Saturday, September 1, 2012

கம்யூட்டர்கல்வி


                                                                                                                       -சாவித்திரிகண்ணன்
மாணவசமுதாயம் மகிழ்ச்சி கடலில் திளைக்கும் வண்ணம் தமிழக முதல்வர் ஒர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கம்யூட்டர் படிப்பின் முக்கியத்துவம் கருதி தமிழகத்தின் உயர்நிலை, மேல்நிலைபள்ளி மாணவர்கள் கம்யூட்டர் கல்வி கற்க ரூ 128 கோடி ஒதுக்கி ஆணை வெளியிட்டுளார். இது தற்போது முதல் கட்டமாக சுமார் 2,000 உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக விரிவுப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்த அறிவிப்பை கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் நிச்சயம் வரவேற்பார்கள்.

இன்றைய தினம் நமது வாழ்க்கையில் தொலைக்காட்சியைப் போல கம்ப்யூட்டரின் தேவையும் தவிர்க்க முடியததாகிவிட்டது.

வசதி படைத்தவர் வீட்டுக்குழந்தைகளே கம்யூட்டர் கல்வி பெறமுடியும் என்ற நிலைமை தகர்த்து இனி ஏழைக் குழந்தைகளும் கம்யூட்டர் கல்வி கற்று ஏற்றம் பெறுவார்கள்.

இச்சூழலில் நாம் ஒரு முக்கியமான வேண்டுகோளை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம்.

கம்யூட்டர்கள் வாங்க மட்டும் நிதி ஒதுக்கினால் போதுமானதல்ல,
அந்த கம்யூட்டர்கள் தருவிக்கப்பட்டவுடன் அவை குறித்து மாணவர்களுக்கு கற்பிக்க தகுதியான ஆசிரயர்கள் தேவை!

ஏற்கெனவே அரசு பள்ளிகள் சிலவற்றில் வாங்கப்பட்ட கம்யூட்டர்கள் பயன்பாடின்றி கிடக்கின்றன. அவற்றை துடைத்து சுத்தப்படுத்தக் கூட ஆளில்லாமல் தூசி படிந்து கிடக்கின்றன. கம்யூட்டர்கள் இருந்தும் கற்றுத்தர ஆசிரியர்கள் இல்லாததே இவற்றிற்கெல்லாம் காரணமாகும்!

எனவே கம்யூட்டர்களின் பயன்பாட்டை உறுதிபடுத்த வேண்டும்.

அதற்கு தேவையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

சமீபத்தில் தமிழக பள்ளிகளுக்கு பகுதிநேர சிறப்பாசிரியர்கள் என்ற வகையில் 16,548 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் உடற்கல்வி,ஒவியம், இசை, தையல் மற்றும் கம்யூட்டர் பிரிவுகளுக்கானவர்கள் என்ற அறிவிப்பு வெளியானது.

பகுதிநேர ஆசிரியர்கள் என்றால் பள்ளிக்கூட நேரத்திற்கு பிறகோ, முன்போ கற்பித்தல் என்பது முழுமையடையாது. ஆகவே கம்யூட்டர் கல்விக்கு என்று பிரத்யேக முழுநேர ஆசிரியர்கள் என்பது முக்கிய தேவையாகும்! அதனை தமிழக அரசு நிறைவேற்றும் என நாம் நம்புவோம்.

தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக பள்ளி இறுதி மாணவர்களுக்கு மடிக்கணணி வழங்கும் திட்டத்தை முதல்வர் அறிவித்தார். அதன்படி தற்போது சில பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது நல்லதிட்டம் தான் எனினும் இது குறித்து வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கும் விதமாக உள்ளன.

ஏழை பெற்றோர்கள் மடிக்கணணியை ரூ 3,000த்திலிருந்து ரூ5,000க்கு விற்றுவிடுவதாக தெரிகிறது. இது அரசின் முயற்சிக்கு ஒரு பின்னடைவாக அமையும்.

எனவே மாணவர்களுக்கு கம்யூட்டர்கள் தருவதைவிடவும், பள்ளிகளுக்கு தந்தாலே போதுமானது என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஆசிரியர்களின் மேற்பார்வையில் பள்ளிக்கூடச்சூழலில் கம்யூட்டரை தவறாக கையாள முடியாது. அத்துடன் இணைதள இணைப்பு பள்ளிக்கூடத்தில் பெறமுடியும். அதனால் அறிவை விருத்தி செய்யும் வாய்ப்பும் அதிகம்.

தமிழக முதல்வரின் கம்யூட்டர் கல்வி திட்டத்தை வரவேற்போம். அதனை நல்ல முறையில் அமல்படுத்த தேவையான மேலாண்மையும் வேண்டும் என்பதை அரசு உணர வேண்டும்.

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
17-7-2012

No comments: