கைத் தமிழர்களும் உலகெங்கும் கணிசமாக புலம்பெயர்ந்துள்ளனர். இன்று இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ்,... ஆகிய நாடுகளில் தமிழ் ஆட்சி முழியாகவும், தமிழர்கள் ஆட்சியில் பங்கு பெற்றுள்ளவர்களாகவும் உள்ளனர்.


உலகில் புலம் பெயர்ந்துள்ள தமிழர்களின் எண்ணிக்கையும் நாடுகளும்:

மலேசியா - 21லட்சம்,
சிங்கப்பூர் - 2லட்சம்,
மியான்மர் - 2லட்சம்
மொரிசியஸ் - 1,50,000
பிரிட்டன் -1,60,000
பீஜீ - 1,10,000,
தெற்கு ஆப்பிரிக்கா, 6,00000,
கன்னடா - 3லட்சம்,
பிரான்ஸ் 5லட்சம்,
அமெரிக்கா - 4,40,000,
நெதர்லேண்ட் - 2லட்சம்,
அரபுநாடுகள் 1லட்சம்,
இந்தோனேசியா 50,000,
ஜெர்மனி - 50,000
ஸ்விட்சர்லாந்து - 40,000,
இத்தாலி 25,000
செசல்ஸ் 6000
என இந்தப்பட்டியல் வெகு நீளமானது.

இது தவிர இலங்கையில் பூர்வீக குடிகளாகவும், 10ஆம் நூற்றாண்டில் சோழப்பேரரசு ஆண்டபோது சென்றவர்களும், பிறகு பிரிட்டிஷ் ஆட்சியில் மலையகப்பகுதியில் குடி அமர்த்தப்பட்டவர்களுமாக சுமார் 30,00,000 தமிழர்கள் வாழ்கிறார்கள். இந்த வகையில் உலகில் ஒரு கோடி எண்ணிக்கைக்கும் அதிகமாகத் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

இவர்கள் தாய் தமிழகத்திலிருந்து மொழி வழிக்கல்வி, பண்பாடு, கலாச்சாரம் பழக்கவழக்கங்கள், மரபுரீதியான மத வழிபாட்டு சடங்குகள்.... போன்றவற்றை கற்கவும், கடைபிடிக்கவும் பேரார்வம் காட்டி வருகின்றனர். இதற்கு அரசும், அமைப்புகளும், அறிஞர்களும் உதவவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இதேபோல் நாமும் அவர்களிடமிருந்து தொழில்நுட்ப அறிவையும், கலாச்சார பரிவர்த்தனைகளையும் பெறலாம். வியாபார ரீதியிலும் பரஸ்பரம் பயனடையலாம்.
நடக்க இருக்கும் மாநாடு இதற்கெல்லாம் உதவிகரமாக அமையு எனத்தெரியவில்லை. அத்துடன் புலம்பெயர்ந்த நாடுகளில் அம்மக்களுக்கு ஏற்படும் ஆபத்துகளுக்கு கை கொடுக்கவும், துயர்துடைக்கவும் ஒரு அதிகாரமிக்க - அரசு தொடர்புகளோடு இயங்கக்கூடிய - புதிய அமைப்பு ஒன்றும் தேவைப்படுகிறது. நமது தமிழக அரசாங்கமே இதற்காக முயற்சி எடுத்து அக்கறைகாட்டவேண்டும். இதில் அரசியல் பார்வை தவிர்த்த அணுகுமுறை மிகவும் அவசியம்.

தந்திடிவிக்காக
செய்தியும், பின்ணணியும்,
22.10 .2013

இடைத்தேர்தல்களும், மக்கள் தீர்ப்பும்

                                                                                                                  -சாவித்திரிகண்ணன்


உலகின் எல்லா ஜனநாயக நாடுகளிலும் இடைத்தேர்தல்கள் என்பவை இன்றியமையாத முக்கியத்துவத்தை பெறத் தவறுவதில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் ராஜீனாமா, தகுதி நீக்கம், உயிரிழப்பு... என பலதரப்பட்ட சூழல்களில் இடைத்தேர்தல் நிர்பந்திக்கப்படுகிறது. இப்படி நடைபெறுகின்ற இடைத்தேர்தல்கள் மக்களின் உணர்வுகளை, ஆளும் அரசு குறித்த மதிப்பீடுகளை அறிய உதவுவதாகவே ஜனநாயக நாடுகளில் நம்பப்பட்டு வருகிறது.

2010 நவம்பரில் அமெரிக்காவில் செனட் உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தலில் ஆளும்கட்சியான ஒபாமாவின் ஜனநாயக கட்சி பெரும் பின்னடைவை பெற்றது. ஆனால் அதை படிப்பினையாக ஒபாமா எடுத்துக் கொண்டு சுதாரித்ததால் 2012ல் நடந்த அதிபருக்கான தேர்தலில் வெற்றிவாகை சூடினார்.

மியான்மர் எனப்படும் பர்மாவில் கடந்த 20ஆண்டுகளாக ராணுவத்தின் சர்வாதிகார ஆட்சியே நடைபெற்று வருகிறது. இதை எதிர்த்து போராடிய ஜனநாயகத்திற்கான தேசியலீக் கட்சியின் தலைவர் ஆங் சாண் சூயி பல ஆண்டுகள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மியான்மரில் ஏப்ரல் 2012 நடந்த இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 45 தொகுதியில் 44ஐ ஆங்சாண் சூயின் கட்சி வென்றது. இந்த இடைத்தேர்தல் வெற்றியை ராணுவ ஆட்சியாளர்கள் தலைவணங்கி ஏற்றுக்கொண்டனர்.

இதேபோல் நம் இந்தியாவின் பிற மாநிலங்களில் சமீபகாலமாக நடந்த இடைத்தேர்தல்கள் வெற்றிகளை பார்த்தோமென்றால் பெரும்பாலும் ஆளும்கட்சிகள் பெருத்த பின்னடைவை காண்பதே பொதுவாக உள்ளது.

குஜராத்தில் பா.ஜ.க பலமான கட்சி. நரேந்திரமோடி நான்காவது முறையாக முதல்வராகியுள்ளார். ஆனால், அதேசமயம் மார்ச் 2012ல் குஜராத்தின் மானசா சட்டசபைக்கான இடைத்தேர்தலில் பா.ஜ.க தோல்வி கண்டது. பொதுத்தேர்தலில் பெற்றவாக்குகளைக் காட்டிலும் அத்தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.கவின் வாக்கு சதவிகிதம் 9% சரிந்திருந்தது. நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் மார்ச் 2012 நடந்த 7சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 6ல் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும், ஒன்றில் Y.S.R காங்கிரசும் வென்றன. மீண்டும் இதே ஆந்திராவில் ஜீன் 2012ல் நடந்த 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் Y.S.R காங்கிரஸ் 15, தெலுங்குதேசம் 1, தெலுங்கானாராஷ்டிரம் சமிதி-1, காங்கிரஸ் -1 என்றே மக்கள் தீர்ப்பளித்தனர். நெல்லூர் மக்களவை தேர்தலிலும் ஆளும் கட்சியான காங்கிரஸ் தோற்றது.

மத்தியிலும், மாநிலத்திலும் சர்வ வல்லமையுடன் ஆட்சியிலிருக்கும் காங்கிரஸூக்கு ஆந்திர மக்கள் தொடர்ந்து தோல்விகளையே இடைத்தேர்தலில் தீர்ப்பாக தந்து கொண்டுள்ளனர்.

இதேபோல் கர்நாடகத்திலும் நவம்பர் 2011ல் நடந்த பெல்லாரி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும்கட்சியிலிருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு ஆளும்கட்சியை தோற்கடிக்கும் வண்ணம் மக்கள் தீர்ப்பளித்தனர்.

ஜனவரி 2009ல் ஜார்கண்டில் முதல்வராயிருந்த சிபுசேரன் 'தமார்' சட்டசபை இடைத்தேர்தலில் மக்கள் தீர்ப்பிற்கு தலைவணங்கி பதவி விலக நேர்ந்தது. இதைப்போல் பல உதாரணங்களை பட்டியலிடமுடியும். இவை அனைத்திலுமே இடைத்தேர்தலில் மக்கள் ஆளும் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் தருவதன் மூலம் ஆளும் தரப்பினர் தங்களை சீர்படுத்திக் கொள்ள வாய்பளிப்பதாகவே தெரிகிறது.

ஆனால், தமிழகம் மட்டும் இதில் விதிவிலக்கு.

2005ஆம் ஆண்டு முதல் இங்கு நடைபெறும் எந்த இடைத்தேர்தலிலும் ஒரு முறை கூட ஆளும்கட்சி தோற்றதில்லை.

மே -2005- காஞ்சிபுரம், கும்மிடிபூண்டி இடைத்தேர்தலில் பெரும்வாக்குகள் வித்தியாசத்தில் அன்றைய ஆளும்கட்சி அ.தி.மு.க வெற்றிபெற்றது. 2006ல் நடந்த பொதுத்தேர்தலில் இத்தொகுதிகளை அ.தி.மு.க இழந்தது.

இதற்குபிறகு 2006ல் ஆட்சிக்கு பொறுப்புக்கு வந்த தி.மு.க 11தொகுதிகளில் இடைத்தேர்தல்களை சந்தித்தது. திருமங்கலம், மதுரை மத்திய மற்றும் மேற்கு தொகுதிகள், பெண்ணாகரம், ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர், பர்கூர், வந்தவாசி, இளையான்குடி, திருச்செந்தூர், கம்பம் என அனைத்து 11தொகுதிகளில் தி.மு.கவே அதுவும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றது.

ஆனால் 2011மே மாதம் நடந்த தமிழக சட்டமன்றத்திற்கான பொதுதேர்தலில் இந்த 11ல் 9ல் தி.மு.க படுதோல்வியைக் கண்டது.

இதே போல் 2011ல் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க திருச்சி மேற்குதொகுதி, சங்கரன்கோவில், புதுக்கோட்டை ஆகிய இடைத்தேர்தலில் வெற்றி பெற்று வந்துள்ளது. தற்போது நடைபெற உள்ள ஏற்காடு தொகுதியிலும் எதுவும் பெரிய மாற்றம் நடக்கும் என எதிர்பார்பதற்கில்லை.

தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தல் குறித்து முன்னாள் இந்திய தலைமை அதிகாரி என்.கோலால்சாமி ஒரு முறை இவ்வாறு கூறினார், "தமிழகத்தின் இடைத்தேர்தல்களில் பீகாரையே மிஞ்சும் வண்ணம் முறைகேடுகள் மிகவும் அதிகரித்துவிட்டன..." இந்தச்சூழல்கள் எப்போது மாறுமோ...?


தந்திடிவிக்காக
செய்தியும், பின்ணணியும்,
அக்டோபர் .2013

Monday, November 11, 2013

மருத்துவத் துறையால் நிகழும் உயிர் இழப்புகள்

                                                                                                                    -சாவித்திரிகண்ணன்


மிகவும் அத்திபூத்தாற் போலத்தான் மருத்துவத் துறையால் நிகழும் பாதிப்புகள் குறித்த தீர்ப்புகள் வெளிவருகின்றன.

அந்த வகையில் தற்போது உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள ஒரு தீர்ப்பு மருத்துவதுறையிலும், அது சார்ந்த சட்டத்துறையிலும் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.

குழந்தைகள் மனோதத்துவ டாக்டர். அனுராதா தோல் நோய் சம்பந்தமான சிகிச்சையால் உயிரிழந்தார். மே. 1998ல் கல்கத்தா AMRI மருத்துவமனையில் நிகழ்ந்த இந்த சோக மரணத்திற்கு நீதிகேட்டு அனுராதாவின் கணவரான டாக்டர் குணால் சாகா 15ஆண்டுகள் இடையறாது ஒவ்வொரு படி நிலையாகப் போராடினார். கடைசியாக உச்சநீதிமன்றம், " அனுராதாவின் உயிர்இழப்புக்கு அவருக்கு மருத்துவர்களால் வழங்கப்பட்ட தவறான சிகிச்சையே காரணம். ஆகவே சம்பந்தப்பட்ட மூன்று மருத்துவர்களும், மருத்துவமனையும் இணைந்து இதற்கு 5.96கோடி இழப்பீடு தரவேண்டும். இந்தத்தொகையை வழக்கு தொடரப்பட்டது தொடங்கி தற்போது வரைக்குமான வட்டியுடன் சேர்த்து தரவேண்டும்" என தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் இழப்பீடு சுமார் 11கோடி கிடைக்கக்கூடும்.

சமீபகாலமாக மருத்துவத்துறை மிகவும் வியாபாரமாகவும், மனிதாபிமானமின்றியும் செயல்படுவதாக புகார்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

டெல்லி மருத்துவ கழகத்திற்கு மட்டுமே மாதாமாதம் 20 முதல் 30புகார்கள் வருகின்றன. ஓட்டுமொத்தமாக இந்திய அளவில் வருடத்திற்கு மருத்துவதுறை மீதான புகார்கள் சுமார் 20,000வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவத் துறையின் தவறான சிகிச்சைகள், டாக்டர்களின் பொறுப்பின்மை, தகுதியின்மை, மோசமான மருத்துவ பராமரிப்புகள், அதீதமாக பணம்வாங்கிய வகையில் குவியும் புகார்களில் மிகச்சில மட்டுமே அக்கரை எடுத்து விசாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரீதியான மருத்துவதுறை தவறுகளால் ஆண்டுதோறும் 1,95,000பேர் உயிர்இழக்கிறார்கள் என சர்வதேச ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவை பொறுத்தவரை மருத்துவரீதியான உயிரிழப்புகள் பல, சரியான கவனம் பெறாமலே போய்விடுகின்றன.

ஏனெனில் பலரும் 'நம் தலைவிதி அவ்வளவு தான்' என ஏற்றுக் கொண்டு அமைதியடைகிறார்கள்.

அப்படியே புகார்கள் செய்தாலும் அவற்றில் 70% புகார்கள் விசாரிக்கப்படாமல் தள்ளுபடியாகிவிடுகின்றன.

டெல்லி மருத்துவக் கவுன்சிலைப் பொறுத்தவரை டாக்டர்களை அழைத்து கண்டித்து அனுப்பபடுவதோடு முடிந்துவிடுகிறது.

இது வரை எந்த ஒரு டாக்டரும் பணிநீக்கமோ, தகுதிநீக்கமோ கூட செய்யப்பட்டதில்லை.

ஆனால், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மருத்துவத்துறை புகார்கள் அலட்சியப்படுத்தப்படுவதில்லை. அமெரிக்காவில் சென்ற ஆண்டு மட்டுமே தன்னுடைய தவறுகள் காரணமாக மருத்துவதுறை தரநேர்ந்த இழப்பீடு தொகை 3பில்லியன் கோடி டாலர்களாகும்!

இந்தியாவில் மருத்துவதுறை புகார்கள் குறித்த நீதிகிடைக்க முதலில் உள்ளூர் காவல்நிலையம், மாவட்ட நுகர்வோர் அமைப்பு, மாநில மருத்துவ கவுன்சில் ஆகியவற்றில் புகார் தர வேண்டும்.

அதற்கு அடுத்த கட்டமாக தேசிய நுகர்வோர் குறை தீர்க்கும் கழகம் செல்லவேண்டும். இவற்றின் தீர்ப்புகளை எதிர்த்து மருத்துவமனைகள் மேல் முறையீடு செய்து கொண்டே இருப்பார்கள். இதற்கு அடுத்தடுத்த கட்டமாக உச்சநீதிமன்றம் சென்று தான் இறுதி தீர்ப்பு பெற இயலுகிறது. மிகச்சிலர் தான் இதில் இறுதிவரை போராடி நீதி பெற்றுள்ளனர்.

1995ல் பிரபல டென்னிஸ் வீரர் சந்திரசேகர் மருத்துவ சிகிச்சை காரணமாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டதற்கு ரூ 15லட்சம் பெற்றார்.

மே - 2009ல் இன்ஜினியரிங் மாணவர் பிரசாந்த் இதயப்புற்றுநோய் தொடர்பாக உயிரிழந்ததிற்கு 1கோடி இழப்பீட்டை 19வருடப் போராட்த்திற்கு பின் அவரது குடும்பம் பெற்றது.

டாக்டர்களை மக்கள் கடவுளுக்கு நிகராகத் தான் நினைத்து செல்கிறார்கள் ஆனால், அவர்களில் ஒரு சிலர் காலன்களாக மாறி உயிரிழப்புக்கு காரணமாகும் சம்பவங்கள் மிகவும் துரதிர்ஷ்டமானவை.  நிச்சயம் தவிர்க்கப்படவேண்டியவை.

தந்திடிவிக்காக
செய்தியும், பின்ணணியும்,
25.10.2013

அடிமைகள் நிறைந்த இந்தியா

                                                                                                                -சாவித்திரிகண்ணன்


நாகரீகம் மிகவும் வளர்ச்சி அடைந்துவிட்ட இன்றைய நவீனயுகத்திலும் "உலகத்தில்' 2கோடி 98லட்சம் பேர் அடிமைகளாக உள்ளனர். இதில், இந்தியாவில் மட்டுமே கிட்டதட்ட சரிபாதி அடிமைகள் அதாவது 1கோடியே 47லட்சம் பேர் உள்ளனர்." என ஒரு சர்வதேச ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளத. 'வாக்ஸ்டிட்' என்ற ஐ.நா.சபையின் அங்கீகாரம் பெற்ற அந்த நிறுவனம் 162 நாடுகளை ஆய்வு செய்துள்ளது. இந்த வகையில் உலகில் அடிமைகள் வாழாத நாடே கிடையாது என்றும் அது உறுதிபடத் தெரிவித்துள்ளது.

இந்தியா              -1கோடி 47லட்சம் பேர்
சீனா                     - 29 லட்சம் பேர்
பாகிஸ்தான்     - 22 லட்சம் பேர்
நைஜிரியா         - 7லட்சம் பேர்
பிரிட்டன்             - 4,600பேர்
எத்தியோப்பியா -6.5லட்சம்பேர்
என்ற அதன் அடிமைகள் எண்ணிக்கை பட்டியலில் வளராத ஏழைநாடுகள் தொடங்கி வளரும் நாடுகள்வரை அனைத்தும் உள்ளன. எண்ணிக்கைகளே வித்தியாசப்படுகின்றன.

மன்னராட்சி காலங்களில், நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில் ஆதிக்க மனோபாவம் ஓங்கியிருந்த சூழலில் உலகம் முழுமையும் அடிமைபடுவோரும், அடிமைப்படுத்துவோருமாக இரு பிரிவுகள் தொடர்ந்து இருந்துள்ளது.

ஆனால் 19ஆம் நூற்றாண்டில் ஜனநாயகம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற புதிய கருத்தாக்கங்கள் மேலெழுந்து வந்தன. இதையடுத்து காலணி ஆதிக்க நாடுகளில் ஏறபட்ட சுதந்திர எழுச்சி போராட்டங்கள் வழியாக மக்கள் ஏற்றத்தாழ்வுகளை மறந்து ஒன்று பட்டார்கள்.

இந்தியாவில் மகாத்மாகாந்தி நடத்திய வேள்வி தேசவிடுதலைக்கானதாக மட்டுமின்றி அனைத்துவிதமான ஆதிக்கத்திலிருந்து இந்தியர்களை விடுவிக்கும் அக விடுதலைக்காகவும் அமைந்தது என்பதே அதன் தனிப்பெரும் சிறப்பாகும்!

ஆயினும் 65ஆண்டுகள் சுதந்திரம் இன்னும் அனைத்து மக்களையும் சென்றடையவில்லை என்பதை தான் இந்த ஆய்வுத் தகவல்கள் அறுதியிட்டுச் சொல்கிறது.

சுமார் 1000ஆண்டுகளாக இந்திய நாடு பல அந்நிய படையெடுப்பாளர்களான முகலாய மன்னர்களாலும், ஆங்கிலேயர்களாலும் அடிமைப்படுத்த பட்டிருந்ததால் நம்மில் பலருக்கே ஆதிக்க உணர்வும், அடிமை உணர்வு இன்னும் மறையவில்லை.

செங்கற்சூளைகளில், விவசாயப்பண்ணைகளில், அரிசி மில்களில், நெசவுக்கூடங்களில், கட்டிட வேலைகளில், ஹோட்டல் பணிகளில்,..... என பல இடங்களில் மக்கள் அடிமைப்படுத்தப்பட்டிருப்பதும், நமது அதிகாரிகள் துணையுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அவர்களை விடுவிப்பதும் அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தறிநெசவில் குழந்தை தொழிலாளர்கள் குடும்ப கடனை அடைக்க கொத்தடிமைகளாக உழல்வதும், சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில், உணவகங்களிலும் 12 மணிநேரமாக உழைப்பதும் நாம் அறிந்த தகவல்களே!

வறுமைகாரணமாக குடுமபத்தாராலேயே அடகு வைக்கப்படும் குழந்தைகள் பாலியல் தொழிலுக்காக கடத்தி விற்கப்படும் பெண்கள், நிர்பந்தத்தால் திருமணம் என்ற பெயரில் வயதான ஆண்களுக்கு மணம் முடிக்கப்படும் இளம்பெண்கள், வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்பட்டு சென்று அங்கு அடிமையாக உழலும் அப்பாவிகள்... என பலதரப்பட்ட அடிமைச்சூழல்கள்.


எத்தனை சீர்திருத்தவாதிகள், சட்டங்கள் வந்தாலும் மனிதனின் ஆதிக்க மனோபாவம் அதை தகர்த்து தன் விருப்பங்களை நிறைவேற்றிகொள்வதாகவே உள்ளன!

அவ்வளவு ஏன், படித்தவர்கள் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களிலுமே கூட வெளிப்படையாக இல்லையென்றாலும் கூட ஆதிக்க மனோபாவமும் அதன் விளைவாக அடிமை குணாம்சம் கொண்ட

'அனைத்து உயிர்களும் இறைவனின் அம்சம்' என்ற உண்மையான ஆன்மீக விழிப்புணர்வு மட்டமே எந்த ஒரு மனிதனையும் ஆதிக்க மனோபாவத்திலிருந்து விடுவிக்கும் அகவிடுதலைக்கு துணைபுரியும்.

புத்தர், ஆதிசங்கரர், ராமானுஜர், அருட்பிரகாச வள்ளலார், விவேகானந்தர், மகாத்மாகாந்தி... போன்ற மகான்களின் கருத்துகள் சமூகதளத்தில் இன்னும் பரவலாகவும், ஆழமாகவும் சென்றடையும் போது அவை அடிமைகள் இல்லாத இந்தியாவுக்கான பலமான அடித்தளமாகும்!

தந்திடிவிக்காக
செய்தியும், பின்ணணியும்,
18.10.2013


Wednesday, November 6, 2013

அதிகரிக்கும் தற்கொலைகள்


                                                                                                                -சாவித்திரிகண்ணன்

"உலகிலேயே அதிகமாகத் தற்கொலை நிகழ்வுகள் நடக்கும் நாடு இந்தியா. அதிலும் தமிழகமே முதலிடம் வகிக்கிறது" என்ற தகவலை சமீபத்தில் உலகசுகாதார மையம் வெளியிட்டுள்ளது.

உலகில் தற்கொலை செய்து கொள்வோரில் 20% இந்தியர்களாக உள்ளனர். அதிலும், பெண்களைக் காட்டிலும் ஆண்களின் எண்ணிக்கை இரு மடங்காக உள்ளது... போன்ற தகவல்கள் அதிர்ச்சி, வியப்பு, கவலை ஆகியவற்றை ஒரு சேர ஏற்படுத்துகிறது!

தேசிய குற்றப்பதிவு மையம் தெரிவித்துள்ள தகவல்களின் படி இந்தியாவில் 2012ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை - 1,35,445

ஆனால், பல தன்னார்வ நிறுவனங்களும், அமைப்புகளும் தருகின்ற தகவல் சுமார் 2லட்சத்திற்கு நெருக்கமாக உள்ளது. "காவல்துறை பதிவுகளை மட்டுமே NCRB தெரிவிக்கிறது.... ஆனால் காவல்துறை பதிவுகளை கடந்த தற்கொலைகள் பரவலாக நடந்தேறவே செய்கின்றன...." என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தகு தற்கொலைகளுக்கு நான்கு பிரதான காரணங்கள் கண்டறிய பட்டுள்ளன.

எதிர்பார்ப்புகள் பொய்த்து தாங்க முடியாத ஏமாற்றத்தை பெறுவது 
சமூக ரீதியாகத் தனிமைப்படுவது
சமூக ரீதியாக மதிப்பை இழப்பது
குடும்பத்தின் மோசமான சூழல்கள்
அதுவும், 1990களுக்குப் பிறகு தற்கொலைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

கூட்டுக் குடும்ப முறை சீர்குலைந்தது, குடும்பத்திற்கு வெளியே ஏற்படும் தவறான பாலியல் உறவுகள், சகிப்பின்மை, தனிமனித ஆளுமை திறன் குறைபாடு, காதல் தோல்விகள்... போன்றவை அகவியல் சார்ந்த தற்கொலைக்கான காரணங்களாகும்.

அதேபோல் அரசின் தவறான பொருளாதார கொள்கைகள், ஊழல்கள், அலட்சியங்கள் ஆகியவை தற்கொலைகளுக்கு பிரதான காரணங்கள் உள்ளன என்பதற்கு நமது நாட்டில் ஆண்டொன்றுக்கு தற்கொலை செய்து கொள்ளும் சுமார் 20,000 விவசாயிகளும், கடன்தொல்லை, வறுமைகாரணமாக உயிர்இழக்கும் ஏராளமான எளிய மனிதர்களும் அத்தாட்சியாகும்.

இதேபோல் பெருந்தொழில் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் வாய்ப்பிழந்து சிறுதொழில் முகவர்கள், சுயதொழில் முனைவோர்கள், தொழிலாளர்கள் கணிசமான எண்ணிக்கையில் தற்கொலை முடிவை எட்டுகின்றனர். கைத்தறி, விசைத்தறி நெசவாளர்கள், கைவினைஞர்கள், சிறுதொழில்கள் நடத்தியவர்கள் முற்றிலும் நிர்மூலமான நிலையில் தற்கொலைக்கு தள்ளப்பட்டு வருகிறார்கள்....!

தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் தற்கொலைக்கு முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை 20மடங்காக உள்ளது என்ற தகவல் இது தொடர்பாக அரசாங்கமும், சமூகமும் காட்ட வேண்டியுள்ள தீவிர அக்கரையைக் கோருகிறது.

அதிலும், தற்கொலை செய்து கொள்வோரில் 15வயதிலிருந்து 39வயதுக்கு உட்பட்டோரின் எண்ணிக்கை மிகவும் பிரதானமாயிருப்பது குடும்பத்திற்கும், தேசத்திற்கும் தேவைப்படும் மிக முக்கிய மனித ஆற்றலை நாம் இழந்து வருவதை உணர்த்துகிறது.

அரசியல் தலைவர்களுக்காகவும், மொழி, இன உணர்வுகளால் உந்தப்படும் நடிகர்களுக்காகவும் தமிழகத்தில் நடந்தேறியுள்ளதைப் போன்ற தற்கொலைகள் உலகின் மற்ற பகுதிகளிலோ, இந்தியாவின் பிற மாநிலங்களிலோ காண்பது அரிதினும் அரிது என்றும் ஆய்வாளர்கள் கூறியிருப்பது ஆழ்ந்த சிந்தனைக் குரியதாகும்.

தற்போது தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கவுன்சில் தரும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது நமது அறநூல்களில் வலியுறுத்தப்பட்டுள்ள அன்பு, கருணை, பொறுமை சக உயிர்களிடத்தில் பரிவு போன்றவை சமூகத்தின் சகல தளங்களிலும் போற்றி வளர்த்தெடுக்கப்படும் போது தற்கொலைகள் தானாகவே விடைபெற்றுக் கொள்ளும்.

தந்திடிவிக்காக,
செய்தியும், பின்ணணியும், 
11.10.2013

தெலுங்கானா Vs சீமாந்திரா


                                                                                                                   -சாவித்திரிகண்ணன்

'ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமையும்' என மத்திய அரசு ஜீலை 30, 2013 அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு மத்திய அமைச்சரவை அக்டோபர்-3, 2013ல் ஒப்புதல் வழங்கியது.
இந்த அறிவிப்புகள் சுமார் 50ஆண்டுகளாக கொந்தளித்து வந்த தெலுங்கானா பகுதியில் அமைதி உருவாக அடித்தளமிட்டது. ஆனால் இது வரை அமைதியாக இருந்த ஆந்திராவின் கடலோர பகுதிகளை உள்ளடக்கிய சீமாந்திராவை சீற்றம் கொள்ள வைத்துள்ளது....

தெலுங்கானா போராட்ட வரலாறு:

சுதந்திர போராட்டத்திற்கு முந்தைய சுமார் 600ஆண்டுகளிலும் சரி, சுதந்திரப் போராட்டங்களின் போதும் சரி தெலுங்கானா பகுதிகள் மன்னராட்சிகளின் கீழ்தான் இருந்தன.

சீமாந்திரா பகுதிகள் வேறு சில மரபுவழி மன்னர்களின் கீழும், பிரிட்டிஷ் அரசின் நேரடி கட்டுப்பாட்டிலும் இருந்தன. இந்த வகையில் 1953 வரை சீமாந்திரா பகுதிகள் சென்னை மாகாணத்துடன் இருந்தன. ஆந்திரா உருவாகிய பிறகு முன்றறை ஆண்டுகள் கழித்தே பலத்த நிர்பந்தங்களால் தெலுங்கானா விசால ஆந்திரவின் விலாசத்திற்குள் வந்தது!


1956ல் இணைக்கப்பட்டபோது, 'விருப்பமில்லாவிட்டால் பிரிந்து போகலாம் என்ற உத்தரவாதத்தை அன்றைய பிரதமர் நேரு வழங்கினார். 13ஆண்டுகளில் இரு தரப்பிலும் அதிருப்திகள் அதிகரித்தன. இதையடுத்து தெலுங்கானாவை பிரித்து தங்களுக்கு தனிமாநிலம் தரவேண்டும் என்ற போராட்டம் 1969ல் பலமாக எழுந்தது. போராட்டங்களில் சுமார் 350பேர் உயிர்இழந்தனர்.

இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தெலுங்கானா பிரஜா சமிதியின் தலைவர் சென்னாரெட்டியை ஆந்திராவிற்கு முதலமைச்சராக்கி தெலுங்கானா போராட்டத்தை சமாளித்தது காங்கிரஸ் தலைமை.
ஆனால், மீண்டும் சில ஆண்டுகளில் இந்த கோரிக்கை மேன்மேலும் வலுப்பெற்றது. உயிரிழப்புகளும், சொத்திழப்புகளும் அதிகரித்தன! 
ஆந்திராவின் முக்கிய கட்சிகளும் அதன் தலைவர்களும் ஒவ்வொரு தேர்தலின் போதும் தெலுங்கானா பகுதி மக்களுக்கு தனிமாநிலம் தர ஆதரவு தெரிவிப்பதும், தேர்தல் முடிந்ததும் கண்டுகொள்ளாமல் விடுவதும் வாடிக்கையாக இருந்தது.

2001ல் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து பிரிந்துவந்து, தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி என்ற கட்சியை துவக்கினார் சந்திரசேகரராவ். அப்போது முதல் தெலுங்கானா போராட்டம் மீண்டும் தலை எடுத்தது. 

தெலுங்கானா கேட்பதற்கான காரணங்கள்; 

தெலுங்கானா பகுதிகளில் இருந்து தான் கிருஷ்ணா, கோதாவரி, முஷி போன்ற நதிகள் பாய்ந்தாலும் தெலுங்கானா தொடர்ந்து வறட்சி பகுதிகளாகவே வைக்கப்பட்டுள்ளது. அணைகட்டுகள், நீர்தேக்கங்கள் அனைத்தும் சீமாந்திரா செழிப்பதற்கே பயன்படுகின்றன...!

அரசின் உயர்நிலை பதவிகளில் 90% சீமாந்திராவினரும் 10% தெலுங்கானா பகுதியினரும் உள்ளனர். சாதாரண அரசு ஊழியர்கள் மட்டத்திலோ இது 80:20 என்பதாக உள்ளது. மக்கள் தொகையில் 40%மும், நிலப்பரப்பில் 42% மும்உள்ள தெலுங்கானா பகுதிக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவதாக மக்கள் நம்புகிறார்கள் கலாச்சாரம், மரபு, பண்பாடு, விழாக்கள், மொழிவழக்கு... என பலவற்றில் வேறுபட்டது தெலுங்கானா!

கட்சிகளின் நிலைபாடு;

தெலுங்கானா போராட்டதிற்கு முதன்முதலாக ஆதரவு தந்த தேசிய கட்சி பா.ஜ.க தான்!

1997ல் தெலுங்கானாவை ஆதரித்து பா.ஜ.க தீர்மானம் போட்டது. தடுமாறிய காங்கிரசோ 2004ல் ஒத்துக்கொண்டு பிறகு பின்வாங்கியது 2008ல் தனித்தெலுங்கானாவை ஆதரித்து தெலுங்குதேசம் மத்திய உள்துறை அமைச்சரிடம் கடிதம் தந்தது. டிசம்பர் 2012 அனைத்து கட்சி கூட்டத்திலும் தெலுங்கானா ஆதரவில் மாற்றமில்லை என்றது தெலுங்குதேசம்!

Y.S.R காங்கிரஸ் நடுநிலையாளராக இருந்தது. 
இந்திய கம்யூனிஸ்ட் தெலுங்கானாவை ஆதரித்து வருகிறது. 
மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டும், MIM என்ற இஸ்லாமிய கட்சியும் மட்டுமே ஆரம்ப முதல் தனி தெலுங்கானாவை எதிர்த்த கட்சிகளாகும்!

ஆனால் ஜீலை 30, தனி தெலுங்கானா அறிவிப்பிறகு பிறகு தெலுங்கு தேசமும், Y.S.R காங்கிரசும் எதிர்ப்பு நிலைபாடுகள் எடுத்துள்ளன.

"இருபக்க மக்களின் இணக்கத்தோடும், இனிமையோடும், பரஸ்பர நம்பிக்கையோடும் பிரிவினை நடந்தேற வேண்டும், நம்மை ஐதராபாத்தும், மொழியும் ஒன்று படுத்தும் அம்சங்களாயுள்ளன...! எனவே வாக்கு வங்கி அரசியலை மறந்து, புறந்தள்ளி நம்பிக்கையோடும், சுயசார்புடனும் செயல்படுவோம்.." என்கிறார்கள் ஆந்திர அறிவு ஜீவிகள், நடுநிலையாளர்கள், சமூக ஆர்வலர்கள்! நல்லதே நடக்கட்டும்.

தந்திடிவிக்காக,
செய்தியும், பின்ணணியும், 
08.10.2013

இந்தியாவின் வறுமையும், வளமையும்                                                                                                              -சாவித்திரிகண்ணன்


"உலகில் பட்டினியால் பரிதவிப்போரில் 27% பேர் இந்தியாவில் மட்டுமே வாழ்கின்றனர். அதாவது சுமார் 32கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இந்தியாவில் நாளும் பசியால் பரிதவிக்கின்றனர்" என்பது ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச உணவு கொள்கை ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலாகும்!

நமது திட்ட கமிஷன் வறுமைக்கு அளவுகோலாக நகரங்களில் நாளொன்றுக்கு 28.65 பைசா சம்பாதிப்பவர்களையும், கிராமங்களில் 22.43 பைசா சம்பாதிப்பவர்களையும் அறிவித்தது என்பதை நாம் நினைவில் நிறுத்தி பார்த்தால், வறுமையின் உக்கிரம் நம்மை உலுக்கிவிடும்.

உலகவங்கி தரும் புள்ளிவிபரக் கணக்கு படி இந்தியாவில் சுமார் 40% பேர் வறுமையில் உழல்கிறார்கள். வறுமைக்கு அளவுகோலாக நாளொன்றுக்கு ரூ 100சம்பாதிப்பவர்களை அளவுகோலாக்குகிறது உலக வங்கி. அந்த வகையில் ரூ 100 சம்பாதிப்பவர்களை சார்ந்து வாழும் குழந்தைகள், முதியோரையும் இணைத்து பார்த்தே இந்த மதீப்பீடு வழஙகப்பட்டுள்ளது எனக் கருதலாம்.

கொடிது கொடிது வறுமை கொடிது
அதினினும் கொடிது, 'இளமையில் வறுமை'.
என்பது ஔவையாரின் வைரவரிகள்!

ஐ.நாவின் அடுத்த தகவல் உலகில் வறுமையில் வாடிவதங்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியக் குழந்தைகள் என்கிறது! 
அந்த குழந்தைகளை ஈன்றெடுக்கும் தாய்மார்களில் சுமார் 50%த்தினர் நோஞ்சான்களாக இருப்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஊட்டசத்து குறைவால் சுமார் 18லட்சம் குழந்தைகள் இறக்கின்றனர்.

இந்தியாவில் அதிக மக்கள் பசிபட்டினியால் வாடும் மாநிலங்களாக மத்தியப்பிரதேசம், உத்திரபிரதேசம், ஜார்கண்ட், பீகார், ராஜஸ்தான், போன்றவை அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு வறுமையை ஒழிக்க, வாட்டும், பசிபட்டினி கொடுமைகளை அகற்ற இது வரை சுமார் 50வகையான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இன்றும் பல அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

ராஷ்டிரிய விகாஷ் யோஜனா
மகாத்மாகாந்தி தேசிய ஊரகவேலைவாய்ப்பு திட்டம்
பொதுவிநியோகத்திட்டம்
மதிய உணவுத்திட்டம்
தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம்....

போன்ற திட்டங்களுக்காக இது வரை பல லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளன. ஆனால், இவை வறுமையை அழித்ததாக தெரியவில்லை. ஆனால் இவற்றால் அதிகார மையங்களில் உள்ள சிலரும், அவர்களைச் சார்ந்தோரும் நன்றாக செழித்துள்ளார்கள் என்பது உண்மை.

இந்தியாவில் ஓராண்டில் 58,000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள உணவு பொருட்கள் உணவு கிடங்குகளில் விரயமாகின்றன. இது ஆஸ்திரேலியாவின் ஓராண்டுக்கான மொத்த உணவு உற்பத்தியின் மதிப்பாகும்!

இவை ஒரு புறமிருக்க, வறுமைக்கு நேர் எதிரான இந்தியாவின் செல்வச்செழுமை குறித்த சில தகவல்களையும் இணைத்தே நாம் இந்தியாவை பார்க்கவேண்டும்.
அந்த வகையில் உலகில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்டோர்களின் எண்ணிக்கையில் இந்தியா ஐந்தாம் இடம் வகிக்கிறது. இந்தியாவில் 1,53,000பெரும் கோடீஸ்வரர்கள் உள்ளனர்.

ஸ்விஸ் வங்கிகளின் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இதில் உலகின் சில பணக்கார நாடுகளே இந்தியாவைக் காட்டிலும் பின்தங்கியுள்ளது.

உலகில் வறுமையில் உழலும் எத்தியோப்பியாவை மிஞ்சும் வகையிலும், புருண்டி, எரித்திரியா, கமோரோஸ் போன்ற நாடுகளுக்கு இணையாகவும் வறுமையில் இந்தியர்கள் ஒரு புறம் வாடுவதும்,

உலகின் பணக்கார நாடுகளான இங்கிலாந்து, ஜெர்மன், ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையை காட்டிலும் இந்தியாவில் அதிக கோடீஸ்வரரக்ள் உள்ளனர் என்ற தகவலும், எவ்வளவு முரண்பாடாக இருந்தாலும், இது தான் இன்றைய இந்தியாவின் யதார்த்தமாக உள்ளது! 

தந்திடிவிக்காக,
செய்தியும், பின்ணணியும், 
15.10.2013

சினிமாவை தடை செய்யும் அதிகாரம் யாருக்கு?


                                                                                                              -சாவித்திரிகண்ணன்

சினிமாவை தடை செய்யக்கோரும் கோரிக்கைகள், எதிர்ப்புகள், போராட்டங்கள் அவ்வப்போது பலதரப்பிலிருந்து எழுவதையடுத்து இந்த பிரச்சினையை கையாளும் வழிமுறைகளைக் கண்டறிய மத்திய அரசு நீதிபதி. முகுல்முத்தல் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தது.
அந்த கமிட்டியின் பரிந்துறைகளை தற்போது தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் மணீஸ்திவாரி வெளியிட்டுள்ளார். இதன் மூலம் திரைபடங்கள் தடை தொடர்பான விவகாரங்களுக்கு ஒரு தீர்வு பிறந்துள்ளது.

சினிமாவிற்கு தடைகள் ஒரு வரலாற்று பார்வை;

ஃ 1959ல் வெளியான நீல அக்சீர் நீக்சே என்ற படம் தான் முதன் மதல் இந்தியாவில் பிரச்சினைகளை சந்தித்த படம். இப்படம் 1930களில் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த கூலிதொழிலாளிகள் பற்றியது.
இருமாக தடைக்குப் பின் திரைக்கு வந்தது.

ஃ 1975ல் வெளியான 'ஆனந்தி' என்ற திரைபடம் இந்திராகாந்தியின் அவசரநிலை சட்டத்தால் தடுக்கப்பட்டது. ஆனால் ஜனதா அரசாங்கம் பதவிநேற்றவுடன் 1977ல் திரையிடப்பட்டது.

ஃ 1987ல் தமிழில் வெளியான 'ஒரு கிராமத்திலே' இட ஒதுக்கீடு பிரச்சினையை அலட்சிதால் எதிர்க்கப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றத் தலையீட்டால் திரையிடப்பட்டது.

ஃ 2005ல் 'வாட்டர்' என்ற பட்ம் சூட்டிங் ஸ்பாட்டிலேயே மத நம்பிக்கையாளர்களால் தடை செய்யப்பட்டது. எனினும் அப்படம் இந்தியாவிற்கு வெளியில் படமாக்கப்பட்டு எதிர்பார்ப்புகளுக்கிடையே 2007ல் வெளியானது.

ஃ 2006ல் 'டாவின்சிகோட்' படம் சென்னை உயர்நீதிமன்ற தலையீட்டால் தடை தகர்க்கப்பட்டு வெளியானது.

ஃ 2011ல் 'முல்லைபெரியாறு டேம்' என்ற படம் தமிழக அரசால் தடுக்கப்பட்டது.

ஃ 2013ல் விஸ்வரூபம் படம் இஸ்லாமிய இயக்கங்களின் எதிர்பால் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டு காலதாமதமாக வெளியானது.

ஃ 2013ல் மெட்ராஸ்கபே படம் தமிழ் தேசிய மற்றமு ஈழ ஆதரவு இயக்கங்களால் எதிர்கப்பட்தால் தமிழகத்தில் திரையிடமுடியவில்லை.

ஃ 2013ல் 'துப்பாக்கி' படம் ஆளும் அரசின் அதிருப்தி காரணமாக எந்த தியேட்டரிலும் சிறிது காலம் திரையிடமுடியாமல் சிரமப்பட்டது.

எனவே, அதிகரித்து வரும் திரைப்பட தடை சர்ச்சைக்குரிய சூழலில் நீதிபதி முகுலமுத்தல் கமிட்டியின் பரிந்துரைகபள் முக்கியத்துவம் பெறுகின்றன; 

நீதிபதி முகுல்முத்தல் கமிட்டி பரிந்துரையின் முக்கிய அம்சங்கள்; 

ஃ சட்டம் ஒழுங்கு பராமரிப்பு என்பது மாநில அரசின் தனிப்பட்ட ஒன்றாகும். அதே சமயம் ஒரு படம் சென்சாரில் அங்கீகரிக்கப்பட்ட பிறகு அதை திரையிட அனுமதிக்க வேண்டும். இதில் ஆட்சேபணைகள் இருந்தால் அது Film certification Appellate Tribunel வழியாகத் தான் தீர்வுகாண வேண்டும்.

ஃ தனிநபரோ, இயக்கங்களோ, மாநில அரசோ ஒரு படம் குறித்து ஆட்சேபணை இருக்குமானால் அதற்கான தீர்வை விரைந்து பெறக்கூடிய இடம் Film certification Appellate Tribunel மட்டுமே!

ஃ மிகவும் பதட்டம் ஏற்படக்கூடிய சூழல்கள் இருக்குமானால் இதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு இதில் எந்த அளவுக்கு சினிமாட்டோகிராப் சட்டம் செல்லுபடியாகும் என முடிவு எடுக்கவேண்டும்.

ஃ FCAT வலுப்படுத்தப்படவவேண்டும். 'சினிமாட்டோகிராப்' சட்டமே நிரந்தரமானதாக கருதவேண்டும்.

ஃ சென்சார்போர்டில் அரசியல்வாதிகளின் நியமனம் கூடாது. அழகுணர்வும், அறம்சார்ந்த பார்வையுமுள்ளோரையே நியமிக்கவேண்டும்.

ஃ வீடியோ, ஆடியோ, போஸ்டர்கள் போன்றவற்றாலும் சர்ச்சைகள் வருவதால் சினிமாவோடு இணைத்து இதற்கும் சான்றிதழ்கள் பெறவேண்டும்.


மேற்படி பரிந்துரைகள் படைப்பாளிகளின் கலை சுதந்திரற்கு பெரும் மதிப்பு தருவதாக உள்ளன. அரசியல், மதம், சாதி, இனுணர்வு போன்றவற்றால் கலை படைப்புகள் தடை செய்யபடுவதற்கு ஒரு தீர்வு தருவதாக உள்ளன. எனினும், படைப்பாளிகள் தங்கள் படைப்பின் எதிர்வினைகள் குறித்த சமூக பொறுப்புணர்வுடன் செயலாற்றவேண்டும். தந்திடிவிக்காக,
செய்தியும், பின்ணணியும், 
10.10.2013