-சாவித்திரிகண்ணன்
இந்திய அரசின்
சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ரஹமான்கான் இஸ்லாமிய சமூகத்தின் சிந்தனைக்கு ஒரு அரிய
கருத்தைக் கூறி உள்ளார்.
"இந்தியாவில் இஸ்லாமியர்கள் மிகவும் பின்தங்கி
உள்ளனர் என அடிக்கடி நாம் சச்சார்கமிட்டியின் அறிக்கையை மேற்கொள் காட்டி பேசி
வருகிறோம். ஆனால் நம்முடைய பின்தங்கிய நிலைக்கு நாமும் கூட காரணமாயிருக்கிறோம்
என்பதை உணரமறுக்கிறோம்.
இந்தியாவில் வக்புவாரியத்திற்கு சொந்தமாக 4லட்சம்
ஏக்கர் நிலங்கள் உள்ளன. ஆனால் இதில்70%மானவை ஆக்கிரமிக்கப்பட்டும் விற்கப்பட்டும்,
அபகரிக்கப்பட்டும் உள்ளன. மிச்சமுள்ள 30%முமே கூட முறையாகப்
பயன்படுத்தப்படுவதில்லை.
அப்படி முறையாகப் பயன்படுத்தினாலே கூட போதும்
இஸ்லாமிய சமூகம் இந்தியாவில் நன்கு வளமாக வாழும். இதில் 500
கேந்திரியவித்யாலயாபோன்ற சிறந்த பள்ளிக்கூடங்ளை
நடத்தமுடியும்"
திரு.ரஹமான்கான் அவர்கள் இப்போது மட்டுமல்ல, தொடர்ந்து
இக்கருத்தை இஸ்லாமிய சமூகத்திடம் வலியுறுத்தி வருகிறார்.
'யானைக்கு தன் பலம்
தெரியாது' என்பது போல இஸ்லாமிய சமூகம் இருப்பதால் அது அரசியல் அமைப்புகளின்
ஓட்டுவங்கியாக மட்டும் மாறிப்போனது.
இந்தியாவில் வக்புவாரியத்திற்கான
சொத்துமதிப்பு என்பது இந்திய பாதுகாப்புதுறை மற்றும் இந்திய ரயில்வேதுறைவசம்
இருக்கும் நிலங்களுக்கு அடுத்த நிலை மதிப்பு கொண்டதாகும்.
இது தவிர
வக்புவாரியத்திற்கு சுமார் 3லட்சம் கட்டிடங்கள் உள்ளன.
இவை அனைத்தின்
மதிப்பு 12,000லட்சம் கோடி!
ஆனால், வக்புவாரியங்களோ இன்னும் மத்திய, மாநில
அரசுகளிடம் கையேந்தும் அமைப்புகளாக உள்ளன.
காரணம் வக்புவாரிய சொத்துகளை
இஸ்லாமிய சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்கள், அரசியல் செல்வாக்குள்ளவர்கள்
ஆக்கிரமித்து உள்ளதும், பொறுப்பில் உள்ளவர்கள் அதை மிகக்குறைந்த விலைக்கு
விற்பதும், குத்தகைக்கு விடுவதும் தான்!
1954லும், 1995லும் வக்புவாரிய
சட்டங்கள் உருவாக்கப்பட்டாலும், திருத்தப்பட்டாலும் அதில் எப்படியேனும் ஓட்டைகள்
ஏற்படுத்திவிடுகிறார்கள்.
தமிழகத்தில் வக்புவாரியத்திற்கு சொந்தமாக 6,694
சொத்துகள் உள்ளன. இவற்றில் 4,500க்கு மேற்பட்டவற்றிலிருந்து எந்த வருமானமும்
வக்புவாரியத்திற்கு கிடைப்பதில்லை. சுமார் 2,200 வக்பு சொத்துகளிலிருந்து மட்டுமே
சொற்பமான வருமானங்கள் வருகின்றன.
இத்தனைக்கும் வக்பு சொத்தை
அனுபவிப்பவர்கள் வருமானத்தில் 7% மட்டுமே வக்புவாரியத்திற்குத்
தரவேண்டும்.
தமிழகத்திலுள்ள வக்புவாரிய சொத்துகளை முறையாக மீட்டெடுத்து
நிர்வாகம் செய்தால் பலநூறுகோடி ஆண்டு வருமானம் கிடைக்கும் என்பது இஸ்லாமிய சமூக
ஆர்வலர்களின் மதிப்பீடு. ஆனால் கிடைப்பதோ நூற்றில் ஒரு பங்கு அளவுக்கு கூட இல்லை!
சுமார் 3கோடி தான்!
எனவே தான் வக்புவாரிய சொத்துகளை பழுதுபார்க்க,
பராமரிக்கக்கூட மத்திய, மாநில அரசுகளிடம் கையேந்தும் நிலை
ஏற்பட்டுள்ளது.
வக்புவாரிய நிலங்களில் கல்விகூடங்கள், சமூககூடங்கள்,
மருத்துவமனைகள் கட்ட 2004 மார்ச் முடிய மத்திய அரசு 2540கோடி வழங்கியுள்ளது! மாநில
அரசுகளும் ஒரு சில கோடி ஒவ்வொரு ஆண்டும் தருகின்றன.
அத்துடன் 12வது
ஐந்தாண்டுதிட்டத்தில் சிறுபான்மையினர் மேம்பாட்டிற்கு மத்திய அரசு 17,000கோடி
ஒதுக்கி உள்ளது.
இவ்வளவு உதவிகள் கிடைத்தும் கூட இஸ்லாமிய சமூகம் இன்னும்
குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணாமலே தான் உள்ளன!
ஏனெனில் அதிகார மையங்கள்
வக்பு வாரியங்களுக்குள் நிதி உதவிகள் தருவதன் மூலம் வக்புவாரிய பொறுப்புகளுக்கு
நேர்மையற்ற பேர்வழிகளை திணித்துவிடுகின்றன. பெறக்கூடிய சிறிய நிதி உதவிகள்
வக்புவாரியங்கள் சுதந்திரமாக செயல்படுவதையும், ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துகளை
மீட்டெடுப்பதையும் தடுத்துவிடுகின்றன.
இஸ்லாமிய சமூகத்தின் சொத்துகளை
ஆக்கரிமித்துள்ளவர்களும், அதில் அதிகாரம் செய்பவர்களும் இறைவனுக்கு அச்சப்பட்டு
தங்களை சுயபரிசோதனைக்கு ஆட்படுத்திக் கொண்டால் தான் இதற்கு
தீர்வு.
சுதந்திரத்திற்கு முந்திய காலகட்டத்தில் இஸ்லாமிய சமூகத்தில்
அப்பழுக்கில்லாத அர்ப்பணிப்புள்ள பல தலைவர்கள் இருந்தனர்.
அப்போது இருந்த
மிகக்குறைந்த நிதியைக் கொண்டு சர்.சையதுஅகமதுகான் 100ஆண்டுகளுக்கு முன்பு அலிகார்
பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தார்.
காந்தியவாதிகளான ஜாகிர் உசேன், அப்துல்கலாம்
ஆசாத் போன்றவர்கள் ஏராளமான இஸ்லாமிய கல்வி நிலையங்களை தோற்றுவித்தனர். இன்றைக்கு
அவர்களைப் போன்ற ஆளுமைகளை நாம் காணும் பட்சத்தில் இஸ்லாமிய சமூகத்தோடு
ஓட்டுமொத்த இந்தியாவும் சேர்ந்தே
வளம்பெறும்.
தந்திடிவிக்காக
செய்தியும், பின்ணணியும்,
14.11 .2013