Saturday, February 23, 2008

அ ரசு கேபிள் டிவி கார்பரேஷன் சர்ச்சைகளும் சாத்தியங்களும்

சாவித்திரி கண்ணன்
காலசக்கரம் சுழல்கிறது.
கிழே விழுந்தவன் மேல்நோக்கி எழுகிறான். மேலேயிருந்தவன் கீழ்நோக்கி வருகிறான். அடிமேல் அடிவாங்கி, அடங்கி ஒடுங்கி இனி எழுந்திருக்க முடியாது என அழுந்திக்கிடந்தவன் இப்போது எழுந்துநிற்க ஆரம்பித்தன் காரணம் அடித்தவன் பின்னால் நின்றவர்கள் இன்று அடிப்பட்டவனுக்கு அனுசரணையாக மாறியுள்ளனர்.
தயாநிதிமாறன் சென்னை போலீஸ்கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க படியேறிவந்தார். "என்னுடைய எஸ்.சி.வி நிறுவன கேபிள் ஆபரேட்டர்கள் ஹாத்வே நிறுவனத்திற்கு மாறும்படி நிர்பந்தப்படுத்தப்படுகிறார்கள்... இது ஜனநாயகப்படுகொலை... இது நியாயமா? தர்மமா?" என்று அவர் குமுறினார். இக்காட்சி சன் குழுமச் சேனல்களிலும், அவர்களுக்கு ஆதரவான ஊடகங்களிலும் பெரிய அளவு பிரதிபலித்தது.
இல.கணேசன், வைகோ, சரத்குமார், விஜயகாந்த் போன்றோர் உடனடியாக இதற்கு எதிர்வினையாக அரசாங்கத்திற்கு எச்சரிக்கை செய்தனர். எஸ்.சி.விக்கு பரிந்து பேசினர்.
கேபிள் தொழில் வரலாறு தெரிந்தவர்கள் யாரும் அல்லது மனசாட்சியுள்ளவர் எவரும் தயாநிதிமாறனை சட்டென்று ஆதரித்துப்பேசமாட்டார்கள். தமிழகத்தில் கேபிள் தொழில் என்பது 1989-ல் ஆரம்பிக்கிறது. அதாவது சன் டிவி வருகைக்கு நான்காண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் ஆங்காங்கேயுள்ள இளைஞர்கள் ஆர்வதுடிப்பால் சுமார் இரண்டு, மூன்று லட்சம் முதலீட்டில் துவங்கி வீடுவீடாக வயர்தந்து சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களை ஒளிபரப்பி சினிமா காண்பித்தனர். 1990-ல் B B C, Star group, Prime Sports போன்ற வெளிநாட்டு செயற்கைகோள் சேனல்களின் வரவு, இத்தொழிலுக்கு மேலும் பல இளைஞர்கள் வர காரணமாயிற்று.
விஞ்ஞான தொழில் நுட்பம் விதையூன்றி துளிர்விட்ட அந்த காலகட்டத்தில் துல்லியமான ஒளிபரப்பை எப்படித் தருவது என விழிபிதுங்கி, என்னென்னவோ முயற்சிகள் செய்து ஏராளமான பணத்தையும் இழந்து, வாடிக்கையாளர்களின் வாழ்த்துக்களையும், வசவுகளையும் ஒருசேரப்பெற்று வளர்த்தெடுக்கப்பட்ட இந்தத் தொழிலை மாறன் சகோதரர்கள் தங்கள் வசப்படுத்த களமிறங்கிய ஆண்டு 2000.
சன் டிவி ஆரம்பிக்கப்பட்டது 1993.
தி.மு.கழக சொத்தை வங்கியில் அடமானம் வைத்து சன் தொலைகாட்சி 93-ல் தமிழின் முதல் சேனலாக ஸ்தாபிக்கப்பட்டாலும், 96-ல் தி,மு,க ஆட்சிக்கு வந்த பிறகும், அதன்பிறகு முரசொலிமாறன் மத்திய அமைச்சரானபிறகும் தான் சன்குழுமத்தின் சாம்ராஜ்யம் கட்டி எழுப்பப்பட்டது. மளமளவென்று பல சேனல்களை துவங்கிய மாறன் சகோதரர்கள் அவற்றை பிரதான அலைவரிசைகளில் ஒளிபரப்பவும், தமிழில் தங்களுக்கு போட்டியாக உள்ள சேனல்களின் வளர்ச்சியைகட்டுப்படுத்தவும், புதிய போட்டியாளர்களின் வருகையைத் தடுக்கவும்... கேபிள் நெட்வொர்க் தொழிலில் சுமங்கலி கேபிள்விஷன் (எஸ்.சி,வி) என்ற பெயரில் சூறாவளியாய் நுழைந்தனர்.
அப்போது சென்னையில் சுமார் 60 சதவிகித ஆபரேட்டர்கள் 'ஹாத்வே' என்ற நிறுவனத்தின் வசமும் சிட்டி கேபிள்விஷன் வசம் சிலரும் மற்றுமுள்ள வர்கள் ஆங்காங்கே தங்களுக்குள் கூட்டாகவும், தனியாகவும் தொழில் செய்துவந்தனர்.
இதே தயாநிதி மாறன் தடாலடியாக ஆபரேட்டர்களை அழைத்து கூட்டம் நடத்தி அன்று அனைவரும் சுமங்கலி கேபிள் விஷனுக்கு கீழ் வரும்படி ஆணையிட்டார். அப்போது ஆட்சி கட்டிலில் இருந்த தி.மு.கவின் அதிகார பலமும், ஸ்டாலின் வசமிருந்த சென்னை மாநகராட்சியின் சேவையும் தயாநிதி மாறனுக்கு தடையின்றி கிடைத்தன. ஹாத்வே ஆபரேட்டர்கள் மிரட்டப்பட்டனர். மிரட்டலுக்கு பணியாதவர்கள் துன்புறுத்தப்பட்டனர்.
சிட்டி கேபிள்விஷன் ஹாத்வே ஆபரேட்டர்களின் கேபிள் வயர்கள் அறுத்தெறியப்பட்டன. போலீசார் பொய்வழக்குபோட்டனர். உறுதியாக நின்ற ஆபரேட்டர்களை உருக்குலைக்க கைதுபடலம் நடந்தது. இறுதியில் சென்னையின் 90 சதவிகித ஆபரேட்டர்கள் எஸ்.சி.வி வசம் வந்தனர். சிட்டிகேபிள்விஷன் சீரழிக்கப்பட்டு மறைந்தது. அடிமேல் அடிவாங்கி ஹாத்வே நலிந்து, மெலிந்தது. சென்னையைப் போலவே மற்ற ஆறு மாநகராட்சி களையும் அபகரித்தது எஸ்.சி.வி. சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு 11 மாவட்டங்களில் பரந்துவிரிந்து செயலாற்றிய பாலிமார் கேபிள் விஷனிடமிருந்து 10 மாவட்டங்கள் எஸ்.சி.வியால் பறிக்கப்பட்டது கோவையில் கோலோச்சிக் கொண்டிருந்த பி.பி.எல் நிறுவனம் பெரும் தொல்லைகளுக்குள்ளாகி பெயர் மறைந்துபோனது. பாலாஜி கேபிள் விஷன் பாழாகிப்போனது. இவைமட்டுமல்ல, தமிழகம் முழுமையுமுள்ள நகரங்களில் நேரடியாகவும், பினாமிகள் மூலம் மறைமுகமாகவும் புதிய கண்ட்ரோல்ரூம் அைம்த்து ஏற்கெனவே செயல்பட்டுவந்த ஆபரேட்டர்களை இருந்த இடம் தெரியாது அழித்தார் தயாநிதிமாறன். தொழிலை துறந்த ஆபரேட்டர்கள் பலர், துவண்டு விரக்தியடைந்த ஆபரேட்டர்கள் ஏராளம். இப்படியாக சுமார் பத்தாண்டுகள் கழித்து களத்தில் இறங்கி படுபாதங்களை செய்து தமிழக கேபிள் நெட்வொர்க்கில் சுமார் 60சதவிகிதத்தற்கும் அதிகமாக அபகரித்துக்கொண்டது எஸ்.சி.வி.
இனி எந்தச்சேனல்களும் எஸ்.சி.வியின் தயவின்றி தமிழகமக்களைச் சென்றடைய முடியாது என்ற நிலையில் புதிய தமிழ்சேனல்களுக்கு தடங்கல்கள் பல செய்தனர். தமிழ்திரை தடயமின்றி மறைந்தது. பாரதி டிவி பரிதாபமாக மறைந்தது. நிலா டிவி நிலைக்கமுடியாமல் துவண்டது. ஏ.எம்.என்.டிவி எல்லா இடங்களிலும் தெரியவாய்ப்பின்றி இருட்டிப்புக்குள்ளானது. மலர் டிவியின் முயற்சிகள் மொட்டிலேயே கருகியது... இப்படி பட்டியல் போட்டால் பக்கங்கள் போதாது.
தொழில் சம்ராஜ்யத்திற்கு அரசியல் அதிகாரபலம் அவசியம் என்பதை அனுபவத்தில் கண்ட மாறன் சகோதரர்கள் கட்சியை கபளீகரம் செய்ய தி.மு.க விலிருந்துகொண்டே திட்டம் போட்டனர்.
பேராசை பெருநஷ்டத்தில் முடிந்தது. வரம் கொடுத்தவன் தலையில் கைவைத்தனர். அவன் தலையில் உட்காரவைத்தது தவறென்று தரையில் இறங்கிவிட்டான். 'போட்டிக்கு வா' என்று தண்ணீரிலும் குதிக்க வைத்தான். இதுவரை தனிக்காட்டுராஜாவாக கோலோச்சிக் கொண்டிருந்தவர்கள் அதிகாரம் இடம் மாறிப் போனதில் சற்றே தடுமாறியுள்ளனர்.
அன்று எந்த ஹாத்வே நிறுவனத்தை அதிகாரபலம் கொண்டு துவம்சம் செய்து துவண்டு போக வைத்தாரோ அந்த நிறுவனம் தான் இன்று எஸ்.சி.விக்கு எமனாகத் தெரிகிறது. எந்த கிஷோர்குமார் என்ற ஹாத்வேயின் ஆபரேட்டரை அன்று அலைகழித்து துன்புறுத்தி எஸ்.சி.வியில் இணைத்தாரோ என்று அதே கிஷோர்குமாரைத்தான் துருப்புசீட்டாகப் பயன்படுத்தி கமிஷனரிடம் புகார் கொடுத்து ஒப்பாரி வைத்துள்ளார் தயாநிதிமாறன்.
நாம் தீவிரமாக விசாரித்தவரையில் கேபிள் ஆபரேட்டர்கள் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டு ஹாத்வே நிறுவனத்தில் இணையும்படி கேட்கப்பட்டுள்ளனர். ஆனால் தயாநிதிமாறன் கூறியபடி கைதுசெய்யப்பட வில்லை. இதைத்தான் தயாநிதிமாறனால் தாங்கமுடியவில்லை. பேனை பெருமாளாக்கி, பெருமாளை பெருமலையாக்கும் அரசியல் கலையைகற்ற வரல்லவா தயாநிதிமாறன். கிஷோர் குமாரை போலீசார் அழைத்து அரைமணி நேரம் பேசியதையே அவர் அரசியலாக்கிவிட்டார். இதன் மூலம் தமிழக அரசு ஹாத்வேக்கு ஆதரவாக அடுத்தக்கட்ட முயற்சியில் இறங்குவதற்கு சாதுரியமாக செக் வைத்துவிட்டார்.
ஆனால் நம்மை பொறுத்தவரை தமிழக அரசு போலீஸ் மூலம் இப்படி ஒரு முயற்சியில் இறங்கிஇருக்க வேண்டியதில்லை. ஆனால் அதே சமயம் தயாநிதிமாறனால் அன்று அவரது போட்டியாளர்களுக்கு தரப்பட்ட உபத்திரவங்களில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இப்போது அரங்கேறி விடவில்லை. ஆனால் ஏதோ தலைமுழுகிப் போனது போல் தண்டோரா போட்டுவிட்டார்.
சன்தொலைக்காட்சி இப்போது சகலகட்சி தொலைக்காட்சியாகிவிட்டது. அதுவும் தி.மு.க விற்கு எதிரான எல்லாகட்சிகளுக்கும் ஏற்றதொரு ஊடகமாக, அவர்களே ஏற்கத்தகுந்த ஊடகமாக உருமாறி நிற்கிறது. ஆகவே இப்போது எஸ்.சி.வியுடனான மோதல் அல்லது தொழில்போட்டி என்பதை வெறும் தொழில்போட்டி என்பதாக விட்டுவிடாமல் அரசியலாக்கும் ஆயுதமாக மாற்றுகின்றனர் மாறன் சகோதரர்கள்.
கடந்த ஆண்டு மே மாதம் கலைஞர் குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்திற்குமான பிளவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சன்னுக்கு போட்டியாக அசுரவேகத்தில் சிலிர்த்தெழுந்து செப்டம்பர் மாதம் கலைஞர் டிவி களத்திற்கு வந்தது. இப்போது கலைஞர் குழுமத்திலிருந்து 'இசையருவி' சேனலும் இறக்கப்பட்டுவிட்டது. இவ்வளவு விரைவாக சேனல்கள் கொண்டு வரமுடிந்தவர்கள் அரசு கேபிள் கார்பரேஸன் விஷயத்தில் மட்டும் அதீத காலதாமதம் காட்டுவது ஏன்?
உண்மையில் இந்த இரு குடும்பங்களுக்கிடையிலான சண்டையில் நாட்டுக்கும், மக்களுக்கும் கிடைக்க கூடிய ஒரே நலன் அரசுகேபிள் கார்பரேஷன் தான். பலவிதங்களில் அதன் பயன்பாடு எதிர்பார்க்கப்படுகிறது.
  • எஸ்.சி.வி எனும் ஏகபோகத்தை உடைத்து மற்ற இந்தியநகரங்களில் உள்ளது போல் ஜனநாயக ரீதியான தொழில் போட்டியை அங்கீகரிப்பது.
  • அடிமைகளாக எஸ்.சி.வியின் கீழ் அழுத்தப்பட்டு தொழில்புரியும் ஆபரேட்டர் களுக்கு சுதந்திரகாற்றை சுவாசிக்கும் வாய்ப்பை வழங்குவது.
  • எஸ்.சி.வியால் தடைசெய்யப்பட்ட அல்லது பின்னுக்குத்தள்ளப்பட்ட மற்ற பல தமிழ்சேனல்களையும் மக்கள் பார்க்கும் வாய்ப்பை தருவது.
  • தொழில் போட்டி காரணமாக கேபிள் கட்டணங்கள் குறைந்து மக்கள் பலனடைவது.
  • தரம், சேவை போன்றவற்றை மதீப்பீடாக வைத்து தனியாரா? அல்லது அரசா? என்று தீர்மானிக்கும் வாய்ப்பை மக்களுக்கு வழங்குவது.

இவற்றையே சகலமக்களுக்கு எதிர்பார்த்திருக்கிறார்களேயன்றி தேவையற்ற சச்சரவுகளையல்ல. அதிகாரபலம், செல்வபலம், ஆட்பலம், மாபெரும் கட்டமைப்பு பலம், ஆபரேட்டர்களின் ஆதரவுபலம் என அனைத்து அம்சங்களும் அரசுக்கு சாதகமாக உள்ள நிலையில் சில சில்லறை வம்புகளில் சிக்கி அது தன்னை சேதாரப்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதே நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் எதிர்பார்ப்பு.

ஒட்டுமொத்த மக்கள் நலனை முன்நிறுத்தி செயல்படவேண்டிய அரசு சில தனி நபர்களின் விருப்பு, வெறுப்பிற்கோ,சொந்தபந்தங்களின் நிர்பந்தத்திற்கோ ஆட்பட ஆரம்பித்துவிட்டால் அத்தனை நல்ல அம்சங்களும் பாழாகிவிடும்.

கேபிள் ஆபரேட்டர்கள் என்றால் அது சென்னையில் உள்ளவர்கள் மட்டும் இல்லை. தமிழகம் முழுக்க சுமார் 40,000 பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அரசு கேபிள் கார்பரேஷனில் சென்னையைச் சேர்ந்த ஓரிரு சங்கங்களை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்திவிட்டு தமிழ்நாட்டின் மற்ற 80சதவிகித பகுதி ஆபரேட்டர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கங்களை அலட்சியப்படுத்த வேண்டியதில்லை.

இலவச தொலைக்காட்சி வழங்கும் போது அனைத்துகட்சிகுழு அமைக்கப்பட்டது போல அரசுகேபிள் கார்பரேஷனிலும் சகலகட்சி பிரதிநிதிகளும் அங்கம் வகித்தால் ஆட்சிகள் மாறினாலும் அது சார்புநிலை எடுக்காமல் செயல்பட சாத்தியப்படும்.

அதேசமயம் ஆபரேட்டர்களை அரசு வசப்படுத்த வரிபாக்கியை ரத்து செய்யும் முயற்சியில் இறங்காமல் கேபிள்நெட்வொர்க் தொழிலை ஒரு சிறுதொழிலாக அங்கீகரித்து முறைப்படுத்தி பாதுகாப்பு தரலாம். கேபிள் ஆபரேட்டர்கள் ஒன்றிணைந்து கூட்டுறவு அமைப்பை உருவாக்கி செயல்பட ஊக்கப்படுத்தலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக நவீனவிஞ்ஞான வளர்ச்சியை சாத்தியமாக்கும் Broad Band Internet கேபிள் இணைப்பு என்பது தான் வருங்கால தேவைகளை ஈடுசெய்யும். அதிலே கேபிள் கனெஷ்சன் மட்டுமின்றி தொலைபேசி, வீடியோ கான்பிரன்ஸ், கல்விச்சேவை என பலவற்றை குறைந்த செலவில் மிகத்துல்லியமாக தர இயலும். மத்திய அரசியல் அங்கம் வகிக்கும் தி.மு.க அரசிற்கு இந்த தொழில் நுட்பத்தை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களோடு இணைந்து செய்வது இயலாத ஒன்றல்ல.

விமர்சிப்பவர்களே வியந்து போற்றவேண்டுமென்றால், பொது நலன் ஒன்றைமட்டுமே கருத்தில் கொண்டு, காழ்ப்புணர்ச்சிகளை காலாவதியாக்கிகொண்டு கருமமே கண்ணாக அரசு கேபிள் கார்பரேஷன் செயலாற்ற வேண்டும்.

அரசு கேபிள் கார்பரேஷன் என்பது கானல்நீரா?

அல்லது கையில் கிடைக்கவிருக்கும் கனியா?

என்பதற்கு விரைவில் செயல்பாட்டின் மூலம் விடை தெரிய வேண்டும்.

**************

{இந்நிலையில் மாறன் சகோதரர்கள் அ.தி.மு.க அணிபக்கம் சாய்ந்துவிட்டது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். இது தி.மு.கவை திகைக்க வைக்க நடக்கும் நாடகமா? அல்லது தீர்மானகரமாக அ.தி.மு.க பக்கம் செல்ல எடுத்த முடிவா? என்பது இந்த கட்டுரை எழுதும் வரையில் தெளிவாக உறுதிப்படவில்லை. எப்படியாயினும் மாறன் சகோதரர்கள் அதி பயங்கர சுயநலவாதிகள், சந்தர்பவாதிகள் என்பது சந்தேகத்திற்கிடமின்றி மீண்டும், மீண்டும் நிருபணமாகியுள்ளது.

கருணாநிதியைப் பொறுத்தவரை மு.க ஸ்டாலினை 25 வருட கட்சிபணிக்குப் பிறகு தான் அமைச்சராக்கினார். அதேபோல் கனிமொழி என்ற அறிவுகூர்மையுள்ள பெண்ணை, தமிழ் உலகம் அறிந்த கவிஞரை சுமார் 20 ஆண்டுகளாக அரசியலில் இறக்காமல் தவிர்த்துவந்தார். ஆனால் தயாநிதிமாறனை ஆறே மாதத்தில் எம்.பியாக்கி உடனே மத்திய காபினெட் அமைச்சராக்கி, சோனியாவுடனேயே சுதந்திரமாகப் பழகும் வாய்ப்பை தந்தவர். இப்படி படிப்படியான வளர்ச்சிகாணாமல், எடுத்த எடுப்பிலேயே ஏற்றம் கொடுத்தது கருணாநிதி செய்த பெருந்தவறு. இந்தத் தவறு அவரது தலைமைக்கே பிரச்சினையானது. ஆயினும் தயாநிதியின் அமைச்சர் பதவியை திரும்ப பெற்றதைத் தவிர வேறு பெரிய நடவடிக்கைகளை அவர் எடுக்கவில்லை. தினகரனுக்கும் தமிழ்முரசிற்கும் தரும் அரசு விளம்பரங்கள் நிறுத்தப்படவில்லை. இன்னும் அறிவாளய வளாகத்தில் செயல்படும் சன் தொலைக்காட்சி அலுவலகமே இதற்கு சாட்சியாகிறது.

ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக மாறன் சகோதரர்கள் மாறியதில் கருணாநிதியின் பங்கு கணிசமானது. எனவே மாறன் சகோதரர்களின் மனமாற்றத்தை எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அளவுக்கு தான் ஜெயலலிதா கருதுவார். அதற்கு மேல் அ.தி.மு.க வில் மாறன் சகோதரர்களுக்கு ஒரு மதிப்பு கிடைத்துவிடாது. ஏனெனில் தீவிர விசுவாசிகளையே கூட அவ்வளவு சீக்கிரம் அங்கீகரித்து விடாத ஜெயலலிதா இது போன்ற சந்தர்பவாதிகளை, சந்தர்பத்திற்கு ஏற்ப தான் கையாளுவாரே தவிர சரியான வாய்ப்பை சாத்தியப்படுத்தமாட்டார். அவரே முடிவெடுத்து அவர்கள் அ.தி.மு.க வில் வெளிப்படையாக இணைந்தால் அது அவர்களின் அழிவுக்கு ஆரம்பமாகலாம். ஒரு வகையில் இது தமிழக மக்களுக்கும், நாட்டுக்கும் நன்மையே ஆகும். }

No comments: