Friday, December 28, 2012

நில ஆர்ஜித மசோதா


                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

புதிய நில ஆர்ஜித மசோதா சட்டம் மத்திய அமைச்சரவையால் அங்கீரிக்கப்பட்டுள்ளது. 
இந்தியாவில் அவ்வப்போது பெரும் சர்ச்சையை உருவாக்கி கொண்டிருக்கும் நிர் ஆர்ஜித மசோதா பாராளுமன்ற அவைகளில் விரிவாக விவாதிக்கப் படாமல் அமைச்சர்கள் மட்டத்திலும் சோனியாகாந்தியின் வழிகாட்டுதலிலும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

நமது பழைய நில ஆர்ஜிதசட்டம் என்பது பிரிட்டிஷ் அரசால் 1894ல் கொண்டுவரப்பட்டதாகும். சுதந்திரத்திற்கு பிறகு இது வரை நாம் இந்த சட்டத்தையே எதிர்கொண்டுவருகிறோம். இது நமது அரசுகளுக்கு மிகவும் சௌகரியமாக இருக்கிறது. 
இந்த சட்டத்தின் மூலம் சுதந்திரத்திற்கு பிறகு முதல் 40 ஆண்டுகளில் நில ஆர்ஜிதம் செய்யப்பட்ட வகையில் சுமார் 22லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இவர்களில் 75 விழுக்காடு மக்களுக்கு இன்னும் மறுவாழ்வு தரப்படவில்லை காத்திருக்கிறார்கள்.

பொது நலன், அவசரமான திட்டம் போன்றவைகளை அமல்படுத்தும் போது நில ஆர்ஜித சட்டம் 5 ஏ பிரிவின் படி நில உரிமையாளர்களின் ஆட்சேபணைகளை பொருட்படுத்த தேவையில்லை என்பது சட்டத்திலேயே உள்ளது. உச்சநீதிமன்றமும் பல வழக்குகளில் இதை உறுதிபடுத்தி உள்ளது.

தற்போது துறைமுகசாலை விரிவாக்கத்திற்காக 160 மீனவக் குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்ட வழக்கில் அவர்களுக்கு மாற்று இடம் முறையாக வழங்குவதை உறுதிசெய்தால் போதுமானது என்பதே நீதிமன்றத்தின் பார்வையாக வெளிப்பட்டது.

மேற்கு௨வங்கத்தில் டாடா கார் நிறுவனத்திற்காக விவசாயவிளைநிலங்கள் 997 ஏக்கர் விவசாயிகளின் விருப்பமில்லாமல் மாநில அரசால் கையகப்படுத்தப்பட்டது பெரும் பிரச்சனையாக வெடித்தது. அது 30 ஆண்டுகால இடது முன்னணி அரசின் நீட்சியையே முடிவுக்கு கொண்டுவந்தது. 
நர்மதா நிதித்தண்ணீரை அணைகட்டி குடிநீருக்குப் பயன்படுத்தும் சர்தார்சரோவார் அணைதிட்டத்தில் இரண்டு லட்சம் மக்கள் வீடுகளை இழந்தனர். இதற்காக மேதாபட்கர், அருந்ததிராய் போன்றோர் மிகக்கடுமையாக மக்களை திரட்டி போராடியும் இன்று வரை அம்மக்களில் பெரும்பாலோருக்கு மறுவாழ்வு அமையவில்லை.

இந்தச்சூழல்களே இந்தியா முழுமையிலும் நிலவுகிறது. அதுவும் குறிப்பாக இந்தியப் பழங்குடியினரில் பத்தில் ஒருவர் தன்வாழ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தபட்டு அலைகழிபவராக உள்ளார்.

இந்நிலையில் புதிய நில அர்ஜித மசோதாவானது குடியிருக்கும் மக்களில் 70சதவிகித்தினரின் ஒப்புதல் கிடைத்தாலே அரசு - தனியார் கூட்டு திட்டப்படி நில ஆர்ஜிதம் செய்யலாம் என்கிறது. முன்பு 80 சதவிகிம் இருந்தபோதே எந்த பாதுகாப்பும் மக்களுக்கு கிடைத்ததில்லை என்பது கவனத்திற்குரியது. 

பெரும்பாலும் வனப்பகுதியிலும், மலைசார்ந்த பகுதியிலும் தற்போது நில ஆர்ஜிதம் என்பது வெளிநாட்டு சர்வதேச நிறுவனங்களுக்காகதான் நடக்கிறது. இந்த நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்காகவும், நமது இயற்கை வளங்களை சுரண்டி செல்வதற்காகவும் நமது மத்திய அரசு அவ்விடங்களில் வாழும் ஏழை, எளிய பழங்குடிமக்களை அப்புறப்படுத்தி வருகிறது. 

பொது நலன்களை முன்னிட்டு சில தனிநபர்கள் பாதிக்கப்படுவது தவறில்லை என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுக் கண்ணோட்டமே! நமது தர்ம சாஸ்திரங்களிலும் கூட இதுவே வலியுறுத்தப்படுகிறது. ஆனபோதிலும் நவீன ஜனநாயகத்தில் எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு முழு உத்திரவாதம் வழங்கப்பட்டு அவர்களை வாழும் இடத்திலிருந்து போகச் சொல்வது தான் நியாயமாக இருக்கமுடியும்.

அரசு நிர்வாகத்திற்கேயுரிய மெத்தனபோக்குகள், ஊழல் போன்றவை நிலம் தந்த மக்களை நிரந்தரமாக நிர்கதியான சூழலில் வைத்துவிடுவதை அனுமதிக்கக் கூடாது.

இவ்வளவு முக்கியமான மசோதா மக்களவையில் விவாதிக்கப்பட்டு மாற்று கருத்துகள் ஏதேனும் உள்ளதா என்பதனை அறிந்து முறைப்படி நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறாக இல்லாமல் நடைமுறைப் படுத்தப்பட்டால் எதிர்கட்சிகளின் எதிர்ப்பை அரசு சந்திக்கும் என்பதே நிதர்சனம். 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
14-12-2012

No comments: