Friday, September 7, 2012

டி.என்.பி.எஸ்.சி

-சாவித்திரிகண்ணன்
 
டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குருப் - 2 தேர்வுக்கான வினாத்தாள் வெளியானதைத் தொடர்ந்து நடந்து முடிந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது.
 
3,631 பணியிடங்களுக்கு 6,40,000பேர் தேர்வு எழுதியுள்ளனர். ஆக, இவ்வளவு பேரின் உழைப்பும், நம்பிக்கையும் வீணாகி, சில தவறான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடலாகாது. சில பேராசைக்காரர்களின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் டி.என்.பி.எஸ்.சி புதிய வரலாறு படைத்துள்ளது என்று கூட சொல்லலாம்! ஏற்கெனவே டி.என்.பி.எஸ்.சியில் அரங்கேறிய அதிரடி நடவடிக்கைகள் அதன் தொடக்கம் அரசுத்துறைகளில் எல்லாம் இன்று லஞ்சம் தழைத்தோங்குவதற்கான அடிப்படை காரணமே குறுக்குவழியில் லட்சக்கணக்கில் பணம் செலவழித்தது தவறான நபர்கள் பதவிக்கு வருவது தான்! இப்படி பணம் பெற்று பணியில் சேர்ப்பது என்பது பதவிகாலம் முழுவதும் லஞ்சலாவண்யத்தில் திளைப்பதற்கு தரப்பட்ட 'லைசென்ஸ்' ஆகிவிடுகிறது.
 
ஆகவே அனைத்து லஞ்ச லாவண்யத்திற்கும் தொடக்கபுள்ளியாய் அமையும் டி.என்.பி.எஸ்.சி ஒழுங்கமைக்கப்பட்டாலே போதும் அரசுத்துறைகளில் பெருமளவு ஊழல் முறைகேடுகளை தவிர்க்கலாம்! அதாவது டி.என்.பி.எஸ்.சி ஒழுங்கமைக்கப்பட்டால் - அதன் மூலம் தவறான நபர்கள் அரசு பணிக்குள் நுழைவது தவிர்க்கப்பட்டால் - ஊழல் முறைகேடுகளை முளையிலேயே கிள்ளி எறிந்தது போலாகும்!
 
அனைத்து அரசு பணிகளுக்கும் நுழைவுவாயிலான டி.என்.பி.எஸ்.சி கடந்த காலங்களில் ஊழல் கறை படிந்திருந்தது. அதன் உறுப்பினர் பதவிகள் ஒரு கோடிக்கு விலைப்பேசப்பட்ட நிலைமைகள் இருந்தன. அதனால் தான் ஆட்சி மாற்றத்திற்கு பின் ஏற்பட்ட காட்சி மாற்றமாக டி.என்.பி.எஸ்.சி கறுப்பு ஆடுகள் சில களையெடுக்கப்பட்டன. அதன் உறுப்பினர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், புரோக்கர்கள், பணம் கொடுத்தவர்கள் என பலர் வீடுகளிலும் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு ஆவணங்கள், கட்டுக்கட்டாக பணம், வெளிநாட்டு மதுவகைகள், வருமானத்திற்கு சம்மந்தமில்லாத சொத்துபத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. அன்றைய டி.என்.பி.எஸ்.சி தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார்.
 
அதைத்தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சிக்கு ஒய்வுபெற்ற டி.ஜி.பி.ஆர். நட்ராஜ் தலைவராக நியமிக்கப்பட்டார். நேர்மையான தலைவர் நியமிக்கப்பதில் ஓர் நம்பிக்கை பிறந்தது என்ற போதிலும் பழைய ஊழல் பெருச்சாளிகள் இன்று வரை தண்டிக்கப்படாமல் அங்கேயே தொடர்வது என்பது நேர்மையான செயல்பாடுகளுக்கு சவால் ஆகிவிட்டது. இதுவே இப்போதைய வினாத்தாள் வெளியான விபரீதத்திற்கு காரணமாக கொள்ளலாம்!
 
ஆனபோதிலும் ஒளிவு மறைவற்ற நடவடிக்கைகள், நவீன தொழில்நுட்ப வசதிகள், அரசின் ஆதரவு போன்றவற்றைக் கொண்டு திரு.ஆர்.நட்ராஜ் மகத்தான மாற்றங்களை டி.என்.பி.எஸ்.சிக்குள் அரங்கேற்றியுள்ளார் என்பதையும் மறுக்க முடியாது.
 
தற்போதைய குருப் -2 தேர்வு என்பது நகராட்சி கமிஷனர், சார்பதிவாளர் வருவாய்த்துறை உதவியாளர்... உள்ளிட்ட முக்கிய பணிகளுக்கானது. இதற்காக தேர்வு எழுதியவர்கள் வருடக்கணக்கில் இதற்காக கடுமையாக தங்களை தயார் செய்திருக்க கூடும். இரவு பகல் பாராமல் படித்தவர்கள், தனியார் பணிகளை தவிர்த்து இதற்காகவே தங்களை தயார்படுத்தி உழைத்தவர்கள் வறுமை, துன்பம், வீட்டுச் சூழல்களை மீறி தங்களை தேர்வுக்கு தயார்படுத்தியவர்கள்... என எத்தனையோ பேர் இருக்க கூடும்!
இப்படிப்பட்டவர்களின் நம்பிக்கையை சிதைத்து தவறானவர்கள் பணிபெறுவது என்பது சம்மந்தப்பட்ட நபர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிமட்டுமல்ல, அது இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் இழைக்கப்படும் மன்னிக்க முடியாத அநீதியாகும்!
 
எனவே ஏற்கெனவே டி.என்.பி.எஸ்.சியில் ஊழல்புரிந்தவர்கள், தற்போதைய வினாத்தாள் வெளியானதில் சம்மந்தப்பட்டவர்கள் மிகக்கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். அதுவும் தாமதமின்றி தண்டனைக்கு ஆளாகவேண்டும்.
 
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் போன்ற பதவிகளுக்கான தேர்வு நடத்தும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் என்ற யு.டி.எஸ்.சி எப்படி நேர்மையாகவும், பாதுகாப்பு அம்சங்களோடும் செயல்படுகிறதோ அதே நிலைமை டி.என்.பி.எஸ்.சியிலும் பின்பற்றப் படவேண்டும். இதற்கு அரசு ஆதரவோடு திரு.ஆர்.நட்ராஜ் அவர்கள் - அடுத்தாண்டு ஓய்வுபெறுதற்கு முன்பு - துரிதமாக செயல்பட்டு சாதிக்கவேண்டும்! இது நடக்கும், நடக்கவேண்டும் என்று நம்பவோமாக!
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
14-08-2012

No comments: