Monday, February 22, 2010

சூனியத்திற்குள் உழலும் சுதந்திரமில்லா கலையுலகம்

-சாவித்திரிகண்ணன்

அஜித் பேசியதில் தவறில்லை

கலைஞனின் சமூக அக்கறை அவனது படைப்புகளில் தான் வெளிப்பட வேண்டும். அப்படி சமூக அக்கறையை படைப்புகளில் தர முடிந்தால் அநத படைப்பாளி தெருவிற்கு வநது மக்கள் பிரச்சினைக்காக போராட வேண்டியதில்லை.

மக்களை போராடத் தூண்டுமளவுக்கு தன் படைப்புகளில் பரிமளிக்க முடியாதவர்கள் பேசாமல் எங்கள் நோக்கம் கல்லாபெட்டியை நிரப்புவது தானென்று காசுக்கு மாரடிப்பதோடு நின்று கொள்வது உத்தமம்.

அதையும் மீறி அவர்களுக்கு சமூக அக்கரை இருக்குமானால் குறைநத பட்சம் தங்கள் படங்களில் அரை குறை ஆடைகளோடு பெண்களை போகப் பொருளாக்காமல் இருந்தால் போதுமே...!

சகமனிதர்களை வெட்டிச் சாய்க்கும் - எப்போது பார்த்தாலும் அரிவாளோடும் துப்பாக்கிகளோடும் அலையும் - வன்முறை அபத்தங்களை தவிர்தால் போதுமே .....

நகைச்சுவையின் பெயரால் மனிதனை மனிதன் இழிவுபடுத்தும் அல்லது இம்சிக்கும் கீழ்த்தரமான ரசனையை தகர்க்கலாமே...

சமூகத்தை சீரழிக்கிற படைப்புகளை தந்து கொண்டிருக்கும், இந்த மனிதநேய பகைவர்கள் தங்கள் பிழைப்பு சார்ந்த அரசியல் உள்நோக்கங்களோடு போராட்டம் நடத்தினால் அதற்குப் பெயர் சமூக அக்கறையா? ஜால்ரா அக்கரையா?

கலைஞர்கள், படைப்பாளிகள் முதலில் தங்கள் சுயநலத்தை துறந்து பொதுநோக்கத்திற்காக எப்போது தங்கள் படைப்பாற்றலை, கலைத்திறமைகளை அர்பணிகிறார்களோ அப்போது சமூக மரியாதையை பெற முடியும். மக்கள் மனதில் இடம்பெற முடியும்.

ஆட்சியாளர்கள், அதிகாரமையத்தில் உள்ளவர்கள் மனதில் இடம் பெறுவதற்கான தேவை அவர்களுக்கு இருக்குமானால் அவர்கள் அதற்காக எத்தனை பாராட்டு விழாக்களை வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளட்டும், அதிகார மையத்தின் கால்களைத் தொட்டு தங்கள் கண்களில் ஒத்திக் கொள்ளட்டும்.

'பாவம், அது அவர்கள் பிழைப்பு..." என்று மக்கள் நினைத்துக் கொள்வார்கள்....

ஆனால், இந்த பிழைப்புவாதிகள் அதிகார மையத்தை குளிர்விக்க அறிவிக்கும் போராட்டம் என்ற பெயரிலான கேலிக்கூத்திற்கு, பாராட்டுவிழா என்ற பெயரிலான ஜால்ரா கோஷத்திற்கு எல்லோரையும் எப்படி நிர்பந்திக்கலாம்? யாரோ தலைவனாவதற்கோ அல்லது சுயவிளம்பரமடைவதற்கோ மற்றவர்களின் நிம்மதியை கெடுப்பது தனிமனிதசுதந்திரத்தில் தலையிடுவதாகாதா?

பணத்திற்காக வேஷம் போட்டாலும், எநத ஒரு கலைஞனுக்கும் சுயமரியாதை இல்லாமல் போய்விடாது. அல்லது தமிழ் படங்களில் பணிபுரிவர்கள் சுயமரியாதையை தொலைத்து விட வேண்டும் என்ற முன்நிபந்தனை வைத்துவிடூவீர்களா?

மகத்தான கலைஞன் என்று உலகப்புகழ்பெற்ற எந்த கலைஞனும், மக்கள் மனதில் நீங்காத நிலைத்த இடத்தை பெற்று வரலாற்றில் நிலைத்த எந்த கலைஞனும் - அதிகார மையங்களுக்கு ஆலவட்டம் வீசியவனில்லை. மாறாக அதிகார மையங்களின் மக்கள் விரோத செயல்பாடுகளை தங்கள் கலைப்படைப்புகளில் ஆன்ம பலத்தோடு சுட்டிக்காட்டியவர்களே!

அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன் சினிமா பேசத் துவங்காத போதே தன் மௌனப்படங்களால் அதிகார மையங்களை அதிர்ச்சி கொள்ள வைத்தவர் சார்லி சாப்ளின்.

கொள்ளை லாபமீட்டும் தொழிற்சாலைகள் மனிதர்களைக் கூட இயந்திரங்களாக பாவிப்பதை கலை நுட்பத்தோடு 'மாடர்ன் டைம்ஸ்' என்ற படத்தில் சார்லி சாப்ளின் விவரிப்பதை பொறுக்காமல் ஜெர்மன், இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகள் அவர் படத்திற்கு தடை விதித்தன.... ஆனால் அதற்காக சாப்ளின் எநத நாட்டு அதிபரையும் சந்தித்து சமாதானப்படுத்தியதோ, தூது அனுப்பியதோ இல்லை. சார்லி சாப்ளின் மீது குத்தப்பட்ட 'கம்யூனிஸ்டு ஆதரவாளர்' முத்திரையால் அவரது எல்லைகள் சுருங்கிவிடவில்லை. காலவெள்ளத்தில் அந்த முத்திரை கலைந்து அவர், 'மக்கள் கலைஞன்' என்று ஒரு மனதாக ஏற்கப்பட்டார்.

கலைஞன் சுதந்திரமானவன். ஆனால் எந்தப் பெயரிலான அதிகார மையங்களும் சுதந்திரத்தைக் கண்டு அஞ்சவே செய்கின்றன. கம்யூனிஸ்டுகளின் தலைமையிலான சோவியத் அரசும் இதற்கு விதிவிலக்கல்ல. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற பெயரில் கலைஞர்கள் மற்றும் தனிமனிதர்களின் சுதந்திரம் கேள்விக் குள்ளாவதை தன் படைப்புகளில் கேள்விக்குள்ளாக்கினார் அந்தரே தர்க்கராவஸ்கி. அதனால் அவர் அடைந்த இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல.

இந்தியாவில் நடக்கும் கும்பமேளாவை படம்பிடிதத இத்தாலியின் மைக்கல் ஏஞ்சலோ அன்டானியோனியை அதிகாரிகள் ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டுக் குடைந்தனர். தாங்கள் அனுமதிக்கும் காட்சிகளை மட்டுமே வைத்துக் கொள்ளவேண்டும் என்றனர். எடுத்த படச்சுருளை அப்படியே எரித்துப் போட்டுவிட்டுச் சென்றான் அந்தக் கலைஞன்.

மதத்தின் அதிகார வரம்புகள் குறித்தும், அதன் அத்துமீறிய அணுகுமுறைகள் குறித்தும் தன் கலைப்படைப்புகளில் எள்ளி நகையாடினார் ஸ்பானிஸ் நாட்டின் லூயிஸ் பீயூனல். கிறிஸ்த்துவ பாதிரிகள் அரசு பின்புலத்துடன் அவர் மீது பாய்ந்தனர். இது தான் இத்தாலியின் பெட்ரிக்கோ பெலினிக்கும் விஷயத்திலும் நேர்ந்தது.

சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், மானுட வாழ்க்கையின் மீதான கரிசனமும் கொண்ட படைப்புகளை தந்த இந்தியாவின் உன்னத திரைக் கலைஞர்கள் சத்தியஜித்ரே, மிருணாள்சென், ரித்விக் கட்டாக், அரவிந்தன், அடூர்கோபாலகிருஷ்ணன், தமிழகத்தின் மகேந்திரன். ருத்ரயயா.... போன்றவர்கள் தங்கள் வங்கிகணக்கை வளமாக்கி கொள்வதற்காக மட்டுமே படமெடுத்தவர்களில்லை.

அவர்கள் மக்கள் பிரச்சினை ஒவ்வொன்றிலும் அபிப்ராயம் சொல்லிக் கொண்டோ, தெருவில் இறங்கி போராடுவதன் மூலம் தங்கள் சமூக அக்கரையை நிருபிக்க வேண்டிய கட்டாயத்திலோ இருந்ததில்லை,

கலைஞர்களை சாதி, மதம், இனம் மொழி... என்ற எதன் பேராலும் அடையாளப்படுத்தி அடக்க நினைப்பது காட்டுமிராண்டித்தனம். கோழைத்தனம். கோழைகள் கையாளும் அணுகுமுறை தான் பாஸிசம்!

சினிமா தயாரிப்பாள்களின் சுரண்டலிருந்து தொழிலாளர்களை விடுவிக்கவே அன்றைய தினம் இசைமேதை எம்.பி.சீனிவாசன், ஒளிப்பதிவு மேதை நிமாய்கோஸ் முதலானவர்கள் சினிமா தொழிலாளர்களுக்கென்று சங்கங்களை உருவாக்கினார்கள். இதனால் தொழிலாளர்கள் பெரும் தொழில் பாதுகாப்பு பெற்றனர். ஆனால் இன்று நிலைமைகள் தலைகீழாக்கி விட்டன. சினிமா தொழிலாளர்களை அதன் தொழிற்சங்கங்களிடமிருந்து பாதுகாக்க ஒரு போராட்டம் தேவைப்படுகிறது. இது மிகைப்படுத்த பட்ட கூற்றல்ல. சாதாரணமாக எந்த ஏழைத் தொழிலாளியும் இந்த திரைப்படத் தொழிலாளர் சங்கங்களில் உறுப்பினராகிவிடமுடியாது. ஐம்பதாயிரம் ஒருலட்சம் என்று உறுப்பினர் கட்டணமே மலைக்க வைக்கிறது.

அப்படி உறுப்பினராக சேர்ந்துவிட்ட அனைவருக்கும் முழுபாதுகாப்பு கிடைத்துவிடுவதில்லை. சம்பளபாக்கிக்காக சங்கத் தலைமையிடம் முறையிட்டால், 'கமிஷன் பணம் எவ்வளவு? என்பது தான் முதல் பிரச்சினையே.தொழிலாளியை காட்டிலும் முதலாளியிடம் அதிக கமிஷன் கிடைக்குமென்றால் தொழிலாளியின் கதி 'அம்போ' என்பது தான் யதார்த்தமாக உள்ளது.

தமிழ்நாட்டின் கலாச்சாரம், தமிழ்மண்ணின் மாண்புகள் அனைத்தையும் சின்னாபின்னப்படுத்தி சீரழிக்கும் விதமாக படமெடுத்து கீழ்த்தரமான பாலியல் வக்கிரங்களை விதைத்து மக்களிடமிருந்து பணம் பறிக்கும் கலை வியாபார சூதாடிகள் சமூக அக்கரை குறித்து பேசாமல் தங்களை சுயவிமர்சனத்திற்கு உள்ளாக்கி கொள்ள வேண்டும்.

"தமிழ் மக்கள் தரும் காசில் பிழைக்கறவன் அவர்களுக்காக போராட வேண்டாமா?" என்று தங்களின் பிழைப்புவாத பித்தலாட்டதிற்கு 'போராட்டம்' என்ற அடைமொழியிட்டு இவர்கள் பேசினால் சிரிப்புதான் வருகிறது.

இவர்களை பார்த்து, "தமிழ்மக்கள் தரும் காசில் பிழைத்துக்கொண்டு கலையின் பெயரால் சொந்த மக்களையே சூதாடலாமா?" என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

இவர்களில் எத்தனைபேரின் சினிமாக்கள் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கின்றன. வாழ்க்கை மீதான நம்பிக்கையை உருவாக்குகின்றன. அறியாமை அல்லது மாயையிலிருந்து மக்களை மீட்டெடுக்கின்றன. வெகு சில படைப்பாளிகளே தேறுவார்கள். அவர்களும் பற்பல சமரசங்களுடன் தான் இயங்க முடிகிறது. கோலிவுட்டின் பொய்மை, பித்தலாடட மாயைகளுக்கு மத்தியில் நுட்பமாக தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் சமார்த்தியம் எல்லா படைப்பாளிகள், கலைஞர் களுக்கும் கைவரபெறுவதில்லை. இங்கு வாய்ப்பு பெற்ற படைப்பாளிகள், கலைஞர்களை விடவும் காணாமலடிக்கப்பட்ட கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளின் எண்ணிக்கை பெரிது.

தமிழ் இன உணர்வை பேசுகின்றவர்களை விட பெரிய பித்தலாட்ட பொய்யர்களை பார்க்கமுடியாது. மேடைக்கும், அறிக்கைக்கும் மட்டுமே இவர்களுக்கு தமிழ் உணர்வு கைக்கொடுக்கும். இவர்கள் எடுக்கும் திரை படங்களுக்கு கதாநாயகன், கதாநாயகி போன்றவர்கள் ஏன் தமிழ்நாட்டிற்குள் கிடைக்கவில்லை என்பது தான் எனக்கு விடைத்தெரியாத புதிராக உள்ளது.

இந்த தமிழ் உணர்வாளர்கள் ஒருவர் கூட சுத்த தமிழர்களை மட்டுமே வைத்து ஒரே ஒரு படம் கூட தந்ததில்லை. அட கலைஞர்களை தவிர்த்து தொழில்நுட்ப ரீதியாக எடுத்துக்கொண்டால் தமிழர்களை மட்டுமே பயன்படுத்தி இவர்கள் இது வரை எந்த ஒரு படைப்பையும் உருவாக்கியதில்லை. ஆக யதார்த்தமும், நடைமுறைகளும் ஏற்படுத்தி உள்ள சூழலை தகர்ந்தெறிந்து விடக்கூடிய தைரியம் இவர்களுக்கு கிடையாது.அப்படி மீறுவதற்கான முயற்சிகளைக் கூட இவர்கள் எடுத்தவர்களில்லை. பிறகெதற்கு இநத இன துவேஷ பேச்சுகள்...? யார் விட்டெரியக் கூடிய ரொட்டித் துண்டுகளுக்காக இப்படி குரைக்கிறார்கள்? சேர்த்தசொத்துகள் போதாது வென்றோ அதிகார மையத்திடம் குழைகிறார்கள்?

மகாகவி பாரதியாரின் பாடல்கள் தான் நினைவுக்கு வருகிறது.

சுதந்திரதேவி

நின்னருள் பெற்றிலாதார்

நிகரிலாச் செல்வரேனும்

பன்னருங் கல்வி கேள்வி,

படைத் துயர்ந்திட்டா ரேனும்,

பின்னரும் எண்ணி லாத

பெருமையிற் சிறந்தாரேனும்

அன்னவர் வாழ்க்கை பாழாம்,

அணிகள் வேய் பிணத்தோ டொப்பார்.