- சாவித்திரி கண்ணன்
மின்தடை ஏற்பட்டால் ஏற்படும் எரிச்சலைவிட அதிக எரிச்சலாக உள்ளது மின்சார பற்றாக்குறை தொடர்பாக அரசியல் கட்சிகள் விடுக்கும் அறிக்கைகள்! "மின்சார உற்பத்தியில் மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தை மின்பற்றாக்குறை மாநிலமாக்கியுள்ளது தி.மு.க ஆட்சி " என்கிறார்.
ஜெயலலிதா
சென்ற அ.தி.மு.க ஆட்சி காலத்தில் மின்சார உற்பத்திக்காக எந்த திட்டமும் செயல்படுத்தாமல் விட்டது தான் இப்போதைய மின்சாரதட்டுப்பாட்டுக்கு காரணம்" என்கிறார் ஆற்காடு வீராச்சாமி.
இந்த இருவருமே பல உண்மைகளை மறைத்து, மக்களை திசைதிருப்பவே அறிக்கை யுத்தம் நடத்துகின்றனர். மின்சார உற்பத்தியில் தமிழகம் எப்போது மிகை மாநிலமாக இருந்தது...? அதுவும் ஜெயலலிதா ஆட்சி செய்த 10 ஆண்டு காலத்தில் மின்உற்பத்திக்காக தொலைநோக்குத்திட்டங்கள் எவ்வளவு போடப்பட்டது?
அதே போல் அ.தி.மு.க வைத் தவிர்த்து, கருணாநிதி தலைமையில் தி.மு.க ஆட்சி செய்த சுமார் 14 ஆண்டுகளில் தொலைநோக்குப் பார்வையுடன் எத்தனை மின்உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன?
மேற்கண்ட இரண்டு கேள்விகளுக்குமே ஒரே விடை, இரு கழகங்களின் ஆட்சிகளிலுமே தமிழகம் மெல்ல, மெல்ல இருளுக்குள் தள்ளப்பட்டது என்பது தான்!
கருணாநிதி ஆட்சியிலிருந்த காலகட்டத்திலும் சரி, ஜெயலலிதா ஆட்சி யிலிருந்த காலகட்டத்திலும் சரி தமிழக மின்உற்பத்தி சுமார் 10 முதல் 30 சதவிகிதம் மட்டுமே அதிகரித்தது. அதே சமயம் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியிலிருந்த ஒவ்வொரு ஐந்தாண்டுகாலத்திலும் சுமார் 120 சதவிகிதம் மின் உற்பத்தியை அதிகப்படுத்தினார். இத்தனைக்கும் அவர் ஆட்சி செய்த கால கட்டத்தில் தொழிற்சாலைகளின் வளர்ச்சி இப்போதைய காலத்தைப் போல் இவ்வளவு வேகமான விஸ்வரூப வளர்ச்சியை காணவில்லை. ஆனால் உலகமயம், மற்றும் தாராளமயத்தின் தாக்கத்தால் தடையற்ற அந்நிய முதலீடுகளும், தொழிற்சாலைகளின் பெருக்கமும் அதிகரிக்கும் நேரத்தில் இரு கழகங்களுமே மின் உற்பத்தியில் அக்கரை காட்டாமலிருந்துவிட்டனர்.
காரணம் இது தான்; மின் உற்பத்தியக்கான திட்டங்கள் என்பவை காலங் கனிந்து பயன்தரக்கூடியவை. அதாவது இப்போது முதலீடு செய்தால் குறைந்தது ஆறேழுவருடங்கள் கழித்துதான் அறுவடை செய்யலாம். அப்போது ஆட்சி மாறிவிட்டிருப்பின் அது அந்த ஆட்சிக்கு பெயர் தந்துவிடுமே....
ஆகவே, இப்படிப்பட்ட மக்கள் நலன், நாட்டுமுன்னேற்றம் சார்ந்த தொலைநோக்கு திட்டங்களையே யோசிக்கக்கூடாது. உடனடியாக மக்கள் பலனடைந்து அதன் காரணமாக ஓட்டு வாங்கக்கூடிய இலவசங்களை அள்ளி இறைக்கும்' திட்டங்களுக்கே நிதியை திருப்பிவிடலாம்' என்பதே இரு கழகங்களின் நடைமுறையாக இருந்துள்ளது. இது மட்டுமல்ல, மின் வாரியத்தில் 'ஷாக்' அடிக்கும் படியான ஊழல்களும், நிர்வாக சீர்கேடுகளும் வேறு மலிந்துவிட்டன. இதன் விளைவாக உற்பத்தியாக வேண்டிய மின்சாரமே கூடதடைபட்டுள்ளது.
நீர்மின்சக்தி மூலம் தமிழகம் பெற்றுக்கொண்டிருந்த 2184 மெகாவாட்டில் தற்போது சுமார் 400 மெகாவாட் தடைபட்டுள்ளது. அதே போல் அனல் மின் நிலையங்கள் மூலம் அடைந் திருக்க வேண்டிய இலக்கு 2970 மெகாவாட், ஆனால் அதில் இப்போது 550 மெகாவாட் தடைபட்டுள்ளது.
'அடுத்த மாநிலங்களிலிருந்து மின்சாரத்தை வாங்கி சமாளிப்பேன்' என்று சொல்லும் ஆற்காடு வீராச்சாமி இருக்கிற மின்உற்பத்தி நிலையங்கள் சிறப்பாக செயல்படாமல் சீரழிந்துவருவதைப் பற்றி சிந்திப்பதில்லை. ஆனால் அவருக்கோ எப்போதும் முதலமைச்சரின் நிழல்போல அவரை பின்தொடர்வதற்கே நேரம் போதவில்லை. தமிழகத்தில் மின்பற்றாக்குறை என்ற தலையாய பிரச்சனையில் தலையிடுவதற்கு அவருக்கு எங்கே நேரம் கிடைக்கிறது? அதற்குத்தான் அதிகாரிகள் இருக்கிறார்களே அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அது அவர்களின் பாடு... என்பதே அமைச்சரின் அணுகுமுறையாக உள்ளது.
ஆனால் அதிகாரிகள், இருக்கும் வாய்ப்புகளுக்குள் இருந்துதான் இயங்க முடியும். அவர்களால் கொள்கை முடிவுகள் எடுக்க முடியாது. உதாரணமாக கடந்த 17 ஆண்டுகளில் மின் உற்பத்திக்காக ஒதுக்கப்படும் நிதியில் 40 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது
எதற்காக இப்படி ஒரு நடவடிக்கை? கூடுதலாக மின் உற்பத்திக்கு நிதி தேவைப்படும் காலகட்டத்தில் அதை குறைக்க வேண்டியதுதான் காரணத்தை விளக்க வேண்டிய பொறுப்பு ஜெயலலிதா, ஆற்காடு வீராச்சாமி இரு வருக்குமே உள்ளது.
இது மட்டுமல்ல, அரசாங்கம் முதலீடு செய்தபோது குறைந்த செலவில் பெறமுடிந்த மின்சாரத்தை தனியார் கைகளுக்கு தாரைவார்த்து அதை எட்ட முடியாத உயரத்திற்கு கொண்டு போனபோதிலும் இரு கழகங்களும் இறுமாப்பு கொள்ளலாம்.
தனியார் மின்உற்பத்தி செய்ய தாராள சலுகைகளை அள்ளித்தந்தது தமிழக அரசு, அவர்கள் உற்பத்தி செய்த மின்சாரத்தை அதிக விலை தந்து வாங்கிய வகையில் அடைந்ததோ அபார நஷ்டம்.
தனியார் மின் உற்பத்தியில் இறங்ககாத காலகட்டம் வரை நமது மின்வாரியம ஒரு பற்றாக்குறையற்ற வாரியமாகவே பரிமளித்தது. ஆனால் தனியார் நிறுவனங்கள் தந்த நிர்பந்தங்களால் தமிழக மின்வாரியம் இன்று 3000 கோடி பற்றாக்குறையில் மூழ்கிவிட்டது. இத்தனை இழப்புகளுக்குப் பிறகு தமிழகமக்களின் மின்தேவையில் தனியார் நிறுவனங்கள் தந்த மின்சாரத்தின் மூலம் வெறும் 9 சதவிகிதத்தை மட்டுமே ஒப்பேற்ற முடிந்துள்ளது.
இந்தச் சூழலில் அமைச்சர், "வணிக ரீதியில் 25,000 மெகாவாட் மின்உற்பத்தி செய்ய தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மூன்று வருடத்தில் இந்த மின்சாரம் கிடைத்துவிடும் என அறிவித்துள்ளார். ஆனால் இது சாத்தியமே இல்லை, வெறும் சவடால்தான். என்கிறார்கள் இத்துறை நிபுணர்கள்
இலவச கலர் டெலிவிஷன்களுக்கு பலநூறுகோடி செலவழிக்க முடிந்த தமிழக அரசுக்கு பல்வேறு வகையிலும் அடிப்படை, அத்தியாவசிய தேவையாகிப்போன மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு முதலீடு செய்ய மனமில்லை என்பது கவலையளிப்பதாக உள்ளது.
"வட மாநிலங்களைவிட தமிழகத்தில் மின்வெட்டு குறைவுதான். மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொழிற்சாலைகள் ஜெனரேட்டர்களை பயன்படுத்தவேண்டும்..." இப்படியெல்லாம் சொல்வது அவமானகரமானது, என்பதைக்கூட உணராதவர்கள் தான் இன்று ஆட்சியிலும், அதிகாரத்திலும் உள்ளனர்.
உணவு, உடை, இருப்பிடத்திற்கு அடுத்த நிலையில் இருக்கும் அத்தியாவசிய தேவையான மின்சாரத்தில் அலட்சியம் காட்டுபவர்களை வாழும் தலைமுறைமாத்திரமல்ல, வருங்காலத் தலைமுறையும் மன்னிக்காது.
1 comment:
Dear savithiri Kannan, Your articles are really good and reflects my thoughts..which I dont ink it.. Very Good ..Keep itup.
Post a Comment