Thursday, February 28, 2008

சுதந்திரத்திற்கு முந்திய தமிழ் இதழியல் சூழல்

ஊடக வரலாறு

எப்போது பத்திரிக்கைகள் வர தொடங்கினவோ, அப்போது முதல் அதிகார மையங்கள் அட்டங்கொள்ள ஆரம்பித்தன. மன்னர்கள் தலைகளிலிருந்த மகுடங்கள் மக்கள் கைகளுக்கு மாறத்தொடங்கிய காலத்தின் அறிகுறியாக பத்திரிக்கைகள் ஆரம்பமாயின.

அரசர்களை ஆண்டவனுக்குச் சமமாக அடையாளம் காட்டி, மக்களை உரிமைகளற்ற ஊமைப் பதுமைகளாகக் கருதிய மன்னராட்சி காலங்களில், அரசனாக விரும்பிவெளிபடுத்தும் செய்திகளின்றி வேறெந்த செய்திகளையும் மக்கள் தெரிந்துகொள்ள வழியில்லை. நாற்சந்தியில் முரசைரைந்து நாட்டு மக்களுக்கு சொல்லப்பட்ட அரசு செய்திகளும், வரலாற்றில் இடம்பெறவேண்டும் என்பதற்காக வைக்கப்பட்ட கல் வெட்டுகளும் மட்டுமே அன்றைய தினம் மக்கள் அறிந்து கொள்ள முடிந்த செய்திகளாயிருந்தன.

'நவீன நாகரிகத்தின் சின்னம்' என்றும், 'பிறரிடமிருந்து கற்றுக்கொண்ட தந்திரம்' என்றும் பாரதியாரால் அர்த்தப்படுத்தப்பட்ட பத்திரிக்கை தொழில் சீனாவில் வேர்விட்டது, ஜெர்மனியில் உருப்பெற்றது, இங்கிலாந்தில் வலுப்பெற்று வடிவம் கண்டது.

17ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இங்கிலாந்தில் ஆங்கில செய்திதாட்கள் வெளிவரத்தொடங்கின. 17ஆம் நூற்றாண்டின் இறுதி காலக்கட்டத்தில் அமெரிக்காவிலும் செய்திதாட்கள் வெளிவரத்தொடங்கின. ஆனால் இந்தியாவிலோ இதற்கு ஒரு நூற்றாண்டுக்கு பிறகே, 1780ல் முதல் செய்திதாள் வெளியானது. இந்திய இதழியல் துறையின் முன்னோடியான 'ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹக்கியின்' 'பெங்கால்கெஜட்' அந்தாளில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்கு எதிராக பெரும் கிளர்ச்சி செய்தது.

முதல் முப்பது ஆண்டுகள் ஆங்கிலத்தில் மட்டுமே செய்திதாட்கள் வெளிவந்தன முதன் முதலாக இந்திய மொழிகளில் தமிழ்தான் இதழியலுக்காக அச்சேறிய மொழியாகும். அச்சேறிய ஆண்டு 1812. இதழின் பெயர் மாசத் தினசரிதை. இந்த இதழின் ஆசிரியர் தஞ்சையை சேர்ந்த ஞானபிரகாசம்இந்த தகவல் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து இதழியல் ஆய்வில் தொய்வின்றி ஈடுப்பட்டு வரும் மூத்த பத்திரிக்கையாளர் அ.ம.சாமியின் 'விடுதலை இயக்கத் தமிழ் இதழ்கள்' என்ற நூலில் உள்ளது. ஆனால் இது வரையிலான மற்ற பல ஆய்வாளர்கள் 1820களில் வெளியான வங்காள இதழ்களையே இந்திய பிரதேச மொழிகளில் வெளியான முதல் இதழ்களாக எழுதி வந்தனர்.'தின மாதச்சரிதை' விடுதலை இயக்கப்போராட்டத்திற்கு எந்த பங்களிப்பும் செய்ததாக தகவல் இல்லை. ஆனால் சுதேசிமித்தரனுக்கு முன்பாகவே பல தமிழ் இதழ்கள் விடுதலைப்போராட்டங்களுக்கு வித்தூன்றியது என்ற தகவல்கள் இப்போது தான் வெளியாக ஆரம்பித்துள்ளன.

1831ல் வெளியான 'தமிழ் மேகசின்' தமிழின் முதல் இதழ் என்றும்,. 1856ல் வெளியான தினவர்த்தமானியே முதல் வார இதழ் என்றும் கூறுகிறார் டாக்டர் மா.பா.குருசாமி.

ஆயினும் சுதேசிமித்திரனுக்கு முன்பே 'சேலம் சுதேசாபிமானி' என்ற மாதமிருமுறை இதழை1877லிருந்தே சே.ப.நரசிம்மலு என்ற சிறப்புமிக்க செய்தியாளர் நடத்தியுள்ளார்.இதை மற்றொரு இதழியல் ஆய்வாளரான பெ.சு.மணியும் உறுதிப்படுத்துகிறார். தமிழின் முதல் புலனாய்வு இதழ் என்ற கூடுதல் சிறப்பும் இவ்விதழுக்குரியது. 1881 களிலேயே மாஜிஸ்திரேட்டுகளும், தாசில்தாரும், மலினப்பட்டு கையுட்டுப்பெறுவதை கண்டுபிடித்து எழுதியது இவ்விதழ்.

சிறந்த கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், இதழாளர் எனக் கருதப்பட்ட நரசிம்மலு ஒரு கள ஆய்வாளருமாவார். கோவை குடிநீர் பஞ்சம் தீர மலை உச்சியிலிருக்கும் முத்துக்குளம் அருவியிலிருந்து தண்ணிர் கொண்டு வரமுடியம் என்று முதன் முதல் கண்டறிந்து எழுதியவர், வலியுறுத்திச் சொன்னவர் நரசிம்மலு.

1800களின் பிற்பகுதியலேயே தமிழில் சுமார் ஐநூறு இதழ்கள் வெளிவந்துள்ளன. வேறெந்த இந்திய மொழிகளிலும் இவ்வளவு அதிகமான இதழ்கள் வெளியாகியிருக்குமா....? என்பது கேள்விக்குறி. அதே சமயம் மக்களிடம் இதழ்கள் படிக்கும் ஆர்வம் அதிகம் இருந்ததாகச் சொல்ல வழியில்லை. ஏனெனில் அந்த காலக்கட்டத்தில் படித்தவர்களின் விகிதாச்சாரமே ஏழெட்டு சதவீததிற்கு மேலில்லை. அப்படி படித்தவர்களிலும் கூட நாட்டு நடப்புகளை, பொதுவிவகாரங்களை தெரிந்துகொள்ளும் ஆர்வம் கொண்டவர்கள் அதிகம் இல்லை.

இதனால் பத்திரிக்கை ஆரம்பித்தவர்கள் பாடு,படு திண்டாட்டமாயிருந்துள்ளது. பத்திரிக்கை ஆரம்பித்தவர்கள் எப்படியாவது சந்தா சேர்பதற்காக முதல் சில நாட்கள் இலவசமாக அனுப்பியும்கூட மக்கள் இசைந்து கொடுக்கவில்லை. மேலும் ஆங்கிலம் படித்தவர்கள் தமிழ் பத்திரிக்கை படிப்பதை காட்டிலும் ஆங்கில பத்திரிக்கையில் தான் ஆர்வம்காட்டியுள்ளனர். எனவே மக்களை பத்திரிக்கை படிக்கவைக்க மன்றாடிபார்த்தும் அவர்கள் மசியாத காரணத்தால் மரித்து போன பத்திரிக்கைகள் அநேகம்.

பத்திரிக்கைகளின் விற்பனையோ சுமார் 50 படிகளிலிருந்து அதிகபட்சம் 500 படிகள் என்பதாயிருந்தது. விலையோ சுமார் ஒருபைசாதான். இதில் விதிவிலக்காக விற்பனையை அதிகபடுத்தி 1000 பிரதிகளை தொட்ட பத்திரிக்கை ஜி.சுப்பிரமணிய ஐயரால் தொடங்கப்பட்ட 'சுதேசமித்திரன்' தான். சுதந்திர வேட்கைக்கான சுடரொளி தாங்கிய இதழாக தமிழ்மக்களால் இது தலையில் வைத்து போற்றப்பட்டது. ஆரம்பித்த காலத்தில் அதிக பொருளாதார இடர்பாடுகளை சந்தித்த போதிலும் அழுத்தமான கொள்கைப்பற்றால் மெல்ல, மெல்ல ஆதரவு தளத்தை அதிகபடுத்தி கொண்டது.

காங்கிரஸ் பேரியக்கத்தின் எண்ணங்களை, நோக்கங்களை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் மகத்தான பங்குபணி ஆற்றியது இவ்விதழ். ஜி.சுப்பிரமணிய ஐயர் முற்போக்கு வாதியாக, முன்னோடியாகத் திகழ்ந்தவர். விதவைப்பெண்கள் சமூகத்தில் வெறுத்தொதுக்கப்பட்டு சகல இன்னல்களுக்கும் சாட்சியங்களாகி கொண்டிருந்த சமூகச் சூழலில், தன் விதவை மகளுக்கு மறு விவாகம் செய்து வைத்தார். இதனால் இந்து பத்திரிக்கையின் பாகஸ்தராக இருந்த ஜி. சுப்பிரமணிய ஐயர் பலர் இடர்பாடுகளுக்கு ஆளாகி கடைசியில் இந்து பத்திரிக்கையை தன் கூட்டாளி வீரராகவாச்சரியிடமே விட்டுவிட்டார்.

தி ஹிந்து பத்திரிக்கை ஜி .சுப்பிரமணிய ஐயருக்குப் பிறகு ஆங்கில அரசுக்கு அனுசரனையாக மாறியது. ஆங்கில அரசின் அடக்குமுறைசட்டங்களால் சிறைசாலைக்கு சென்று மனச் சிதைவுகளுக்கு ஆளானார் ஜி.சுப்பிரமணிய ஐயர். சுதந்திர வேட்கையில், சுதேசாபிமானத்தை சாதரண மக்களிடம் சரியாக எடுத்துசென்ற சமூக கடமையை செய்த ஜி. சுப்பிரமணிய ஐயர் தான், மதுரையிலுள்ள பள்ளிகூடத்தில் ஆசிரியராக வேலைபார்த்து வந்த பாரதியாரை சென்னைக்கு அழைத்து சுதேசிமித்திரனின் துணைஆசிரியராக்கி, பாரதியாரை இந்த பாருக்கே அறிமுகம் செய்தார்.

பற்றிக்கொள்ளும் நெருப்பு போல பத்திரிக்கைதளத்தில் கருத்துகளை பரப்பியவர் பாரதியார். சுதேசகருத்துகளை பரப்புவதே சுவாசமாக்கி கொண்ட பாரதியார் சுதேசமித்தரத்திரனை சுதந்திர வேட்கைகான போர்வாளாக மாற்றினார். ஆயினும் அவரது அதித ஆற்றலுக்கு சுதேசமித்திரன் மட்டுமே போதுமானதாக இருக்கவில்லை. அவரது கவிதைகளை பிரசுரிப்பதற்கு சுதேசமித்திரன் ஆசிரியர் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. சுதேசமித்திரனில் துணை ஆசிரியராகவிருந்து கொண்டு 'சக்கரவர்த்தினி' மகளிர் மாத இதழின் ஆசிரியராக சமரசமற்ற கருத்துப்போர் நடத்தினார் பாரதியார்.

மண்டையம் குடும்பத்தாரின் ஆதரவில் நடத்தப்பட்ட 'இந்தியா' இதழின் ஆசிரியராக பாரதியார் பொறுப்பேற்ற ஆண்டு ஆண்டு 1907. அந்த ஆண்டில் தான் இந்திய தேசிய காங்கிரஸானது தீவிரவாதிகள், மிதவாதிகள் என இரண்டாக பிளவப்பட்டது. தீவிரவாதிகளின் அணியில் இருந்த பாரதியார் திலகரை தலைவராக ஏற்றுக்கொண்டு தீப்பிழம்பாக இந்தியாவில் கட்டுரைகளை எழுதினார். இதனால் இந்தியா இதழை அசிட்டவரான சீனிவாசனை ஆங்கில அரசு கைது செய்து ஐந்து வருடம் சிறையில் அடைத்தது. பாரதியார் தப்பிச்சென்று பாண்டிச்சேரியில் அடைக்கலமானார். பாண்டிச்சேரியிலிருந்து கொண்டே இந்தியா இதழை மூன்றாண்டுகள் மும்மரமாகக் கொண்டு வந்தார் பாரதியார். அந்நாளில் 'இந்தியா' இதழின் விற்பனை அதிகபட்சமே ஆயிரம் பிரதிகள் தான் என்றபோதிலும் ஒவ்வொரு இதழும் குறைந்தபட்சம் ஐம்பது பேரிடமாவது கைமாறியது; விவாதிக்கப்பட்டது; விரிவான கருத்துப் பரவலுக்கு வித்தூன்றியது.

பாரதியார் இந்தியா இதழின் வருடச் சந்தாவை எப்படி நிர்ணயித்தார் என்பது சுவாரஷ்யமான செய்தியாகும். சாதாரண பொது ஜனங்களுக்கு ஆண்டு சந்தா ரூபாய் 3 என்ற பாரதியார், வசதியாக வருவாய் ஈட்டுவோருக்கு ரூபாய் 15 என்றும், ஜமீன்தார், ராஜாக்களாயிருந்தால் ரூபாய் 30 என்றும், வெள்ளை அரசாங்கத்தாருக்கு வேண்டுமென்றால் ஐம்பது ரூபாய்க்குகுறைந்து அனுப்ப முடியாதென்றும் அறிவித்தார். 'கார்டூன்' எனப்படும் கருத்து சித்திரத்தை தமிழ் பத்திரிக்கையில் முதன் முதலில் அறிமுகப்படுத்தி பெரும் வரவேற்பை பெற்றது இந்தியா இதழ். எப்படி இந்த கருத்து சித்திரத்தை ரசிக்கவேண்டும் என்பதற்கான விளக்கத்தையும் கூடவே வர்ணித்து எழுதினார் பாரதியார்.

இந்தியா இதழோடு 'பாலபாரதம்' என்ற ஆங்கில வார இதழும் துணை இதழாக வந்தது. இந்த ஆங்கில இதழின் ஆசிரியரும் பாரதியார் தான். புதுச்சேரி புகழிடம் தானே என்றில்லாமல் 'விஜயா' என்ற மாலை நாளிதழுக்கும் ஆசிரியராயிருந்தது எழுதிகுவித்தார் பாரதியார். இது புதுவையில் வெளியான முதல் நாளிதழாகும். பிறகு சூரியோதயம் என்ற வார இதழிலும் வரிந்து கட்டிக்கொண்டு ஆங்கில அரசை எதிர்த்து எழுதினார் பாரதியார். இதனால் இந்தியா இதழுடன் இவ்விதழுக்கும் தமிழ்நாட்டில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

அரவிந்தர் ஆசிரியராகவிருந்து நடத்திய ஆங்கில இதழான கர்மயோகியின் தமிழ் பதிப்புக்கும் பாரதியார் ஆசிரியராக இருந்தார். இப்போது இலவசமாக வழங்கப்படும் இதழ்களைப் போல அன்றே இலவசமாக விநியோகப் பட்ட இதழின் பெயர் தர்மம். இதிலும் ஆசிரியர் பொறுப்பேற்று தர்மயுத்தம் நடத்தினார் பாரதியார். பாரதியின் வெற்றி பெறாத முயற்சிகளாக முளையிலேயே அழிந்தது 'அமிர்தம்' என்ற பெயரில் அவர் ஆரம்பிக்கவிருந்த இதழும், 'சித்திராவளி' என்ற பெயரில் முழுக்க முழுக்க சித்திரங்களின் வழியாகவே கருத்தை பரப்ப எண்ணிய இதழும்!

பாரதியார் சுமார் 18 ஆண்டுகளே பத்திரிக்கை துறையில் பணியாற்றியுள்ளார். இந்த குறுகிய காலகட்டத்திலேயே அவர் ஈடிணையற்ற சாதனையாளராக சகலவிதங்களிலும் முத்திரை பதித்துள்ளார். அவர் எழுதிய காலகட்டங்களில் தமிழ்நாட்டில், இந்தியாவில், சர்வதேச நாடுகளில் நிகழ்ந்த பெரும்பான்மையான நிகழ்வுகளை ஊன்றி கவனித்து விமர்சித்துள்ளார்.

நிரந்தரமாக ஒரே இதழில் பணியாற்ற முடியாமை. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பத்திரிக்கைகளில் எழுதுவது, பற்பல புதிய யுத்திகளை இதழியலுக்கு கொண்டுவந்தது. லட்சிய நோக்கத்தோடு பத்திரிக்கை நடத்தி தொடரமுடியாமல் துவண்டது,அப்படியும் புதிய முயற்சிகளை மேற்கொண்டு புதிய இதழ்கள் கொண்டுவர முயன்று முடியாமல் போனது.... என எண்ணற்ற இன்னல்களை பத்திரிக்கை அனுபவத்தில் பார்த்தவரான பாரதி மீண்டும் சுதேசிமித்திரனிலேயே வந்து சேர்ந்துவிட்டார்.

பாரதியாரின் நெருங்கிய நண்பரான சுப்பிரமணியசிவா 'ஞானபானு', 'பிரபஞ்சமித்திரன்' என்ற இதழ்களை நடத்தி தீப்பிழம்பென சுதேசியத்தையும், தமிழையும் ஒருங்கே பரப்பினார். "உறங்கி கிடக்கும் தமிழ்சாதியாரை அறிவாகிய சாட்டையால் அடித்து எழுப்பி, அவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் உண்டு பண்ணி முன்னிலையில் கொண்டுவருவதே இப்பத்திரிக்கையின் நோக்கம்" ஞானபானுவின் 1915ஜூன் இதழில் பிரகடனப்படுத்தினார். கூடவே சமஸ்கிருதம் கலவாமல் தனித்தமிழில் எழுதப்படும் கட்டுரைக்கு ரூபாய் 5 பரிசாகத் தரப்படும் என்றும் சிவா அறிவித்தார்.

தென்நாட்டுத் திலகராக மக்களை தட்டி எழுப்பிய வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா சிறை சென்ற காலங்களிலெல்லாம் 'ஞானுபானு'வின் ஆசிரியப் பொறுப்பை ஏற்று திறம்பட செயல்பட்டுள்ளார். இது தவிர தென் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியான 'விவேகபாநு'விலும் இலங்கையிலிருந்து வெளியான வீரகேசரியிலும் தொடர்ந்து எழுதிய வ.உ.சி பத்திரிக்கை தொடஙுகும் முயற்சிகளில் ஈடுபட்டு அந்த எண்ணம் ஈடேறாமல் விட்டுவிட்டார்.

திரு.வி.கல்யாணசுந்தரனாரின் 'தேசபக்தன்' இதழ் 1917முதல் வெளியானது. தெருவெங்கும் தமிழ்முழக்கமும் ,தேசிய முழக்கமும் செய்யும் இதழாக இது வெளியானது. சமஸ்கிருதம் கலந்த மணிப் பிரவாள நடையிலேயே மற்ற பத்திரிக்கைகள் அன்று வந்து கொண்டிருந்த சூழலில் தனித்தமிழை, பழகு தமிழாக்கி மக்களிடையே பரவவிட்டார் திரு.வி.க. தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்குவதிலும் தொழிலாளர்களிடையே தமிழ்ப்பற்று, தேசப்பற்று வளர்வதற்கும் திரு.வி.க 'தேசபக்தன்' வழியாக தீவிர பணியாற்றினார். பிறகு 1920 தொடங்கி 1941 வரை 'நவசக்தி' என்ற வார இதழை திரு.வி.க நடத்தினார். அப்போது திரு.வி.கவின் குருகுலத்தில் உருவானவர்களே வெ.சாமிநாதசர்மா, கல்கி, கி.வா.ஜகந்தாதன் போன்றோர்.

மற்றொரு தேசபக்தரான வ.வே.சு ஐயரவர்களும் திரு.வி.க விற்கு பிறகு சிறிது காலம் 'தேசபக்தன் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தினார். இவர் திரு.வி.கவை விடவும் தீவிரமாகத் தனித்தமிழை கையாண்டவர். பத்தரிக்கையின் பக்க எண்களைக் கூட தமிழ் எண்ணிலையே குறிப்பிட்டார் வ.வே.சு ஐயர். சேலம் மருத்துவர். வரதராஜூலு நாயுடுவால் நடத்தப்பட்ட தமிழ்நாடு இதழுக்கு தமிழ் இதழியல் வரலாற்றில் தனி முக்கியத்துவமுண்டு. 1923-ல் வார இதழாக ஆரம்பிக்கப்பட்டு 1926ல் நாளிதழாக்கப்பட்டு 1931வரை வெளியான தமிழ்நாடு இதழ், சுதேசிமித்திரனுக்கு போட்டி இதழாக பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தது. இந்த இதழ் பல முன்னோடி இதழலாளர்களை தமிழ் இதழ் உலகிற்கு தநதது. 'பேனா மன்னன்' என்றழைக்கப்பட்ட டி.எஸ்.சொக்கலிங்கம், ஏ.என்.சிவராமன், மணிக்கொடி சீனிவாசன், வ.ரா, தி.ஜ.ர , 'தமிழ் மணி' ரெங்கசாமி, 'வந்தேமாதரம்' சீனிவாசன், கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேலு போன்ற பலர் இந்த இதழிலிருந்து உருவானார்கள். மருத்துவர் வரதராஜூலுநாயுடு தான் முதன் முதல் இந்தியன் எக்ஸ்பிரஸ்,ஆந்திரபிரஜா ஆகிய இதழ்களை ஆரம்பித்தார். டி.எஸ். சொக்கலிங்கம் 'தமிழ்நாடு' இதழுக்குப் பிறகு 'காந்தி' என்ற வாரமிருமுறை இதழை 1931ல் ஆரம்பித்தார். காலாணாவிலைக்கு விற்பனையான இவ்விதழ் காலப்போக்கில் நாளிதழானது. இவ்விதழ் நின்றபிறகு 1934ல் தினமணி ஆரம்பிக்கபட்டபோது அதன் ஆசிரியரானார். பாரதியின் நினைவுநாளான செப்டம்பர்11ல் ஆரம்பிக்குப்பட்ட தினமணி 'பாரதியின் கனவை நிறைவேற்றுவதே இதழின் லட்சியம்' என்று பிரகடனப்படுத்தியது.

தினமணி ஆசிரியர்குழுவிலிருந்த அத்தனை பேருமே தேசபக்தர்களாகவும், சிறந்த எழுத்தாளர்களாகவுமிருந்தனர். இதில் சிலர் சுதந்திர போராட்டத்தில்சிறையும் சென்றுள்ளனர். ஏ.என். சிவராமன், புதுமைபித்தன், சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி... போன்றோரை துணை ஆசிரியர்களாக கொண்டு சொக்கலிங்கம் ஆசிரியராகப் பணியாற்றிய காலம் தினமணியின் வரலாற்றில் ஓர் பொற்காலமாகும்.

பிரபல பத்திரிக்கையாளர் சதானந்த்தால் ஆரம்பிக்கப்பட்ட தினமணி பிறகு ராம்நாத்கோயங்காவின் கைக்குமாறியது. அதற்கு பிறகு ஏற்பட்ட நிர்வாக அணுகுமுறைகள், அவர்கள் ஆசிரியர் குழுவினரை நடத்தியவிதம் போன்றவற்றில் அதிருப்தியுற்று சொக்கலிங்கம் தினமணியிலிருந்து வெளியேறி 'தினசரி' என்ற பெயரில் நாளிதழ் ஆரம்பித்தார். அவருடனேயே வெளியேறியவர்களில் புதுமைபித்தன், சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி குறிப்பித்தக்கவர்கள். பொருளாதார நெருக்கடிகளால் 'தினசரி' திணறி நின்றுபோனது. பிறகு ஜனயுகம்,பாரதம்,நவசக்தி போன்ற பல பத்திரிக்கையும் நடத்தினார் சொக்கலிங்கம்.

பொதுவாகவே அந்நாளில் பத்திரிக்கையாளர் பலர் தேசபக்தர்களாக இருந்தனர். அந்திய துணிக்கடை எதிர்க்கும் மறியலில் "சுயராஜ்ஜியா" பத்திரிக்கை ஆசிரியர் சுப்பாராவ் மற்றும் நிருபர் ஓ.பி.ராமசாமி இருவரும் போலிஸ்சாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு, வழக்கும் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

1920கள் வரை பத்திரிக்கைகளின் விற்பனை அதிகபட்சம் ஆயிரத்து சொச்சம் என்ற அளவில் தான் இருந்தது. இப்படியான நிலையிலிருந்த இதழியல் துறை மகாத்மாகாந்தியின் அரசியல் நுழைவு ஆரம்பமான பிறகு படிப்படியாக வளர்ச்சி கண்டது. மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கம், கிலாபத் இயக்கம், போன்றவைகளின் போது இதழ்கள் ஒரளவு விற்பனை கூடியது. உப்புசத்தியாக்கிரக போராட்டத்தின் போதோ மிகவும் உச்சபட்ச விற்பனையை எட்டின அன்றைய இதழ்கள்!

1930ல் ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட 'சுதந்திரச்சங்கு' பத்திரிக்கை உலகில் ஒரு சூறாவளிபோல் சுழன்றது. எஸ்.கணேசன் என்ற தேசபக்தரால் நடத்தப்பட்ட சுதந்திரசங்குவின் ஆசிரியர் 'சங்கு'சுப்பிரமணியன். கதர்பிரச்சாரம், தீண்டாமை ஒழிப்பு, காந்தியின் பிரசங்கங்கள்..... போன்றவற்றை பிரசுரித்தே இப்பத்திரிக்கை ஒரு லட்சம் பிரதிகள் வரை விற்பனையானது. இதன் மக்கள் மொழியிலான நடை, எள்ளலும், துள்ளலுமான தலைப்புச் செய்திகள் போன்றவை மக்களிடம் பெரும்வரவேற்புபெற்றது. அந்தாளில் சுதந்திர போராட்டத்தில் சிறைசென்றுவெளியான தியாகிகள் வீட்டிற்கு செல்வதற்கு முன்பு 'சுதந்திரச்சங்கு' அலுவலகம் சென்று அருகிலுள்ள கதர் கடையில் அலுவலக கணக்கில் ஒரு ஜோடி கதர் துணிமணிகளைப் பெறுவதும். அடுத்திருந்த உணவுவிடுதியில் பசியாற இரண்டு வேளை இலவசமாக உணவருந்திச் செல்வதும் வழக்கமாயிருந்துள்ளது. சுதந்திர வேள்வியில் சுடர்விடும் அக்கினிக் குஞ்சாக வெளிவந்த 'சுதந்திரச்சங்கு' 1938ல் அஞ்சாத வாசம் கண்டது.

அப்பழக்கற்ற தலைவராகவும், ஆளுமைமிக்க பேச்சாளராகவும், ஆற்றல்மிக்க இலக்கிய பேராசானாகவும் கருதப்பட்ட பா.ஜூவானந்தம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட 'ஜனசக்தி'வார இதழ் ஆரம்பத்தில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் கருத்துகளை பரப்பியது. பிறகு 1942 செப்டம்பர் 30முதல் பொதுவுடைமை இயக்கத்தின் போர்வாளாகத் திகழ்ந்தது. ஏகாத்திய எதிர்ப்பில் மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்களை அணிதிரட்டியதில் ஜனசக்திக்கு தனியிடமுண்டு.

1930ல் ஆனந்த விகடன் இதழ் ஆங்கில அரசால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு சில காலம் வெளிவராமல் தடைப்பட்டது. இந்தியாவிற்கு தமிழகம் தந்த தலைசிறந்த பத்திரிக்கையாளர்களில் சதானந்தம் குறிப்பித்தக்கவராவார். தினமணியை ஆரம்பித்து வைத்த சதானந்தம் அதற்கும் முன்பே, முதன்முதலில் இந்திய அளவிலான செய்தி நிறுவனமாக 'அசோசியேட் பிரஸ் ஆப் இந்தியா'வை ஆரம்பித்து திறம்பட நடத்தியவர். ஆந்திரகேசரி பிரகாசத்தின் 'சுயராஜ்ஜியா' மகாத்மாகாந்தியின் 'யங் இந்தியா' ஆகியவற்றலெல்லாம் பணியாற்றியவர் சதானந்தம். 1939- 'பாரததேவி' என்ற பெயரில் நாளிதழ் மற்றும் வாரஇதழ் தொடங்கி நடத்தினார். இந்த பாரததேவியில் ஆசிரியராகப் பணியாற்றிய பக்தவத்சலம் பின்னாளில் தமிழகத்தின் முதலமைச்சரானார். மும்பையில் 'ப்ரீ பிரஸ் ஜெர்னல்' என்ற பிரபல ஆங்கில இதழையும், 'நவபாரத்' என்ற மராட்டிய இதழையும் சதானந்தம் கொண்டுவந்தார். இந்த அலுவலகம் அமைந்துள்ள சாலைக்கு மஹாராஷ்டிர அரசு 'ப்ரி பிரஸ் ஜெனரல் சாலை' என்று பெயர் சூட்டியுள்ளது. தமிழ் இலக்கிய உலகில் ஒரு மணிமகுடமென திகழ்ந்த மணிக்கொடி டி.எஸ். சொக்கலிங்கம், வ.ரா, ஸ்டாலின் சீனிவாசன் ஆகிய மூம்மூர்த்திகளால் 1937ல் தொடங்கப்பட்டது. பல இலக்கிய முன்னோடிகள் இந்த இதழால் தமிழ் இலக்கிய உலகிற்கு அடையாளம் காட்டப்ட்டனர்.

புதுச்சேரியிலும் பல இதழ்கள் விடுதலை வேட்கையுடன் வெளியாயின அவற்றில் மக்கள் தலைவர் வ.சுப்பையாவின் சுதந்திரம் இதழ் குறிப்பிடத்தக்கது.

மகாத்மாகாந்தி அவர்களால் நடத்தப்பட்ட 'யங் இந்தியா' இதழுக்கு அவர் சிறை சென்ற தருணங்களிலெல்லாம். ஆசிரியர் பொறுப்பை ஏற்றவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த சி.ராஜகோபாலச்சாரியாரும், மதுரையைச்சேர்ந்த ஜார்ஜ் ஜோசப்பும் தான் என்பது ஒரு பெருமையான செய்தியாகும். அதேபோல தமிழகத்தைச் சேர்ந்த தலைசிறந்த காந்தியபொருளாதார நிபுணரான ஜே.சி.குமரப்பா காந்தி சிறை சென்ற காலங்களிலெல்லாம் 'ஹரிஜன்' இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றவராவார். 1942ல் 'தந்தி' என்ற தமிழ் நாளிதழை தேசிய இதழாக தொடங்கினார் சி.பா.ஆதித்தனார். அதற்கு முன்பே தமிழன் என்ற பெயரில் பத்திரிக்கை நடத்தி விடுதலை வேட்கையை பரப்பினார் ஆதித்தனார்.நேதாஜிக்காக நிதித் திரட்டி அவரது இந்தியதேசிய இராணுவத்திற்கு உதவியது 'தினத்தந்தி'.

இவை தவிர காந்தியுகத்திற்கு முன்பே தமிழில் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகுரலாகவும், ஆதிதிராவிடர்களின் ஆயுதமாகவும் பல இதழ்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் சூரியோதயம் (1869), பஞ்சமன்(1871) 'திராவிடமித்ரன்'(1885) இரட்டை மலை சீனிவாசனாரால் நடத்தப்பட்ட 'பறையன்'(1893) அயோத்திதாச பண்டிதரால் நடத்தப்பட்ட ஒரு பைசா தமிழன் (1907) போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும்.

மதுவிலக்கு கொள்கையை மக்களிடையே பரப்ப இராஜாஜியால் கல்கி கிருஷ்ணமூர்த்தியை ஆசிரியராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இதழ் 'விமோசனம்'. இதே போல காந்தியின் கதர் பிரச்சாரத்தை வலியுறுத்துவதற்கென்றே அந்தாளில் கணக்கற்ற சிற்றிதழ்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. இதே வகையில் தீண்டாமைக்கு எதிராகவும் ஏராளமான சிற்றிதழ்கள் தமிழில் ஆரம்பித்து நடத்தப்பட்டன.

பொதுவாக நாட்டைபாதிக்கும் முக்கிய பிரச்சினைகள், போராட்டங்கள் வெடிக்கும் போது மக்களிடையே விழிப்புணர்ச்சி பெருகிறது. மக்கள் எண்ணங்களின் பிரதிபலிப்பாகவும், சில சமயங்களில் மக்களிடையே கருத்தாங்கங்களை உருவாக்கவும் இதழ்கள் பெரும் பணி ஆற்றியுள்ளன.

இதழியலானது மக்களிடையே ஏற்படுத்தும் ஆழமான தாக்கங்களை அறிந்தே அன்றைய தினம் பெரும் தலைவர்களெல்லாம் இதழ்களை தொடங்கி நடத்தினார்கள். திலகர், கோபாலகிருஷ்ணகோகலே, அரவிந்தர், அபுல்கலாம் ஆசாத், வி.எஸ்.சீனிவாசாச்சிரியார்.

ஆந்திரகேசரி பிரகாசம், ராஜாஜி, ஜவஹர்லால்நேரு, மதன்மோகன் மாளவியா, அன்னிபெசன்ட் அம்மையார் போன்ற தேசிய தலைவர்கள் இதழியல் பொறுப்பேற்று மக்கள் திரளை தங்கள் கொள்கைகள், கருத்துகளுக்கேற்ப அணிதிரட்டினர்.

இவ்விதமே தமிழ்நாட்டிலும் ஜீவா 'ஜனசக்தி'யையும், ஈ.வே.ரா பெரியார் 'குடியரசு', 'விடுதலை' போன்றவற்றையும் சி.என்.அண்ணாதுரை 'ஹோம்லேண்ட்', திராவிடநாடு, காஞ்சி போன்ற இதழ்களையும், பிரிட்டிஸ் பேரரசை ஆதரித்து திராவிட இயகத்தினர் திராவிடன் நாளிதழையும், நீதிக்கட்சி தலைவர் டி.எம்.நாயர் 'ஜஸ்டிஸ்' ஆங்கில இதழையும் நடத்தினார்கள். இவ்விதழ்கள் பிரிட்டிஷ் பேரரசை தீவிரமாக ஆதரித்தன. காங்கிரஸ் கட்சியின் சுதந்திரப் போராட்டதை கண்டித்தன.

அந்தாளில் தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் பிராமணர் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. இதனால் பிரமணரல்லாதோரில் பலர் தங்களுக்கு காங்கிரஸில் உரிய முக்கியத்துவம் இல்லை என கருதி காங்கிரஸுக்கு எதிராக இயக்கம் கண்டனர். மேலும் காங்கிரஸில் பிராமணர்களின் ஆதிக்கத்தால் பழமை, பிற்போக்கு சிந்தனைகள் சமூக சீர்கேடுகள் பாதுகாக்கப்படுவதாக இவர்கள் குற்றம் சாட்டினர். இதனால் ஆங்கில அரசின் ஆதரவால் விதவைமறுமணம். தேவதாசி ஒழிப்புச்சட்டம், இட ஒதுக்கீடு சட்டம் போன்றவற்றை நீதிக்கட்சியின் ஆட்சி நிறைவேற்றியது.

திராவிட இயக்கத்தின் வருகையால் தமிழில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இதழ்கள் வெளிவந்தன. இவை பாமர மக்களிடையே படிக்கும் பழக்கத்தையும், விவாதிக்கும் ஆற்றலையும் வியக்கத்தக்க அளவில் வளர்த்தன. 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் பிரதேசமொழிகளில் பிரசவமான இதழியல் துறை வளர்ச்சி 20ஆம் நூற்றாண்டின் அரசியல், சமூக சூழல்களால் இணையற்ற வளர்ச்சிகண்டன. இப்போது 21ஆம் நூற்றாண்டின் தகவல் தொழில் நுட்ப புரட்சி இணைய இதழ்களின் சகாப்தத்தை முன்னேடுத்துச் செல்கிறது.

-புதிய பார்வை (மார்ச் 16 ,2007)

Wednesday, February 27, 2008

தொலைந்து போகும் கிராமங்கள்

-சாவித்திரிகண்ணன்

எங்கெங்கும் காணினும் பசுமை, நெளிந்து சுளித்து ஓடிவரும் சிற்றோடைகள், தூயதென்றல், குளிர்தரும்மரங்கள், கூவிடும் குயில்கள் 'அம்மா' என்றழைக்கும் ஆவினங்கள், நாற்றுநடும் பெண்கள், ஏரோட்டும் விவசாயிகள், துணி நெய்யும் நெசவாளர்கள், தச்சர், குயவர், தயிர்கடையும் பெண்கள், குளத்தில் தாவி குதித்து கும்மாளமிடும் சிறுவர்கள்... என இது வரை நாம் கண்டு அனுபவித்து வந்த கிராமங்கள் இனியும் நிலைக்குமா?

"ம்ஹூம் அடுத்தடுத்த தலைமுறைகளில் அழிந்துபோகக்கூடும்..." என எச்சரித் துள்ளது 'அசோசேம்' எனப்படும் இந்திய தொழில்வர்த்தக கூட்டமைப்பின் ஆய்வு! '

இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் தான் வாழ்கிறது' என்றார் அண்ணல் காந்தி. அந்த கிராமங்களைத் தான் இந்த நூற்றாண்டுக்குள் அழித்து விடும் ஆவேசத்துடன் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். கடந்த பத்தாண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 1,15,000 என்று அரசாங்கத்தின் புள்ளி விபரத்தில் அறிய முடிகிறதென்றால் உண்மையில் இந்த எண்ணிக்கை இதைக்காட்டிலும் இருமடங்காகத் தான் இருக்கக்கூடும்.

ஏன் இந்த நிலைமை?

அமைதியாக விவசாயம் செய்துகொண்டிருந்த அப்பாவி விவசாயிகளை பசுமைபுரட்சி என்றும், பணப்பயிர் என்றும் ஆசைக்காட்டி அவனிடம் வீரிய விதைகளை விற்று, ரசாயண உரங்களை திணித்து, பூச்சி கொல்லி மருந்துகளை போடச்சொல்லி, விவசாயத்தை நஞ்சாக்கி, நிலங்களை மலடாக்கி, விவசாயிகளை கடனாளியாக்கியதிலிருந்து தான் இந்த தற்கொலைகள் தொடங்கின.

இந்த மாற்றங்களுக்கு காரணமான மா மேதாவிகள் யார்?

அன்று பசுமைபுரட்சியின் தந்தை என்று பவனிவந்தவர்கள் இன்று பதுங்கி கொண்டு பாலுக்கும் காவலனாக, பூனைக்கும் தோழனாக வலம் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்...! இவர்கள் இந்தியாவில் விவசாயிகளைத் தற்கொலைகளுக்கு தள்ளிக் கொண்டிருக்கும் மான்சான்டோவிற்கும் 'மார்கெட்டிங் கன்ஸ்ல்டண்ட்' தருவார்கள். மரணித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கும் ஒப்பாரி பாடுவார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு மானியமாக பல்லாயிரம் கோடி ரூபாய் உரம், மின்சாரம், பாசனம் மற்றும் இதரவகைகளில் தரப்படுவதாக அரசாங்க புள்ளி விபரம் அறிவிக்கிறது. ஆனால் இந்த மானியத்தை பெறுவது விவசாயிகள் அல்ல! உரக்கம்பெனிகளும் தனியார் நிறுவனங்களும் தான்! இதில் பத்து சதவிகித பலனைக் கூட விவசாயிகள் பார்பதில்லை. அரசாங்கங்களுக்கு தெரிந்தே இநத அக்கிரமங்கள் அரங்கேற்றப்பட்டுவருகின்றன.

'விதர்பா' என்றொரு இடத்தில் விவசாயிகள் ஆயிரக்கணக்கணக்கில் தற்கொலை செய்து அழிகின்றனர். "ஐயோ பரிதாபம், இதோ வந்துவிட்டேன்..." என்று பிரதமர் மன்மோகன்சிங் விதர்பாவுக்கு விஜயம் செய்து பலநூறுகோடி நிவாரணம் வழங்குவதாக அறிவித்துவிட்டு வந்தார். அதற்கு பிறகான இந்த 15மாதகாலகட்டத்தில் அங்கே தற்கொலைகள் மேன்மேலும் அதிகரித்துவிட்டன. காரணம்,அரங்சாங்கத்தின் கைகள் கட்டப்பட்டிருப்பது தான்! தற்கொலைக்கு காரணமான சக்திகளே அரசாங்கத்தோடு கைக்கோர்த்துள்ளன.

இப்போது இந்திய வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு கிராம மக்கள் நகரங்களுக்கு குடிபெயர்வது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை போன்றவை வேகமாக விரிவடைந்து கொண்டிருக்கும் முதல்வரிசை நகரங்களாகும். அடுத்த வரிசையில் திருப்பூர், திருச்சி, ஈரோடு, சேலம்.... போன்றவையுள்ளன. 'கிராமங்களில் வாழ்வது இனி கட்டுப்படியாகாது' என பக்கத்தில் உள்ள நகரங்களில் தினசரி ஆயிரக்கணக்கான குடுமபங்கள் இடம்பெயர்ந்துவருகின்றன.

இன்று எல்லா திசைகளிலுமிருந்து கிராமங்களை நோக்கி விஷம் தோய்ந்த அம்புகள்வீசப்பட்டு வருகின்றன. முதல்காரணம் தண்ணீர் பற்றாக்குறை. காவிரி, தாமிரபரணி, வைகை, பொன்யையார், பாலாறு, வைப்பாறு, காவிரியின் உபநதிகளான பாவானி, நொய்யாலாறு, அமராவதி, கொடகனாறு போன்றவை இன்று வெயில் காலங்களில் வற்றியும், மழைகாலங்களில் வீணாகியும் வருகின்றன.

சின்னச்சின்ன அணைகள் கட்டினால் வெள்ளப்பெருக்கின் அழிவும், வெயில் கால வாட்டமும் முடிவுக்கு வந்து விடும். ஆனால் ஆட்சியாளர்களுக்கு இதில் அக்கரையில்லை. மறுபுறம் ராசாயன மற்றும் தோல்தொழிற்சாலைகள் இந்த ஆற்றுத் தண்ணீரை அசுத்தப்படுத்தி விவசாயத்துக்கு வில்லங்கமாக நிற்கின்றன.

தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு குறைவான நிலமே ஆற்று பாசன வசதி பெற்றவை. மற்றவை வானம் பார்த்த பூமிதான் ! இங்கே எல்லாம் மன்னர் காலத்து ஏரி குளங்களெல்லாம் தூர்வரப்படாமலும், ஆக்கிரமிப்புகளாலும் அவலத் திற்கு ஆளாகியுள்ளன. இதனால் இங்கே மழைதண்ணீர் வீணாகின்றது. 200 அடியிலிருந்து 800 அடிவரை நிலத்தை துளையிட்டு தண்ணீர் தேடும் துயரம் தொடர்கிறது.

இது போன்ற காரணங்களோடு விதை, உரம், பூச்சிகொல்லிமருந்து போன்றவற்றின் அபரிமிதமான விலைகள், பம்புசெட், மின்சாரத்திற்காகும் செலவுகள் போன்றவற்றால் விவசாயிமிரண்டு போயுள்ளான்.

முன்பு உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு முதலீடில்லாத தொழிலாக இருந்த விவசாயம் இன்று இப்படி பெரும் முதலீடு தேவைப்படும் தொழிலாக மாறியது பசுமைப்புரட்சியால் தான்! அன்று இயற்கையோடு இணைந்த பாரம்பரிய வேளாண்மைசெய்து உலகையே வியக்க வைத்தனர் இந்திய விவசாயிகள்! இன்று படித்த மேதாவிகளின் பேச்சைக் கேட்டு நிலத்தையும் வாழ்வையும் இழந்தோமே... என தவிக்கின்றனர். இவ்வளவு கடினப்பட்டு உற்பத்தி செய்யும் பொருளுக்கு அவனால் விலை நிர்ணயம் செய்யமுடியாது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் கரும்பு பயிரிட்டு வளர்த்து, அரசாங்கம் கொள்முதல் செய்யாததால் அவை கருகி அழிவதை காணசகிக்காமல் கண்ணீரோடு அவற்றை தீயிட்டு எரித்தனர் திருவண்ணாமலை விவசாயிகள்! கட்டுபடியாகத விலை, காத்திருந்தும் கொள்முதல் செய்யாத அவலம், கழுத்தை நெரிக்கும் கடன்சுமைகள்... எப்படித் தாங்குவான் விவசாயி, இதனால் தான் கடந்த 15ஆண்டுகளில் 50லட்சத்திற்கு மேற்பட்ட விளைநிலம் தாக்குபிடிக்க முடியாமல் தரிசாகப் போடப்பட்டுவிட்டன தமிழக விவசாயிகளால்!

இன்னும் இருக்கின்ற விவசாயிகள் அனுபவிக்கும் அவலங்கள் கொஞ்சநஞ்சமல்ல. தமிழகத்தில் 80சதவிகித விவசாயிகள் துண்டு, துக்காணி நிலம் வைத்துள்ள குறுவிவசாயிகள் தாம்! இவர்களும், இவர்களை நம்பியுள்ள விவசாயிக்கூலிகளும் ஈட்டும் மாதவருமானம் ரூபாய் 225லிருந்து 500வரைதான்! எனவே இவர்கள் வறுமைக்கு வாழ்க்கைபட்டு வாடுகின்றனர்.

நம் தமிழக அரசு,பனை, தென்னையிலிருந்து பெறப்படும் தீமை குறைவான கள்ளுக்கு கல்லறை கட்டிவிட்டு, ஆல்கஹால் அதிகமுள்ள மதுவுக்கு மகுடாபிஷேகம் நடத்திக் கொண்டிருக்கிறது

இதனால் தமிழகத்தில் பனைத்தொழில் பட்டுபோயுள்ளது. தென்னைத் தொழில்கள் தேய்பிறையாகி வருகின்றன. சுமார் நான்கு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும், சுமார் 5,000கோடிக்கு வருமானமும் கொண்ட அருமையான தொழில் அரசாங்கத்தால் அலட்சியப்படுத்தப்பட்டுவருகின்றது. பக்கத்து மாநிலமான கேரளத்தில் பனை, தென்னைத் தொழில்கள் படுஜோராக உள்ளன.

யாரோ ஒரு சில வெளிநாட்டு மதுபான உற்பத்தியாளர்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு இங்கே பலிகடாவாக்கப்பட்டுள்ளன பனை, தென்னை விவசாயிகளும், கூலித்தொழிலாளர்கள் வாழ்க்கையும்! இப்படியாக விவசாயம் வீழ்த்தப்பட்டு வருகின்றது. கைத்தறி தொழிலோ பாவம் கையறு நிலையில்! விசைத்தறிகளோ அசைவற்று ஸ்தம்பித்துள்ளன.

மொத்தத்தில் கிராமத் தொழில்கள் சீரழிந்து வருகின்றன. நகரங்களின் விரிவாக்கமும், சிறப்புபொருளாதார மண்டலங்களும், டாட்டா போன்ற பெரிய நிறுவனங்களின் புதிய பொருளாதார அணுகுமுறைகளும் கிராமங்களை விழுங்கி வேகவேகமாக செரிமானம் செய்து கொண்டுள்ளன.

தமிழர்களின் தொன்மங்களான தெருக்கூத்து, கரக்காட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், பறை, வில்லுப்பாட்டு போன்றவை மெல்ல, மெல்ல விடைப்பெற்றுக் கொண்டுள்ளன.

குக்கிராமங்கள் வரை கோலோச்ச தொடங்கியுள்ள திரைபடங்களும், தொலைகாட்சி அவைவரிசைகளும், வட்டார வழக்கு சொல்லாடல்களைக் கூட வழக்கொழிய வைத்துக் கொண்டுள்ளன. தொலைக்காட்சித் தமிழும், அது கட்டமைக்கும் வாழ்க்கை மதிப்பீடுகளும் காலங்காலமாக கிராமங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்த கலாச்சார கட்டமைப்புகளை கலகலக்க வைத்துள்ளன. ஆக மொத்தத்தில் கிராமங்கள் மெல்ல, மெல்ல தொலைந்து கொண்டுள்ளன.

வாழும் தலைமுறையான நமக்கு இதை மீட்டெடுக்கும் பொறுப்புண்டு, இதைத் தடுக்க தவறினால் வருந்தலைமுறையின் வசவிலிருந்து நாம் தப்பமுடியாது.

Sunday, February 24, 2008

ஒப்பந்தமில்லை அடமானம்

சாவித்திரி கண்ணன்

"அமெரிக்கா வாங்குவதற்கு இந்தியா என்ன விற்பனை பண்டமா...?" என்று கேட்டவர் தான் மன்மோகன் சிங். 2005-ஜூலை 18ல் இந்தியா-அமெரிக்காவிற்கு இடையே அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா புறப்பட்ட போது, அது தொடர்பாக இந்தியாவில் எழுந்த சர்ச்சைகளுக்கு சவுக்கடி தரும் விதத்தில் தான் நிருபர்கள் கூட்டத்தில் நெருப்பாகப் பேசினார் பிரதமர் மன்மோகன்சிங். உண்மையில் பிரதமர் இந்தியாவை விற்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.

ஆனால், "அடகு வைத்து விட்டார்" என்று பா.ஜ.க பகிரங்கமாகக் குற்றம் சாட்டுவதை அலட்சியப்படுத்த முடியாது "இந்திய அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும்...." என்ற குரல்கள் எதிர்கட்சிகளிடமிருந்து குமுறி வெடித்தபோது, "நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட வெளியுறவு கொள்கைகள் அணு ஆயுத ரகசியங்கள் போன்றவற்றை பாராளுமன்றத்தில் விவாதிக்க கோருவதே அபத்தம்...." என்றது காங்கிரஸ். ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த அணுசக்தி உடன்பாடு தொடர்பான இந்திய அரசின் முழுநிலைபாடுகளும், எதிர்பார்ப்புகளும், வாக்குறுதிகளும் அக்குவேறு. ஆணிவேராக அமெரிக்காவின் செனட் சபையிலும், பிரதிநிதித்துவ சபையிலும் இரண்டாண்டுகள் தீவிரமாக விவாதிக்கப்பட்ட பிறகே அமெரிக்க அதிபர் புஷ்ஷிக்கு அந்நாட்டின் பாராளுமன்றம் இந்தியாவோடு ஒப்பந்தம் செய்ய அனுமதித்தது.

"இந்தியாவிற்கு இன்னின்ன சலுகைகளெல்லாம் தேவையில்லை. இந்த ஒப்பந்தத்தில் இன்னும் சில கட்டுபாடுகளை சேர்க்க வேண்டும். இந்தியா வருங்காலத்தில் அணு ஆயுதத்தில் வல்லரசாக அமெரிக்கா அடித்தளம் அமைத்துவிடக் கூடாது..." என்று ஒப்பந்தத்தில் ஏகப்பட்ட திருத்தங்களை இந்த இரண்டாண்டு இடைவெளியில் நிறைவேற்றியது அமெரிக்க பாராளுமன்றம்.

இப்படியாக, அமெரிக்க பாராளுமன்றத்திடம் பகிரங்கப்படுத்திக் கொண்ட நம்நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களைத் தான் நமது 'இந்திய பாராளுமன்றத்தில் விவாதிக்க முடியாது' என்று விராப்பாக பேசிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் அரசு.

ஒரு பண்ணையாருக்குள்ள மனோபாவத்தில், "நான் சொன்னத அப்படியே கேட்டுக்கொள். வேறெதையும் பேசாதே..." என்று மத்திய அரசு மழுப்புவதற்கான காரணங்கள் என்னவென்று அறிய வந்தால் சொரனையுள்ள எந்த இந்திய குடிமகனும் துடித்துப்போவான்...!

"இது அமெரிக்காவுடனான ஒப்பந்தமா.... இல்லை அடிமை சாசனமா.." என்று இதயம் பொறுக்காமல் இந்தியவிஞ்ஞானிகள் பி.கே.அய்யங்கார், ஹோமி என்.சேத்னா, ஏ.என். பிரசாத், டாக்டர். அனில்கோத்ரா, எம்.ஆர்.சீனிவாசன்....... உள்ளிட்ட அனைத்து விஞ்ஞானிகளும் சென்ற ஆண்டே சீறிப்பாய்ந்தனர். அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டில் இந்தியாவின் இறையாண்மைக்கே உலைவைக்கும் அம்சங்களாக இந்திய விஞ்ஞானிகள் குறிப்பிடடவை இவை தாம்;

  • இந்திய அணுசக்தி உலைகளுக்கு எரிபொருளையும், தொழில்நுட்பத்தையும் தருவதோடு அமெரிக்கா நின்றுவிடாது. அது தொடர்பான அனைத்து அம்சங்களும் அமெரிக்காவின் பார்வைக்கு வர வேண்டும். தேவைப்பட்டால் சர்வதேசகுழுவை அனுப்பி சோதனை செய்வோம்.
  • அணு சக்தியால் மின் சக்தி பெறப்பட்ட பின்பு எஞ்சிய யுரேனியம் முதலியவைகளை செறிவூட்டி மறுசுழற்ச்சிக்கு பயன்படுத்த கூடாது.
  • இரு நாடுகளின் பொது நலனுக்கு ஏற்ற விசயங்களில் உலகளாவிய அளவில் ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா இறங்கும் போது இந்தியா ஒத்துழைக்க வேண்டும்.

இந்த மூன்று அம்சங்களைத்தான் மிக மும்முரமாக எதிர்த்தனர் நமது விஞ்ஞானிகள்.

"ரஷ்யாவிடம் கூடங்குளம் அணுஉலை போன்றவற்றிற்கு நாம் உதவிகள் பெற்ற போது இது போன்ற நிர்பந்தங்கள் இம்மியளவும் கிடையாது. நமது அணுஉலைகளை அமெரிக்கா பார்வையிட அணுமதிக்ககூடாது. அமெரிக்காவின் அணுஉலைகளை எப்படி மற்றவர்கள் அண்டமுடியாதோ ... அதுவே நமக்கும் பொருந்தும்.

மின்சக்தி போக எஞ்சிய அணுகழிவுகள் தான் அணுஆயுதம் தயாரிக்க இந்திய ராணுவத்தை பலப்படுத்தப் பயன்படுகிறது. அதை தடுக்க நினைக்கிறது அமெரிக்கா "என்றனர் நமது விஞ்ஞானிகள். இந்திய விஞ்ஞானிகளின் இடையறாத நெருக்குதலைத் தொடர்ந்து இந்தியா மீண்டும் அமெரிக்காவிடம் பேசி ஒப்பந்தத்தை இறுதி செய்தது.

இதன் மூலம் ஏற்பட்ட ஒரே அனுகூலம், மின் உற்பத்திபோக எஞ்சிய அணுகழிவுகளை இந்தியா மறு சுழற்ச்சிக்கு பயன் படுத்தலாம் என்பது தான்.

இதைத் தான் இந்திய அரசு தனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இறுமாப்புடன் பறைச்சாற்றி கொண்டுள்ளது. இதையெடுத்து அமெரிக்காவின் 'நியூயார்க் டைம்ஸ்' தனது தலையங்கத்தில் "இந்தியாவின் வற்புறுத்தலுக்கு வாஷிங்டன் பணிந்து விட்டது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் வெடிப்பொருள் உருவாக்கத்திற்கும், அணு ஆயுத பரவலுக்கும் அமெரிக்கா ஏன் அணைப்போடவில்லை" என எழுதியது.

ஆனால், 'இதில் கவலைப்பட ஒன்றுமில்லை. நமது கண்காணிப்பின் கீழ்தான் எல்லாம் நடக்க இருக்கிறது. சர்வதேச கண்காணிப்பு குழுவை மீற இந்தியாவிற்கு எந்த சாத்தியமும் தரப்படவில்லை. அப்படி இந்தியா மீறுமானால் இந்தியாவிற்கு எல்லாம் நிறுத்தப்பட்டு தொழில்நுட்பமும் திரும்பப் பெறப்படும்" என்று விளக்கமளித்துள்ளார் அமெரிக்க அயலுறவு அமைச்சக அதிகாரி நிக்கோலஸ் பான்ஸ்.

ஆக, நாம் அமெரிக்காவை மீறிச்செல்ல அணுவளவும் வாய்ப்பில்லை என்பது ஒரு கொடுமை என்றால் அதை விட பெரிய ஆபத்தான அம்சம் அமெரிக்காவின் அனைத்து ராணுவ நடவடிக்கைகளுக்கும் நாம் உதவ வேண்டும் என்பது! அதாவது அமெரிக்க ஒப்பந்தம் இந்தியாவை அடியாளாக்க செயல்படக் கோருகிறது.

அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு ராணுவ நடவடிக்கைகளுக்கு நாம் உடன் பட முடியாது. 2003ல் அது ஈராக்கில் போர் தொடுக்க முனைந்த போது அதற்கு இத்தாலி, ஜப்பான் உதவியதைப்போல இந்திய ஒத்துழைப்பையும் எதிர்பார்த்தது. அப்படியான நிர்பந்தம் நமக்கு அமைந்திருந்தால் இதுவரை அமெரிக்கா, ஈராக்கில் கொன்று குவித்துள்ள சுமார்.75,000 உயிர்களுக்கு இந்தியாவும் பழி சுமந்திருக்கவேண்டும்.

இப்போது மறுபடியும் கட்டுரையின் ஆரம்பத்திற்கே வருகிறேன். இந்திய பாராளுமன்றத்தில் பாதுகாப்பு கருதி அணு ஆயுத விவகாரங்களை இந்தியா பேசாதாம். ஆனால் இனி, இந்திய அணுசக்தி உலை நிர்மாணங்களில் அந்நிய நிறுவனங்கள் நுழையக்காத்திருக்கின்றன. சுமார் 200கோடி பில்லியன் டாலர்கள் இதற்காக அவை ஒதுக்கியுள்ளன. நம்ம ஊர் டாடா, ரிலையன்ஸ் கூட அணுசக்தி துறையில் ஆதிக்கம் கொள்ள ஆர்வம் காட்டுகின்றன.

அமெரிக்காவின் நலன்களுக்கேற்ப இந்தியாவின் ராணுவச்செலவுகள் இரட்டிப்பாகவும் வாய்ப்புள்ளது ஆக, அமெரிக்காவின் அணு ஆயுத வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவாக்கிக்கொள்ளவும், இந்தியாவை தன் இரும்புப்பிடிக்குள் இசைவாக வைத்துக்கொளளவும் இந்த ஒப்பந்தம் உதவுகிறது.

'இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அமெரிக்கா வந்து உதவும்'. என்ற நோக்கத்தில் போடப்பட்ட ஒப்பந்தம் இதுவென இந்திய அரசு வியாக்கியானம் செய்துள்ளது அந்த அச்சுறுத்தலே அமெரிக்காதானே!

**********************

{இந்த இறுதி ஒப்பந்தம் குறித்த இந்திய விஞ்ஞானிகள் சிலரின் கருத்துகள்; கல்பாக்கம் அணுமின் சக்தி இயக்குனர் பல்தேவ்ராஜ், "அணு எரிப்பொருள் மறு ஆக்க தொழில் நுட்பத்தில் 1960களிலிருந்தே நாம் முன்னோடி நாடு. இந்த தன்னகரில்லா தொழில் நுட்பம் 100 சதவிகிதம் சுயசார்புடையது. இதில் வேறெந்த நாட்டையும் நாம் சார்ந்திருக்கவேண்டியதில்லை. அணுசக்தி கமிஷன் முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன், "சில அம்சங்கள் நாம் எதிர்பார்த்தபடி இல்லாதது வருத்தமே!" }

Saturday, February 23, 2008

அ ரசு கேபிள் டிவி கார்பரேஷன் சர்ச்சைகளும் சாத்தியங்களும்

சாவித்திரி கண்ணன்
காலசக்கரம் சுழல்கிறது.
கிழே விழுந்தவன் மேல்நோக்கி எழுகிறான். மேலேயிருந்தவன் கீழ்நோக்கி வருகிறான். அடிமேல் அடிவாங்கி, அடங்கி ஒடுங்கி இனி எழுந்திருக்க முடியாது என அழுந்திக்கிடந்தவன் இப்போது எழுந்துநிற்க ஆரம்பித்தன் காரணம் அடித்தவன் பின்னால் நின்றவர்கள் இன்று அடிப்பட்டவனுக்கு அனுசரணையாக மாறியுள்ளனர்.
தயாநிதிமாறன் சென்னை போலீஸ்கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க படியேறிவந்தார். "என்னுடைய எஸ்.சி.வி நிறுவன கேபிள் ஆபரேட்டர்கள் ஹாத்வே நிறுவனத்திற்கு மாறும்படி நிர்பந்தப்படுத்தப்படுகிறார்கள்... இது ஜனநாயகப்படுகொலை... இது நியாயமா? தர்மமா?" என்று அவர் குமுறினார். இக்காட்சி சன் குழுமச் சேனல்களிலும், அவர்களுக்கு ஆதரவான ஊடகங்களிலும் பெரிய அளவு பிரதிபலித்தது.
இல.கணேசன், வைகோ, சரத்குமார், விஜயகாந்த் போன்றோர் உடனடியாக இதற்கு எதிர்வினையாக அரசாங்கத்திற்கு எச்சரிக்கை செய்தனர். எஸ்.சி.விக்கு பரிந்து பேசினர்.
கேபிள் தொழில் வரலாறு தெரிந்தவர்கள் யாரும் அல்லது மனசாட்சியுள்ளவர் எவரும் தயாநிதிமாறனை சட்டென்று ஆதரித்துப்பேசமாட்டார்கள். தமிழகத்தில் கேபிள் தொழில் என்பது 1989-ல் ஆரம்பிக்கிறது. அதாவது சன் டிவி வருகைக்கு நான்காண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் ஆங்காங்கேயுள்ள இளைஞர்கள் ஆர்வதுடிப்பால் சுமார் இரண்டு, மூன்று லட்சம் முதலீட்டில் துவங்கி வீடுவீடாக வயர்தந்து சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களை ஒளிபரப்பி சினிமா காண்பித்தனர். 1990-ல் B B C, Star group, Prime Sports போன்ற வெளிநாட்டு செயற்கைகோள் சேனல்களின் வரவு, இத்தொழிலுக்கு மேலும் பல இளைஞர்கள் வர காரணமாயிற்று.
விஞ்ஞான தொழில் நுட்பம் விதையூன்றி துளிர்விட்ட அந்த காலகட்டத்தில் துல்லியமான ஒளிபரப்பை எப்படித் தருவது என விழிபிதுங்கி, என்னென்னவோ முயற்சிகள் செய்து ஏராளமான பணத்தையும் இழந்து, வாடிக்கையாளர்களின் வாழ்த்துக்களையும், வசவுகளையும் ஒருசேரப்பெற்று வளர்த்தெடுக்கப்பட்ட இந்தத் தொழிலை மாறன் சகோதரர்கள் தங்கள் வசப்படுத்த களமிறங்கிய ஆண்டு 2000.
சன் டிவி ஆரம்பிக்கப்பட்டது 1993.
தி.மு.கழக சொத்தை வங்கியில் அடமானம் வைத்து சன் தொலைகாட்சி 93-ல் தமிழின் முதல் சேனலாக ஸ்தாபிக்கப்பட்டாலும், 96-ல் தி,மு,க ஆட்சிக்கு வந்த பிறகும், அதன்பிறகு முரசொலிமாறன் மத்திய அமைச்சரானபிறகும் தான் சன்குழுமத்தின் சாம்ராஜ்யம் கட்டி எழுப்பப்பட்டது. மளமளவென்று பல சேனல்களை துவங்கிய மாறன் சகோதரர்கள் அவற்றை பிரதான அலைவரிசைகளில் ஒளிபரப்பவும், தமிழில் தங்களுக்கு போட்டியாக உள்ள சேனல்களின் வளர்ச்சியைகட்டுப்படுத்தவும், புதிய போட்டியாளர்களின் வருகையைத் தடுக்கவும்... கேபிள் நெட்வொர்க் தொழிலில் சுமங்கலி கேபிள்விஷன் (எஸ்.சி,வி) என்ற பெயரில் சூறாவளியாய் நுழைந்தனர்.
அப்போது சென்னையில் சுமார் 60 சதவிகித ஆபரேட்டர்கள் 'ஹாத்வே' என்ற நிறுவனத்தின் வசமும் சிட்டி கேபிள்விஷன் வசம் சிலரும் மற்றுமுள்ள வர்கள் ஆங்காங்கே தங்களுக்குள் கூட்டாகவும், தனியாகவும் தொழில் செய்துவந்தனர்.
இதே தயாநிதி மாறன் தடாலடியாக ஆபரேட்டர்களை அழைத்து கூட்டம் நடத்தி அன்று அனைவரும் சுமங்கலி கேபிள் விஷனுக்கு கீழ் வரும்படி ஆணையிட்டார். அப்போது ஆட்சி கட்டிலில் இருந்த தி.மு.கவின் அதிகார பலமும், ஸ்டாலின் வசமிருந்த சென்னை மாநகராட்சியின் சேவையும் தயாநிதி மாறனுக்கு தடையின்றி கிடைத்தன. ஹாத்வே ஆபரேட்டர்கள் மிரட்டப்பட்டனர். மிரட்டலுக்கு பணியாதவர்கள் துன்புறுத்தப்பட்டனர்.
சிட்டி கேபிள்விஷன் ஹாத்வே ஆபரேட்டர்களின் கேபிள் வயர்கள் அறுத்தெறியப்பட்டன. போலீசார் பொய்வழக்குபோட்டனர். உறுதியாக நின்ற ஆபரேட்டர்களை உருக்குலைக்க கைதுபடலம் நடந்தது. இறுதியில் சென்னையின் 90 சதவிகித ஆபரேட்டர்கள் எஸ்.சி.வி வசம் வந்தனர். சிட்டிகேபிள்விஷன் சீரழிக்கப்பட்டு மறைந்தது. அடிமேல் அடிவாங்கி ஹாத்வே நலிந்து, மெலிந்தது. சென்னையைப் போலவே மற்ற ஆறு மாநகராட்சி களையும் அபகரித்தது எஸ்.சி.வி. சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு 11 மாவட்டங்களில் பரந்துவிரிந்து செயலாற்றிய பாலிமார் கேபிள் விஷனிடமிருந்து 10 மாவட்டங்கள் எஸ்.சி.வியால் பறிக்கப்பட்டது கோவையில் கோலோச்சிக் கொண்டிருந்த பி.பி.எல் நிறுவனம் பெரும் தொல்லைகளுக்குள்ளாகி பெயர் மறைந்துபோனது. பாலாஜி கேபிள் விஷன் பாழாகிப்போனது. இவைமட்டுமல்ல, தமிழகம் முழுமையுமுள்ள நகரங்களில் நேரடியாகவும், பினாமிகள் மூலம் மறைமுகமாகவும் புதிய கண்ட்ரோல்ரூம் அைம்த்து ஏற்கெனவே செயல்பட்டுவந்த ஆபரேட்டர்களை இருந்த இடம் தெரியாது அழித்தார் தயாநிதிமாறன். தொழிலை துறந்த ஆபரேட்டர்கள் பலர், துவண்டு விரக்தியடைந்த ஆபரேட்டர்கள் ஏராளம். இப்படியாக சுமார் பத்தாண்டுகள் கழித்து களத்தில் இறங்கி படுபாதங்களை செய்து தமிழக கேபிள் நெட்வொர்க்கில் சுமார் 60சதவிகிதத்தற்கும் அதிகமாக அபகரித்துக்கொண்டது எஸ்.சி.வி.
இனி எந்தச்சேனல்களும் எஸ்.சி.வியின் தயவின்றி தமிழகமக்களைச் சென்றடைய முடியாது என்ற நிலையில் புதிய தமிழ்சேனல்களுக்கு தடங்கல்கள் பல செய்தனர். தமிழ்திரை தடயமின்றி மறைந்தது. பாரதி டிவி பரிதாபமாக மறைந்தது. நிலா டிவி நிலைக்கமுடியாமல் துவண்டது. ஏ.எம்.என்.டிவி எல்லா இடங்களிலும் தெரியவாய்ப்பின்றி இருட்டிப்புக்குள்ளானது. மலர் டிவியின் முயற்சிகள் மொட்டிலேயே கருகியது... இப்படி பட்டியல் போட்டால் பக்கங்கள் போதாது.
தொழில் சம்ராஜ்யத்திற்கு அரசியல் அதிகாரபலம் அவசியம் என்பதை அனுபவத்தில் கண்ட மாறன் சகோதரர்கள் கட்சியை கபளீகரம் செய்ய தி.மு.க விலிருந்துகொண்டே திட்டம் போட்டனர்.
பேராசை பெருநஷ்டத்தில் முடிந்தது. வரம் கொடுத்தவன் தலையில் கைவைத்தனர். அவன் தலையில் உட்காரவைத்தது தவறென்று தரையில் இறங்கிவிட்டான். 'போட்டிக்கு வா' என்று தண்ணீரிலும் குதிக்க வைத்தான். இதுவரை தனிக்காட்டுராஜாவாக கோலோச்சிக் கொண்டிருந்தவர்கள் அதிகாரம் இடம் மாறிப் போனதில் சற்றே தடுமாறியுள்ளனர்.
அன்று எந்த ஹாத்வே நிறுவனத்தை அதிகாரபலம் கொண்டு துவம்சம் செய்து துவண்டு போக வைத்தாரோ அந்த நிறுவனம் தான் இன்று எஸ்.சி.விக்கு எமனாகத் தெரிகிறது. எந்த கிஷோர்குமார் என்ற ஹாத்வேயின் ஆபரேட்டரை அன்று அலைகழித்து துன்புறுத்தி எஸ்.சி.வியில் இணைத்தாரோ என்று அதே கிஷோர்குமாரைத்தான் துருப்புசீட்டாகப் பயன்படுத்தி கமிஷனரிடம் புகார் கொடுத்து ஒப்பாரி வைத்துள்ளார் தயாநிதிமாறன்.
நாம் தீவிரமாக விசாரித்தவரையில் கேபிள் ஆபரேட்டர்கள் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டு ஹாத்வே நிறுவனத்தில் இணையும்படி கேட்கப்பட்டுள்ளனர். ஆனால் தயாநிதிமாறன் கூறியபடி கைதுசெய்யப்பட வில்லை. இதைத்தான் தயாநிதிமாறனால் தாங்கமுடியவில்லை. பேனை பெருமாளாக்கி, பெருமாளை பெருமலையாக்கும் அரசியல் கலையைகற்ற வரல்லவா தயாநிதிமாறன். கிஷோர் குமாரை போலீசார் அழைத்து அரைமணி நேரம் பேசியதையே அவர் அரசியலாக்கிவிட்டார். இதன் மூலம் தமிழக அரசு ஹாத்வேக்கு ஆதரவாக அடுத்தக்கட்ட முயற்சியில் இறங்குவதற்கு சாதுரியமாக செக் வைத்துவிட்டார்.
ஆனால் நம்மை பொறுத்தவரை தமிழக அரசு போலீஸ் மூலம் இப்படி ஒரு முயற்சியில் இறங்கிஇருக்க வேண்டியதில்லை. ஆனால் அதே சமயம் தயாநிதிமாறனால் அன்று அவரது போட்டியாளர்களுக்கு தரப்பட்ட உபத்திரவங்களில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இப்போது அரங்கேறி விடவில்லை. ஆனால் ஏதோ தலைமுழுகிப் போனது போல் தண்டோரா போட்டுவிட்டார்.
சன்தொலைக்காட்சி இப்போது சகலகட்சி தொலைக்காட்சியாகிவிட்டது. அதுவும் தி.மு.க விற்கு எதிரான எல்லாகட்சிகளுக்கும் ஏற்றதொரு ஊடகமாக, அவர்களே ஏற்கத்தகுந்த ஊடகமாக உருமாறி நிற்கிறது. ஆகவே இப்போது எஸ்.சி.வியுடனான மோதல் அல்லது தொழில்போட்டி என்பதை வெறும் தொழில்போட்டி என்பதாக விட்டுவிடாமல் அரசியலாக்கும் ஆயுதமாக மாற்றுகின்றனர் மாறன் சகோதரர்கள்.
கடந்த ஆண்டு மே மாதம் கலைஞர் குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்திற்குமான பிளவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சன்னுக்கு போட்டியாக அசுரவேகத்தில் சிலிர்த்தெழுந்து செப்டம்பர் மாதம் கலைஞர் டிவி களத்திற்கு வந்தது. இப்போது கலைஞர் குழுமத்திலிருந்து 'இசையருவி' சேனலும் இறக்கப்பட்டுவிட்டது. இவ்வளவு விரைவாக சேனல்கள் கொண்டு வரமுடிந்தவர்கள் அரசு கேபிள் கார்பரேஸன் விஷயத்தில் மட்டும் அதீத காலதாமதம் காட்டுவது ஏன்?
உண்மையில் இந்த இரு குடும்பங்களுக்கிடையிலான சண்டையில் நாட்டுக்கும், மக்களுக்கும் கிடைக்க கூடிய ஒரே நலன் அரசுகேபிள் கார்பரேஷன் தான். பலவிதங்களில் அதன் பயன்பாடு எதிர்பார்க்கப்படுகிறது.
  • எஸ்.சி.வி எனும் ஏகபோகத்தை உடைத்து மற்ற இந்தியநகரங்களில் உள்ளது போல் ஜனநாயக ரீதியான தொழில் போட்டியை அங்கீகரிப்பது.
  • அடிமைகளாக எஸ்.சி.வியின் கீழ் அழுத்தப்பட்டு தொழில்புரியும் ஆபரேட்டர் களுக்கு சுதந்திரகாற்றை சுவாசிக்கும் வாய்ப்பை வழங்குவது.
  • எஸ்.சி.வியால் தடைசெய்யப்பட்ட அல்லது பின்னுக்குத்தள்ளப்பட்ட மற்ற பல தமிழ்சேனல்களையும் மக்கள் பார்க்கும் வாய்ப்பை தருவது.
  • தொழில் போட்டி காரணமாக கேபிள் கட்டணங்கள் குறைந்து மக்கள் பலனடைவது.
  • தரம், சேவை போன்றவற்றை மதீப்பீடாக வைத்து தனியாரா? அல்லது அரசா? என்று தீர்மானிக்கும் வாய்ப்பை மக்களுக்கு வழங்குவது.

இவற்றையே சகலமக்களுக்கு எதிர்பார்த்திருக்கிறார்களேயன்றி தேவையற்ற சச்சரவுகளையல்ல. அதிகாரபலம், செல்வபலம், ஆட்பலம், மாபெரும் கட்டமைப்பு பலம், ஆபரேட்டர்களின் ஆதரவுபலம் என அனைத்து அம்சங்களும் அரசுக்கு சாதகமாக உள்ள நிலையில் சில சில்லறை வம்புகளில் சிக்கி அது தன்னை சேதாரப்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதே நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் எதிர்பார்ப்பு.

ஒட்டுமொத்த மக்கள் நலனை முன்நிறுத்தி செயல்படவேண்டிய அரசு சில தனி நபர்களின் விருப்பு, வெறுப்பிற்கோ,சொந்தபந்தங்களின் நிர்பந்தத்திற்கோ ஆட்பட ஆரம்பித்துவிட்டால் அத்தனை நல்ல அம்சங்களும் பாழாகிவிடும்.

கேபிள் ஆபரேட்டர்கள் என்றால் அது சென்னையில் உள்ளவர்கள் மட்டும் இல்லை. தமிழகம் முழுக்க சுமார் 40,000 பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அரசு கேபிள் கார்பரேஷனில் சென்னையைச் சேர்ந்த ஓரிரு சங்கங்களை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்திவிட்டு தமிழ்நாட்டின் மற்ற 80சதவிகித பகுதி ஆபரேட்டர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கங்களை அலட்சியப்படுத்த வேண்டியதில்லை.

இலவச தொலைக்காட்சி வழங்கும் போது அனைத்துகட்சிகுழு அமைக்கப்பட்டது போல அரசுகேபிள் கார்பரேஷனிலும் சகலகட்சி பிரதிநிதிகளும் அங்கம் வகித்தால் ஆட்சிகள் மாறினாலும் அது சார்புநிலை எடுக்காமல் செயல்பட சாத்தியப்படும்.

அதேசமயம் ஆபரேட்டர்களை அரசு வசப்படுத்த வரிபாக்கியை ரத்து செய்யும் முயற்சியில் இறங்காமல் கேபிள்நெட்வொர்க் தொழிலை ஒரு சிறுதொழிலாக அங்கீகரித்து முறைப்படுத்தி பாதுகாப்பு தரலாம். கேபிள் ஆபரேட்டர்கள் ஒன்றிணைந்து கூட்டுறவு அமைப்பை உருவாக்கி செயல்பட ஊக்கப்படுத்தலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக நவீனவிஞ்ஞான வளர்ச்சியை சாத்தியமாக்கும் Broad Band Internet கேபிள் இணைப்பு என்பது தான் வருங்கால தேவைகளை ஈடுசெய்யும். அதிலே கேபிள் கனெஷ்சன் மட்டுமின்றி தொலைபேசி, வீடியோ கான்பிரன்ஸ், கல்விச்சேவை என பலவற்றை குறைந்த செலவில் மிகத்துல்லியமாக தர இயலும். மத்திய அரசியல் அங்கம் வகிக்கும் தி.மு.க அரசிற்கு இந்த தொழில் நுட்பத்தை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களோடு இணைந்து செய்வது இயலாத ஒன்றல்ல.

விமர்சிப்பவர்களே வியந்து போற்றவேண்டுமென்றால், பொது நலன் ஒன்றைமட்டுமே கருத்தில் கொண்டு, காழ்ப்புணர்ச்சிகளை காலாவதியாக்கிகொண்டு கருமமே கண்ணாக அரசு கேபிள் கார்பரேஷன் செயலாற்ற வேண்டும்.

அரசு கேபிள் கார்பரேஷன் என்பது கானல்நீரா?

அல்லது கையில் கிடைக்கவிருக்கும் கனியா?

என்பதற்கு விரைவில் செயல்பாட்டின் மூலம் விடை தெரிய வேண்டும்.

**************

{இந்நிலையில் மாறன் சகோதரர்கள் அ.தி.மு.க அணிபக்கம் சாய்ந்துவிட்டது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். இது தி.மு.கவை திகைக்க வைக்க நடக்கும் நாடகமா? அல்லது தீர்மானகரமாக அ.தி.மு.க பக்கம் செல்ல எடுத்த முடிவா? என்பது இந்த கட்டுரை எழுதும் வரையில் தெளிவாக உறுதிப்படவில்லை. எப்படியாயினும் மாறன் சகோதரர்கள் அதி பயங்கர சுயநலவாதிகள், சந்தர்பவாதிகள் என்பது சந்தேகத்திற்கிடமின்றி மீண்டும், மீண்டும் நிருபணமாகியுள்ளது.

கருணாநிதியைப் பொறுத்தவரை மு.க ஸ்டாலினை 25 வருட கட்சிபணிக்குப் பிறகு தான் அமைச்சராக்கினார். அதேபோல் கனிமொழி என்ற அறிவுகூர்மையுள்ள பெண்ணை, தமிழ் உலகம் அறிந்த கவிஞரை சுமார் 20 ஆண்டுகளாக அரசியலில் இறக்காமல் தவிர்த்துவந்தார். ஆனால் தயாநிதிமாறனை ஆறே மாதத்தில் எம்.பியாக்கி உடனே மத்திய காபினெட் அமைச்சராக்கி, சோனியாவுடனேயே சுதந்திரமாகப் பழகும் வாய்ப்பை தந்தவர். இப்படி படிப்படியான வளர்ச்சிகாணாமல், எடுத்த எடுப்பிலேயே ஏற்றம் கொடுத்தது கருணாநிதி செய்த பெருந்தவறு. இந்தத் தவறு அவரது தலைமைக்கே பிரச்சினையானது. ஆயினும் தயாநிதியின் அமைச்சர் பதவியை திரும்ப பெற்றதைத் தவிர வேறு பெரிய நடவடிக்கைகளை அவர் எடுக்கவில்லை. தினகரனுக்கும் தமிழ்முரசிற்கும் தரும் அரசு விளம்பரங்கள் நிறுத்தப்படவில்லை. இன்னும் அறிவாளய வளாகத்தில் செயல்படும் சன் தொலைக்காட்சி அலுவலகமே இதற்கு சாட்சியாகிறது.

ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக மாறன் சகோதரர்கள் மாறியதில் கருணாநிதியின் பங்கு கணிசமானது. எனவே மாறன் சகோதரர்களின் மனமாற்றத்தை எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அளவுக்கு தான் ஜெயலலிதா கருதுவார். அதற்கு மேல் அ.தி.மு.க வில் மாறன் சகோதரர்களுக்கு ஒரு மதிப்பு கிடைத்துவிடாது. ஏனெனில் தீவிர விசுவாசிகளையே கூட அவ்வளவு சீக்கிரம் அங்கீகரித்து விடாத ஜெயலலிதா இது போன்ற சந்தர்பவாதிகளை, சந்தர்பத்திற்கு ஏற்ப தான் கையாளுவாரே தவிர சரியான வாய்ப்பை சாத்தியப்படுத்தமாட்டார். அவரே முடிவெடுத்து அவர்கள் அ.தி.மு.க வில் வெளிப்படையாக இணைந்தால் அது அவர்களின் அழிவுக்கு ஆரம்பமாகலாம். ஒரு வகையில் இது தமிழக மக்களுக்கும், நாட்டுக்கும் நன்மையே ஆகும். }