Thursday, August 30, 2012

அமெரிக்காவின் பேராசை


                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

அமெரிக்கா அதிபர் ஒபாமா இந்தியாவிற்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

"இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் வருவது தொடர்பான தயக்கம் இருக்கிறது. சில்லறை வர்த்தகம் தொடர்பான பல அந்நிய முதலீடுகளை இந்தியா தடுத்தவண்ணம் உள்ளது. இந்தியா வளர்ச்சி பெற வேண்டுமெனில் இதை அனுமதிக்க வேண்டும்.
இந்தியாவில் கடுமையான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்...."

ஒபாமாவின் இந்த பேச்சு அமெரிக்க முதலாளிகளின் விருப்பம்! அவர்கள் விருப்பத்தை பிரதிபலிக்க வேண்டியது அந்த நாட்டு அதிபரின் கடமையும் கூட!

அதேபோல இந்தியாவிலுள்ள சுமார் 4கோடி சிறுவியாபாரிகளின் தொழில் பாதுகாப்பை பேண வேண்டிய கடமை இந்திய அரசுக்குள்ளது.

1990களுக்குப் பிறகு இந்திய அமெரிக்க வர்த்தக உறவுகள் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது. 1991ல் அமெரிக்காவில் இந்தியர்களின் நேரடி முதலீடு என்பது வெறும் ஒரு கோடியே 13லட்சம் டாலர்களாக இருந்தது. ஆனால் தற்போதோ 300கோடி டாலர்களுக்கும் அதிகமாக உள்ளது. மேலும் இந்தியப்பொருளாதாரத்தில் அமெரிக்க நிறுவனங்களுக்கு மென்பொருள் துறையில் இந்திய நிறுவனங்கள் செய்கின்ற வேலைகளும், பலன்களும் ஒரு முக்கிய அங்கமாயியுள்ளது. அதோடு சர்வதேச அரங்கில், ஐ.நா.சபையில் இந்தியாவின் முக்கியத்துவத்திற்கும் அமெரிக்க உதவி என்பது இன்றியமையாதது.

எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டே நாம் அமெரிக்க அதிபரின் அறிவுரையை அல்லது எதிர்பார்ப்பை பரிசீலிக்க வேண்டியவர்களாயுள்ளோம்.

அதிபர் பதவி ஏற்ற பின்பு இந்தியாவிற்கு இரண்டு முறை விஜயம் செய்தார் ஒபாமா. இதன்மூலம் அமெரிக்க முதலீடுகள் இந்தியாவிற்கும், இந்திய முதலீடுகள் அமெரிக்காவிற்குமான வர்த்தக பரிவர்த்தனைகள் கணிசமாக வளர்ந்தது.

2010-11-ல் மட்டும் இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்கள் 1.17 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்தன. 2010 வரையிலும் கணக்கெடுத்தால் இந்தியாவில் அமெரிக்கர்களின் முதலீடு 48.75 பில்லியன் டாலர்களாகும்! இதனால் இந்தியப்பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தபோதிலும் சில விரும்பதத்தகாத விளைவுகளும் அரங்கேறவே செய்தன.

தற்போது அமெரிக்காவின் ஐ.டி.சி நிறுவனம் இந்தியாவில் தானியக்கொள்முதல் செய்கிறது. பங்கு வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டால் பல பாதிப்புகளை நாம் பாரத்துவருகிறோம்.

'ஆன்லைன்' வர்த்தகத்தால் உணவுபொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து இந்திய மக்களை விழி பிதுங்க வைத்துக் கொண்டுள்ளது. ஏற்கெனவே நமது நாட்டில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களில் பெரும்பாலானவை அந்நிய நாட்டு நிறுவனங்களுடையது தான்! சோப்பு, பற்பசை தொடங்கி குளிர்பானங்கள் வரை இந்திய உற்பத்தி சந்தைகளை அந்நிய நிறுவனங்களே ஆக்கிரமித்துள்ளன. தற்போது அதை இந்திய மக்களுக்கு விற்பனை செய்யும் வாய்ப்பையும் அமெரிக்க நிறுவனங்களே ஆக்கிரமித்துகொள்ளத் துடிக்கின்றன.

இந்த விசயத்தில் நாம் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அறிவுரையை ஏற்பது தற்கொலைக்கு ஒப்பாகும்!

வாங்கும் திறன் அடிப்படையில் இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய நாடாகத் திகழ்கிறது. எனவே தான் அந்நிய வியாபாரிகள் இந்தியாவை ஆக்கிரமிக்க துடிக்கிறார்கள். இதன் விளைவாகத்தான் சென்ற ஆண்டு நமது நாடாளுமன்றத்தில் அந்நிய முதலீட்டை 51 சதவிகிமாக்க மத்திய அரசு முயற்சித்தது.

ஆனால் எதிர்கட்சிகளின் ஏகோபித்த எதிர்ப்பால் நாடாளுமன்றமே ஒன்பது நாள் ஸ்தம்பித்தது. இந்தியா முழுமையும் இதற்கான மக்கள் கிளர்ச்சி போராட்டங்கள் மாபெரும் அதிருப்தியை பதிவுசெய்தது. எனவே அரசு பின்வாங்க வேண்டிய கட்டாயம் நிகழ்ந்தது.
அதே சமயம் அமெரிக்க முதலாளிகள் நமது அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி தந்து கொண்டிருப்பதின் தொடர்ச்சியாகத்தான் ஒபாமாவின் பேச்சும் அமைந்துள்ளது.

அந்நிய முதலீட்டை வரவேற்போம்! -அவை இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திடும் பட்சத்தில்! எச்சரிக்கையோடு இருப்போம் - அவை இந்திய பொருளாதாரத்தை ஏப்பம் விடாத வகையில்!

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
16-7-2010

No comments: