Monday, August 27, 2012

குழந்தைகளை அடிக்காதீர்


                                                                                                                      -சாவித்தரிகண்ணன்



ஆசிரியர்கள் மாணவர்களைத் தண்டிக்கக்கூடாது' என்று நமது உச்சநீதிமன்றம் 2000த்தில் அறிவித்தது.
இதன்படி இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் மாணவர்கள் உடல் மற்றும் உளரீதியாக தண்டிக்கப்படுவதற்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்துள்ளன.

2007 ல் தமிழக அரசு இதை சட்டமாக்கியது. நமது மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைசட்டத்தின் நான்காவது அத்தியாத்தில் 17வது பிரிவு மாணவர்கள் மீதான எந்தவகை தாக்குதலையும் முற்றிலுமாக தடைசெய்கிறது.

சரி அதனாலென்ன...?
சட்டம்போட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?
'சரியாகாது' என்பதற்கான உதாரணம் தான் கல்கத்தாவில் சாந்திநிகேதன் நிர்வாகத்திற்கு சொந்தமான ஒரு பள்ளியில் நடந்த சம்பவம் சொல்கிறது.

அந்தச் சின்னஞ்சிறு மாணவி இரவில் படுக்கையை நனைத்துவிட்டாள்! இதற்காக சிறுநீர் கழிக்கப்பட்ட
அந்த படுக்கையை நக்கும்படி அம்மாணவி விடுதியின் காப்பாளரால் நிர்பந்திக்கப்பட்டிருக்கிறாள்.

உடல்நிலை சரியில்லாதபோது குழந்தைகள் இவ்விதம் படுக்கையை நனைப்பது ஒரு சாதாரண சம்பவமே! ஒவ்வொரு குடும்பத்திலும் அடிக்கடி நிகழும் நிகழ்வே!

மேற்படி சம்பவம் விடுதி காப்பாளரின் சகிப்பின்மையை வெளிப்புடுத்துகிறது. அதோடு எதிர்க்க வலுவில்லாத குழந்தைகளின் மீது தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டத் துடிக்கும் யாருமே கடைந்தெடுத்த கோழைகள் தான்!

குழந்தைகளை நெறிப்படுத்த - மாணவர்கள் விதிகளை மீறும்பொது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர - பற்பல அணுகுமுறைகள் உள்ளன. இதற்கு அன்பும், ஆளுமைத் திறனும் அவசியமாகிறது.

அவர்கள் செய்யும் தவறை அவர்களே உணர்ந்து திருந்தும் படி எடுத்துச் சொல்லலாம். மீண்டும் தவறிழைக்க நேர்ந்தால் அதற்கு அவர்களையே பொறுப்பேற்கச் செய்யலாம்!

அன்பால் முடியாதது எதுவுமில்லை!

அன்பும், ஆளுமைப் பண்பும் கொண்ட ஆசிரியரின் ஒரே ஒரு வார்த்தை அல்லது ஒரே ஒரு பார்வை மாணவர்களை நெறிப்படுத்த போதுமானதாகிறது.
தன்நிலை இழந்து கோபப்பட்டு தண்டிக்கும் போது அந்த ஆசிரியர் உண்மையில் தோற்றுப்போகிறார்!

அடிப்பது, தண்டிப்பது மாத்திரமல்ல, பலர் முன்நிலையில் மாணவர்களை இழிவாகப்பேசுவதும் பெரும் குற்றமாகும்!

ஆசிரியர்களின் அவமான சுடுசொற்களை தாங்கமுடியாமல் பள்ளியை விட்டு நின்ற மாணவர்கள் அநேகம்! இதற்கு கணக்கு வழக்கே இல்லை!

நம்நாட்டில் ஆண்டுக்கு சுமார் 8,000மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இதற்கு முழுக்க, முழுக்க பெற்றோர்களும், ஆசிரியர்களுமே பொறுப்பேற்க வேண்டும்.

உலகில் முன்னேறிய நாடுகள் பலவற்றில் மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிப்பது ஒரு குற்றநடவடிக்கையாக - கடுமையான குற்றமாக - அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நமது நாட்டிலோ
'அடியாதமாடு படியாது' 'அடி உதவுகிறார் போல் அண்ணன்தம்பி கூட உதவமாட்டான்'..என்றெல்லாம் கூறி குழந்தைகளை விளாசும் பெற்றோர்களும் ஆசிரியர்களுமே அதிகம்!

அச்சுறுத்தியும், பயப்படும்படியாகவும் வளர்க்கப்படும் குழந்தைகள் வருங்காலத்தில் முட்டாள்களாக, செயலற்றவர்களாகிவிடுகிறார்கள் குழந்தைகளின் சுதந்திரத்தை அங்கீகரிப்பதே அதர்மம்!

கட்டுப்பாடு, விதிகள், சட்டங்கள், ஒழுக்கமுறைகள்...இவை குழந்தைகளை பொறுத்தவரை விதிவிலக்குகளே!
பயமறியா காளைகளாக, சுதந்திரமாக அவர்கள் வளரவேண்டும். அது அதற்கான வயதில் அவர்கள் அறியவேண்டியதை அறியச் செய்து நெறிப்படுத்தினால் போதுமானது!

குழந்தைகளின் சுதந்திரத்தை அங்கீகரிக்க மறுப்பவர்கள் மனிதர்களாக வாழ்வதற்கே தகுதியற்றவர்களாகிறார்கள்


                                                                                                                              NDTV -THE HINDU,
                                                                                                                              EDITORIAL VOICE,
                                                                                                                              10-7-2010

No comments: