Thursday, November 14, 2013

மறுக்கப்படவேணடியவையா மாதிரி பள்ளிகள்?


                                                                                                                    -சாவித்திரிகண்ணன்

இந்தியா முழுமையிலும் சுமார் 6000தேசிய மாதிரிபள்ளிகள் தொடங்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு தமிழகத்தில் தி.மு.க, பா.ம.க, கம்யூனிஸ்ட் கட்சிகளின் கடும் எதிர்ப்பை பெற்றுள்ளது!

தேசிய மாதிரி பள்ளிகளின் உருவாக்கப்படுவது ஏன்?
கட்டாயக் கல்வி உரிமைசட்டத்தின் படி அனைத்து குழந்தைகளுக்குமான கல்வி என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டவையே மாதிரி பள்ளிகள்.
அரசு பள்ளிகள் மூலமாக தரமான கல்வி என்பது எதிர்பார்த்த வெற்றிகளை தராததால் தனியார் நிர்வாக அனுபவப் பங்களிப்போடு அரசு செயல் படுத்தவிருக்கும் திட்டமே மாதிரி பள்ளிகள்!

மத்திய அரசு, மாநில அரசு, தனியார் ஆகியோரின் பங்களிப்புகள்:

ஃ மத்திய அரசின் நிதி உதவி 75%, மாநில அரசு25%

ஃ இதில் மாநில அரசு நிலமாகத் தன்பங்களிப்பைத் தரும்.

ஃ தனியார் கட்டிடங்கள் கட்டி பள்ளியை நிர்வகிக்கவேண்டும்.

ஃ இதில் ஒவ்வொரு பள்ளிக்கும் 1000மாணவர்களின் படிப்புக்கான முழு கல்விக்கட்டணத்தையும் அரசே தந்துவிடும். இந்த வகையில் ஒவ்வொரு மாணவனுக்கும் ரூ 21,000முதல் 22,000ரூபாய் அரசு தருகிறது.

ஃ தனியார் 1500மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம். அதில் கட்டணங்கள் வசூலித்துகொள்ளலாம்.

ஃ இந்தப் பள்ளிகளுக்கான நிதி, மாநில அரசு இதற்காக உருவாக்கும் - மாநில சொசைட்டி மூலம் மத்திய அரசால் வழங்கப்படும். இதில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் நியமனத்தில் மாநில அரசின் ஆலோசனை பெறவேண்டும்.

ஃ பள்ளிகளின் செயல்பாட்டை மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி சம்பந்தபட்ட இடத்தின் உள்ளாட்சி அமைப்பு தலைவரும் இணைந்தே கண்காணிக்கவேண்டும்.

ஃ இதில் அமைய உள்ள 6,000பள்ளிகளில் 3,500மத்திய அரசின் நிதியில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் மிகவும் பின் தங்கிய பகுதிகளில் ஆரம்பிக்கப்படும்! 2500பள்ளிகள் தனியார்களோடு இணைந்து செயல்படுத்தப்படும். 

தேசிய மாதிரி பள்ளிகளின் கல்விதிட்டம்:

கேந்தரிய வித்யாலயாவின் கல்வித்திட்டத்தோடு, தரத்தோடு இவை அமையும். அதே சமயம் சமூக, பொருளாதார தளத்தில் பின்தங்கிய மாணவர்கள் உயர்தரமான கல்வியை பெற வழிவகுக்கும்.

எந்த மொழியில் கல்வி என்பது மாநில அரசின் விருப்பம். ஆனால் ஆங்கிலம் சிறப்பாக கற்றுத்தரவேண்டும். 

அந்தந்த மண்ணுக்கேற்ற கல்வி,கலாச்சார மரபுக்களுக்கேற்ற கல்விக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.

விளையாட்டு மைதானம், தோட்டம், கருத்தரங்கம், நூலகம், சிறப்பான கம்யூட்டர்கல்வி, செயல்பாட்டுடன் கூடிய கல்வி, இசை, நடனம், மரபுக் கலைகளை பயிற்றுவிக்கும் கல்வி என ஒருங்கிணைந்த முழுமையான கல்வியே இலக்கு!

தலைமைப்பண்பு, கூட்டுமுயற்சி, பங்களிக்கும் ஆற்றல், மனித உறவுகளைபேணுவதில் மேன்மையான அணுகுமுறை... ஆகியவற்றோடு நடைமுறை வாழ்வில் சவால்களை எதிர்கொள்ளவும் பயிற்றுவிக்கப்படுவார்கள்.

இந்தவகையில் 25லட்சம் மாணவர்கள் - அதுவும் ஏழை, எளிய மாணவர்கள் தரமான சிறந்த கல்வியை பெறுவார்கள் - கட்டணமின்றி அதே சமயம் இத்திட்டத்தில் 30லட்சம் வசதியுள்ள மாணவர்கள் கட்டணத்தோடு இதே கல்வியை பெறுகிறார்கள்!

ஏன் எதிர்க்கப்படுகிறது?

ஃ அரசு தரும் நிலம் காலப்போக்கில் தனியார் கைகளுக்கு போகலாம் 

ஃ தனியார் கல்வியை லாபநோக்கத்துடன் அணுகவாய்ப்புண்டு.

ஃ பள்ளிக்கூட நேரம் தவிர மற்ற நேரங்களில் அக்கட்டித்தை மற்ற செயல்பாடுகளுக்கு - லாபநோக்கத்துடன்- தனியார் பயன்படுத்தலாம்

யார் நடத்தப்போகிறார்கள்?
பிரபல தொழிலதிபர்கள் ரத்தன் டாட்டா, முகேஷ் அம்பானி, ராகேஷ்பாரதிமிட்டல், ஷாஜன் ஜின்தல், ITC சேர்மன் தேவேஸ்வார் போன்ற 100க்கு மேற்பட்ட இந்தியாவின் மிக்ப்பெரிய தொழில்அதிபர்கள் முன்வந்துள்ளனர். 'கார்பரேட் நிறுவனங்களுக்கான சமூக கடமைகளை செய்யும் வாய்ப்பாக' இதை கருதுவதாக தொழில் அதிபர்கள் தெரிவித்துள்ளனர். நமது தமிழக அரசை பொறுத்தவதை இது வரை எதிர்ப்பு எதையும் தெரிவிக்கவில்லை.


தந்திடிவிக்காக
செய்தியும், பின்ணணியும்,
04.11 .2013 

No comments: