Friday, September 28, 2012

நூறுநாள் வேலைதிட்டம் 150நாட்களாகிறது


-சாவித்திரிகண்ணன்



மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என்ற பெயரில் கிராமபுற மக்களுக்கு நூறு நாட்கள் வேலை வழங்கவும், ரூ 132 தினக்கூலி தரவுமான திட்டம் தற்போது 150 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2005 முதல் இத்திட்டம் அமலாகிறது. இத்திட்டத்தின் மூலம் என்னென்ன பலன்கள், விளைவுகள் நடந்துள்ளன என்று கடந்த கால செயல்பாடுகளை கொண்டு மதிப்பிடும் போது கிடைக்கும் விடைகள் அதிரச்சிதருகின்றன!

ஊரக பகுதிகளில் கால்வாய்கள், ஏரிகள், கண்மாய்கள் போன்றவை தூர்வாரப்பட்டு அதனால் அந்தந்த கிராமங்களில் நீராதாரங்கள் பலப்பட்டனவென்றோ, விவசாயம் வளர்ச்சியடைந்து என்றோ மகிழ்ச்சியடைய முடியவில்லை.
  • வேலைவாய்ப்பிற்காகவும், பிழைப்பிற்காகவும் நகரங்களுக்கு இடம்பெயரும் கிராம மக்கள் எண்ணிக்கை குறையவில்லை!

  • இத்திட்டத்தில் வேலை செய்யும் மக்களின் வாழ்க்கைதரம் உயரவில்லை!

  • கிராமங்களில் விவசாயவேலைசெய்ய ஆட்கள் கிடைப்பதில்லை!
இதனால் விவசாயமே ஸ்தம்பித்தது.

பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்து கோடிக்கணக்கான மக்களின் உழைப்பை பெறுகின்ற ஒரு திட்டத்தால் நாட்டில் மகத்தான மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டாமா?
இயற்கை வளம் பெருகியிருக்கிறதா? பொருளாதார வளர்ச்சிகள் ஏற்பட்டிருக்கிறதா? தொழில்கள் தழைத்தோங்கி வருகின்றனவா? பிறகெதற்கு ஆண்டுக்காண்டு இதில் அளப்பரிய பணத்தை அள்ளி இறைக்கவேண்டும்? இந்த ஆண்டு மட்டும் ரூ 33,000கோடி ஒதுக்கப்பட்டது. ஆயினும் அதிகபட்சம் 48 நாட்களுகப்கு மேல் வேலைகள் தரமுடியவில்லை?

காரணம் - இத்திட்டத்தை பொறுத்த அளவில் வேலைகளுக்காக நிதி ஒதுக்கப்படவில்லை. நிதி ஒதுக்கப்பட்டுவிட்டதால் ஏதோ கணக்கு காட்ட சில திட்டங்கள் தீட்டப்பட்டு, வேலைநடந்தது போன்ற தோற்றத்தை உருவாக்கி பணம் விரயமாக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தால் அரசு அலுவலர்கள், கிராமப்புற பஞ்சாயத்துகள் தொடங்கி அனைத்தும் ஊழல் மயமாகியுள்ளது. எனவே ஏன் நாம் உழைக்கவேண்டும். என்ற எண்ணம் மக்களுக்கு வலுப்பட்டு, ஏதோ உழைப்பது போல் பாவணை காட்டி பணம் கேட்கும் மனநிலை மக்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.

ஏழை எளிய மக்களின் வற்றாத ஒரே செல்வம் என்றால் அது அவர்களின் உழைப்பு தான்! அவர்கள் பெருமைபட்டுக் கொள்வதற்கான ஒரே அம்சமாக இருந்தது தன்மானம் தான்! இவை இரண்டையும் அந்த மக்களிடமிருந்து பறித்தெடுத்துள்ளது தான் இந்த திட்டத்தின் மிகப்பெரிய சாதனை!

இதைத்தான் நமது இன்றைய ஆளும் வர்க்கம் விரும்புகிறது போலும்! அதனால் தான் 50 நாட்களுக்கே கூட வேலைவாய்ப்பளிக்க முடியாத ஒரு திட்டத்தை 150 நாட்களாக அதிகரித்தும், பலன்களே இல்லாத தொழிலில் மேலும் பன்மடங்கு பணத்தை அள்ளி இறைத்தும் வருகின்றனர்.

கிராமங்களில் நீராதாரங்கள் வற்றி, விவசாயம் வீழ்ச்சியடைந்து கொண்டுள்ளது இதை மீட்டெடுக்க, நிரந்தர பலன் தரும் நீராதார திட்டங்களை திரட்டியும், விவசாயம் செய்வதற்கு உகந்த சூழலையும் உருவாக்கி கொடுப்பது தான் அரசாங்கத்தின் கடமை! இதை அரசு செய்யுமானால் இதன் பயனாக நிலமெல்லாம் பசுமை பூத்து குலுங்கும் வண்ணம் விளைச்சலை பெருக்கி காட்டி நாட்டிற்கே பெருமை சேர்ப்பர் விவசாயகூலிகளான இந்த உன்னதமான ஏழை, எளிய உழைப்பாளிகள்!

விவசாய நிலங்களை ரியல் எஸ்டேட்டுகளாகி கொண்டிருப்பதை விவசாய விளைச்சல்கள் வெகுவேகமாக குறைத்து கொண்டிருப்பதை பொருட்படுத்தாமல், ஒட்டு அறுவடைக்காவும், ஊழல்களை பரவலாக்கவும் ஒரு மிகப்பெரிய திட்டம் தேவையா?

வறுமையில் வாடும் மக்களுக்கு இத்திட்டம் தற்காலிக நிவாரணமாகலாம்! ஆனால் அவர்களை என்றென்றும் வறுமைக்குள் தள்ளிவிடும் ஆபாயமும் இதில் உள்ளது.

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
3-9-2012


No comments: