Friday, September 7, 2012

மக்களுக்காக ஆட்சியா? ஆட்சிக்காக மக்களா?

-சாவித்திரிகண்ணன்
 
 
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவச செல்போன் தரும் திட்டம் ஒன்றை கொண்டுவரும் தீவிர ஆலோசனையில் உள்ளது.
 
2014 - தேர்தலை மனதில் கொண்டு காங்கிரஸ் அரசு இப்படியொரு கணக்கை போட்டிருக்கலாம்.
 
இலவசங்களை அளித்து மக்களின் ஒட்டை அள்ளிக்கொள்ளலாம் என நினைப்பது அரசின் இயலாமையைத் தான் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. சாதாரணமாக மக்கள் அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பது ஊழலற்ற சிறந்த நிர்வாகம், உழைப்பதற்கான வேலைவாய்ப்பு, கௌரவமான வாழ்க்கைக்கான உத்திரவாதம், குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர், தடையில்லாத மின்சாரம், முறையான சாலைவசதிகள், எல்லாபகுதிகளுக்கும் போக்குவரத்து வசதி, சுகாதாரமான சுற்றச்சூழல்!
 
மேற்படி விசயங்களில் வெற்றிபெற முடியாத விரக்தி காரணமாகத் தான் அரசு இலவசங்களைத் தர முன்வருகிறதென்றால், மக்கள் அரசாங்கத்திடம் எதிர்ப்பார்ப்பது மூன்றே மூன்று முக்கிய இலவசங்களைத் தான்!
1. தரமான கல்வி,
2. சிறப்பான மருத்துவம்
3. சுத்தமான தங்குதடையற்ற தாராளமான தண்ணீர்!
இந்த மூன்றும் ஒரு அரசு கட்டணமில்லாமல் மக்களுக்குச் செய்யவேண்டியவைகள்! அதன் தார்மீக கடமையும் கூட!
 
அதுவும் செல்போன் என்பது இந்தியாவில் தற்போது தேவைக்கும் அதிகமாகவே புழக்கத்தில் உள்ளன. உலகில் அதிகமாக செல்போன் பயன்படுத்துவோரில் இந்தியா இரண்டாம் இடம் பெற்றுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் தொலைபேசி மற்றும் செல்பேசியின் புழக்கம் தற்போது 97 கோடி என்று மத்திய அரசு புள்ளிவிபரமே சொல்கிறது.
 
உணவு, உடை, இருப்பிடம், வேலை, கல்வி, மருத்துவம், மின்சாரம்... போன்ற பல முக்கிய தேவைகளுக்குப் பிறகே செல்பேசியின் தேவை வருகிறது.
 
செல்போன் கொடுப்பதென்றால் அது எத்தனை கோடி பேருக்கு? அதற்கு என்ன அளவுகோல்? மண்குடிசை, பிளாட்பாரவாசிகளாக வாழும் 25சதவிகித மக்கள் செலவபோனை ரீசார்ஜ் செய்ய மின்வசதிக்கு என்ன செய்வார்கள்?
 
இத்தனை கோடி இலவச செல்பேசிகளுக்கும், அவற்றிற்கு மாதாமாதம் ரூ 100 இலவச பணம் என்றால் இந்த திட்டத்தின் எதிர்வினைகள் என்னென்ன என்பதற்கு பெரிய பட்டியலே போடலாம்!
 
இந்த இலவசங்களில் இறைக்கப்படும் பணம், அவற்றில் ஏற்படவிருக்கும் ஊழல்கள், இதில் சம்மந்தப்படபோகும் நிறுவனங்கள்.... அத்துமீறல்கள், இழப்புகள்... எல்லாமே மேன்மேலும் மக்கள் மீது விதிக்கப்படும் வரிச்சுமையைத் தான் மேலும் கூட்டும்!
 
உலகவங்கி மதிப்பீட்டின்படி 42 சதவிகித மக்கள் இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ்வாழ்கிறார்கள். கிட்டதட்ட 50 கோடிப்பேர்!
 
கடந்த பத்தாண்டுகளில் 2லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆண்டுக்காண்டு விவசாயிகளின் தற்கொலை அதிகரித்த வண்ணமாக உள்ளது.
 
கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் மனம்வெதும்பிக் கிடக்கிறார்கள்.
ஆண்டுக்கு 50லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் உயிர் இழந்து கொண்டுள்ளன.
 
பள்ளிக்கூடம் செல்லவேண்டிய பருவத்தில் உள்ள குழந்தைகள் கோடிக்கும் மேற்பட்டோர் குழுந்தை தொழிலாளிகளாக உழல்கிறார்கள் சுதந்திரம் பெற்றபோது இந்தியாவில் இருந்த 2கோடியே 50லட்சம் நீர் நிலைகளில் தற்போது 90 சதவிகிதம் வறண்டோ, ஆக்கிரமிக்கப்பட்டே உள்ளன. இயற்கையால் மனிதகுலத்திற்கு தரப்பட்டுள்ள கொடைகளே கூட கிடைக்காத வண்ணம் அரசியலும், ஆட்சி நிர்வாகமும் தடைகளாக உள்ளன! இந்த தடைகள் விலகவேண்டும்.
 
ஆட்சி அதிகாரம் என்பது மக்கள் அரசியல்வாதிகளுக்கு தரும் கொடை என்றால் அதற்கு பிரதிபலனாக அவர்கள் மக்களுக்கு தரவேண்டியது ஊழலற்ற, சிறந்த நிர்வாகமேயன்றி திருவோடுகளல்ல! 
 
 
  NDTV -THE HINDU,
  EDITORIAL VOICE,
  08-08-2012

No comments: