Tuesday, November 12, 2013

அரபுநாடுகளில் அல்லல்படும் இந்தியர்கள்



                                                                                                                     -சாவித்திரிகண்ணன்

'அரபுநாடுகள் சென்றால் அதிகமாக சம்பாதிக்கலாம்' என்று அங்கு தங்கள் உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு சென்ற இந்தியர்கள் இப்போது கடும் பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்! 

அரபு நாடுகளான சவூதி அரேபியா, ஒமன், குவைத், சிரியா, லெபனான், ஐக்கிய குடியரசு, கத்தார் பக்ரைன், அபுதாபி ஆகியவற்றில் சுமார் 24லட்சம் இந்தியர்கள் தங்கள் உழைப்பை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது அந்நாடுகளில், 'அயலவர்களால் சொந்த நாட்டு மக்களுக்கே வேலையில்லாமல் போகிறது' என்ற குற்றச்சாட்டுகள் வலுத்ததால் ஒவ்வொரு நிறுவனத்திலும் மண்ணின் மைந்தர்களுக்கு குறிப்பிட்ட சதவிகிதப் பணியிடங்கள் தரவேண்டும் என அந்நாட்டு அரசுகள் சட்டம் கொண்டு வந்துள்ளன.

இந்நாடுகளில் இந்தியர்கள் மட்டுமின்றி பாகிஸ்தானியர், இலங்கையினர், பிலிப்பைன்ஸ் நாட்டினர், வங்கதேசத்தினர்... என ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் வேலைசெய்துவருகின்றனர்.

அரபுநாடுகளில் வேலைபார்பதில் வளரும் நாடுகளிலுள்ள ஏழை, எளிய உழைப்பாளிகள் இடையே போட்டாபோட்டிகள் உருவானதைத் தொடர்ந்து அங்கு சம்பளக் குறைப்புகள், அலைகழிப்புகள், அவமானங்கள்... என பல நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன.

"வேலைசெய்யும் பணிப்பெண்களை சித்தரவதைசெய்தல், உழைப்பாளர்களிடம் 15மணிநேரத்திற்கும் மேலாக வேலைவாங்குவது, பொய்குற்றச்சாட்டுகள் சுமத்தி சம்பளம் தராமல் ஏமாற்றுவது, செய்யாத குற்றத்திற்கு கடும் தண்டனை அளிப்பது.. என பலவித மனித உரிமை மீறல்கள் அரபுநாடுகளில் நடக்கின்றன" என்பதை 2004லேயே உலகமனித உரிமை அமைப்பும், அம்னெஷ்டிக் இண்டர்நேஷனலும் உலகத்திற்கு வெளிபடுத்தின.

இந்தியப் பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் வயலார் ரவி இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மை தான் என்றார். அரபு நாடுகளிலுள்ள இந்திய தூதரங்களில் இது போன்ற புகார்கள் குவிக்கின்றன என்பதையும் அமைச்சர் புள்ளி விபரங்களோடு வெளியிட்டார்.

குவைத் இந்திய தூரதரகத்தில் -3087 புகார்கள்
சவூதி அரேபிய தூரதரகத்தில் -2547 புகார்கள்
ஒமனிலுள்ள தூரதரகத்தில் - 2183 புகார்கள்
பக்ரைனிலுள்ள தூரதரகத்தில் -812புகார்கள் என பட்டியலிட்டார்

அரபு நாடுகளில் மனித உரிமை மீறல்கள், கெடுபிடிகள் தொடர்பாக 10லட்சம் வெளிநாட்டினர் தத்தம் நாடு திரும்பி உள்ளனர். வேலை இழந்த வகையில் சவூதி அரேபியாவில் இருந்து 1,35,000இந்தியர்களும், குவைத்திலிருந்து 5,000பேரும் இந்தியாவிற்கு திரும்பியுள்ளனர். இன்னும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் திரும்பவரக்கூடும் எனவும் தெரிகிறது.

வெளிநாடுகள் சென்று தங்கள் கடும் உழைப்பால் இந்தியாவிற்கு பலநூறுகோடி அந்நியச் செலவாணி ஈட்டித்தரும் இந்தியர்கள் விஷயத்தில் நமது இந்தியத் தூரதரகங்கள் சரியாக அக்கரை காட்டுவதில்லை என்று புகார்கள் அங்குள்ளவர்களால் அடிக்கடி வைக்கப்பட்டுள்ளன.

பிலிப்பைன்ஸ் நாடு தன் குடிமக்கள் அரபுநாடுகளில் வேலைசெய்வதற்கு அங்குள்ள நிறுவனங்களுக்கு திட்டவட்டமான விதிமுறை வகுத்து அளித்துள்ளது. அதில் குறைந்தபட்சம் இவ்வளவு சம்பளம் இருக்கவேண்டும், வேலைநேரங்கள், விடுமுறைநாட்கள் போன்றவற்றை உறுதிபடுத்துகிறது. அது போன்ற அணுகுமுறைகளை இந்தியாவும் மேற்கொள்ளும் பட்சத்தில் இந்திய உழைப்பாளிகளின் துயரம் முடிவுக்கு வந்து கண்ணியம் காப்பாற்றப்படும்.

இது தவிர முறையான விசா இல்லாதவர்கள், விசாமுடிந்தவர்கள், கொடுமைகளுக்கு ஆட்படுத்தப்பட்டு உழல்பவர்கள் ஆகியோரை இந்தியாவிற்கு விரைவில் திரும்ப அழைக்க இந்திய அரசு முயற்சிக்க வேண்டும்.

நம் இந்திய மக்களின் கடும் உழைப்பால், அர்ப்பணிப்பால் அரபுநாடுகள் செழித்தது போதும்! இந்திய மண்ணும் வளம் பெறட்டுமே. உழைக்கும் மக்கள் சொந்த நாட்டிற்கே பாரமாக முடியுமா என்ன? அவர்களை முறையாக பயன்படுத்திக் கொள்ள மத்திய, மாநில அரசுகள் திட்டமிடவேண்டும்!

அரபுநாடுகளில் வேலைக்குச் சென்ற இந்தியர்கள் 24லட்சத்தில், கேரளத்தவர்கள் மட்டுமே 13லட்சம், தமிழர்கள் 6லட்சம் என்பதால் இரு மாநில அரசுகளும் இதில் அக்கறை காட்டவேண்டும்.

தந்திடிவிக்காக
செய்தியும், பின்ணணியும்,
11.11 .2013 

No comments: