Wednesday, September 12, 2012

கார்டுனிஸ்ட் அஸிம் திரிவேதி கைது!

-சாவித்திரிகண்ணன்
 
 
பிரபல கார்டூனிஸ்ட் அஸிம் திரிவேதி சர்ச்சைக்குரிய கார்டூன்களை வரைந்தார். என தேச துரோக வழக்கு பதியப்பெற்று கைதாகி உள்ளார். இந்திய தண்டனைச் சட்டம் 124A பிரிவில் மும்பை போலீஸ் அஸிம்திரிவேதியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, நாட்டில் கலவரத்தை தூண்டுவது ஆகியவற்றை தடுப்பதற்காக இந்த சட்டப்பிரிவு பயன்படுத்தப்படுகிறது. சென்ற ஆண்டு அண்ணாஹாசரே அவர்களால் ஊழலுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் இந்த கார்டுன்களே பெரிதும் பயன்படுத்தப்பட்டது.
 
கடந்த ஒராண்டாக இந்த கேலிச்சித்திரங்களே நாட்டுப்பற்றுள்ள ஊழல் எதிர்பப்பாளர்களின் கொள்கை விளக்க சித்தரங்களாகப் பயன்பட்டுவந்துள்ளன! இந்தக் கேலிச்சித்திரங்களால் பொது அமைதிக்கு குந்தகமோ, நாட்டில் கலவரங்களோ ஏற்படவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை! அப்படியிருக்க இந்த சட்டப்பிரிவில் அஸிம் திரிவேதி எப்படி கைது செய்யப்படலாம்?
 
இந்த 124A சட்டம் தான் சுதந்திரப்போராட்டத்தின் போது பாலகங்காரதிலகர், மகாத்மாகாந்தி, மௌலானாஆசாத், அன்னிபெசண்ட் அம்மையார் போன்ற உன்னத தலைவர்களை கைது செய்யப்பயன்பட்டது பிரிட்டிஷ் அரசுக்கு!
 
அதே சட்டம் தான் தற்போது எழுத்தாளர்கள், கலைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் சமூக சீர்திருத்தவவாதிகள்... (Dr.பினாய்க் சென், அருந்ததிராய்) போன்றவர்களின் செயல்பாட்டை முடக்குவதற்கு பயன்பட்டுக் கொண்டிருக்கிறது இந்திய அரசுக்கு!
 
இந்தச்சட்டம் சுதந்திர இந்தியாவிற்கு தேவையற்றது என ஜவஹர்லால் நேரு, தொடங்கி... இன்றைய ஜனநாயகவாதிகள், அறிவுஜீவிகள், அரசியல் விமர்சகர்கள் அனைவரும் பல காலமாகவே கூறி வருகின்றனர். ஆனால் அதற்கான செஞ்சுரம், சிந்தனைதெளிவு ஆட்சியாளர்களுக்கு இல்லை என்பது துரதிர்ஷ்டமே!
 
சரி, அஸிம்திரிவேதியின் கேலிச்சித்திரங்கள் சொல்வது என்ன? இந்த நாடு ஊழல்வாதிகளின் பிடியில் சிக்கியுள்ளது. பாராளுமன்ற ஜனநாயகம் பாழ்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளது! அரசியல்சாசனம், மற்றும் அரசாங்கங்களின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கைகள் நொறுங்கி கொண்டுள்ளது. நாட்டின் ஜனநாயகப் பாதுகாவலர்களாக நாம் கருதியவர்கள் நாட்டை சூறையாடுகின்றனர்! இவை தாம் அந்த கேலிச்சித்திரங்கள் சொல்லும் செய்திகள், உணர்த்தும் உண்மைகள்!
 
இவை கோடனுகோடி மக்களின் உணர்ச்சி வெளிப்பாடுகளுக்கு தரப்பட்ட சித்திரவடிவம்! அஸிம்திரிவேதியே கூறியிருப்பது போல, "கலையும், இலக்கிய சமூகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடிகள்! என்னைச் சுற்றிலும் நான் எதைப் பார்க்கிறேனோ அதையே என கேலிச்சித்திரத்தில் வெளிப்படுத்தி உள்ளேன்!
 
"இதையெல்லாம் ஒத்துக் கொள்ளமுடியாது. நமது நாட்டின் தேசிய சின்னத்தையும் அரசியல் சாசனத்தையும், பாராளுமன்றத்தையும் அவமானப்படுத்தித் தான் இந்த உண்மைகளைச் சொல்லவேண்டுமா? சுதந்திரம் என்றால் எதைவேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் விமர்சித்து விடுவதா? இதற்கு ஓர் வரையறை வேண்டாமா? என்றும் சிலர் கேட்க்கலாம்!
 
இவர்கள் யதார்தத்தை, உண்மைகளை ஒத்துகொள்ள மறுப்பவர்களாகவோ அல்லது குற்ற உணர்ச்சியால் உந்தப்பட்டவர்களாகவோ, அல்லது குதர்க்க எண்ணம் கொண்டவர்களாகவோ மட்டுமே இருக்க முடியும்.
 
ஒரு கலை அல்லது படைப்பின் உள்ளார்ந்த நோக்கங்களை புறந்தள்ளிவிட்டு அதன் உன்னதமான, உண்மையான ஆதங்கங்களை மறுதலித்துவிட்டு எப்படி வேண்டுமானாலும் வியாக்யானம் தரலாம்! ஆனால் அது நீதியில்லை.
 
"தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்" என்ற மகாகவி பாரதியாரை மாபெரும் பயங்கரவாதி என்றும் அடையாளப்படுத்தலாம் தனி ஒரு மனிதனின் பசிதுயரத்தை காணப்பொறுக்காத மென்மையான மனத்தின் உணர்ச்சி வெளிப்பாடகாவும் கருதலாம்!
 
ஒவ்வொரு உண்மையான கலைஞனும் இப்படித்தான் வெளிப்படுவான்! அவனிடம் ஒளிவுமறைவோ, போலித்தனமோ, நாசூக்கான வெளிப்படையோ எதிர்க்கமுடியாது. அவன் ஜனங்களின் ஆன்மாவாக இருப்பவன். ஒட்டு மொத்த மனிதகுலத்தையும், இந்த பிரபஞ்சம் முழுமையும் அவன் பரிபூரணமாக நேசித்து தன்னை அர்பணித்தவன்!
 
இந்திய பத்திரிக்கை கௌன்சில் தலைவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜீ, "அஸிம்திரிவேதியை கைது செய்தது மாபெரும் தவறு" என சுட்டிக்காட்டியுள்ளார்.
 
பாரதிய ஜனாத கட்சி, மார்க்சிய கம்யூனிஸ்ட்டு கட்சி, ஊழலுக்கு எதிரான மக்கள் அமையும் பத்திரிக்கையாளர் அமைப்புகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் அனைவரும் இக்க கைதை கண்டித்துள்ளனர். 'இந்தக் கைதில் காங்கிரஸிக்கு உடன்பாடில்லை' என்பதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் மணீஸ்திவாரி கூறியுள்ளார் . இந்தக் கைதின் மூலம் அஸிமின் கார்டூன்கள் அகில உலக கவனம் பெற்றமைக்கு காவல்துறைக்கு நன்றி செய்வோம்.
 
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
11-09-2012

No comments: