Thursday, June 27, 2013

அனைவருக்கும் கல்வி சட்டமும், தீர்ப்பும் நடைமுறை சாத்தியமா?'பணம், வசதி இருந்தால் தான் தரமான படிப்பு சாத்தியம்' 'ஏழைகளுக்கு கல்வி என்பது எட்டாத கனி' என்பதற்கு முடிவு கட்டும் விதமாக உச்சநீதிமன்றம், 'அனைத்துகுழந்தைகளுக்கும் கட்டாய இலவச கல்வி' என்று 2010ஆம் ஆண்டு மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட சட்டத்திற்கு 'சட்ட அங்கீகாரம்' தந்துள்ளது. இதனை அனைத்து அரசியல் கட்சிகளும், மக்கள் நல அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும் வரவேற்றுள்ளனர்.

இதை நாமும் வரவேற்பதில் - இந்த சட்டமும், தீர்ப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் - எந்த தயக்கமும் இல்லை. ஆனால் இந்தச் சட்டத்தில் தெளிவுபடுத்தப்படாத சில அம்சங்களையும், நடைமுறை ரீதியில் உள்ள சிக்கல்களையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

இச்சட்டம் 6முதல் 14 வயதுள்ள குழந்தைகளுக்கு இலவச கல்வி தனியார் பள்ளிகளில் தர கட்டளையிடுகிறது. தனியார் பள்ளிகளோ குழந்தைகளை மூன்று அல்லது நான்கு வயதிலேயே சேர்த்தால் தான் ஆரம்ப கல்விக்கு அடித்தளமிடமுடியும். ஆனால் அரசு கூறியபடி ஆறுவயதில், காலம் கடந்து சேர்க்கப்படும் குழந்தை கட்டாயம் திணறி பின்வாங்கிவிடும்.

தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் 25% ஏழை குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை மத்திய மாநில அரசுகள் 65:35 என்ற விகிதத்தில் இணைந்து தருகின்றன. இந்த கல்வி கட்டணம் 1000த்திலிருந்து அதிகபட்சம் 3,000 வரைதான். இது தற்போதைய தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டணத்தோடு ஒப்பிடும் போது மிகக் குறைவு. தனியார் பள்ளிகளில் எதுவுமே இந்த சட்டத்தின் மூலம், 25% ஏழைக் குழந்தைகளுக்கு குறைந்த கட்டணத்தில் கல்வி தரத் தயாரில்லை என்பதே யதார்த்தம். எனவே அவர்கள் இதற்காகவே வேறுசில வழிமுறைகளின் மூலம் இந்த இழப்பை ஈடுகட்டும்போது விரும்பத்தாக விளைவுகள் ஏற்படும்.

'அட்மிஷன் பெறுவதே அதிர்ஷ்டம்' என்ற அளவிலான பெரிய தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளை சேர்க்கும் விஷயத்தில் அந்தந்த பகுதி ஆளும் கட்சி பிரமுகர்களின் தலையீடும், பொருளாதாரக் குற்றங்களும் இருக்காது என்பதை எப்படி உத்திரவாதப்படுத்துவது?

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, இந்த சட்டத்தை நமது மத்திய, மாநில அரசுகள் இதயசுத்தியுடன், கறாராக அமல்படுத்துவார்களா? என்பது அடுத்த கேள்வி.
இது 135 நாடுகளில் ஏற்கனவே சட்டமாக்கப்பட்டுவிட்ட சட்டம். அமெரிக்கா, சீனா, பிரேசில்... போன்ற நாடுகளில் வெற்றிகரமாக அமல்படுத்தி வரும் ஒரு சட்டம். சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளுக்குப் பிறகு பற்பல காலகட்டங்களில் அமைக்கப்பட்ட கல்வி கமிஷன்களால் வலியுறுத்தப்பட்டும், அமல்படுத்தப்படாமல் அலட்சியப்படுத்தப்பட்ட சட்டம்!

1993லேயே உண்ணிகிருஷ்ணன் வழக்கில் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்திய விஷயம்தான் 'அனைத்து குழநதைகளுக்கும் கட்டாய கல்வி சட்டம்' என்பது!
அவ்வளவு ஏன்? நமது அரசியல்சட்டத்தின் 21 பிரிவு கல்வியை அடிப்படை உரிமை என்று அறுதியிட்டுக் கூறியுள்ளது.
ஆனால் இன்றைய யாதார்த்தங்கள் என்ன?
கல்வி கற்கும் வயதுள்ள 81 லட்சம் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கவில்லை.
 பள்ளி செல்லும் குழந்தைகளில் 60% இடையிலேயே நின்றுவிடுகின்றனர்.
80% சதவித அரசு பள்ளிகளில் அடிப்படைத் தேவைகள் இல்லை.

ஆரம்பபள்ளிகளில் நிரப்பப்படாத ஆசிரியர் பணியிடங்கள் 10 லட்சம். '90 சதவித அரசுபள்ளி ஆசிரியர்கள் தகுதியற்றவர்கள்' என தேசிய ஆசிரியர் தகுதி தேர்வு உறுதிபடுத்தியுள்ளது. இப்படியாக அரசு தன் அடிப்படை கடமைகளிலிருந்து தவறி, போதுமான நிதியை கல்விக்கு ஒதுக்காமல், தன் மீதே நம்பிக்கை இழந்து தனியார் பள்ளிகளிடம் சமூக கடமையைஎதிர்பார்த்தால் அது நடைமுறையில் எந்த அளவு சாத்தியப்படும்?

எனவே, அரசு பள்ளிகளை பலப்படுத்தி, குறைகளை நிவர்த்திக்கவேண்டும். தனியார் பள்ளிகளில் சட்டம் போட்டு சமூக பொறுப்புணர்வை ஏற்படுத்த முடியாது. சட்டத்தின் பல தெளிவற்ற அம்சங்களை முழுமைபடுத்தவேண்டும். ஆக, 'அனைவருக்கும் கட்டாய கல்வி' சட்டமும் புதிதல்ல, தீர்ப்பும் புதிதல்ல! இனி இதற்கு ஒதுக்க வேண்டியது மிகப் பிரம்மாண்டமான நிதி. தேவை; தெளிவான, உறுதியான நடைமுறை சார்ந்த செயல்திட்டம்!