Friday, September 7, 2012

"விரயமாக்கப்படும் உணவுப்பொருள்கள்.....!"

-சாவித்திரிகண்ணன்

பிரேசிலில் நடக்கும் ரியோ +20 என்ற பெயரிலான ஜூ 20 நாடுகளின் மாநாட்டில் ஐ.நா வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல திட்ட அறிக்கை மிக அதிர்ச்சிகரமான சில தகவல்களை தந்துள்ளது.
 
"உலகில் உற்பத்தியாகும் உணவு பொருள்களில் மூன்றில் ஒரு பங்கு வீணாகிறது. இந்த வகையில் ஆண்டுக்கு 130கோடி டன் உணவுப்பொருட்கள் மக்களுக்கு பயன்பாடின்றி வீணாகிறது" என்கிறது அந்த அறிக்கை!
கேட்கும் போதே "நெஞ்சு பொறுக்குதில்லை" என்ற பாரதியின் வரிகளே அனுபவமாகிறது. 'இதில் அமெரிக்காவின் பங்களிப்பு மிக அபரிமிதமானது' என ஐ.நாவின் அறிக்கை கூறினாலும் இந்தியாவிலும் இந்த வீணடிப்புக்கு குறைவில்லை!
 
மாநிலங்களவையில் நமது உணவுதுறை அமைச்சர் தந்த தகவல்படி 2010-11 ஆம் ஆண்டில் மட்டும் 1,56,000டன் உணவு தானிங்கள் வீணாகியுள்ளது. ஆனால் உண்மை நிலவரம் இதைக்காட்டிலும் அதிகமாக இருக்கலாம் என்பது சமூக ஆர்வலர்களின் கணிப்பு!
 
பி.யூ.சி.எல் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த ஒரு வழக்கில், " நாடெங்கும் உள்ள உணவு கிடங்குகளில் லட்சக்கணக்கான டன் உணவு தானியங்கள் புழுத்து நாற்றமெடுத்து வீணாகி கொண்டுள்ளன. மத்திய அரசின் உணவு கிடங்குகளுக்கு தேவையான உணவு தானியங்கள் 270லட்சம் டன்கள் தான்! ஆனால் சேகரிக்கப்பட்டுள்ளவையோ 550 லட்சம் டன் தானியங்கள்!
இவற்றை சேகரிக்க போதுமான குடோவுன்கள் இல்லாததால் இவை வெயிலிலும் மழையிலும், பணியிலும் வீணாகின்றன. இது மட்டுமின்றி கிடங்குகளில் ஈரப்பதத்துடன் உணவு தானியங்களை அடுக்கி வைப்பது, மிக அதிக நாட்கள் அவற்றை பயன்படுத்தாமல் இருப்பது, எலிகளுக்கு இறையாக்குவது.... அவற்றில் புழு பூச்சிகள் உற்பத்தியாகி விரயமாவது... போன்ற வகையில் லட்சக்கணக்கான டன் உணவு தானியங்களை மத்திய, மாநில அரசுகள் வீணாக்கி கொண்டுள்ளன...." என்று அம்பலப்படுத்தியது.
 
இதையடுத்து இவற்றை ஏழைகளுக்கு வழங்கும்படி உச்சநீதிமன்றம் உத்திரவிட்டதும், 'அரசின் நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிடக்கூடாது. என பிரதமர் மன்மோகன்சிங் கூறியதையும் நாம் சுலபத்தில் மறக்க முடியாது.
 
நமது நாட்டில் உணவுபதப்படுத்தும் தொழில் நுட்ப வளர்ச்சி இல்லாததால் 10% உணவுபொருட்களை மட்டுமே பதப்படுத்த முடிகிறது என மத்திய அரசே ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளது. ஆக, இந்த காரணத்தால் ஆண்டுக்கு 75லட்சம் கோடி ரூபாய் உணவுபொருட்களை நாம் வீணடிக்கிறோம்!
 
இந்தியாவில் சுமார் 30கோடிக்கும் மேற்பட்ட மக்கள் உணவின்றி பஞ்சத்தில் வாடி, பசியில் தவிக்கிறார்கள். தினசரி சுமார் 5,000 குழந்தைகள் ஊட்டச்த்து குறைவால் உயிரிழந்து கொண்டிருக்கின்றன. ஐந்துவயதுக்குட்பட்ட 47% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் உடல்நலிந்துள்ளன. ஒரிசா மாநிலம் ஆஸ்கூல் மாவட்டம் பதிபஹால் கிராமத்தின் சுமித்திரா பஹேரா தனது ஒரு மாதக்கழந்தையை வெறும் 10ரூபாய்க்கு விற்று மற்றுமுள்ள தன் இரண்டு குழந்தைகளின் பசியாற்றிய பதறவைத்த செய்தியை - நாம் மறக்க முடியுமா?
 
எளிமைக்கு இலக்கணமாக வாழ்ந்த தேசத்தந்தையான காந்தியின் நாட்டில் தான் இந்த காட்சிகள் அரங்கேறுகின்றன... இது பெரும் வெட்ககேடாகும்! நாம் அரசை குற்றம் சாட்டும் அதே நேரத்தில் நம்மை நாமே சுயபரிசோதனைக்கு ஆட்படுத்த வேண்டும்.
 
ஹோட்டல்களில் ஆர்டர் செய்தும், வீடுகளில் சமைத்தும் நாம் வீணாக்கும் உணவுகள், திருமணம்... போன்ற விஷேசங்களில் பரிமாறப்படும் ஏகப்பட்ட உணவு பதார்த்தங்களில் கணிசமான உண்ணப்படாமல் குப்பை தொட்டியில் வீசியெறியப்படுகிறது.
 
சிறிய கையேந்தி பவன் தொடங்கி ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் வரை நாளும், நாளும் விரயமாக்கப்படும் உணவுபொருட்கள்... கொஞ்சமா? நஞ்சமா? ஆக, மாற்றம் என்பது தனிமனிதனில் இருந்து தொடங்கினால் தான் உலக அளவில் விரிவடைந்து வியாபிக்கும்!
 
"பசியால் தவிப்போரின் பசி ஆற்றுவதே கடவுளே நெருங்குவதற்கான முதல் படிநிலையாகும்" என்று வள்ளுவர் தொடங்கி வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகளார் வரை கூறியுள்ளதை நினைவில் நிறுத்தவோமாக!
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
Aug

No comments: