Friday, September 7, 2012

பிறழ்சாட்சிகளும், பிறழும் நீதிகளும்!

-சாவித்திரிகண்ணன்
 
இது போன்ற அபூர்வம் இது வரையிலான நீதிமன்ற வரலாற்றில் அரிது.
 
உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கில் சஞ்சீவ்நந்தா என்பவரின் கார்மோதி ஆறுபேர் இறந்த வழக்கில் நேரடி சாட்சியாக இருந்த மூவர் பிறழ் சாட்சியாக மாறியதை நீதிபதி எஸ். ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
மிக முக்கியமான வழக்குகளில் சாட்சிகள் பிறழ்வது கவலையளிக்கிறது. இம்மாதிரியாக சட்சிகள் பிறழ்வது குற்றவியல் நீதி பரிபாலன அமைப்பையே குலைத்துவிடுகிறது. இது போன்ற பிறழ் சாட்சியங்களால் வசதிபடைத்தவர்களும், வலிமையானவர்களும் எப்போதுமே தப்பித்து விடுகிறார்கள், எவ்வளவு பெரிய குற்றங்களிலிருந்தும் தப்பிக்க முடியும் என்று நம்புகிறார்கள்... எனினும் நீதிமன்றங்கள் உண்மையை பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டிருக்க முடியாது. என்கிறார் நீதிபதி!
நீதிபதி ராதாகிருஷ்ணனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் லட்சோபலட்சம் பாதிக்கப்பட்ட மக்களின் - அநீதி இழைக்கப்பட்ட மக்களின் - மனசாட்சியின் குரலாக வெளிப்பட்டுள்ளது என்று தான் சொல்லவேண்டும்.
 
உண்மைகளை அறிந்த, கண்முன்னாள் அநீதியை கண்டு அறிந்த, நேரடிசாட்சியாக ஒரு பிரச்சனையில் சம்மந்தப்பட்ட எந்த ஒரு மனிதனும் அந்த பிரச்சினையில் பேரிழப்பை சந்தித்து நீதிகேட்டு நிற்பவர்களைப் பொறுத்த அளவில் கண் எதிரில் இருக்கும் தெய்வத்திற்கு சமமாகும்! அப்படி தெய்வாதீனமாக ஆய்த்த சாட்சிகள் செல்வாக்கு படைத்தவர்களின் நிர்பந்தத்தால் பிறழ் சாட்சியாக மாறுவதை சட்டமோ, நீதிமன்றமோ பெரிதாக கேள்விகேட்பதில்லை!
 
சட்டமும், நீதியும் சாட்சியங்களின் பலத்தை பொறுத்தே சாதகமான தீர்ப்பை தருகின்றன!
 
இதனால் தான் நமது நாட்டில் ஊழல் அரசியல்வாதிகள் ஒருபோதும் பெரிதாக தண்டிக்கப்படுவதில்லை.
 
தொழில் முறை கொலைக்காரர்கள் இன்று பெருகிவருவதெற்கெல்லாம் சாட்சி சொல்லவருபவர்களை சட்டம் பாதுகாக்கத் தவறுவதால் தான்!
 
1970களில் அன்றைய முதல்வராயிருந்த கருணாநிதி அவர்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியதை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் உதயகுமார் என்ற மாணவர் கொல்லப்பட்டார். அது தொடர்பாக நடந்த ஆர்.டி.ஒ விசாரணையில் அம்மாணவனின் பெற்றோரே, 'இறந்தது தன் மகனல்ல' என பிறழ்சாட்சியானதை தமிழகம் அதிர்ச்சியோடு பார்த்தது. அந்த பிரச்சனையில் சம்மந்தப்பட்ட அனைவருக்குமே தெரிந்த உண்மை நீதி மன்றத்திற்கு மட்டும் மறைக்கப்பட்டது.
 
காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் ஆட்சி மாற்றம் நடந்தபோது காட்சி மாற்றமாக ரவி சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் பிறழ் சாட்சியானார்கள் சங்கரராமனின் மனைவி பத்மா, மகன் ஆனந்த்சர்மா இருவரும் தற்போது தங்களை, "மறுவிசாரணை செய்யவேண்டும். மிரட்டியதால் நாங்கள் பிறழ்சாட்சியானோம்" என்று நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.
 
தங்கள் குடும்பத்தலைவனின் படுகொலையில் அந்த குடும்பத்தினரே மிரட்டி பிறழ்சாட்சியாக்கப்பட்ட அநீதிக்கு நீதிமன்றம் தண்டனை தருமா? தெரியவில்லை. ஆனால் இதுவரை பிறழ் சாட்சியங்களுக்கு காரணமான பின்னணிகள் நீதிமன்றத்தால் ஆராயப்பட்டதில்லை. தண்டிக்கப்பட்டதில்லை.
 
GRPC என்ற குற்றவியல் சட்டம் 430ன் படி இந்த பிறழ் சாட்சிகளை குறித்து ஆராய்வதற்கும், விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நீதிபதிக்கு அதிகாரம் உள்ளது.
 
ஒரு சாட்சி பிறழ் சாட்சியாவதற்கு உயிர்பயம் அல்லது பொருளாதார ஆதாயம் போன்ற காரணங்களைப் போலவே நீண்டகாலமாக வழக்கு இழுத்தடிக்கப்படுவதால் ஏற்படும் சோர்வும், விரக்தியும் கூட காரணமாவதுண்டு.
 
எனவே சாட்சிகளுக்கு உரிய முக்கியத்துவமும், பாதுகாப்பும் தர நீதிமன்றங்கள் உத்திரவிட வேண்டும். உரிய காலத்திற்குள் வழக்குகளை முடிக்கவேண்டும் அதோடு இனி பிறழ்சாட்சிகளுக்கு பின்னணியில் உள்ள சக்திகளின் மீதும் சட்டம் பாயவேண்டும்.
இவை நீதிமன்றங்களை கடைசி புகலிடமாக கருதும் இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்குமான நீண்டகால எதிர்ப்பாகும்!
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
Aug

No comments: