Friday, October 26, 2012

தேசிய முதலீட்டு வாரியம்; தேவையா? தீமையா?


                                                                                                                      -சாவித்திரிகண்ணன்

மத்திய அமைச்சரவைக்குள் ஒரு மல்யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு அமைச்சர்களே, இந்த பரபரப்புக்கு காரணம். 'தீவிரமான பொருளாதார சீர்திருத்தத்திற்கு தீட்டப்பட்ட திட்டம் இது' என 'தேசிய முதலீட்டு வாரியத்தை' முன்மொழிந்தார் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.

இதன்படிஇனி, ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டிற்கு மேல் துவக்கப்படும் எல்லா பெரிய தனியார் நிறுவனங்களுக்கும். அனைத்து லைசென்சுகளும் விரைந்து வழங்கப்படும். ஒரு பெரிய தொழிலை துவங்குகிறவர் ஒவ்வொரு துரையாக விண்ணப்பித்து அனுமதி பெறுவதில் இருக்கின்ற தாமதத்தைத் தவிர்த்து, அவர்களுக்கு அனைத்து அனுமதிகளையும் வழங்கும் ஒரே வாரியமாக தேசிய முதலீட்டு வாரியம் செயல்படும். இதற்கு பிரதமர் தலைவராகவும், நிதிஅமைச்சரும், சட்ட அமைச்சர்களும் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள்..." என்பது ப.சிதம்பரம் பரிந்துரைத்துள்ள திட்டமாகும்.

இதை சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்திநடராஜன் மிகக்கடுமையாக விமர்சித்து பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
எல்லா துறைகளுக்கான கடமைகளையும், உரிமைகளையும் ஒரே ஒரு அமைப்பே கையில் எடுத்துக்கொள்ளுமானால் மற்ற துறைகளோ, மந்திரிகளோ எதற்கு?

இயற்கை வளங்கள், சுற்றுச்சூழலை ஒரு திட்டம் பாதிக்குமென்றால், மக்கள் நலன்களை, ஆரோக்கியத்தை ஒரு திட்டம் சீர்குலைக்குமென்றால் அதை தடுக்கின்ற பொறுப்பு சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு உள்ளது. ஜனநாயக நாட்டில் அதிகாரப்பரவலை அழிக்கும் விதத்தில், 'எடுத்தேன் - கவிழ்த்தேன்' என செயல்பட்டால் பாராளுமன்றத்திற்கு பதில் சொல்லப்போவது யார்? மக்களுக்கு பதில் சொல்லப்போவது யார்? எனவே அதிமோசமான பின் விளைவுகளை ஏற்படுத்ததக்க தேசிய முதலீட்டு வாரியம் தேவையற்றது..." என்று தீர்க்கமாக கூறுகிறார் ஜெயந்திநடராஜன்.

ஜெயந்தியின் வாதத்திற்கு வலுசேர்க்கும் வகையில் பழங்குடியின நலத்து அமைச்சர் கே.சி.தியாவும், ஏராளமான சுற்றுச்சூழல் ஆதரவாளர்களும் வரிந்து கட்டிக்கொண்டு மேற்படி வாரியத்தை எதிர்க்கின்றனர்.

அதே சமயம் மத்திய நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக பல பெரும் தொழில் அதிபர்கள் குரல் கொடுக்கின்றனர். இந்தியத் தொழிலதிபர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் C.I.I, Assocham, FICCI போன்ற அமைப்புகள் தேசிய முதலீட்டு வாரியத்தை வரவேற்கின்றன. இதற்கு இவர்கள் கூறும் காரணம், 'பற்பலதுறைகளிலிருந்தும் அனுமதி பெற வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், எண்ணிய இலக்கு ஈடேறாமல் போகிறது' என்பதே!

இந்த ஆதங்கம் நியாயமானது. விரைவில் சரிசெய்யப்படவேண்டியது என்பதில் யாருமே கருத்து வேறுபட முடியாது.
ஆனால், இந்த காலதாமத்திற்கான காரணங்கள் அரசுத்துறைகளின் இலக்கணமாகிப்போன அதீத அலட்சியப்போக்குகளும், ஊழல்களுமே!

எனவே இந்த இயல்பை மாற்றுகிற, இந்த இலக்கணத்தை உடைக்கிற அவசர, அவசிய அறுவைசிகிச்சை தான் இன்றைய தேவையாகும்!

ஏனெனில், இது போன்ற அணுகுமுறைகளால் இன்று பாதிக்கப்ப்ட்டிருப்பது பெரிய தொழில் அதிபர்கள் மாத்திரமல்ல. லட்சகணக்கான சிறு குறுந்தொழில் முகவர்களும் தான்! இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு குடிமகனுமே இதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு மாற்றாக ஒவ்வொரு லைசென்சுக்குமான காலக்கெடுவை கறாராக தீர்மானிக்கலாம், காலக்கெடு மீறிப்படுவதை கடும் தண்டைனைக்கு உட்படுத்தலாம்!

எனவே, எடுக்கப்படும் தீர்வு அனைவருக்கும் பொதுவாக அமைவதோடு இயற்கைசூழல்களுக்கோ, எளிய மக்களின் நலன்களுக்கோ எதிராக அமைந்துவிடக்கூடாது.

எனவே அரசுத்துறைகளின் அலட்சியத்தையும், ஊழலையும் பெரிய தொழில் அதிபர்கள் எதிர்க்க முன்வரவேண்டுமேயல்லாது, 'கரப்சனையே' தங்கள் காரியங்களை சாதிக்க கிடைத்த அனுகூலமாக கருதிவிடலாகாது.

மக்களின் நலன்களை பாதிக்கும் வகையில் அனுமதிக்கப்பட்ட தொழிற்திட்டங்கள் கடந்த காலத்தில் சந்தித்த அனுபவங்களுக்கு உதாரணங்களே நந்திகிராமம், சிங்கூர், வேதாந்தா, கூடன்குளம் போன்றவை. போபால் விஷவாயு கசிவு தந்த படிப்பினைகளையும் கவனத்தில் கொள்வோம். ஒரு ஜனநாயக நாட்டில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கூட்டுச் செயல்பாடு முக்கியம். அதிகார குவியல் ஆபத்தானது. கூட்டுச்செயல்பாட்டை புறக்கணித்து, அதிகார குவிமையத்தின் குறியீடாக பாரக்கப்படும் தேசிய முதலீட்டு வாரியம் தேவையற்றது. தவிரக்கவேண்டியது.

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
12-10-2012

No comments: