Wednesday, November 6, 2013

இந்தியாவின் வறுமையும், வளமையும்



                                                                                                              -சாவித்திரிகண்ணன்


"உலகில் பட்டினியால் பரிதவிப்போரில் 27% பேர் இந்தியாவில் மட்டுமே வாழ்கின்றனர். அதாவது சுமார் 32கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இந்தியாவில் நாளும் பசியால் பரிதவிக்கின்றனர்" என்பது ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச உணவு கொள்கை ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலாகும்!

நமது திட்ட கமிஷன் வறுமைக்கு அளவுகோலாக நகரங்களில் நாளொன்றுக்கு 28.65 பைசா சம்பாதிப்பவர்களையும், கிராமங்களில் 22.43 பைசா சம்பாதிப்பவர்களையும் அறிவித்தது என்பதை நாம் நினைவில் நிறுத்தி பார்த்தால், வறுமையின் உக்கிரம் நம்மை உலுக்கிவிடும்.

உலகவங்கி தரும் புள்ளிவிபரக் கணக்கு படி இந்தியாவில் சுமார் 40% பேர் வறுமையில் உழல்கிறார்கள். வறுமைக்கு அளவுகோலாக நாளொன்றுக்கு ரூ 100சம்பாதிப்பவர்களை அளவுகோலாக்குகிறது உலக வங்கி. அந்த வகையில் ரூ 100 சம்பாதிப்பவர்களை சார்ந்து வாழும் குழந்தைகள், முதியோரையும் இணைத்து பார்த்தே இந்த மதீப்பீடு வழஙகப்பட்டுள்ளது எனக் கருதலாம்.

கொடிது கொடிது வறுமை கொடிது
அதினினும் கொடிது, 'இளமையில் வறுமை'.
என்பது ஔவையாரின் வைரவரிகள்!

ஐ.நாவின் அடுத்த தகவல் உலகில் வறுமையில் வாடிவதங்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியக் குழந்தைகள் என்கிறது! 
அந்த குழந்தைகளை ஈன்றெடுக்கும் தாய்மார்களில் சுமார் 50%த்தினர் நோஞ்சான்களாக இருப்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஊட்டசத்து குறைவால் சுமார் 18லட்சம் குழந்தைகள் இறக்கின்றனர்.

இந்தியாவில் அதிக மக்கள் பசிபட்டினியால் வாடும் மாநிலங்களாக மத்தியப்பிரதேசம், உத்திரபிரதேசம், ஜார்கண்ட், பீகார், ராஜஸ்தான், போன்றவை அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு வறுமையை ஒழிக்க, வாட்டும், பசிபட்டினி கொடுமைகளை அகற்ற இது வரை சுமார் 50வகையான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இன்றும் பல அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

ராஷ்டிரிய விகாஷ் யோஜனா
மகாத்மாகாந்தி தேசிய ஊரகவேலைவாய்ப்பு திட்டம்
பொதுவிநியோகத்திட்டம்
மதிய உணவுத்திட்டம்
தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம்....

போன்ற திட்டங்களுக்காக இது வரை பல லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளன. ஆனால், இவை வறுமையை அழித்ததாக தெரியவில்லை. ஆனால் இவற்றால் அதிகார மையங்களில் உள்ள சிலரும், அவர்களைச் சார்ந்தோரும் நன்றாக செழித்துள்ளார்கள் என்பது உண்மை.

இந்தியாவில் ஓராண்டில் 58,000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள உணவு பொருட்கள் உணவு கிடங்குகளில் விரயமாகின்றன. இது ஆஸ்திரேலியாவின் ஓராண்டுக்கான மொத்த உணவு உற்பத்தியின் மதிப்பாகும்!

இவை ஒரு புறமிருக்க, வறுமைக்கு நேர் எதிரான இந்தியாவின் செல்வச்செழுமை குறித்த சில தகவல்களையும் இணைத்தே நாம் இந்தியாவை பார்க்கவேண்டும்.
அந்த வகையில் உலகில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்டோர்களின் எண்ணிக்கையில் இந்தியா ஐந்தாம் இடம் வகிக்கிறது. இந்தியாவில் 1,53,000பெரும் கோடீஸ்வரர்கள் உள்ளனர்.

ஸ்விஸ் வங்கிகளின் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இதில் உலகின் சில பணக்கார நாடுகளே இந்தியாவைக் காட்டிலும் பின்தங்கியுள்ளது.

உலகில் வறுமையில் உழலும் எத்தியோப்பியாவை மிஞ்சும் வகையிலும், புருண்டி, எரித்திரியா, கமோரோஸ் போன்ற நாடுகளுக்கு இணையாகவும் வறுமையில் இந்தியர்கள் ஒரு புறம் வாடுவதும்,

உலகின் பணக்கார நாடுகளான இங்கிலாந்து, ஜெர்மன், ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையை காட்டிலும் இந்தியாவில் அதிக கோடீஸ்வரரக்ள் உள்ளனர் என்ற தகவலும், எவ்வளவு முரண்பாடாக இருந்தாலும், இது தான் இன்றைய இந்தியாவின் யதார்த்தமாக உள்ளது! 

தந்திடிவிக்காக,
செய்தியும், பின்ணணியும், 
15.10.2013

No comments: