Tuesday, November 12, 2013

காமன்வெல்த் சர்ச்சைகள்

                                                                                                              -சாவித்திரிகண்ணன்

இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் 53நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங் கலந்துகொள்வது குறித்து எதிர்ப்பான கருத்துகளும் ஆதரவான கருத்துகளும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

தமிழக கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.திக விடுதலைசிறுத்தை தமிழ்தேசிய அமைப்புகள் பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஃ இலங்கை அரசாங்கம் 2009ல் விடுதலைப்புலிகளுடனான போரில் அப்பாவி மக்களை ஈவிரக்கமின்றி கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்க காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது.

ஃ இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதன் மூலம் இலங்கைக்கு தர்மசங்கடத்தை உருவாக்கவேண்டும். என்று எதிர்ப்பவர்கள் தரப்பில் கூறிவருகிறார்கள்.

ஆனால் இந்திய வெளிஉறவுத்துறை அமைச்சகமும், தேசியபாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் போன்றோரும் பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தி வருகின்றனர். அதன் சாராம்சம்:

பிரதமர் கலந்து கொள்வதற்கான அவசியங்கள்;

 இம்மாநாட்டில் 53நாடுகளுனுடனான இந்தியாவின் உறவுகளை பலப்படுத்தும் வாய்ப்பை இந்தியா இழக்க கூடாது! இந்நாடுகளுடனான பொருளாதார, வர்த்தக பரிவர்த்தனை, கலை, கலாச்சார பரிமாற்றங்கள்.... போன்றவை முக்கியத்துவம் வாய்ந்தவை.

நமது அண்டைநாடுகளான பாகிஸ்தானின் தீவிரவாதபோக்குகள், சீனாவின் ஊடுருவல்கள் போன்றவற்றிக்கு எதிரான இந்தியாவிற்கு ஆதரவான கருத்தாக்கத்திற்கு இம்மாநாடு மிகவும் உதவும்.

 இலங்கை அரசுடன் நட்பு பாராட்டுவதன் மூலம் தான் அங்குள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா செய்துவரும் அளப்பரிய, அத்தியாவசிய உதவிகளை தொடரமுடியும்.

பா.ஜ.கவின் தேசியத்தலைமையும், "இந்தியாவின் நலம் சார்ந்து நாம் முடிவெடுக்கவேண்டும். இதில் பிரதமருக்கும், அரசுக்கும் தர்மசங்கடத்தை உருவாக்கவிரும்பவில்லை" என தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வதை இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான கண்ணோட்டத்துடன் தான் பார்க்கிறது. அத்துடன் தமிழகம் தவிர்த்த இந்தியாவின் மற்ற மாநிலகட்சி எதுவும் பிரதமரின் காமன்வெல்த் பயணத்தை எதிர்க்கவில்லை.

இலங்கையின் வட மகாணத்து முதல்வர் விக்னேஷ்வரன் இலங்கைக்கு பிரதமர் மன்மோகன்சிங் வருவதை வரவேற்றுள்ளார்.

தமிழகத்தில் சில கட்சிகளும், இயக்கங்களும் இலங்கைக்கு பிரதமர் செல்வதை எதிர்த்து ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் செய்கின்றனர். இதில் மாணவர்கள், இளைஞர்கள் தூண்டிவிடப்படுகின்றனர். தபால்நிலையங்கள் சிலவற்றில் பெட்ரோல் குண்டுகள் எறியப்பட்டுள்ளன. இப்படியாக இலங்கைத் தமிழர்களை ஆதரிக்கும் போட்டா போட்டியில் மாநிலகட்சிகள் தமிழகத்தை உணர்ச்சி கொந்தளிப்பில் ஆழ்த்துகின்றன.

ஆனால், இலங்கையில் உள்ள எந்த அமைப்பும், மக்களும் இந்தியா கலந்துகொள்வதை எதிர்த்து போராடவில்லை.

"இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பதை எதிர்க்கும் தமிழக கட்சிகள் இலங்கை வந்து உண்மை நிலையை அறியவேண்டும்" என்று இலங்கை அரசு தரப்பில் வேண்டுகோள் விடுவிக்கப்பட்டுள்ளது.

இவை ஒரு புறம் இருக்க, தமிழகத்தில் இளைஞர்கள், மாணவர்கள் போன்றோர் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீவிரமாக போராடும் சூழல் உருவாக்கப்பட்டு வருவதன் பின்னணியில் சில பிரிவினைவாத தீயசக்திகளின் கரங்கள் மறைந்துள்ளன.

ஜனநாயகத்தில் கருத்து தெரிவிக்கவும், போராடவும் அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் இந்திய தேசியத்திற்கு எதிராகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவுமான தமிழ்தேசிய கண்ணோட்டங்கள் தமிழகத்தில் இலங்கை பிரச்சினையை மையப்படுத்தி வலுப்பட்டு வருவது ஆபத்தானது...!


இந்தியாவின் தேசிய கட்சிகளும், மற்ற மாநிலகட்சிகளும், பெருந்திரளான இந்திய மக்களும் இந்திய நலன்களுக்கு எதிரான போக்கிற்கு ஆதரவு தரமாட்டார்கள்.

நமது தமிழக முதல்வர் அவர்களும் இந்திய இறையாண்மைக்கு எதிரான துவேஷ பிரச்சாரங்களை ஒரு போதும் அனுமதிக்கமாட்டார்.

தந்திடிவிக்காக
செய்தியும், பின்ணணியும்,
05.11 .2013

No comments: