சாவித்திரிகண்ணன்
முன்னுரை
இந்தியாவில்தான் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம். சோறு, தண்ணீர், தூக்கத்தை மட்டுமல்ல கடமையையும் துறந்து கிரிக்கெட்டே கதி என்று உழலும் கோடானகோடி ரசிகர்களை கொண்ட நாடு இந்தியா. அந்த கிரிக்கெட் விளையாட்டின் பின்ணனியில் என்னென்ன நடந்துகொண்டிருக்கின்றது என்பதை அப்பாவி ரசிகர்கள் பலர் அறிவதில்லை. அந்த அறியாமைதான் சிலரது பண அறுவடைக்கு ஆயுதமாகிப்போனது. உண்மை என்னவென்பதை எப்போதுமே உணராத வண்ணம் ரசிகர்களை கிரிக்கெட் வெறியில் தொடர்ந்து வீழ்த்தி வைத்திருக்கும் ஒரு சாதூரியமான சதிச்செயல் ஒரு சங்கிலி தொடர்போல இங்கே சாத்தியப்படுத்தப்பட்டுள்ளது. கிரிக்கெட் விளையாட்டின் வெற்றி தோல்விகள் அதன் ரசிகர்களை அதிகமாகவே பாதிப்புக்குள்ளாக்குகிறது. இப்போதும் கூட இந்திய அணி ஆஸ்திரேலியாவில் ஈட்டிய அபாரவெற்றியும் கோலாலப்பூரில் இந்திய ஜுனியர் கிரிக்கெட்அணி கொண்டுவந்த வெற்றியும் ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆயினும் அவர்கள் இதயத்தில் சில சங்கடங்களால் எழுந்த சலனங்கள் ஓயவில்லை.
விளையாட்டு, விளையாட்டாக இல்லாமல் அது சில விரும்பதாகாத வழிமுறைகளில் வியாபாரமாகவும், அதையும் மீறி சில சமயங்களில் சூதாட்டமாகவும் அவதாரம் எடுக்கிறதே என்பதுதான் கோடானகோடி ரசிகர்களின் குமுறல். சமிபத்தில் கிரிக்கெட் வீரர்கள் ஏலம்விட்டு விலைபேசி வாங்கப்பட்ட சம்பவம் என்பது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பெரும் சறுக்கல். இலைமறைவு காய்மறையாக கிரிக்கெட்டில் நடந்த சூதாட்டம் அதிகாரப்பூர்வமாக அரங்கேறுகிறதோ என்றொரு கலக்கம்.கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்ல சமூக பிரக்ஜையுள்ள எவருக்குமே ஒரு விளையாட்டு சூதாட்டமாக மாறுவதில் தார்மீக கோபம்எழுவது தவிர்க்கமுடியாது. இதை நாம் அனுமதிக்க ஆரம்பித்தோம் என்றால் விளையாட்டில் மட்டுமல்ல சமூகத்திலும் பல சரிவுகளை ஏற்படுத்திவிடும். இதை சற்றே ஆழமாகவும்,அகலமாகவும் நாம் விவாதிப்போம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
'என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்' என்று மகாகவி பாரதியார் பாடிய வரிகள் தான் நினைவுக்கு வந்தது. இனி இவர்களை விளையாட்டு வீரர்கள் என்று எழுதுவதோ, அழைப்பதோ வெட்கமாக இருக்கிறது. சுதந்திரகாற்றை சுவாசிப்பது தானே வீரர்களுக்கான தனிப்பெருமை! அவ்வப்போது அடிமைகளாய் தன்னைத்தானே அடகு வைத்துக் கொள்வது என்பது எதன்பெயரால் நடந்தாலும் அது விளையாட்டுமில்லை, வீரமுமில்லை.
அடிமை இந்தியாவில் சுடர்விட்டு எரிந்த சுதந்திரதாகமும், சுயமரியாதை உணர்வும் விடுதலை பெற்ற இந்தியாவில் விடைபெற்று சென்று கொண்டிருக்கிறதா? சுதந்திர இந்தியாவின் அறுபது ஆண்டுகால அனுபவ படிப்பினை அடிமை வாழ்க்கையையே இந்தியர்கள் அதிகம் விரும்புகிறார்களோ என ஐயப்படவைக்கிறது.
பிப்ரவரி-20-ல் மும்பையிலுள்ள ஹில்டன் டவரில் ஒளிவுமறைவற்ற ஒரு வியாபாரம் அரங்கேறியது. அங்கே கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் விலைபேசி விற்கப்பட்டனர். அவர்களை ஏலம் கேட்டு எடுத்தனர் கோடீஸ்வரர்கள்...! தொலைகாட்சிகளில் இந்த காட்சிகள் உலகமெங்கும் ஒளிபரப்பானது. விக்கித்துப் போயினர் விளையாட்டு ரசிகர்கள்..! இந்த ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன ஆட்டக்காரர் மகேந்திரசிங் தோனி. அவரது விலை ஆறுகோடி. அடுத்த ஆட்டக்காரர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்டுரூ சைமண்ட்ஸ். அவரது விலை 5.4கோடி, இப்படி படிப்படியாக ஒவ்வொரு ஆட்டக்காரரின் பெயரும், விற்கப்பட்ட விலையும் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்ட போது அதிர்ந்தது ரசிகர்களின் நெஞ்சம். அதுவும் இந்தியவீரர்கள் மட்டுமின்றி இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற வெளிநாட்டு ஆட்டக்காரர்களும் இந்த ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இந்தியாவிலுள்ள எட்டு மாநகரங்களின் பெயரில் கட்டமைக்கப் பட்ட அணியில் ஏன் வெளிநாட்டுவீரர்கள் இடம்பெறுகின்றனர் என்பதெல்லாம் சாதாரண ரசிகர்களைப் பொறுத்தவரை புரிந்துகொள்ள முடியாத குழப்பமாகவே இருந்தது.
இப்படியாக சுமார் 3000 கோடிரூபாய்க்கு கிரிக்கெட் அணியும், ஆட்டக்காரர் களும் விலைபோயுள்ளனர்... என்ற செய்தி திகைப்பையும், திகிலையும் ஒரு சேரத்தந்தது. ஏன் இப்படி ஏலம் போடுகிறார்கள்? எதற்காக இவ்வளவு விலைகொடுத்து ஆட்டக்காரர்கள் வாங்கப்படுகிறார்கள்? இப்படி அதிக விலைகொடுத்து ஆட்டக்காரர்களை வாங்குபவர்களுக்கு என்ன பலன்? போன்ற கேள்விகள் பாமரமக்களின் நெஞ்சை குடைந்தன.
இதற்கு ஒரே வரியில் விடை அளிப்பதென்றால், 'இனி இந்தியாவில் கிரிக்கெட்டின் பெயரால் நடக்கப்போவது விளையாட்டல்ல, வியாபாரமுமல்ல, விபரீத சூதாட்டமே!'
அப்படியானால் இதுவரை நடந்தது விளையாட்டில்லையா? என்றால் அது விளையாட்டு வியாபரமாக விஸ்வரூபமெடுத்தபோதே அது கொஞ்சம், கொஞ்சமாக சூதாட்டாக பரிணாம வளர்ச்சி கண்டது. இது வரை தெரிந்தும் தெரியாமலும் நடந்த சூதாட்டம் இப்போது அங்கீகரிக்கப்பட்ட முறையிலேயே அரங்கேறிவிட்டது. அவ்வளவு தான்!இப்படியொரு நிலை கிரிக்கெட் விளையாட்டில் மட்டும் சாத்தியமானது எப்படி என்பதை சற்றே பின்னோக்கி பார்க்க வேண்டியுள்ளது.
கிரிக்கெட் வந்த வரலாறு
முதலாவதாக கிரிக்கெட் என்பது இந்த மண்ணுக்கான விளையாட்டல்ல. இது ஒரு அந்நிய விளையாட்டு. அடிமை இந்தியாவில் இங்கிலாந்துக்காரர்களால் இறக்குமதி செய்யப்பட்டது. நாம் அந்நியர்களை ஆட்சி அதிகாரத்திலிருந்து வெளியேற்றினோம். ஆனால் அவர்கள் தந்த மெக்காலேயின் அடிமைகல்வி தொடங்கி பல சீரழிவு கலாச்சாரங்கள் வரை நம்மிலிருந்து நீக்கமுடியாமல் நீக்கமற நிறைத்துக்கொண்டோம். நமது பாராளுமன்றம், நீதிமன்றங்கள் தொடங்கி பிரிட்டிஷ் ஆட்சியின் நீட்சியே இன்னும் தொடர்கிறது. அதிகார மையத்திலிருந்த ஆட்களை மாற்றிக்கொண்டு அதன் அம்சங்களை மட்டும் அப்படியே உள்வாங்கி கொண்டோம். ஆயினும் இதில் நாம் வெள்ளைக்காரர் களைப் போல் வெற்றி பெறவில்லை ஜனநாயகத்தை சாத்தியப்படுத்துவதி லாகட்டும், நிர்வாகத்தை நடத்துவதிலாகட்டும்...
சரி இந்த விவாதத்தை பிறகு வைத்துக்கொள்வோம்.
பிரிட்டிஷ் இந்தியாவில் அடிமைகளை வேலைவாங்கிக்கொண்டு சோம்பேறியாய் சுற்றித்திரிந்த பிரிட்டிஷ் கனவான்கள் பொழுதை போக்குவதற்காக இங்கே விளையாடியதுதான் கிரிக்கெட்! இதனால் தான் இன்று வரை கிரிக்கெட் உலக விளையாட்டாக உருமாறமுடியாமல் காலணி ஆதிக்க நாடுகளில் மட்டுமே காலூன்றிய விளையாட்டாகவுள்ளது.
அமெரிக்கா, ஜெர்மன், ரஷ்யா, சீனா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளெல்லாம் பொழுதைத்திருடும் கிரிக்கெட்டை ஒருபொருட்டாகவே மதிப்பதில்லை. ஆனால் உலகில் எங்குமில்லாத அளவுக்கு இந்தியாவில் மட்டும்இதற்காக மவுசு பெருகியது எப்படி? என்பது ஆய்வுக்குட்படுத்த வேண்டிய அவசிய கேள்வியாகும்.
அந்நிய ஆட்சி அகன்ற பிறகும் கூட 1960கள் வரை இந்தியாவில் கிரிக்கெட், கனவான்களின் விளையாட்டாகவே கருதப்பட்டது. வசதிபடைத்த நகரவாசிகள் மட்டுமே கிரிக்கெட் சங்கங்கள் அமைத்து ஆடிவந்தனர். ஒரு காலத்தில் சொத்துரிமை உள்ளவர்கள், படித்தவர்கள் மட்டுமே ஓட்டுப்போட்டு அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க அங்கீகாரம் பெற்றிருந்ததைபோல கிரிக்கெட் விளையாட்டும் மேல்தட்டு மற்றும் ஓரளவு நடுத்தர வர்கத்தின் ஆர்வத்திற்கும், ரசனைக்கும் உரியதாயிருந்தது. அன்றைய கிரிக்கெட் வீரர்களான லாலாஅமர்நாத், முஷ்டாக்அலி, சந்திரசேகர், பிரசன்னா, விஜேஹசாரே... போன்றவர்கள் தெருவில் நடந்து போனாலோ, கடைகளில் பொருள் வாங்கச் சென்றாலோ தெரிந்து கைகுலுக்குபவர்கள் சொற்பமே.
ஆனால் 1970 களுக்குப் பிறகு தான் இதற்கு ஓர் ஏறுமுகம் ஏற்பட்டது. கவாஸ்கரின் காலத்திலிருந்து அல்லது அதற்கும் சற்றே முன்பிருந்து தான் கிரிக்கெட் வீரர்கள் மெல்ல, மெல்ல கனவுலக நாயகர்களாக கட்டமைக்கப் பட்டனர்.
கதாநாயகர்களாக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்கள்;
கிரிக்கெட் பிறந்த இங்கிலாந்திலே கூட இல்லாத வகையில் இந்தியாவில் தான் கிரிக்கெட்டை வெறும் விளையாட்டாக பார்க்காமல் அதை ஒரு வெறித்தனமாக மாற்றும் போக்கு திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டது.
எப்பொழுது தொலைகாட்சிகளில் நேரடி ஒளிபரப்பு ஆரம்பமானதோ, எப்போது கிரிக்கெட் போட்டியை காரணம் காட்டி பள்ளி, கல்லூரிகளுக்கும், அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டதோ, அப்போது முதல் இந்த தீமைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது எனலாம்.
கிரிக்கெட் நடக்கும் ஸ்டேடியங்களுக்கு சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்து அரசாங்கமே இந்த சீரழிக்கும் மாயையை சீர்தந்து அரங்கேற்றியது.
ஊடகங்களிலும் கிரிக்கெட் தொடர்பான செய்திகள் பெரும் முக்கியத்துவம் பெற்றன. இந்தியாவில் கால்பந்து, ஹாக்கி, பேட்மிட்டன், கபடி போன்ற விளையாட்டுகளுக்கில்லாத முக்கியத்துவம் கிரிக்கெட்டிற்கு தரப்பட்டது.
எந்த ஒரு கலைக்கோ, விளையாட்டிற்கோ, அல்லது தனிநபருக்கோ கட்டமைக்கப்படும் பிரமைகளும், மாயைகளும் கண்ணுக்குத் தெரியாத ஒரு சதியை சாத்தியப்படுத்த நடக்கும் முயற்சிகள் என்பதே சரித்திரம் சொல்லும் சாட்சியமாகும்.கிரிக்கெட்டிலும் அது தான் நடந்துள்ளது.
கிரிக்கெட் போட்டிக்கு மக்களின் பெரும் கவனம் திரும்பிய பிறகு அந்த கவனத்தை தங்களுக்கும் திசைதிரும்பிக்கொள்ள அரசியல் வாதிகள் தொடங்கி தொழில்அதிபர்கள், திரைநட்சத்திரங்கள் வரை திட்டமிட்டனர். பெரிய மனிதர்களிடமிருந்த இந்த சின்ன பலஹீனங்களை பி.சி.சி.ஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் வாரியம் சரியாகவே பயன்படுத்திக்கொண்டது.
இப்படிப்பட்டவர்களுக்கு வி.வி.ஐ.பி பாஸ் தந்து குஷிபடுத்தியது. இதனால் பி.சி.சி.ஐ யின் அத்துமீறல்களும், அதிகாரதுஷ்பிரயோகங்களும் கேட்பாரில் லாமல் வளர்ந்து விஷவிருட்சமானது. காலப்போக்கில் அரசியல்வாதிகளுக்கு பி.சி.சி.ஐயின் மீது ஆசை பிறந்தது.
ஒருதினப்போட்டிகளால் உயர்ந்த செல்வாக்கு
1975-ல் ஐந்துதினப்போட்டி என்பது ஒரு தினப்போட்டியான போது ரசிகர்களின் ஆர்வம் வெறியாக வளர்த்தெடுக்கப்பட்டது. அதிகாலையிலேயே கிரிக்கெட் ஸ்டேடியத்தின் முன்பு காத்துக்கிடந்து டிக்கெட்டுகள் வாங்கிபார்க்கும் ரசிகர்கள், ஆயிரக்கணக்கில் டிக்கெட்டுகளுக்கு பணம் செலவழிக்கும் ரசிகர்கள் என பல்கி பெருகினர். டெலிவிஷனில் போட்டிகளைப்பார்க்கவும், ரேடியோவில் நேரடி வர்ணங்களை கேட்டு ரசிக்கவும், டெலிவிஷன் ஷோரூம்களின் முன் நின்று மந்தைகள் போல் மாய்ந்து மாய்ந்து ரசிக்கவுமாக மதிப்புமிக்க நேரங்கள் விரயமாயின. ஒரு வகையில், வளரும் நாடான இந்தியாவின் உண்மையான சமூகபிரச்சனைகளில், அரசியல் முறைகேடுகளில் மக்களின் கவனம் திரும்பாமல் திசைதிருப்பப்பட்டதில் அரசியல்வாதிகள் அகம் மகிழ்ந்தனர். தேசபக்தியை கிரிமினல் அரசியலுக்கு தேசிய கட்சிகள் சில கையாண்டதைப்போல, கிரிக்கெட்டிலும் தேசபக்தி தோற்றம் காட்டி பண அறுவடை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஆட்டக்காரர் சைமண்ட்ஸ் ஆண்ட்ருவை நம்மவர்கள் விலைகொடுத்து வாங்கி ஹைதராபாத் அணியில் விளையாட தேர்ந்தெடுத்திருப்பதின் மூலம் இந்த தேசபக்தி மாயையின் திரைவிலகிவிட்டது. இந்த சைமண்ட்ஸ்தான் நமது இந்திய வீரர் ஹர்பஞன்சிங் மீது குரங்கு என திட்டியதாக குற்றம் சுமத்தினார். அப்போது பாதிக்கப்பட்ட ஹர்பஞன்சிங்கிற்கு ஆதரவாகவும் சைமண்ட்ஸ்க்கு எதிராகவும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எப்படிஎப்படியெல்லாம் போராட்டம் நடத்தினர். ஒருமுறை ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நமது மத்திய அமைச்சர் சரத்பவார் விருது கொடுத்தபோது அதை அலட்சியத்துடன் பெற்றுக்கொண்டு சரத்பவாரை மேடையிலிருந்து தள்ளினர் ஆஸ்திரேலிய வீரர்கள். இதை தொலைகாட்சியில் அன்று பார்த்த அனைத்து இந்தியர்களும் கொதித்தனர்.
கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதில் டிக்கெட் மூலமாக கிடைக்கும் பெரும் தொகையைத் தவிர்த்து பெரிய நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட அபரிமிதமான ஸ்பான்சர் பணம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குள் ஊழல் பெருக்கெடுத்தோட வழிவகுத்தது.
ஆட்டக்காரர்களை தேர்ந்தெடுப்பது, போட்டிகளை நடத்துவது என எல்லாவற்றிலும் திறமையும், நேர்மையும் திருடுபோனது. 1980களில் மொத்தம் நடந்த 155 ஒரு தினப்போட்டிகளில் 86 போட்டிகளில் இந்திய அணிதோற்றது. ஒரு சில போட்டிகளில் ஆரம்பநிலையிலேயே தகுதி இழந்து வெளியேறியது. இந்தியமக்கள் தொகையில் இரண்டு சதவிகிதமேயுள்ள இலங்கை அணியிடம் பல முறை வெற்றியை பறிகொடுத்தது. ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வங்கதேசம் போன்ற நாடுகளிடம் அதிர்ச்சிதரத்தக்க, வெட்ககரமான தோல்விகளைக்கண்டது.
போதைக்கு அடிமையானவர்கள் அது எவ்வளவு தான் கெடுதியானது என்று தெரிந்தாலும், அதைவிடமுடியாது தவிப்பதைப்போல கிரிக்கெட் ரசிகர்களும் நமது அணி எவ்வளவு கீழ்தரமாக 'பெர்பார்மன்ஸ்' தந்தபோதிலும், கிரிக்கெட்டை வெறுக்க முடியாதவர்களாக கட்டுண்டு கிடக்கின்றனர்.
இது தான் கிரிக்கெட் சூதாடிகள் பலம் பெறுவதற்கு வாய்ப்பானது. 'புக்கீஸ்' எனப்படும் 'பெட்டிங்' நடத்தும் சூதாடிகள் கிரிக்கெட்டில் சட்டபூர்வமாக, அதிகாரபூர்வமாக புரளும் பணத்தைவிட பல மடங்கு அதிகப் பணத்தை சம்பாதித்தனர்.சூதாட்டத்தில் மேன்மேலும் பணம் அள்ள கிரிக்கெட்டின் வெற்றி, தோல்விகளை தீர்மானிக்கும் சக்தியாகவே இவர்கள் விஸ்வரூபமெடுத்தனர்.
இத்தகைய ஒரு அபாயகரமானபோக்கை தடுத்துநிறுத்தும் தார்மீகபலம் வெளிப்படாத ஒரு வெற்றிடமாகப் போனது நமது அரசியலும், சமூகமும்!
இது தவிர கிரிக்கெட் போட்டிகளில் ஆட்டக்காரர்கள் பெறும் சம்பாத்தியத்தைகாட்டிலும் பல மடங்கு அதிக சம்பளத்தை கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்குத் தரும் விளம்பர நிறுவனங்களின் மறைமுக மற்றும் நேரடி தலையீடுகளும் எந்த போட்டிக்கு எந்த வீரர் செல்லலாம் என்பதை தீர்மானித்தன.
ஆக, கிரிக்கெட் ஆட்டமானது பணமுள்ளவர்கள் ஆட்டிவைக்கும் பதுமையாகிப்போனது. அதாவது இந்தியாவில் கிரிக்கெட் என்பது சூதாடிகளின் புகலிடமாக பரிணாம வளர்சசி பெற்றது.
இருபதுக்கு 20 க்கு கிடைத்த அபார வரவேற்பு;
தகவல் தொழில்நுட்ப விஞ்ஞானயுகத்தில் நேரம் என்பது அரிதானதாகிவிட்டது. ஐந்து நாள்போட்டி, ஒரு நாளாக சுருங்கியதைப்போல ஒரு நாள் போட்டியே மூன்று மணிநேர போட்டியாக, ஒரு மாலைநேர சந்தோஷமாக சுருக்கப்பட்டது. இதற்கு கிடைத்த அபார வரவேற்பு பி.சி.சி.ஐ யின் பிசினஸ் திட்டமிடலுக்கு பிள்ளையார் சுழி போட்டது. ரவுண்ட் ராபின் முறையில் இருபதுக்கு-20, போட்டிக்கு திட்டமிட்டு பணத்தை அள்ள அடித்தளம் போட்டது, பி.சி.சி.ஐ.
இந்தியாவின் பிரிமீயர் லீக் உருவானதன் பின்ணணி
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தில்லுமுல்லுகளுக்கு உடன்பட மறுத்ததால் கபில்தேவ் தேசிய கிரிக்கெட் அகடமியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். நீக்கப்பட்ட கபில்தேவ் திறமையிருந்தும் புறக்கணிக்கப்பட்ட இளம் வீரர்களை ஒருங்கிணைத்து இந்தியன் கிரிக்கெட் லீக்{ICL}என்ற ஒன்றை ஜீ டிவியின் சுபாஷ்சந்திராவோடு இணைந்து தொடங்கினார். கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக தனது சேனலில் ஒளிபரப்பி வியாபாரம் செய்வதற்கான வாய்ப்பாக சுபாஷ்சந்திராவும் இந்தியன் கிரிக்கெட் லீக்கிற்கு அடித்தளம் போட்டார். இந்த இருவரின் கூட்டிணைவிற்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டது.
''ஐ.சி.எல் ஐ பொறுத்தவரை அதற்கு பணம் தான் பிரதானம்" என பி.சி.சி.ஐ குற்றம் சாட்டியது. பி.சி.சி.ஐ க்கும் அது தான் பிரதானம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் பி.சி.சி.ஐ க்கும் பணத்தை தவிர வேறெதுவுமே பிரதானம் இல்லை என்பது உலககோப்பையில் தகுதிசுற்றில் கூட கலந்துகொள்ள வாய்ப்புபொறாத இந்திய அணியின் வங்கதேசத்துடனான படுதோல்வியில் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. எனவே கபில்தேவ் களத்தில் இறங்கினார், ''இந்தியன் கிரிக்கெட் லீக் மூலம் கிரிக்கெட்டில் தரமும், கிரிக்கெட் வீரர்களின் தரமும் உயர்த்தப்படும்'' என உத்திரவாதமளித்தார்.
இதை இப்படியே விட்டால் இந்திய கிரிக்கெட்டை கபில்தேவ் கபளிகரம் செய்துவிடுவார் என கலவரமடைந்தது பி.சி.சி.ஐ. உலககோப்பை படுதோல்விக்குப் பிறகு பற்பல புதிய கட்டுபாடுகளைக் கொண்டுவந்தது. ஏதோ கட்டுக்கோப்பான நிறுவனம் போல் தன்னைக்காட்டிக்கொள்ள முயன்ற பி.சி.சி.ஐ இறங்கி வந்தது. கபில்தேவ் வசம் செல்பவர்களை தடுக்கும் நோக்கத்துடன் இந்தியன் பிரிமியர் லீக்கை {ஐ.பி.ல்} சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்படுத்தியது பி.சி.சி.ஐ.
நமது பி.சி.சி.ஐ. தான் உலகத்திலேயே மிகப்பணக்கார விளையாட்டு நிறுவனம். இது தன்னுடைய வருமானத்தில் 26% ஆட்டக்காரர்களுக்கு அள்ளித்தருகிறது. தற்போது ஒரு நாள் போட்டியில் விளையாடும் ஆட்டக்காரர்களுக்கு ஒரு நாள் சம்பளம் ரூ36,000 தருகிறது. எனவே பி.சி.சி.ஐ. யின் பின்ணணியில் உருவான இந்தியன் பிரிமியர் லீகிற்கு அனைத்து ஆட்டக்காரர்களும் ஆதரவளித்தனர். முன்னாள் ஆட்டக்காரரான சுனில் கவாஸ்கர் ஐ.பி.எல்லுக்கு ஆஸ்தான ஆலோசகரானர்.
சுனில் கவாஸ்கர் காலத்தில் ஐந்து நாள் போட்டிக்கு அன்றைய தினம் ஆட்டக்காரர்கள் பெற்ற மொத்த தொகையே ரூபாய் 2,000 ரூபாய் தான்! ஆனால் அதே ஆட்டக்காரர்கள் இன்று ஓய்வூதியாக பி.சி.சி.ஐ யிடமிருந்து பெறுவதோ மாதமாதம் ரூ35,000. எனவே கவாஸ்கர், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் ஐ.பி.ல் அணியின் தேர்வுக்கு உதவ முன்வந்துவிட்டனர்.
கிரிக்கெட்டில் சூதாட்டம் நுழைந்தது எப்போது?
கிரிக்கெட் சூதாட்டம் இன்று உலகந்தழுவி வளர்ந்துள்ளது. எனினும் இதன் தாயகம் இந்தியா தான்! ஆரம்பகாலங்களில் மிகச்சிறிய அளவில் ரசிகர்கள் தங்களுக்குள் பெட்டிங் கட்டுவது ஒரு ஆர்வக்கோளாறாக மட்டுமே அறியப்பட்டிருந்தது. இது அறிமுகமான இரு நண்பர்களுக்கிடையிலோ, உறவினர்களுக்கிடையிலோ, ஒரே இடத்தில் வசிப்பவர்கள், அல்லது வேலைபார்ப்பவர்களுக்கிடையே தங்கள் அபிமான கிரிக்கெட் வீரர்களைப்பற்றிய நம்பிக்கையின் உறுதிப்பாடாக நடந்தேறியது.
ஆனால் இது ஒரு பிரம்மாண்டமாக விஸ்வரூபமெடுக்க ஆரம்பித்தது 1980களின் ஆரம்பத்தில் தான்! 1983-ல் இந்திய கிரிக்கெட் அணி உலககோப்பையை வென்றுவந்தது ஏதோ ஒரு உலகமகாசந்தோஷமாக இந்திய மீடியாக்களில் பிரச்சாரம் செய்யப்பட்டு, கிரிக்கெட் மீது மக்களிடம் பிரம்மையையும், பிரேமையையும் ஒரு சேரக்கட்டமைக்கப்பட்டது.
கிரிக்கெட் போட்டிகள் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பானபோது, ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டமாயையை காசு பணம் சம்பாதிக்க கையிலெடுத்தனர் வியாபாரிகள். இது சாதாரண மனிதர்களை பெரும் பணக்காரர்களாக, கோடீஸ்வரர்கள் நிலைக்கு உயர்த்தியது. கம்யூட்டர், இண்டெர்நெட், செல்போன் போன்ற விஞ்ஞான வளர்ச்சிகள் இந்த 'பெட்டிங்' விஸ்வரூபமெடுக்க பெருந்துணையாகியது.
டெல்லியில் ஒரு வங்கியின் சாதாரண ஊழியராக இருந்தவர் முகேஷ்குமார் குப்தா. இவர் கிரிக்கெட் சூதாட்டத்திற்குள் நுழைந்தார். கிடுகிடுவென பெரும் உயரத்தை எட்டினார். யாருக்கும் சந்தேகம் வந்துவிடாதபடி ஒரு நகைக்கடை ஆரம்பித்து ஒரு நகைவியாபாரியாக சமூகத்தில் வஙம் வந்தார். இவர் 1988தொடங்கி 1997 வரை சுமார் பத்தாண்டுகள் பல கிரிக்கெட் போட்டிகளில் புக்கீஸ் என்றழைக்கப்படும் கிரிக்கெட் தரகராக களம்கண்டு ஒரு மிகப்பெரும் மரியாதைக்குரிய செல்வந்தர் நிலையை அடைந்து பிறகு விலகிக்கொண்டார். இவரைப் போல மற்றொரு கிரிக்கெட் தரகரான சஞ்சிவ்சாவ்லா பெட்டிங்கில் அள்ளிய பணத்தைக்கொண்டு லண்டன் மாநகரில் 'செட்டி'லாகிவிட்டார்.
இந்தியாவில் பல ஆண்டுகளாக கிரிக்கெட் சூதாட்டம் நடந்துவந்துள்ளபோதிலும் அதிகாரபூர்வமாக இதில் முதலில் அகப்பட்ட விளையாட்டு வீரர்கள் அசாரூதினும், அஜய் ஜடோஜாவும் தான்!
இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கதாநாயகனாக வலம் வந்த அசாருதின் 15,500 ரன்கள் குவித்த வகையில் ஒரு அபாரமான பேட்ஸ்மேனாகவும், இந்திய அணியின் காப்டனாகவும் அறியப்பட்டிருந்தார். அதேபோல் அஜய் ஜடோஜாவும் சிறந்த பேட்ஸ்மேனா. ரசிகர்களால் கொண்டாடப்பட்டிருந்தார். இவர்களோடு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான மனோஜ்பிரபாகர், இந்திய அணியின் பிசியோ தெரபிஸ்டான டாக்டர். அலி இரானி மற்றும் அஜய்சர்மா போன்றோரும் இந்திய புலனாய்வு துறையான சி.பி.ஐ யால் விசாரிக்கப்பட்டு கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்புள்ளவர்களாக அறிவிக்கப்பட்டனர். அசாருதினும். அஜய்சர்மாவும் வாழ்நாள் முழுக்க கிரிக்கெட்டிலிருந்து விலக்கிவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் 2000 ஆண்டு அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகள் உருவாக்கியது.
இதில் சி.பி.ஐ இயக்குநர் பி.மாதவன் தாக்கல் செய்த 162 பக்க புலனாய்வு விபரங்கள் பல திரைமறைவு உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கியது. அதுவும் குறிப்பாக இந்திய கிரிக்கெட் தரகர் முகேஸ்குமார் குப்தா கொடுத்த வாக்குமூலங்கள் கிரிக்கெட் ரசிகர்களின் கண்களைத் திறந்தது.
நமது அசாருதின் மூலமாகத்தான் தரகரான முகேஸ்குமார் குப்தாவிற்கு தென் ஆப்ரிக்க காப்டன் ஹன்சிகுரோனி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். நமது முன்னாள் ஆட்டக்காரரான மனோஜ்பிராபகர் மூலமாகத்தான் சர்வதேச விளையாட்டுவீரர்களான முன்னாள் மேற்கத்திய அணியின் காப்டன் பிரைன்லாரா, முன்னாள் இங்கிலாந்து அணிகாப்டன் ஸ்டீவார்ட், ஆஸ்திரேலியன் பாட்ஸ்மேன் டீன்ஜோன்ஸ், முன்னாள் இலங்கை அணி காப்டன் அர்ஜுனா ரணதுங்கே மற்றும் அரவிந்தசில்வா போன்றோர் கிரிக்கெட் தரகர் எம்.கே.குப்தாவிற்கு அறிமுகமாகியுள்ளார். இப்படியாக எட்டு நாட்டு கிரிக்கெட் அணியினர் நமது இந்திய கிரிக்கெட் தரகரின் தொடர்பில் பணம் பெற்றுள்ளனர்.
1994-ல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் மாட்சில், 'தீவிரம் காட்டவேண்டாம்' என்பதாக சுமார் இரண்டரைகோடி ரூபாய் தந்ததாக எம்.கே குப்தா கூறியுள்ளார்.
பாகிஸ்தானூடனான கிரிக்கெட் போட்டியை தேசபக்த கண்ணோட்டத்தில் தீவிரமாக எடுத்துக்கொண்டு லட்சக்கணக்கில் பெட்டிங் கட்டிய ரசிகர்களின் பணத்தை, ரசிகர்களின் நம்பிக்கையை பொய்யாக்குவதன் மூலம் தான் அபகரிக்கமுடியும். அதனால் அதற்கு அனுசரணையாக ஆட்டக்காரர்கள் உடன்பட்டால் கணிசமான பணம் தருகிறேன் என கிரிக்கெட் தரகர்முன்வந்த பெரிய தொகையில் ஆட்டக்காரர்கள் விழுந்துவிட்டனர்.
இப்படி கிரிக்கெட் வெற்றியை தேசத்தின் பெருமையாகவும், கிரிக்கெட் தோல்வியை நாட்டின் அவமானமாகவும் கருதும்படி கிரிக்கெட் ரசிகர்களை தூண்டிய பல்வேறு அணுகுமுறைகளும், உணர்ச்சிபோக்குகளும் சூதாடிகளுக்கு பணத்தை கொள்ளை கொள்ளவே பயன்பட்டுள்ளது.
தாங்கள் கதாநாயகனாக நினைத்த கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் கறைபடிந்தவர்கள் என அறிய நேர்ந்தபோது அப்பாவி ரசிகர்கள் நெஞ்சம் குமுறினர். இதை ஒரு சூதாட்டக்குற்றமாக கருதி சுலபமாக மன்னிக்க முடியவில்லை. 'இது மிகப்பெரும் தேசத்துரோகம், நாட்டின் கௌரவத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி' என்பதாகவே அன்று கிரிக்கெட் ரசிகர்கள் கருதினார்கள்.
இப்படியாக இந்திய விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி தென்ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் குரேனேவ் தொடங்கி பல நாட்டு வீரர்களையும் இந்திய ரசிகர்கள் விலைபேசி ஆட்டுவித்துள்ளனர்.
அதாவது, இதன்மூலம் இந்திய வீரர்கள் ஜெயிப்பதையும், தோற்பதையும் கிரிக்கெட் தரகர்களும், அவர்களிடம் புரளும் பலகோடி ரூபாய் பணமும் தான் தீர்மானித்துள்ளது, அந்த விளையாட்டு வீரர்களின் திறமையல்ல... என்பதே கடந்த கால விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்ட உண்மை.
இப்படி சட்டவிரோதமான, பல கோடி புரளும் ஒரு சூதாட்டத்தை வெற்றிகரமாக நடத்த மும்பையின் நிழல்உலக தாதாவான இப்ராஹிம் தாவூத் தரகர்களுக்கு உதவியுள்ளார் என்பதும் சி.பி.ஐ விசாரணையில் வெளிவந்த உண்மைகளாகும். இந்தியகிரிக்கெட் ஆட்டக்காரர்களை மட்டுமின்றி பாகிஸ்தான் ஆட்டக்காரர்களை பணம்பேசி பணியவைக்கவும் இப்ராகிம்தாவூத் துணைபோயுள்ளார். பாகிஸ்தானில் நடைபெற்ற விசாரணையில் அந்நாட்டு அணியின் 'மாலிக்' வாழ்நாள் முழுக்க கிரிக்கெட் ஆட்டத்திலிருந்து விலக்கப்பட்டதும், வாசிம் அக்ரம் அபராதம் விதிக்கப்பட்ட தும் அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களை அவமானத்தில் ஆழ்த்திய சம்பவங்களாகும்.
இந்தியாவில் சி.பி.ஐ தனதுவிசாரணை முடிவில், "இவ்வளவு பெரிய ராக்கெட், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகிகளுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை" என்று குறிப்பிட்டிருந்தது.
ஆனால் அன்றைய பி.சி.சி.ஐ தலைவர் ஏ.சி.முத்தையா, சி.பி.ஐ உண்மைகள் வெளியான நாளில், "கிரிக்கெட் வரலாற்றில் இன்று மோசமான நாள்" என்று வர்ணித்தார். 'அன்று மட்டும் தானா...?'
சூதாடி பணம் கண்டவர்களால் சும்மா இருக்க முடியாது. இப்படியெல்லாம் உண்மைகள் வெளிவந்தாலும் அவர்கள் வெவ்வேறு ரூபங்களில் தங்கள் சித்துவிளையாட்டுகளை அரங்கேற்றவே செய்தனர். கிரிக்கெட்டிலுள்ள மாயைகளும், மயக்கங்களுமே மேற்படி சதிச்செயல்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கிகொடுக்கிறது. இப்போது வெளிநாட்டு ஆட்டக்காரர்களே இந்தியாவின் எட்டு அணிகளிலும் எட்டுபேர் வீதம் இடம் பெற்றுள்ளனர். இது இவர்களை அணுகமுடியாத தூரத்திலிருந்த 'புக்கீஸ்'களுக்கு அருகிலேயே நிற்க வைத்ததைப்போலாகும். "இன்றைக்கு இந்தியாவில் கிரிக்கெட் மட்டுமே முதலீடு செய்து லாபமீட்டும் ஒரு விளையாட்டாக உள்ளது. ஆகவே தான் அதில் நான் பணம் போட்டுள்ளேன்" என கல்கத்தா அணியை 294கோடிக்கு வாங்கியுள்ள நடிகர் ஷாருக்கான் கூறியுள்ளார். இந்த நிலையில் சி.பி.ஐ விசாரணையின் போது கிரிக்கெட் தரகர் எம்.கே.குப்தா சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. "ஒரு லாபகரமான தொழிலாக இருக்குமென்று விளையாட்டாக கிரிக்கெட்டை தேர்ந்தெடுத்து நுழைந்தேன். ஆனால் அது என்னை சூதாட்டத்திற்கு திசைமாற்றிவிட்டது என்பதே கசப்பான உண்மை."
அன்று கசப்பான உண்மையாக கண்டறியப்பட்டதைத்தான் இன்று தங்களுக்கு இனிப்பான உண்மையாக்கிகொள்ள இறங்கியுள்ளனர் சிலர்.
பேராசையின் விளைவு பேர வியாபாரம்
உலகிலேயே வேறெந்த நிறுவனங்களைக்காட்டிலும் மிகப்பணக்கார நிறுவனமான பி.சி.சி.ஐ.2006-2007ஆம் நிதியாண்டில் ஈட்டிய நிகரலாபம் 652கோடி!
2007-2008ஆம் ஆண்டிற்கான அதன் இலக்கு 862கோடி.
இப்படி சில நூறு கோடிகளை மட்டுமே லாபம் பார்த்துக்கொண்டிருப்பது சில்லறைத்தனமானது. நம்முடைய போட்டியை வைத்து புக்கீஸ்கள் ஆயிரம் கோடிகளுக்கு மேல் அள்ளிச்செல்லும் போது நாம் ஏன் இன்னும் பணத்தை அள்ள முடியாது? அதற்கு என்ன செய்யலாம் என திட்டமிட்டனர் பி.சி.சி.ஐ. நிர்வாகிகள்.அதிலும் பி.சி.சி.ஐயின் துணைத்தலைவர் லலித்மோடி துடிப்பாக களத்தில் இறங்கினார்.
அப்போது இருபதுக்கு-20க்கு கிடைக்கும் அபரிமிதமான வரவேற்பை கொண்டு எப்படி அறுவடை நடத்தலாம் என விவாதிக்கப்பட்டதின் விளைவே, எட்டு அணிகள் உருவாக்கப்பட்டதும், அணிகளும், ஆட்டக்காரர்களும் ஏலத்தில் எடுக்கப்பட்டதுமாகும். எட்டு அணிகளின் மொத்த விற்பனை மூலம் இந்தியன் பிரிமியர் லீக்கிற்கு ரூபாய் 2839 கோடி பணம் கிடைத்துள்ளது. இனிநடத்தப்படும் போட்டிகளுக்கு ரூ 6818கோடிகான ஒப்பந்தத்தை ஐ.பி.எல் போட்டுள்ளது. ஆக, ஒரே ஆண்டில் தன்னுடைய லாபத்தை பல மடங்கு அதிகரித்துக்கொண்டது பி.சி.சி.ஐ.
ஆட்டக்காரர்களுக்கு கிடைக்கும் அபார வருமானங்கள்
பற்பல வெற்றிகளை குவித்தாலும் இலங்கை, இங்கிலாந்து, போன்ற நாடுகளில் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் சாதாரண மனிதர்களாக சகஜமாக நடமாடுகிறார்கள். ஆனால் இந்தியாவில் சாதுர்யமான சந்தைப்படுத்தலின் மூலம் கிரிக்கெட் வீரர்கள் வேறெவர்களையும் விட, அதாவது மிகப்பெரிய தொழிலதிபர்கள், சினிமா நடிகர்களை விட அதிக வருமானம் ஈட்டுகின்றனர். இப்போது ஏலம் மூலமாக ஆட்டக்காரர்களுக்கு அளிக்கப்படும் பணம் என்பது இருபதுக்கு-20 எனப்படும் சுமார் 16 ஆட்டங்களுக்கானது மட்டுமே. அதாவது மொத்தம் சுமார் 48 மணி நேரம் விளையாடுவதற்காகவே ஒவ்வொரு வீரருக்கும் 40லட்ச ரூபாயிலிருந்து 6கோடி ரூபாய் வரை அளிக்கப்பட்டது. தவிர ஒரு நாள் போட்டிகள் துலிப், புச்சிபாபு, விஜய்ஹாசாரிய என பல போட்டிகளில் கிடைக்கும் ஊதியங்கள் தனியாகும். ரஞ்சித் போட்டிக்கான பரிசுத்தொகை 50 லட்சம்.
இதெல்லாம் போக இவர்கள் அபாரமாக ஜெயிக்கும் போது அந்தந்த மாநில அரசுகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் அள்ளித்தரும் பரிசுத்தொகை பல லட்சம்.
இப்படியாக விளையாட்டுகளில் கிடைக்கும் பணம் ஒரு புறமிருக்க விளம்பரங்களில் தோன்றுவதன் மூலமும் பலகோடி ரூபாய் பணத்தை கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் பெறுகிறார்கள். உதாரணதத்திற்கு சச்சின் டெண்டுல்கரின் ஒர் ஆண்டிற்கான விளம்பர வருமானம் 100கோடி ரூபாய்க்கும் அதிகமாகும்! ஒரே ஒரு விளம்பரத்தின் மூலம் தோனி பெறும் தொகை சுமார் ஒருகோடி!{பூச்சிகொல்லி மருந்தை கலந்து மக்களின் நலன்களுக்கு கேடு செய்யும் பெப்சி, கோகோகோலா போன்ற நச்சுபானங்களை மக்களிடையே பரப்பும் நாயகர்கள்}
அலட்சிய படுத்தப்படும் மற்ற விளையாட்டு வீரர்கள்
இந்தியாவில் கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கு தரப்படும் மிதமிஞ்சிய முக்கியத்துவமும், அளவுக்கு மீறிய பொருளாதார ஆதரவும் ஹாக்கி, கால்பந்து, பேட்மிட்டன், வாலிபால், தடகளம்,வில்வித்தை,கேரம்,கபடி... போன்ற பல தளங்களில் உள்ள விளையாட்டு வீரர்களை சோர்வடைய வைத்துள்ளது.
இதற்கு சமீபத்திய ஒரு உதாரணம் செப்டம்பர் 2007-ல் இந்திய அணி உலககோப்பையை வென்று வந்த போது மும்பையில் அவர்களுக்கு பிரம்மண்டமாக வரவேற்பு ஊர்வலம் நடத்தி போக்குவரத்தை ஸ்தம்பித்த நிகழ்வாகும். அப்போது கிரிக்கெட் ீரசிகர்களின் கனல்மூட்டி வளர்க்கப்பட்ட மோகத்தீயில் தாங்களும் குளிர்காயும் குயுக்தியுடன் மத்திய அமைச்சர்களும், மஹாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், ஹரியானா, ஜார்கண்ட் முதல்வர்களும் பரிசுத்தொகையை அள்ளித் தந்த போது அதற்கு முன்னதாக ஆசிய கோப்பையை வென்ற ஹாக்கி அணியை மத்திய அரசோ, மாநில முதல்வர்களோ கண்டுகொள்ளாதது ஏன்? என குமுறி வெடித்த ஹாக்கி வீரர்கள் 'நாங்கள் என்ன அநாதைகளா? ஏன் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை என உண்ணாவிரதம் இருந்தனர்.
பல விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்குப் பெயர்வாங்கித்தந்து இந்தியாவிற்கு உலக அரங்கில் ஒரளவு மதிப்பை தேடித்தந்த தேசிய விளையாட்டான ஹாக்கிவீரர்களுக்கே இந்தகதி என்றால் மற்ற விளையாட்டு வீரர்களின் நிலையை சொல்வதற்கே வார்த்தைகள் இல்லை.
நமது நாட்டில் திறமையிருந்தும் சிபாரிசில்லாமல் முன்னுக்கு வருபவர்கள் அபூர்வம். அப்படியே அவர்கள் வந்து உலக அளவிலான போட்டிக்கு தேர்வானால் அவர்கள் பயணச்செலவின்றி படும் அவஸ்தைகள் சொல்லிமாளாது.
இவ்வளவு பணம் ஈட்டும் இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டுவாரியம், கிரிக்கெட் வீரர்களும் தங்களுக்கு கிடைக்கும் அபரிதமான பணத்தின் ஒரு பகுதியை வசதி வாய்ப்பில்லாத மற்ற விளையாட்டுகளுக்கோ, வீரர்களுக்கோ இது வரை வழங்க முன்வந்ததில்லை. {இப்போது எழுந்துள்ள கடுமையான விமர்சனங்களையடுத்து கிரிக்கெட் வாரியம் ஆண்டுக்கு நூறு கோடி ரூபாய் மற்ற விளையாட்டுகளுக்கு தருவோம் என அறிவித்துள்ளது.இப்படி சூழல் நிருபந்தத்தின் காரணமாக முன்வந்த சொற்ப பணத்தால் பி.சி.சி.ஐ தன்னை தற்காத்துக் கொள்ள முயன்றுள்ளது.}
இதற்கு மிகச் சமீபத்திய உதாரணங்கள் பிரான்சில் நடந்த சர்வதேச கேரம் போட்டியில் வென்று சாதனை புரிந்த ரிக்ஷா தொழிலாளியின் மகள் இளவழகி நாடு திரும்பியபோது அவரை வரவேற்கவோ, பாராட்டி பரிசு தரவோ நாதியிில்லை. அகில இந்திய மல்யுத்த போட்டிகளில் பதக்கம் வென்ற புருஷோத்தமன் என்ற இளைஞர் வறுமை காரணமாக உலக நாடுகளுக்கு இடையேயான போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை.
இப்படி மற்ற விளையாட்டுகளை அலட்சியப்படுத்துவதால் தான் நம்நாடு தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெறுவதில்லை. ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை தட்டி வர முடியவில்லை.
ஒரு சின்னஞ்சிறிய தீவு நாடான டிரினிடாட்-டொபக்கோ என்ற நாடு கூட உலககோப்பை இறுதிபோட்டியில் தகுதிபெற்று ஜெர்மனியில் நடைபெற்ற 32 நாடுகளுக்கிடையிலான உலக கோப்பை இறுதிப்போட்டியில் தேர்வு பெற்றது. இந்த நாடடின் மக்கள் தொகை வெறும் 13 லட்சம் தான்! ஆனால் 110 கோடி மக்கள் தொகை கொண்ட நமது இந்திய நாடோ உலககோப்பை இறுதிப்போட்டிகளில் இதுவரை தகுதிபெறக் கூட தன்னை தயார்படுத்திக்கொள்ள விில்லை.
யாருக்கும் வெட்கமில்லை
'அச்சமும், பேடிமையும், அடிமைச்சிறுமதியும் உச்சத்திற்கொண்டாரடி, ஊமைச்சனங்களடி' என்பற்கேட்ப விற்பனைப் பண்டங்களைப் போல் விளையாட்டு வீரர்கள்{?} விற்கப்பட்டதற்கு, விலைபேசப்பட்ட விளையாட்டு ஆட்டக்காரர்கள் தரப்பிலும் சரி, விளையாட்டு நிறுவன நிர்வாகிகள் தரப்பிலும் சரி யாரும் வெட்கப்பட்டதாகத் தெரியவில்லை. அதிக விலைக்கு விற்கப்பட்ட மகேந்திரசிங் தோனியின் பெற்றோர்கள், ''அதிக விலைக்கு எங்கள் மகன் விலைபோயிருப்பது சந்தோஷத்தை தருகிறது. சந்தேகமேயில்லை இது பெருமைப்பட வேண்டிய விஷயம் தான்...'' என புளகாங்கிதப்பட்டு கொண்டனர்.
பெயர் பெற்ற ஆட்டக்காரர்களான சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், சவுரவ் கங்குலி, வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங் போன்றோர் நல்ல வேளையாக விலைபேசப்படவோ, விற்கப்படவோ இல்லை என்று ஒரு சிலர் ஆறுதல் பட்டுக்கொண்டனர். ஆனால் மேற்படி இந்த வீரர்கள் தாங்கள் பிரநிதித்துவப்படுத்தும் மாநிலத்தில் எந்த ஆட்டக்காரர் அதிக விலைக்கு வாங்கப்படுகிறாரோ அவரைக்காட்டிலும் 15 சதவிகிதம் அதிகம் விற்கப்பட்ட வர்களாக அர்த்தப்படுத்தப்படுவர் என்ற அறிவிப்பைக் கண்டு கொஞ்ச, நெஞ்ச ஆறுதலும் பொசுங்கி விட்டது. ஆக,'நேர்வழியில் சோரம் போவதை விட கொள்ளைப்புற வழியாக போனால் தேவலை' என்று இவர்கள் கருதினர் போலும். ஆனால் ஏலம்விட்டான பிறகு தாங்கள் பிரநிதித்துவப்படுத்தும் மாநிலத்தில் உள்ள முன்னணி ஆட்டக்காரர் அவ்வளவு ஒன்றும் அதிகவிலை போகவில்லை... வெட்கத்தை விட்டு நாமே விலைபோயிருக்கலாம்' என இந்த ஐந்து 'ஐகான்' வீரர்களும் கருதியதாகவும் ஒரு செய்தி அடிபடுகிறது. 'அட கர்மமே...' என்று தான் கதறத் தோன்றுகிறது!
பணம் கொடுத்து வாங்கியவர்களுக்கு பலன் என்ன?
கிரிக்கெட் அணியையும், வீரர்களையும் வாங்கியவர்கள் ஏதோ சில ஆயிரங்களையோ, லட்சங்களையோ தந்துபெறவில்லை. ஒவ்வொரு அணியும் சில நூறுகோடிகளுக்கு விலைபோயுள்ளது.
மும்பை அணியை முகேஷ் அம்பானி 439 கோடிக்கும்,
பெங்களூர் அணியை விஜயமல்லையா 438 கோடிக்கும்,
ஹைதராபாத் அணியை டெக்கான் கிரானிக்கள் நிறுவனம்420 கோடிக்கும்,
சென்னை அணியை இந்தியா சிமெண்ட்ஸ்357கோடிக்கும்,
டெல்லி அணியை ஜி.எம்.ஆர் குருப் 330கோடிக்கும்,
மொஹாலி அணியை நடிகை ப்ரித்திஜிந்தா 298கோடிக்கும்,
கொல்கத்தா அணியை நடிகர் ஷாருக்கான் 294கோடிக்கும்,
ஜெய்ப்பூர் அணியை எமர்ஜிங் மீடியா 263கோடிக்கும்,
ஏலம் எடுத்துள்ளனர்.
அணிகளுக்கு செலவழித்த பணம் தவிர்த்து வீரர்களை ஏலம் எடுத்த வகையிலும் ரூபாய் 144 கோடியை செலவழித்துள்ளனர்.
மேற்படி ஏலம் எடுத்தவர்கள் தொழிலதிபர்கள், வியாபாரிகள் மற்றும் நடிகர் நடிகையர். இவர்கள் விளையாட்டிற்கு அள்ளித் தரும் புரவலர்களல்ல. எந்தப்பணத்தை எங்கே முதலீடு செய்தாலும் அதை பல மடங்கு திருப்பி எடுக்க வேண்டும் என்ற மனோபாவம் கொண்டவர்கள். அதுவும் சினிமா நட்சத்திரங்களோ நடித்தாலும் சரி, பொது நிகழ்ச்சிக்கு வந்துபோவதானாலும் சரி எல்லாவற்றுக்கும் பெரும் தொகையை எதிர்ப்பார்ப்பார்கள். (வர்த்தக ரீதியாக வெற்றிகான வேறெந்த விளையாட்டுகளைக் காட்டிலும் கிரிக்கெட் சரியாக இருக்கும் என்பதாலேயே அதில் நுழைந்துள்ளேன் என நடிகர் ஷாருக்கான் பேசியுள்ளார்).அதுவும் மேற்குறிப்பிட்ட இவர்களில் எவரும் இதுவரை இந்த நாட்டின் அடிப்படை பிரச்சனைகளில் அக்கரையோ, ஈடுபாடோ காட்டியவர்களில்லை.எனில் இவர்கள் இவ்வளவு பணத்தை அள்ளி இறைத்திருப்பதின் மர்மம் என்ன? விளையாட்டுகளின் போது பெறப்படும் ஸ்பானசர்களில் மட்டுமே போட்ட இவ்வளவு பணத்தையும் திருப்பி எடுத்துவிட முடியுமா? சாத்தியமா?
இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் குருதாஸ் குப்தாவின் குமுறல்;
பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்டையில் கிரிக்கெட் அணிகளும், ஆட்டக்காரர்களும் விற்பனை பண்டம்போல் விலைபேசி வாங்கப்பட்டதற்கு இந்திய அளவில் எதிர்ப்பு தெரிவித்த தலைவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் குருதாஸ் குப்தாவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் முகமது சலீம் மட்டுமே .
குருதாஸ் குப்தாவின் அறிக்கையில், 'இந்தியன் பிரிமியர் லீக் அமைப்பிற்கும், அதன் அணிகளை கோடிக்கணக்கில் ஏலம் எடுத்தவர்களுக்கும் எங்கிருந்து பணம் வந்தது என்பது பற்றி விசாரணை நடத்தப் படவேண்டும்' என்று கோரியுள்ளார். இது மிகவும் அர்த்தமுள்ள, அவசியமான கோரிக்கையாகும். மேலும் அவர் 20-20 எனும் கிரிக்கெட் போட்டிகள் மிகப்பெரிய சூதாட்டம். இப்போட்டிகளை அடிப்படையாக வைத்து பல கோடி ரூபாய் சூதாட்டம் நடத்தப்படுகிறது. கணக்கில் காட்டப்படாத கறுப்புப்பணம் இந்த சூதாட்டத்தில் பயன்படுத்தப்படுகிறது..." என்று கூறியுள்ளதை சமூக அக்கறையுள்ளவர்கள் யாரும் அலட்சியப்படுத்திவிடமுடியாது. இந்த அறிக்கையை மேலும் ஆராய்ந்தால் கிரிக்கெட்டில் பெட்டிங் நடத்தும் புக்கீஸ்களுக்கும், கிரிக்கெட் அணியையும், ஆட்டக்காரர்களையும் விலைபேசி வாங்கியுள்ளவர்களுக்கும் உள்ள உறவுகள், தொடர்புகள், .. போன்றவைளை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டியுள்ளது.
ஏனெனில் அதிகாரபூர்வமாக கிரிக்கெட்டில் புழங்கும் பணத்தைவிட அதிகாரபூர்வமற்ற வகைகளில் பெட்டிங் நடத்தும் புக்கீஸ்களிடம்தான் பல ஆயிரம் கோடி புரள்கிறது. இதற்கு முன்பே இவர்கள் தங்கள் அபரிமிதமான பணவலிமையால் அணிகளையும், ஆட்டக்காரர்களையும் அந்தரங்கமாக விலைபேசியதன் மூலம் சில அவமானகரமான தோல்விகளுக்கு காரணமானவர்களாக பேசப்பட்டதையும், விவாதிக்கப்பட்டதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இப்போட்டிகளை நடத்துவதற்காக இந்தியன் பிரிமியர்லீக் அமைப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்படுத்தியுள்ளது எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற மனசாட்சி இல்லாத ஆட்களின் அவமானத்திற்குரிய முயற்சி'' என்றும் குருதாஸ் குப்தா குற்றம் சாட்டியுள்ளார்.
சூதாடிகளை அரசாங்கமே அங்கீகரிக்கிறதா?
இந்தியாவில் முக்கியமான பல விளையாட்டுகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் - விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. ஆனால் இந்திய கிரிக்கெட் மட்டும் எல்லையற்ற அதிகாரத்துடன் இந்திய கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் அனுமதிக்கப்படுவது ஏன்? உண்மையில் விளையாட்டிற்கு சுதந்திரம் அவசியம் என்று கருதியதால் கூட இவ்வாறு தனிவாரியத்திற்கு கிர்க்கெட் தாரை வார்க்கப்பட்டிருக்கலாம் என நாமும் நம்புவோம். ஆனால் எந்தவித தார்மீக கட்டுப்பாடோ, சுயகட்டுப்பாடோ இல்லாத ஒரு விளையாட்டு அமைப்பு தன்னை 'இந்திய கட்டுப்பாட்டு வாரியம்' என்ற பெயரில் அடையாளப்படுத்திக்கொள்வது விசித்திரம். ஒரு வேளை இவர்களது கட்டுப்பாடு என்பது வாரியத்திற்குள் நேர்மை மற்றும் திறமைகள் நுழைந்துவிடக்கூடாது என்பதில் தான் இருக்கிறது.இந்த வகையில் அந்த பெயருக்கு உள்ள அர்த்தத்தை அவர்கள் நியாயப்படுத்தவே செய்கிறார்கள்.
விளையாட்டு போட்டிகளில் நடக்கும் வில்லங்கள்
முன்பெல்லாம் விளையாட்டில் உண்மையான அக்கரை கொண்டவர்கள், பழிக்கு அஞ்சுபவர்கள் கிரிக்கெட் வாரிய பதவிகளில் இருந்தனர். ஆனால் இப்போதோ பெரும்பணம் செலவழித்தும், ஏடாகூடமானவழி களைக்கையாண் டும் பலர் பதவிகளை கைப்பற்றுவதால் கிரிக்கெட் போட்டிகளில் கீழ்த்தரமான செயல்கள் நடக்கின்றன. இந்தப்பதவியிலுள்ள சிலர் போட்டி என்று அறிவிக்கப்பட்டதும் கையூட்டாகக் கிடைக்கும் கமிஷன்களிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளனர்.
வி.ஐ.பிக்களும், ரசிகர்களும் உட்காரும் சேர் ஒப்பந்தம்,
விளையாட்டு நிலவரத்தை கவரேஜ் செய்யும் டெலிவிஷன் ஒப்பந்தம்.
விளம்பர பலகைகள், டிஜிட்டல் பேனர்கள் ஒப்பந்தம்
ஒளிவெள்ளத்தில் மிதக்கவைக்கும் மின்சார ஒப்பந்தம்
வாகன நிறுத்தங்களில் வசூலிக்கும் ஒப்பந்தம்
போட்டிகளுக்கான டிக்கெட் அச்சிடும் ஒப்பந்தம்
விளம்பரம் செய்யும் நிறுவங்களுடனாண ஒப்பந்தம்
சமையல் மற்றும் தின்பண்டங்களுக்கான ஒப்பந்தம்
என வகைகளிலும் கமிஷன் பெறுகிறார்கள்.
வி.வி.ஐ.பிக்கள், முக்கியஸ்தர்களுக்காக பெவிலியன், பெவிலியன் டெரஸ், A ஸ்டாண்ட் போன்றவை பெரும்பாலும் 60சதவிகிதம் காம்ளிமெண்டரிக் கென்றே ஒதுக்கப்படும். சில அற்பர்கள் இதையும் விற்று சொந்தமாக பணம் பண்ணி விடுகின்றனர்.வாலண்டரியர்களுக்கென வழங்கப்படும் பேட்சுகளைக் கூட பணம் வாங்கிக்கொண்டு தரும் அளவுக்கு கீழ்த்தரமானவர்களும் உள்ளனர் இந்த போக்கினைக் கண்டு அசோசேஷனினும், போர்டிலும் உள்ள பண்பாளர்கள், நல்லவர்கள் வெறுப்புற்று ஒதுங்கிவிடுகின்றனர்.
தமிழ்நாடு கிரிக்கெட் அசோசேசியன் பருவம் தவறி மழைக்காலத்தில் பொறுப்பில்லாமல் போட்டிகளை ஏற்பாடு செய்து பிறகு மழையால் ரத்து செய்து நான்கு போட்டிகளில் ரசிகர்களிடம் பெற்ற டிக்கெட் பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ஊழல் கரைபுரண் டோடுகிறது. ஒவ்வொரு போட்டி நடக்கும் போதிலும் ஒவ்வொரு காண்டி ராக்டை ஏலம்விடுவதிலும் கணக்கில்வராத பணம் கைமாறி நிர்வாகிகள் பலரை கோடீஸ்வரர்களாக, குபேரர்களாக மாற்றியுள்ளது. எனவேதான் பி.சி.சி.ஐயின் தேர்தல்கள் ஒரு மாநிலத்தில் நடத்தப்பெறும் மாபெரும் தேர்தல்களைப்போல் மிகப்பெரிய முஸ்திபுகளுடன் நடந்தேறும். இந்த தேர்தல்களில் கரைபுரளும் கரன்சி களையும், ஆடம்பரமான விருந்துகளையும், ஆள்கடத்தல் மற்றும் அடிதடிகளையும், சொல்லக்கூசும் அநாகரீகமான அணுகுமுறைகளையும் கவனிக்கும்போது தேர்தல்களில் வெற்றிபெறத் துடிப்பவர்களின் நோக்கம் வெட்ட வெளிச்சமாகிவிடுகிறது. எனவேதான் இதில் இந்தியாவின் மிகப்பெரிய அரசியல்வாதிகளான சரத்பவார், அருண்ஜேட்லி, திக்விஜய்சிங், அரசியல் பின்புலமுள்ள தொழிலதிபர் ஜக்மோகன் டால்மியா போன்றவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியாவின் விவசாய அமைச்சராக இருப்பவர் சரத்பவார். இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் பசி, பட்டினி, கடன்தொல்லைகளால் சுமார் ஒன்றரைலட்சம் விவசாயிகள் தற்கொலைசெய்துள்ளனர். நாள்தோறும் தற்கொலைசெய்து கொண்டுமுள்ளனர். ஆனால் இதிலெல்லாம் அக்கரைகாட்டி ஆக்கபூர்வமாக செயலாற்ற தவறிய விவசாய அமைச்சர் சரத்பவார் சதாசர்வகாலமும் கிரிக்கெட் வாரியத்தின் பவர் பாலிடிக்ஸ்சிலேயே தீவிரம் காட்டி சர்வவல்லமையுடன் வலம்வருகிறார். மத்திய அரசின் காபினெட் அமைச்சர் அந்தஸ்த்து மற்றும் அதிகாரத்தை விடவும் கிரிக்கெட் வாரியத்தலைவர் பதவி தந்துள்ள புகழும், பணமும், செல்வாக்கும் அதிகம் என்று கருதுகிறாரோ? என்னவோ அமைச்சர்?
கிரிக்கெட் வாரியமா? கிரிமினல் வாரியமா?
'எங்கெல்லாம் அதர்மம் தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் என்குரல் ஒலிக்கும்' என்பதாக நீதிபதி கிருஷ்ணய்யர் அநீதி தலையெடுக்கும் போதெல்லாம் அதிகாரவர்க்கத்தை எச்சரிக்கை செய்வார். அதைப்போலவே இப்போதும் அறிக்கை தந்துள்ளார்.'' சரித்திரம் படைத்து ஒற்றுமையை வளர்த்த இந்த மிக உயர்ந்த விளையாட்டுப் புதையலான கிரிக்கெட் கீழ்த்தரமான முறையில் இழிவுபடுத்தப்பட்டு வணிகச் சூதாட்டத்திற்காக பணத்திற்கு அடிமையாக் கப்பட்டுள்ளது. கவர்ச்சிப் பொருள்களைப்போல தங்களை ஏலம்விட அனுமதித்ததன் மூலம் இந்திய வீரர்கள் ஒரு சிறந்த விளையாட்டுக்கு அழியாத அவமானத்தை ஏற்படுத்திவிட்டனர்" என்று கவலைப்பட்டுள்ள கிருஷ்ணய்யர், "இன்று வீரர்கள் ஏலம் விட்டது போல், நாளை அமைச்சர்கள், எம்,பிக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பல துறைகளில் கற்றறிந்தோரும் ஏலம் விடப்படலாம்..." என எச்சரித்துள்ளார். ஆரோக்கியமான சமூகமாற்றத்தில் ஆர்வம் காட்டும் அனைவருமே மிகவும் முக்கியத்துவம் கொடுத்து செவிசாய்த்து, செயல்பட வேண்டிய எச்சரிக்கை மணியோசையை இது!
மூன்றாண்டுகளுக்கு முன்பு பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு கார்பரேட் நிறுவனங்கள் சில எம்,பிகளுக்கு காசு தந்தனர் என்பதும் அதில் அந்த எம்,பிக்களின் பதவி பறிபோனதையும் நாம் அறிவோம். 'இனி ரகசியமாக பணம் தந்தால் தானே பிரச்சனை இனி நேரடியாகவே எம்,பிக்களை ஏலம் விட்டு விலைக்கு வாங்கலாம்' என்று கார்பரேட் நிறுவனங்கள் முயற்சிக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம்...? அதையும் கூட,'பாராளுமன்ற வளர்ச்சி நிதிக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்' என கார்பரேட் நிறுவனங்கள் கரன் சிகளை வீசிஎறிந்தால் விலைபோகமாட்டோம் என்று வீரியத்தோடு கூற எத்தனை அரசியல்வாதிகள் தார்மீகபலம் பெற்றுள்ளனர்...?
நீதிபதியை அவமதித்த வாரியம்
சிலவருடங்களுக்கு முன்பு ஜக்மோகன் டால்மியா பி.சி.சி.ஐ தலைவராக இருந்த போது பெரும் பிரச்சனை உருவானது. தேர்தல் நடத்துவதில் சிக்கல்கள்உருவாயின. இது தொடர்பாக விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் அவர்களை நேரில் சென்று விசாரித்து தீர்ப்பு வழங்கும்படி கேட்டுக்கொண்டது. நீதிபதிமோகன் சென்னை யிலிருந்து மும்பை பி.சி.சி.ஐ அலுவலகம்சென்றார். அலுவலகத்தை பூட்டி வைத்து நீதிபதி மோகன் உள்ளே வராதவாறு அவமானப்படுத்தியது பி.சி.சி.ஐ.
நீதிமன்ற உத்தரவையும், நீதிபதியையும் இப்படி பகிரங்கமாக அவமதித்த பி.சி.சி.ஐ மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதெல்லாம் நீதிமன்றங்களே நெருங்கமுடியாத அளவு வானாளவிய அதிகாரம் கொண்டதாக பி.சி.சி.ஐ செயல்படுகிறதோ என்ற பிரமைகளைத் தான் உருவாக்குகிறது.
விற்கப்பட்டதால் ஏற்படும் விபரீதங்கள்
'சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கிரிக்கெட் சூதாட்டத்தில் புழங்குகிறது' என்ற புகார்கள் உள்ளன. இந்திய அரசு இந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்விக்கு ஒதுக்கிய பணம் ரூ 34,400கோடி, கிராமபுற மக்களின் மருத்துவத்திற்கு ஒதுக்கிய தொகை ரூ12,050கோடி.ஆக இந்திய அரசு பட்ஜெட்டில் ஒதுக்கும்பணத்தைவிடகிரிக்கெட்டில் புரளும் பணம் மிக அதிகம். கிரிக்கெட் வெறியர்கள்,கிரிக்கெட் பைத்தியங்களை மையப்படுத்தியே இந்த சூதாட்டம் இயங்குகிறது. டாஸ் போடுவதில் ஆரம்பித்து ஒவ்வொருவர் ஆட்டத்திற்கும், பெர்பாம்மன்சுக்கும் இவர்கள் பெட் கட்டுகிறார்கள். இப்படி பெட்டிங்கில் ஈடுபடுபவர்கள் சிலநூறு, சில ஆயிரங்கள் என்ற எல்லைகளைக் கடந்து சில லட்சங்கள் என்று விரிவடையும்போது, புழங்குகிற பணமும் சில பல ஆயிரம் கோடிகளை மீறி லட்சம் கோடியை எட்டிவிடுகிறது. இந்த அபரிமிதமான பணத்தால் சூதாடிகள் தான் சுகபோக வாழ்க்கை நடத்துகின்றனர். இவர்களை அனுசரித்துப்போகும் ஆட்டக்காரர்களும், அதிகார மையங்களுமே ஆதாயமடைகிறார்கள். இதனால் விளையாட்டுத்துறைக்கு எள்ளளவும் லாபமில்லை என்பது மாத்திரமல்ல. விளையாட்டுத்துறையின் வீழ்ச்சிக்கே இந்த பணக்குவியல் பயன்படுகிறது.
ஏழைநாடு என்று சொல்லப்படுகிற இந்தியாவில் இப்படிப்பட்ட பகற்கொள்ளைகள் விளையாட்டின் பெயரால் விபரீதத்தை நிகழ்த்திக் கொண்டுள்ளன.
நமது நாட்டிலுள்ள 1,30,000 பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியரைக்கொண்டு செயல்படும் அவலநிலையில் உள்ளன. இந்தியாவில் பல கோடிக்குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்று படிக்கவியலாத பரிதாபகரமான நிலையில் உள்ளனர். இப்படியாக சூதாடிகளிடம் போய்ச் சேர்ந்துள்ள இந்த ஒரு லட்சம் கோடி ரூபாயை கல்விக்கு திருப்பினால் இந்தியாவிலுள்ள அனைத்து பள்ளிகளிலுமே ஆசிரியர் பற்றாக்குறை நீக்கப்பட்டு, அதிக பள்ளிகள் உருவாக்கி, அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை சாத்தியப்படுத்திவிடலாம்.
விளையாட்டு ஆர்வலர்களின் வேதனை
உழைப்பில்லாமல், சிரமமில்லாமல் பலகோடி சம்பாதிப்பதற்கு சாத்திய மிருக்கிறது என்றால் இளைய தலைமுறையினருக்கு உழைப்பதில் ஆர்வம் ஏற்படுமா? விலைபேசப்படுவதும், விற்பனைக்கு ஆளாவதும் கௌரவமான அணுகுமுறையாகக் கருதப்படுமானால் சுயமரியாதையற்ற, பேராசை கொண்ட இளந்தலைமுறை வளர்ந்துவிடும். மேலும் இப்போது விளையாட்டுவீரர்களை சுலபத்தில் அணுகி பேரம் பேசும் வாய்ப்பு 'புக்கீஸ்'களுக்கு எளிதாக ஏற்பட்டுவிடும். இது விளையாட்டு வீரர்கள் மனதில் சஞ்சலத்தை உருவாக்கி சரிவுகளுக்குமே வழி சமைக்கும். விளையாட்டுகளம் என்பதே சமத்துவமானது. அங்கே,ஏற்றத் தாழ்வுகளின்றி ஒவ்வொருவரும் அவரவர் பங்களிப்பை அர்பணிப்புடன் ஆற்றவேண்டும். இந்நிலையில் ஒருவருக்கு ஆறுகோடி ரூபாய் அளவுக்கு முக்கியத்துவம் என்பதும் மற்ற சிலருக்கு 40லட்சம் அளவிற்கே முக்கியத்துவம் என்றும்ஏலம் எடுத்து தீர்மானிிப்பது விளையாடுபவர்களுக்கிடையே வேற்றுமைகளை வளர்த்து விடும். விளையாட்டு என்பதே ஆனந்தமானது, ஆரோக்கியமானது என்பது மாறி அது வெறும் பணத்திற்கானது என்றானால் சச்சரவுகள் தான் அரங்கேறும் என்று விளையாட்டு ஆர்வலர்கள் வேதனைப்படுகின்றனர். இந்த நேரத்தில் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் உல்மர் மர்மமான முறையில் திடீரென கொல்லப்பட்டதற்கு புக்கீஸ்களின் பின்னணி இருக்கிறது என்று பேசப்பட்டது நினைவுக்கு வருகிறது.
தீர்வுகளைத்தேடும் திசைவழியில்
இந்திய கிரிக்கெட் வாரியம் என்பது அரசாங்கமே தலையிடமுடியாத இரும்புகோட்டையாக உள்ளது. பெரும் பணமுதலைகளின் சங்கமமான இந்த சாம்ராஜ்யத்தில் மக்கள் பணம் மலைபோல் குவிகிறது. இதற்கு முறையான கணக்கு வழக்குகள் உள்ளதா என்று மத்திய அரசு இதுவரை மேற்பார்வை செய்ததில்லை. பலபெரிய பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் வரவு செலவு கணக்குகளை முறையாக ஆடிட்செய்து வருடாவருடம் பத்திரிகைகளில் பிரசுரிப்பதைப் போல இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இதுவரை ஒருமுறை கூட தங்கள் வரவு செலவு கணக்கை பற்றி மூச்சுவிட்டதில்லை.
வெளிப்படைத்தனமில்லாத செயல்பாடுகளால் தனது நம்பகத்தன்மையை முற்றிலும் இழந்து நிற்கிறது இந்திய கிரிக்கெட் வாரியம். எனவே கிரிக்கெட் பண ஆதிக்க சக்திகளின் கைகளிலிருந்து பறிக்கப்பட்டு மக்கள் கண்காணிப்பில் நடத்தப்படவேண்டும். வங்கிகள் தேசியமாக்கப்பட்டதுபோல, போக்குவரத்து துறை அரசுமயமாக்கப்பட்டதுபோல இந்திய கிரிக்கெட் வாரியமும் அரசுடமையாக்கப்படவேண்டும்.
அல்லது
சூதாடிகளின் பாதுகாப்பான புகலிடமாக பரிணாம வளர்ச்சி பெற்றுவிட்ட. கிரிக்கெட்டை சூரசம்ஹாரம் செய்ய வேண்டும்.
இப்படி சமூக விரோத சக்திகளின் கூடாரமாவதைவிடவும்,
ஏகபோக வர்த்தமாகவும், ஏலம்விடப்படும் அடிமைவர்த்தமாகவும் மாற்றமாகி நிற்பதைவிடவும்,
அரசியல் சக்திகளின் கைப்பாவையாக இருப்பதை விடவும்,
கிரிக்கெட்டே இல்லாமல் போவதால் நாட்டுக்கு என்ன இழப்பு வந்துவிடப்போகிறது.?
ஊழலின் ஊற்றுக் கண்ணாக மாறிவிட்டதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கலைக்கப்படவேண்டும். சில காலமாவது பெரிய கிரிக்கெட் விளையாட்டுகள் நிறுத்தப்பட்டாலாவது நிலைமை சீரடையுமா என முயற்சித்து பார்க்கலாம். சமூகவிரோத சக்திகளுக்கு துணைபோவதை தடுக்கமுடியாத பட்சத்தில் கிரிக்கெட் விளையாட்டையே தடைசெய்வதில் ஒன்றும் தவறில்லை.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தொடங்கி அந்தந்த மாநில கிரிக்கெட் அசோஷியன் வரை குவிந்துள்ள பல்லாயிரம் கோடி சொத்துக்களை கைப்பற்றி அந்த பணத்தில் அனைத்து விளையாட்டுகளும் தழைத்தோங்கச்செய்யலாம். 'விளையாட்டு என்பது சூதாட்டமல்ல' என்பதை நிருபிக்கவேண்டிய காலநிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. இதைக்கண்டும் காணாமல் அலட்சியப்படுத்துவது நிகழ்காலத்திற்கும், வருங்காலத்திற்கும் அளவிட முடியாத அழிவைத்தந்துவிடும். மதுப்பழக்கத்திற்கு எதிரான பிரச்சாரத் தைப்போல, சிகரெட் பீடி, புகையிலை போன்ற தீயபழக்கங்களுக்கு எதிரான பிரச்சாரத்தைப்போல, கிரிக்கெட்வெறி மற்றும் விளையாட்டு சூதாட்டத்திற்கும் எதிரான பிரச்சாரம் இன்று தவிர்க்க முடியாத அவசியமாகிறது.
விற்கப்பட்ட வீரர்கள் ஏலம்போன தொகை
சென்னை அணி
டோனி(இந்தியா) ரூ.6கோடி
ஜேக்கப் ஓரம்(நியூசிலாந்து) ரூ.2.7கோடி
அல்பி மோர்கள்(தென்ஆப்பிரிக்கா) ரூ.2.7கோடி
சுரேஷ்ரெய்னா(இந்தியா) ரூ.2.6கோடி
முரளிதரன்(இலங்கை) ரூ.2.4கோடி
ஹைடன்(ஆஸ்திரேலியா) ரூ.1.5கோடி
பிளமிங்(நியூசிலாந்து) ரூ.1.4கோடி
மைக்ஹஸ்ஸி(ஆஸ்திரேலியா) ரூ.1.4கோடி
பார்த்திவ் பாட்டேல்(இந்தியா) ரூ.1.3கோடி
ஜோகிந்தர் சர்மா(இந்தியா) ரூ.90லட்சம்
நிதினி(தென்ஆப்பிரிக்கா) ரூ.80லட்சம்
பெங்களூர் அணி
டிராவிட்(இந்தியா, முத்திரை வீரர்)
கல்லீஸ்(தென்ஆப்பிரிக்கா) ரூ.3.6கோடி
கும்பிளே(இந்தியா) ரூ.2கோடி
கேமரூன் ஒயிட்(ஆஸ்திரேலியா) ரூ.2கோடி
ஜாகீர்கான் (இந்தியா) ரூ.1.8கோடி
மார்க் பவுச்சர் (தென்ஆப்பிரிக்கா) ரூ.1.8கோடி
பிராக்கன்(ஆஸ்திரேலியா) ரூ.1.3கோடி
சந்தர்பால் (வெஸ்ட்இண்டீஸ்) ரூ.80லட்சம்
வாசிம் ஜாபர்(இந்தியா) ரூ.60லட்சம்
கொல்த்தாஅணி
கங்குலி _இந்தியா, முத்திரை வீரர்)
இஷாந்த் ஷர்மா (இந்தியா) ரூ, 3.8கோடி
கிறிஸ்கெய்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) ரூ.3.2கோடி
மெக்கல்லம்(நியூசிலாந்த்) ரூ2.8கோடி
டேவிட்ஹஸ்ஸி(ஆஸ்திரேலியா) ரூ 2.5கோடி
சோயித் அக்தர் (பாகிஸ்தான்) ரூ 1.7கோடி
முரளிகார்த்திக் (இந்தியா) ரூ1.7கோடி
ரிக்கிபாண்டிங் (ஆஸ்திரேலியா) ரூ 1.6கோடி
அகர்கர்(இந்தியா) ரூ1.4கோடி
உமர்குல் (பாகிஸ்தான்) ரூ60லட்சம்
தைபு(ஜிம்பாப்வே) ரூ.50லட்சம்
டெல்லி அணி
ஷேவாக்( இந்தியா,முத்திரைவீரர்)
கவுதம் கம்பீர் (இந்தியா) ரூ2.9கோடி
மனோஜ் திவாரி(இந்தியா) ரூ.2.7கோடி
முகம்மது ஆசிப் (பாகிஸ்தான்) ரூ.2.6கோடி
வெக்டோரி(நியூலாந்து) ரூ.2.5கோடி
தினேஷ் கார்த்திக் (இந்தியா) ரூ.2.1கோடி
சோயிப் மாலிக்(பாகிஸ்தான்) ரூ.2.கோடி
மெக்ராத்(ஆஸ்திரேலியா) ரூ.1.4கோடி
டிவில்லியர்ஸ(தென்ஆப்பிரிக்கா) ரூ.1.2கோடி
தில்ஷான்(இலங்கை) ரூ.1கோடி
மகரூப்(இலங்கை) ரூ.40லட்சம்
ஐதராபாத் அணி
சைமண்ட்ஸ்(ஆஸ்திரேலியா) ரூ.5.4கோடி
ஆர்.பி.சிங்(இந்தியா) ரூ3.5கோடி
ரோகித்சர்மா(இந்தியா) ரூ.3கோடி
கில்கிறிஸ்ட்(ஆஸ்திரேலியா) ரூ.2.8கோடி
அப்ரிடி(பாகிஸ்தான்) ரூ.2.7கோடி
கிப்ஸ(தென்ஆப்பிரிக்கா) ரூ2.3கோடி
லட்சுமண்(இந்தியா) ரூ1.5கோடி
ஸ்டைரிஸ்(நியூசிலாந்து) ரூ.70லட்சம்
சமந்தா வாஸ்(இலங்கை) ரூ.80லட்சம்
நுவான் சோய்சா(இலங்கை) ரூ.80லட்சம்
சமரசில்வா(இலங்கை) ரூ.40லட்சம்
ஜெய்ப்பூர் அணி
முகம்மது கயூப்(இந்தியா) ரூ.2.6கோடி
சுமித்(தென்ஆப்பிரிக்கா) ரூ.1.9கோடி
யூசப் பதான்(இந்தியா) ரூ.1.9கோடி
வார்னே(ஆஸ்திரேலியா) ரூ.18கோடி
முனாப் பட்டேல்(இந்தியா) ரூ.1.1கோடி
யூனிஸ்கான்(பாகிஸ்தான்) ரூ.90லட்சம்
லாங்கர்(ஆஸ்திரேலியா) ரூ.80லட்சம்
அக்மல்(பாகிஸ்தான்) ரூ.60லட்சம்
மொகாலி அணி
யுவராஜ் சிங்(இந்தியா முத்திரை வீரர்)
இர்பான் பதான்(இந்தியா) ரூ.3.7கோடி
பிரெட்லீ(ஆஸ்திரேலியா) ரூ.3.6கோடி
சங்கக்கரா(இலங்கை) ரூ.2.8கோடி
ஸ்ரீசாந்த்(இந்தியா) ரூ.2.5கோடி
பியூஷ் சாவ்லா(இந்தியா) ரூ.1.6கோடி
ஜெயவர்தனே(இலங்கை) ரூ.1.1கோடி
சர்வான்(வெஸ்ட் இண்டீஸ்) ரூ.90லட்சம்
கேடிச்(ஆஸ்திரேலியா) ரூ.80லட்சம்
ரமேஷ் பவார்(இந்தியா) ரூ.68லட்சம்
மும்பை அணி
தெண்டுல்கர்(இந்தியா,முத்திரை வீரர்)
ஜெயசூர்யா(இலங்கை) ரூ.3.9கோடி
ஹர்பஜன் சிங்(இந்தியா) ரூ.3.4கோடி
ராபின் உத்தப்பா(இந்தியா) ரூ.3.2கோடி
பொல்லாக் (தென்ஆப்பிரிக்கா) ரூ.2.2கோடி
மலிங்கா(இலங்கை) ரூ.1.4கோடி
போஸ்மேன்(தென்ஆப்பிரிக்கா) ரூ.70லட்சம்
பெர்னாண்டோ(இலங்கை) ரூ.60லட்சம்
2 comments:
very nice article,
cricket only for enjoyment.its cambling. one i will go to statium i seeing the cricket one man take the thief its very bad habit
Post a Comment