Wednesday, November 6, 2013

அதிகரிக்கும் தற்கொலைகள்


                                                                                                                -சாவித்திரிகண்ணன்

"உலகிலேயே அதிகமாகத் தற்கொலை நிகழ்வுகள் நடக்கும் நாடு இந்தியா. அதிலும் தமிழகமே முதலிடம் வகிக்கிறது" என்ற தகவலை சமீபத்தில் உலகசுகாதார மையம் வெளியிட்டுள்ளது.

உலகில் தற்கொலை செய்து கொள்வோரில் 20% இந்தியர்களாக உள்ளனர். அதிலும், பெண்களைக் காட்டிலும் ஆண்களின் எண்ணிக்கை இரு மடங்காக உள்ளது... போன்ற தகவல்கள் அதிர்ச்சி, வியப்பு, கவலை ஆகியவற்றை ஒரு சேர ஏற்படுத்துகிறது!

தேசிய குற்றப்பதிவு மையம் தெரிவித்துள்ள தகவல்களின் படி இந்தியாவில் 2012ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை - 1,35,445

ஆனால், பல தன்னார்வ நிறுவனங்களும், அமைப்புகளும் தருகின்ற தகவல் சுமார் 2லட்சத்திற்கு நெருக்கமாக உள்ளது. "காவல்துறை பதிவுகளை மட்டுமே NCRB தெரிவிக்கிறது.... ஆனால் காவல்துறை பதிவுகளை கடந்த தற்கொலைகள் பரவலாக நடந்தேறவே செய்கின்றன...." என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தகு தற்கொலைகளுக்கு நான்கு பிரதான காரணங்கள் கண்டறிய பட்டுள்ளன.

எதிர்பார்ப்புகள் பொய்த்து தாங்க முடியாத ஏமாற்றத்தை பெறுவது 
சமூக ரீதியாகத் தனிமைப்படுவது
சமூக ரீதியாக மதிப்பை இழப்பது
குடும்பத்தின் மோசமான சூழல்கள்
அதுவும், 1990களுக்குப் பிறகு தற்கொலைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

கூட்டுக் குடும்ப முறை சீர்குலைந்தது, குடும்பத்திற்கு வெளியே ஏற்படும் தவறான பாலியல் உறவுகள், சகிப்பின்மை, தனிமனித ஆளுமை திறன் குறைபாடு, காதல் தோல்விகள்... போன்றவை அகவியல் சார்ந்த தற்கொலைக்கான காரணங்களாகும்.

அதேபோல் அரசின் தவறான பொருளாதார கொள்கைகள், ஊழல்கள், அலட்சியங்கள் ஆகியவை தற்கொலைகளுக்கு பிரதான காரணங்கள் உள்ளன என்பதற்கு நமது நாட்டில் ஆண்டொன்றுக்கு தற்கொலை செய்து கொள்ளும் சுமார் 20,000 விவசாயிகளும், கடன்தொல்லை, வறுமைகாரணமாக உயிர்இழக்கும் ஏராளமான எளிய மனிதர்களும் அத்தாட்சியாகும்.

இதேபோல் பெருந்தொழில் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் வாய்ப்பிழந்து சிறுதொழில் முகவர்கள், சுயதொழில் முனைவோர்கள், தொழிலாளர்கள் கணிசமான எண்ணிக்கையில் தற்கொலை முடிவை எட்டுகின்றனர். கைத்தறி, விசைத்தறி நெசவாளர்கள், கைவினைஞர்கள், சிறுதொழில்கள் நடத்தியவர்கள் முற்றிலும் நிர்மூலமான நிலையில் தற்கொலைக்கு தள்ளப்பட்டு வருகிறார்கள்....!

தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் தற்கொலைக்கு முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை 20மடங்காக உள்ளது என்ற தகவல் இது தொடர்பாக அரசாங்கமும், சமூகமும் காட்ட வேண்டியுள்ள தீவிர அக்கரையைக் கோருகிறது.

அதிலும், தற்கொலை செய்து கொள்வோரில் 15வயதிலிருந்து 39வயதுக்கு உட்பட்டோரின் எண்ணிக்கை மிகவும் பிரதானமாயிருப்பது குடும்பத்திற்கும், தேசத்திற்கும் தேவைப்படும் மிக முக்கிய மனித ஆற்றலை நாம் இழந்து வருவதை உணர்த்துகிறது.

அரசியல் தலைவர்களுக்காகவும், மொழி, இன உணர்வுகளால் உந்தப்படும் நடிகர்களுக்காகவும் தமிழகத்தில் நடந்தேறியுள்ளதைப் போன்ற தற்கொலைகள் உலகின் மற்ற பகுதிகளிலோ, இந்தியாவின் பிற மாநிலங்களிலோ காண்பது அரிதினும் அரிது என்றும் ஆய்வாளர்கள் கூறியிருப்பது ஆழ்ந்த சிந்தனைக் குரியதாகும்.

தற்போது தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கவுன்சில் தரும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது நமது அறநூல்களில் வலியுறுத்தப்பட்டுள்ள அன்பு, கருணை, பொறுமை சக உயிர்களிடத்தில் பரிவு போன்றவை சமூகத்தின் சகல தளங்களிலும் போற்றி வளர்த்தெடுக்கப்படும் போது தற்கொலைகள் தானாகவே விடைபெற்றுக் கொள்ளும்.

தந்திடிவிக்காக,
செய்தியும், பின்ணணியும், 
11.10.2013

No comments: