Friday, March 21, 2008

ஒகேனக்கலும், ஓட்டு அரசியலும்

-சாவித்திரி கண்ணன்
மிழகத்தின் 'நயாகரா' என்று தயங்காமல் சொல்லிவிடலாம்...! அவ்வளவு இயற்கை பேரழிவில் மிகுந்த ஒகேனக்கலை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள் கர்நாடக அரசியல்வாதிகள்.
தமிழ் இலக்கியங்களில் 'புகைநற்கல்' என பன்நெடுங்காலமாக குறிக்கப்பட்டு வரும் இந்த பேரெழில் பிரதேசம் காலப்போக்கில் பெயர் திரிபடைந்து ஒகேனக்கல் ஆனது. பாறைகள் சூழ்ந்த பிரதேசத்தில் உச்சி மலையிலிருந்து வெண்பஞ்சு மேகம் போல் விழும் நீர்திவலைகளின் அழகை அர்த்தப்படுத்தும் விதத்திலே வைக்கப்பட்ட பெயர்தான் புகைநற்கல். புகை என்பதை ஓகை என்பதாக ஒலிவடிவம் தந்து, 'நற்கல்' என்பதை 'நக்கல்' என்பதாக பேச்சு வழக்கில் மாற்றி ஒகை நக்கல் என்பதாகி பின்பு ஒகேனக்கல் என்ற பெயரே நிலைத்து விட்டது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கூத்தபாடி ஊராட்சி ஒன்றியம் பகுதியில் ஒகேனக்கல் அமைந்துள்ளது. கர்நாடகத்திலிருந்து பாயும் காவேரி நீர் கர்நாடக எல்லையிலிருந்து பல கிலோ மீட்டர்களைக் கடந்து பாறைகளில் முட்டி மோதி, தாவி பிரவகித்து மலைகளிலிருந்து பாயும் இந்த இயற்கை எழில் சூழ்ந்த பகுதியை சுற்றுலா பிரியர்களின் சொர்க்கபூமி எனலாம். ஆனால் இதன் முக்கியத்துவத்தை இத்தனை ஆண்டுகளில் தமிழக அரசு சரியாக உணர்ந்ததாகத் தெரியவில்லை. குற்றாலத்திலிருந்து இணையாக கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய இவ்விடம் கற்காதவனின் கையில் கிடைத்த காவிய தூலைப் போல கடந்த காலங்களில் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளது.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ஒரு சிறப்பு நிதி மூலம் இந்த சிங்கார பிரதேசத்தில் சில சுற்றுலாவளர்ச்சிப் பணிகளை சுறுசுறுப்பாகத் தொடங்கிய ஆண்டு 2005. பெரிய அருவிகளில் குளிப்பவர்களுக்கு பாதுகாப்பாக கம்பிவேலியையும், வேடிக்கை பார்ப்பவர்கள் விழுந்துவிடாதிருக்க இரும்பு வேலியையும், சிற்றருவியில் குளிப்பவர்கள் உடைமாற்றுவதற்கான கட்டிடத்தையும் கட்டும்போது கர்நாடக வனத்துறையினர் அதிரடியாய் வந்து ஆட்சேபம் தெரிவித்தனர்.
தமிழக அதிகாரிகள் எல்லை வரைபடங்களுடன் தகுந்த விளக்கம் தந்ததும் ஆட்சேபம் தெரிவித்தவர்கள் அமைதியாய் திரும்பினர். ஆனால் அப்போது கர்நாடக சட்டபேரவைக்கு தேர்தல் நெருங்கி கொண்டிருந்த நேரத்தில் அன்றைய காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த கர்நாடக முதல்வர் தரம்சிங் திடீரென்று ஆவேச அறிக்கை வெளியிட்டார். "ஒகேனக்கல் மற்றும் அதை சார்ந்த 370 ஏக்கர் நிலம் கர்நாடகத்திற்குரியது. அதை தமிழகம் ஆக்கிரமித்துள்ளது. அதை மீட்காமல் விடமாட்டேன்." என்றார் தரம்சிங்.
ஒகேனக்கல் கர்நாடகத்திற்கானது என்ற பிரச்சனையோ, கருத்தோ இது நாள் வரை இல்லாத நிலையில், ஒரு மாநிலத்தின் முதல்வராயிருக்கும் ஒருவருக்கு தமது மாநில எல்லை குறித்த தெளிவோ, அறிவோ இல்லாமலிருக்க முடியும் என்று நம்பவும் முடியவில்லை.
அப்படியொரு சந்தேகம் திடீரென்று தோன்றினாலும் அதிகாரிகளை அழைத்து விளக்கம் பெற்று முடிவெடுக்க முடிந்த இடத்தில் அவர் இருந்தார். எனினும் அடாவடித்தனமாக அன்று தரம்சிங் எல்லை பிரச்சனையை கையில் எடுத்தார். இது கர்நாடகமக்களிடம் தனக்கொரு கதாநாயக அந்தஸ்த்தை பெற்றுத்தரும் என தரம்சிங் நம்பியதே இதற்கு காரணமாயிருக்ககூடும்.
ஆனால் பல இனங்களை, மொழிகளை பேசுவோர் ஒருங்கிணைந்து வாழ்கின்ற இந்திய தேசியத்தின் இறையாண்மைக்கும், ஒருமைபாட்டுக்கும் குறுகிய இனவெறி அரசியல், அதுவும் மற்ற இனத்தவர் மீது பகை காட்டும் அரசியல் பயங்கரவாதத்திற்கு இணையானது. இந்த தீய அரசியலை கையிலெடுப்பவர்களை ஒரு தேசியகட்சியை தலைமை தண்டிக்கும் இல்லை, குறைந்தபட்சம் கண்டிக்கவும் இல்லை. தமிழக காங்கிரஸ் கட்சியோ தனக்கு சம்பந்தமில்லாத ஏதோ ஒரு விவகாரம் போல் அன்று அமைதி காத்தது.
அன்று தரம்சிங் கையிலெடுத்து, தேர்தல் முடிந்ததும் கைவிட்ட எல்லை அரசியலை இன்று கையிலெடுத்துக் கொண்டார் எடியூரப்பா. அன்று காங்கிரஸ், இன்று பாரதீய ஜனதா. கட்சியும், ஆட்களும் வேறுபட்டுள்ளனர். ஆனால் காரணம் ஒன்றே ஒன்று தான். அது தேர்தல் அரசியல். நெருங்கி வந்து கொண்டிருக்கும் தேர்தல்!
தன்னுடைய சேவைகளாலோ, திறமைகளாலோ, தியாகங்களாலோ மக்களிடம் செல்வாக்கு பெற ஏதுமற்ற இன்றைய அரசியல் தலைமைகள் குறுக்கு வழியில் பெயரும், செல்வாக்கும் பெறுவதற்கு இது போன்ற இனப்பிரச்சனையை கையில் எடுக்கிறார்கள்.
தமிழகத்தில் தர்மபுரியிலும், கிருஷ்ணகிரியிலும் கடும் குடிநீர் பற்றாக்குறையை களையும் நீண்ட கால கனவுத்திட்டம் நிதர்சனமாகவிருக்கும் ஒரு தருணத்தில் அதை தடுத்து நிறுத்துவேன் என்கிறார் எடியூரப்பா. ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் 1330 கோடி செலவில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26ந்தேதி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு தமிழக முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். இதற்கு கர்நாடகத்தின் அனுமதி பெறப்படவில்லை என்பது எடியூரப்பா வைக்கும் குற்றச்சாட்டாகும்.
தமிழகத்திற்கு கர்நாடகம் அனுமதித்துள்ள குறைந்தபட்ச காவேரி நீரை எந்தெந்த வழிகளிலெல்லாம் விரையமாவதை தடுத்து மக்கள் நலனுக்கு பயன்படுத்துவது என்பது தமிழக அரசின் உரிமை. இதில் கர்நாடகத்திற்கு கடுகளவும் பாதிப்பில்லை என்ற நிலையில் எடியூரப்பாவின் தலையீடு ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
இது குறித்து சன் தொலைகாட்சியில் நேர்காணல் தந்த தமிழக பா.ஜ.கவின் முக்கியஸ்தரான குமாரவேல், "பா.ஜ.க தேசிய கட்சி என்றாலும் அந்தந்த மாநில மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க வேண்டிய கட்சியாகவுள்ளது... அந்த வகையில் கர்நாடக பா.ஜ.க தலைவர் சில தவறான தகவல்களின் அடிப்படையில் ஒகேனக்கல் வந்து உரிமை கோரியிருக்கலாம்.. ஆயினும் அவரைச் சந்தித்து நாங்கள் முறையான விளக்கம் தருவோம்" என்றார். இல.கணேசன், ஹெச்.ராஜா போன்றோரும் எடியூரப்பாவைச் சந்தித்து விளக்கம் தர உள்ளோம் எனக் கூறியுள்ளனர்.
முதலாவதாக எடியூரப்பா கர்நாடகமக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கவில்லை. ஏனெனில் ஒகேனக்கலை தமிழகத்திலிருந்து பறிக்க வேண்டும் என்றோ, தமிழக மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் திட்டங்களை சீர் குலைக்க வேண்டுமென்றோ கர்நாடக மக்கள் எண்ணுவதற்கு எந்த முகாந்திரமில்லை. இப்படியொரு எண்ணத்தை அரசியல்வாதிகளே வலிந்து மக்களிடம் உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படுகின்றனர். இரண்டாவதாக உண்மை என்பது ஒன்று தான். அது தமிழகத்திற்கு ஒன்றும், கர்நாடகத்திற்கு வேறொன்றுமாக இருக்க வாய்ப்பில்லை. ஒரு முன்னாள் முதல்வர் உண்மையறியாமல் களத்தில் இறங்கி போராடும் அளவுக்கு முட்டாளாக இருக்கமுடியாது.
எனினும் காங்கிரஸ் கட்சிக்காரர்களைப்போல் கண்டுகொள்ளாமல் விடாமல் எடியூரப்பாவை சந்தித்து விளக்கம் தருவோம் என்ற அளவுக்காவது தமிழக பா.ஜ.க சொன்னது ஒரு வகையில் முன்னேற்றம் என ஆறுதல் மட்டுமே அடையலாம். அதேசமயம் இப்படி ஊடகங்களுக்கு சமாதானம் சொல்வதைத் தவிர்த்து அடுத்த எடியூரப்பாவை சந்தித்து பேசியிருக்கலாம். ரயிலிலே சென்றால் கூட ஆறுமணிநேரபயணத்தில் அங்கே சென்று எடியூரப்பாவை சந்தித்து விட முடியும்.
மார்ச் 16ந்தேதி எடியூரப்பா வந்து போனதைத் தொடர்ந்து மார்ச் 20ந்தேதி மீண்டும் பா.ஜ.கவின் கர்நாடக மாநில விவசாய அணியைச் சேர்ந்த 500பேர், 'ஒகேனக்கலை கர்நாடகத்தில் சேர்க்க வேண்டும்' என்று ஒகேனக்கல் வந்து போராட்டம் நடத்திச் சென்றுள்ளனர். (தமிழக பா.ஜ.கவினர் இன்னும் எடியூரப்பாவை சந்தித்த பாடில்லை).
இதை ஒகேனக்கலில் வாழும் கன்னட மொழிபேசுபவர்களே ஏற்கவில்லை என தெரியவருகிறது. ஏனெனில் இது முற்றிலும் நியாயமற்ற, அரசியலுக்காக நடத்தப்படும் போராட்டம் என்ற கருத்து கர்நாடகமக்களுக்கே உள்ளது. ஒகேனக்கலில் கன்னடநடிகர் ராஜ்குமாரின் ஏராளமான படங்களுக்கான படப்பிடிப்பு தமிழக அரசின் அனுமதியுடன் தான் நடந்துள்ளது. அங்கு நடக்கும் பரிசில் (படகு) பயணங்களின் மூலம் பென்னகரம் ஊராட்சிக்கு லட்சக்கணக்கில் வருமானம் வருகிறது. இந்த உல்லாச பரிசில் பயணத்தில் கர்நாடக மக்கள் பலரும் தினசரி வந்து மகிழ்ந்து சென்று கொண்டுள்ள ஒரு சுமுகச் சூழல் இன்றும் தொடர்கிறது.
தரம்சிங்கும், எடியூரப்பாவும் மேற்கொண்டது ஒரு கீழ்த்தரமான அரசியல் யுக்தி. இது ஜனநாயகத்தின் பெயரிலான தீவிரவாதமாகும். இவர்களைப் போன்றவர்களை உடனடியாக கட்சியை விட்டு நீக்கி நடவடிக்கை எடுத்தால் தான் அந்த கட்சிகள் தேசியத்திற்கு உண்மையான கட்சிகளாயிருக்க முடியும்.

2 comments:

Anonymous said...

//தமிழ் இலக்கியங்களில் 'புகைநற்கல்' என பன்நெடுங்காலமாக குறிக்கப்பட்டு வரும் இந்த பேரெழில் பிரதேசம் //

எந்த இலக்கியத்தில் இது வருகிறது ?

Anonymous said...

உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் அற்புதமான கட்டுரை. மிக நேர்த்தியாக எழுதப் பட்டிருக்கிறது.

பாரதிதமிழன்