Friday, September 28, 2012

பட்டாசு விபத்துகள், உயிரிழப்புகள் தீர்வு என்ன?


-சாவித்திரிகண்ணன்

நரகாசுரணை வதம் செய்த நாளை கொண்டாடத் தான் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் பட்டாசு தயாரிப்பவர்களே நரகாசுரர்களாக மாறி, உழைக்கும் மக்களின் உயிரை வதம் செய்து விடுவது தான் வேதனை!

தற்போதைய சிவகாசி பட்டாசு வெடிவிபத்தில் சுமார் 40பேர் இறந்துள்ளனர். கடந்த 25 ஆண்டுகளில் நடந்த 85ஆவது விபத்தாக இது பதிவு பெறுகிறது. ஆண்டுக்காண்டு சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் நடக்கும் விபத்துகளில் இது வரை நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் உடல் ஊனமடைந்துள்ளனர்.

இந்திய பட்டாசு சந்தையில் 90 சதவிகிதத்தையும் உலக பட்டாசு சந்தையில் 40 சதவிகிதத்தையும் கொண்டுள்ள - குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியில், அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுள்ள தீ விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை தர தகுந்த மருத்துவமனை இல்லை. அதனாலேயே - காயமடைந்தவர்களை தூரத்திலிருக்கும் மருத்துவமனைகளுக்கு தூக்கிச் செல்லும் போதே - இறக்கிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது இத்தனைக்கும் ஆண்டு வருமானம் ஆயிரம் கோடிகள் கடந்த நிலையில் தொழில்புரியும் பட்டாசு தொழிற்சாலைகளையும், அச்சகங்களையும் கொண்ட ஒரு நகரத்தில் மருத்துவமனையின் அவசியம் இருந்தும் அதற்கான முயற்சியோ, உறுதிப்பாடே இல்லாமல் போனது இந்திய முதலாளிகள் மற்றும் அரசியல்வாதிகளின் குணாம்சமாகும்!

ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு தொழிற்சாலை விபத்துகள் தொடர்ந்த நிலையில் இது வரை இதற்கு அரசுத்துறை அதிகாரிகள் பொறுப்பேற்கவில்லை! தண்டிக்கப்படவில்லை!

முறையான உரிமம் இல்லாமல் சுமார் 300பட்டாசு தொழிற்சாலைகள் இயங்குகின்றன. உரிமம் பெற்ற தொழிற்சாலைகளுமே கூட பாதுகாப்பு அம்சங்கள் கடைபிடிக்கப் படுவதில்லை. எனவே இதில் வெடிமருந்துகட்டுப்பாட்டு அதிகாரிகள், பாதுகாப்பு கண்காணிப்பு அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை, காவல்துறைஅதிகாரி, மாவட்ட ஆட்சியர் என அனைவருக்குமே பொறுப்புள்ளது. இவர்கள் யாருமே, எப்போதுமே தண்டிக்கப்படுவதில்லை.

தடை செய்யப்பட்ட ரசாயண வெடிமருந்து கலவைகளை தேவைக்கும் அதிகமாக முறையற்ற வழிமுறைகளில் பயன்படுத்தும் தைரியம் இந்த பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு எங்கிருந்து வந்தது? அதை யார் தந்தது? அப்படித் தந்தவர்கள் மத்திய, மாநில அரசுகளால் கடுமையாக தண்டிக்கப்படும் நிலை இருக்குமானால் விபத்துகள் தொடராது.

இறந்தவர்கள், காயம் பட்டவர்களுக்கான நிதி உதவியை மத்திய, மாநில அரசுகள் தருவதும், அநுதாபச் செய்தி வெளியிடுவதும், பாராளுமன்றத்திலும், சட்டசபையிலும் அஞ்சலி தீர்மானம் நிறைவேற்றுவதும் ஒரு சடங்காக மேன்மேலும் தொடரக்கூடாது.

இறப்பவர்கள் ஏழை எளியவர்கள் என்பதாலேயே மனித உயிர்கள் மலினமானவைகளல்ல. தண்ணீர் வசதி இல்லாத வறட்சி பூமியில் பட்டாசு தொழிற்சாலைகளே இவர்களின் பசியை ஆற்றுகின்றன. ஆனால் வயிற்றுப் பசியாற்றும் தொழிற்சாலை அதிபர்களின் பேராசைப் பசிக்கு உழைக்கும் மக்களின் உயிரே தீனியாகின்றன. உயிரை பணயம் வைத்து வைலைபார்ப்பவர்களை பெரும்பாலான பட்டாசு ஆலைகள் நிரந்தர தொழிலாளிகளாக அங்கீகரிப்பதில்லை. 'பீஸ்ரேட்'டுக்கு வேலை பார்ப்பவர்களின் உடல்களே விபத்துகளில் பீஸ்பீஸா பிய்த்து எறியப்படுகின்றன!

600க்கு மேற்பட்ட தொழிற்சாலைகள், 50,000 தொழிலாளர்கள், ஒரு லட்சம் மறைமுக வேலைவாய்ப்புகள் என இயங்கும் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த நகரத்தின் இண்டஸ்டிரி - அபரிமதமான வருமானத்தை அள்ளிக் கொடுத்த போதிலும் - அறிவியல் ரீதியா அணுகுமுறைகளை முற்றாகப் புறந்தள்ளிச் செயல்படுவது ஆச்சர்யமாக உள்ளது. அதைவிட ஆண்டுக்காண்டு விபத்துகள், உயிரழப்புகள் தொடர்ந்த போதிலும் இந்த தொழிற்சாலைகள் பாதுகாப்பு அம்சங்கள் விஷயத்தில் அரசாங்கத்தால் ஒழுங்குப்படுத்தப்படாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

பட்டாசு தயாரிப்பதிலும் சரி, பண்டிகையை கொண்டாடுவதிலும் சரி அலட்சியபோக்குகளும், விபத்துகளும் தொடருமானால் உழைப்பைச் சுரண்டும் உயிர்களை குடிக்கும் பட்டாசுகளின் உற்பத்திக்கே கூட தடைவிதித்தால் என்ன? என்றும் சில சமூக ஆர்வலர்கள் கேட்கிறார்கள்! கேள்வியை அலட்சிப்படுத்த முடியாது. இவ்விசயத்தில் அரசாங்கம் தெளிவான தீர்க்கமான முடிவெடிக்க வேண்டும்!


NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
6-9-2012


No comments: