Wednesday, November 6, 2013

தெலுங்கானா Vs சீமாந்திரா


                                                                                                                   -சாவித்திரிகண்ணன்

'ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமையும்' என மத்திய அரசு ஜீலை 30, 2013 அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு மத்திய அமைச்சரவை அக்டோபர்-3, 2013ல் ஒப்புதல் வழங்கியது.
இந்த அறிவிப்புகள் சுமார் 50ஆண்டுகளாக கொந்தளித்து வந்த தெலுங்கானா பகுதியில் அமைதி உருவாக அடித்தளமிட்டது. ஆனால் இது வரை அமைதியாக இருந்த ஆந்திராவின் கடலோர பகுதிகளை உள்ளடக்கிய சீமாந்திராவை சீற்றம் கொள்ள வைத்துள்ளது....

தெலுங்கானா போராட்ட வரலாறு:

சுதந்திர போராட்டத்திற்கு முந்தைய சுமார் 600ஆண்டுகளிலும் சரி, சுதந்திரப் போராட்டங்களின் போதும் சரி தெலுங்கானா பகுதிகள் மன்னராட்சிகளின் கீழ்தான் இருந்தன.

சீமாந்திரா பகுதிகள் வேறு சில மரபுவழி மன்னர்களின் கீழும், பிரிட்டிஷ் அரசின் நேரடி கட்டுப்பாட்டிலும் இருந்தன. இந்த வகையில் 1953 வரை சீமாந்திரா பகுதிகள் சென்னை மாகாணத்துடன் இருந்தன. ஆந்திரா உருவாகிய பிறகு முன்றறை ஆண்டுகள் கழித்தே பலத்த நிர்பந்தங்களால் தெலுங்கானா விசால ஆந்திரவின் விலாசத்திற்குள் வந்தது!


1956ல் இணைக்கப்பட்டபோது, 'விருப்பமில்லாவிட்டால் பிரிந்து போகலாம் என்ற உத்தரவாதத்தை அன்றைய பிரதமர் நேரு வழங்கினார். 13ஆண்டுகளில் இரு தரப்பிலும் அதிருப்திகள் அதிகரித்தன. இதையடுத்து தெலுங்கானாவை பிரித்து தங்களுக்கு தனிமாநிலம் தரவேண்டும் என்ற போராட்டம் 1969ல் பலமாக எழுந்தது. போராட்டங்களில் சுமார் 350பேர் உயிர்இழந்தனர்.

இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தெலுங்கானா பிரஜா சமிதியின் தலைவர் சென்னாரெட்டியை ஆந்திராவிற்கு முதலமைச்சராக்கி தெலுங்கானா போராட்டத்தை சமாளித்தது காங்கிரஸ் தலைமை.
ஆனால், மீண்டும் சில ஆண்டுகளில் இந்த கோரிக்கை மேன்மேலும் வலுப்பெற்றது. உயிரிழப்புகளும், சொத்திழப்புகளும் அதிகரித்தன! 
ஆந்திராவின் முக்கிய கட்சிகளும் அதன் தலைவர்களும் ஒவ்வொரு தேர்தலின் போதும் தெலுங்கானா பகுதி மக்களுக்கு தனிமாநிலம் தர ஆதரவு தெரிவிப்பதும், தேர்தல் முடிந்ததும் கண்டுகொள்ளாமல் விடுவதும் வாடிக்கையாக இருந்தது.

2001ல் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து பிரிந்துவந்து, தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி என்ற கட்சியை துவக்கினார் சந்திரசேகரராவ். அப்போது முதல் தெலுங்கானா போராட்டம் மீண்டும் தலை எடுத்தது. 

தெலுங்கானா கேட்பதற்கான காரணங்கள்; 

தெலுங்கானா பகுதிகளில் இருந்து தான் கிருஷ்ணா, கோதாவரி, முஷி போன்ற நதிகள் பாய்ந்தாலும் தெலுங்கானா தொடர்ந்து வறட்சி பகுதிகளாகவே வைக்கப்பட்டுள்ளது. அணைகட்டுகள், நீர்தேக்கங்கள் அனைத்தும் சீமாந்திரா செழிப்பதற்கே பயன்படுகின்றன...!

அரசின் உயர்நிலை பதவிகளில் 90% சீமாந்திராவினரும் 10% தெலுங்கானா பகுதியினரும் உள்ளனர். சாதாரண அரசு ஊழியர்கள் மட்டத்திலோ இது 80:20 என்பதாக உள்ளது. மக்கள் தொகையில் 40%மும், நிலப்பரப்பில் 42% மும்உள்ள தெலுங்கானா பகுதிக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவதாக மக்கள் நம்புகிறார்கள் கலாச்சாரம், மரபு, பண்பாடு, விழாக்கள், மொழிவழக்கு... என பலவற்றில் வேறுபட்டது தெலுங்கானா!

கட்சிகளின் நிலைபாடு;

தெலுங்கானா போராட்டதிற்கு முதன்முதலாக ஆதரவு தந்த தேசிய கட்சி பா.ஜ.க தான்!

1997ல் தெலுங்கானாவை ஆதரித்து பா.ஜ.க தீர்மானம் போட்டது. தடுமாறிய காங்கிரசோ 2004ல் ஒத்துக்கொண்டு பிறகு பின்வாங்கியது 2008ல் தனித்தெலுங்கானாவை ஆதரித்து தெலுங்குதேசம் மத்திய உள்துறை அமைச்சரிடம் கடிதம் தந்தது. டிசம்பர் 2012 அனைத்து கட்சி கூட்டத்திலும் தெலுங்கானா ஆதரவில் மாற்றமில்லை என்றது தெலுங்குதேசம்!

Y.S.R காங்கிரஸ் நடுநிலையாளராக இருந்தது. 
இந்திய கம்யூனிஸ்ட் தெலுங்கானாவை ஆதரித்து வருகிறது. 
மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டும், MIM என்ற இஸ்லாமிய கட்சியும் மட்டுமே ஆரம்ப முதல் தனி தெலுங்கானாவை எதிர்த்த கட்சிகளாகும்!

ஆனால் ஜீலை 30, தனி தெலுங்கானா அறிவிப்பிறகு பிறகு தெலுங்கு தேசமும், Y.S.R காங்கிரசும் எதிர்ப்பு நிலைபாடுகள் எடுத்துள்ளன.

"இருபக்க மக்களின் இணக்கத்தோடும், இனிமையோடும், பரஸ்பர நம்பிக்கையோடும் பிரிவினை நடந்தேற வேண்டும், நம்மை ஐதராபாத்தும், மொழியும் ஒன்று படுத்தும் அம்சங்களாயுள்ளன...! எனவே வாக்கு வங்கி அரசியலை மறந்து, புறந்தள்ளி நம்பிக்கையோடும், சுயசார்புடனும் செயல்படுவோம்.." என்கிறார்கள் ஆந்திர அறிவு ஜீவிகள், நடுநிலையாளர்கள், சமூக ஆர்வலர்கள்! நல்லதே நடக்கட்டும்.

தந்திடிவிக்காக,
செய்தியும், பின்ணணியும், 
08.10.2013

No comments: