Tuesday, September 2, 2014

இருள் சூழ்ந்த சமூகம் - இளந்தலைமுறையின் அவலம்

 -சாவித்திரிகண்ணன் 

மாணவர்களிடையே அடிதடி, வெட்டு, குத்து, பதட்டமான சூழல்கள் அடிக்கடி நிகழ்கின்றன. 

இரு கல்லூரி மாணவர்களிடையேயான மோதலிலும், கத்திக்குத்து சம்பவங்களிலும் சென்ற வருடம் சென்னையில் மட்டுமே 100க்கு மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மற்றொரு புறம் அரசு கல்லூரி மாணவர்கள் தினசரி அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது கூச்சலும், கலாட்டமாகவும் பயணிக்கிறார்கள்! பேருந்துகளை ஓங்கி தட்டிக்கொண்டு பாடுவது, மாணவிகளை சீண்டி கிண்டலடிப்பது, பெரும் கூச்சலெடுத்து பேசுவது, கெட்டவார்த்தைகளை பொது வெளியில் பிரயோகிப்பது... என அவர்கள் செய்யும் கலாட்டா உடன் பயணிப்பவர்களை அச்சுறுத்துவதாக உள்ளன. 

இதனால் எரிச்சலடைபவர்கள் கூட எதிர்த்து கேள்வி கேட்க முடியாமல் மனம் புழுங்கி உள்ளுக்குள் வேதனைப்பட்டவாறு பயணிக்கின்றனர். ஏதேனும் கேட்டால் மாணவர் கூட்டம் தாக்கி விடுமோ என்ற அச்சுசசத்தால் பொதுமக்கள் காட்டும் சகிப்புதன்மை மாணவர்களுக்கு மிகவும் சாதகமான அம்சமாகிவிடுகிறது. 


இது போதாதென்று 'பஸ்டே' என்ற அடாவடிக் கொண்டாட்டங்கள் வேறு! 
சம்பந்தப்பட்ட நாளில் அந்த பேருந்து முழுவதுமே மாணவர்களின் முழுக்கட்டுப்பாட்டிற்குச் சென்றுவிடும். 
மேற்கூரையில் ஏறி நடனமாடுவார்கள் 'ஒ'வென்று பேரிரைச்சலோடு நகரை வளம் வருவார்கள்! 

எதிரில் வருபவர்கள் எலலாம் மிரண்டு விலகி செல்வதைக் கண்டு உள்ளுக்குள் உவகை கொள்வார்கள்..! 

பேருந்து பயணிக்கும் வழிகளில் உள்ள கடைகளில் புகுந்து அகப்பட்டதை அள்ளுவார்கள்! 
இதற்கு பயந்து கடைக்காரர்கள் மடமடவென்று ஷெட்டரை சாத்துவதும் நடக்கும்! 
'இந்த சம்பவத்திற்கு அனுமதி தரக்கூடாது' என சென்னை உயர்நீதிமன்றம் பல முறை தடை ஆணை பிறப்பித்துள்ள போதிலும் இந்த 'பஸ்டே' கொண்டாட்டங்கள் அவ்வப்போது நிகழாமலில்லை. 

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் இன்று மதுபழக்கம் மட்டுமீறி அதிகரித்துக் கொண்டுள்ளது. 
அத்துடன் கஞ்சா போன்ற போதை பொருட்களின் புழக்கமும் பரவி வருகிறது. 

மாணவ சமுதாயம் இப்படிப்பட்டதொரு இழிநிலையில் உலாவக் காரணம் என்ன? 
அவர்களின் இந்த நடத்தைகளுக்கு அவர்கள் மட்டும் தான் காரணமா? எந்த சமூகத்திலிருந்து அவர்கள் உருவானார்களோ, 
எந்த குடும்பக் கட்டமைப்பிலிருந்து அவர்கள் வெளிவந்துள்ளார்களோ 
அந்த சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் இதில் பங்கில்லையா? சமூகத்திலும் சரி,வீட்டிலும் சரி அவர்களுக்கு எப்படிப்பட்டவர்கள் ரோல் மாடல்களாக இருக்கிறார்களோ... அவர்களைத் தான் அவர்கள் பிரதிபலிக்க முடியும். நம் மாணவர்கள் வேற்று கிரகத்திலிருந்து குதித்த அதிசயப்பிறவிகளா என்ன? ஆனால் பாதிக்கப்படும் பொது மக்கள் அப்படித்தான் கருதுகிறார்கள்...! "சே...ஸ்டுடன்ஸா இதுங்க, பொறுக்கிங்க... இவனுகள எல்லாம் முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே போடணும் சார்... "ஐயோ மோசமான கயவாளிப்பயலுக சார்! என்னா காட்டுமிராண்டித்தனம்... என்னா கூச்சலு... எல்லாம் கலிகாலம் தான் போங்க..." "படிக்கிற புள்ளிங்களா இதுங்க... கம்மனாட்டிப்பசங்க, சுத்த உதவாக்கரை தான்! இதுங்க வீட்டுக்கும் பாரம், நாட்டுக்கும் பாரம்..." என மக்கள் சகட்டுமேனிக்கு கொட்டித்தீர்த்துக் குமுறுகிறார்கள்...! ஆனால், இந்த மாணவர்கள் உண்மையில் பரிவோடு பார்க்கப்பட வேண்டியவர்கள்! ஏனெனில், இவர்கள் அனைவரும் பெரும்பாலும் அடிதட்டிலிருந்து முதன்முதல் கல்லூரியில் காலடிவைத்தவர்கள்! இவர்களின் குடும்பச்சூழலோ குடிகாரத்தகப்பன், கூலிவேலை செய்து படிக்க வைக்கும் அம்மா என்பதாகத் தான் இருக்கின்றது. பிள்ளைகள் பெரும்பாலும் தந்தையைப்பார்ப்பதே தங்களை தகவமைத்துக் கொள்வார்கள்! தனிமைப்பட்ட தாயின் அதீத பாசம் அவர்களை முரடர்களாக்கி விடுகின்றது. உலகத்திலேயே மிகவும் உன்னதமான பதவி தாயாகவும், தகப்பனாகவும் பொறுப்பேற்பது தான்! பிள்ளை வளர்ப்பில் பெற்றோர்கள் பெறும் ஞானம் என்பது ஒரு வகை என்றால், பெற்றோர்களின் பல்வேறு நடவடிக்கைகளில், அணுகு முறைகளில் பிள்ளைகள் கண்டடையும் கல்வி என்பது மற்றொரு வகை! பிள்ளை வளர்ப்பின் பரிணாம வளர்ச்சி என்பது பண்பட்டவர்களாக குழந்தைகளை உருவாக்குவது என்பது மட்டுமல்ல, பெற்றோர்களும் தங்கள் சகிப்புத்தன்மையாலும், பெருந்தன்மைகளாலும் தங்களை பண்படுத்திக் கொள்வதுமாகும்! ஆனால், நமது சமூக கட்டமைப்பில் குடும்பம் அதற்குரிய குணாதிசியங்களை இழந்து கொண்டிருக்கிறது. கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் கட்டமைக்க வேண்டிய களங்கள் அமைதி குலைந்து கந்தர் கோலமாக காட்சியளிக்கின்றன! மறுபுறம் சமூகத்தளமோ சகலவிதத்திலும் சீரழிந்துள்ளது. ஆசிரியர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் பார்த்து பின்பற்றத்தக்கவர்களல்ல. ஆன்மீக மையங்களோ ஆபத்தானவையாக மாறிவருகின்றன. தொண்டு செய்பவர்களாக கூறுபவர்கள் பொதுச்சொத்தை சூறையாடுகிறார்கள். வர்த்தகத்தில் தொழில்தர்மம் காணாமல் போய்விட்டது. கொள்ளை லாபம் வைத்து சம்பாதிப்பவர்கள் கெட்டிக்காரர்களாகப் புகழப்படுகிறார்கள்..!! அரசியல் என்பது அத்துமீறுவதற்காக கைகொள்ளப்படும் கருவியாகிவிட்டது. இந்தச்சூழலில் மாணவர்கள் மட்டும் சாதுவாக இருப்பது சாத்தியமேயில்லை. அவர்கள் அப்பாவியாக இருந்தாலுமே கூட நமது சினிமா, டி.வி.பத்திரிக்கைகள் அவர்களை அவ்வாறு தொடர அனுமதிப்பதில்லை. பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைப்பதே இன்று பெருமபாலான ஊடகங்களின் தொழில் தர்மமாகிவிட்டது. அரசு கல்லூரி மாணவர்கள் தங்களை ஆற்றுப்படுத்திக் கொள்ள...நாதியில்லை! அரசு கல்லூரிகளில் கலை, கலாச்சார விழாக்கள் இல்லை. ஒவ்வொரு இளம் உள்ளத்திலும் பீறிட்டு எழும் கலை, கலாச்சார படைப்பாற்றலை வெளிப்படுத்த களம் அமைத்துத் தருவதில்லை. அதனால் அவர்களே தான் தோன்றித்தனமாக மனம் போன போக்கில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமென ஆடித்தீர்க்கிறார்கள்..! இளம் பருவ ஆற்றலென்பது காட்டாற்று வெள்ளமாகும். அதை இருபுறமும் பண்பாடு, கலாச்சாரமெனும் பாதுகாப்பு தடுப்பு ஏற்படுத்தி தண்ணீர் வெள்ளத்தை தகுந்த வழியில் சென்று சேரவும், சமூகத்திற்கு பயன்படவும் செய்யவேண்டியது மூத்தோர் அனைவரது கடமையாகும்! நாம் அனைவருமே அக்கடமையை எந்த அளவுக்கு செய்கிறோம்..? குடும்பத்தோடு நிறுத்திவிடுவதும் குற்றம் தான்! நாம் பொதுத்தளத்தில் எவ்விதம் வெளிப்படுத்துகிறோம்..? பணம் சம்பாதிப்பதற்கானதாக மட்டுமே நம் உழைப்பு முழுமையும் தருகிறோமா? நம் கையில் கிடைக்கிற பணம் அதர்ம வழியில் வருகிறதா? அல்லது சமூகம் பயனடைய நாமும் பயன்பெறத்தக்க அளவில் வருகிறதா...? ஏனெனில், நாம் இளைய தலைமுறையினருக்கு வெறுமனே உபதேசம் செய்வதில் உபயோகம் ஒன்றுமில்லை. நம் செயல்பாடுகளும், வாழ்க்கையுமே அவர்களிடம் செல்வாக்கு செலுத்த முடியும் என்பதை நாம் ஆழமாக மனதில் பதியவைத்துக் கொள்வோமாக! நாம் சொல்லொன்றும், செயலொன்றுமாக வெளிப்பட்டால் நாம் சொல்வதெல்லாம் செல்லாக் கசாகிவிடும் இளைய தலைமுறையிடம்! ஆக, இந்த கட்டுரையின் அடிநாதம் இளைய தலைமுறையின் தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களை எச்சரிப்பதல்ல...! எச்சரிக்கை பெரியோர்களுக்கே!

No comments: