Thursday, June 27, 2013

காங்கிரஸைக் காப்பாற்றுவாரா ராகுல்?



காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தோல்விகுறித்து ஆய்வு செய்ய ராகுல்காந்தி விவாதித்திருக்கிறார்.
உலுக்கி எடுத்த உத்திரபிரதேச தேர்தல் தோல்விகள் காங்கிரஸின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கிவிட்டது. ஆனால் தோல்வியை மட்டுமே ஆராயாமல் ஒட்டுமொத்த காங்கிரஸ் வீழ்ச்சியையும் ராகுல்காந்தி ஆய்வு செய்வதே நல்லது.
1885-ல் காங்கிரஸ் கட்சி உருவானபோது அது மக்கள் கட்சியாக மலரவில்லை. படித்த இந்தியர்களுக்கு ஆங்கிலேயே அரசியல் பதவி பெற்றுத்தரும் அமைப்பாகத்தான் இருந்தது. ஆனால் திலகர் காலகட்டத்தில் அதற்க்கோர் திசைமாற்றம் ஏற்பட்டது. அப்போதும் அது மக்கள் கட்சி என்ற மகுடத்தை பெறவில்லை.
காந்தி காலத்தில் தான் அது மக்கள் பேரியக்கமாக காலுன்றியது. காரணம் அதன் களப்பணிகள், தியாகங்கள், உன்னதநோக்கங்கள்!
சுதந்திரம் பெறும் வரை சொக்கத் தங்கமாக ஜொலித்தது காங்கிரஸ். ஆனால் ஆட்சி பீடம் ஏறியதும். அதிகாரம் கைவரப்பெற்றதும் அதன் பார்வை மாறியது. பயணம் தடுமாறியது. அதனால்தான், Ôகாங்கிரஸைக் கலைத்துவிடுங்கள்Õ என்றார் காந்தி. அது நடக்கவில்லை.
காந்தியின் காலத்தில் கூட்டுத்தலைமையில் செயல்பட்ட கட்சி, நேரு காலத்தில் ஒற்றைத் தலைமையின் கீழ் ஒடுங்க ஆரம்பித்தது. அதனால் அதன் ஒப்பற்ற பல தலைவர்கள் அன்றே ஒதுங்கி கொண்டனர். நேருவின் வாரிசாக இந்திராகாந்தி வந்ததும் அதன் நீ¢ட்சியாக மிச்ச சொச்சமிருந்த உன்னத தலைவர்களும் ஓரங்கட்டப்பட்டனர். மக்கள் செல்வாக்குபெற்ற தலைவர்கள் மாநிலங்களில் இருப்பது தன் தலைமைக்கு ஆபத்து என்று இந்திராகாந்தி எண்ணினார்.
அதனால் தமிழகத்தில் காமராஜ், கர்நாடகாவில் நிஜலிங்கப்பா, ஒரிசாவில் பிஜூபட்நாய்க் போன்ற ஒப்பற்ற மக்கள் தலைவர்களை ஓரம்கட்டி தன் பெயராலேயே காங்கிரஸ் கட்சியை கட்டமைத்தார். அன்றுமுதல் காங்கிரஸ் வளர்ச்சி தேய்பிறையானது. கட்சிக்குள் ஜனநாயகம் காணாமல் போனது. எந்த மாநிலத்திலும் தனித்து ஜெயிக்க முடியாத அளவு தலைக்குனிவைக் கண்டது.
இந்த சூழல் ராஜீவ்காந்தி தொடங்கி சோனியாகாந்தி வரை தொடர்கதையாயுள்ளது. எனவே காங்கிரஸ் அடித்தளத்திலேயே சில அதிரடிமாற்றங்கள் தேவைப்படுகின்றன.அதற்கு,

1. மக்கள் செல்வாக்கு பெற்ற மாநிலத் தலைமை வேண்டும்.
2. தொண்டர்களே இல்லாத, தலைவர்கள் மட்டுமே கொண்ட கட்சி என்ற தலைவிதி மாறவேண்டும். ஜனநாயக ரீதியில் கட்சித் தலைமக்கான தேர்தல் அனைத்து மட்டத்திலும் நடக்கவேண்டும்.
3. களப்பணியாற்றும் மக்கள் தொண்டர்களுக்கே கட்சி பதவிகள் உறுதிப்படவேண்டும்.
4. அதிகாரத் தரகர்களை அடியோடு புறக்கணிக்கவேண்டும்.
5. ஊழல் கட்சி என்ற அதன் உருவம் சிதையவேண்டும்.
6. மக்களுக்கும் கட்சிக்குமான இடைவெளி மறைய வேண்டும். இவை சாத்தியமாகும் பட்சத்தில் காங்கிரஸ் சரிவு தூக்கி நிறுத்தப்படும்.

இதனோடு ராகுல்காந்தியின் அணுகுமுறைகளிலும் மாற்றம் வேண்டும். கிட்டத்தட்ட வாரிசுகளின் கட்சியாகவே காங்கிரஸின் வடிவம் மாறிப்போனது. இதனால்தான் புதிய வரவுகள் தடைப்பட்டு நிற்கிறது. எனவே புதிய தலைமைக்கு பூபாளம் இசைக்க வேண்டும்.
ராகுல்காந்தி, தான் மட்டும் கிராமங்களில் சுற்றி ஏழை எளியவர்களின் வீடுகளில் தங்கிப்பேசி அனுபவம் பெற்றால் போதாது. தன் கட்சியை சேர்ந்த அனைவரையும் இத்தகு அனுபவங்களுக்கு சொந்தக்காரர்களாக்க வேண்டும்.
அதிகாரத்தை நோக்கியதாக மட்டும் அதன் நகர்வுகள் இல்லாமல் மக்கள் பிரச்சினைகளை நோக்கியதாக மாற்றம் காணவேண்டும்.

-6.4.12

No comments: