Tuesday, November 12, 2013

இடைத்தேர்தல்களும், மக்கள் தீர்ப்பும்

                                                                                                                  -சாவித்திரிகண்ணன்


உலகின் எல்லா ஜனநாயக நாடுகளிலும் இடைத்தேர்தல்கள் என்பவை இன்றியமையாத முக்கியத்துவத்தை பெறத் தவறுவதில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் ராஜீனாமா, தகுதி நீக்கம், உயிரிழப்பு... என பலதரப்பட்ட சூழல்களில் இடைத்தேர்தல் நிர்பந்திக்கப்படுகிறது. இப்படி நடைபெறுகின்ற இடைத்தேர்தல்கள் மக்களின் உணர்வுகளை, ஆளும் அரசு குறித்த மதிப்பீடுகளை அறிய உதவுவதாகவே ஜனநாயக நாடுகளில் நம்பப்பட்டு வருகிறது.

2010 நவம்பரில் அமெரிக்காவில் செனட் உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தலில் ஆளும்கட்சியான ஒபாமாவின் ஜனநாயக கட்சி பெரும் பின்னடைவை பெற்றது. ஆனால் அதை படிப்பினையாக ஒபாமா எடுத்துக் கொண்டு சுதாரித்ததால் 2012ல் நடந்த அதிபருக்கான தேர்தலில் வெற்றிவாகை சூடினார்.

மியான்மர் எனப்படும் பர்மாவில் கடந்த 20ஆண்டுகளாக ராணுவத்தின் சர்வாதிகார ஆட்சியே நடைபெற்று வருகிறது. இதை எதிர்த்து போராடிய ஜனநாயகத்திற்கான தேசியலீக் கட்சியின் தலைவர் ஆங் சாண் சூயி பல ஆண்டுகள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மியான்மரில் ஏப்ரல் 2012 நடந்த இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 45 தொகுதியில் 44ஐ ஆங்சாண் சூயின் கட்சி வென்றது. இந்த இடைத்தேர்தல் வெற்றியை ராணுவ ஆட்சியாளர்கள் தலைவணங்கி ஏற்றுக்கொண்டனர்.

இதேபோல் நம் இந்தியாவின் பிற மாநிலங்களில் சமீபகாலமாக நடந்த இடைத்தேர்தல்கள் வெற்றிகளை பார்த்தோமென்றால் பெரும்பாலும் ஆளும்கட்சிகள் பெருத்த பின்னடைவை காண்பதே பொதுவாக உள்ளது.

குஜராத்தில் பா.ஜ.க பலமான கட்சி. நரேந்திரமோடி நான்காவது முறையாக முதல்வராகியுள்ளார். ஆனால், அதேசமயம் மார்ச் 2012ல் குஜராத்தின் மானசா சட்டசபைக்கான இடைத்தேர்தலில் பா.ஜ.க தோல்வி கண்டது. பொதுத்தேர்தலில் பெற்றவாக்குகளைக் காட்டிலும் அத்தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.கவின் வாக்கு சதவிகிதம் 9% சரிந்திருந்தது. நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் மார்ச் 2012 நடந்த 7சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 6ல் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும், ஒன்றில் Y.S.R காங்கிரசும் வென்றன. மீண்டும் இதே ஆந்திராவில் ஜீன் 2012ல் நடந்த 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் Y.S.R காங்கிரஸ் 15, தெலுங்குதேசம் 1, தெலுங்கானாராஷ்டிரம் சமிதி-1, காங்கிரஸ் -1 என்றே மக்கள் தீர்ப்பளித்தனர். நெல்லூர் மக்களவை தேர்தலிலும் ஆளும் கட்சியான காங்கிரஸ் தோற்றது.

மத்தியிலும், மாநிலத்திலும் சர்வ வல்லமையுடன் ஆட்சியிலிருக்கும் காங்கிரஸூக்கு ஆந்திர மக்கள் தொடர்ந்து தோல்விகளையே இடைத்தேர்தலில் தீர்ப்பாக தந்து கொண்டுள்ளனர்.

இதேபோல் கர்நாடகத்திலும் நவம்பர் 2011ல் நடந்த பெல்லாரி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும்கட்சியிலிருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு ஆளும்கட்சியை தோற்கடிக்கும் வண்ணம் மக்கள் தீர்ப்பளித்தனர்.

ஜனவரி 2009ல் ஜார்கண்டில் முதல்வராயிருந்த சிபுசேரன் 'தமார்' சட்டசபை இடைத்தேர்தலில் மக்கள் தீர்ப்பிற்கு தலைவணங்கி பதவி விலக நேர்ந்தது. இதைப்போல் பல உதாரணங்களை பட்டியலிடமுடியும். இவை அனைத்திலுமே இடைத்தேர்தலில் மக்கள் ஆளும் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் தருவதன் மூலம் ஆளும் தரப்பினர் தங்களை சீர்படுத்திக் கொள்ள வாய்பளிப்பதாகவே தெரிகிறது.

ஆனால், தமிழகம் மட்டும் இதில் விதிவிலக்கு.

2005ஆம் ஆண்டு முதல் இங்கு நடைபெறும் எந்த இடைத்தேர்தலிலும் ஒரு முறை கூட ஆளும்கட்சி தோற்றதில்லை.

மே -2005- காஞ்சிபுரம், கும்மிடிபூண்டி இடைத்தேர்தலில் பெரும்வாக்குகள் வித்தியாசத்தில் அன்றைய ஆளும்கட்சி அ.தி.மு.க வெற்றிபெற்றது. 2006ல் நடந்த பொதுத்தேர்தலில் இத்தொகுதிகளை அ.தி.மு.க இழந்தது.

இதற்குபிறகு 2006ல் ஆட்சிக்கு பொறுப்புக்கு வந்த தி.மு.க 11தொகுதிகளில் இடைத்தேர்தல்களை சந்தித்தது. திருமங்கலம், மதுரை மத்திய மற்றும் மேற்கு தொகுதிகள், பெண்ணாகரம், ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர், பர்கூர், வந்தவாசி, இளையான்குடி, திருச்செந்தூர், கம்பம் என அனைத்து 11தொகுதிகளில் தி.மு.கவே அதுவும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றது.

ஆனால் 2011மே மாதம் நடந்த தமிழக சட்டமன்றத்திற்கான பொதுதேர்தலில் இந்த 11ல் 9ல் தி.மு.க படுதோல்வியைக் கண்டது.

இதே போல் 2011ல் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க திருச்சி மேற்குதொகுதி, சங்கரன்கோவில், புதுக்கோட்டை ஆகிய இடைத்தேர்தலில் வெற்றி பெற்று வந்துள்ளது. தற்போது நடைபெற உள்ள ஏற்காடு தொகுதியிலும் எதுவும் பெரிய மாற்றம் நடக்கும் என எதிர்பார்பதற்கில்லை.

தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தல் குறித்து முன்னாள் இந்திய தலைமை அதிகாரி என்.கோலால்சாமி ஒரு முறை இவ்வாறு கூறினார், "தமிழகத்தின் இடைத்தேர்தல்களில் பீகாரையே மிஞ்சும் வண்ணம் முறைகேடுகள் மிகவும் அதிகரித்துவிட்டன..." இந்தச்சூழல்கள் எப்போது மாறுமோ...?


தந்திடிவிக்காக
செய்தியும், பின்ணணியும்,
அக்டோபர் .2013

No comments: