Sunday, December 16, 2012

எதிர்காலம் கேள்விக்குறியான எடியூரப்பா

                                                                                                                   -சாவித்திரிகண்ணன்

கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க அரசு பலவீனமடைந்துவிட்டது. சிலமணிநேரங்களிலோ, ஒரிரு நாட்களிலோ அதன் ஆட்சிகாலம் முடிவுக்கு வரக்கூடும்.

தென் இந்திய மாநிலங்களில் பா.ஜ.கவிற்கு கிடைத்த முதல் வாய்ப்பு மிகவும் பரிதாபகரமான நிலையை அக்கட்சிக்கு தோற்றுவித்துள்ளது. காங்கிரசின் மீது ஏற்பட்ட கசப்பும்,

மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மதில் மேல் பூனையான சந்தர்பவாதபோக்கும், கர்நாடகமக்களுக்கு பா.ஜ.கவின் மேல் கரிசனம் தோன்றக் காரணமாயிற்று. 224 எண்ணிக்கை பலத்தை கொண்ட சட்டசபையில் பா.ஜ.கவிற்கு மக்கள் 120எண்ணிக்கை தந்து ஆட்சி கட்டிலில் அமர்த்தினர்.

ஆட்சி ஏற்ற உடனேயே கட்சிக்குள் அடிதடி, உள்குத்து ஆரம்பமானது. அது கர்நாடக மாநில மக்களை பிரதிநித்துவப் படுத்தும் இரு பெரும் ஜாதிப்பிரிவின் உரசலாகவும் பார்க்கப்பட்டது.

இந்நிலையில் சுரங்க ஒதுக்கீட்டில் அரசுக்கு 16,000 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்படுத்தியது, தனது மகன்களுக்கு அரசு நிலங்களை சட்டவிரோதமாக வழங்கியது போன்ற குற்றச்சாட்டுகளை மாநில லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ்கௌடா விசாரித்து உறுதிபடுத்த, எடியூரப்பாவிற்கு பதவிவிலகும் நெருக்கடி ஏற்பட்டது.

ஆனால் அவ்வளவு சுலபமாக அவர் அசைந்து கொடுக்கவில்லை. தேசிய அளவில் ஊழலுக்கு எதிராக பா.ஜ.க பேசிவந்த நிலையில் கர்நாடகா பிரச்சினை அதற்கு கண்ணில் விழுந்த துரும்பாக உறுத்தியது. இறுதியில் ஒரு வழியாக எடியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.

லிங்காயத் சமூகத்தை பிரதிநிதித்துவ படுத்திய எடியூரப்பாவிற்கு பதில் அதே போன்ற வேறொரு பெரும்பான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்திய சதானந்தகௌடாவை முதல்வராக்கியது பா.ஜ.க மேலிடம்.

சதானந்தா கௌடா சிறப்பான நிர்வாகத்தை தந்த நிலையில் கர்நாடக அரசியலில் தனக்கான முக்கியத்துவம் குறைந்துவிடுமோ எனக்கருதிய எடியூரப்பா பல குடைச்சல்களை தந்தார். தன் சமூக ஆதரவு எம்.எல்.ஏக்களை திரட்டி படைபலத்தை காட்டி மேலிட்டத்தையே மிரட்டினார்.

இறுதியில் சதானந்தாவை சாய்த்துவிட்டு, தன் சமூகத்தை சார்ந்த ஜெகதீஸ் ஷெட்டரை முதல்வராக முன்மொழிந்தார்.

இந்நிலையில் அவரையும் நிம்மதியாக ஆட்சிசெய்யவிடாமல் கட்சியைப் பிளந்து புதிதாக கர்நாடக ஜனதா கட்சியை துவக்கி உள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விசயம் முன்பு எடியூரப்பா முதல்வர் பதவி விலக நிர்பந்திக்கப்பட்ட போது அவருக்கு ஆதரவாக கட்சியில் சுமார் 80 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். அவரால் முதல்வர்பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டவர் தான் சதானந்த கௌடா. பின்பு சதானந்த கௌடாவை அவர் சாய்க்க முயன்றபோது 55 எம்.எல்.ஏக்கள் ஆதரித்தனர். தற்போது தனிக்கட்சி தொடங்கி உள்ள நிலையில் 17எம்.எல்.ஏக்களே ஆதரித்துள்ளனர். தன்னால் முதல்வர் பதவி பெற்றவர்களே தன்னை நிராகரிக்கும் நிலைக்கு அவர் சென்றுள்ளார்.

எப்போது பா.ஜ.க மேலிடத்திற்கு எடியூரப்பா இடையூரப்பாவாக மாறினாரோ அப்போதிருந்தே அவரது ஆதரவுதளத்தை மெல்ல, மெல்ல அசைத்து குறைக்கத் தொடங்கிவிட்டது கட்சித்தலைமை!

இப்போது அவரால் அப்படியொன்றும் பெரிய ஆபத்தில்லை. ஆட்சிபோனாலும் கட்சியை காப்பாற்றி கரை சேர்த்துக் கொள்ளலாம் என்று பா.ஜ.க மேலிடம் தீர்மானித்துவிட்டது போலும்.

கர்நாடக மாநிலம் தேசிய நீரோட்டத்தில் எப்போதுமே இரண்டற கலந்தது. அங்கே சக்திவாய்ந்த மாநிலத்தலைவர்கள் வளர்ந்து வருவார்களே தவிர சக்திவாய்ந்த மாநில கட்சி அந்த மண்ணில் வேரூன்றியது இல்லை. ராமகிருஷ்ணஹெக்டேவை மிஞ்சியவரல்ல எடியூரப்பா!

ஆசை, அதிகாரம், பணபலம், ஜாதியப் பின்புலம் போன்றவை யதாரத்தங்களிலிருந்து எடியூரப்பாவை விலகிச் செல்ல வைத்துவிட்டது. தற்போது அவர், "காங்கிரஸ், மதச்சார்ப்பற்ற ஜனதா தளத்தை விட பா.ஜ.க ஆபத்தானது" என்கிறார். இதன்மூலம் அவர் பா.ஜ.க எதிர்ப்பு அரசியலை தெளிவாக எடுத்துள்ளார். பா.ஜ.கவை எதிர்பதற்கு காங்கிரஸ், மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் போன்றவை ஏற்கெனவே உள்ள நிலையில் இந்த மூவரில் யாருக்கு அதிக பலமோ அந்த கட்சியே மக்களின் ஆதரவைப் பெறும்!

40 ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ்.சின் அடித்தளத்திலிருந்து உருவாகி உயர்ந்த எடியூரப்பா தற்போது இந்து தத்துவத்தை எதிர்ப்பது போலவும், மதச்சார்பின்மைக்கு ஆதரவு போலவும் பேசிவருவதால் மக்கள் ஏற்றுவிடப் போவதில்லை. 'ஐயோ பாவம் இரண்டுங்கெட்டானாகிவிட்டாரே...' என்று வேண்டுமானால் இரக்கப்படலாம்.

புதிய கட்சி அரசியல் வானில், புஸ்வாணமாக மேலேந்து வரும்போது பேசப்படும்.... பிறகு...?

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
10-12-2012



No comments: