Tuesday, November 12, 2013

கொத்துக் கொத்தாக மடியும் கால்நடைச் செல்வங்கள்...!



                                                                                                                       சாவித்திரிகண்ணன்

நடமாடும் தெய்வங்களாக விவசாயிகளால் போற்றப்படும் கால்நடைகள் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடும் ஆபத்தை சந்தித்து வருகின்றன.

காற்றிலும், தண்ணீர் வழியாகவும் பரவும் ஒரு வகை 'O' வைரஸ் கிருமிகள் கர்நாடகத்திற்கு அடுத்து தற்போது தமிழக கால்நடைகளை பதம் பார்த்து வருகின்றன.

கர்நாடாகாவில் இறந்த கால்நடைகள் சிலவற்றை அங்கே காவிரியில் வீசி எறிய, காவேரி வழியே கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருச்சி, தஞ்சை மாவட்டங்களை தாக்கிய ஒரு வகை கால்நடை கோமாரி நோய் தற்போது ஈரோடு, கடலூர் போன்ற மேற்கு வடக்கு தமிழகத்திற்குள்ளும் தன் தாக்குதலை தொடங்கிவிட்டது.

கிருஷ்ணகிரியில்           -2,500 கறவை மாடுகள்
தர்மபுரியில்                       -3,000 கறவை மாடுகள்
நாகைமாவட்டத்தில்       -2,500 கறவை மாடுகள்

என நீண்ட பட்டியல்படி, இது வரை தமிழகத்தில் 10,000க்கு மேற்பட்ட கால்நடைகள் களப்பலியாகியுள்ளன..! 

மூக்கு சுவாச துவாரங்களில் புண்கள், கால்களின் நகங்களுக்கிடையே புண்கள் என அறிகுறிகள் தென்படுகிறது. மாடுகளின் தாடைவீங்குகிறது, வாயில் நுரை கொட்டுகிறது. இதற்கு பின் 2முதல் 6நாட்களுக்குள் மாடுகள் இறந்துவிடுகின்றன.

தங்கள் வாழ்வாதாரமாக கருதிய மாடுகளை பறிகொடுத்துவரும் விவசாயிகள் மிகவும் அதிர்ந்து போயுள்ளனர். அவர்கள் பறிகொடுத்தது கால்நடைகளை மட்டுமல்ல, தங்கள் வாழ்க்கையையும் தான்!

இந்தத் துயரத்திலிருந்து அவர்களை மீட்க அரசுதான் நிவாரண உதவி தரவேண்டும். ஆனால் இது வரை அரசு அறிவிக்கவில்லை.
அது மட்டுமல்ல, இந்த நோயைத் தடுக்கும் சரியான மருந்தும், சிகிச்சை முறையும் அரசிடமில்லை. அரசு தரும் சிகிச்சைகள் ஓரளவு மட்டுமே பலனளித்துள்ளன என்றும் விவசாயிகள் கூறுகிறார்கள்.

புதுதில்லியில் செயல்படும் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் உயிர்தொழில்நுட்ப பிரிவு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்திற்கு ரூ 23லட்சம் மதிப்புள்ள கால்நடைநோய்களை கண்டறியும் நவீன கருவிகளை தந்துள்ளது. ஆனால், இது வரை எந்தப் பலனும் இதனால் தமிழக கால்நடைகள் காணவில்லை. தமிழகத்தில் 20கால்நடைநோய் புலனாய்வு பிரிவுகள் உள்ளன. ஆயினும் இந்த நோயை வருமுன் தடுக்கவோ, வந்தபின் குணப்படுத்தவோ இயலாத அவலம் தொடர்கிறது.

தமிழகத்தில் உள்ள பசுக்களின் எண்ணிக்கை           -1கோடியே 11லட்சத்து 89,000
தமிழகத்தில் உள்ள எருமைமாடுகளின் எண்ணிக்கை       -20லட்சத்து 9,000
தமிழகத்தில் உள்ள செம்மறி ஆடுகள் எண்ணிக்கை           -79லட்சத்து 91,000
தமிழகத்தில் உள்ள வெள்ளாடுகள் எண்ணிக்கை                -92லட்சத்து 75,000

இவற்றை பராமரிக்க, மருத்துவ சிகிச்சை தருவதற்கு தேசிய வேளாண் ஆணையப் பரிந்துரையின் படி 3,255கால்நடை நிலையங்கள் தேவை. ஆனால் இருப்பதோ - 2,500தான்! அதிலும் கால்நடை ஆய்வாளர்கள், உதவி மருத்துவர்கள், பணியாளர்களின் பணி இடங்கள் ஆயிரக்கணக்கில் நிரப்பப்படாமல் உள்ளன.

கால்நடைகளை பேராபத்து சூழ்ந்துள்ள இந்தச்சூழலில் போர்கால நடவடிக்கையோடு அரசு இயந்திரம் செயல்படுவதற்கு இது பெரும் பின்னடைவைத் தந்துள்ளது. எனினும் தமிழக அரசு பல இடங்களில் கால்நடை சிறப்பு முகாம்களை அமைத்து செயல்பட்டுவருவதை மறுக்க முடியாது.

இந்நிலையில் இந்த நவீனநோயை நமது பாரம்பரிய மருத்துவத்தால் மட்டுமே குணப்படுத்த இயலும் என்றும், இது போன்ற நோய் தாக்குதலுக்கு நமது பாரம்பரிய மாடுகள் பலியாவதில்லை கலப்பின முறையில் செயற்கையாக கருத்தறித்து உருவாக்கப்பட்ட மாடுகளே எளிதில் பலியாகின்றன என்றும் கால்நடை மருத்துவ நிபுணர்கள் கூறி உள்ளது கவனத்திற்கு உரியது.

தமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தை அணுகியபோது அவர்கள் தெரிவித்த நமது பாரம்பரிய மருத்துவ அணுகுமுறைகள் நல்ல பலன்களை தந்துள்ளது என சில விவசாயிகள்தெரிவித்தனர்.

அதன்சாராம்சம் இது தான்; வெந்தயம், சீரகம், மிளகு ஆகியவற்றை தலா 2டீஸ்பியுன் எடுத்து ஊறவைத்து மஞ்சள்பொடி, நாட்டுச்சக்கரை, தேங்காய், பூண்டு சேர்த்து அரைத்து மாடுகளுக்கு தருவது நல்ல பலனளிக்கின்றது. அத்துடன் 1லிட்டர் நல்லெண்ணெயில் துளசி, வேப்பிலை, மஞ்சள், குப்பைமேனி, மருதாணி கலந்து கொதிக்கவைத்து ஆறிய பின் மாடுகளின் கால்களிலும், முகத்திலும் தேய்த்தால் நோய் கிருமிகள் விலகிவிடும்.

இதனை தமிழக அரசு விளம்பரம் செய்யலாம். கால்நடை மருந்தகங்களிலும் வழங்கலாம். 


தந்திடிவிக்காக
செய்தியும், பின்ணணியும்,
12.11 .2013 

No comments: