Tuesday, December 14, 2010

சமச்சீர் கல்வியா? தரமான கல்வியா?

_ சாவித்திரி கணணன்

மச்சீர் கல்வி குறித்து கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது.

''அடடா இந்தக் கல்வி திட்டம் வந்தால் பிள்ளைகளின் கல்விப் பிரச்சனைகள் தீர்ந்தது. இனி பிள்ளைகளை சேர்க்க அப்ளிகேஷன் வாங்குவதற்காக நீண்ட க்யூ வரிசைகளில் நிற்க வேண்டியதில்லை. சிபாரிசுக்கு அலைய வேண்டியதில்லை. டொனேசனுக்கும், பீஸுக்கும் நகைகளை அடமானம் வைப்பது, கடன் வாங்குவதெல்லாம் இனி இல்லவே இல்லை'' என இலட்சக்கணக்கான பெற்றோர்கள் பரவசமாக காத்திருந்தனர். எளிய நடுத்தர வகுப்பினரின் எதிர்பார்ப்புகள் இப்படியென்றால் அரசு பள்ளிக் கூடங்களில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களோ இனி நம்ம குழுந்தைகள் படிக்கும் அரசு பள்ளிக் கூடங்களெல்லாம் தனியார் பள்ளிகளின் தரத்துக்கு உயரப் போகிறது. ஆசிரியர்கள் பற்றாக்குறை என்று பெற்றோர்கள் - ஆசிரியர்கள் சங்கத்தினர் தனியாக வாத்தியார்களை வேலைக் கமர்த்தி சம்பளம் அழ வேண்டியதில்லை பள்ளிக்கூடங்களுக்கு கழிவறை வசதிகள், குடிநீர் வசதிகள் வந்துவிடும். டேபிள், சேர், போர்ட் எல்லாம் பிரமாதமாக இருக்கும். இஸ்டத்துக்கு பள்ளிக்கூடத்துக்கு வரலாம், போகலாம், விருப்பம் இருந்தால் வகுப்பறைகளுக்கு போய் பாடம் எடுக்கலாம் இல்லாவிட்டால் சும்மாவது உட்காரலாம் என்ற ரக ஆசிரியர்கள் இனி இருக்கமாட்டார்கள் என கனவில் மிதக்க ஆரம்பித்தார்கள்.

பல ஆண்டுகளாக சமச்சீர் கல்விக்கு குரல் கொடுத்த கல்வி ஆர்வலர்களோ ''அட, சுமார் நாற்பது வருஷ கனவு இப்போதாவது நிறைவேறினால் மகிழ்ச்சி தான். நடக்கபபோவது வரலாற்று சாதனை தான்..'' என அக மகிழ்ந்தனர்.

ஆமாம் சமச்சீர் கல்வி என்றால் இந்த நாட்டில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் தரமான சமமான கல்வி உறுதிபடுத்தப்படும். பணமோ, அந்தஸ்தோ கல்வி தரத்தை தீர்மானிக்காது. வீட்டுகருகிலுள்ள பள்ளிக் கூடத்திற்கு சென்று படிப்பது என்பது ஒவ்வொரு குழந்தைகளுக்குமான அடிப்படை உரிமை என்பது தான் எளிமையான அர்த்தமாகும். இவை இன்றைக்கு தமிழக அரசால் அறிமுகப்படுத்தி அமல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறும் 'சமச்சீர் கல்வி' யில் சாத்தியப்பட்டுள்ளதா? இனி சாத்தியப் படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளாவது தென்படுகிறதா? என்பது தான் இன்று அனைவரும் உரக்க எழுப்பத் தொடங்கியுள்ள கேள்வியாகும்.

2006 - தேர்தலில் சமச்சீர்கல்வியை அறிமுகப்படுத்துவோ என்று வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்தது தி.மு.க ! முத்துக்குமரன் கமிட்டி இதற்காக அமைக்கப்பட்டது. இந்தக் கமிட்டியும் பல நிர்பந்தங்களுக்கு உட்பட்டே, அரசை அனுசரித்து ஒரு அறிக்கை தந்தது. அந்த அறிக்கையானது தற்போதைய கல்வித் திட்ட அமல் முறையில் உள்ள குறைபாடுகள் எனனென்ன? அவற்றை சமச்சீர்கல்வி அமலாக்கத்தின் மூலம் எவ்வாறு சீர்படுத்தலாம் என்பது பற்றி மூச்சு கூட விடவில்லை. குறிப்பாக கல்வி கட்டணங்கள் தொடர்பாக பெற்றோர்கள் மத்தியிலுள்ள குமுறல்கள், அரசு பள்ளிகளின் அவலநிலை குறித்த பெற்றோர்களின் கடும் அதிருப்தி... இவை பற்றியெல்லாம் கவனமாக தவிர்த்து விட்டது. பாவம் முத்துக்குமரன்! தன் அறிக்கை குப்பை கூடைக்கு போய்விடக்கூடாது என்று அவர் கவலைப்படக் கூடாதா என்ன?

ஆனாலும் கூட முத்துக்குமரன் கமிட்டி சில பயனுள்ள ஆய்வுகளைச் செய்து நல்ல சில ஆலோசனைகளைத் தந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால் அதையும் கூட ஏற்றுக் கொள்ள மனம் வேண்டுமே தமிழக அரசுக்கு?

தமிழக அரசு சமச்சீர் கல்வியை அமலாக்கப் போகிறேன் என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து குழந்தைகளுக்கும் அடிப்படை கல்வி கற்பது உரிமை என்பதை சட்டமாக்கியுள்ளது. இந்தச் சாதகமான சூழலைப் பயன்படுத்தி சமச்சீர் கல்வி அமலாக்கத்தை தமிழக அரசு விரைவுபடுத்தலாம். ஆனால் அப்படி ஒரு அக்கரை இருந்தால் தானே....!

மற்றொரு பக்கம் தனியார் பள்ளிகள் சமச்சீர் கல்வி என்பதை தங்களுக்கு தோண்டப்படும் சவக்குழிகளாகப் பார்க்கிறார்கள்.ஆனால் உண்மையில் தமிழக அரசு தனியார் பள்ளிகளை பகைத்துத் தான் சமச்சீர் கல்வியை அமலாக்கம் செய்ய வேண்டும் என்பதில்லை. அவர்கள் ஒத்துழைப்பையும், இணக்கத்தையும் பெற்றே அமல் செய்யலாம்.

முதலாவதாக மக்கள் நம்பிக்கையைப் பெற்று செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு உரிய மரியாதை தந்து அவர்களை சமச்சீர்கல்வி அமலாக்கத்தின் பங்காளிகாக மாற்ற வேண்டும். இது நடக்க முடியாதது அல்ல. இதற்கு பொறுமையுஃம், ராஜதந்திரமும் தேவை. கூடவே அரசின் நம்பகத் தன்மையும், நோக்கமும் சந்தேகத்கிடமின்றி இருக்குமானால் தனியார் பள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைத்தே தீரும்!

ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக உள்ளது. கோவிந்தராஜன் கமிட்டியை அமைத்து தனியார் பள்ளிகளின் கட்டணத்தை தமிழக அரசு வரையறை செய்தது. நடைமுறையில் இது படுதோல்வியில் முடிந்துவிட்டதோடு பள்ளிக் கல்விச் சூழலையே சீர்கெடுத்துவிட்டது. இவை தனியார் பள்ளிகளை அரசுக்கு எதிராக ஒற்றுமை கொள்ளச் செய்ததுடன் பொதுநலன்களுக்கு எதிரான நிலையில் நிறுத்தி விட்டது. அக்கரையுடனும், பொறுப்புடனும் கையாளப் படவேண்டிய கல்விக் கட்டண அணுகுமுறையை சட்டம், அதிகாரம் சாத்தியப் படுத்த முடியாது.

தற்போதைய கல்வி ஆண்டிற்கு தமிழக அரசு ஒன்றாம் மற்றும் ஆறாம் வகுப்பிற்கான சமச்சீர் கல்வி பாடத்திட்டதை மட்டுமே அமல் படுத்தியுள்ளது. இதன் மூலம் தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகள் இரண்டிலுள்ள இந்த வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரை விதமான பாடத்திட்டத்தை கற்கிறார்கள் என்பதற்கு மேல் திருப்தி பட்டுக்கொள்ள இதில் ஒன்றுமில்லை அதிலும் கூட பல தனியார் பள்ளிகள் அரசு தந்த பாடத்திட்டத்தை அமலாக்கவில்லை என்று கூறப்படுகிறது. அப்படியிருக்க இனி அடுத்த ஆண்டில் மேலும் சில பாடத்திட்டங்களை வடிவமைப்பதன் மூலம் கல்வித் துறையில் என்ன பெரிய மாற்றத்தை உருவாக்க இயலும்?

இதையெல்லாம் கவனத்தில் கொண்டு மதிப்பீடு செய்தால் சமச்சீர் கல்வி என்பது நமக்கு வெகுதூரம் இருப்பதாகத் தான் உணரமுடிகிறது. அது பூமிக்கும் நிலவுக்குமான தூர இடைவெளியா? அல்லது பூமிக்கும் நட்சத்திரத்திற்குமான தூர இடைவெளியா? என்பதை நாம் பட்டிமன்ற பேச்சாளர்களிடம் விட்டுவிட்டு அடுத்த விஷயத்திற்கு வருவோம்.

மத்திய அரசு அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு பல நூறுகோடிகள் ஒதுக்கிறது. மாநில அரசும் வரிவருவாய் மூலம் கல்விக்கான பெறும் நிதியைப் பெறுகிறது. உள்ளாட்சி அமைப்புகளும் கல்விக்காக பெரும் நிதியை வரி மூலமாக வசூலிக்கிறது. இவை முறையாக கல்விக்காக அக்கரையுடன் செலவழிக்கப்பட்டால் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்காது. அடிப்படை தேவைகள் பூர்த்தியாகும்! அடுத்ததாக தரமான கல்விக்கும், பொறுப்பான ஆசிரியர்களுக்குமான உத்திரவாதமே தேவைப்படுகிறது. அரசு பள்ளிக் கூடங்களில் தரம் உத்திரவாதப்படுத்தினால் தனியார் பள்ளிகள் பற்றிய கவலையை அதை நடத்துபவர்களுக்கு மட்டுமே உரித்தாக்கி விட்டு விடலாம்!

தனியார் பள்ளிக் கூடங்களை விட தரமான சிறந்த கல்விச்சூழலை அரசாங்கத்தால் தரக்கூடும் என்ற நிலைமை தான் வேண்டும். பள்ளிக் கல்வித்துறையில் இப்படியானதொரு நிலையைத்தான் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்கள் ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள், ஐ,ஐ,டி போன்றவை அரசாங்கத்தால் தானே நடத்தப்படுகின்றன. அப்படியிருக்க பள்ளிக் கல்வித்துறையை மட்டும் சிறப்பாக்க முடியாதா என்ன?

டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கார் திரைப்படம்

அவநம்பிக்கை விதை

-சாவித்திரிகண்ணன்

தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்து தனிப்பெரும் அறிஞராக, ஆறறலாளராக விளங்கிய அம்பேத்கர் பற்றிய படம் காலம் கடந்து இப்போதாவது வெளிவந்துள்ளதை பாராட்ட வேண்டும்.

சாதி ஏற்றத்தாழ்வுகளால்-உயர்சாதி இந்துக்களால் அம்பேத்கார் பெற்ற அவமானங்கள், பரோடா மன்னர் உதவியில் அவர் அமெரிக்கா, லண்டன் சென்று படித்து பாரிஸ்டராவது போன்றவை இயல்பாக சித்தரிக்கப் பட்டுள்ளன, டாக்டர் அம்பேத்கரை நிஜமாகவே நாம் பார்ப்பது போன்ற உணர்வை தன் நடிப்பாற்றலால் ஏற்படுத்துகிறார் நடிகர் மம்முட்டி. இடைவேளை வரை சரியாக எடுக்கப்பட்ட படம் அதன்பிறகு தவறான வரலாற்று புரிதலோடு நகர்கிறது.

அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையிலான வரலாற்று நிகழ்வுகள் தவறான அரசியல் உள்நோக்கத்தோடு திரித்து சொல்லப்பட்டுள்ளது. பூனா ஒப்பந்தம் என்பது என்ன?

அம்பேத்கார் பிரிட்டிஷாரிடம் தலித்களுக்கென தனித்தொகுதிகள், இரட்டைவாக்குரிமை கேட்டார். அப்படிப் பெறுவதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சனை முடிவுக்கு வரும் என நினைத்தார். இதற்கு சீக்கியர்களும், மூஸ்லீம்களும் இரட்டை வாக்குரிமை சலுகை பெற்றிருப்பதை முன்மாதரிியாக காட்டி வாதம் வைத்தார்.

காந்தி இந்த வாதத்தை ஏற்கவில்லை. ஆயினும் தனித்தொகுதிகள் தலித்து களுக்கு தரப்படுவதை ஏற்றுக்கொண்டார். அம்பேத்கார் 197 தொகுதிகள் கேட்டார். பிரிட்டிஷ் அரசு 71 தொகுதிகள் மட்டுமே தர ஒப்புக்கொண்டது. ஆனால் காந்தியின் தலையிட்டால் தான் தலித் மக்களுக்கு 147 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த வரலாறு இந்த திரைப்படத்தில் திட்ட மிட்டு மறைக்கப்பட்டுள்ளது. மேலும் இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் இரட்டை வாக்குரிமை பெற்று இருந்ததால் தீண்டாதாருக்கு அவ்வுரிமை வேண்டும் என்ற போது, "இஸ்லாமியர்களும், சீக்கியர்களும் எப்போதும் இஸ்லாமியர்களாகவும் சீக்கியர்களாகவுமே இருக்கப் போகிறவர்கள் ஆனால் இன்று தீண்டப்படாதவர்களாக இருப்பவர்கள் எப்போதும் தீண்டப் படாதவர்களாகவே இருந்துவிட வேண்டுமா? தீண்டப்படாதவர்களை பெரும்பான்மை இந்து சமூகத்தின் பிரிக்க முடியாத, சமமதிப்புள்ள ஒர் அங்கமாக மாற்றுவதே என் நோக்கம், ஆனால் இந்தச்சலுகைகள் அவர்களை என்றென்றும் பெரும்பான்மை சமூகத்திடமிருந்து பிரித்து விடும். அது நிரந்தர பகை உணர்வை விதைத்து விடும்" என்றார் காந்தி இந்த செய்தியும் இதில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் காந்தி தாழ்த்தப்பட்டவர்களை எதிர்க்க மூஸ்லீம்களை தூண்டி பயன்படுத்தி கீழ்த்தர அரசியலில் இறங்கியதாகவும் ஆதாரமில்லாத அப்பட்டமான பொய் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

அரசின் சலுகைகள் மூலம் சமூக மாற்றம் நிகழ்ந்துவிடும் என அம்பேத்கர் நம்பினார். ஆனால் அந்த சமூக மாற்றத்தை இந்து சமூகத்திலிருந்து கொண்டு போராடுவதன் மூலமும், உயர்சாதி இந்துக்களின் மனசாட்சியை உலுக்கி மாற்றம் கொள்ள வைப்பதன் மூலமும் சாத்தியமாக்கலாம் என்றார் காந்தி.

எரவாடா சிறையில் காந்தி உண்ணாவிரதத்தை அறிவித்த போது சொன்ன வாசகம் இது தான். "ஹரிஜன மக்களின் இன்றைய நிலைபாடுகளுக்கு காரணம் உயர்சாதி இந்துக்கள். அவர்கள் தங்கள் இதயத்தை தூய்மை படுத்திக் கொண்டு மனமாற்றம் கொள்ளாவிடில் என்னைத்தியாகம் செய்து விட வேண்டியது தான்" என்றார். ஆக, காந்தியின் உண்ணாவிரதம் என்பது உயர்சாதி இந்துக்களிடம் மன மாற்றம் வேண்டி மேற்கொள்ளப்பட்டதேயின்றி தலித்துகளுக்கு எதிரானதல்ல' என்பதே உண்மை!

அப்போது இந்தியாவில் நடந்த நிகழ்வுகளை பிரபல அமெரிக்க பத்திரிக்கையாளர் லூயி பிஷர் பதிவு செய்துள்ளார். அதை அப்படியே இங்கே பார்ப்போம்.

"ஹிந்துக்களின் மனசாட்சியை உறுத்தி செயலுக்கு தூண்டுவதே இந்த உபவாசம்' என காந்தி பகிரங்கமாக அறிவித்த ஷணத்திலிருந்து பல அதிசயத்தக்க நிகழ்வுகள் நடந்தேறின. 'நம்மை சீர்த்திருத்துவதற்காக தன்னைத் தானே வருத்திக்கொள்ளும் இந்தப் புனிதரை நாம் கொன்று விடப்போகிறோமா?' என இந்துக்களிடம் பரவலான கேள்வி எழுந்தது. பெருநகரங்கள், சிற்றூர்கள், கிராமங்கள், பட்டிதொட்டியெங்கும் இதே விவாதமானது. உண்ணாவிரதத்திற்கு முந்தினநாளே அகமதாபாத்தில் உள்ள 12 பெரிய கோயில்கள் திறந்துவிடப்பட்டன, அடுத்தடுத்து பல்வேறு ஊர்களில் நூற்றுக்கணக்கான கோயில்கள் திறந்து விடப்பட்டன. அவற்றின் வாயில்களில் பிராமணர்கள், பண்டிதர்கள் ஹரிசனமக்களை கைகூப்பி வரவேற்றார்கள்.

அப்போது கோயில்களின் வாயில்களில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 98% வாக்குகள் தாழ்த்தப்பட்டமக்களின் ஆலயபிரவேசத்திற்கு ஆதரவாக இருந்தது. 2% மட்டுமே எதிராக இருந்தது. இது மட்டுமல்ல, கிராமங்களில் கிணறுகளில் தண்ணீர் எடுக்க அனுமதி, பொதுவீதிகளில் நடமாட அனுமதி என ஆங்காங்கே மக்கள் அமைப்புகள், சங்கங்கள் தீர்மானம் இயற்றி நடைமுறைக்கு வந்தன. தினசரி இது போன்ற நூற்றுக்கணக்கான நிகழ்வுகளை பத்திரிக்கைகள் பட்டியலிட்டு பிரசுரித்தன." ஆக, இதன் மூலம் உயர்சாதி இந்துக்களின் மனதில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவான நியாயமான சிந்தனைகளை உருவாக்குவதில் காந்தியின் உண்ணாவிரதம் காத்திரமான பங்களிப்பை ஆற்றியது என்பதே வரலாற்று உண்மை.

மேலும் முதலில் காந்தியை சந்தேகித்த அம்பேத்கார் - காந்தியை எதிரியாக கருதிய அம்பேத்கர் - பிறகு மனம் மாறினார் என்பதற்கு செப்டம்பர் 25ந்தேதி புனா ஒப்பந்தத்திற்கு பிறகு மும்பையில் நடந்த மாநாட்டில் அவர் ஆற்றிய உரையே சான்று.

"நான் ஒன்றை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் நான் வியப்புற்றேன். மிக, மிக வியப்புற்றேன். அவரை நான் சந்தித்த போது எங்கள் இருவருக்கும் எவ்வளவு ஒற்றுமை இருக்கிறது என்பதைக் கண்டு வியப்புற்றேன். அவரிடம் நாங்கள் போய்ச் சொன்ன எல்லாபிரச்சினை களிலும் அவர் எனக்கு சாதகமாகவே இருந்தார். மிகவும் சங்கடமான ஒரு நிலையிலிருந்து என்னை விடுவித்ததற்காக, மகாத்மாஜீக்கு நான் பெரிதும் நன்றி செலுத்துகிறேன்" என்றார்.

மேலும் புனா ஒப்பந்தத்தில் அம்பேத்கரின் இரட்டை வாக்குரிமை என்ற கோரிக்கை தவிர மற்ற எல்லா கோரிக்கையையும் தான் ஏற்றுக் கொண்டதோடு காங்கிரஸையும், இந்திய மக்களையும் ஏற்க வைத்தார் காந்தி. அன்று இரட்டை வாக்குரிமை வழங்கப்பட்டிருந்தாலும் தாழ்த்தப் பட்டவர்களில் படித்தவர்கள், சொத்துரிமை உள்ள மிக மிகச்சிலரே ஓட்டுபோடும் உரிமை பெற்றிருப்பார்கள். அது 2% கூட இருந்திருக்காது, இதை அம்பேத்கரும் உணர்ந்திருந்தால் தான் அந்த கோரிக்கையை விட்டுவிட்டார்.

மேலும் காந்தி உண்ணவிரதம் இருக்காமல் இப்படி ஒரு சட்டம் அமலுக்கு வந்திருந்தால் அது மற்ற இந்துக்களின் எதிர்ப்பை பெற்று நடைமுறைப்படுத்துவதே சிக்கலாகியிருக்கும் என்பதை அம்பேத்கர் அறிந்திருந்தார்.

இதனால் தான் அவர் காந்தியிடம், "நீங்கள் மற்ற போராட்டங்களை எல்லாம் விட்டு விட்டு தாழ்த்தப்பட்டவர்களுக்காக மட்டுமே போராட வந்தால் நாங்கள் உங்களைத் தலைவராக ஏற்போம்" என்றார்.

தாழ்த்தப்பட்ட மக்களிடம் நேரடியாக இறங்கி களவேலை பாரத்தவர் காந்தி. அவரது பாதிப்பால் அன்று லட்சக்கணக்கான அந்தஸ்துள்ள உயர்சாதி இந்துக்கள் கிராமங்களுக்கும், சேரிகளுக்கும் சென்று ஹரிஜன சேவையில் தங்களை அர்பணித்தார்கள். ஆகவே காந்தி தான் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்திய மக்களின் தனிப்பெரும் தலைவராக இருந்தார். ஆனால் அம்பேத்கரோ ஒரு மாபெரும் அறிஞர். அறிவு ஜீவி, பெரும் சிந்தனையாளர். ஆனால் அவர் தாழ்த்தப்பட்ட மக்கள் திரளின் தலைவராக ஒரு போதும் திகழ்நதவரல்ல, அவர் தான் போட்டியிட்ட தொகுதியிலேயே மக்களால் தோற்கடிக்கப்பட்டார்.

காந்தியையும், காங்கிரஸையும் எதிர்த்த நிலையிலும், அவரை அரசியல் சட்ட வரைவு குழுவின் தலைவராகவும், இந்தியாவின் சட்ட அமைச்சராகவும் ஆக்கி கௌரவப்படுத்தியது காந்தியும் நேருவும் தானே! அது மட்டுமின்றி வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என சட்டம் கொண்டு வந்து அனைத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் வாக்குரிமை வாய்ப்பு ஏற்படுத்தியது காங்கிரஸ் தானே!

ஆனால் இந்த படத்தில் காங்கிரஸையும், காந்தி, நேருவையும் தாழ்த்தபட்டவர்களின் வில்லனாக சித்தரித்துள்ளனர். பிரிட்டிஷ் இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கும், சீக்கியர்களுக்கும் வழங்கப்பட்டு வந்த இரட்டை வாக்குரிமை உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் காங்கிரஸ் அரசு இந்திய சுதந்திற்குப் பிறகு வாபஸ் பெற்றது. ஆனால் காந்தியால் அங்கீகரிக்கப் பட்ட தாழ்த்தப் பட்டோருக்கு தனித்தொகுதிகள் என்ற சலுகையை ரத்து செய்யவில்லை. அது இன்று வரை தொடர்கிறது.

இந்த உண்மைகள் இப்படத்தில் இருட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மாறாக திட்டமிட்டு காந்தி, நேரு போன்ற தலைவர்கள் வரும் காட்சிகளில் அவர்களின் இமேஜை தகர்க்கும் படி காட்சி அமைப்புகள், வசனங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. காந்தி, நேரு பாத்திரத்திற்கு தேர்வான நடிகர்களின் தேர்வே இதற்கு அத்தாட்சி.

அரசியல் சட்டவரைவு குழு தலைவராவதற்கும், சட்ட அமைச்சராவதற்கும் அம்பேத்கரை நேரு கெஞ்சி பேசி சம்மதிக்க வைப்பதாகவும், இந்து திருமணச் சட்டத்தை அமல்படுத்த மறுத்தவர் போலவும் காட்டியிருப்பது ஏற்புடையதல்ல, உண்மைக்கு மாறானதாகும், இந்து திருமணசட்டத்தை ஜனநாயக ரீதியில் எதிர்ப்புகளை எதிர்கொண்டு நேருதானே அமல்படுத்தினார்! காலம் கனிவதற்கா சிறிது நேரம் எடுத்துக்கொண்டார். அதற்குள் பொறுமையிழந்து, அதிருப்தியுற்று அம்பேத்கர் பதவி விலகினார்.

அம்பேத்கர் காந்தியை தேடிவரும் போது காந்தி வேண்டுமென்றே அம்பேத்கரை கண்டும் காணாமல் அவமதிப்பதாகவும், பேசுவதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது, அதோடு அம்பேத்கர் பேசும் போது அவரை காந்தி முறைத்து பார்ப்பது போலவும் காட்சி படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல காந்தி அம்பேத்கரை புனாவில் வசிக்கும் முற்போக்கு பிராமணர் என கருதியதாகவும் வசனம் இடம்பெற்றுள்ளது. இது அப்பட்டமான பொய். தன்னை சந்திப்பதற்கு முன்பே அம்பேத்கரை பற்றியும் அவருடைய மேதமை, போராட்டங்கள் பற்றியும் காந்தி நன்கு அறிந்திருந்தார். ஹரிஜன் பத்திரிகையில் எழுதியிருந்தார்.

மொத்தத்தில் இந்த திரைபடத்தில் காந்தியை அழிச்சாட்டியம் செய்யும் அழுகுனிபேர்வளிபோலவும், நேருவை உதவாக்கரையான உம்மாணமூஞ்சி போலவும் சித்தரித்துள்ளனர். என்றென்றும் உலக அரங்கில் ஒரு ஆதர்ஷ புருஷராக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு போராடும் தலைவர்களுக்கு வழிகாட்டியாக, தலாய்லாமா, மார்டின் லூதர்கிங், தென்கொரியாவின் ஹாம்ஸோக்ஸோன், ஜாம்பியாவின் கென்னக்காவுண்டா, ஆப்பிரிக்காவின் குவாமேருக்மா, நெல்சன் மண்டேலா, அமெரிக்க அதிபர் ஓபாமா உள்ளிட்ட உலகின் முக்கியஸ்தர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்துகொண்டிருக்கும் உத்தமர் காந்தியை இவ்வளவு உள்நோக்கங் களோடு இழிவுபடுத்தவேண்டிய அவசியமென்ன? ஆசியாவின் ஜோதி என்றும், வசிகரமிக்க தலைவரென்றும் வரலாற்றில் இடம்பெற்ற பண்டித ஜவஹர்லால் நேருவை இவ்விதம் கேவலப்படுத்தவேண்டிய அவசியமென்ன?

காந்திக்கு எதிரான வசனங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளது அக்காட்சிகளில் காந்தியை அறிந்திராத இன்றைய இளம் தலைமுறை தலித் இளைஞர்கள், தலித் ஆதரவாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். காந்தி சுட்டுக் கொள்ளப்பட்ட செய்தி அம்பேருக்கு அறிவிக்கப்பட்ட தருணத்திலும் தியேட்டரில் கைத்தட்டலும், விசிலும் தூள் பறந்தன. 'தாழ்த்தப்பட்ட மக்களின் பெரும் வரலாற்று துரோகி ஒழிந்தான்' என்ற மனநிலைக்கு வரலாறு அறியாத பார்வையாளர்களை கொண்டு நிறுத்தியதில் இயக்குநர் ஜாபர் படேல் சாதித்திருக்கலாம். காங்கிரஸிக்கும், காந்திக்கும் எதிரான அரசியலை முன்னெடுக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட சித்திரமாக அம்பேத்கர் திரைப்படம் அமைந்துள்ளது மிகவும் துரதிஷ்டம். தாழ்த்தப்பட்ட மக்களிடம் வரலாற்றை திரித்து கூறுதலும், உண்மைகளை மறைப்பதும் அம்மக்களுக்கே செய்யும் துரோக மில்லாமல் வேறில்லை.

டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கார் திரைப்படம் இந்திய அரசு, மகாராஷ்டிர அரசு நிதி உதவியுடன் தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ளது, இதை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட தமிழக அரசு ரூ 10 லட்சம் தந்துள்ளது. நல்ல நோக்கத்தோடு வழங்கப்பட்ட நிதியை கொண்டு நஞ்சை விதைத்தற்கு மாறாக வரலாற்று உண்மைகளை உள்ளது உள்ளபடியே சொல்லப்பட்டிருந்தால் அம்பேத்கர் படம் அனைத்து மக்களிடமும் நல்ல வரவேற்பு பெற்றிருக்கும்!