Tuesday, November 12, 2013

தீபாவளி விபத்துகள் - ஒரு பார்வை

                                                                                                                      -சாவித்திரிகண்ணன்

தீபாவளித் திருநாள் பல விதங்களில் மகிழ்ச்சியை தருகிறது. அதே சமயம் மிதமிஞ்சிய மகிழ்ச்சியில் விழிப்புணர்வில்லாமல் செயல்படும்போது விபத்துகள் ஏற்பட்டு விபரிதங்கள் சம்பவிக்கின்றன.

ஆண்டுதோறும் ஒவ்வொரு தீபாவளி கொண்டாட்ட முடிவிலும் விபத்து குறித்த செய்திகள் இடம்பெறத் தவறுவதில்லை.

பெருநகரங்களில் தான் அதிக தீ விபத்துகள் தீபாவளி பட்டாசுகளால் சம்பவிக்கின்றன. பட்டாசுகளின் விற்பனை என்பது 20,000கோடி சந்தைக்குரியது!

ஃ டெல்லியில் ஒவ்வொரு தீபாவளியின் போதும் 210 முதல் 270 தீ விபத்துகள் சம்பவிக்கின்றன!

ஃ மும்பையில் 300முதல் 350தீவிபத்துகள்

ஃ கல்கத்தாவில் சராசரியாக 200 விபத்துகள்

ஃ ஹைதராபாத்தில் சராசரியாக 150 விபத்துகள்

ஃ சென்னையில் 50 முதல் 80விபத்துகள்

இந்த வகையில் இந்தியாவில் உள்ள 173 பெருநகரங்களைக் கொண்ட 28 மாநிலங்கள் 7யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய பிரதேசங்களில் பிரகாசமான ஒளிவெள்ள தீபாவளித் திருநாளை முன்னிட்டு சம்பவிக்கும் தீ விபத்துகள் 10,000லிருந்து 11,000வரை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தியாகும். பெரிதும், சிறிதுமாகத் தக்ீகாயம் படுபவர்களின் எண்ணிக்கை 10லட்சத்திற்கும் அதிகமாகும்!

ஃ தீ விபத்து சம்பவங்களில் மிகப்பெரும் பாலானவை அதாவது 80% மானவை ராக்கெட் வெடியால் நிகழ்கின்றன.

ஃ அக்கம்பக்கத்திலுள்ள வீட்டு ஜன்னல்களில் பாய்வது, ஒலைவேய்ந்த மேற்கூரைகளில் விழுவது, மின்வயர்களை தாக்குவது, மின்விளக்குகளில் பாய்வது.... என பல விதங்களில் ராக்கெட்வெடிகளால் விபத்துகள் சம்பவித்துள்ளன.

ஃ மிக நெருக்கமாக குனிந்து வெடிவைத்த வகையில் பலரது முகம் மற்றும் கண்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

ஃ ஆபத்துவிளைவிக்கும் பட்டாசுகளை குழந்தைகள் தன்னிசையாக கையாளும் போது விபத்துகள் சம்பவித்துள்ளன.

ஃ ரோட்டோரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்கள், சாலைகளை கடக்கும் வாகனங்கள் வெடிகளால் பதம் பார்க்கப்பட்டு பற்றி எரிந்துள்ளன.

எனவே தான் ஒவ்வொரு தீபாவளியன்றும் அரசு மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும் தீக்காயம் பட்டவர்களால் நிரம்பிவழிகினறன...

ஒரு சில மணித்துளிகளின் மகிழ்ச்சிக்காக நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கையோ அல்லது மற்றவர்களின் வாழ்க்கையையோ பெரும் பாதிப்புக்குள்ளாக்கி விடுகிறோம்.

தீபாவளியை ஒட்டிய மற்றொரு மருத்துவ ஆய்வு ஒவ்வொரு தீபாவளி பண்டிகையும் 50% சர்க்கரை நோயாளிகளை புதிதாக உருவாக்குகின்றன. ஏற்கெனவே சர்க்கரை பாதிப்பில் உள்ளோரில் 25% மனோரை அதி தீவிர நோயாளியாக்கி விடுகின்றன.

மிகப்பெரும்பாலான மக்களை அஜிரணகோளாறுகளுக்கு ஆட்படுத்துகின்றன. மண்ணீரலின் உயிர்ப்புத்திறனை மழுங்கடிக்கின்றன. கல்லீரலை பித்தப்படுத்துகின்றன.

இவையாவும் கடந்த கால சம்பவங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினைகளை நிர்பந்திக்கின்றன.


அதீதமான பட்டாசு புகையை சுவாசிப்பதால் சுவாசமும், நுரையீரலும் பாதிக்கப்படுகின்றன.

மித மிஞ்சிய வெடிச்சத்தங்கள் செவித்திறனை பாதிக்கின்றன.

எனவே, குறைந்த பட்டாசுகளோடும், அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை தவிர்க்கும் விதத்திலும் தீபாவளியை கொண்டாடுமாறு மருத்துவ நிபுணர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

நமது மாநில அரசும் பள்ளி மாணவர்களிடையே ஆங்காங்கே உள்ளாட்சி அமைப்புகளும் தீ விபத்து தவிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன.


செருப்புபோட்டுக் கொண்டு வெடிவைப்பது, தரமான பட்டாசுகளை வாங்குவது, வெட்ட வெளியில் வெடி வெடிப்பது, ஆபத்தான இடங்களை தவிர்ப்பது, கம்பிமத்தாப்பு, புஸ்வாணம், சங்குசக்கரம் போன்றவை எரிந்து முடிந்தவுடன் தண்ணீர் ஊற்றி அணைப்பது, அதிக நீளம் கொண்ட ஊதுபத்திகளை பயன்படுத்துவது... போன்ற முன்எச்சரிக்கைகள் விபத்துகளை தவிர்க்கும். ஒவ்வொருவர் வீட்டிலும் தீ விபத்து காயங்களுக்கான முதலுதவி பொருட்களை வைத்திருப்பது நலம் பயக்கும்.

தந்திடிவிக்காக
செய்தியும், பின்ணணியும்,
31.10 .2013

No comments: