Thursday, September 13, 2012

மக்கள் நலத்திட்டங்களும், ஆதார்கார்டும்

-சாவித்திரிகண்ணன்
 
சுதந்திர தின உரையில் பிரதமர் மன்மோகன்சிங், "அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு முழுமையாகச் சென்றடையாதது குறித்து பேசியுள்ளார்.
 
முதியோர் பென்ஷன், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வழங்கப்படும் சம்பளம் போன்றவை மக்களுக்கு சரியாகவும், முழுமையாகவும் கிடைக்க ஆதார் அட்டை திட்டத்தின் மூலம் அனைத்து மக்களுக்கும் வங்கி கணக்கு உருவாக்கப்பட்டு பணம் நேரடியாக வங்கிகளில் செலுத்தப்படும். தற்போது 20கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார் பிரதமரின் எண்ணம் உயர்வானது.
 
ஆனால் இதன் செயல்திட்டத்தில் உள்ள சிக்கல்களும், சில குளறுபடிகளும் அவர் கவனத்திற்கு வரவில்லை போலும்! அதோடு தற்போது 20 கோடிபேருக்கு ஆதார் அட்டை தரப்பட்டுள்ளதாக அவர் கூறிய தகவலும் உண்மையில்லை.
முதலாவதாக ஆதார் அட்டையாலோ, நேரடி வங்கி கணக்கில் பணம் போடுவதாலோ ஊழலை தடுக்க முடியாது. வங்கியில் படம் போடப்படுவதற்கே பணம் கையூட்டு தரவேண்டிய நிலை ஏற்படாது என்பதற்கு உத்திரவாதமில்லை.
அரசு பள்ளிகளில் சேர மாணவர்களுக்கு கல்வி கட்டணம் கிடையாது இலவச கல்வி தரப்படுகிறது என்பது அனைவருக்கும் நன்கு தெரிந்த உண்மை. ஆனால் சென்னையின் புறநகர் பகுதி அரசு பள்ளிகள் சிலவற்றில் மாணவர் சேர்க்கைக்கு, இலவச சீருடைகளை பெறுவதற்கு இறுதியாண்டில் டி.சி பெறுவதற்கு என எல்லாவற்றுக்குமே தலைமை ஆசிரியர்கள் பணம் வசூலித்து கொண்டிருக்கிறார்கள்!!
மக்கள் கொடுக்கிறார்கள்!! ஆதி திராவி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மிகப்பெரும்பாலான பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் முற்றிலுமாகவோ, ஒரு பகுதியாகவோ 'ஸ்வாகா' செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆக, கல்விக் கண் திறக்க வேண்டிய ஆசிரியர்களே கள்வர்களாக மாறி நிற்கிறார்கள் என்றால் இந்த தேசம் எந்த நிலையிலிருக்கிறது என்பதை நினைத்தால் விரக்தியும், வேதனையுமே மேலிடுகிறது. எனவே உழைப்புக்கு சம்மந்தமில்லாத பணத்தின் மீதான மோகம் மக்களிடையே வெகு வேகமாக பரவி வருவதை தடுப்பதற்கான தகுதியான தலைமையும், முன்மாதிரியுமே இன்றைய அவசரத் தேவையாகும்!
 
இது ஒரு புறமிருக்க, ஆதார் என்ற அடையாள அட்டை ஒவ்வொரு குடிமகனுக்கும் தரப்படும். 12 இலக்க எண் கொண்ட அந்த அடையாள அட்டை சகல தகவல்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். சம்மந்தப்பட்டவரின் கைரேகை, கருவிழி போன்றவை பதிவு செய்யப்படும் என்றெல்லாம் சொல்லப்பட்டது.
 
தமிழகத்தில் கடந்த ஒராண்டாக அங்கும், மிங்குமாக சிற்சில இடங்களில் இவை வழங்குவதற்கான முயற்சிகள் நடந்தன ஏனோ அவை தொடராமல் கைவிடப்பட்டன. பிறகு மீண்டும் சிற்சில இடங்களில் வழங்கப்படுகின்றன.
 
சென்னையில் மொத்தம் ஐந்தே தபால்நிலையங்களிலும், ஒரு சில வங்கிகளிலும் ஆதார் அட்டை வழங்கவிண்ணப்பங்கள் பெறப்பட்டன. நீண்ட கியூ வரிசையில் மக்கள் நின்றனர். ஆனால் ஒரு நாளில் 100பேருக்கு மட்டுமே தகவல்கள் பெறப்பட்டன. அதிலும் 30பேருக்கு மட்டுமே புகைப்படம், ரேகை பதிவு செய்யப்பட்டது. இந்த விதமான மந்த கதியில் இத்திட்டம் அமல்படுத்தப்படுமானால் இன்னும் 20 வருடம் ஆனாலும் ஆதார் அடையாள அட்டையை அனைவருக்கும் கொடுக்க இயலாது என்பதே யதார்த்தம்!
 
அதோடு தகவல் பதிவு செய்பவர்கள் கார்டுகள் தரும்போது புகைப்படம் மாறியிருப்பது, முகவரியே மாறியிருப்பது... என ஏகப்பட்ட தவறுகள்! இந்த தவறுகளை சுட்டிக்காட்டி, சரியான கார்டை பெற நாள்கணக்கில், மாதகணக்கில் அலைய விடுகிறார்கள். பணியாளர்கள் செய்த தவறுக்கு மக்கள் தண்டனை அனுபவிக்க வேண்டியதாகிவிடுகிறது.
 
உலகில் பல நாடுகளில் இந்த அடையாள அட்டை முறை மிகச்சிறப்பாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது . ஆனால் இந்தியாவில் இது வரை இதற்காக 3,000 கோடிக்கு மேல் செலவழித்தும் பத்து சதவிகித பணிகள் கூட முறையாக முழுமை பெறவில்லை.
 
இதற்கிடையில் யூனிக் ஐடெண்டிகேஷன் அத்தாரிட்டி ஆப் இந்தியாவிற்கும் உள்துறை அமைச்சகத்திற்கும் இடையிலான மோதல்கள் அனைத்து பணிகளையும் ஸ்தம்பித்து வைத்துள்ளது.
 
உண்மையான மக்கள் தொகை பதிவு, மக்களைக் குறித்த பதிவு பற்பலவழிகளில் மக்களுக்கும், நாட்டுக்கும் நன்மையாகும்! அந்நிய ஊடுருவல்கள் தடுப்பு, தீவிரவாதத்தடுப்பு, பற்பலமக்கள் திட்டங்களுக்கான அடிப்படைத் தகவல்கள், ஒவ்வொருவருக்குமான சுய அடையாளம் என பற்பல பலன்கள் இதிலுண்டு.போர்கால வேகத்தோடு, வீடுவீடாகச் சென்று நிறைவேற்ற வேண்டும். அக்கரையுள்ள, நேர்மையான பணியாளர்கள் இதில் ஈடுபடுத்தப்படவேண்டும்!
 
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
Aug

No comments: