Saturday, September 1, 2012

அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் தண்டனைகளால் தடுக்கமுடியுமா?



                                                                                                                      -சாவித்திரிகண்ணன்

பாலியல் குற்றங்களை தடுக்க தண்டனைகளை அதிகப்படுத்தி அனுமதி வழங்கியுள்ளது மத்திய அமைச்சரவை!

ஏற்கெனவே உள்ள சட்டங்கள் போதுமானதல்ல, எனவே சட்டங்களை வலுப்படுத்தி, தண்டனைகளை கடுமையாக்க வேண்டும் என பல பெண்கள் அமைப்புகள், தேசிய பெண்கள் ஆணையம் போன்றவை வலியுறுத்தி வந்தன. இதைத்தொடர்ந்து கடந்த ஏழாண்டுகால ஆய்வுக்கு பிறகு பெண்களுக்கு எதிரான குற்றவியல் சட்டம் 2010 மசோதாவிற்கு தற்போது மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி பாலியல் குற்றங்களில் சம்மந்தப்படுபவர்களுக்கு குறைந்த பட்சம் ஏழாண்டு சிறை தொடங்கி அதிகபட்சம் 12 ஆண்டுகள் அல்லது ஆயுள் தண்டனை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இத்தண்டனை ஆண்,பெண் என இருபாலருக்கும் பொதுவாக்கப்பட்டுள்ளது தான் தற்போதைய சட்டத்தின் இதுவரையில் இல்லாத அம்சமாகும்.

அத்துடன் ஆசைக்கு உடன்படமறுப்பவர் மீது ஆசிட்வீசுபவர்களுக்கு 10 ஆண்டுகள் தண்டனையும், மனநலபாதிப்புள்ளவர்களையோ, உடல் ஊனமுற்றவர்களையோ பலாத்காரமாக பாலியல் செய்தால் 12 ஆண்டுகள் தண்டனையும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டிருக்கும் பாலியல் குற்றங்களே இத்தகைய கடுமையான சட்டங்களுக்கு காரணம் என்கிறது. மத்திய அரசு, அந்த வகையில் சமீபத்திய புள்ளிவிபரங்களின் ஒராண்டில் நமது நாட்டில் சுமார் 2,50,000பாலியல் குற்றங்கள் பதிவாகின்றன.
ஆனால் பதிவாகத பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை இதைவிட மிக அதிகமாக இருக்ககூடும்!

எனவே கடுமைான சட்டங்கள் தேவை தான்!
ஆனால் தண்டனைகளால் மட்டுமே எந்த ஒரு குற்றத்தையும் பெருமளவோ அல்லது முற்றாகவோ முடிவுக்கு கொண்டுவர முடியாது.

சமீபத்திய ஒரு ஆய்வு 'பாலியல் குற்றத்தில் தண்டிக்கப்பட்டு விடுதலையானவர்களில் பெரும்பாலோர் மீண்டும் அக்குற்றத்தில் ஈடுபடுகிறார்கள்' என்கிறது . ஆனால் அவர்கள் மீண்டும் அக்குற்றத்தில் ஈடுபடும் போது எச்சரிக்கையாக தடயங்களை அழிக்கிறார்கள் அல்லது பாலியல் தேவை முடிந்ததும் சம்மந்தப்பட்ட பெண்ணை கொலை செய்துவிடுகிறார்கள்! என்கிறது. அந்த ஆய்வு!

ஆக, தண்டனையிலிருந்து தப்ப மேலும் அதிக குற்றங்களை செய்ய தயங்குவதில்லை குற்றவாளிகள்.

சில அரபுநாடுகளில் பாலியல் குற்றம் செய்பவர்களை நடுவீதியில் மக்கள் மத்தியில் நிறுத்தி கொல்கிறார்கள். ஆனபோதிலும் அங்கும் குற்றங்கள் நடந்தவண்ணமே உள்ளன.

பாலியல் குற்றச்சாட்டில் படித்தவன், படிக்காதவன், ஏழைநாடு, பணக்காரநாடு என்ற பாகுபாடெல்லாம் இல்லை. உண்மையில் இது மனித உடலின் ஹார்மோன்கள் செய்யும் நிர்பந்தம். இந்த அகவியல் தேவையை அடுத்தவர்களை பாதிக்காதவண்ணம் நிறைவேற்றிக் கொள்ளும் அறிவும், பக்குவம் தான் அவசியம்!

அதற்கான பயிற்சியை, கல்வியை கலாச்சரத்தின் மூலம், பண்பாட்டின் மூலம் வளர்ந்தெடுக்க வேண்டும். இதில் தனிமனிதன், குடும்பம், நண்பர்கள், உறவுகள் எனும் சுற்றம், சமூகம் அனைத்திற்குமே பொறுப்புண்டு. ஆனால் துரதிர்ஷ்டவசம் 'யூத்' என்றழைக்கடும் 'இளைய சமுதாயம்' நம் நாட்டில் தற்குறிகாக உருவாகிக் கொண்டுள்ளனர். குடும்ப கட்டமைப்புகளும், அதன் மேன்மைகளும் குலைந்து கொண்டுவருவதும் இக்குற்றங்கள் அதிகரிக்க காரணமாகின்றன.

காமம் என்பது குற்றமல்ல. காமம் மனிதகுலத்தின் இன்றியமையாத தேவை. மனிதகுலம் உயிர்ப்போடு வாழ்வதற்கான உந்துசக்தி! அதுதான் தலைசிறந்த காவியங்கள், கலைகளின் பிறப்பிடம்!
எனவே பாலியல் குற்றங்களுக்கான கடுமையான தண்டனைகள் மட்டுமே போதுமானதல்ல. அந்த தண்டனைகள் விரைந்து வழங்கப்பட்டால் இன்னும் வரவேற்கலாம்! அதே சமயம் பாலியல் குற்றங்களை பெருமளவு குறைப்பதற்கான மாற்று முயற்சிகள் நிறையவே தேவைப்படுகின்றன!
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
20-7-2012

No comments: