Friday, September 7, 2012

குறுவை சாகுபடி கோவிந்தா! சம்பா சாகுபடியாவது சாத்தியமா?

 
-சாவித்திரிகண்ணன்
 
காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்!
இந்த ஆண்டு ஐந்து லட்சம் டன் நெல்சாகுபடி 'அம்போ'வாகிவிட்டது!
குறுவைசாகுபடி குந்தகமானது. அதனால் வறுமை சாகுபடி வந்துள்ளது.
 
கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி இந்த மாதம் நமக்கு 10 டி.எம்.சி தண்ணீர் தந்திருக்க வேண்டும். ஆனால் தராமல் தடுத்து விட்டது. அடுத்த மாதம் 34 டி.எம்.சி வந்தாக வேண்டும்! அதுவும் வருமா என்ற உத்திரவாதமில்லை!
 
விவசாயத்திற்கு நுழைந்த வில்லங்க அரசியலே நமக்கு சோறு போடும் விவசாயியை சோகத்தில் ஆழ்த்தி விட்டது.
முன்பொருமுறை தமிழக முதல்வர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்து குறுவை சாகுபடிக்கு நீர் கேட்டுப் போராடியுள்ளார்.
 
2001-ஆம் ஆண்டு காவேரி டெல்டா விவசாயிகளின் சோகத்தை பொறுக்க முடியாமல் சோனியாகாந்தியே அன்றைய கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவிடம் வேண்டுகோள் வைத்து தண்ணீர் பெற்று தந்தார்!
 
2002- ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்டு தலையிட்டு கர்நாடக அரசிடமிருந்து தண்ணீர் பெற்றுத் தந்தது. இருக்கும் தண்ணீரை பகிர்ந்து கொள்ளும் பக்குவம் கர்நாடகத்திற்கு இல்லை. அதே போல் கிடைக்கும் தண்ணீரை சரியாக பயன்படுத்தும் பக்குவம் தமிழகத்திற்கு இல்லை!
 
காவேரியில் போதுமான தடுப்பணை, கதவணைகள் கட்டி தண்ணீரை காப்பாற்றத் தவறியது தமிழகத்தின் தலையாய தவறு . அடுத்ததாக அதிகமாகத் தண்ணீர் தேவைப்படும் நெல்சாகுபடியை சுமார் நான்குலட்சம் ஹெக்டரில் பயிரிடுவதும், தண்ணீர் போதாமல் கோடிக் கணக்கில் இழப்பதும் தொடர்கதையாகவுள்ளது. நெல்லுக்கு மாற்றாக மாற்று பயிர்களை பயிரிடுவதே இந்த அழிவிலிருந்து நாம் தப்பிக்கும் வழி என்று விவசாய நிபுணர்களின் யோசனைகள் பின்பற்றப் படுவதில்லை.
 
இந்த ஆண்டு ஜூன்- 12- ல் திறந்திருக்கவேண்டிய மேட்டூர் அணை இன்னும் திறந்தபாடில்லை. ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற தாமதங்கள் நேரும்போது எதிர்கட்சி, ஆளும்கட்சியை குற்றம் சாட்டும். இந்த வகையில் இப்போது கருணாநிதி ஜெயலலிதாவை தாக்குவது போல கடந்த காலங்களில் ஜெயலிலதா கருணாநிதியை வறுத்தெடுத்தார்.
ஆனால் இரு கட்சிகளின் மீதும் தமிழக விவசாயிகள் வைக்கும் குற்றச்சாட்டு என்னவெனில், "காவேரி நீர் பொய்த்தாலும் நிலத்தடி நீரைக் கொண்டு நாங்கள் சமாளிப்போம். அந்த நிலத்தடி நீரை சேமிக்கும் சிற்றணைகளையும் கட்டவில்லை. நிலத்திலிருந்து நீரை எடுக்க மின்சாரத்திற்கும் வழியில்லை. தி.மு.க ஆட்சியில் 9மணிநேர மின்வெட்டு என்றால் இந்த ஆட்சியில் 12 மணிநேர மின்வெட்டு உள்ளது. அப்படியே மின்சாரம் கிடைத்தாலும் சீரான மின்சாரம் கிடைப்பதில்லை. இதனால் குறுவை சாகுபடி பொய்க்கும் போது கடன்வாங்கிய விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
 
ஆகவே கர்நாடக அரசு நீதிமன்ற தீர்ப்புக்கு தலைவணங்கி தண்ணீர்விடாத பட்சத்தில் நதிகளை தேசியமயமாக்கி மத்திய அரசு பொறுப்பெடுப்பதே இதற்கு தீர்வாகும்! ஆனால் இது நடக்குமா? அல்லது எப்போது நடக்கும் என்பதற்கு யாராலும் பதில் சொல்ல இயலாது. அது வரையில் காவேரி நீரை வைத்து அரசியல் செய்வதை தமிழக அரசியல் கட்சிகள் அறவே தவிர்த்து ஆக்க பூர்வமான செயல்களை செய்யவேண்டும்.
 
தமிழக விவசாயிகள் செல்சாகுபடியை கூடுமானவரை தவிர்த்து மாற்று பயிர்களை பயிரிட்டு இழப்புகளை தவிர்க்க வேண்டும்! குறுவை தவறினால் வருணபகவான் தயவில் சாம்பாவயாவது சாத்தியப்படுத்திக் கொள்ளலாம்! NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
Aug

No comments: