Monday, September 24, 2012

குஜராத் - நரோபாட்டியா வழக்கம், தீர்ப்பும்!


-சாவித்திரிகண்ணன்
 
 
குஜராத் கலவரம் தொடர்பான வழக்குகளில் ஒன்றையடுத்து ஒன்றென தற்போது தீர்ப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இப்போது தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் நாரோடா பாட்டியா என்ற இடத்தில் நடந்த படுகொலைகள் தொடர்பான வழக்கும், தீர்ப்பும் நீதிமன்றம் சந்தித்த, "அரிதினினும் அரிதான ஒன்று" என நீதிபதிகளே கூறியுள்ளனர்.
 
ஆம்! இந்த வார்த்தைக்குள் மிகுந்த அர்த்தம் பொதிந்துள்ளது. குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் 59பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்டதாக 94 பேர் கைதாயினர். விசாரணை முடிவில் வெளியான தீர்ப்பில் இதில் 11முஸ்லீம்களுக்கு தூக்கு தண்டனையும், 20 முஸ்லீம்களுக்கு ஆயுள்தண்டனையும் வழங்கப்பட்டது. மற்ற 63பேர் விடுவிக்கப்பட்டனர்.
 
ஆனால் கோத்ரா சம்பவத்திற்கு பிறகான கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக இரண்டாயிரத்திற்கும் அதிகமான வழக்குகள் பதிவாயின. அவற்றில் மிகப்பெரும்பாலானவை குஜராத் காவல் துறையால் விசாரணைக்கு உட்படுத்தப்படாமலே உதாசீனப்படுத்த பட்ட நிலையில் உச்சநீதிமன்றம் தலையிட்டு சுமார் 1600 வழக்குகளை விசாரிக்க ஆணையிட்டது. ஆனபோதிலும் அதில் 117 வழக்குகளே நடத்தப்பட்டன. அதிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதிய ஒன்பது வழக்குகளை உச்சநீதிமன்றம் தன் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து விசாரித்தது. அதில் இந்த வழக்கும் ஒன்று.
இந்த வகையில் 2009ஆம் ஆண்டு தான் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மாநில அரசின் கெடுபிடிகள், காவல்துறையின் ஒத்துழைப்பின்மை, முக்கிய குற்றவாளிகள் உடனுக்குடன் ஜாமினில் வெளியாகி சாட்சிகளை மிரட்டி கலைக்க முயன்றது... என மொத்தத்தில் அதிகாரம்,பணம் என பல இடையூறுகளை இந்த வழக்கு எதிர்கொண்டது. இந்த பின்னணியில் இப்போது அலகாபாத் நீதிமன்றம் இவ்வழக்கில் தீர்ப்பை தந்துள்ளது. இதில் பா.ஜ.கவின் முன்னாள் அமைச்சரான மாயாகோத்னானிக்கு 28 வருட ஜெயில் தண்டனையும், பஜ்ரங்தள் தலைவர் பாபு பஜ்ரங்கிக்கு இறக்கும் வரை சிறை வாசத்தையும் வழங்கி மற்ற 30பேருக்கு கடுமையான ஆயுள்தண்டனையும் தரப்பட்டுள்ளது.
 
97பேர் கொடூரமான முறையில் - அடையாளம் தெரியாத வகையில் - எரித்தும் கத்தியால் சிதைத்தும் கொல்லப்பட்ட இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளது வரவேற்க்கத்தக்கது.
 
கொலை எனும் மாபாதகத்தை செய்பவர்கள் யாராயிருந்தாலும் எந்த மதம், எந்தகட்சி, எந்த இனம் சார்ந்தவராக இருந்தாலும் கொலைகாரர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே!
 
குஜராத் கலவர வழக்கில் பெஸ்ட் பேக்கரி - குல்பர்க்சொஸைட்டி, நாரோடாகா சர்தார்புரா, ஒதே படுகொலைகள், நரோடியா பாட்டியா.... போன்ற முக்கிய வழக்குகள் மிகவும் கவனம் பெற்றவை!
 
இதில் பெஸ்ட் பேக்கரி வழக்கில் காங்கிரஸ் எம்.பி. இஹ்ரான் ஜாப்ரி உள்ளிட்ட 69பேர் கொல்லப்பட்ட வழக்கில் முதல்வர் நரேந்திரமோடி பெயர் பலமாக அடிபட்டு, இறுதியில் அவர் விடுவிக்கப்பட்டார்.
 
33பேர் படுகொலையான சர்தார்புரா வழக்கில் 31பேருக்கு ஆயுள்தண்டனை உறுதி செய்யப்பட்டது. 23 பேர் கொல்லப்பட்ட ஒதே படுகொலையில் 23பேர் குற்றவாளிகள் என தீர்பளிக்கப்பட்டது.
 
இந்த தீர்ப்புகளெல்லாம் அரசியல் அதிகாரம், பணம், உயிர்பயம்... என எவ்வளவு இருந்தாலும் நீதிமன்றங்கள் உண்மைகளை பாரபட்சமில்லாமல் நிலைநாட்டுகின்றன என்பதற்கான சில உதாரணங்களாக கொள்ளலாம்!
 
குஜராத் படுகொலைகள் விஷயத்தில் மதங்களை கடந்து நீதி நிலைநாட்டப்பட வேண்டும், உண்மைகள் வெளியாகவேண்டும் என பாடுபட்டவர்களில் அரசியல் சார்பற்ற சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், வழக்குறைஞர்கள் தங்கள் பதவியை தூக்கி எறிந்து உண்மையை வெளிக்கொணர்ந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள்... என பல ஈரமுள்ள இதயங்களுக்கு அவர்களது அச்சமற்ற அர்பணிப்புணர்வுக்கு முக்கிய பங்குண்டு!
 
மகாகவி பாரதியின் சாகாவரம் பெற்ற கவிதையை நினைவு கூர்வோம் ஒன்றுளதுண்மை, ஒன்றுளதுண்மை - அதை
கொன்றிடலொண்ணாது! குறைத்திடலொண்ணாது!
 
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
31-8-2012    

No comments: