Thursday, September 18, 2014

அம்மா திட்டங்கள்

 -சாவித்திரிகண்ணன் 

இந்தியா சுதந்திரமடைந்து 67ஆண்டுகளைக் கடந்த நிலையிலும், நம் ஆட்சியாளர்கள் மக்களாட்சியின் மாண்புகளை பேண விரும்பாதவர்களாகவே உள்ளனர். ஜனநாயகம், சமத்துவம், கூட்டுச் செயல்பாடு போன்ற சொற்களே கூட அவர்களை எரிச்சலடைய வைக்கிறது. கட்சியானாலும், ஆட்சியானாலும் அது ஒற்றை அதிகார மையமாக மட்டுமே இங்கே இயங்குகின்றன. 

அதுவும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அரசு சார்ந்த அணுகுமுறைகள் மன்னராட்சியின் நீட்சியாகவே வெளிப்பட்டுவருகின்றன.. 

ஆனால், சுதந்திரத்திற்கு பிறகான முதல் இருபதாண்டுகளில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய நாட்டு நிர்மாணத் திட்டங்கள் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன. அதுவும் தமிழகத்தில் அக்காலகட்டத்தில் நிறுவப்பட்ட நீர் ஆதாரத்திட்டங்களும், மின் உற்பத்தி திட்டங்களும், தொழில்துறை திட்டங்களுமே இன்று வரை இவ்வளவு சீர்கேடுகளுக்கிடையிலும் தமிழகத்தை தமிழகத்தை தாங்கி நிற்கின்றன. 

தமிழகத்தை மாறிமாறி ஆட்சி செய்து கொண்டிருக்கும் இரு திராவிட கட்சிகளின் ஆட்சிகளுமே தொடர்ந்து அறிமுகப்படுத்தி வந்த பாப்புலிஸ்ட் என்ப்படும் வெகு மக்கள் திட்டங்கள் அனைத்துமே மக்களின் உணர்வுகளை வென்றெடுத்தால் போதும் அவர்களுக்கான உரிமைகளை மறுதலித்துவிடலாம் என்ற நோக்கத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. 

சென்ற தி.மு.க ஆட்சி, தான் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கான காரணமே ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்ற அறிவிப்பும், இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி அறிவிப்பும் தான் என உறுதியாக நம்பியது. 

அதன் வழியிலேயே அ.தி.மு.க தலைமையும் 20கிலோ அரிசி மிக்சி, கிரைண்டர், மின்விசிறி போன்றவை விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவித்தது. 

இந்த ரீதியான இலவச அறிவிப்புகள், மானியங்கள் என்பவை அரசாங்க நிர்வாகச் செயல்பாட்டின் ஒரு அம்சமே என்பதை கடந்து முழு அடையாளமாகவும் மாறிவருவது தான் பெரும் கவலையளிக்கிறது. 

இந்த நிதி ஆண்டிற்கான தமிழகத்தின் வரி வருமானம் 91,835 கோடி! 

இதில், இந்த வகை இலவசங்கள், மானியங்களுக்கான தொகை - 49,068 கோடி
அரசு ஊழியர்களுக்கான சம்பளம் ஒய்வூதியத்திற்கான தொகை 51,740 கோடி 
இது வரை வாங்கிய கடனுக்காக திருப்பி செலுத்தும் வட்டி தொகை - 15,463கோடி. 

ஆக, வரி வருமானத்திற்கு மேல் இதற்கே பணம் தேவைப்படுகிறது. மத்திய அரசு தரும் நிதி, மேன்மேலும் பெறும் கடன்தொகைகள் ஆகியவற்றைக் கொண்டு தான் மற்றவற்றை சமாளிக்க வேண்டும். இந்நிலையில் அடிப்படை கட்டமைப்புகளை வளப்படுத்தும் செயல்திட்டங்களுக்கு ஏது நிதி? 

இந்தச் சூழலிலும் நாளும் பொழுதுமாக புதுப்புது கவர்ச்சி திட்டங்கள் அம்மா திட்டம் என்ற பெயரில் அணி வகுத்து வந்து கொண்டே உள்ளன. 

அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மாவிடுதிகள், அம்மா காய்கறிகனி அங்காடி, அம்மா மருந்தகங்கள், அம்மா விதைகள், அம்மாஇன்சூரன்ஸ் திட்டம், அம்மா வேலைவாய்ப்பு திறன் மற்றும் பயிற்சி திட்டம், அம்மா திரையரங்குகள், அம்மா பேபிகிட்ஸ், அம்மா சிறுவர்பூங்காக்கள், அம்மா பயிற்சி வகுப்புகள், அம்மா மாணவர் ஊக்குவிப்பு திட்டங்கள், அம்மா அரசுப்பணிதிட்டம், அம்மா பணிபாராட்டும் திட்டம், அம்மா குடை வழங்கும் திட்டம், அம்மா திட்ட முகாம்கள்... என நீண்டுகொண்டே போகிறது. இத்தகு திட்டங்களை முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பதிற்கிணங்க மாநில அரசின் அறிவிப்பாகவும், மாநகராட்சிகளின் அறிவிப்பாகவும் இடையறாது அறிவிக்கப்பட்ட வண்ண முள்ளன. 

இவை மகத்தான மக்கள் திட்டங்கள் என்றும், மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளன.... என்றும் ஊடகங்கள் எழுதியும், பேசியும் வருகின்றன. இதில் ஒரு பகுதி உண்மை இல்லாமலில்லை. எந்த ஒரு தீமையை அரங்கேற்றுவதற்கும் சாதகமான சூழலை உருவாக்கிக் கொள்ள சில நன்மைகளை செய்வதும் ஒரு ராஜதந்திர அணுகுமுறை தானே! 

ஒரு ஜனநாயக அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன? 

குடிமக்கள் கண்ணியமாக உழைத்து வாழ்வதற்கான சூழல், நேர்மையான நிர்வாகம், தங்கள் பிரச்சினைகளை துரிதமாக தீர்த்து வைக்கும் நிர்வாக அணுகுமுறை! கல்வி, சுகாதாரம், மருத்துவம், குடிநீர், சாலைவசதிகள், மின்சாரம் போன்றவற்றை தடையின்றி பெறும் உரிமை! 

இதற்காகத் தான் அரசின் பல்வேறு துறைகள் நிர்வாக செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அரசு அலுவலகங்களில் மக்கள் சேவை பெற பெரும் தடைகள், அலைச்சல்கள்! 

இவற்றை களைவதற்காகாத்தான் அம்மா திட்ட முகாம்கள் நடத்தப்பபடுகின்றனவாம். இந்த திட்ட முகாம்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் மக்களை நாடி வந்து எல்லா பிரச்சனைகளையும் ஒரே நாளில் தீர்ப்பார்களாம்! இது எப்படி நடைமுறை சாத்தியமாகும்? பாதி மனுக்களை தட்டிக் கழிக்கிறார்கள், பெயரளவுக்கு சிலவற்றை நிறைவேற்றுகிறார்கள். ஒரு நாளில் இது தான் சாத்தியப்படும்! 

ஆனால், அதிகாரிகள் தங்களை நாடி வந்து குறை தீர்க்கிறேன் என பாவனை செய்வதை தவிர்த்து, தாங்கள் தேடிவரும் போது கனிவாக காதுகொடுத்து கேட்டு, மீண்டும், மீண்டும் அலைய வைக்காமல் தங்கள் கடமையைச் செய்தாலே போதும் என்று தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

இந்த மக்கள் சேவையை உறுதிபடுத்தத்தான் மத்திய அரசு சேவைப்பெறும் உரிமை சட்டத்தை 2011ல் கொண்டு வந்தது. இந்த சட்டம் ரேஷன் கார்டு, பிறப்பு, இறப்பு, ஜாதிச்சான்றிதழ்கள் தொடங்கி பாஸ்போர்ட் வரை ஒவ்வொரு சேவைக்கும் குறிப்பிட்ட காலத்தை கறாராக நிர்ணயிக்க கோருகிறது. அதன்படி அச்சேவை வழங்காவிடில் தாமதப்படும் ஒவ்வொரு நாளுக்கும் அபராதம் கட்ட அத்துறை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் ஊழியர்களை நிரபந்திக்கிறது. இந்தச் சட்டத்தை இந்தியாவில் கேரளா, ஒரிசா, பீகார், மேற்குவங்கம், குஜராத், மத்திய பிரதேசம், அஸ்ஸாம், ஜார்கண்ட், இமாச்சல் பிரதேசம், கர்நாடகா, சத்தீஸ்கர், ஹரியானா, உத்திரகண்ட் ஆகிய மாநிலங்கள் அமல்படுத்தி வருகின்றன. ஆனால் கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக சேவை பெறும் உரிமை சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மக்கள் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் தரப்பில் வைக்கப்படும் வேண்டுகோளுக்கு தமிழக அரசு இன்று வரை செவி சாய்க்கவில்லை. 

இந்த சேவைபெறும் உரிமை சட்டத்திற்கு முன்பாகவே அரசு நிர்வாகத் தாமதங்களை தட்டிகேட்கவும், அதன் செயல்பாடுகளை வெளிப்படைத் தன்மை கொண்டதாக்கவும் - கொண்டு வரப்பட்டது தான் தகவல் பெறும் உரிமைச்சட்டம். இந்தச்சட்டம் எந்த லட்சணத்தில் தமிழகத்தில் அமலாகிறது? தகவல் தரும் ஆணையம் தகவல்களை தர மறுக்கும் தகிடுதத்த ஆணையமாக உள்ளது.... என நாளுக்கொரு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள் தகவல் உரிமை ஆர்வலர்கள் ஆயினும் பலனில்லை. ஆனால் கர்நாடகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் தகவல் அறியும் ஆணையம் மிகச்சிறப்பாகச் செயல்படுகின்றன. எத்தனை விண்ணப்பங்கள் வந்தன? எவற்றுக்கொல்லாம் தகவல்கள் தரப்பட்டுள்ளன..? எத்தனை தரவேண்டியுள்ளன போன்றவை வெளிப்படையாக அலுவலக போர்டிலும், இணையத்திலும் வெளியிடப்படுகின்றன. விண்ணப்பதாரருக்கு அவரது கோரிக்கை எந்த நிலையில் உள்ளது என்பன உள்ளிட்ட தகவல்கள் குறுஞ்செய்தி வாயிலாக அவ்வப்போது தரப்பட்ட வண்ணுள்ளது. இங்கோ தகவல் பெறும் உரிமை தகவல் தரும் ஆணையத்தாலேயே தகனம் செய்யப்பட்டுள்ள அவலநிலை! 

அரசு நிர்வாகத்தில் இத்தனை அவலங்களை நிகழ்த்திக்கொண்டு ஏதோ ஒரு நாளில் அம்மா திட்ட முகாம் போட்டு அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டு வருவது போல ஊடகங்களில் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது. 

இந்த அரசின் மிகப்பெரிய வரவேற்பு திட்டமாக அம்மா உணவகங்கள் பேசப்படுகின்றன. மார்ச் 2013ல் 15 உணவகங்களாகத் தொடங்கி இன்று தமிழகம் தழுவிய அளவில் சுமார் 300 உணவகங்களாக வளர்ந்திருக்கிறது. மேலும் 360 உணவகங்கள் திறக்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். 

மலிவு விலை உணவகம் என்பது ஏழை எளிய மக்களின் பசிப்பிணிதீர்க்கும் அறம் சார்ந்த ஓர் அணுகுமுறை! உணவுபடைத்தலில் அதீத கொள்ளை லாபமீட்டும் ஆயிரக்கணக்கான உணவகங்களின் செயல்பாட்டை கட்டுபடுத்த எந்த நடவடிக்கையையும் அரசு மேற்கொள்வதற்கு ஒரு சிறிதும் முனைப்பு காட்டவில்லை. சரி, சுதந்திரப் பொருளாதாரயுகத்தில் அது சாத்தியமில்லை என்ற பட்சத்தில் அரசு என்ன செய்திருக்க வேண்டும்? ஏற்கெனவே மலிவு விலையில் பலகாரங்களையும். மதிய உணவையும் வழங்கிக் கொண்டிருக்கும் சுயதொழில் முனைவோர்களான தள்ளுவண்டிக்காரர்கள், வீட்டு முற்றத்தையே உணவு தயாரிக்கும் கூடமாக்கியுள்ள ஏழை விதவைப்பெண்கள் போன்றவற்களையல்லவா ஊக்கப்படுத்தி இருக்கவேண்டும். ஆனால், அம்மா உணவகங்கள் பல்லாண்டுகளாக இந்த எளிய சேவை செய்து, தங்களும் பசியாறி வந்த அந்த ஏழைக் குடும்பங்களையல்லவா நிலைகுலையவைக்கிறது...? 

அம்மா உணவகம் என்பது கிட்டதட்ட அரசின் இலவச உணவகம் தான்! 
இதற்காகும் செலவுகள் இதில் பெறப்படும் வருவாயைக் காட்டிலும் 200% த்திற்கும் அதிகமாக இருக்கிறது... என்பதே நடைமுறை உண்மை! இலவசமாகச் சாப்பிடுவது கௌரவக் குறைவு எனக்கருதும் மக்களை சமாதானப்படுத்தத்தான் ஒரு மிகக்குறைந்த தொகை பெறப்படுகிறது. சரி, போகட்டும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இது வரப்பிரசாதம் தானே...! ஆமாம் சந்தேகமில்லை அப்படியானால், தமிழகத்தில் உள்ள வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து மக்களுக்குமே பலன் பெறும் விதத்தில் அல்லவா இது போன்ற ஒரு திட்டம் விரிவான தளத்தில் திட்டமிட்டிருக்க வேண்டும்? 

எனில், அது மாபெரும் மக்கள் பங்களிப்பில் அல்லவா அரங்கேறி இருக்க வேண்டும். இத்தொழிலில் ஏற்கெனவே சிறிய வகையில் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களையும், சுய உதவி குழுக்களிலுள்ள லட்சக்கணக்கான பெண்களையும் ஒருங்கிணைத்து கூட்டுறவு முறையில் உணவகங்களை அவர்களே நடத்த அரசு லைசென்ஸ், இட உதவி, வங்கிக்கடன் உள்ளிட்டவற்றை செய்து கொடுத்தால் அதில் எத்தனையெத்தனை ஏழைபெண்கள் சுயதொழில் முனைவர்களாகி இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையும் வளம் பெற்றிருக்கும். கோடிக்கணக்கான ஏழைகளின் வயிறும் பசியாறி இருக்கும். இதில் ஒரு இட்லியின் விலை ஒரு ரூபாய்க்கு பதில் இரண்டு அல்லது இரண்டரை ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும். ஆனால், சாப்பிடுபவர்களுக்கு நிச்சயமாக அது ஒரு சுமை இல்லை. மேலும் எந்த ஒரு திட்டமும் அரசை மட்டுமே முழுக்க, சார்ந்தியங்குவது நீண்ட காலத்திற்கு சாத்தியமில்லை. அது தன் சேவையால் தன்னைத்தானே நிலை நிறுத்திக் கொள்வதே சுதர்மம். 

ஏனெனில், ஒவ்வொரு நாளும் ஒரு உணவகம் தோராயமாக பத்தாயிரம் ரூபாய் இழந்து கொண்டுள்ளது. இதை ஆண்டு முழுவதுமாகவும், அனைத்து உணவகங்களுக்குமாகவும் கணக்கெடுத்து பார்த்தால் இழப்பு பல கோடிகளைத் தாண்டும். அரசு மையப்படுத்தப்பட்ட அதிகாரம் ஊழல், முறைகேடுகள் போன்றவற்றிற்கும் வழிவகுக்கும். 

அம்மா திட்டங்களில் காய்கனி அங்காடி முதலில் வரவேற்பு பெற்றது பின்னர் படுதோல்வி அடைந்துவிட்டது. முந்தைய ஆட்சியில் உழவர்சந்தைகள் பெற்ற வரவேற்பை இவை ஏன் பெறவில்லை, என ஆட்சியாளர்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சம்மந்தப்பட்ட மக்களின் பங்களிப்போடு அரங்கேற்றப்பட்டது தான் அன்றைய உழவர் சந்தைகள் பெற்ற வரவேற்புக்கு காரணமாகும். 

இதே போல் ரூ 20கோடி செலவில் ஜீலை மாதத்தில் கொண்டுவரப்பட்ட 100அம்மா மருந்தகங்களும் வரவேற்பு பெறவில்லை. ஏற்கெனவே கூட்டுறவு துறையில் இயங்கி கொண்டிருக்கும் 210 மருந்தகங்களுக்கு வலு சேர்க்கும் திட்டமாவது தீட்டியிருக்கலாம். அதுவுமில்லை. 

அம்மா மருந்தகங்கள் ஏன் வரவேற்பு பெறவில்லை? அங்கே மக்கள் கேட்கும் மருந்துகள் கிடைப்பதில்லை. எல்லா மருந்தகங்களும் அந்தந்த பகுதியிலுள்ள டாக்டர்களின் தயவால் மட்டுமே லாபகரமாகச் செயல்பட முடிகிறது என்பதே யதார்த்தமாக உள்ளது. மருந்தகங்களுக்கும் அருகாமையில் உள்ள மருத்துவர் நடத்தும் கிளினிக் மற்றும் மருத்துவமனைக்கும் உள்ள உறவு தான் மருந்தகங்களின் தலைவிதியை நிர்ணயிப்பதாக உள்ளது. 

இன்று தடுக்கி விழுந்தால் மருந்துகடைகளே என்ற அளவில் தெருவிற்கு தெரு பெருகி, பெரும் போட்டியை சந்திக்கும் அத்துறையில் அரசு மருந்தகங்கள் என்ன செய்யும்? அதுவும் மருந்து விலையில் 10% தள்ளுபடி என்பது ஏற்கெனவே சில மருந்தகங்கள் கையாளும் அணுகுமுறைகள் தான்! 

எனவே, தற்போது இல்லாத எந்த தேவையை ஈடுகட்ட அம்மா மருந்தகங்கள் முளைத்தன? 

இதற்கு பதிலாக அரசு மருத்துவமனையில் அத்தியாவசிய மருந்துகளை இருப்பில் வைத்து கொள்ள அக்கறை காட்டியிருக்கலாம்... "இந்த மருந்து இங்கே கிடையாது. போய் கடையில் வாங்கி வா..." என ஏழைகள் துரத்தப்படுவதற்கு முற்றுபுள்ளி வைத்திருக்கலாம்... 

அதுவுமில்லாமல் மருந்து தயாரிப்பில் இன்று முன்னணியில் உள்ள கார்ப்ரேட் நிறுவனங்கள் மருந்துவிலையை உற்பத்தி விலையைக் காட்டிலும் பற்பல மடங்கு லாபம் வைத்துக் கொள்ளை லாபம் ஈட்டுகின்றன... இதில் மருந்து மாத்திரை வாங்க இயலாமல் தடுமாறும் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு அரசே மருந்து உற்பத்தி தொழிற்சாலையை நிறுவி, உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்துகள் நியாயவிலையில் மக்களுக்கு கிடைக்க வழிவகுத்திருக்கலாம். ஏற்கெனவே செயல்பட்டு இடையில் மூடப்பட்டுவிட்ட அரசு மருந்து உற்பத்தி செய்த தொழிற்சாலைகளையாவது புனரமைத்திருக்கலாம்! 

இந்த வருடம் ஜூன் மாதம் துவங்கப்பட்டது அம்மா உப்பு வியாபாரம். இதற்கு ஆரம்பத்திலிருந்த வரவேற்பு தற்போது இல்லை. மேலும் இதே விலையிலேயும், இதற்கும் குறைவான விலையிலும் உப்பு கிடைத்துக்கொண்டுள்ளது. உப்பு விற்பனையில் டாடா, இந்துஸ்தான், ஐ.டி.சி, நிர்மா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் பிராண்டுகளோடு ஒப்பிட்டால் கூட மிக்குறைவான விலை வித்தியாசமே உள்ளது. ஏற்கெனவே தமிழ்நாடு உப்பு கழகம் வாலிநோக்கம் என்ற இடத்தில் உப்பு தயாரிப்பில் ஈடுபட்டு சந்தை செய்கிறது. மரக்காணத்தில் ஏழை எளிய ஆத்திராவிடர்கள் இணைந்து நடத்தும் கூட்டுறவு உப்பளகம் மிக நலிந்து உள்ளது. மிகக் குறைந்த கூலி, அடிப்படை பாதுகாப்பற்ற தொழில் சூழல், இதனால் ஏற்படும் உடல்பாதிப்புகள், எதிர்காலம் என்னாகுமோ என்ற கேள்விக்குறி... என்று உழலும் இந்த உப்பளகங்களை புத்துயிருட்டி, அத்தொழிலாளர்களை வாழவைக்க என்ன செய்யலாம் என திட்டமிட்டிருந்தால் அது மிகப்பயனுள்ளதாயிருந்திருக்கும். 

"அம்மா உப்பு இல்லையென்றால் சோற்றில் உப்புபோட்டே உண்ணமாட்டேன்" என யாரும் சபதமிட்டுக் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டுவிடவில்லை. 

உப்பை விடுதலை வேள்விக்கான கிரியா சக்தியாக அன்று உருவகப்படுத்தினார் மகாத்மா காந்தி. இன்று அரசியல் உள்நோக்கத்திற்காக அது கையிலெடுக்கப்பட்டிருக்கலாமோ என்னவோ...? 'உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்றெல்லாம் மரபு ரீதியான கருத்தியலைக் கொண்டுள்ள தமிழகத்தில் மக்களை நேரடியாகத் தன்னை விசுவாசிக்க வைக்கும் முயற்சியாக ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா வகை திட்ட அணிவரிசையில் உப்புத் திட்டம என்னவோ தப்பாகித்தான் போனது. 

அம்மா படம் போட்ட குடிநீர் பாட்டில் விற்பனை பேருந்து நிலையங்களில் தனியாரின் 15ரூபாய் பாட்டிலை ஒப்பிடும் போது விலை மலிவு தான்! ஆனால் ஒரு லிட்டர் தண்ணீர் சுத்திகரிப்பிற்கு ஆகும் செலவு ஒரு ரூபாய்க்கும் குறைவு தான்! ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் அந்த சுத்திகரிப்பு மெஷினை நிறுவ அதிக செலவாகாது. ஐந்துக்கு ஐந்தடி இடம் போதுமானது. பாட்டில் கொண்டுவருபவர்களுக்கு இரண்டு ரூபாயில் தந்தாலே அரசுக்கு நல்ல லாபம் தான்! 

இப்படி அம்மா பெயரில் ஜெயலலிதா படம் போட்டு ஏற்படுத்தப்படும் எல்லாதிட்டங்களுமே அத்தொழிலில் ஏற்கெனவேயுள்ள நிலவரங்களை கருத்தில் கொள்ளாது கொண்டுவரப்பட்டவையே! மேலும் ஏற்கெனவே வேறு பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள், அலுவலகர்களுக்கே இத்தகு புதிய திட்டங்களின் பொறுப்புகளும் திணிக்கப் படுகிறது. கள ஊழியர்கள் தான் தினக்கூலிக்கு எடுக்கப்படுகிறார்கள். 

ஒரு திட்டம் எதற்காகத் தொடங்கப்படுகிறது? அதன் சமூக தேவை என்ன? அதற்கான திட்டமதிப்பீடு என்ன? செயல்திட்டங்கள் என்னென்ன? அதை செயல்படுத்துவதற்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம்... போன்ற முக்கியமான எந்த யோசனைகளுமின்றி அந்த காலத்தில் மன்னருக்கோ, மகாராணிக்கோ இரவில் தோன்றும் கனவிற்கேற்ப அரசவையில் அறிவிக்கப்படும் அதிரடி அறிவிப்புகள் போல மக்களாட்சியிலும் அடுத்தடுத்து திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அதை எப்படியாவது நிறைவேற்றியே ஆக வேண்டும். ஏனென்றால் 'அம்மா' பெயர் கொண்டது, அம்மாவால் அறிவிக்கப்பட்டது என்ற ஒரே ஆணையில் அரசு நிர்வாகத்தை வருத்தி செயல்படவைப்பதின் எதிர்வினை அவர்கள் ஏற்கெனவே செய்து வந்த அரசு பணிகளை ஸ்தம்பிக்க வைத்துள்ளது என்பது கண்கூடான நிதர்சனம். அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் இன்றென்ன அறிவிப்போ, நாளை என்ன வருமோ என கலங்கித் தவிக்கிறார்கள். 

இந்த ரீதியில் அம்மா திரையரங்குகள் சென்னையில் இந்த ஆண்டு இறுதிக்குள் 15 இடங்களில் அதிரடியாக கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதோ அம்மா திரையரங்குகள் கட்டாவிட்டால் குடியே முழுகிவிடும் என லட்சோபலட்ச மக்கள் ஒற்றைக் காலில் தவமிருப்பதை தாங்க முடியாத தவிப்பில் அறிவிக்கப்பட்டது போல் இருக்கிறது இந்த அறிவிப்பு. 

இந்த ஆட்சி பதவி ஏற்ற இந்த மூன்றாண்டுகளில் சென்னையில் எட்டு அரசு பள்ளிகள் மாணவர்கள் வருகைக் குறைவை காரணம் காட்டி இழுத்து மூடப்பட்டுள்ளன .இன்னும் சில பள்ளிகளும் மூடப்படவுள்ளதாக தெரிகிறது. கல்வி கூடங்கள் மூடப்பட்டுவருவதும், திரையரங்குகள் திறக்கப்பட்டு வருவதையும் சம்பந்தப்படுத்துவது சிலருக்கு பிடிக்காமல் கூட போகலாம். ஆனால், மிகப்பரந்து விரிந்து கொண்டிருக்கும் சென்னையில் நூறாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட எழுப்பூர் குழந்தைகள் மருத்துவமனை ஒன்றைத் தவிர இன்று குழந்தைகளுக்கான உருப்படியான மருத்துவமனை வேறில்லை. இந்த மருத்துவமனையில் காணப்படும் நெரிசலோ சகிக்க கூடியதன்று. கோட்டூர்புரத்தில் தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட அண்ணா நூலகத்தை தகர்த்து, அங்கே சர்வதேச குழந்தைகள் மருத்துவமனை கட்டப் போகிறேன் என்றார் ஜெயலிலதா. எழுத்தாளர்களும், புத்தக ஆர்வலர்களும் நீதிமன்றம் சென்று இதற்கு தடை பெற்றனர். 

அதே சமயம் இந்த நூலகம் அருகிலேயே காலியாக உள்ள பெரும் நிலப்பரப்பை குழந்தைகள் மருத்துவமனை கட்ட பயன்படுத்தலாம் என ஆலோசனை தரப்பட்டது. 

அந்த ஆலோசனை பொருட்படுத்தப்படவில்லை. வேறு இடத்திலும் குழந்தைகள் மருத்துவமனை கட்டப்படவில்லை. இந்நிலையில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள 'அம்மா கிட்ஸ்' வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கேட்பது கிடைக்காது அல்லது தேவையானது மறுக்கப்படும். 
கொடுப்பதை பெற்றுக்கொள், தருவது என் அதிகாரம், பெறுவது உன் கடமை. 
இது தான் இன்றைய ஜெயலலிதா அரசின் அணுகுமுறையாக உள்ளது. 
அது சரி, திரையரங்குகள் கட்டுவது ஏதோ பாவச்செயல் போன்ற அர்த்தத்தில் போகிற போக்கில் சொல்லிவிட்டதாக நினைக்க கூடாது. 
மனிதன் எவ்வளவு வறுமை, பசி, நோய், துயரம் என்றிருந்தாலும் பொழுதுபோக்கும், ரசனை சார்ந்த லயிப்பும் வாழ்வில் இன்றியமையாத தேவையாக தொடர்ந்து கொண்டே இருக்கும். 
இன்னும் சொல்வதென்றால் பற்பலகலைகளை, கலைஞர்களை வாழவைத்துக் கொண்டிருப்பதே ஏழை எளிய மக்களின் ரசனை தான்! 

அதனால் குளு குளு திரையரங்கம், அதில் 25ரூபாய் கட்டணம் என்பது எதிர்ப்புக்குரியதல்ல. ஒரு வகையில் மிகவும் வரவேற்க வேண்டியதே. ஏனெனில் ஆண்டுக்கு சுமார் 150 படங்கள் தயாராகும் தமிழ் சினிமா உலகில் 50படங்களுக்கு மேல் திரையரங்குகளை காணாமல் பெட்டிக்குள் முடங்கி விடுகின்றன. புதியவர்களின் படம், சோதனை முயற்சிகள் பல இதனால் வெளிவராமலே முடங்கி உள்ளன. இது போன்ற புதிய முயற்சிகளை, கலைபடைப்புகளை, மிகக்குறைந்த பட்ஜெட் படங்களை ஆதரிக்கும் திரையரங்கங்களாக இவை இருக்கும் பட்சத்தில் கை கூப்பி வணங்கி வரவேற்கலாம். ஆனால், முதலமைச்சரின் பழைய படங்களை ரீமேக் செய்து ஓடவிடுவதற்காகவோ அல்லது முதலமைச்சர் புகழ்பாடும் படங்களையோ தான் திரையிட அனுமதி என்றாகுமானால் என்னாவது? கலைத்துறையோ ஏற்கெனவே முதுகெலும்பில்லாதவர்களின் புகழிடமாக உள்ளது. ஏற்கெனவே அரசு கேபிள் நிர்வாகத்தால் சேட்டிலைட் சேனல்களின் குரல் வளைகள் நெறிக்கப்பட்டு இருப்பதற்கே விடிவு காணவழியில்லை... இந்தச் சூழலில் உருவாக்கப்படும் திரையரங்குகள் கலைத்துறையை எப்படி ஆட்டுவிக்குமோ தெரியவில்லை... அதுவும் அரசு திரையரங்குகள் எப்படி பராமரிக்கப்படும் என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் ஏற்கெனவே மாவட்ட தலைநகரங்களில் உள்ள அண்ணா திரையரங்குகளின் அவலத்தை ஒப்பிட்டே இப்படி யோசிக்கத் தோன்றுகிறது. ஒரு வேளை 'அம்மா' என்ற பெயர் ஏற்படுத்தும் பயத்தால் அதிகாரிகள் சுத்தமாகக் கூட பராமரிக்கலாம். ஆனால் எக்கராணத்தை கொண்டும் அல்லது சலுகை கருதியும் கலைத்துறை அரசின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கி விடுவது நல்லதல்ல. 

எல்லாமே அம்மா, அம்மா என்றே பெயரிட்டுக் கொண்டே போனால் இந்த சமூகத்தில் முன்மாதிரியாக வாழ்ந்த சான்றோர்கள், தலைவர்கள் என்று யாருமே இல்லையா என்ன? கிட்டதட்ட அன்னதானத்திட்டம் போல நடத்தப்படும் அம்மா உணவகங்கள் வள்ளலார் பெயரை அல்லவா தாங்கியிருக்க வேண்டும்? 

இது ஒரு புறமிருக்க, இந்த ஒரு திட்டமானாலும் அதற்கான பணம் முழுமையும் மக்கள் தந்த வரிப்பணத்தை கொண்டே உருவாக்கி செயல்படுத்தப்படுகிறது. இதில் தனியொருவர் தன்னை முன்நிறுத்திக் கொள்வது ஏற்புடையதல்ல. அதுவும் அப்படி முன்நிறுத்திக் கொள்ளும் ஒற்றை நோக்கத்திற்காகவே திட்டங்கள் உருவாக்கப்படுவது மக்கள் பணத்தை தவறாக கையாளும் அபகீர்த்தியில் தான் கொண்டு சேர்க்கும்.

No comments: