Saturday, March 22, 2008

ரஜினிமட்டுமல்ல, எல்லோருமே திருடங்கதான்!

- சாவித்திரி கண்ணன்

அரசாங்கமே அறிவித்துவிட்டது.

ரஜினிகாந்த் நிலம் வாங்கியதில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏதும் ஏற்பட்டுவிடவில்லை என்பதாக! இது உண்மையாகக் கூட இருக்கலாம்! ஆனால் ரஜினிகாந்த் நிலம் வாங்கியது தொடர்பான சர்ச்சையில் தமிழக அரசின் மரியாதைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது சர்வ உண்மையாகும். மார்ச் 20ந்தேதி குமுதம் ரிப்போர்ட்டரில் புஷ்கின் ராஜ்குமார் எழுதிய கட்டுரை நடிகர் ரஜினிகாந்த் திருவள்ளுர் மாவட்டம் ஆரணிபகுதியில் கன்னிகைபேர் கிராமத்தில் சுமார் 9 ஏக்கர் நிலத்தை சந்தை மதிப்புபடி சுமார் இரண்டேகால் கோடிக்கு வாங்கியதாகவும், ஆனால் பதிவுகட்டணம் கட்டும் போது கிட்டத்தட்ட அதில் பங்கில் ஒரு பங்கையே நிலத்தின் மதிப்பீடாக காண்பித்து மிகக்குறைந்த பதிவுகட்டணத்தை கட்டியதாகவும் தெரிவித்திருந்தது. மேலும் விதிமுறைகளுக்கு மாறாக பதிவுத்துறை அதிகாரியே ரஜினிகாந்த் வீட்டிற்குச்சென்று பதிவு செய்து விட்டு ஆனால் ரஜினிகாந்த் நேரடியாக சம்பந்தப்பட்ட அலுவலகம் வந்து கையெழுத்து போட்டதாக பொய்யான தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் குமுதம் ரிப்போர்ட்டர் சுட்டிக்காட்டியிருந்தது.

இதைத்தொடர்ந்து இச்செய்தி பல தினசரிகளிலும் வெளியானது. ஆகவே இப்பிரச்சனையில் விசாரணை செய்து உண்மையறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் ரஜினிகாந்திடம் விசாரணை நடத்தப்பட்டதாகவே தகவல் இல்லை. விசாரணைக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு விஸ்வரூப செல்வாக்கு கொண்டவரல்லவா அவர்? அவரிடம் விளக்கம் கேட்டிருந்தால் அவருடைய லட்சோபலட்சம் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகிவிடுவோமோ என்ற தயக்கம் தமிழக அரசின் தலைமைக்கு இருந்திருக்கலாமோ என்னவோ!

இப்படி விசாரணைக்கே அவரை உட்படுத்த தயங்குபவர்களை அவர் ஏதேனும் வில்லங்கம் செய்திருந்தால் அதை வெளிப்படுத்த துணிவார்களா? என்பதே மக்களின் மனதில் மேலோங்கி நிற்கிறது. சந்தை மதிப்புபடி சுமார் 2 கோடி சொச்சத்திற்கு சொத்துவாங்கிய ரஜினிகாந்த் அரசின் வழிகாட்டுதல் மதிப்புபடி குறைந்த பதிவு கட்டணத்தை காட்டியுள்ளார்.

இந்நிலையில் தான்வாங்கிய உண்மையான சொத்தின் மதிப்பிற்கு ஏற்ப பதிவு கட்டணம் ஒன்பது சதவிகிதத்தை ரஜினிகாந்த் கட்டியிருக்க வேண்டும் என நாம் கருதுவது சற்றே அதிகபட்ச எதிர்பார்ப்பாகத் தான் தோன்றுகிறது. எனினும் ரஜினிகாந்த் பற்றி சமூகத்தில் ஊடகங்களாலும், பல செல்வாக்கான முக்கியஸ்தர்களாலும் கட்டமைக்கப்பட்ட 'மிகவும் உண்மையான மனிதர்' என்ற பிம்பம் மக்களை அவர் நியாயமானவராக நடந்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை தந்திருப்பது தவிர்க்கவியலாதது. ஏனெனில் இரண்டுவிதத்தில் இது பாதகமான செயல்.

ஒன்று- 'கணக்கில் வராத பணம் என்பது கறுப்புபணம்' என்ற வகையில் கூடுதலாக ரஜினி கொடுத்த பணத்திற்கும், வாங்கிய பணத்திற்கும் இது பொருந்தும்.

மற்றொன்று- கறுப்பு பணம் கைமாறும் போது அரசாங்கத்திற்கு சென்றிருக்க வேண்டிய வரி இழப்பு.

ஆயினும் சட்டப்படி ரஜினிகாந்த் அரசின் வழிகாட்டுதல் மதிப்புபடி பதிவு கட்டணம் கட்டியுள்ளார்.... என்பதை மறுக்க முடியாது. சந்தை மதிப்புக்கேற்ப நான் வாங்கிய சொத்தின் மதிப்பிற்குரிய பதிவு கட்டணத்தையே முறையாக கட்டுவேன் என்பது ஒருவரின் தார்மீக நெறிமுறை, மனசாட்சி சம்பந்தப்பட்ட விவகாரமே தவிர அரசாங்க பிரச்சனையல்ல.

ஆனால் இந்த விவகாரம் உரிய முறையில் அரசாங்கத்தால் விசாரிக்கப்படவில்லை என்பதைப் போலவே கடைசி வரை இந்த சர்ச்சைக்கு ரஜினிகாந்த் தன்நிலை விளக்கம் தராததும் கவனத்திற்குரியதாகும்.

இதில் சம்பந்தப்பட்ட பணத்தைவிடவும் மிகவும் பாதிப்புக்குரிய அம்சம் ரஜினிகாந்த் நேரிலே செல்லாமல் செய்யப்பட்ட பதிவை நேரில் சென்று செய்ததாக அரசே அறிவித்த அவலம். சட்டத்தில் ஒருவர் நேரிடையாக பதிவுத்துறை அலுவலகத்திற்கு செல்லாமல், அதிகாரிகளே சம்பந்தப்பட்டவரின் இல்லம் வந்து கையெழுத்து பெறுவதற்கான சில அரிய விதிவிலக்குகள் உள்ளன. அப்படியிருக்க ரஜினிகாந்த் நேரடியாக பதிவு அலுவலகம் செல்லாததை பெரிய குற்றமாக கருதக்கூட வாய்ப்பில்லை. ஆனால் நடக்காத ஒன்றை நடந்ததாக பதிவு செய்வது தண்டிக்கப்படவேண்டிய குற்றம். ரஜினிகாந்த் நேரில் வந்து கையெழுத்திட்டார் என்று துணிந்து பதிவு செய்த அதிகாரி தண்டிக்கபட்டிருக்க வேண்டும். ஆனால் ரஜினிகாந்தின் அனுசரணையோடே இந்த குற்றம் நடந்திருப்பதால் அவரை தண்டிப்பது ரஜினிகாந்தின் தவறை வெளிச்சம் போட்டதாகிவிடும்... என்று அரசாங்கம் அரண்டுபோய் ஒரு தனிநபருக்காக அப்பட்டமாக ஊர்உலகறிய பொய் விளக்கம் தருகிறது.

'வாய்மையே வெல்லும்' என்பது தமிழக அரசின் அரசாங்க சின்னத்துடன் பொறிக்கப்பட்ட வாசகம். இந்த அரசு 'வாய்மையே வெல்லும்' என்பதை வெறும் வாசகமாக வைத்துக்கொண்டு தன்னைத் தானே தோற்கடித்துக் கொண்டது தமிழக அரசு.

இந்நிலையில் ரஜினிகாந்த் மிகவும் நேர்மையானவர். திரையில் மட்டுமே நடிக்கத் தெரிந்தவர். நிஜவாழ்வில் நடித்தறியா உண்மையான மனிதர். ஆன்மீகவாதி... என்று ஊடகங்களால் சலிப்பே இல்லாமல் பரப்பப்பட்ட சங்கத்தின் நினைவுக்கு வருகிறது.

"ரஜினிகாந்தை போன்ற நேர்மையானவர் அரசியலுக்கு வரவேண்டும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அரசியலே தூய்மையாகும். ஊழல் இருக்காது. நல்லாட்சி கிடைக்கும்..." என்று ஓயாமல் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேசியும், எழுதியும் வருகிற துக்ளக் ஆசிரியர் 'சோ' இதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்த மாட்டார். ஏனெனில் மேற்படி குற்றம் செய்தது கனிமொழியோ, அழகிரியோ, ஸ்டாலினோ இல்லை என்ற போது அவர் இதில் அக்கரை காட்ட வேண்டிய அவசியம் தான் என்ன?

No comments: